Published:Updated:

BB Ultimate -11: `கத்தி கத்தி விளையாடுவோமா!' - ஹைடெசிபலில் அலறிய ஹவுஸ்மேட்ஸ்!

BB Ultimate

BB Ultimate -11: “அபிநய் என்னை ‘டேய்’ன்னு சொல்லிட்டாரு. ஒரு போலீஸ் ஆஃபிசரை எப்படி மரியாதையில்லாம கூப்பிடலாம்? பத்து தோப்புக்கரணம் போடுங்க” என்று சுஜா தண்டனை கொடுக்க...

Published:Updated:

BB Ultimate -11: `கத்தி கத்தி விளையாடுவோமா!' - ஹைடெசிபலில் அலறிய ஹவுஸ்மேட்ஸ்!

BB Ultimate -11: “அபிநய் என்னை ‘டேய்’ன்னு சொல்லிட்டாரு. ஒரு போலீஸ் ஆஃபிசரை எப்படி மரியாதையில்லாம கூப்பிடலாம்? பத்து தோப்புக்கரணம் போடுங்க” என்று சுஜா தண்டனை கொடுக்க...

BB Ultimate
நேற்று ஒளிபரப்பான எபிசோடின் மூலம் பல ஈ.என்.டி மருத்துவர்களின் வருமானம் கூடியிருக்கலாம். அப்படியொரு ஒலி மாசு. தெலுங்கு திரைப்பட வில்லன்கள் மாதிரி நிரூப், அபிநய், வனிதா, ஜூலி போன்றவர்கள் ஹைடெசிபலில் கத்திக் கொண்டே இருந்ததில் காது இன்னமும் ‘நொய்ங்’ என்றிருக்கிறது. இந்த வரிசையில் தாமரையை பிரத்யேகமாக குறிப்பிட வேண்டும். குழாயடிச் சண்டையையும் மிஞ்சி விட்டார். இவர்கள் போட்ட சரவெடி சத்தத்தில், இருந்த ஒரே ஆறுதலான தீனாவின் நகைச்சுவை கூட அமுங்கி விட்டது. ஆளையே அதிகம் காணவில்லை.

எபிசோட் 11-ல் நடந்தது என்ன?

‘Bachelor’ திரைப்படத்தில் இருந்து ஓர் அட்டகாசமான பாடலைப் போட்டார் பிக் பாஸ். பாரம்பரிய, நாட்டுப்புற பாணியில் இசைக்கப்பட்டிருந்த ‘பச்சிகளாம்.. பறவைகளாம்’ என்கிற பாடல் கேட்பதற்கே அத்தனை இனிமை. (கேரள தேசத்தில் இருந்து லவட்டியதோ?!)

போலீஸ் – திருடன் டாஸ்க் மீண்டும் தொடங்கியது. விதிகளின் படி இரண்டு பேர் மட்டுமே திருட முடியும் என்பதால் அபிராமியும் பாலாவும் முதல் ஷிப்ட்டை ஏற்றுக்கொண்டார்கள். சக போட்டியாளரின் ஒப்பனைச் சாதனங்களில் ஒன்றை திருடிய அபிராமி, அடகுக்கடைக்குச் சென்று “ஆல்ரெடி ரெண்டு செருப்பு கொடுத்திருக்கேன்” என்று சொல்ல “உங்களால செருப்பு, விளக்குமாறு மட்டும்தான் திருட முடியும் போல” என்று அபிராமியை பங்கம் செய்தார் தீனா. ‘Safe Zone’ பகுதிக்குள் நின்றிருந்த அபிராமியை “அப்பவே உன்னைப் பார்த்துட்டேன். வெளியே வா” என்று வனிதா மிரட்டி அழைக்க, அவர் வராமல் அடம்பிடித்தார். இதனால் கேப்டன் சிநேகனிடம் காட்டமாக புகார் செய்தார் வனிதா.

அபிநய் - அனிதா
அபிநய் - அனிதா

உக்கிரமாக நிகழ்ந்த முக்கோணச் சண்டை

பிக்பாஸ் என்பது மென்மையான குணாதிசயம் கொண்டவர்களையும் டெரராக மாற்றி விடும் போலிருக்கிறது. இந்த சீசனில் எப்படியாவது தாக்குப் பிடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாரோ..என்னமோ, இயன்ற போதெல்லாம் உரத்த குரலில் பேசி சண்டை போட்டார் அபிநய். குறிப்பாக இவர் தாமரையிடம் மல்லுக்கட்டிய காட்சிகள் எல்லாம் ரணகளம். உண்மையாகவே வார்த்தைகளால் ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்டார்கள். ‘தொடரும்’ போட்டு பகுதி பகுதியாக ஒளிபரப்பலாம் என்கிற அளவிற்கு நீளமானதொரு சண்டை நடந்தது. திருடர்கள் ஷிப்ட் மாற்றிக்கொண்டார்கள். இம்முறை சிநேகன் மற்றும் அபிநய். சிறையில் அடைத்த போதும் பாலா அடங்கவில்லை. தான் திருடியிருந்த போலீஸ் லத்தியை, சிநேகனின் பேண்ட் கால்வழியாக மறைத்து கடத்தினார். ஆனால் சிநேகனை சுஜா தடுத்து நிறுத்தினார். ‘என் ஸ்வப்னா புத்திசாலிடா.. எப்படி கண்டுபிடிச்சாங்க பார்த்தியா?” என்று நாம் மகிழ்ச்சியடைய ஆரம்பிப்பதற்குள், சிநேகனை அரைகுறையாக பரிசோதனை செய்த சுஜா, “சரி போங்க” என்று அனுப்பி விட்டார்.

தாமரை என்னும் பாறாங்கல்

“அபிநய் என்னை ‘டேய்’ன்னு சொல்லிட்டாரு. ஒரு போலீஸ் ஆஃபிசரை எப்படி மரியாதையில்லாம கூப்பிடலாம்? பத்து தோப்புக்கரணம் போடுங்க” என்று சுஜா தண்டனை கொடுக்க “அதெல்லாம் செய்ய முடியாது. அதான் ஸாரி சொல்லிட்டேன்ல?” என்று அழிச்சாட்டியம் செய்தார் அபிநய். இதற்கிடையில் போலீஸ்காரர்களுக்கு இடையேயும் கடுமையான சண்டை ஏற்பட்டது. ‘ஷாரிக் மீது சந்தேகமாக இருக்கிறது. திருடர்களிடம் கூட்டணி வைத்திருக்கிறார்’ என்று சுஜா குற்றம் சாட்ட, “அப்படில்லாம் இல்ல..ஷாரிக் தம்பி. தங்கக்கம்பி” என்று ஷாரிக்கை ஆதரித்து சுஜாவிடம் முட்டி மோதினார் தாமரை. ஷாரிக் டபுள்கேம் ஆடுவது அந்த வீட்டிற்கே தெரியும். என்றாலும் டாஸ்க்கைத் தாண்டி தாமரை காட்டும் இந்தப் பாசம் அபத்தமானது. சில சமயங்களில் தாமரைக்கு எதையும் சொல்லி புரிய வைக்கவே முடியாது. பாறாங்கல்லில் முட்டிக் கொள்வது போன்ற நேர விரயம் அது.

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த டெலிபோன், குண்டூசி டப்பா என்று ஒவ்வொன்றாக களவு போய்க் கொண்டே இருந்தன. வனிதாவிற்குச் சொந்தமான ஒரு பையை களவாட முடிவு செய்த பாலா, அதை கொஞ்சம் கொஞ்சமாக இடம் நகர்த்தி ஒரு கட்டத்தில் தாவிச் சென்று ஓடி அடகுக்கடையில் தந்து விட்டார். தாமரை பார்த்து எச்சரித்தும் போலீஸாரால் இதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கான்ஸ்டபிள் அனிதா, கார்டன் ஏரியாவில் ‘அக்கடா’வென்று காலை நீட்டி நிம்மதியாக படுத்தி்ருந்தார்.

தாமரை
தாமரை

அடுத்த Trending Star தாமரை

‘திருடன் – போலீஸ்’ டாஸ்க்கின் முதல் பகுதி முடிந்ததாக பிக் பாஸ் அறிவித்ததும் காவல்துறையினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இரண்டாவது சுற்றில் போலீஸ்காரர்கள், திருடர்களாக இடம் மாற வேண்டும் என்கிற அறிவிப்பு வந்த போது “எங்களால முடியாதுப்பா” என்று மறுத்தார்கள். “வேணுமின்னா ஷாரிக்கும் பாலாஜியும் திருடட்டும். நான் வர மாட்டேன்” என்று அடம்பிடித்தார் வனிதா. முதல் அணி செய்த அலப்பறை அத்தகையது. குறிப்பாக பாலா செய்த லூட்டிகளால் ஒட்டுமொத்த காவல்துறையே சமாளிக்க முடியாமல் திணறியது. “என் மேக்கப் பெட்டியை திருடி விட்டார்கள். அது வந்தால்தான் நான் தயாராக முடியும். இல்லையென்றால் நான் வர மாட்டேன்” என்று பிக் பாஸிடம் நேரடியாக புகார் செய்தார் வனிதா.

அணி மாற்றம் நிகழ்ந்ததும் முன்னர் திருடர்களாக அணியாக இருந்தவர்கள், புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார்கள். தங்களின் உடைமைப்பொருட்கள் அனைத்தையும் பெரிய பெரிய கவர்களில் ஒன்றாகப் போட்டு கட்டி வைக்க ஆரம்பித்தார்கள். அவற்றை ஒரே இடத்தில் வைத்து, காவலுக்கு ஒரு ஆளைப் போட்டுவிட்டால்போதும். எதிரணியினருக்கு திருட ஒன்றுமே கிடைக்காது என்பதுதான் பிளான். “இப்படி எல்லாத்தையும் கட்டி வெச்சிட்டா நாங்க எப்படி திருடறது?” என்று டென்ஷன் ஆனார் தாமரை. எனில் இந்த யோசனை இவர்களுக்கு முதலிலேயே வந்திருக்க வேண்டும்.

ஷாரிக்
ஷாரிக்

“எங்க அணில ஒற்றுமையே இல்லை. ஷாரிக் பய பாலாவோட கூட்டணி சேர்ந்திருந்தான். இந்த லட்சணத்துல நாங்க என்ன செய்யறது?” என்று பிக் பாஸிடம் அலுத்துக் கொண்டார் வனிதா. தாமரை – நிரூப் – அபிநய் என்று முக்கோண சண்டை ஆரம்பித்தது. தாமரைக்கு நிகராக குரலை உயர்த்தினார் நிரூப். தாமரையிடம் விடாமல் நீண்ட நேரத்திற்கு மல்லுக்கட்டினார் அபிநய். “நீ லூஸூ.. இல்லை. நீதான் லூஸூ என்று இவர்கள் பரஸ்பரம் வசைந்து கொண்டதைப் பார்த்து ‘இதையெல்லாம் பார்க்கிற நாங்கதான் லூஸூ” என்று சொல்லத் தோன்றியது. ‘அடுத்த Trending Star தாமரைதான்’ என்று கிண்டலடித்தார் நிரூப்.

அபிநய்யிடம் உக்கிரமாக சண்டை போட்டு விட்டு தனிமையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த தாமரையை சமாதானப்படுத்தினார் ஷாரிக். “இந்த டிரெண்டிங் கிண்டிங்..ன்னு ஏதோ சொல்றாங்கள்ல.. அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா” என்று வழக்கமான பல்லவியைப் பாடிய தாமரை “டீம் பிரிச்ச விதமே தப்பு” என்று அங்கலாய்த்தார். இதை அணித்தலைவரான வனிதாவிடம் சொல்ல தாமரைக்கு துணிச்சல் இருந்ததா?

“நீங்க பார்க்காத திருட்டாக்கா?... – சுஜாவின் கமென்ட்

“திருடங்களா இருக்கிறபோதே இவங்க இத்தனை அழிச்சாட்டியம் பண்ணாங்க.. இப்ப போலீஸா மாறிட்டாங்க.. இவங்களை மீறி நாம எப்படி திருடப் போறோம்?” என்கிற கவலையில் சுஜாவும் வனிதாவும் குசுகுசுவென்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். “இவங்களை எப்படி சமாளிக்கறதுன்னே தெரியலை” என்று வனிதா கவலைப்பட, “விடுங்க. நீங்க செய்யாததா?” என்று போகிற போக்கில் சொல்லி விட்டார் சுஜா. வனிதாவை ஏதோ ஃபுரொபஷனல் திருடர் என்பது மாதிரியான பொருளில் சுஜா சொன்னதை, நல்ல வேளையாக வனிதா கவனிக்கவில்லை. “ஷாரிக் பயலால கேம் சுவாரசியமே போயிடுச்சு” என்று வருந்தினார் வனிதா.

‘அணி மாற வேண்டியதை’ பஸ்ஸர் அடித்து அதிகாரபூர்வமாக தெரிவித்தார் பிக் பாஸ். வைரத்திற்கு காவலாக ஜூலியை அமர வைத்தார்கள். முன்பு பாலாஜி பார்த்த ட்யூட்டி இது. ‘போலீஸிற்குத் தெரியாமல் நைசாக திருட வேண்டும்’ என்பதுதான் அடிப்படையான விதி. ஆனால் முந்தைய அணி, கண் எதிரேயே பொருட்களை பறித்துக்கொண்டு ஓடிய விஷயம் ஆட்சேபிக்கப்பட்டது. எனவே அம்மாதிரி செய்யக்கூடாது என்று விதி திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் புதிதாக வந்த திருடர்களும் அதே வழிப்பறியைச் செய்ய “நீங்க மட்டும் செய்யலையா?” என்கிற நோக்கில் பயங்கர வாக்குவாதம் கழ்ந்தது.

BB Ultimate
BB Ultimate

ஜூலிக்குச் சொந்தமான பொருளை திருடிச் சென்ற அனிதா “இது ஜூலியோட பொருள். அவங்க ஒரு செலிபிரிட்டி. லண்டனுக்கெல்லாம் போயிருக்காங்க. ரேட் பார்த்து போட்டுக் கொடுங்க” என்று அடகுக்கடையில் கேட்க “நீங்க ஜூலியைக் கூட்டிட்டு வந்து லண்டனுக்கு ஸ்பெல்லிங் மட்டும் சொல்லச் சொல்லிடுங்க. நீங்க கேட்ட ரேட்டைக் கொடுக்கறேன்” என்று நக்கலடித்த தீனா “ஏம்மா. ஹேர்பேண்டுக்கெல்லாம் 2000 ரூவா கேட்கறீங்களே.. ஏதாச்சும் மனச்சாட்சி இருக்கா.. 30 ரூபாதான் தருவேன்” என்று அனிதாவை துரத்திவிட்டார். நிரூப்பின் கோட்டை திருடி வந்த சுஜா “என் புத்தியை உபயோகிச்சு திருடி வந்தேன். ரேட் பார்த்து செய்யங்கய்யா” என்று கோரிக்கை வைக்க “புத்திக்கெல்லாம் இங்க அமெளண்ட் கிடையாது” என்று கிண்டலடித்த தீனா “இந்த கோட்டை திருடிக்கொண்டு வந்தீங்களா? அவர் கிட்ட கேட்டு வாங்கி வந்தீங்களா?” என்று சுஜாவை பங்கம் செய்தார்.

அபிநய்
அபிநய்

“வனிதா எட்டி உதைக்கறாங்க” – அபிநய் புகார்

திருடர்களை கைது செய்வது தொடர்பாக வனிதாவிற்கும் போலீஸ்காரரான நிரூப்பிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பருத்திவீரன் கார்த்தி, சோன்பப்டி வண்டியை எட்டி உதைப்பது போல, சண்டையின் இறுதியில் அருகிலிருந்த தடுப்பை வனிதா எட்டி உதைக்க, அருகில் இருந்த அபிநய், இந்தச் செய்கையை அவமதிப்பாக எடுத்துக் கொண்டார். எனவே நேராக சிநேகனிடம் சென்று புகார் செய்தார். “நான் பாட்டுக்கு நின்னுட்டு இருக்கேன். என் கிட்ட இருக்கிற பொருளை வனிதா எட்டி உதைக்கறாங்க. என்னதிது?” என்று அபிநய் சொல்ல “உன்னை எட்டி உதைக்காம இருந்தாங்களே.. அதுவரைக்கும் சந்தோஷப்படுய்யா” என்பது சிநேகனின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.

‘நான் விளையாட வரலை’ என்று அழும்பு செய்து கொண்டிருந்த வனிதா, ஒரு கட்டத்தில் “அப்படிச் சொன்னாதான் நான் திருட மாட்டேன்னு அவங்க நினைப்பாங்க. என் மேல சந்தேகம் வராது. நான் வைரத்தை எடுக்க பிளான் பண்ணியிருக்கேன்” என்று தன் திருட்டுக் கூட்டாளிகளிடம் சொல்ல ‘அடேங்கப்பா’ என்று தோன்றியது. ஆனால் வனிதாவின் முயற்சிக்கு ஜூலி தடையாக இருந்தார். அவர் வைரத்தை ரயில்வே கான்டீன் டம்ளர் போல ஒரு கயிறு போட்டு கட்டி வைத்திருக்க “இந்த டிராமா கம்பெனில்லாம் என் கிட்ட வேணாம்” என்று சத்தம் போட்ட வனிதா, அந்த கயிற்றைப் பிடித்து மூர்க்கமாக இழுக்க, ஜூலியின் கையில் பிறாண்டல் ஏற்பட்டது.. “ஏன் இப்படி கடுமையா பேசறீங்க?” என்று பாலா ஆட்சேபிக்க “நான் அவ கிட்ட அப்படித்தான் பேசுவேன்” என்று அழிச்சாட்டியத்தை ஆரம்பித்தார் அனிதா.

வனிதாவின் ஆபாசமான Bullying

பிறகு ஜூலிக்கு நடந்ததெல்லாம் பரிதாபமான விஷயம். ‘டிராமா’ என்கிற ஒரு சொல்லை வைத்துக் கொண்டு விதம் விதமான வாக்கியங்களால் ஜூலியை கருணையே இல்லாமல் வதைத்தார் வனிதா. Bullying என்கிற உண்மையான பொருளை வனிதாவின் இந்தச் செய்கையின் மூலம் காணலாம். முதலில் இதற்காக முதலில் அழுது கோபப்பட்ட ஜூலி, பிறகு சுதாரித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஜூலியின் வியூகம் மாறியவுடன், கோபம் என்பது வனிதாவிற்கு இடம் பெயர்ந்தது. ஜூலியின் சிரிப்பைப் பார்க்கும் போதெல்லாம் வனிதா டென்ஷன் ஆனதைப் பார்க்கவே ஜாலியாக இருந்தது.

வனிதாவிற்கு ஆதரவாக பாலாஜி களத்தில் இறங்க, வனிதாவிடம் காட்ட முடியாத கோபத்தை பாலாஜியிடம் காட்டினார் ஜூலி. இருவருக்கும் உக்கிரமான வாக்குவாதம் நடைபெற்றது. “நீலிக்கண்ணீர் வடிக்கற.. உண்மையான ஜூலி யாருன்னு மக்களுக்கு தெரியப் போகுது. வெளியே போய் பாரு.. உன் டிராமால்லாம் வெளிச்சத்திற்கு வருது” என்று ஜுலியை விதம் விதமாக வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் வனிதா. டாஸ்க்கைத் தாண்டி பேசி ஜூலியை காண்டாக்க வேண்டும் என்பதுதான் வனிதாவின் நோக்கம் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

வனிதா
வனிதா

இந்தச் சமயத்தில் வைரத்தை தூக்கிக் கொண்டு தாமரை ஓட, அவரைப் பிடித்து கைது செய்ய முயன்றார் ஜூலி. “உன் கிட்ட தொப்பியே கிடையாது. நீயெல்லாம் அரெஸ்ட் பண்ண வந்துட்டியா?” என்று கிண்டலாக வனிதா ஆட்சேபிக்க “திருட்டு ஷிப்ட்ல தாமரை இப்ப கிடையாது. அவங்க எப்படி திருடலாம்?” என்று சரியான சட்ட விதியின் மூலம் கவுன்ட்டர் தந்தார் நிரூப். பிறகு தாமரை கைது செய்யப்பட்டார். “என்னா பண்ணிடுவீங்க?” என்பது மாதிரி அசால்ட்டாக நடந்து சென்றார் தாமரை. வனிதாவிற்கும் ஜூலிக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து கொண்டே இருந்தது. வனிதா செய்த ஒரு கிண்டலுக்குப் பதிலாக எதையோ சொல்ல ஆரம்பித்த ஜூலி பிறகு தயங்கி “உங்களையெல்லாம் போலீஸ் டிரெஸ்ல பார்க்கறதுக்கு….” என்று ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்தி விட்டார். (விடுங்க.. பாக்கியை நாங்க ஃபில் பண்ணிக்கறோம்!).

‘உள்பாவாடை திருடிய கேஸ்லாம் வருதுப்பா’

“எதைத்தான் திருடறதுன்னு விவஸ்தையே இல்லையா?” என்று துணிகளைத் திருடியவர்களைக் கிண்டலடித்த நிரூப், பிறகு தீனாவிடம் சென்று “என்னா.. அடகுக்கடைக்காரரே.. இதையெல்லாமா வாங்குவீங்க?” என்று கேட்க “நீங்க திருடும் போது உள்பாவாடையெல்லாம் கூடத்தான் திருடிக் கொண்டு வந்தீங்க” என்று நிரூப்பை பங்கம் செய்ய “வெச்சுக்கறேன்” என்று காண்டுடன் திரும்பி நடந்தார் நிரூப். “மேக்கப் டப்பாவை திருடி வந்திருக்கேன். பார்த்து காசு கொடுங்க” என்று ஒரு திருடர் கேட்க “எப்படியும் தடவித் தடவி அதை காலியாக்கித்தான் வெச்சிருப்பாங்க” என்று தீனாவின் ரகளையான அலப்பறை கூடிக் கொண்டே போனது. கடந்த முறை காவல்துறையில் கருப்பு ஆடாக ஷாரிக் இருந்ததைப் போன்று இந்த முறை சிநேகன் இருந்தார். ஷாரிக்கிடம் டீல் போட்டு ‘திருடிட்டு போ’ என்கிற மாதிரி கண்ணைக் காட்டினார்.

சுஜா
சுஜா

போலீஸ் தொப்பியை திருட முயன்ற தாமரையிடம் “அறிவிருக்கா..” என்று உக்கிரமாக சண்டை போட்டார் நிரூப். அதை விடவும் அதிகமாக கத்தி ஈடு கொடுத்தார் தாமரை. “ஒரு சமயத்துல ரெண்டு பேர் மட்டும்தானே திருடணும்.. எப்படி மூணு பேர்?” என்று நிரூப் மடக்க “நியாயமில்லாத பொருள்ன்னா எப்படியும் அதுக்கு விலை கொடுக்க மாட்டாங்கள்ல.. அப்புறம் என்ன?” என்று தாமரை பதிலுக்கு லா பாயிண்டை எடுத்து விட.. ஒரே சத்தம். முடியல.

‘இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. நாளை தொடரும்’ என்று பிக் பாஸ் அறிவிப்பு செய்ததோடு இந்த சண்டையும் சத்தமும் சற்று ஓய்ந்தது.