‘குருதிப்புனல்’ திரைப்படத்தில் நாசர், கமலிடம் ஒரு வசனம் பேசுவார். “இப்ப புரியுதா.. ஒரு சாதாரண மனுஷனை குத்தி குத்தி கீழே தள்ளினா, அவன் என்னை மாதிரி தீவிரவாதியா மாறுவான்” என்று. பிக்பாஸ் வீடும் அப்படித்தான். இந்த சீசனில் இதுவரை அமைதியாக இருந்த நிரூப் இப்போது வெறித்தனமாக கத்த ஆரம்பித்திருக்கிறார். எந்த வாக்கியம் பேசினாலும் அதன் பின்குறிப்பாக ‘பொக்’கென்று சிரித்து சமாளிக்கும் சிநேகனுக்கு கூட நேற்று கோபம் வெடித்தது. ஏன் வனிதாவிடம் எப்போதுமே பம்மும் பாலாஜி கூட நேற்று வனிதாவை எதிர்த்துப் பேச துணிந்து விட்டார். வனிதா, தாமரையெல்லாம் “நீ ஊதவே வேணாம்” லிஸ்ட்டில் இருக்கிறார்கள். ஒரு மனிதனின் குணாதிசயத்தை தீர்மானிப்பதில் அவன் இயங்கும் சூழலும் ஒரு முக்கியமான காரணியாக விளங்குகிறது என்பதற்கு சரியான உதாரணம் பிக்பாஸ் வீடு. சமூகத்தில் குற்றவாளிகள் தன்னிச்சையாக உருவாவதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்கிற தியரியை இதில் பொருத்திப் பார்க்கலாம்.
எபிசோட் - 12 -ல் நடந்தது என்ன?
முன்தினத்தைப் போலவே நேற்றும் நாட்டுப்புற இசையில் அமைந்த ஒரு நல்ல பாட்டைப் போட்டு மகிழ்வித்தார் பிக் பாஸ். ஒருவேளை இது தாமரைக்கான நினைவூட்டலோ?! ‘எப்போதும் வாய் கிழிய சண்டை போட்டுக் கொண்டிருக்காமல், உங்களின் கலைத்திறமையையும் அவ்வப்போது வெளிக்காட்டலாமே?” என்பதை தாமரைக்கு சொல்லாமல் சொல்கிறாரோ?!
பாலாஜி தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் இல்லாமல் எப்போதும் கிச்சன் ஏரியாவில் நின்று கொண்டிருப்பதை ஒரு குறையாக வனிதா இடித்துக் காண்பிக்க, அதனால் பாலாஜிக்கே கோபம் வந்து விட்டது. “நான் எந்த வேலை செய்யலைன்னு சொல்லுங்க.. பார்க்கலாம்?” என்று வனிதாவையே எதிர்க்கத் துணிந்து விட்டார். “என் கிட்ட எதிர்த்துப் பேசற அளவிற்கு நீ பெரிய ஆள் இல்லை” என்பது மாதிரி அலட்சியமாக கிண்டலடித்தார் வனிதா. வீட்டின் கேப்டன் சிநேகன்தான் என்றாலும் அவருக்கே வனிதாதான் குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அடாவடியான பேர்வழிகள் அப்போதைக்கு ஜெயிப்பது போலத்தான் ஒரு தோற்றம் தெரியும். ஆனால் நிரந்தரமான வெற்றி அவர்களுக்கு எப்போதும் கிடைக்காது.

தலைப்புச் செய்தி - அனிதா தாக்கப்பட்டார்
திருடன் – போலீஸ் டாஸ்க் பஸ்ஸர் அடித்தது. சிநேகனின் தலைமையிலான போலீஸ் அணி இன்னமும் தயாராகவில்லை. எதற்கோ வெளியே சென்ற சுஜாவைப் பார்த்து “எதையோ திருடப் போறாங்க. பிடிங்க” என்று ஜூலி கத்த “அடிப்பாவி.. என் டவலைத்தான் எடுக்கப் போனேன்” என்று சிரித்தார் சுஜா. அப்போதுதான் குளித்து விட்டு துண்டோடு வந்த ஷாரிக், எதிர் அணி சுதாரித்துக் கொள்வதற்குள் எதையோ திருடி அடகுக் கடைக்கு ஓட, அவரின் துண்டைப் பிடித்து இழுத்தார் பாலா. “யார் ரெண்டு பேர் திருடப் போறாங்கன்னு முடிவு பண்ணாமயே திருட ஆரம்பிச்சா என்ன அர்த்தம்?” என்கிற சரியான லா பாயிண்ட்டை முன் வைத்தார் நிரூப்.
“வந்துட்டாங்க…. ஆட்டிக்கிட்டு” என்று நிரூப் கோபத்தில் சொன்னதை, அனிதா ஆட்சேபித்தது சரியான விஷயம். இத்தனைக்கும் அனிதா மென்மையாகத்தான் சுட்டிக் காட்டினார். ஆனாலும் கோபத்தில் இருந்த நிரூப்பிற்கு எதுவும் காதில் விழவில்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. அனிதா மேல் சந்தேகப்பட்டு அவரை நிற்கச் சொன்னார் சிநேகன். ஆனால் அனிதா நிற்காமல் வேகமாக நகர, அவரின் கையைப் பிடித்து நிற்க வைக்க வேண்டியதாக இருந்தது.

பெண் போலீஸார்தான் பெண்களை சோதனை செய்ய வேண்டும் என்பது ஆதாரமான விதி. இதெல்லாம் பிக்பாஸ் வீட்டில் இல்லை. “ஐயோ. அண்ணா. கையை நல்லா முறுக்கிட்டீங்க.. வலிக்குது” என்று அனிதா சிணுங்க “ஸாரிம்மா” என்று பதறினார் சிநேகன். அனிதாவிற்கு உண்மையிலேயே வலியா அல்லது டிராமா போட்டாரா என்று தெரியவில்லை. “நான் நிக்கச் சொன்னா உடனே நிக்க வேண்டியதுதானே?” என்று சிநேகன் சுட்டிக் காட்டியது நல்ல பாயிண்ட். பிறகு அனிதாவும் சிநேகனும் கூட சமாதானமாகப் போய் விட்டார்கள். ஆனால் பாலாவிற்கும் அனிதாவிற்கும் முட்டிக் கொண்டது. திருடர்கள் அணி போலீஸாருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்பது பாலாவின் குற்றச்சாட்டு. “நீங்களும் அதையேதான் முன்னாடி பண்ணீங்க?” என்பது அனிதாவின் எதிர் குற்றச்சாட்டு. ‘Man handling’ என்கிற வார்த்தையை அனிதா சொல்லி விட்டதால் “எதையாவது சொல்லி சீன் போடாதீங்க. Moral Policing வேலையை இங்க பண்ணாதீங்க” என்று எரிச்சலில் கத்தினார் பாலா. இன்னொரு பக்கம் தாமரைக்கும் நிரூப்பிற்கும் இடையே முட்டிக் கொள்ள ஹைடெஸிபலில் கத்திக் கொண்டிருநதார் நிரூப்.
“ஜூலி கையைக் கூடத்தான் வனிதாக்கா பிடித்து இழுத்து காயப்படுத்தினாங்க. அப்ப உங்க கோபம் எங்க போச்சு?” என்று கேள்வி கேட்டு அனிதாவை பாலா மடக்க முயல “அதை ஏன் என் கிட்ட கேக்கறீங்க. வனிதாக்கா கிட்டயே கேட்க வேண்டியதுதானே? ஏன் பயமா?” என்று பாலாவின் ஈகோவை சீண்டினார் அனிதா. “ஹ… எனக்கென்ன பயம்?” என்பதை தாழ்வான குரலில் சொன்னார் பாலா. தாமரை பாலாவை விளையாட்டாக அடிக்கப் போக “அக்கா. என்னைத் தொடாதீங்க.. Man Handling பண்ணாதீங்க” என்று பாலா சர்காஸ்டிக்காக கிண்டல் அடித்தார்.
கட்டுப்பாடே இல்லாத திருடன் போலீஸ் டாஸ்க்
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் எவ்வித ஒழுங்கிற்கும் விதிகளுக்கும் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக பயணித்துக் கொண்டிருப்பதால், இரண்டு அணித்தலைவர்களும் சபையில் கூடினார்கள். “போலீஸார் நிக்கச் சொன்னா நின்னுடுங்க.. பிரச்சினை பண்ணாதீங்க..” என்கிற வேண்டுகோளை சிநேகன் வைக்க “தொப்பி போட்டவங்களுக்கு மட்டும்தான் கைது செய்யும் அதிகாரம் இருக்கு. விதிமீறல் செஞ்சா நிச்சயம் பாயிண்ட் கிடைக்கப் போறதில்லை. அப்புறம் ஏன் டென்ஷன் ஆகறீங்க” என்று தங்களின் திருடர் அணிக்கு புத்திமதி சொன்னார் வனிதா. இரண்டு அணிகளும் அவரவர்கள் செய்த பிழைகளைச் சுட்டிக் காட்ட ஆரம்பிக்க வீடு மறுபடியும் ரணகளமாகி நார்மல் நிலைக்குச் சென்றது.
“நாங்க அடகுக்கடைக்கு ஈஸியா போகாத மாதிரி லாக் போட்டு வெச்சிருக்கீங்க. மொதல்ல அதை எடுங்க” என்று வனிதா சொல்ல “அது எங்க ஐடியா.. அதுல என்ன தப்பு இருக்கு?” என்று அபிநய் சரியாகத்தான் கேட்டார். ஆனால் “நான் சொல்றது உனக்குப் புரியலையா?” என்று வனிதாவிற்கு கோபம் வர, பதிலுக்கு அபிநய்யும் உஷ்ணமானார். “நான் ஐடியா-ன்னு மட்டும்தானே சொன்னேன்.. தடையை எடுக்க மாட்டோம்னு சொல்லலையே?” என்று வனிதாவிற்கு ஈடுகட்ட முயன்றார் அபிநய். ஆனால் வனிதா அளவிற்கு இறங்கி சண்டை போடும் திறமை அபிநய்யிடம் இல்லை. டைரக்டர் மணிரத்தினம் படத்தில் வரும் ஒரு சாஃப்ட்டான கேரக்ட்டர், இயக்குநர் பாலாவின் முரட்டுத்தனமான படத்தில் அசந்தர்ப்பமாக மாட்டிக் கொண்டது போல் அபிநய் அவஸ்தைப்படுகிறார்.

போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நட்சத்திரங்களை திருடிச் சென்ற சுருதி, அடகுக்கடையில் பேரம் பேச “முதலாளி கிட்ட கேட்டுச் சொல்றம்மா” என்று வழக்கம் போல் பந்தா காட்டினார் தீனா. தன்னுடைய பேரம் பேசும் சாமர்த்தியம் செல்லுபடியாகாததால் “பூரி சாப்பிடறீங்களாய்யா. எடுத்துட்டு வரேன்” என்று தீனாவிடம் சுருதி ஐஸ் வைக்க முயல “வேணாம்மா. நீங்க எப்படி சமைக்கறீங்கன்னு நாங்க பார்த்துட்டுத்தான் இருக்கோம்” என்று பங்கம் செய்தார் தீனா. (கடந்த சீசன் ஒன்றில் வனிதா உணவை விரலால் சுவைத்துப் பார்த்து சமைக்கும் காட்சிதான் நினைவிற்கு வந்தது).

திருட்டிற்கும் சுருதிக்கும் எப்போதுமே ராசியில்லை
அடகுக்கடை அருகே தாமரையும் அனிதாவும் அந்த செட்அப்பை அசைத்துக் கொண்டிருக்க “என்ன இங்க கலாட்டா?” என்று அங்கு வந்த அபிநய் லத்தியை சுழற்ற, அது அனிதாவின் கைஎலும்பில் பட்டு விட்டது போல. “ஏய்.. அபிநய்.. வலிக்குது” என்று வலியால் முகச்சுளிப்புடன் வீட்டுக்குள் சென்றார் அனிதா. “உன் டிராமா கம்பெனி வேலையையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காத” என்று முன்னர் ஜூலியிடம் அழிச்சாட்டியம் செய்த வனிதா, இப்போது அனிதாவிடம் அதைச் செய்யவில்லை. அனிதா தன் அணியைச் சேர்ந்தவர் என்பதால் “பிக்பாஸ்.. இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இந்த விளையாட்டை உடனே நிறுத்துங்க. இவங்க ரொம்ப முரட்டுத்தனமா விளையாடறாங்க” என்று அனிதாவின் சிணுங்கலையும் மிஞ்சி ஊரைக் கூட்ட ஆரம்பித்தார்.
“நான் அனிதா கைல அடிக்கவேயில்லை” என்று அபிநய் சாதிக்க, “வேணுமின்னே யாராவது பண்ணுவாங்களா?” என்று சிநேகன் பஞ்சாயத்தில் இறங்க, அனிதாவின் வலிக்கு (?!) வனிதா மருத்துவம் பார்க்க, இடையில் தாமரையும் எதையாவது சொல்லி குட்டையைக் குழப்ப, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மஹா திருட்டு நடந்தது. வைரத்தை அபேஸ் செய்த ஷாரிக், அதை சுருதியிடம் கை மாற்றி விட்டார். தாமரை தந்த குறிப்பின் பேரில் உஷாரான அபிநய் “வைரத்தைக் காணோமே.. சுருதி.. ஸ்டாப்.. ஸ்டாப்” என்று கத்த, நிற்காமல் சிட்டாகப் பறந்த சுருதி அடகுக்கடையில் தந்து விட்டுத்தான் நின்றார்.

அனிதாவிற்கு அடிபட்ட சந்தர்ப்பத்தையும் எதிரணி பயன்படுத்திக் கொண்டதே என்று ஆத்திரம் அடைந்த சிநேகன் “யார் திருடியது. இப்ப.. எனக்குத் தெரிஞ்சாகணும்” என்று சுருதியிடம் ஹைடெஸிபலில் கத்த “நான் சொல்றத கேளுங்க. எனக்கும் கத்தத் தெரியும்” என்று ஈடுகொடுத்தார் சுருதி. (பாவம் சுருதி, திருட்டிற்கும் அவருக்கும் எப்போதுமே ராசியில்லை). “ஒரு பொண்ணுக்கு இங்க அடிபட்டுக் கிடக்கு. உங்களுக்கு பாயின்ட்தான் முக்கியமா? என்று அபிநய்யிடம் வனிதா எகிற, “அதனாலதான் இங்க வந்து நிக்கறேன்” என்று அபிநய்யும் எகிற அனிதாவிற்கு கை வலித்ததோ, இல்லையோ, நமக்குத்தான் காது வலித்தது. அத்தனை சத்தம்.
சிநேகன் சத்தம் போட்டதை மறைமுகமாக கண்டித்த வனிதா “எங்க அணி விதிமீறல் பண்ணியிருந்தா.. எப்படியும் பாயின்ட் வர்றப் போறதில்லை. அப்புறம் ஏன் இந்தக் கலாட்டா?” என்று எதிர்டீமிற்கு செக்பாயிண்ட் வைத்தார். சிநேகனுக்கும் வனிதாவை நேரடியாக எதிர்க்க பயம். எனவே தன் கோபத்தை சுருதியிடம் காட்டினார். ஆனால் வனிதா சுட்டிக்காட்டியது சரிதான். அவர் சொன்னதைப் போலவே வைரத்திற்கான பாயிண்ட் கிடைக்கவில்லை. இவர்களின் சத்தம் ஓய்வதற்குள், இன்னொரு பக்கம் சுஜாவும் ஷாரிக்கும் மோத ஆரம்பித்தார்கள். ஷாரிக் சுஜாவை ஏகவசனத்தில் ஒருமையில் பேச “மரியாதை கொடுத்துப் பேசு” என்று கோபமாக எச்சரித்தார் சுஜா.
“அது ஜூலியோட விக் இல்லையா?” – தீனாவின் அநியாயக் குறும்பு
“இது ஜூலி டை அடிக்கற டப்பா.. ரேட் பார்த்து போட்டுக் கொடுங்க” என்று அடகுக்கடையில் அனிதா கெஞ்ச “அப்ப ஜூலியோடது விக் இல்லையா?” என்று கேட்டு வெடித்து சிரிக்க வைத்தார் தீனா. அனிதா கேட்ட அதிகமான தொகைக்கு “ஏம்மா.. இந்த அமெளண்ட்டிற்கு ஹேர் பிளாண்டிங்கே பண்ணிடலாம்” என்று தீனாவின் ரகளை தொடர்ந்தது. “இந்த டை டப்பாவிற்கெல்லாம் பத்து ரூபாதான் தர முடியும். எடுத்துட்டு போ” என்று சொல்ல “என்னா.. சார்…?” என்று சிணுங்கினார் அனிதா.
“என்னமோ தனியா இருக்கற மாதிரி ஃபீல் பண்றேன்.. நான்தான் இங்க பலவீனமான போட்டியாளர் மாதிரி எனக்குள்ள தெரியுது” என்று சுயபச்சாதாபத்தில் அபிராமி கலங்க, “செல்லக்குட்டி.. பட்டுக்குட்டி. அப்படில்லாம் சொல்லக்கூடாது” என்று கொஞ்சி ஆறுதல் சொன்னார் சுஜா.

பிக்பாஸிடமிருந்து ஒரு தேவகான அறிவிப்பு வந்தது. ஆம், ‘லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் இத்துடன் முடிகிறது’ என்கிற இனிய தகவல் அது. போட்டியாளர்கள் பெருமூச்சு விட்டார்கள். அதை விடவும் அதிகமாக பார்வையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். அந்த அளவிற்கு இந்த டாஸ்க் எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமல் வெறும் சண்டையாகவே நடந்தது. நல்லவேளையாக, தீனா இருந்தாரோ, பிழைத்தோமோ… டாஸ்க் முடிந்த கையோடு சிநேகனும் சுருதியும் சிரித்துப் பேசி ராசியானார்கள். சிநேகனின் செருப்பை பாலாஜி திருடிச் சென்ற அற்பமான சம்பவத்தை மக்கள் நினைவுப்படுத்த வீட்டில் சிரிப்புச் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

“ஷாரிக்.. அடகுக்கடைக்கு போங்க…” என்று பிக் பாஸ் அறிவிக்க ‘என்னமோ. ஏதோ..’ என்று குழம்பி சென்றார் ஷாரிக். வனிதாவின் அணி திருடிய பொருட்கள் மதிப்பிடப்பட்டன. இவர்கள் மொத்தமாக 41 பொருட்களை திருடியிருக்கிறார்கள். அதில் ஜூலியின் டை அடிக்கற டப்பா போன்ற டொங்கலான சமாச்சாரங்களை கழித்து விட்டால் 13 பொருட்கள்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமாம். போலீஸ் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு மட்டும் அதிக மதிப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வனிதாவின் அணி 5930 பாயிண்ட் பெற்றது.
“அய்யா.. ரவுண்டா தாங்கய்யா..” என்று ஷாரிக் கெஞ்ச “ரவுண்டா ஐயாயிரம் தந்துடட்டுமா?” என்று கலாட்டா செய்த தீனா, சில பல பேரங்களுக்குப் பிறகு 6000 பாயிண்ட் தருவதற்கு ஒப்புக் கொண்டார். “அய்யா. ஏழு பேர் இருக்கோம்.. ஏழாயிரம் கொடுத்தீங்கன்னா.. பங்கு பிரிக்க வசதியா இருக்கும்” என்று ஷாரிக் கெஞ்ச “சேஞ்ச் வேணுமின்னா தரச்சொல்லட்டுமா?” என்று தீனா சொல்ல “சேஞ்ச் வராதுய்யா” என்று ஷாரிக் இயல்பாக சொன்ன கமெண்ட்டிற்கு “அதையேதான் நானும் சொல்றேன். ஆட்டத்துலயும் எந்த சேஞ்சும் இல்லை. ஒரே மாதிரி இருக்குது” என்று தீனா அடித்த கமெண்ட் அருமை. “யப்பா.. தம்பி. நான் பாலாஜி வந்திருக்கேன்.. நானும் டீம்லதான் இருக்கேன்.. எனக்கும் ஏதாவது கொடுப்பா” என்று ஒரு அமெளண்டை தேத்த பாலாஜி வந்து நிற்க “நீங்களே சொல்லித்தான் தெரியுது.. நீங்களும் டீம்ல இருக்கற விஷயம்” என்று அவரையும் கலாய்த்தார் தீனா. “எங்கப்பா.. என்னை விளையாட விட்டாங்க.. ஒரு மரியாதைக்கு கூட என்னை யாரும் அரெஸ்ட் பண்ணலை” என்று அனத்தினார் பாலாஜி.
சிநேகன் அணி வெற்றி!
லக்ஸரி பட்ஜெட்டிற்கான பாயிண்ட்டுகளின் முடிவு வந்தது. இதில் சிநேகனின் அணி 10800 சம்பாதித்திருக்க, வனிதாவின் அணி 6300 பெற்றிருந்தது. எனவே சிநேகன் அணி வெற்றி பெற்றதாக பிக் பாஸ் அறிவித்தார். வீட்டின் கேப்டன் ஒவ்வொரு போட்டியாளரையும் மதிப்பிட்டு மதிப்பெண் அளிக்க வேண்டிய சமயம். ஒவ்வொருவரின் ப்ளஸ், மைனஸ் பாயிண்ட்டுகளை யார் மனதையும் புண்படுத்தாமல் இதமாகப் பேசி அலசிய சிநேகன் மதிப்பெண்களை அள்ளி வீசினார். ஏறத்தாழ அனைவருமே 10-க்கு 9 மதிப்பெண் பெற்றார்கள். ஜூலி மற்றும் அனிதாவிற்கு மட்டும் 8 மதிப்பெண் கிடைத்தது.

“ஐயா. டாஸ்க் முடிஞ்சது சரி.. என்னோட கதி என்னங்கய்யா..?.” என்று ஜூலியின் வாயாக நியமிக்கப்பட்டிருந்த தாமரை பிக் பாஸிடம் கதற “அது இன்னமும் தொடரும்” என்று தாமரையை அழ வைத்தார் பிக் பாஸ். தாமரையின் கண்களில் படாமல் ஜூலி ஆங்காங்கே ஒளிந்து கொண்டு வெறுப்பேற்ற “அடேய் கிழவா.. நீ மட்டும் என் கையில கிடைச்சே.. மண்டையை உடைச்சே போடுவேன்” என்று சுரேஷ் தாத்தாவை கொலைவெறியுடன் தாமரை ஜாலியாக திட்டும் காட்சியோடு எபிசோட் முடிந்தது.
அடுத்த டாஸ்க்கில் இவர்கள் எப்படியெல்லாம் ரணகளமாக முட்டிக் கொள்ளப் போகிறார்களோ என்பதை நினைத்தால், இப்போதே கலவரமாக இருக்கிறது.