Published:Updated:

BB Ultimate 16: அழுகை! அழுகையோ அழுகை! அடம்பிடித்து கேப்டனான வனிதா; நிரூப்பை காப்பாற்றினாரா அபிராமி?

BB Ultimate

BB Ultimate : அபிராமி நிரூப்பை இவர் தொடர்ந்து பாராட்டுவதைப் பார்த்தால் மீண்டும் ‘நல்ல விஷயம்’ நடக்கும் போல் தெரிகிறது.

Published:Updated:

BB Ultimate 16: அழுகை! அழுகையோ அழுகை! அடம்பிடித்து கேப்டனான வனிதா; நிரூப்பை காப்பாற்றினாரா அபிராமி?

BB Ultimate : அபிராமி நிரூப்பை இவர் தொடர்ந்து பாராட்டுவதைப் பார்த்தால் மீண்டும் ‘நல்ல விஷயம்’ நடக்கும் போல் தெரிகிறது.

BB Ultimate
‘இந்தக் கட்டுரைத் தொடரை பிக் பாஸ் டீம் தொடர்ந்து வாசிக்கிறார்கள்’ என்பதற்கான இன்னொரு நிரூபணம் கிடைத்துள்ளது. ‘அந்தக் குழந்தையே நீதான்’ என்று நிரூப்பை அனிதா கொஞ்சி மகிழ்ந்த போது ‘ஆறடிக்கும் மேல் உள்ள நிரூப் குழந்தை மாதிரி வீட்டில் தவழ்ந்து வருவதை கற்பனை செய்து பார்க்கவே பீதியாக உள்ளது’ என்று கட்டுரையில் எழுதியிருந்தேன். பிக் பாஸ் இதை வாசித்தாரோ.. என்னமோ?! ‘அடடே! இந்த ஐடியா நல்லாயிருக்கே!’ என்று அதை டாஸ்க்கில் செயல்படுத்தி விட்டார். ஆனால் இது நிரூப்பிற்கு கிடைத்த தண்டனை அல்ல. பம்ப்பர் லாட்டரி பரிசு. கோபியர்கள் புடைசூழ மம்மு, டான்ஸ், பாட்டு என்று ஒரே கொஞ்சல்தான். ‘மனுஷன் வாழறான்யா’.. தலைவர் தேர்தலில் பிக் பாஸூம் வனிதாவும் சேர்ந்து அழிச்சாட்டியம் செய்ததில் வீடு சற்று நேரம் பரபரப்பாக ஆனது. எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ.. அது நடந்தே விட்டது. ஆம். வனிதாதான் இந்த வாரத்தின் தலைவர்.

எபிசோட் 16-ல் நடந்தது என்ன?

‘வனிதாவின் டிரெண்டிங் பிளேயர்’ பதவிக்காலம் முடிகிறது’ என்கிற மங்கலகரமான தகவலுடன் எபிசோட் துவங்கியது. “வனிதா.. நீங்கள் சிறப்பு ஏரியாவை விட்டு வெளியே வர வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும் வரை அது மீண்டும் தடை செய்யப்பட்ட பகுதியாக மாறும்’ என்று அறிவித்தார் பிக் பாஸ். ‘கெட் அவுட் ஐ ஸே’ என்று இதை ஜாலியாக மொழிபெயர்த்தார் பாலா. “ஒரு தடவை அந்த thug life சாதனங்களையெல்லாம் போட்டுக்கிட்டு வாங்களேன்” என்று மக்கள் வேண்டுகோள் வைக்க, ‘நம்ம மேல இவிய்ங்களுக்கு இம்பூட்டு பாசமா?” என்கிற ஆச்சரியத்துடன் அவற்றை அணிந்து கொண்டு நடந்து வந்தார் வனிதா. ‘விடுகதையா.. இந்த வாழ்க்கை.. விடைதருவார் யாரோ?’ என்கிற பாடலை மக்கள் உருக்கமாகப் பாடிக் கொண்டே பின்தொடர “இருங்க.. வெச்சக்கறேன்” என்று வனிதா இந்தக் கிண்டலை ஜாலியாக எடுத்துக் கொண்டார்.

வனிதா
வனிதா

நிரூப் என்கிற ஜூராசிக் பேபி

15-ம் நாள் விடிந்தது. ‘செல்லக்குட்டி ராசாத்தி..’ பாடலுக்கு மக்கள் சோம்பேறித்தனமாக நடனமாடினார்கள். கார்டன் ஏரியாவில் சுரேஷின் கட்அவுட்டோடு சுஜாவுடைய படமும் சேர்ந்திருந்தது. (பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னோடிகள்; தியாகிகள்). சுஜாவிடமிருந்து வெடிகுண்டைப் பெற்றிருந்த நிரூப்பிற்கான தண்டனையை அறிவித்தார் பிக் பாஸ். உண்மையில் அது தண்டனை அல்ல. நிரூப்பிற்கான பம்பர் பரிசு.

‘அடுத்த அறிவிப்பு வரும் வரை நிரூப் நான்கு வயதுக் குழந்தையாக வலம் வர வேண்டுமாம். (எதே?!). சுட்டித்தனம், மழலை, முழு எனர்ஜி, துறுதுறு என்று நான்கு வயதுக் குழந்தையின் குறும்புத்தனங்களை அவர் செய்ய வேண்டுமாம். எது குடித்தாலும் ஃபீடிங் பாட்டிலில் குடிக்க வேண்டுமாம். உணவை விரும்பியவர் கையால் ஊட்டி சாப்பிட வேண்டுமாம். மற்றவர்களும் சலித்துக் கொள்ளாமல் இந்தக் குழந்தைக்கு முழு ஒத்துழைப்பைத் தர வேண்டுமாம். தாலாட்டு, கதை சொல்லி தூங்க வைக்க வேண்டுமாம். பாத்ரூம் செல்லும் போது துணைக்குச் செல்ல வேண்டுமாம். (நல்லவேளை, இத்தோடு நிறுத்தினார்கள்). “ஹைய்யா.. ஜாலி.. ஜாலி..” என்று அப்போதே பேபி மோடிற்கு உற்சாகமாக மாறினார் நிரூப்.

“பாட்டுப் பாடி டான்ஸ் ஆடுங்க.. ஆன்ட்டி..” என்று அபிராமியையும் சுருதியையும் நிரூப் குழந்தை பாடாய்படுத்தத் துவங்கியது. ‘ஆன்ட்டின்னு எங்களைக் கூப்பிடாத செல்லம்’ என்று அப்போதும் தங்கள் இமேஜை பாதுகாக்க அவர்கள் முயன்றார்கள். இந்தக் குழந்தை எஸ்.ஜே.சூர்யா படத்தில் வருவது போல வில்லங்கமான குழந்தை போலிருக்கிறது. “ரைம்ஸ்லாம் வேணாம்.. ஏதாவது ஐட்டம் சாங்கிற்கு டான்ஸ் ஆடுங்க” என்று நிரூப் குழந்தை காலை உதைத்துக் கொண்டு அழ, “இந்த வார்த்தைகள்லாம் யார் உனக்கு சொல்லித் தந்தது. ஐட்டம் சாங்குன்னுல்லாம் சொல்லக்கூடாது. ‘சோலோ சாங்’குன்னு சொல்லணும்” என்று சுருதி திருத்தினார். (சுஜா அடித்து விட்டுப் போன அடி அப்படி!).

நிரூப்
நிரூப்

குழந்தைக்கு “ஊம்.. சொல்றியா.. பாட்டு வேணுமாம்’

‘சோலோ சாங்தான் வேண்டும்’ என்று குழந்தை அடம் பிடித்ததால் “டாடி மம்மி வீட்டில் இல்ல…’ பாடலை அபிராமியும் சுருதியும் இணைந்து பாடி ஆட, “இந்தப் பாட்டு வேணாம். ஊம். சொல்றியா..பாட்டுத்தான் வேணும்..” என்று தன் செலக்ஷனில் தெளிவாக இருந்தது குழந்தை. இந்தச் சிறுவயதிலேயே என்னவொரு ஞானம்?! “அய்யோ. அந்தப் பாட்டுக்கு லிரிக்ஸ் தெரியாது” என்று இருவரும் எஸ்கேப் ஆனார்கள். டான்ஸ் பார்த்து களைத்துப் போயிருந்த குழந்தைக்கு ஃ.பீடிங் பாட்டிலில் காஃபி வந்தது. “சூடா இருக்கும். பார்த்து சாப்பிடுடா தங்கம்” என்று ஆற்றியபடி அதைத் தந்தார் ஜூலி.

அனிதாவின் மேக்கப் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டு அடம்பிடித்த குழந்தை “டான்ஸ் ஆடுங்க” என்று அழ, அனிதாவும் வனிதாவும் சேர்ந்து “ரிங்கா ரிங்கா. ரோசஸ்” பாடலுக்கு ஆடியது கண்கொள்ளாத காட்சி. “ஊம் சொல்றியா..பாட்டுத்தான் வேணும்” என்று தன் சிலபஸில் தீவிரமாக இருந்தது குழந்தை. “ஆம்பள புத்தி..’ ன்றதைத்தான் அவன் எதிர்பார்க்கறான்.. பாடித் தொலை” என்று குழந்தையை மண்டையில் தட்டினார் வனிதா. (வெஷம்.. வெஷம்..) சில வரிகளை அனிதா பாடியதில் குழந்தை தற்காலிகமாக நிம்மதியடைந்தது.

சிநேகன்
சிநேகன்

வீட்டின் தலைவராக தகுதி பெற்றிருந்த சுஜா வெளியேற்றப்பட்டு விட்டதால் தலைவர் போட்டி மீண்டும் நடந்தது. கடந்த முறை சுரேஷ் வெளியேறிய போது தனது பதவியை சிநேகனுக்கு தந்து விட்டுச் சென்றார். ஆனால் சுஜாவிற்கு இந்த வாய்ப்பு தரப்படவில்லை. இதன் உள்குத்து பிக் பாஸிற்கு மட்டும்தான் தெரியும். வனிதாவை தக்க வைப்பதற்கான உத்தியோ, என்னவோ?!

இரண்டாவது நிலையில் இருந்த சுருதிக்கும் Trending Player வனிதாவிற்கும் தலைவர் பதவிக்கான போட்டி ஆரம்பித்தது. ஆனால் வேறு விதமான போட்டியை பிக் பாஸ் நடத்தியிருக்கலாம். CAPTAINCY என்கிற வார்த்தைகளைப் பொருத்தும் அதே போட்டியை மீண்டும் நடத்தியதிலும் ஏதாவது உள்குத்து இருக்கலாம். ஏனெனில் இந்த விளையாட்டை வனிதா சமீபத்தில்தான் விளையாடியிருப்பதால் அது அவருக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

வனிதாவின் கேப்டன்சி ஆட்டம் நேர்மையானதா?

ஆட்டம் ஆரம்பித்தது. சுருதி நடப்பதற்கே மிகவும் தடுமாறி எழுத்துக்களைத் தேட, வனிதாவோ ரிமோட் பொம்மை மாதிரி குடுகுடுவென்று ஓடி கடகடவென்று எழுத்துக்களை அடுக்கினார். இந்த விளையாட்டில் அவருக்கு முன்அனுபவம் இருப்பது ஒருபக்கம் இருக்கட்டும். அவர் எழுத்துக்களைக் கூட தடுமாறாமல் சரியாகத் தேடி எடுத்து ஓடியது மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அது குறித்து தங்களுக்குள் முனகிக் கொண்டிருந்தார்கள். நடுவரான சிநேகனுக்கும் அதே சந்தேகம்தான். ஆனால் வனிதாவைத் தடுத்து நிறுத்த முடியுமா? எனவே அவரும் கூட்டத்தில் இணைந்து முனகிக் கொண்டே நின்றிருந்தார். சுருதி தட்டுத் தடுமாறி, இரண்டே எழுத்துக்களை மட்டும் வைத்திருக்க, ‘குடுகுடு வனிதா’ அதற்குள் டாஸ்க்கையே முடித்து விட்டார்.

“இந்த ஆட்டம் செல்லாது.. மீண்டும் விளையாடணும்.. உங்க முகமூடி சரியா மூடப்படலை.. நீங்க எழுத்துக்களை எடுக்கும் போது எந்தத் தடுமாற்றமும் இல்லாம எடுத்தீங்க” என்று ஆங்காங்கே எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. ஒருவர் ஸ்போர்டிவ்வான ஆளாக இருந்தால் “ஓகே.. மீண்டும் விளையாடுவோம். என்ன இப்ப?” என்று இந்தச் சமயத்தில் விளையாடச் சென்றிருப்பார். ஆனால்.. வனிதா அக்கா அப்படி ஒப்புக் கொள்ளக்கூடிய ஆளா என்ன? “என்னையே சந்தேகப்படறீங்களா.. எழுத்தை தொட்டு எடுக்கும் போது தெரியாதா.. இப்பத்தானே இந்த கேமை ஆடினேன்.. இப்படியெல்லாம் எனக்கு கேப்டன் பதவி வேணாம். சுருதிக்கே கொடுத்துடுங்க” என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.

வனிதா
வனிதா

ஆனால் வனிதாவின் பக்கம் நியாயமேயில்லையா? இருக்கிறது. அவர் ஓட்டை வழியாக பார்த்து விளையாடவே இல்லை என்பது உண்மை என்றால் இந்த வெற்றி அவருக்கானதுதான். ஆனால் இதை எப்படி நிரூபிப்பது? அவரின் மனச்சாட்சிக்கு மட்டுமே அது தெரியும். வனிதாவின் தரப்பு உண்மை என்றால் அவர் மீண்டும் விளையாட மறுப்பது சரிதான். இல்லையென்றால் மற்றவர்கள் சொன்ன புகார்கள் உண்மை என்பது போல் ஆகி விடும். இந்த விஷயத்தை சாதாரணமாக கையாண்டிருந்தால் அது வனிதா இல்லையே?! “நீ போய் விளையாடிப் பாரு. அப்பத்தான் தெரியும்… எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மறுபடியெல்லாம் விளையாட மாட்டேன். எனக்கு வேற வேலை இல்லை?!” என்றெல்லாம் ஆர்ப்பாட்டமாக பேசினார் வனிதா.

தாமரை - வனிதா
தாமரை - வனிதா

நெற்றிக்கண்ணை பாதி மட்டும் திறந்த சிநேகன்

சுருதி தலைவரானால் நன்றாக இருக்கும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும். ஏனெனில் வனிதாவின் அட்ராசிட்டி அப்படியானது. ஆனால் வனிதா ஜெயித்து விட்டதால் பலருக்கும் உள்ளூற அதிர்ச்சி. என்றாலும் தங்களின் ஆட்சேபத்தை ஏறத்தாழ அனைவருமே துணிச்சலாக பதிவு செய்தது நல்ல விஷயம். இப்போது முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு சிநேகனுக்கு வந்தது. பிக் பாஸூம் அவரை சாமர்த்தியமாக கை கழுவி விட்டார். வனிதா பார்த்துதான் ஜெயித்திருப்பார் என்கிற சந்தேகம் சிநேகனுக்கு வலுவாகவே இருந்தது. எனவே “வோட்டு போடலாமா,?” என்று மற்றவர்களையும் கோர்த்து விட்டு அவர் எஸ்கேப் ஆக முயல “அவங்க பார்த்தாங்களா.. இல்லையான்னு நாம எப்படி சொல்ல முடியும்? அவங்கதான் சொல்லணும்” என்று பின்வாங்குவது போல் அனிதா சொன்னாலும் அதுவும் லாஜிக்தான்.

BB Ultimate
BB Ultimate

“சிநேகன். யார் வெற்றி பெற்றதுன்னு சொல்லுங்க..” என்று நச்சரித்தார் பிக் பாஸ். “நடந்து முடிந்தபடி பார்த்தா வனிதாதான் வெற்றி. ஆனா எனக்கு இதில் திருப்தியில்ல” என்று சிநேகன் நேர்மையாகச் சொன்னதற்கு பாராட்டு. டாஸ்க்கின் பெயர் நெற்றிக்கண். கொஞ்சமாவது அந்தத் தலைப்பை நியாயப்படுத்தினார் சிநேகன். “வாழ்த்துகள் வனிதா.. நீங்கள்தான் இந்த வாரத்தின் தலைவர்” என்று பிக் பாஸ் அறிவிக்க, ‘தாங்க்யூ பிக் பாஸ்” என்று சற்று கூட லஜ்ஜை இல்லாமல் ஏற்றுக் கொண்டார் வனிதா. “ஓகே. பஞ்சாயத்து முடிஞ்சது.. போ.. போ.. கூட்டத்தைக் கலை” என்று சூனா பானா போல பிக் பாஸ் அறிவித்து விட்டாலும் இந்தச் சர்ச்சை முடியாமல் ஆங்காங்கே புகைந்து கொண்டே இருந்தது.

தன்னிடம் உரையாட வந்த சுருதியிடம் “எனக்கு கொஞ்சம் கீழே புல் தெரிஞ்சது.. அவ்வளவுதான்” என்று சமாளித்தார் வனிதா. எனில் எழுத்துக்களும் தெரிந்தது என்பதுதான் அர்த்தம். “அப்ப அதுதான் உங்க அட்வான்டேஜ்” என்று சுருதி மல்லுக்கட்ட “உன் கெப்பாசிட்டி அவ்வளவுதான். அதுக்கு நான் என்ன பண்றது?. நான் ஆக்ஸ்போர்டில் படித்தவ” என்றெல்லாம் அநாவசியமான வார்த்தைகளை வனிதா விட, பதிலுக்கு மல்லுக் கட்டினாலும் சுருதியின் முகம் அழுகையுடன் சுருங்கிப் போனது. “எப்ப சந்தேகம் வந்துச்சோ.. அப்பவே ஆட்டத்தை நிறுத்தியிருக்கணும்” என்று தாமரை சொன்னதும் நல்ல பாயிண்ட்தான். ஆனால் வனிதாவாக அல்லாமல் வேறு யாராவதாக இருந்திருந்தால் நடுவர் சிநேகன் இதை நிச்சயம் செய்திருப்பார்.

வனிதாவின் இரண்டாவது அழுகைச் சம்பவம்

எரிகிற நெருப்பில் மூலிகை பெட்ரோலை ஊற்றுவது போல ஷாரிக்கும் இந்தச் சர்ச்சையை இன்னொரு கோணத்தில் திருப்பினார். “நேத்து விளையாடும் போது சுஜாவிற்கும் கண்ணு தெரிஞ்சது; உங்களுக்கும் தெரிஞ்சது” என்று அவர் தாமதமான ‘பிரேக்கிங் நியூஸ்’ தர, “அது எப்படி உனக்குத் தெரிஞ்சது?. வா.. இப்ப நாம ரெண்டு பேரும் விளையாடலாம்” என்று வனிதா சவால் விட “சரி.. வாங்க” என்று ஷாரிக் சொல்வார் என்று வனிதா எதிர்பார்க்கவில்லை போல. “வேற வேலை இல்லை.. போடா” என்று பின்வாங்கினார். (வேற வேலை இல்லாமத்தானே பிக் பாஸிற்கு வந்திருக்கீங்க அம்மணி?!)

“என்னை மட்டும் ஏன் இவங்க தொடர்ந்து டார்கெட் பண்றாங்க.. (எதே?!) வேற யாராவதா இருந்தா சும்மா இருந்திருப்பாங்க” என்று வனிதா கண்ணைக் கசக்க “அழாதீங்க்க்கா..” என்று ஒன்று விட்ட தோழியாக ஆறுதல் சொன்னார் அபிராமி. “என்னை வெச்சு இவங்க புகழ் அடையப் பார்க்கிறாங்க” என்று சொன்ன வனிதா, “அதிகாரத்தை உனக்கு டிரான்ஸ்பர் பண்ணிடறேன்.. நீ பார்த்துக்கறியா?” என்று அபிராமியிடம் ‘வேற லெவல்’ அரசியல் பேச ஆரம்பித்தார்.

வனிதா
வனிதா

“தலைவரே என்னைப் பாராட்டிட்டாரு”

“இங்க குரூப் பாலிட்டிக்ஸ் இருக்கு” என்று இன்னொரு பக்கம் சிநேகன் சொல்லிக் கொண்டிருக்க “அப்படியா.. என் கண்ணுக்குத் தெரியலையே?!” என்பது போல் பம்மினார் பாலா. “நான் இங்க விளையாடறவங்களுக்கு உண்மையா இருக்கத் தேவையில்லை. மக்களுக்கு உண்மையா இருந்தா போதும். அவங்கதான் வாக்களிக்கப் போறாங்க. நாமினேட் பண்றது வேணா வீட்டுக்குள்ள இருக்கலாம். ஆனா முடிவு பண்றவன் வெளிலதான் இருக்கான்” என்று சிநேகன் உணர்ச்சிகரமாக பேசிய பன்ச் வசனத்தை ஆமோதித்தார் பாலா. “தலைவரே என்னைப் பாராட்டிட்டார்.. அது போதும்ப்பா எனக்கு. ‘எனக்குத் தெரிஞ்ச சிநேகனுக்கு பயம் கிடையாது; மரியாதை இருக்கு” என்று தலைவர் சொன்னது சில்லுன்னு இருக்கு. நான் ரொம்ப மூர்க்கமானவன்னு என்னை தெரிஞ்சவங்களுக்குத்தான் தெரியும். இங்க அன்பைக் காட்டத்தான் வந்திருக்கேன்” என்று சிநேகனின் பன்ச் வசனங்கள் தொடர்ந்தன.

ஒட்டுமொத்த வீடே தன் மீது பாய்ந்ததில் வனிதா உள்ளுக்குள் கலங்கியிருப்பார் போல. எனவே இதைப் பற்றி பிக் பாஸிடம் சென்று அவர் முறையிட, அவரும் பயந்து கொண்டே வனிதாவிற்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார். வெளியில் வந்த வனிதா இன்னமும் அழுகையை நிறுத்தாமல் இருக்க. “சரி.. என்ன பண்றது?.. ஒழிஞ்சு போ.. நீதான் தலைவரு” என்கிற மாதிரி மற்றவர்களும் ஒப்புக் கொண்டு ஆறுதல் சொன்னார்கள்.

நிரூப்
நிரூப்

நிரூப் குழந்தையின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பித்தது. அது அபிராமியிடமே தொடர்ந்து சென்று தொடர்ந்து அடம் பிடித்ததில் ஏதோ விஷமத்தனம் தெரிந்தது. “நீ நல்ல குழந்தை இல்ல..” என்று வனிதா கொஞ்ச “இல்லை. ஆன்ட்டி” என்று மறுத்த பேபி “இந்த டிரஸ் நல்லாயில்ல.. மாத்திக்கோங்க” என்று ஜூலியிடம் குறும்பு செய்தது. (உண்மையில் அந்த டிரஸ்ஸில்தான் ஜூலி நன்றாக இருந்தார்). “எனக்கு பேன் கேக்கு வேணும். அந்தப் பெரிய ஆன்ட்டிக்கு செய்யத் தெரியும். கூடவே சிப்பர்ல காஃபி கொண்டு வா” என்று அபிராமியிடம் ஆர்டர் செய்தது குழந்தை. ‘பெரிய ஆன்ட்டி’ என்று குழந்தை சுட்டிக் காட்டியது வனிதாவை. இந்த விஷயம் அவரின் காதில் விழுந்தால் குழந்தையின் கதி, அதோகதி தான்.

“நான் தனிமையா ஃபீல் பண்றேன்” என்று அபிராமி அடிக்கடி மூக்கைச் சிந்துவதாலோ.. என்னமோ, அவரின் குடும்பத்தினர் வாழ்த்துச் செய்தியுடன் கேக் அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்தும் ஒரு பாட்டம் அழுது தீர்த்தார் அபிராமி. இன்னொரு பக்கம் உடை மாற்றும் அறையில் ரகசியமாக அழுது கொண்டிருந்தார் சுருதி. தனது வெற்றி வாய்ப்பை வனிதா பறித்தது தொடர்பாக இருக்கலாம். ஆனால் பிறகு ‘எங்க அம்மா ஞாபகம் வந்துச்சு’ என்று சொல்லி சமாளித்தார்.

காப்பாற்றப்பட்டவர்கள் யார் யார்?..

நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. ‘இரண்டு நபர்களைக் காப்பாற்றலாம்” என்று விதியை மாற்றியமைத்தார் பிக் பாஸ். (வனிதா எபெக்ட்டோ?!). பாலா (அபிராமி, நிரூப்), சிநேகன் (தாமரை, பாலாஜி), நிரூப் (அனிதா, அபிராமி), தாமரை (ஷாரிக், பாலாஜி), நிரூப் (அபிநய், சுருதி), அனிதா (பாலா, அபிநய்), பாலாஜி (சுருதி, சிநேகன்), அபிராமி (பாலா, நிரூப்), ஷாரிக் (ஜூலி, பாலாஜி), சுருதி (பாலாஜி, ஷாரிக்), அபிநய் (ஜூலி, அபிராமி), வனிதா (சுருதி, அனிதா) என்கிற வரிசையில் காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.

“இவர எப்படியும் மக்கள் காப்பாத்திடுவாங்க. அதனால இவரைத் தேர்ந்தெடுக்கறேன்” என்று சிலர் காரணம் சொன்னார்கள். “தாமரைக்கு வாக்களிக்க வெளியே நூறு கோடி மக்கள் இருக்காங்க” என்று பாலாஜி சொன்ன போது நமக்கே ஒரு கணம் தலையைச் சுற்றியது. “இந்த வீட்டை ஒருத்தன் அப்படி லவ் பண்றான். அவன் இங்க இருக்கணும்” என்று சிநேகனுக்கான காரணத்தைச் சொன்னார் பாலாஜி. தனக்கு வாக்களித்தவர்களுக்கு பதில் மொய் வைத்தார் அபிராமி. நிரூப்பை இவர் தொடர்ந்து பாராட்டுவதைப் பார்த்தால் மீண்டும் ‘நல்ல விஷயம்’ நடக்கும் போல் தெரிகிறது.

பாலாவிற்கான காரணத்தை தலைசுற்ற வைக்கும் வகையில் அனிதா நீளமாக சொல்லி முடித்த போது கடிகாரம் தன்னைத்தானே ஒரு முறை சுற்றித் திரும்பியது. வனிதா, சுருதியை தேர்ந்தெடுத்தது நல்ல விஷயம். “பெண்கள்தான் இந்த சீசனோட .ஃபைனல்ல வரணும்” என்கிற விருப்பத்தைத் தெரிவித்த வனிதா, இன்னொரு நபராக ‘அனிதா’வைத் தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

BB Ultimate
BB Ultimate

ஆக.. இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம் பெற்ற நபர்கள்: பாலா, நிரூப், ஜூலி, ஷாரிக், அபிநய், அனிதா, தாமரை மற்றும் சிநேகன்.

இந்த வரிசையில் சுருதி காப்பாற்றப்பட்டது நல்ல விஷயம். பாலாஜியை அவரின் நகைச்சுவை காப்பாற்றி விட்டது. அபிராமியை அவரது நட்பு காப்பாற்றியது. வனிதா வீட்டின் தலைவர் என்பதால் இந்த நாமினேஷன் ஆட்டத்தில் அவர் இல்லை. (கிரேட் எஸ்கேப்!).

“இந்த வீட்டில் இருக்கறது ஒரு மாதிரி நல்லா இருக்கு.. பாசமா இருக்காங்க” என்று கண்கலங்கிய தாமரை, அந்த ஏரியாவை விட்டு தாண்டவே மாட்டார் போலிருக்கிறது. அவரை அணைத்து ஆறுதல் சொன்ன சிநேகன் “உனக்குன்னு ஒரு க்ரூப் இருக்குல்ல.. அவங்க உன்னைக் காப்பாத்திடுவாங்கன்னு நெனச்சேன்.” என்று ஷாரிக்கிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆக.. இந்த வாரம் வீட்டின் தலைவர் வனிதா. எப்போதுமே அவர்தான் தலைவர் என்றாலும் இது அதிகாரபூர்வமான அறிவிப்பு. எனவே ‘தரமான சம்பவங்களை இனிமேத்தான் பார்க்கப் போறீங்க.. மக்களே”.