பாலா இன்று செய்த செய்த காரியம் ஒருவகையில் முறையற்றதுதான் என்றாலும், அவர் செய்த Prankதான் இன்றைய நாளை பரபரப்பாக்கியது. சொதப்பலாக சென்று கொண்டிருந்த 80’s kid டாஸ்க், உயரே செல்லும் வகையில் பற்ற வைத்தது பாலாதான். அந்த வகையில் ‘தம்பி.. சூப்பர்டா.. என்னையே மிஞ்சிட்டேப்பா’ என்று பிக் பாஸே பாலாவை எண்ணி உள்ளே ரகசியமாக மகிழ்ந்திருப்பார். வனிதா சுட்டிக் காட்டும் பல விஷயங்கள் அரசியல்சரித்தன்மையுடனும் சரியாகவும் இருக்கின்றன. (இதற்கெல்லாம் அவர் முன்னுதாரணமாக இருக்கிறாரா என்பது வேறு விஷயம்). ஆனால் இவற்றை அவர் அடாவடியாக சுட்டிக் காட்டும்போது அதில் இருக்கிற நியாயமும் உண்மையும் பின்னால் போய் விடுகிறது. ஒரு நேர்மையாளன் அடாவடியாகத்தான் செயல்பட வேண்டும் என்று அவசியமில்லை. உண்மையை அழுத்தமாகவும் கம்பீரமாகவும் சொன்னாலே போதும். பாலா செய்வது அழிச்சாட்டியம்தான் என்றாலும் வனிதா போன்ற அடாவடிக்காரரை ஒருவர் துணிச்சலாக எதிர்க்கும்போதுதான் “ஹே..சூப்பர்பா. செமல்ல" என்று நமக்குள் தன்னிச்சையாகத் தோன்றிவிடுகிறது. இதன் பின்னால் வனிதாவின் நியாயங்கள் மங்கி விடுகின்றன.

நாள் 18-ல் நடந்தது என்ன?
‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்கிற பாடலோடு கை பம்ப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார் பாலா. பெரும்பாலான 2K கிட்ஸ்கள் அறியாத விஷயம் இது. மோட்டாரை ஆன் செய்தால் வரும் விஷயம் என்று தண்ணீரை நினைத்திருப்பார்கள். கை பம்ப்பில் அடித்து தண்ணீர் பிடிப்பது ஒருவகையில் நல்ல உடற்பயிற்சியும் கூட. ஷவர்மா சாப்பிட்டு ஒபிசிட்டி தலைமுறையாக பெருகும் இளம்தலைமுறை இப்படியாக பல நல்ல விஷயங்களையும் உடற்பயிற்சிகளையும் இழக்கிறது.
டென்ஷன் அடைந்த கல்லூரி முதல்வர்
வகுப்பிற்கு பல மாணவர்கள் நேரத்திற்கு வந்து சேராததால் முதல்வர் பாலாஜி டென்ஷன் ஆகிவிட்டார். “பிக் பாஸ்.. வந்தவங்க வரைக்கும் போதும். கதவை லாக் பண்ணிடுங்க” என்று அவர் சொல்ல அது வனிதாவாக இருந்தால் பிக் பாஸ் நிச்சயம் கடைப்பிடித்திருப்பார். “தாமதமா வர்றவங்களுக்கு ஏதாவது தண்டனை கொடுங்க பாலாஜி” என்று ஒரு வழியைக் காண்பித்தார் பிக் பாஸ். ஃபுட்டேஜ் தேற்றியாக வேண்டுமே?!

பாலா வழக்கமான பாணியில் அமர்த்தலாக வர, உடம்பை உதறிக் கொண்டே வந்து லேட்டாக வந்து சேர்ந்தார் ஷாரிக். சரோஜாதேவி தாமரையும் மிகையான ஒப்பனையில் வந்து தாமத லிஸ்ட்டில் சேர்ந்தார். அனிதா அப்போதுதான் வீட்டின் உள்ளே சிகையலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். “ஏன் லேட்டு” என்று முதல்வர் கண்டிப்புடன் கேட்க “பாத்ரூம் கிடைக்கலை.. சார்.. என்ன பண்றது?” என்று ஷாரிக் ஆடிக் கொண்டே பதில் சொல்ல முதல்வரின் ரத்தக்கொதிப்பு உச்சத்திற்குச் சென்றது. “I was pumping the water’ என்று தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் பாலா காரணம் சொல்ல, அதைத் திருத்தினார் ஆங்கில பேராசியர் அபிநய். ‘இனிமேல் தாமதமாக வர மாட்டேன்” என்று ஆங்கிலத்தில் சொன்னார் தாமரை.
பாலா செய்த அநியாயக் குறும்பு
போன் பூத்தில் மணி அடித்தது. பாலா ஓடிச் சென்று எடுத்தார். பிக் பாஸின் குரல் காட்டமாக வந்தது. “இந்த டாஸ்க்கில் ஒரு சிலர் முழுமையாக பங்கெடுத்துக் கொள்வது போல் தெரியவில்லை. டபுள் எவிக்ஷனுக்கு தயாராக இருங்கள்” என்று எச்சரிக்கை வந்தது. ‘அவ்வளவுதானா.?' என்று அபத்தமாகக் கேட்டார் பாலா. இந்த டாஸ்க்கை ஒரு மணி நேரம் பார்க்கும் நமக்கே அத்தனை சலிப்பு ஏற்படும்போது எழுபது காமிராவில் கண்காணிக்கும் பிக்பாஸ் டீமிற்கு கொலைவெறியே வந்திருக்கும். எனவே இந்த எச்சரிக்கையே குறைந்தபட்சம்தான்.
பாலாவின் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்திருக்க வேண்டும். எனவே ஆட்டத்தை சுறுசுறுப்பாக்க அவர் முடிவு செய்திருக்கலாம். ஆனால் ஆட்டத்தை அவர் கையில் எடுத்துக் கொண்டதுதான் தவறு. பாலாவின் இந்த Prank நன்றாகத்தான் இருந்தது. “என்ன சொன்னாரு பிக் பாஸ்..?” என்று மக்கள் நச்சரித்தார்கள். ‘சபைக்கு வாங்க.. சொல்றேன்..’ என்று பில்டப் தந்தபடி அனைவரையும் வரவேற்பறைக்கு அழைத்துச் சென்ற பாலா “எல்லோரும் கூடிப்பேசி ஒருத்தரை எவிக்ட் பண்ணணும்"ன்னு பிக் பாஸ் சொல்லிட்டாரு. இப்ப அதை நாம தீர்மானிக்கணும்” என்று விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டு ஒரு புதிய நாடகத்தை ஆரம்பிக்க மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

“என்னாது. எவிக்ஷனா. அது மக்கள் ஓட்டு மூலம்தானே வரும்?”.. என்று அனிதா அதிர்ச்சியடைய “டேய் விளையாடாதே..” என்று முதலில் உஷார் ஆனவர் அபிராமிதான். “இதை உடனே பிக் பாஸ் பண்ணச் சொன்னாரு.. அந்தந்த கேரக்ட்டர்ல இருந்து செய்யணுமாம்” என்று பாலா சிரிக்காமல் சொல்ல, அபிராமிக்கு வந்த சந்தேகம் கூட வனிதாவிற்கு வரவில்லை. “பிக் பாஸ்னா அப்படித்தான் இருக்கும். எதிர்பாராததை எதிர்பாருங்கள்…” என்று பாலாவின் ஆட்டத்திற்கு தன்னையும் அறியாமல் ஆதரவு தந்தார் வனிதா. பெரும்பாலான மக்களுக்கு முழுமையான நம்பிக்கை வரவில்லையென்றாலும் கூட பிக் பாஸ் சொன்னாரே என்று ஆரம்பித்தார்கள்.

பாலாவின் Prank ஷோவிற்கு மாட்டிய பலியாடுகள்
இது அனைவருக்குமே சங்கடமான நிலைமை. மக்களின் வாக்கு அல்லாமல் தான் நாமினேட் செய்து ஒருவர் எவிக்ட் ஆகிறார் என்கிற சங்கடம் ஒருபக்கம் இருக்கட்டும். முகத்திற்கு நேராக ஒருவரைப் பற்றிய விமர்சனங்களை பொதுவில் வைக்க வேண்டி வருகிறதே’ என்பதும் இருக்கலாம். திருவிளையாடலை துவக்கிய பாலாவே இந்தச் சடங்கையும் ஆரம்பித்தார். “Performance போதாது’ என்கிற காரணத்தைச் சொல்லி “அபிநய்’யை அவர் நாமினேட் செய்தார். ‘ஆட்டிடியூட் அதிகம்’ என்கிற காரணத்தைச் சொல்லி பாலாவை நாமினேட் செய்தார் வனிதா. “ஏன் உங்களை எதிர்த்துப் பேசினதாலயா?” என்று பாலா கேள்வி கேட்க இருவருக்கும் வழக்கம் போல் மோதல் வெடித்தது. “உங்களுக்கு மட்டும் ஆட்டிடியூட் கம்மியா?” என்று பாலா பதிலுக்கு வனிதாவைக் கேட்ட கேள்வி ஆணித்தரமாக இருந்தது.
பாலா ஆரம்பித்த கலகம் காரணமாக ஒரு நன்மையும் விளைந்தது. தங்களின் மனங்களில் இருந்த உண்மையை மக்கள் வெளியே கக்கத் தொடங்கினார்கள். “இன்னமும் நல்லா பங்கெடுக்கலாம்” என்கிற காரணத்தைச் சொல்லி சுருதியை நாமினேட் செய்தார் ஷாரிக். இந்தச் சமயத்திலும் கேரக்ட்டரில் இருந்தவர் இவர் மட்டும்தான். உடம்பை உதறிக் கொண்டே ஜாலியாக நாமினேட் செய்து விட்டுச் சென்றார். “வேற வழியில்லடா.. ஸாரி” என்று தனது தோழி சுருதியை நாமினேட் செய்தார் அபிராமி. “ஒரு வட்டத்துக்குள்ளயே இருக்கார்” என்று சிநேகனை நாமினேட் செய்தார் சுருதி. நிரூப் ஜூலியை நாமினேட் செய்ய, தாமரை பாலாஜியை நோக்கி கை காட்டினார். பதிலுக்கு தாமரையை நாமினேட் செய்து பழிவாங்கினார் பாலாஜி.
சிநேகன் – வனிதா – ஆவேசமான வாக்குவாதம்
எழுந்து வந்தாரய்யா… சிநேகன்.. “நீங்கள்லாம் நல்லா வரணும்னுதான் நான் கேப்டனா இருந்த போது 9 மார்க்கை அள்ளிப் போட்டேன். ஆனால் கமல் சார் முன்னாடி என் மானத்தை வாங்கி பழிவாங்கிட்டீங்க.. அப்படின்னா… உள்ள என் கிட்ட பொய்யா நடிச்சிருக்கீங்கன்னு அர்த்தம். அன்னிக்கு முடிவு செஞ்சேன்.. இனி பிக்பாஸ் வீட்ல ஒரு பயலை நம்பக்கூடாதுன்னு.. நீங்களாவது வெளில அப்பப்ப பார்ட்டில ஏதாவது சந்திச்சிக்குவீங்க.. ஆனா எனக்கு யார் கூடயும் அவ்வளவா பழக்கம் கிடையாது…” என்று நீளமான வியாக்கியானம் தர, “இதெல்லாம் தேவையில்லாத பேச்சு. வீட்டின் தலைவரா இதை நான் ஆட்சேபிக்கறேன். நாமினேட் செய்யறதை மட்டும் சுருக்கமா முடிங்க” என்று சிநேகனின் உணர்ச்சிகரமான உரைக்கு இடையே வனிதா குறுக்கே கட்டையைப் போட சிநேகனின் மண்டைக்குள் ‘சுர்’ ஏறியது.

ஏற்கெனவே சொன்னதுதான். வனிதா செய்யும் சில விஷயங்கள் மிகச்சரியானது. ஆனால் அவரின் அடாவடியான அணுகுமுறை காரணமாக அது தவறானதைப் போல் தோன்றி விடுகிறது. “இதை எங்கயாவது சொல்லணும்னு நெனச்சிட்டு இருந்தேன். அதுக்கு கூட எனக்கு சுதந்திரம் இல்லையா?” என்று சிநேகன் வருத்தப்பட “டாஸ்க் முடிஞ்சப்புறம் கூட இதைச் சொல்லுங்க. வேணாங்கலை. ஆனா.. இப்பச் சொல்லும் போது மத்தவங்களை இன்ப்யூளயன்ஸ பண்ற மாதிரி இருக்கு” என்று வனிதா சுட்டிக் காட்டிய காரணம் மிகச் சரியானது. இதையே பின்னர் அனிதாவும் வழிமொழிந்தார். (இப்போதெல்லாம் வனிதாக்காவின் வலது கையாக அனிதா மாறி வருகிறார். அபிராமி விலகிப் போய்க் கொண்டிருக்கிறார்).
“இங்க நண்பர்களாக, உண்மையாக இருப்பாங்கன்னு நெனச்சேன்” என்று சிநேகன் வெள்ளந்தியாகச் சொல்ல “இது ஒரு கேம் ஷோ.. நீங்க சீசன் ஒண்ணிலேயே விளையாடியவரு.. பிக்பாஸ் எப்படி இருக்கும்னு உங்களுக்குத் தெரியாதா,? இதையெல்லாமா எதிர்பார்ப்பீங்க..?” என்று தேங்காய் உடைப்பது போல் வனிதா பேசிய அனைத்துமே உண்மை. சிநேகனை நாமினேட் செய்த அனிதா, அதற்காக நீளமான உரையை ஆற்ற “இதுக்கு மட்டும் நேரம் இருக்குதா?” என்று மடக்கி வைத்திருந்த போர்க்கொடியை மீண்டும் உயர்த்தினார் சிநேகன். “அனிதா சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும்தான் பேசினாங்க. உங்களை நாமினேட் செய்வதற்கான காரணங்களை மட்டும்தான் சொன்னாங்க” என்று பதில் குரல்கள் வரவே சிநேகன் பம்மி அடங்க வேண்டியதாக இருந்தது. ஆனால் முகத்தில் வருத்தமும் கோபமும் அப்படியே இருந்தது.

பாலா என்கிற கல்லுளிமங்கர்
“எதை எந்த இடத்துல பேசணும்ன்றதை பிக் பாஸ் முடிவு பண்ணிச் சொல்லட்டும். அப்புறம் இந்த நாமிஷனை நான் பண்றேன்” என்று பிடிவாதமாகச் சொல்லி உட்கார்ந்து விட்டார் சிநேகன். ஆனால் இந்த இடத்தில் பாலாவின் கல்லுளிமங்கத்தனத்தை நாம் வியந்தாக வேண்டும். “இத்தனை சண்டை நடக்கிறதே. அப்போதும்.. நாம் உண்மையைச் சொல்லவில்லையே.. “ என்றெல்லாம் அவர் பயப்படவில்லை. நாமினேட் செய்யத் தயங்கியவர்களைக் கூட “எழுந்து வாங்க. பிக்பாஸ் சொல்லிட்டாரு” என்று வற்புறுத்தி அழைத்து வந்தார். சிநேகனின் பிடிவாதத்தைக் கண்டதும் தனது ஆட்டத்தை முடித்துக் கொள்வதைத் தவிர பாலாவிற்கு வேறு வழி தெரியவில்லை.
ஒருவழியாக எழுந்த பாலா, நமட்டுச் சிரிப்புடன் சபையின் நடுவில் வந்து நின்று “அது பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் இல்ல. நான்தான் பண்ணேன்.. டபுள் எவிக்ஷனை எதிர்பாருங்கள்’ன்றதை மட்டும்தான் பிக் பாஸ் சொன்னாரு. நான் செஞ்சது Prank’ என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்ல “என்னாது…?” என்று மக்கள் பொங்க ஆரம்பித்தார்கள். எதிர்பார்த்தபடியே அதிகம் பொங்கியவர் வனிதாதான். ‘வாட் ஈஸ்.. திஸ்.. நான்சென்ஸ்?’…. என்கிற தன் டெம்ப்ளேட் வசனத்துடன் ஆரம்பித்தவர் “பாலா.. உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க.. நீதான் பிக் பாஸா.. ஒரு கேப்டனா என் கிட்ட சொல்லியிருக்க வேணாமா..” என்றெல்லாம் ஆத்திரத்துடன் கேள்விகளை அடுக்க “நான் பிராங்க் பண்ணேன். அவ்வளவுதான்” என்று கூலாக பதில் சொன்னார் பாலா. “நாமினேஷன் விஷயத்துல பண்ணியிருக்க வேண்டாம்” என்று பரிதாபமாக சுருதி சொன்ன கோணமும் சரியாகத்தான் இருந்தது.

பாலாவின் இந்தக் கொடூரமான விளையாட்டு, அனிதா உட்பட மற்றவர்களுக்கு ஆட்சேபத்தை அளித்தாலும் நிரூப், அபிராமி போன்ற நண்பர்கள் சற்று தணிந்தவுடன் ஜாலியாக எடுத்துக் கொண்டார்கள். “எனக்கு அப்பவே தெரியும்.. இவன் விளையாடறான்னு” என்று அபிராமி வாயை விட்டு விட “அப்ப ஏன் எனக்குச் சொல்லலை.. நீ வைஸ் கேப்டன்தானே?” என்று பாலாவை விட்டு அபிராமியின் மீது எகிறத் தொடங்கினார் வனிதா. “அவன் கலாய்க்கறான்னு முகத்தைப் பார்த்தா தெரியாதா” என்ற அபிராமிக்கு “இதைக் கூட கண்டுபிடிக்கத் தெரியல.. நீயெல்லாம் கேப்டன்னு சொல்லிக்கிட்டு உலாத்துற..” என்று உள்ளுக்குள் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம்.
எவிக்ஷன் விளையாட்டினால் பொங்கி எழுந்த வீடு
“பாலா செஞ்சது ஒரு விளையாட்டுத்தானே. தப்பு இல்லையே?” என்று அபிராமி சொன்ன வாக்கியமும் வனிதாவிற்குள் நெருப்பை இன்னமும் கிளறிவிட்டது. எனவே இருவரும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டார்கள். “நீ நல்லா நடிக்கறே..” என்று வனிதா கத்த “நான் ஒண்ணும் நடிக்கலை” என்று அபிராமி பதிலுக்கு கத்தினார். இந்தக் களேபரத்தின் இடையே பிக் பாஸின் தலை மீதும் ஓங்கி ஒரு போடு போட்டார் வனிதா. “அவன் பாட்டுக்கு விளையாடிட்டு இருக்கான்.. நீங்களும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க.. வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ்” என்கிற வனிதாவின் கேள்விக்கு “ஏம்மா.. நீங்களும் டாஸ்க்கை ஒழுங்கா பண்ண மாட்டீங்க. பாலாவா யோசிச்சு ஒன்னைப் பத்த வைச்சான். அதையும் அணைக்கச் சொன்னா.. எப்படித்தான் நாங்க ஃபுட்டேஜை தேத்தறது..” என்பது பிக்பாஸின் பதிலாக இருக்கலாம். ஆனால் வனிதாவிடம் போய் அதைச் சொல்ல முடியுமா?
இந்தச் சண்டை பாலா vs வனிதா என்பதிலிருந்து அபிராமி vs வனிதா என்பதாக மாறுவதைக் கவனித்த அனிதா, இதை வனிதாவிடம் சுட்டிக் காட்டினார். “பாலாவை விட்றாதீங்க..’ என்பதுதான் அனிதா சொல்லாமல் சொன்ன செய்தி (வெஷம்.. வெஷம்..). ஆனால் வனிதாவின் கோபத்திற்கெல்லாம் பாலா அலட்டிக் கொள்ளவே இல்லை. “ஏண்டா.. இப்படி விளையாடினே.. எனக்கு பாத்ரூமே வந்துடுச்சுடா” என்று பாலாவிடம் சிரிப்புடன் கேட்டார் தாமரை.

“கேப்டன் கிட்ட இதைப் பத்தி கேட்டிருக்கணும்..” என்று சூடு குறையாமல் வனிதா பேச “எல்லாத்தையும் உங்க கிட்ட கேட்க முடியாது” என்று பதிலுக்கு பாலா மல்லுக்கட்ட, வனிதாவிற்கு ஆதரவாக பாலாஜியும் களத்தில் குதித்தார். “இப்ப என்ன நடந்துச்சு.. Prank தானே பண்ணேன். இங்க விளையாடத்தானே வந்திருக்கோம்.. ஆக்கித் திங்கவா வந்திருக்கோம்?” என்று பாலா கவுன்ட்டர் கொடுக்க பாலாஜியின் முகம் சுருங்கியது. “நீயும்தானே தின்னே?” என்று பதில் தந்தார். “ஆக்கித் திங்கவா வந்திருக்கோம்?” என்கிற கேள்வியை கடந்த சீசனிலேயே பாலா பல முறை கேட்டு எதிராளிகளைச் சீ்ண்டியிருக்கிறார்.
லவ் டிராக்கை உருவாக்க நினைக்கிறாரா வனிதா?
பாலாவிற்கு பரிந்து கொண்டு வந்த நிரூப் “அவன் பண்ணது ஒருவகையில் ஜாலியாத்தானே இருந்துச்சு?” என்று வனிதாவிடம் கேட்க “அவன் உன் கிட்ட ஏற்கெனவே சொல்லிட்டானா.. இல்லைல்ல.. நான் போன சீசன் பார்த்தேன். நீ அந்த நிரூப் இல்ல.. பாலா, அபிராமின்னா மட்டும் அவங்க பக்கம் சாய்ஞ்சிடற” என்று புகார் சொன்னார் வனிதா. இதன் மூலம் நிரூப்பை அபிராமியுடன் இணைத்துப் பேசும் ஆட்டத்தை வனிதா கையில் எடுக்க முயல்கிறார் போலிருக்கிறது. இந்த நீளமான விவாதத்திற்கு முடிவு கட்டும் விதமாக “Get Ready for Double Eviction” என்கிற கார்டை தொலைக்காட்சிப் பெட்டியில் காட்டி அபாயச் சங்கை உரக்க ஊதினார் பிக் பாஸ்.

வனிதாவின் வலது கரமாக மாறிக் கொண்டிருக்கும் அனிதா, வனிதாவிடம் ரகசியமாக ஏதோ உரையாடிக் கொண்டிருக்க, வனிதாவின் அழிச்சாட்டியத்தைப் பற்றி ஷாரிக்கிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாலா. “நான் பண்ணது தந்திரம். சுயநலம்.. ன்னு வனிதாக்கா சொல்றாங்க.. அவங்க டீத்தூளை எடுத்து ஒளிச்சு வெச்சது மட்டும் என்னவாம்?” என்று சரியான பாயிண்ட்டைப் பிடித்தார் பாலா. “இந்த சீசன்ல இன்னமும் லவ் டிராக் உருவாகலைன்னு வனிதாக்கா சொல்லிட்டே இருக்காங்க.. அதை அவங்களே உருவாக்க நினைக்கறாங்க.... போல.. இதை அவங்களை வெச்சே உருவாக்கிக்க வேண்டியதுதானே..” என்று சிரிப்புடன் பாலாவின் அனத்தல் தொடர்ந்தது.
இந்தச் சர்ச்சை சற்று ஓய்ந்த போது வனிதா செய்த ஒரு காரியம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. இதை அவர் முன்பே செய்திருக்கிறார். ஜூலியை அழைத்த வனிதா “எவிக்ஷன்ல நீ என்னை நாமினேட் பண்ணே.. ஆக்சுவலி.. நீ அதுக்கு சொன்ன காரணம் பொருந்தவேயில்ல. உன்னையும் அறியாம நீ என்னை சப்போர்ட் பண்ணித்தான் பேசியிருக்கே.. நீ என்னை நாமினேட் பண்ணதுக்காக இதைச் சொல்லல.. இனிமே நான் யாரையும் நம்பத் தயாரா இல்லை. சில பேர் என்னைப் பயன்படுத்திக்கறா மாதிரி தோணுது” என்று வெடித்த வனிதா “நான் உன் கிட்ட தந்த பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடு.. இனிமே என் கிட்ட எதையும் கேட்காத” என்று கேட்க பரிதாபமான முகத்துடன் பொருட்களை திருப்பிக் கொடுத்தார் ஜூலி. கடந்த முறை பெற்ற அனுபவத்திலிருந்தே ஜூலி பாடம் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். முன்பே அவமானப்பட்டும் வனிதாவிடமிருந்து இரவல் பொருட்களை வாங்கி உபயோகித்துதான் ஆக வேண்டுமா என்ன?

வனிதா சொன்ன சில விஷயங்கள காரணமாக காமிரா முன் அழுது கொண்டிருந்தார் அபிராமி. “இங்க என்னை உடைக்கற மாதிரி பல விஷயங்கள் முன்னாடி நடந்தது. அப்பக் கூட நான் அழலை. ஆனா இது ரொம்பக் காயப்படுத்துது.. சொல்லி அழக்கூட எனக்கு ஆள் இல்லை” என்று சுயபச்சாதாபத்துடன் அபிராமி கலங்க, அவரை கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் ஜூலி. ஆனால் சில நாட்களிலேயே அபிராமியும் வனிதாவும் எதுவுமே நடக்காததது போல் ‘அக்கா.. தங்கச்சி..’ என்று கொஞ்சிப் பேசும் காட்சிகளை நிச்சயம் இனி நாம் காண முடியும்.
காலேஜ் எலெக்ஷன் – புதிய கலாட்டா
‘இதயம் முரளி கலைக்கல்லூரி’ டாஸ்க்கில் புதிய கலகத்தை ஆரம்பிக்க விதை போட்டார் பிக் பாஸ். அது ‘மாணவர் தேர்தல்’. தேர்தல் என்றாலே கலாட்டா நிச்சயம் நிகழும் என்று பிக் பாஸ் கணக்குப் போட்டிருக்கலாம். ‘மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மட்டும்தான் தேர்தலில் கலந்து கொள்ளலாம். யாராவது இருவர் தேர்தலில் நிற்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுக்கான கொள்கைகளை (?!) உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.
“மச்சான்.. நீதான் இந்தக் காலேஜ்லயே. ரொம்ப பழைய பீஸூ. நீ எலெக்ஷன்ல நில்லு” என்று சிநேகனை களத்தில் இறக்க முயன்றார் பாலா. ஆனால் வனிதாவிடம் கடிவாங்கிய சோகத்தில் இருந்த சிநேகன், இதை அழுத்தமாக மறுக்க தாமரையை இறக்கி விடலாமா என்று யோசித்தார்கள். பிறகு நிரூப்பும் பாலாவும் தேர்தலில் நிற்பதென்று முடிவாகியது.

நிரூப் ஒழுங்குப் பிள்ளை போன்ற பாவனையுடன் செயல்பட்டதால், கல்லூரி ஆசிரியர்கள் முதற்கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் வரை ஆதரவு அவருக்கு நிறைய இருந்தது. ஆனால் தங்கள் அணி கலாட்டாவாக இருக்க வேண்டும் என்று பாலா முதலிலேயே முடிவு செய்து விட்டதால் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்று தங்கள் அணிக்கு பெயர் சூட்டி ஏகப்பட்ட அலப்பறைகள் செய்தார். இதற்கு மாறாக ‘பிக் பாஸ் மாணவர் மன்றம்” என்று தங்கள் அணிக்கு பெயர் சூட்டினார் சிநேகன். இவர் நிரூப்பின் கொள்கை பரப்பு செயலாளராம்.
“உங்கள் கொள்கை என்ன.. சொல்லுங்க கேட்போம்” என்கிற கேள்விக்கு பாலா சொல்லிய பதில்கள் ரகளையாக இருந்தன. “இலவசமாக ராக்கெட் செய்து தருவோம். தெரியாதவர்களுக்கு கற்றுத் தருவோம். சைக்கிளுக்கு காற்று அடித்து தருவோம்” என்று சொன்ன பாலா அடுத்து சொன்ன கொள்கைதான் ரணகளமாக இருந்தது. .’மாணவர்கள் வகுப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது அதற்கு இடையூறு ஏற்படும் விதத்தில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால், அவர்களை வகுப்பிற்கு வெளியே அனுப்புவோம்” என்று பாலா சொன்னதும் அவர்களது அணி விசில் அடித்து இதைக் கொண்டாடியது.

நிரூப் அணியின் சின்னம் டார்ச். (கமலிடம் நல்ல பெயர் வாங்குவதற்கா?!) பாலா அணியின் சின்னம் ‘ராக்கெட்’. இரண்டு அணிகளும் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்தார்கள். அராத்து அணியான பாலாவின் அணி, தங்களின் கோஷத்தில் கல்லூரி முதல்வரை அவமானப்படுத்தி நிறைய பங்கம் செய்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக “சலா.. சலா . சல சலா..” என்று கூவினார் ஜூலி. “இந்த நிகழ்ச்சியை நிறைய மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. நாம முன்னுதாரணமாக இருக்கணும். கல்லூரியை, ஆசிரியர்களை மதிக்கணும். அநாவசியமா பிரின்ஸிபலை கேவலப்படுத்துவது போல் கோஷம் எழுப்பக்கூடாது ” என்று வனிதா சீரியஸ் டோனில் சுட்டிக் காட்டியது சரியான விஷயம். நிரூப் பேச வந்த போது அதற்கு சிரித்து பாலா அணி கலாட்டா செய்ததால் முதல்வர் பாலாஜி டென்ஷன் ஆகி கண்டித்தார்.
பிக் பாஸ் வீட்டின் வெளியேயும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலாட்டாக்கள் நிகழ்கின்றன என்று பார்த்தால் உள்ளேயும் அதே போன்ற கதைதான்.