நேற்றைய எபிசோடில் நிகழ்ந்த சம்பவங்களில் இருந்து மூன்று ஹைலைட்களை மட்டும் முதலில் சுருக்கமாகப் பார்த்து விடலாம். ‘சீசன் 6-ல் உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று ‘பிக் பாஸ் அல்டிமேட் சீசனில்’ இருந்து விலகும் நெருக்கடியான முடிவை கமல் திடீரென்று அறிவித்தார். கொரானா ஏற்படுத்திய கால தாமதங்கள், படப்பிடிப்புச் சிக்கல்கள், பணிச்சுமை போன்றவை இதற்குப் பின்னணியில் உள்ள காரணங்களாம். (உண்மையில் இவைதானா?!) கமலின் இந்த இடத்தை இட்டு நிரப்புவது மிகச் சவாலான பணி என்பதைப் பற்றி பல முறை பேசியிருக்கிறோம். எனில் அல்டிமேட் சீசனை இனி தொகுத்தளிக்கப் போவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம். பாலா செய்ததைப் போல கமலின் இந்த அறிவிப்பும் ஒரு PRANK-ஆக இருந்தால் நன்றாக இருக்குமே என்று அந்தச் சமயத்தில் தோன்றியது. இரண்டாவது ஹைலைட், நாகேஷ் தொடர்பாக கமல் பகிர்ந்து கொண்ட ஒரு சம்பவம் மிக மிக அருமையானது. “ஒரு நல்ல கலைஞன், எந்தவொரு சிறிய மேடையையும் பயன்படுத்திக் கொள்வான்’ என்கிற நோக்கில் பகிரப்பட்ட சம்பவத்தை நிச்சயம் தேடிப் பாருங்கள். இது நடிகர்களுக்கானது மட்டுமல்ல. அவரவர் துறையில் சாதிக்க விரும்பும் அனைவருக்குமே அகத்தூண்டுதலை ஏற்படுத்தலாம். இதைக் கேட்ட பாலாஜி கண்கலங்கி சாஷ்டாங்கமாக தரையில் படுத்து கமலிடம் மன்னிப்பு கேட்டார். அப்படியொரு Inspiring Story. மூன்றாவது ஹைலைட், பாலாவை கமல் Prank செய்த சம்பவம். ஆனால் இது அறிவிக்கப்பட்ட போதே தெரிந்து விட்டது. என்றாலும் ஒரு சுவாரசியமான நாடகம். ‘வேணும்.. இவனுக்கு நல்லா வேணும்’ என்பது மாதிரி கெத்தாக பேசிக் கொண்டிருந்த வனிதா, பாலாவின் எலிமினேஷன் உண்மையானது அல்ல என்பதை அறிந்தவுடன் தந்த ஏமாற்ற எக்ஸ்பிரஷன் இருக்கிறதே?! அல்டிமேட் சீசனின் One of the best Moment. “நகைச்சுவைக்கு உள்ளாக்கப்படுபவரும் இறுதியில் இணைந்து சிரிக்க வேண்டும். அதுதான் நல்ல Prank” என்று கமல் சொன்னது அருமை. இந்த நோக்கில் தமிழில் செய்யப்படும் பல Prank வீடியோக்கள் அருவருப்பானவை. சராசரி நபர்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தி பதிவு செய்யப்படும் வீடியோக்கள் நிச்சயம் நகைச்சுவையல்ல. மிகுந்த மெனக்கிடல்களுடன் உருவாக்கப்படும் ‘Just for Laughs’ போன்றவற்றை பார்த்தாவது இவர்கள் கற்றுக் கொள்ளலாம்.
எபிசோட் 22-ல் நடந்தது என்ன?
வீட்டின் தலைவருக்கான ‘தொட்டில் குழந்தை’ டாஸ்க் தொடர்ந்தது. குழந்தையின் அழுகைச் சத்தத்தோடு நம்முடைய அழுகையும் இணைந்து கொள்ளும் போலிருக்கிறது. அப்படியொரு பாடாவதியான டாஸ்க் இது. இறுதியில் பாலாவும் ஷாரிக்கும் தேர்வானார்கள். இறுதி கட்டப் போட்டியில் தலைவர் யார் என்பது முடிவாகும். (ஆனால் ஷாரிக் எலிமினேட் ஆகி விட்டதால் தாமரைக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்). நிரூப் இன்னமும் குழந்தை மோடில் இருந்து வெளியே வரவில்லை. வீட்டின் விளக்குகள் அணைக்கப்படும் போது ‘குட்நைட் அங்கிள்’ என்று பிக்பாஸிடம் சொன்னார்.
“திட்டி சண்டை போடறாங்க. மறுபடியும் போய் பேசறாங்க. ரிப்பீட்டு”
ஏறத்தாழ வனிதாவிற்கு அடிமை போல செயல்படும் பாலாஜிக்கு இப்போதுதான் சற்று விழிப்புணர்வும் ரோஷமும் வந்திருக்கிறது. “ஒருத்தர் கூட நல்லா திட்டி சண்டை போட்டுட்டு அப்புறம் எப்படி போய் அவங்க கிட்டயே சிரிச்சு பேசறாங்கன்னு தெரியல. பதிலுக்கு அவங்களும் எப்படி பேசறாங்கன்னும் புரியல” என்று வனிதாவின் குணாதிசய அதிசயத்தைப் பற்றி சிநேகனிடம் புலம்பிக் கொண்டிருந்தார் பாலாஜி. (சிம்பிள் லாஜிக்: மத்தவங்க செஞ்சா டிராமா; வனிதா செஞ்சா ஆமா!)
‘வேதாள விளக்கு’ சுமப்பதில் இருந்து தாமரைக்கு விடுதலை கிடைத்தது. அவர் மறுபடியும் சென்று வனிதாவிற்கே தர “ஏன்.. இந்த வீட்டில் வேற யாரும் கிடைக்கலையா.. திருப்பித் திருப்பி ஒருத்தருக்கே கொடுத்தா எப்படி டாஸ்க் சுவாரஸ்யமாகும்..?” என்றெல்லாம் வனிதா அனத்தியதில் சிறு நியாயம் இருந்தது. ஆனால் வனிதா செய்யும் அட்ராசிட்டிகளின் ஒரு பகுதியைப் பார்க்கும் போது நமக்கே கோபம் வரும் போது 24 மணி நேரமும் வனிதாவுடன் இருக்க விதிக்கப்பட்டவர்களுக்கு கோபம் வருவதில் ஆச்சரியமில்லை. பின்னர் தாமரையிடம் நேர்ந்த வாக்குவாதத்தில் “ஒரு M………….ம் இல்லை” என்று ஒரு வசையை சுருக்கமாக தெரிவித்தார் வனிதா. அந்த வார்த்தை தாமரை ஏற்கெனவே தமிழில் பலமுறை சொன்னதுதான்.

“மத்தவங்க உக்காருங்க. வனிதா நீங்க.. நில்லுங்க”
கமல் என்ட்ரி. வழக்கம் போல் அவரின் ஆடை வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தது. தோளில் போடும் துண்டை அப்படியே முறுக்கி கழுத்தில் சுற்றிக் கொண்டது போன்ற ஃபேஷன் டிசைன். “வீட்டுக்குள்ளயும் எலெக்ஷன். நாட்லயும் எலெக்ஷன்… இவங்க என்ன பண்ணாங்கன்னு பார்ப்போம்” என்று அரசியல் வாசனையுடன் அகம்டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல், அனைவரையும் “உக்காருங்க” என்றார். ஆனால் வனிதாவை அப்படிச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் வனிதா ‘வேதாள விளக்கு’ தண்டனையுடன் நின்றிருந்தார். நினைத்திருந்தால் கமலே சிறப்பு அனுமதி வாங்கி வனிதாவை அமர வைத்திருக்கலாம். ஆனால் உள்ளே அவர் செய்த கலாட்டாக்களைப் பார்த்து ‘நிற்கட்டும்’ என்று கமல் நினைத்து விட்டாரோ, என்னவோ.
‘காதல்’ பற்றிய டாஸ்க்கை விசாரணை செய்ய ஆரம்பித்த கமல் “அன்பு இல்லாம காதலுக்கே அர்த்தம் கிடையாது. உறவு பிரிந்தாலும் கூட அன்பு குறைய வேண்டியதில்லை. அதுதான் அன்பின் அழகு. மனிதர் என்றல்ல, எந்தவொரு உயிரையும் நேசிப்பதும் காதல்தான். புத்தரும் வள்ளலாரும் இதைத்தான் சொல்றாங்க.” என்றெல்லாம் பொழிப்புரை சொன்னது அருமை. காதல் டாஸ்க்கின் போது தான் பேசியது பற்றி சிநேகன் சொன்ன போது ‘விரகதாபம் முட்டிக்கிட்டு வருது போல’ என்று கிண்டலடித்தார் கமல். “என்னோட வாழ்க்கை முழுக்க வண்ண மயமான அத்தியாயங்கள் இருந்தன. இப்ப ஒரு தாயா குழந்தைகளைக் காதலிக்கிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்று பாசிட்டிவ்வாக பேசினார் வனிதா.
வனிதாவின் கேப்டன்சி எப்படி? அடித்து வெளுத்த போட்டியாளர்கள்
“ஓகே. இந்த வார கேப்டன்ஷிப் எப்படி நடந்ததுன்னு பேசுவோம்” என்று கமல் ஆரம்பிக்க “பெரிய பிரச்சினை எதுவுமில்ல. டாஸ்க்ல மட்டும் கொஞ்சம் குழப்பம் இருந்தது.” என்று அரை பிளேட் பிரியாணியில் முழு டைனோசரை மறைக்க முயன்றார் வனிதா. “சரி.. நீங்க போய் கன்ஃபெஷன் ரூம்ல உக்காருங்க.. ஸாரி.. நில்லுங்க..” என்று வனிதாவை கமல் அனுப்பி வைத்த போது ‘படுபாவிங்க.. என்னென்ன சொல்லப் போறாங்கன்னு தெரியலையே’ என்று வனிதாவின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கலாம்.
சொல்லி வைத்தது போல் ஏறத்தாழ அனைவருமே வனிதாவின் அடாவடித்தனங்களையும் மைனஸ் பாயிண்ட்டுகளையும் துணிச்சலாக சபையில் பதிவு செய்தது சிறப்பு. “வீட்டு வேலைகள் கொஞ்சம் பரவாயில்லை. மற்றபடி ஒரு கேப்டனா வனிதா ஒண்ணும் சரியில்லை” என்பதுதான் இவர்கள் சொன்ன வாக்குமூலத்தின் ஒட்டுமொத்த சாரம். வனிதாவை வலதுகரமான பாலாஜியே ஆறு மதிப்பெண்கள் மட்டும்தான் கொடுத்தார். “ஒரு பிரச்சினைன்னு வந்தா கேப்டன் கிட்ட சொல்லலாம். அந்த கேப்டனே பிரச்சினைன்னா யார் கிட்ட சொல்றது?” என்று பாலா சொன்ன போது சபையே சிரித்தது. “கேமை கெடுக்கறதுதான் அவங்க கேம்” என்று ரத்தினச்சுருக்கமாக தெரிவித்தார் நிரூப். “மார்க் போடறதுக்குல்லாம் ஒண்ணுமே இல்ல. சுத்த வேஸ்ட்” என்று பங்கம் செய்தார் ஷாரிக். “பாலா கூட நடந்த சண்டைல தனிப்பட்ட தாக்குதல்களை வனிதா செஞ்சாங்க. அது சரியில்ல” என்று அனிதா கூட வனிதாவைப் பற்றி துணிச்சலாக பேசியது சிறப்பு.
அனைத்து வாக்குமூலங்களையும் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த கமல் “வனிதா இருந்திருந்தா இதையெல்லாம் சொல்லியிருப்பீங்களா?” என்று ஓர் அதிரடியான கேள்வியை வீசி விட்டு “வாங்க.. வனிதா..” என்று அழைத்தார். ஆனால் வாக்குமூல அறையில் சிறப்பு அனுமதி பெற்று வனிதா கெத்தாக அமர்ந்திருந்தார். “சரி.. இங்கயும் உக்காருங்க” என்று அனுமதி தந்த கமல் “உங்க மார்க்கையெல்லாம் பார்த்தீங்களா?” என்று கேட்க “இவங்க என்ன எனக்குப் போடறது மார்க்கு?ஃபேஸ்புக் ஓனர் மார்க் சொன்னாக்கூட கேட்காத ஆளு நானு” என்கிற ரேஞ்சில் அலட்சியமாக இதை எதிர்கொண்டார் வனிதா. “நல்ல மார்க் வாங்கறதுக்காக நான் இங்க வரலை. இதெல்லாம் என்னைப் பாதிக்காது. என்னைப் பொறுத்தவரை நான் கரெக்ட்டா இருந்தேன். யாரையும் Please பண்ணணும்ன்றது என் Idealogy கிடையாது. நான் இப்படித்தான்” என்று வீறாப்பாக பேசினார் வனிதா. (என்ன இருந்தாலும் அக்கா கெத்தே தனி!). அகம்பாவத்திற்கும் உண்மையின் கம்பீரத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

வனிதாவின் அழிச்சாட்டிய வெற்றி
“அது சரி.. இவ்வளவு பேசற நீங்க.. கேப்டன்சி டாஸ்க் முடிஞ்சதும் ஏன் நொறுங்கிப் போய் அழுதீங்க?” என்று சரியான பாயிண்ட்டைத் தொட்டார் கமல். “இங்க யாரும் எனக்கு பிரெண்ட்ஸ் கிடையாது” என்று எதையோ சொன்னார் வனிதா. (எப்படி நண்பர்கள் இருப்பாங்க?!). “அவங்களுக்கு சந்தேகம் வந்திருந்தா கேமை அப்பவே பாதில நிறுத்தியிருக்கணும்” என்று இப்போது சொல்லும் வனிதா, அப்போது சொல்லியிருந்தால் ஏற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான். இந்த டாஸ்க்கிற்கு நடுவராக இருந்த சிநேகனும் விசாரிக்கப்பட்ட போது “எனக்கும் சந்தேகமாத்தான் இருந்தது. பிக் பாஸ் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லைன்னு தெரிவிச்சிட்டேன்” என்று எஸ்கேப் ஆனார்.
“ஆனா அக்கா மறுபடி விளையாடறதுக்கு தயாராகத்தான் இருந்தாங்க. அரை மணி பொறுத்து வேணா விளையாடறேன்னு சொன்னாங்க” என்று அக்கா விசுவாசம் இன்னமும் போகாமல் ஜூலி வாக்குமூலம் தர “அதை ஏன் நீங்க சிநேகன் கிட்ட போய் சொல்லலை?” என்று கமல் கேட்டது முறையானதல்ல. இந்த விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்த போதே வனிதா தானாக முன்வந்து நடுவரிடம் இதைத் தெரிவித்திருக்க வேண்டும். ஜூலியிடம் தனியாகச் சொல்வதில் என்ன உபயோகம்? அது எந்த டாஸ்க்காக இருந்தாலும் நடுவரின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது அடிப்படையான விதி அனைத்திலும் ரூல்ஸ் பேசும் வனிதா, தனக்கென்று செளகரியமான ஒரு ரூல்ஸ் புக்கை வைத்துக் கொண்டிருப்பது சரியானதல்ல. “கீழ பார்க்கும் போது புல் தெரிஞ்சதுன்னு சொன்னீங்க. அப்ப மேலே பார்க்கும் போது எழுத்துக்களும் தெரிஞ்சிருக்குமே?” என்று வனிதாவை கமல் சரியாக மடக்கிய போது அவரிடம் பதில் இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த கேப்டன்சி வெற்றி வனிதாவிற்கு குறுக்கு வழியில் கிடைத்தது போல் ஆகி விட்டது. இப்படியொரு வெற்றி அவருக்குத் தேவைதானா?

சுஜாவிற்கும் வனிதாவிற்கும் முன்னர் நடந்த போட்டியில் “ரெண்டு பேருமே சீட்டிங் பண்ணாங்க” என்று ஷாரிக் சொல்லியிருந்த புகாரும் சபைக்கு வந்தது. கமல் இது பற்றி விசாரிக்க “ரெண்டு பேருமே ஏமாத்தற மாதிரிதான் இருந்தது.. இதில் நான் என்ன கேட்கறதுன்னு விட்டுட்டேன்” என்று ஷாரிக் அசால்ட்டாக சொல்ல “ரெண்டு சைட்லயும் ஏமாத்திட்டு இருந்தாங்களா..?. 50 வருஷத்து வரலாற்றை சிறுகதையைா சுருக்கிச் சொல்லிட்டீங்களே” என்று தமிழக அரசியலை மறைமுகமாக கிண்டலடித்தார் கமல்.
“என்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களை வனிதா செஞ்சாங்க. இதைப் பற்றி அனிதா சபையில் குறிப்பிட்டது எனக்கு சந்தோஷம். எல்லாத்தையும் பத்தி ஆராய்ச்சி செய்யற அனிதா இதைப் பற்றி சொல்லலையேன்னு முன்னாடி எனக்கு வருத்தமா இருந்தது. இப்ப போயிடுச்சு” என்று அனிதாவிற்கு நன்றி தெரிவித்தார் பாலா.
“ஏன் அப்ரூவர்ரா மார்றீங்க.?..கிளம்புங்க”
ஓர் இடைவேளையில் கமலின் தலை மறைந்ததும் ‘அய்யய்யோ.. அக்காவைப் பத்தி தப்பா சொல்லிட்டமே’ என்கிற அச்சத்துடன் அனிதா, சுருதி போன்றவர்கள் பக்கத்திலேயே நின்று “அது என்னாச்சுன்னாக்கா..” என்று விளக்கம் தர ஆரம்பித்தார்கள். “இதையெல்லாம் நான் கேட்டனா.. நீ ஏன் இப்ப அப்ரூவர்ரா மார்றே..? கெளம்புங்க.. காத்து வரட்டும்” என்று அவர்களையும் வனிதா அலட்சியமாக துரத்தி விட “இதுக்குத்தான்.. உங்க கிட்ட எதையுமே சொல்ல பயமா இருக்கு” என்று நொந்து போனார் அனிதா.
அடுத்ததாக, நிரூப் குழந்தை செய்த குறும்புகளையும் அழிச்சாட்டியங்களையும் பற்றி நமட்டுச் சிரிப்புடன் விசாரிக்க ஆரம்பித்தார் கமல். “பாடா படுத்தி எடுத்திட்டான்.. சார்.. உண்மையான குழந்தையைக் கூட சமாளிச்சிருக்கலாம்” என்று பெண் போட்டியாளர்கள் கண்ணீர் விட “தாமரை ஆன்ட்டியும் சுருதி ஆன்ட்டியும் என்னை நல்லாப் பார்த்துக்கிட்டாங்க” என்று சாட்சியம் சொன்னது குழந்தை. “ரொம்ப செலவு வெக்கற குழந்தை இது. சாப்பிடறது பூரா காஸ்ட்லியான அயிட்டம்” என்று வனிதாவும் இதில் சேர்ந்து கொள்ள “பின்ன.. உங்க குழந்தையாச்சே?” என்று சைடில் குத்தினார் கமல். ‘உணவை வீணாக்கக்கூடாது’ என்கிற நோக்கில் அபிராமி சொன்ன விஷயங்களைப் பாராட்டிய கமல், அமெரிக்கர்களின் ஊதாரித்தனங்கள் தாய்மார்களின் வளர்ப்பின் மூலம் எவ்வாறு காலப்போக்கில் மாறியது என்பதை வரலாற்றுப் பின்னணியில் விவரித்தது அருமை. “நிரூப்.. போட்டியாளர்களை நீங்க படுத்தி எடுத்திருக்கலாம். ஆனா இந்தக் குழந்தையை மக்களுக்குப் பிடிச்சிருச்சு போல. அதனாலதான் உங்களைக் காப்பாத்தியிருக்காங்க” என்று கமல் சொன்னதின் மூலம் நிரூப் SAVED என்பது தெரிய வந்தது.

அடுத்த டாஸ்க்கும் வனிதாவிற்கு ஆப்பு வைப்பது போலவே அமைந்தது. பாவம், வனிதாக்கா.. வாரம் ஆறு நாள் மகாராணியாக வாழ்ந்து விட்டு ஏழாவது நாளில் மிளகாய் பஜ்ஜி போல வறுத்தெடுக்கப்படுகிறார். குழந்தைகள் சப்பும் நிப்பிள்கள் வந்தன. “என் கருத்தை சொல்ல விடாம இவர் என் வாயை அடைச்சிட்டாருங்க… என்று நீங்கள் கருதும் ஒரு நபரின் வாயை இந்த நிப்பிளைக் கொண்டு அடைத்து விட்டு உங்களின் கருத்தைச் சொல்லலாம்” என்று கமல் அறிவிக்க, எதிர்பார்த்தபடியே வனிதாவை நோக்கியே பெரும்பாலான நிப்பிள்கள் வந்தன. “நான் வேணா அந்த டிரேவை மொத்தமா எடுத்துக்கிடட்டுமா..” என்று எரிச்சலை அடக்கிக் கொண்டு வனிதா கேட்க “நீங்க பேசக்கூடாதுன்னுதானே.. இதைக் கொடுத்தது?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் கமல்.
வனிதாவின் வாயை வரிசையாக அடைத்த போட்டியாளர்கள்
முதலில் வனிதாவிடமிருந்து இந்த நிப்பிள் டாஸ்க் துவங்கியது. “எனக்கு யாருக்கும் கொடுக்கணும்னு தோணலை” என்று வனிதா சொல்ல “நான் சொல்ற டாஸ்க்கையும் செய்ய மாட்டீங்களா?” என்று கமல் டைமிங்கில் சொன்னவுடன் சபை வெடித்து சிரித்தது. இதற்கு வனிதாவும் சிரித்து விட்டார். சிநேகன், ஜூலி, தாமரை, அபிராமி, அபிநய், பாலா, சுருதி என்று வரிசையாக வனிதாவின் வாயை அடைப்பதற்காக வந்து நின்றார்கள். (பெரிய க்யூவா போகும் போலயே?!). பாலாஜி கூட இந்த க்யூவில் நின்றதுதான் ஆச்சரியம். மாறுதலாக நிரூப்பின் வாயை அடைத்தார் ஷாரிக். (குழந்தையா படுத்தி எடுத்திட்டான் சார்). “என் கூட பேச மாட்டேங்கறாங்க” என்று சொல்லி அபிராமியின் வாயை அடைத்தார் நிரூப்.

மறுபடியும் வனிதாவிற்கே வந்த கமல் “இப்பவாவது டாஸ்க்கை செய்வீங்களா?” என்று கேட்க ‘யாருக்கும் தர வேண்டியதில்லை” என்று முன்னர் மறுத்த வனிதா, இப்போதோ “எனக்கு நிறைய தேவைப்படும். ஆனா நான் அதைச் செய்யப் போறதில்லை. அழுகிற குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும்ன்னு எங்க அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க.. அதனால நான் துணிச்சலா பேசிடுவேன். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. பிக்பாஸ்ன்றது சுமூகமா போற இடம் கிடையாது” என்று நீளமாக வியாக்கியானம் தர “அப்படிங்கிறீங்க..!” என்கிற பின்குறிப்புடன் கமல் முடித்தது நல்ல நையாண்டி.
சிவப்புக் கண்ணாடியும் வெள்ளைக் கண்ணாடியும்
ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பிய கமல், பாலாஜி செய்த PRANK பற்றிய விசாரணையை ஆரம்பித்தார். “இது ஜாலிக்காகத்தான் செய்தது. ஒன்றும் பிரச்சினையில்லை” என்று கருதுபவர்கள் சிவப்புக் கண்ணாடி அணிந்து கொள்ளலாம். “இல்லை. பிக்பாஸ் பெயரைச் சொல்லி எங்களை ஏமாற்றி விட்டார். எங்களின் உணர்வுகளோடு விளையாடி விட்டார்” என்று கருதுபவர்கள் வெள்ளைக் கண்ணாடி அணிந்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. ஷாரிக், அபிராமி, நிரூப் மற்றும் தாமரை ஆகிய நால்வர் மட்டும் பாலாஜிக்கு ஆதரவாக நின்றனர். “ஜாலியாத்தான் இருந்துச்சு. வீடு பரபரப்பா ஆச்சு” என்பது இவர்களின் வாக்குமூலம்.
“சார். என்னோட கேரக்டர் சேட்டை மன்னன். அதன்படிதான் செய்தேன். ஆட்டம் சுவாரசியமாக வேண்டுமென்றுதான் செய்தேன். வேறு எந்த நோக்கமும் இல்லை” என்று பாலாஜி சொல்ல “புலி வருது கதை.. தெரியுமில்லையா.. இனிமே போட்டியாளர்களுக்கு யார் சொன்னாலும் சந்தேகம் வந்துடுமே?” என்று கமல் எச்சரிக்க “நான் இதை நியாயப்படுத்தலை சார்” என்று பாலாஜி சரண் அடையவும் கமல் சற்று தணிந்தார். “வெள்ளைக் கண்ணாடி போட்டவங்களே. நீங்க சொல்லுங்க” என்று கமல் கேட்டதும் வனிதா, அனிதா, ஜூலி, சிநேகன், பாலாஜி, அபிநய் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தார்கள். “நாமினேஷன் விஷயத்துல விளையாடியிருக்க வேண்டாம்னு தோணுச்சு” என்று மையமாக நின்றார் சுருதி. எதிர்பார்த்தபடியே வனிதாவின் ஆட்சேபம் படு ஸ்ட்ராங்காக இருந்தது.

“Prank-ன்னா.. மத்தவங்களும் சேர்ந்து சிரிக்கணும்.. அப்பத்தான் அது ஆரோக்கியமான நகைச்சுவை. மத்தவங்க செலவுல செஞ்ச நகைச்சுவை இது. அது சரி.. போன்ல பிக் பாஸ் என்ன சொன்னாரு?” என்று கமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்க “சிலர் முழுமையாக பங்கெடுக்கவில்லை. டபுள் எவிக்ஷனை எதிர்பாருங்கள்”ன்னு சொன்னாரு” என்று பாலாஜி சொல்ல “நீங்க அதப் பத்தில்ல முதலில் பேசியிருக்கணும்.. சரி. பிக் பாஸ் சொன்னதை ஃபாலோ பண்ணிடுவோம். இதுதான் முதல் எவிக்ஷன்” என்று துப்பாக்கியை உருவுவது போல் எவிக்ஷன் கார்டை கோபமாக கமல் உருவிக் காட்ட அதில் ‘பாலா’ என்கிற பெயர் இருந்தவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி. (ஆனால் என்னைப் போலவே பார்வையாளர்களில் பலருக்கும் அப்போதே பலத்த சந்தேகம் வந்திருக்கக்கூடும்).
முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் அதை விழுங்கிக் கொண்ட பாலா “இது எதிர்பார்த்ததுதான்.. நான் சுயநலத்துல அந்த prank-ஐ செய்யலை. பொதுநலத்திற்காகத்தான் செய்தேன். ஆட்டம் சுவாரசியமாகணும்ன்றதுதான் என் நோக்கம். இருந்த நாளைக்கு சம்பளம் கிடைச்சது.. அது போதும்.” என்றபடி புன்னகையுடன் வெளி வாசலை நோக்கி பாலா நடக்கத் துவங்கினார். வனிதா தன்னை அழைத்த போது கூட நிற்காமல் பாலா சென்றார். “குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?” என்கிற பாடல் மாதிரி வனிதாவிற்கு உள்ளூர சில்லென்று இருந்திருக்க வேண்டும். “மக்கள் செல்வாக்கு இருக்குன்னு நெனச்சிக்கிட்டு ஓவர் நம்பிக்கையில ரொம்ப ஆடக்கூடாது. ஆடினா இப்படித்தான் ஆகும்” என்று கெத்தாக பேசிக் கொண்டிருந்தார் வனிதா. ஆனால் சில நிமிடங்களில் தனது மூக்கு பலமாக உடையப் போகிறது என்பதை அவர் நிச்சயம் எண்ணியிருக்க மாட்டார். ஆனால் போட்டியாளர்களில் எவருக்குமே இது ‘லுலுவாய்க்காக’ இருக்கலாம் என்று தோன்றாதது ஆச்சரியம். அத்தனை பதட்டத்தில் இருந்தார்கள் போல.

பாலாவிடம் கமல் செய்த PRANK
“பாலா.. இன்னமும் போகலையா?” என்று கமல் கேட்க “கேட் திறக்கலை சார்” என்றார் பாலா. “அப்படியே காமிராவைப் பாருங்க.. பிக் பாஸூம் உங்களை Prank பண்ணிட்டாரு” என்று கமல் சிரித்தவுடன் பார்வையாளர்கள் முதற்கொண்டு பிக் பாஸ் வீடே மொத்தமாக புன்னகைத்தது. ஆனால் ஒரு முகத்தில் மட்டும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அது வனிதாவின் முகம் என்பதை சொல்லத் தேவையேயில்லை. “Prank-ன்னா. மத்தவங்களும் சந்தோஷப்படணும்னு சொன்னேன். ஆனா வனிதா மட்டும் கோபமா இருக்காங்க போலிருக்கே” என்று வனிதாவின் கோபத்தில் பெட்ரோலை ஊற்றி ஜாலியாக விளையாடினார் கமல். முகத்தில் இறுக்கம் மாறாமல் சபைக்கு வந்து ‘உர்’ என்று அமர்ந்திருந்த வனிதாவைப் பார்க்க சிரிப்பு சிரிப்பாக வந்தது.

“ஓகே. நானும் சிவப்புக் கண்ணாடிதான்” என்று பாலாவின் குறும்பிற்கு பச்சைக்கொடி காட்டிய கமல், “மக்களும் சிவப்புக் கண்ணாடிதான் போல. அவங்களும் இதை ரசிச்சிருக்காங்க. அதனால்தான் நீங்க SAVED” என்று கமல் அறிவிக்க வனிதாவின் முகத்திற்கு க்ளோசப் வைத்த அந்த காமிராக்காரர் மட்டும் கையில் கிடைத்தால்.. அவ்வளவுதான். பாலா செய்தது பெரிய பிழை என்றால் பிக் பாஸ் அப்போதே தடுத்தி நிறுத்தியிருப்பார். ஆனால் கை கட்டி வேடிக்கை பார்த்தார் எனில் பிக் பாஸிற்கும் இதில் உடன்பாடு என்றுதானே பொருள்? ஏனெனில் டாஸ்க் அந்த அளவிற்கு மொக்கையாக போய்க் கொண்டிருந்தது. இந்த எளிய லாஜிக் கூட வனிதாவிற்குப் புரியவில்லை. “அப்படின்னா. சம்பளம் கூடுதலா கிடைக்கும் போல” என்று சிரித்த பாலாவிடம் “வனிதாக்கா முகமே மாறிடுச்சு” என்று நமட்டுச்சிரிப்புடன் சொன்னார் ஷாரிக்.
கமல் சொன்ன அசத்தலான ‘நாகேஷ்’ கதை
ஓர் இடைவேளைக்குப் பின்னர் அகம் டிவிக்கு திரும்பிய கமல் “ரெட்ரோ ரவுண்ட் பார்த்தேன். அந்தக் காலக்கட்டம் ஒரு நடிகராக எனக்கு முக்கியமான வருடங்கள். இதில் தனது கேரக்ட்டரை சரியாகப் பின்பற்றிய ஷாரிக்கிற்கு முதல் இடம் தரலாம். அடுத்ததாக பாலா” என்ற கமல் அபிராமியை அழைத்து “ஏங்க. நீங்க ஒரு பரதநாட்டிய டான்ஸர். தெரிஞ்ச விஷயத்தை வாய்ப்பு கிடைக்கும் போது பின்னியெடுத்திருக்க வேண்டாமா.. இந்த மேடையை நீங்கள்லாம் ஈஸியா எடுக்கறீங்களா? என்று அனைவரையும் நோக்கி கேள்வி கேட்க ஆரம்பித்து தன்னுடைய பின்னணியோடு ஒப்பிட்டார்.
“பாலச்சந்தர் படத்துல சின்ன கேரக்ட்டர் கிடைக்கறதுக்கு கூட நான் நிறைய அலைபாய்வேன். எனக்குத் திருப்தியே வராது. அவரும் என்னை கவனிச்சிக்கிட்டே வந்து அதுக்கேத்த ரோல் கொடுத்திருக்காரு. கால் உடைஞ்சு போனாலும் பரவாயில்லன்னு டான்ஸ் ஆடியாவது டைரக்ட்டர் பார்வைல படணும்னு நெனப்பேன்..” என்று உணர்ச்சிவசப்பட்ட கமல், தன்னுடைய வீட்டிற்கு நாகேஷ் ஒருமுறை வந்த போது ஏற்பட்ட சம்பவத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். “ஓர் உன்னதமான கலைஞன் சிறிய மேடை கிடைத்தால் கூட அதில் தன்னை நிரூபிக்க முயல்வான்.” என்கிற நோக்கில் அந்தச் சம்பவத்தை கமல் விவரிக்க, பாலாஜியால் கலங்குவதை நிறுத்த முடியவில்லை. சாஷ்டாங்கமாக தரையில் படுத்து மன்னிப்பு கேட்டார். “அவ்வளவு பெரிய கலைஞன், அந்தச் சின்ன அறைல, ஒரே ஒரு ஆடியன்ஸ் முன்னாடி தன் நடிப்புக் கலையை செய்து காட்டினார்.. அந்த அர்ப்பணிப்பு முக்கியம்.” என்று கமல் சொல்லி முடித்த போது சபையே ஆழ்ந்த மெளனத்தில் ஆழ்ந்தது.

“இந்த வாய்ப்பை லைட்டா எடுத்துக்காதீங்க. எத்தனையோ இயக்குநர்கள் இதை பார்த்துக்கிட்டு இருக்காங்க. உங்க கிட்ட இருந்து சின்ன பொறி கிடைச்சா கூட போதும். எனக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருந்தா இருபது வருஷத்திற்கு முன்னாடியே எல்லாம் நடந்திருக்கும்” என்ற கமல் “பாலாஜி.. நீங்க சைக்கிள்ல போனது போதும்.. ராக்கெட்ல போகணும்” என்றதும் கண்கலங்க தலையாட்டினார் பாலாஜி. “தாமரை.. உங்களுக்கு என்ன ஆச்சு. நீங்க நாடக நடிகைதானே. சரோஜா தேவிம்மா பத்தி தெரியாதா.. கோப்பால்.. கோப்பால்.ன்ற வார்த்தையை வெச்சே விதம் விதமா விளையாடி இருக்கலாமே.. மக்கள் ரசிச்சிருப்பாங்களே” என்றதும் தாமரையின் முகத்திலும் சங்கடம் தோன்றியது.
“ஒரு நல்ல கலைஞனுக்கு சம்பளம் பெரிசில்ல. தனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்குமான்னுதான் ஏங்குவான். எனக்கு அப்படி கிடைச்சதுதான் ‘புஷ்பக். நாயகன்’ போன்ற படங்கள்லாம்.. இன்னிக்கு அதுதான் எனக்கு விலாசம்.. அம்மி கொத்துற கலைஞன் கூட தான் செய்யறதுல ஏதாவது ஒரு விஷயத்தை வித்தியாசமா பண்ணிடுவான். அதுதான் அவனோட அடையாளம்.” என்றெல்லாம் கமல் உணர்ச்சிகரமாக சொல்லிக் கொண்டே போக, அப்போதுதான் தாங்கள் செய்த தவறு போட்டியாளர்களுக்குப் புரிந்திருக்கும்.
`அனிதாவிற்குத்தான் லவ் லெட்டர் நிறைய வந்ததாம்’
ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பிய கமல் “ஓகே.. ரொம்ப சீரியஸா ஆயிடுச்சு.. காதல் கடிதம் எழுதிய விஷயத்திற்கு வருவோம்.. “அனிதா. உங்களுக்குத்தான் நிறைய லவ் லெட்டர் வந்தது போலயே” என்று சிரிப்புடன் விசாரித்து விட்டு “சிநேகன். நீங்க கவிதை ஏதாவது எழுதினீங்களா?” என்று விசாரிக்க “வால்யூம் வால்யூமா எழுதினேன். சார். எல்லாத்தையும் பிக்பாஸ் கிட்ட கொடுத்துட்டேன்” என்று அசடு வழிந்தார் சிநேகன். “ஏதாவது ஒண்ணு சொல்லுங்களேன். கேட்போம்” என்று ரிலாக்ஸ் மூடில் கமல் கேட்க, கவிதை மாதிரி உரைநடை ஒன்றை மனப்பாடமாக ஒப்பித்தார் சிநேகன். கமலின் முகத்தில் சலனமே இல்லை. இந்தக் காரணத்திற்காகவே சிநேகனை எலிமினேட் செய்திருக்கலாம். ஆனால் “மக்களுக்கு இது பிடிச்சிருக்கு போல.. நீங்க SAVED” என்று விடுதலை அளித்தார் கமல். “வெளியே வந்தப்புறம் ஆளுக்கொரு கவிதை எழுதித் தரேன் சார்” என்று நன்றி தெரிவித்தார் சிநேகன். (அய்யோ.. இதுக்காகவாவது இவரை உள்ளேயே வெச்சிருங்கப்பா!).
அடுத்ததாக ‘Worst performer’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரத்திற்கு வந்தார் கமல். தாமரை, சுருதி, நிரூப் ஆகிய மூவர்தான் அந்த அதிர்ஷ்டசாலிகள். “நானே அதை ஒத்துக்கிட்டேன் சார். ஆனா பிக் பாஸ் எனக்கு டைரக்ட்டா தண்டனை தந்திருக்கலாம். வேற யாருக்காவது இதை மாத்திக் கொடுக்கலாம்னா. வனிதாவிற்கு கொடுப்பேன்.. யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்” என்றார் தாமரை. “அவங்களுக்கு பயந்த சுபாவமா நடிக்கக்கூட வரலை போல” என்று கமல் டைமிங்கில் அடித்ததும் வனிதாவே சிரித்து விட்டார். “அபிராமிக்கு தருவேன்” என்றார் சுருதி. நிரூப்பும் வனிதாவை தேர்ந்தெடுத்தார்.

“அங்க பாருங்க. நாலு ரவுடிங்க. ன்னு சொன்னாங்க. யாருமே இல்லை சார்” என்று பாலாஜி சொல்ல “இதெல்லாம் ஒரு காரணமா..? நாலு பேர் அங்க நிக்கறதா நெனச்சிக்கிட்டு பேச வேண்டியதுதான். அதுதானே நடிப்பு?” என்ற கமல் ‘ஒத்திகை மிகவும் முக்கியம்’ என்கிற விஷயத்திற்காக ‘ஸ்பார்டகஸ்’ திரைப்படத்தின் ஒத்திகை ஒரு வாரம் நடந்த பின்னணியை குறிப்பிட்டார். “ஓகே. அசிரத்தையா இருந்தாலும் மக்கள் உங்களைக் காப்பாத்திட்டாங்க” என்று தாமரை SAVE ஆன விஷயத்தை குறிப்பிட்டார் கமல்.
‘இதுவா தேர்தல் பிரச்சாரம்? – கமல் கிண்டல்
அடுத்ததாக மாணவர் தேர்தலைப் பற்றிய விசாரணையை கமல் ஆரம்பிக்க “இந்த மாதிரி ஒரு எலெக்ஷனை நான் பார்த்ததே இல்லை” என்று சிநேகன் கதறியழ “எங்காளை இப்படி பயமுறுத்தி வெச்சிருக்கீங்கங்களே” என்பது போல் சிரித்தார் கமல். “நீங்க செய்த சாதனை.. பண்ணப் போற சாதனையைச் சொல்லி ஓட்டு கேக்கறது ஒரு முறை. கும்தக்கலடி கும்மாவா. ன்னு பிரின்ஸிபாலை திட்டறதுல்லாம். சரியா? என்று கேட்ட கமல் “வெளியே நடக்கற பிரச்சாரத்தையெல்லாம் வீட்டுக்குள்ள நீங்களும் காப்பியடிக்காதீங்க” என்று சொன்னது நல்ல குத்தல். “டீச்சருக்கு மாணவர் லவ் லெட்டர் கொடுத்தா.. அவங்க அதை மறுக்காம வாங்கிக்கணும்னு உங்க தேர்தல் வாக்குறுதில சொன்னீங்களே.. பாலா…. நான் படிக்கற காலத்துல இதெல்லாம் இல்லை” என்று கமல் சிரிக்க, பாலாவும் புன்னகைத்து வைத்தார்.

“நாமினேஷன் ஆனவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க. இதுல இரண்டு பேர் எவிக்ஷன் ஆகப் போறீங்க” என்று வெடிகுண்டை வீசி விட்டு பிரேக் விட்டுச் சென்றார் கமல். திரும்பியவுடன் புத்தகப் பரிந்துரை. தமிழ் பண்பாட்டில் ஐந்து வகையான நிலங்கள் இருக்கு. இதில் மைய நிலத்தில் இருப்பவர்கள் அதிகம் புரிந்து கொள்ளாத இடம் கடல். அதில் காலை நனைச்சுட்டு வர்றதைத் தவிர கடலோட கலாச்சாரம் பற்றி அதிகம் தெரியாதவங்க நிறைய பேர் இருக்காங்க. கடல் வளம், மீனவர்களின் பண்பாட்டு வழக்கங்கள், மீன்பிடி முறை, சமையல் போன்ற பல விஷயங்களைப் பற்றிய நிறைய விஷயங்களை நூல்களாக எழுதியிருப்பவர் வறீதையா கான்ஸ்தந்தின். இவர் எழுதியதில் ‘கடல் பழகுதல்” என்கிற நூலை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்” என்று இந்தச் சடங்கை முடித்தார் கமல்.
ஷாரிக் - அபிநய் - டபுள் எலிமினேஷன்
புத்தகப் பரிந்துரை முடிந்ததும் அகம் டிவிக்கு திரும்பிய கமல், அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் எவிக்ஷன் கார்டை காட்ட ‘ஷாரிக்’ பெயர் இருந்தது. ஷாரிக்கின் எலிமினேஷனுக்கு அதிகம் கலங்கியவர் பாலா தான். “அவனுக்கு இந்த வாய்ப்பு முக்கியம். அப்படியொரு சூழல்ல இருக்கான்” என்று தாமரையிடம் கலங்கினார். மேடைக்கு வந்த ஷாரிக்கிடம் “கடந்த முறையை விடவும் இந்த முறை உங்கள் குரல் பலமாக கேட்டது. வாழ்த்துகள்..” என்று பாராட்ட “நீங்க நாகேஷ் பத்தி சொன்ன சம்பவம் ரொம்ப இன்ஸ்பயரிங்கா இருந்தது சார்” என்று ஷாரிக் சொன்னவுடன் பயண வீடியோ ஒளிபரப்பானது. கரன்ஸியை பாலாஜிக்கு பரிசளித்த ஷாரிக், வெடிகுண்டை அபிநய்க்கு தந்தார். “இது உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு.” என்பது ஷாரிக் சொன்ன காரணம். ஆனால் அது உண்மையிலேயே வெடிகுண்டுதான். ஏனெனில் சில நிமிடங்களில் அபிநய்யும் எலிமினேட் ஆனார். “ஓகே.. பார்வையாளர் நடுவுல உக்காருங்க. நான் ஒரு அறிவிப்பு செய்யணும்” என்று பீடிகை போட்டார் கமல்.

எவிக்ஷன் லிஸ்ட்டில் மீதமிருந்தவர்கள் அபிநய், அனிதா மற்றும் ஜூலி. இதில் அபிநய் பற்றிய எலிமினேஷனையும் அதிக சஸ்பென்ஸ் இல்லாமல் வெளிப்படுத்தினார் கமல். மேடைக்கு வந்த அபிநய்யிடம் “போன முறை போன போது ஒரு சின்ன சங்கடம் இருந்தது. இந்த முறை நல்ல பெயர் கிடைச்சிருக்கு” என்று பாராட்டிய கமல் “நீங்க. இப்போ ரெண்டு பாம் தரணும்” என்று சொல்ல கரன்ஸியை பாலாவிற்குப் பரிசளித்த அபிநய் வெடிகுண்டுகளை சுருதிக்கும் அபிராமிக்கும் அளித்தார். இதன் மூலம் அவர்கள் இன்னமும் அதிகமாக வெளிப்படுவார்கள் என்பது அபிநய்யின் நம்பிக்கை. “நீங்களும் ஷாரிக் கூட உட்காருங்க” என்ற கமல் தான் தீர்மானித்திருந்த அறிவிப்பை சொல்லத் துவங்கினார்.

கமலின் முக்கிய அறிவிப்பு – ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு
“கோவிட் பல பேரோட வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. நானும் அதில் ஒருவன். தொற்றினால் பாதிக்கப்பட்ட போது கூட மருத்துவமனையில் இருந்து நேராக இங்குதான் வந்தேன். இந்த நிகழ்ச்சியை அத்தனை நேசிக்கிறேன். இருப்பினும் விக்ரம் படப்பிடிப்பு தொடர்பாக நிறைய தேதி சிக்கல்கள். அந்தப் படத்துடன் பெரிய பெரிய நடிகர்கள், டெக்ஷனியன்ஸ் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். என்னுடைய தாமதம் காரணமாக அவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே நிறைய யோசித்துத்தான் இந்த முடிவிற்கு வந்தேன். இதற்கு சம்பந்தப்பட்ட சானலும் அன்புடன் ஒத்துழைத்தார்கள். எனவே சீசன் ஆறில் நாம் சந்திப்போம். அதுவரை ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று மக்களை வணங்கியபடி விடைபெற்றார் கமல்.

கமலின் இந்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “கமல் சார் இருக்காரான்னு நாலைஞ்சு முறை கேட்டுத்தான் அல்டிமேட் சீசனிற்கு வந்தேன்” என்றார் பாலா. “வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ்” என்று தன் டெம்ப்ளேட் வசனத்தைத் தன்னிச்சையாகச் சொல்லி விட்ட வனிதா, பிறகு சற்று சுதாரித்துக் கொண்டு “கமல் சாரை இதில் ஒண்ணும் சொல்ல முடியாது... அவரோட பர்சனல் விஷயங்கள். ஆனா அவர் இருக்காருன்னுதான் வந்தோம்” என்று இழுத்தார். (ஒருவேளை ரம்யா கிருஷ்ணன் வருவாரோ என்று வனிதாவிற்கு ஜெர்க் ஆகியிருக்கலாம். முந்தைய அனுபவம் அப்படி).
கமலின் வெற்றிடத்தை இன்னொருவர் நிரப்புவது சிரமம்தான். பார்வையாளர்களுக்கும் கூட அது பெரும் ஏமாற்றம்தான். என்றாலும் போட்டியாளர்களின் எதிர்வினை சற்று அதீதமாக இருக்கிறது. யாராக இருந்தாலும் விளையாடித்தான் ஆக வேண்டும். அதுதான் sportsmanship. கமலாக இருந்தாலும் கூட அதைத்தான் சொல்லுவார்.
இனி யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. பொறுத்திருந்து பார்ப்போம்.