Published:Updated:

BB Ultimate 25: வீம்புக்கு வெளியேறிய வனிதா; தீராத பஞ்சாயத்துக்கு எப்பதான் தீர்வு!

வனிதா

சிம்புதான் இதில் வரப்போகிறார் என்பதை அவர் வெளியில் போய் தெரிந்து கொண்டவுடன் ‘அய்யய்யோ’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டிருந்திருக்கலாம்.

Published:Updated:

BB Ultimate 25: வீம்புக்கு வெளியேறிய வனிதா; தீராத பஞ்சாயத்துக்கு எப்பதான் தீர்வு!

சிம்புதான் இதில் வரப்போகிறார் என்பதை அவர் வெளியில் போய் தெரிந்து கொண்டவுடன் ‘அய்யய்யோ’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டிருந்திருக்கலாம்.

வனிதா
எந்த நேரத்தில் சாத்தான் - தேவதை டாஸ்க்கை பிக் பாஸ் ஆரம்பித்தாரோ தெரியவில்லை. ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த வீடு, இப்போது நன்றாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. நேற்றைய எபிசோட் முழுக்க, பத்தாயிரம் வாலா பட்டாசை கொளுத்திப்போட்டது போல் கேப் விடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரே சத்தம். இந்த டாஸ்க்கில் அனைவருமே உண்மையில் சாத்தான்களாக இருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள ஸ்பெஷல்.

நிரூப்பின் இம்சைகளைத் தாங்க முடியாமல் “இந்த டாஸ்க்கை கிரியேட்டிவ்வா செய்ய முடியாதா?” என்று வழக்கம் போல் வனிதா போர்க்கொடி உயர்த்த, “அது எப்படி செய்யறது..? நீங்கதான் சொல்லுங்களேன்” என்று நிரூப் பதிலுக்கு மல்லுக்கட்டியதில் வனிதாவின் வார்த்தைகள் தடித்தன. இந்த சீசனில் இதுவரை கோபத்தை அடக்கி வைத்திருந்த நிரூப் பதிலுக்கு வெடிக்க, காட்சிகள் உக்கிரமாகின. ‘இதுதான் சாக்கு’ என்று “யோவ்.. பிக்பாஸ்.. கதவைத் தொறய்யா.. நான் போகணும்” என்று வனிதா ஆவேசமாக கிளம்பிவிட்டார். ஆனால் உண்மையிலேயே அவருக்கு நிரூப்பின் செய்கைகள் எரிச்சலைத் தந்ததா அல்லது ‘ரம்யாகிருஷ்ணன் எபெக்ட் உள்ளே தந்த அதிர்ச்சியா’ என்பது தெரியவில்லை. (பேரைக் கேட்டவுடனே... சும்மா அதிருதில்ல!).

சிம்புதான் இதில் வரப்போகிறார் என்பதை அவர் வெளியில் போய் தெரிந்து கொண்டவுடன் ‘அய்யய்யோ’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டிருந்திருக்கலாம். எப்படியோ, வனிதா போய் விட்டதால், இனி டாஸ்குகள் ஒழுங்காக நடக்கும்; நிகழ்ச்சியின் நெகட்டிவிட்டி சற்று குறையும் என்று எதிர்பார்ப்போம்.

எபிசோட்- 25 ல் நடந்தது என்ன?

அணித்தலைவர்களான நிரூப் மற்றும் பாலாவை பிக் பாஸ் வாக்குமூல அறைக்கு கூப்பிடுவதோடு எபிசோட் தொடங்கியது. அதற்கு முன் நடந்த காட்சிகளை நாம்தான் யூகித்துக் கொள்ள வேண்டும். அரக்கர்கள் அணி, எதிரணியினர் மீது சோப்புத்தண்ணீர், முட்டை போன்றவற்றை ஊற்றி இம்சைப்படுத்தியிருக்கிறார்கள். வீடெங்கும் குப்பைகளை இறைத்து பெருக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் விவகாரம் எங்கே பெரிதாக கிளம்பியது என்றால் எதிர் அணியினரின் விலையுயர்ந்த பொருட்களை, ஒப்பனை சாதனங்களை நிரூப் எடுக்கும் போதுதான்.

வனிதா
வனிதா

“நான் கோடு போட்டா நீங்க ரோடு போடணும்”

“எதையாவது ஊத்தறது... உடைக்கறது... காஸ்ட்லி பொருட்களை எடுக்கறது. இதுதான் இவங்களுக்குத் தெரிஞ்சதா... கிரியேட்டிவ்வா எதையும் செய்யத் தெரியாதா?” என்று வனிதா கடுமையாக ஆட்சேபிக்க, அவருடன் பாலாவும் இணைந்து கொண்டார். “எங்களுக்கு இது பிடிக்கலை. நாங்க டாஸ்க் செய்ய மாட்டோம்” என்று இருவரும் பிடிவாதம் பிடித்ததால் வீடு ரணகளமானது. எனவே பஞ்சாயத்து பிக் பாஸிடம் சென்றது.

இந்த சீசன் என்றல்ல, எப்போதுமே பிக் பாஸின் ஸ்டைல் ஒரே மாதிரியானதுதான். டாஸ்க்கின் தன்மை, அவுட்லைன், அதன் வரையறை, காரெக்ட்டர் ஸ்கெட்ச் போன்றவற்றை மட்டுமே பிக் பாஸ் தருவார். போட்டியாளர்கள்தான் தங்களின் கற்பனைத் திறமையை பயன்படுத்தி அந்த டாஸ்க்கை சுவாரசியமாக டெவலப் செய்து கொண்டு போக வேண்டும். அது பார்வையாளர்களும் ரசிக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் அல்டிமேட் சீசன் அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. எந்தவொரு டாஸ்க்கையும் இவர்களால் சுவாரசியமாக்க முடியவில்லை. இத்தனைக்கும் அனைவருமே பிக்பாஸ் அனுபவம் பெற்ற சீனியர்கள்.

நிரூப்
நிரூப்

எல்லா டாஸ்க்கிலும் ஒரே பஞ்சாயத்து. ஸ்கூல் பிள்ளைகள் போல “பிக் பாஸ்.. இப்ப நாங்க என்ன பண்றது?” என்று எல்லாவற்றிற்கும் அவரிடம் போய் கோரிக்கையுடன் நிற்கிறார்கள். “நான் கோடு போட்டா.. நீங்க ரோடு போடணும். இதைக் கூடவா சொல்லித் தருவார்கள்?” என்று பிக் பாஸ் சலித்துக் கொள்கிறார். இதில் வனிதாவின் அட்ராசிட்டி வேறு.

நிரூப்பையும் பாலாவையும் பஞ்சாயத்திற்கு அழைத்த பிக் பாஸ் “காஸ்ட்லி பொருட்களையெல்லாம் எடுக்காதீங்கப்பா. மக்களுக்கு சுவாரசியமா இருக்கற மாதிரி பண்ணித் தொலைங்க.. கிளம்புங்க.. ஏற்கெனவே வனிதாவும் தாமரையும் ஹைடெஸிபல்ல கத்தறதை கேட்டுக் கேட்டு எங்க காதுல்லாம் பஞ்ச்சர் ஆகி கிடக்கு. இங்க வேற பத்து பதினைஞ்சு மைக் தீய்ஞ்சு போச்சு.. ராவடி செய்யாம ஒழுங்கா ஆடுங்க” என்று வழியனுப்பி வைத்தார்.

``தேவதை அம்சம் இவளோ…”

“எங்க சீசன்ல வேற மாதிரி இருந்தது. சுவாரசியமா விளையாடினோம். இப்படில்லாம் வன்முறை இல்லை” என்று வனிதா எரிச்சலின் இடையேயும் பெருமிதப்பட “எதே! என்னை துடைப்பத்துல தட்டினீங்களே. அது வன்முறை இல்லையா,?” என்று ஜூலி கோபத்துடன் கேள்வி கேட்க “பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருக்கு!” என்கிற அலட்சியப் பார்வையுடன் ஜுலியைப் பார்த்த வனிதா “சீ பே” என்கிற மாதிரி கையாண்டார். பிக் பாஸையே இடது கையால் கையாள்பவருக்கு ஜூலியெல்லாம் எம்மாத்திரம்! ஜூலி போன்றவர்களின் சொற்கள் சபையில் எப்போதும் எடுபடுவதில்லை. தேவதை அணியைச் சேர்ந்த வனிதாவிற்கு, அவருடைய கேரக்ட்டரின் படி அன்பு, இரக்கம், பொறுமை, அமைதி, அடக்கம், நட்பு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்க வேண்டும். ஆனால் அம்மணிக்கு இவற்றில் ஒன்று கூட இல்லை. இவரை நிரந்தரமாகவே சாத்தான் அணியில் வைத்திருக்கலாம்.

ஆனால் வனிதாவின் தரப்பில் ஒரேயோரு நியாயம் இருந்தது. “ஆட்டத்தை கிரியேட்டிவ்வா ஆடத் தெரியாதா.. எப்பப் பாரு வன்முறைதானா?” என்று நிரூப்பின் முன்னால் அவர் வைக்கும் கேள்வி சரியானது. ஆனால் இந்த ‘கிரியேட்டிவ்’ என்கிற விஷயம் என்றால் அங்கு யாருக்குமே தெரியவில்லை என்பதுதான் உண்மை. அனைத்தையுமே பிக் பாஸ் டீம் டிசைன் செய்து தந்தால்தான் வேலை ஓரளவாவது நடக்கிறது. உதாரணத்திற்கு நிரூப்பிற்கும் பாலாவிற்கும் இடையில் நடந்த இந்த உரையாடலைப் பார்ப்போம்.

தாமரை - பாலா
தாமரை - பாலா

“ஏன் உங்களால தண்ணி ஊத்தி டார்ச்சர் செய்யாம விளையாட முடியாதா.. காஸ்ட்லி பொருட்களை ஏன் எடுக்கணும்? வேற மாதிரி கொண்டு போகலாமே.. டேபிள் மேல நின்னு நொண்டி ஆட்டம் ஆட வைக்கலாம்.. வீட்டை பெருக்கச் சொல்லலாம்… இதெல்லாம் செய்ய வைக்கலாமே?” என்று பாலா கேட்க “டேய் மச்சான். அதெல்லாம் ஏற்கெனவே டிரை பண்ணியாச்சு.. பத்து தோப்புக்கரணம் போடச் சொன்னா ‘எங்களுக்கு தோப்புக் கரணம் போடத் தெரியாதுன்னு சொல்றாங்க.. வீட்டை பெருக்கச் சொன்னா.. ‘எங்களுக்கு பெருக்கத் தெரியாதுன்னு சொல்றாங்க.. பின்ன எப்படித்தான் நாங்க விளையாடறது. நாங்க அரக்கர்கள்.. உங்களை எப்படியாவது தொந்தரவு செஞ்சு கோப்பட வைக்கணும்.. அதுதான் இந்த டாஸ்க். பிக் பாஸ் வீடு எப்படியிருக்கும்னு நமக்குத் தெரியாதா.. எல்லாத்திலயும் நொட்டு சொன்னா எப்படி?” என்று பதிலுக்கு நிரூப் மல்லுக்கட்டினார். “பெருக்கச் சொன்னா.. என்னை வனிதாக்கா துடைப்பத்துல அடிச்சாங்க” என்று ஜூலியும் இதில் சேர்ந்து கொண்டார்.

டாஸ்க் தீவிரவாதி நிரூப்

டாஸ்க் என்று வந்து விட்டால் நிரூப் முழு விசுவாசியாகி விடுவார் என்பதை கடந்த சீசனிலேயே பார்த்தோம். எனவே அரக்கருக்கான குணாதிசயங்களை அவர் தீவிரமாக முயற்சிப்பதில் ஆச்சரியமில்லை. “இன்னமும் நாங்க ஆரம்பிக்கவேயில்ல... அதுக்குள்ள இவ்வளவு ஆர்ப்பாட்டமா?” என்று நிரூப் கேட்க “அதையேதான் நாங்களும் சொல்றோம். இந்த டாஸ்க் எப்படியும் ரெண்டு நாள் போகும். அரை மணி நேரத்திற்குள்ளேயே இவ்வளவு கலாட்டாவா?” என்று எதிரணி மல்லுக்கட்டியது.

பிக் பாஸ் வழிகாட்டிய விதிமுறைகளை பாலாவும் நிரூப்பும் வெளியில் வந்து சொன்னவுடன் “காமன் சென்ஸ் இருந்தா.. நீங்களே இதை முன்னாடி பண்ணியிருப்பீங்க” என்று வனிதா சொல்ல “எங்க டர்ன் வரும் போது உங்க துணியையெல்லாம் கொண்டு போய் தண்ணி ஊத்தினா ஒத்துப்பீங்களா?” என்று பாலா கேட்க விவாதம் உக்கிரமாகியது. “பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை இந்த விஷயம்லாம் ஏற்கெனவே நடந்திருக்கு. உங்களால முடியலைன்றதாலதான் பிக் பாஸ் மாத்தி விளையாடச் சொல்றாரு” என்று குத்திக் காட்டிய நிரூப் “நாங்க தேவதைகள்… இப்படித்தான் எங்களால விளையாட முடியும்” என்று எதிரணி செய்ததை சர்காஸ்டிக்காக நடித்துக் காட்டினார். நிரூப்பின் உடல்மொழியை வனிதா தவறாக புரிந்து கொண்டாரோ, என்னமோ, அவரின் கோபம் உச்சத்திற்குச் சென்றது. “வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ்.. பல்லைத்தட்டி கையில் கொடுத்துடுவேன். ஒரு பொம்பளை கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது… பிச்சைக்காரன்..:” என்றெல்லாம் வார்த்தையை விட்டார். இதற்கு அரக்கர் அணி கடுமையான ஆட்சேபத்தை முன்வைத்தது. இதற்கெல்லாம் வனிதா அசைந்து கொடுப்பவரா என்ன?

நிரூப் - அனிதா
நிரூப் - அனிதா

“கதவைத் தொறங்க பிக்பாஸ்.. நான் போகணும்”

“நான் சிநேகன் செஞ்சதைத்தான் அப்படியே செஞ்சிக் காட்டினேன்..” என்று நிரூப் விளக்கம் அளித்தாலும் வனிதா ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே போக வேண்டும் என்று முடிவு செய்து விட்டதால் அதற்கேற்ப காய்களை நகர்த்தியது போலவே பட்டது. “பிக் பாஸ். கதவைத் திறங்க. நான் போறேன்.. இதுங்க கூடல்லாம் என்னால மல்லுக்கட்ட முடியாது” என்று கன்பெஷன் ரூம் கதவை பலமாக தட்ட ஆரம்பித்து விட்டார்.

பொருட்கள் சேதமாவதைப் பற்றி எதிரணி புகார் செய்ததால் ஆத்திரமடைந்த நிரூப் “வேணுமின்னா. ஆளுக்கு ஒரு லட்சம் ரூபா தர்றேன்” என்று வார்த்தையை விட்டு விட “நீங்க தூக்கிப் போடற காசை வாங்கவா.. நாங்க வந்தோம்?” என்று சுருதி உள்ளிட்டவர்கள் கோபமாக எதிர்வினை செய்தார்கள். “நான் அஞ்சு லட்சம் தரேன். எதிக்ஸ்ஸோட விளையாடு” என்று குத்திக் காட்டினார் பாலா. நிரூப்பிற்கும் பாலாவிற்கும் இடையே இந்த சீசனில் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தாலும் இந்த டாஸ்க்கில் ஒருவரையொருவர் வில்லங்கமான கமெண்ட்டுகளால் பரஸ்பரம் குத்திக் கொண்டார்கள். பிறகு சமாதானமும் ஆனார்கள்.

பாலாஜி
பாலாஜி

இந்தக் களேபரத்தின் இடையே யாருக்கும் புரியாதவாறு தாமரை வேறு ஹைடெஸிபலில் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தார். மற்றவர்கள் சொல்வதையும் அவர் காதில் வாங்கவில்லை. வீட்டின் தலைவர் என்பதை சந்தைக்கடை இரைச்சலின் நடுவே பதிவு செய்ய முயன்றார் போலிருக்கிறது. தன்னிடம் மல்லுக்கட்டும் ஒவ்வொருவரிடம் டாஸ்க்கின் லாஜிக்கை விளக்கி புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார் நிரூப்.

பிறகு அனிதாவிடம் தனியாக பேசிய சந்தர்ப்பத்தில் “பொருள் டேமேஜ் ஆகியிருந்தா.. நஷ்டஈடு தரேன்னு சொன்னது ஒரு குத்தமா? என்னை பிச்சைக்காரன்னு சொல்றாங்க. எனக்கும் மனசு இருக்கு.. வலிக்காதா?” என்று நிரூப் ஆதங்கப்பட “உன்னை அவங்க இரையாக்கணும்னு பார்க்கறாங்க. நீயும் ஆத்திரத்தில் போய் மாட்டிக்கற. சூதானமா இரு.. நீ டாஸ்க்கைத்தான் பண்றே. சரியா விளையாடதவங்களை மக்களா பார்த்து வெளியே அனுப்பிடுவாங்க ” என்று சரியான ஆலோசனை தந்தார் அனிதா. இத்தனை உணர்ச்சிக்கலவரத்திற்கு இடையிலும் பிக் பாஸ் ஆட்டத்தின் வடிமைப்பை சரியான முறையில் ஆராய்ச்சி செய்கிறவர் அனிதா மட்டும்தான். ‘விஷபாட்டில்’ என்று சும்மாவா சொன்னார்கள்? அப்படியாக பிரமிக்க வைக்கும் வகையில் டிசைன் டிசைனாக யோசிக்கிறார்.

“வேதாளம்.. விளக்கை நாங்க எல்லாம் சுமந்தோம். ஆனா வனிதா தூக்க மறுத்துட்டாங்க. இப்படி ஒவ்வொரு டாஸ்க்லயும் இடையூறு செஞ்சா எப்படி?” என்று நிரூப் ஆதங்கப்பட “அவங்களைப் பத்தி பேசறதே வேஸ்ட். நீ வேலையைப் பாரு” என்று ஒரே போடாக போட்டார் அனிதா.

“டாஸ்க்தான் பிடிக்கலை.. மத்தபடி ஐ லவ் யூ பிக் பாஸ்”

கன்ஃபெஷன் ரூம் கதவை வனிதா உடைத்து விடுவாரோ என்று பயந்த பிக் பாஸ் “மைக்கை மாட்டிட்டு உள்ளே வாங்க” என்று அழைத்தார். “இந்த பைத்தியங்க கூடல்லாம் என்னால மாரடிக்க முடியாது. நான் போறேன். வெளில விடுங்க” என்று வனிதா வெடிக்க “ஒரு வீட்டில் பல கதாபாத்திரங்கள் இருப்பார்கள்” என்று நிதானமாக பிக் பாஸ் தனது வியாக்கியானத்தை ஆரம்பிப்பதற்குள் “இந்தக் கதைல்லாம் வேணாம்.. நான் போறேன். அவ்வளவுதான் மேட்டர்” என்று வனிதா சொல்ல, பிக் பாஸ்ஸிடமிருந்து சத்தமே இல்லை. திகைத்து நின்று விட்டார் போலிருக்கிறது.

நாள் 24 விடிந்தது. “கெடக்கறதெல்லாம் கிடக்கட்டும். கிழவியைத் தூக்கி மனைல வை” என்கிற கதையாக காலையில் குத்துப்பாடலை பிக் பாஸ் ஒலிக்க விட அனிதா உள்ளிட்டவர்கள் குத்தி ஆடினார்கள். விடிந்ததுமே முதல் வேலையாக வாக்குமூல கதவின் முன்னால் காத்திருக்க ஆரம்பித்தார் வனிதா. ‘இந்த அம்மா இடிச்ச இடில நேத்தே கதவு விரிசல் விட்டுடுச்சு.. இன்னிக்கும் தட்டினா உடைஞ்சே போகும்” என்று பயந்த பிக் பாஸ், “உள்ளே வாங்க” என்று பீதியுடன் அழைத்தார். “என் மனநலம், உடல்நலம் ஆகியவை கருதி நான் வெளியேற விரும்புகிறேன்” என்று வனிதா தெரிவித்தார்.


வனிதாவிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவெனில் முதலில் பிக் பாஸை ரகளையாக திட்டி விட்டு, ராஜா ராணி படத்தின் ஜெய் போல “உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் பிக் பாஸ்.. மத்தபடி ஐ லவ் யூ” என்று பாசம் காட்ட ஆரம்பித்து விடுவார். “இதுதான் உங்க இறுதி முடிவா? இந்த வீடு உங்களை மிஸ் செய்யும்” என்று பதிலுக்கு பிக் பாஸ் பாசம் காட்டினாலும் ‘ஹப்பாடா’ என்கிற நிம்மதி அவர் குரலில் தெரிந்ததைப் போலவே ஒரு பிரமை.

பிறகு வனிதாவின் வெளியேற்றத்தை அதிகாரபூர்வமாக போட்டியாளர்களுக்கு அறிவித்தார் பிக் பாஸ். யாரும் இதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களும் உள்ளூற நிம்மதிதான் அடைந்திருப்பார்கள். எல்லாவற்றிலும் பாதியிலேயே வெளியேறுவதுதான் வனிதாவின் ஸ்டைல் போலிருக்கிறது.

வனிதா
வனிதா

புதிய விதிகளுடன் தொடர்ந்த இம்சையாட்டம்

“ஓகேப்பா.. கண், காது, மூக்கு இதுல்ல எதையும் ஊத்தாம இருக்கணும். காஸ்ட்லி பொருட்களை எடுக்கக்கூடாது. இந்த மாற்றத்தோட ஆட்டத்தை மறுபடியும் ஆரம்பிக்கலாம்” என்று இரண்டு அணியும் கூடிப் பேசி டாஸ்க்கை மறுபடி ஆரம்பித்தார்கள். என்றாலும் முட்டையை மேலே ஊற்றுவது, உப்பை வாயில் போடுவது என்று அரக்கர் அணியின் இம்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. பல தண்டனைகளை பாவமாக ஏற்றுக் கொண்டார் தாமரை. நிரூப்பைப் போலவே இவரும் இன்னொரு ‘டாஸ்க்’ விசுவாசி.

தாமரையின் வாயில் முட்டையை ஊற்றிய நிரூப் “இதை விழுங்காமல் வைத்திருக்க வேண்டும்’ என்று தண்டனை தர ஒரு கட்டத்தில் அதை சாமர்த்தியமாக நிரூப்பின் மேலேயே துப்பி பழிவாங்கினார் தாமரை. “அரக்கர் கிட்டயே உன் வேலையைக் காண்பிக்கிறாயா?” என்று எண்ணிக் கொண்ட நிரூப் தன் இம்சைகளை இன்னமும் கூட்டி பதிலுக்கு பழிவாங்கினார். தேவதை – அரக்கர் டாஸ்க் என்றாலும் கூட இவர்கள் ஏன் உரைநடைத் தமிழில் பேசி மொழியை கொத்து பரோட்டா போடுகிறார்கள் என்று தெரியவில்லை.

அபிராமி
அபிராமி

“நாற்காலியைப் பத்தி ஒரு கவிதை சொல்லிக்கிட்டே நாற்காலில மாத்தி மாத்தி உக்காருங்க” என்று அபிராமி சிநேகனிடம் சொல்லியது ஒரு நல்ல யோசனை. இப்படி போட்டியாளர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொணர்வது போல் டாஸ்க்குகளை சுவாரசியப்படுத்தலாம். கமலின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து மன்னிப்பு கேட்ட ‘தாடி’ பாலாஜி இன்னமும் கூட உருப்படியாக எந்த காமெடியையும் செய்யவில்லை. இந்த டாஸ்க்கையாவது அவர் பயன்படுத்தியிருக்கலாம். மாறாக வனிதாவின் வலது கரம் போலவே விசுவாசமாக அலைந்து கொண்டிருந்தார். அபிராமி சிறப்பாக யோசனை தந்திருந்தாலும் கவிதை என்கிற பெயரில் சிநேகன் சொன்னது நமக்குத்தான் தண்டனையாக இருந்தது.

பாலா - அபிராமி
பாலா - அபிராமி

குப்பைத் தொட்டி டாஸ்க்

“உலகத்தை குறை சொல்லாதே. நீ முதலில் மாறு” என்கிற பொழிப்புரையுடன் அடுத்த டாஸ்க் துவங்கப்பட்டது. (இது வனிதாவிற்கான செய்தி மாதிரியே இல்லை?!). ஒவ்வொருவருக்கும் அவர்களின் பெயர் போட்ட, இதய வடிவிலான குப்பைத் தொட்டிகள் வழங்கப்படும். மற்ற எவரும் அதில் குப்பை போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த ஆட்டத்தின் விதி. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்கிற பொன்மொழியை இதில் சேர்த்துக் கொள்ளலாம். ‘நாம் முதலில் அனுமதித்தால்தான் மற்றவர்கள் நம் மனதில் குப்பையைப் போட முடியும்’ என்பதுதான் இதன் பின்னுள்ள தத்துவம்.

அபிராமி தனக்கு தந்த இம்சை தாங்காமல் “உன் மூஞ்சியைப் பார்க்கவே பிடிக்கலை. இந்த வாரம் நீ எலிமினேட் ஆயிடுவ” என்று பாலா சொல்லி விட்டார் போலிருக்கிறது. இது தொடர்பாக பாலாவிடம் தொடர்ந்து கோபமாக வாக்குவாதம் செய்த அபிராமி, பிறகு இதை ஒரு புகாராக தன் அணித்தலைவர் நிரூப்பிடமும் முறையிட்டார். நிரூப் இதை விசாரிக்கும் போது அபிராமி மாற்றிப் மாற்றிப் பேசியதில் நிரூப் அப்செட் ஆகி விட்டார். “நான் சும்மா காமெடிக்கு சொன்னேன்.. இதெல்லாம் ஒரு மேட்டரா?” என்று பாலா கூலாக சொல்ல இந்த அற்ப சண்டை சில நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. பிறகுதான் நமக்குத் தெரிந்தது, இது அபிராமிக்குத் தரப்பட்ட ‘சீக்ரெட் டாஸ்க்’. பாலாவை எரிச்சல் ஊட்டும்படி செய்ய வேண்டுமாம்.

முதல் ஆப்ரேஷனை அபிராமி வெற்றிகரமாக முடித்ததால் அவரை வாக்குமூல அறைக்கு அழைத்த பிக் பாஸ் “சூப்பர்.. நீ பாலாஜியை துணைக்கு வெச்சுக்கிட்டு தேவதை டீமில் உள்ள இரண்டு நபர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் 2000 பிக் பாஸ் கரன்ஸி பரிசு” என்று அடுத்த டாஸ்க்கைத் தெரிவிக்க “ஹைய்யா. ஜாலி. தாங்க்யூ அங்கிள்” என்று உற்சாகமாக கிளம்பினார் அபிராமி. வனிதா வெளியேறி விட்ட சோகத்தாலோ, என்னவோ.. தாடி பாலாஜிக்கு கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த நகைச்சுவை உணர்வும் இப்போது வேலை செய்யவில்லை. “சிரி. சிரி.. நீ சிரிச்சே ஆகணும்” என்று தாமரையையும் சுருதியையும் போட்டு உலுக்கியெடுத்துக் கொண்டிருந்தார். “பிக் பாஸ். அடுத்த ஆப்ரேஷனும் சக்ஸஸ். பணத்தை எடுத்து வைங்க” என்று காமிராவில் பெருமிதமாகச் சொல்லிய அபிராமியைப் பார்த்து பிக் பாஸ்தான் உள்ளே வயிறு குலுங்க சிரித்திருப்பார் என்று தோன்றுகிறது.

இந்த அரக்கர் – தேவதை டாஸ்க் முடிவதற்குள் பிக் பாஸ் வீடு என்ன ரணகளம் ஆகிறதோ, தெரியாது, பார்வையாளர்களில் பெரும்பாலோனோர் சாத்தான்களாக கொலைவெறியுடன் மாறி விடுவார்கள் போலிருக்கிறது.