Published:Updated:

BB Ultimate -26: `நீரூப்புக்கு முத்தம் கொடு' - உத்தரவிட்ட தாமரை; நடப்பது டாஸ்க்கா? ராகிங்கா?

நிரூப் - அபிராமி

டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. பாலா முகத்தில் கரி, சுருதியின் தலையில் ஃபோம் என்று நிரூப் அணி இம்சைகளைத் தொடர்ந்தது.

Published:Updated:

BB Ultimate -26: `நீரூப்புக்கு முத்தம் கொடு' - உத்தரவிட்ட தாமரை; நடப்பது டாஸ்க்கா? ராகிங்கா?

டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. பாலா முகத்தில் கரி, சுருதியின் தலையில் ஃபோம் என்று நிரூப் அணி இம்சைகளைத் தொடர்ந்தது.

நிரூப் - அபிராமி
“மக்களுக்கு சுவாரசியமா இருக்கணும். அது முக்கியம்” என்று பிக் பாஸ் தலையால் அடித்துக் கொண்டாலும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. காலேஜ் ராகிங் மாதிரி முட்டையை வாயில் ஊற்றுவது, சோப்பு நுரையை தலையில் போடுவது என்று அதே இம்சைகளைத்தான் செய்கிறார்கள். ‘காமெடி பண்ணுங்க’ என்று தாடி பாலாஜியிடம் டாஸ்க் தந்தால் “சிரிக்கிறியா.. இல்லியா” என்று எதிராளியின் இடுப்பில் பிறாண்டி ரத்தம் வர வைக்கிறார். ஆக.. இனி சிம்பு வந்தவுடன்தான் நிகழ்ச்சி களை கட்டும் என்று தெளிவாகத் தெரிகிறது. (வேற வழி! ஏதாவது ஒண்ணை நம்பித்தானே வாழ்க்கையை ஓட்டணும்?!). வைல்ட் கார்டிலும் சிலர் வருவதாகத் தெரிகிறது. பார்ப்போம். தீனா வந்தால் நன்றாக டைம்பாஸ் ஆகும்.

எபிசோட் 26 -ல் நடந்தது என்ன?

வனிதா வெளியேற்றப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காகவோ, என்னமோ “சோகாமா’ என்கிற ரகளையான குத்துப் பாடலைப் போட்டு கொண்டாடினார் பிக் பாஸ். “அக்கா.. எனக்கே அதிக வேலை தர்றீங்க” என்று கிச்சன் ஏரியாவில் தாமரையிடம் அபிராமி சிணுங்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜிக்கு, வனிதாவின் காற்று சற்று அடித்து விட்டதுபோல. “வேலையை பிரிச்சுக் கொடுங்க.. வெளில என்னா M….. டிஸ்கஸன் பண்றாங்க?” என்று அனிதாவை ஜாடையாக திட்டிக் கொண்டிருந்தார். (இனிமே கோபமே வராதுன்னு சொன்னீங்களே.. கோப்பால்?!).

ஜூலி
ஜூலி

டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. பாலா முகத்தில் கரி, சுருதியின் தலையில் ஃபோம் என்று நிரூப் அணி இம்சைகளைத் தொடர்ந்தது. ‘தனக்கும் ரெட் கார்ப்பெட்டிற்கும் ஆகவே ஆகாது’ என்பது நன்கு தெரிந்தும் அதில் தன்னை அமர வைத்து இழுக்கச் சொல்லி பாலாவிடம் ஜூலி கேட்டார். ‘தரதர’வென அவர் இழுத்துச் செல்ல, பரவாயில்லை.. ஜூலி எப்படியோ தடுமாறாமல் சமாளித்து விட்டார். (எக்ஸ்பீரியன்ஸ் கூடுதுல்ல?!).

நிரூப் அணி தரும் இம்சைகளை மிகவும் கனிவாக பொறுத்துக் கொள்வதில் தாமரை சமர்த்தாக இருக்கிறார். ‘அப்படியே ஆகட்டும்’ என்கிற டெம்ப்ளேட் வார்த்தைகளைச் சொல்லி தண்டனைகளை கனிவுடன் ஏற்றுக்கொள்கிறார். பிக் பாஸிடம் நல்ல பெயர் வாங்க முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது. கார்டன் ஏரியாவில் மரம் போன்ற செட்டப் போடப்பட்டிருந்தது. “மரமே. கனி கொடு" என்று நீண்ட நேரத்திற்கு மரத்திடம் தாமரை வேண்டிக் கொண்டிருக்க “பழம் மாதிரி பேசினா.. அது பழம் கொடுக்காது” என்று பாலா செய்த கிண்டல் நல்ல டைமிங்.

தாமரை
தாமரை

‘இத்துடன் முதல் சுற்று முடிந்தது’ என்று பிக் பாஸ் அறிவித்ததும் நிரூப் அணியில் உள்ளவர்கள் பதற, பாலா அணியைச் சேர்ந்தவர்கள் ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இப்பப் பாரு.. ’ என்று உற்சாகமானார்கள். ஆனால் நிரூப் எல்லாவற்றிற்கும் தயாராக இருந்தார். நிரூப்பின் ராஜகுருவாக மாறியிருக்கும் அனிதாவும் “எங்க அழ வெச்சிட்டீங்கன்னா.. நீங்க கெத்துதான்” என்று தாமரையிடம் சவால் விட்டார். “என்னா.. தம்பி.. இப்படிச் சொல்றாங்க.. நீங்க என்னத்த பண்ணிடப் போறீங்க.. நாங்க செஞ்சதைத்தான் அப்படியே காப்பிடியக்கப் போறீங்கன்னு சொல்றாங்க!” என்று பாலாவிடம் தாமரை பரிதாபமாக முறையிட “அதான் டெக்னிக்கு.. அப்படிச் சொன்னா.. நாம பண்ண மாட்டோம்னு நெனக்கறாங்க. இந்த நிரூப் பய இருக்கானே?!” என்று ஆறுதல் அளித்தார் பாலா.

அனிதா
அனிதா

பாலா அணி அரக்கர்களாக ஒப்பனை செய்து கொண்டதில் இருப்பதிலேயே தாமரைக்குத்தான் அந்த வேஷம் சிறப்பாகப் பொருந்தியது. நிரூப்பின் பின்பக்கத்தில் ஷாம்பூவால் பாலா கோலம் போட (அடப்பாவிகளா! என்ன விலை தெரியுமா?!) “ஹை.. ஜாலியா இருக்கு” என்று கூலாக இருந்தார் நிரூப். “என்னடா.. பின்னாடி சங்கு சக்கரம் போட்டு வெச்சிருக்காங்க” என்று கிண்டலடித்தார் பாலாஜி.

‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா... இன்னமும் இருக்கா’

கரும்பலகையின் முன்னால் நின்று அனிதாவும் பாலாவும் பேசினார்கள்... பேசினார்கள்... அப்படிப் பேசினார்கள்.. ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ என்கிற பாடலை பின்னணியில் ஓட விட்டிருந்தால்கூட பொருத்தமாக இருந்திருக்கும். அப்படியொரு நீளமான உரையாடல். பழைய கணக்குகள், முந்தைய சீசன் பஞ்சாயத்துக்கள், இப்போதைய பிரச்னைகள் என்று எல்லாவற்றையும் நோண்டி, நோண்டி எடுத்து பாலா கேள்வி கேட்க, தனது லாஜிக் திறனால் அவற்றை திறமையாகக் கையாண்டார் அனிதா. கேள்வி கேட்ட பாலாதான் சோர்வடைய வேண்டியிருந்தது. “டாஸ்க் நேரத்துல உங்க பிரச்னையையெல்லாம் பேசிட்டு இருக்காதீங்க. அப்புறமா பேசிக்கோங்க..” என்று சுருதி இந்தச் சமயத்தில் ஆட்சேபம் செய்ததது மிகச் சரியான விஷயம். ஆனால் தனது அடாவடித்தனத்தால் சுருதியை ஓரங்கட்டி அழிச்சாட்டியம் செய்தார் பாலா.

பாலா
பாலா

ஜூலி குழந்தைக்கு வெங்காயம், பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனையைக் கொடுத்தார் சிநேகன். அப்படியே தேங்காய் பத்தையையும் தள்ளியிருந்தால் உள்ளேயே சட்னி தயாராகி இருந்திருக்கும். ரெட் கார்ப்பெட் போலவே வாந்திக்கும் ஜூலிக்கும் சாலப் பொருத்தம். சிநேகனின் இம்சை தாங்காமல் அனைத்தையும் ‘லொடக்’ என்று வாந்தியெடுத்தார் ஜூலி. (பார்வையாளர்களுக்கான நீதி: உணவருந்தும் நேரத்தில் பிக் பாஸ் பார்க்காதீர்கள்).

நிரூப் - அபிராமி
நிரூப் - அபிராமி

தாமரை மிகவும் நல்ல அரக்கிபோல. “நிரூப்பைக் கட்டிப் பிடிச்சு ஒரு முத்தா கொடு.. ம்.. ஆகட்டும்..” என்கிற தண்டனையை அபிராமிக்குத் தர அந்தக் காரியம் செவ்வனே நிறைவேறியது. இது நிரூப்பிற்கான தண்டனையா அல்லது எதிர்பாராத பரிசா என்பது அவருக்குத்தான் தெரியும். (தாமரை.. நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கற காரியத்திற்குப் பெயர் என்ன தெரியுமா!)

‘இதெல்லாம் ஒரு சீக்ரெட் டாஸ்க்கா?’

தாமரைக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க். ‘ஜூலி தன்னுடைய கண் லென்ஸை தானே கழட்டும் படி செய்ய வேண்டும்’ என்று பிக் பாஸ் ரகசியமாகச் சொன்னார். சுருதிக்கும் பாலாவிற்கும் நடந்த வாக்குவாதம் காரணமாக “உனக்கு என்ன சீக்ரெட் டாஸ்க் கொடுத்திருக்காங். சொல்லு” என்று உரத்த குரலில் தாமரையிடம் பாலா பொதுவில் கேட்டு விட “டேய். உங்களையெல்லாம் கட்டி மேய்க்கறேன். பாரு.. என்னைச் சொல்லணும்” என்று பிக் பாஸ் உள்ளே தலையில் அடித்துக் கொண்டிருந்திருப்பார். பாலா கசிய விட்ட ரகசியத்தை கவனித்து விட்ட அனிதா, ஜூலியிடம் இது பற்றி எச்சரிக்க, அப்போதும் ஜூலி உஷாராகவில்லை.

“ஹ….! கண் லென்ஸை கழட்ட வைக்கறதெல்லாம் ஒரு டாஸ்க்கா..?” என்றபடி அசால்ட்டாக கிளம்பிய பாலா “மூஞ்சுல சோப்புத் தண்ணி ஊத்தப் போறோம்.. கண்ல பட்டுடும்.. லென்ஸை கழட்டி வெச்சுடு” என்று ஜூலியிடம் பாவனையாக எச்சரிக்க “பரவாயில்ல… கண்ணை கெட்டியா மூடிக்கறேன்” என்று ஜூலி சொன்னபோது ‘அட! பரவாயில்லையே.. சூட்டிகையான பொண்ணுதான்” என்று நமக்குத் தோன்றியது. ஆனால் பாலா அழுத்திச் சொன்னவுடன் தான் மட்டும் லென்ஸ் கழட்டியது போதாதென்று “சோப்புத் தண்ணீர் ஊத்தப் போறாங்களாம். லென்ஸை கழட்டி வெச்சிடுங்க” என்று ஊருக்கும் சேர்த்து உபதேசம் செய்தார்.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்

‘இங்க என்ன சொல்லுது?’ என்று அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்து அதிலாவது ஏதாவது தேறுமா என்று பார்த்தார் பிக் பாஸ். ம்ஹூம். எதுவும் தேறவில்லை. "இது சரி. இது தவறு என்பதை நாம் பழகும் ஆட்களைப் பொறுத்து நம் மனது மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த மீட்டர் உங்களிடம் எப்படி வேலை செய்கிறது?” என்பதை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டுமாம்.

“ஜூலி ஏத்தி விட்டான்னு அனிதா என்னைப் பத்தி சொன்னது எனக்கு ஹர்ட்டிங்கா இருந்தது” என்று ஜூலி ஆரம்பித்து வைத்தார். வழக்கம்போல் குழப்பமாக ஃபிலாசபி பேச ஆரம்பித்தார் நிரூப். “இங்க சரி... தவறுன்னு இருக்கற விஷயத்தை நான் வெளிப்படையா சொல்ல மாட்டேன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு உத்தி இருக்கும். அதை நான் கவனிக்க மாட்டேன். எனக்கென்று உள்ள உத்தியைத்தான் பின்பற்றுவேன்” என்று சொல்ல நிரூப்பை அபிராமி மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டார். “ஏன் என் கூட பேச மாட்டேன்ற" விஷயத்தை நிரூப் ஏற்கெனவே கேட்டு தெளிவுப்படுத்திக்கிட்டான். இருந்தாலும் கமல் எபிசோடில் அதை மறுபடியும் ஒரு புகாரா சொன்னது சரியில்ல” என்று நிரூப்பின்மீது வருத்தப்பட்டார் அபிராமி.

“வர்றாரு சிம்பு. விட்டுடாதீங்க தெம்பு"…

“மொதல்ல என்னைத்தான் தலைவராக்க விரும்பறேன்னு நிரூப் சொன்னான். அப்புறம் பாலாவிற்கு சப்போர்ட் பண்ணான். இவன் என்ன ஆட்டம் ஆடறான்னே புரிய மாட்டேங்குது” என்று அனத்திய தாமரை “தலைவர் ஒரு வேலையும் செய்யாம பப்பரப்பேன்னு கிடக்கறாருன்னு பாலாஜி என்னைப் பத்தி சொன்னது வருத்தமா இருக்கு. இந்த வீட்டில் நான் நிறைய வேலைகளைச் செய்கிறேன். நீங்களும் தானா முன் வந்து செய்யணும்” என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்த தாமரை, “சிநேகன் நல்ல தலைவராக இருந்தார்; பாலாஜி வேலைகளைப் பொறுப்பாகச் செய்கிறார்” என்று பாராட்டுக்களையும் தெளித்துவிட்டுச் சென்றார். டாஸ்க்கின் தலைப்பிற்கும் இவர்கள் பேசிவிட்டுச் சென்றதிற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதை நாம்தான் யோசித்து புரிந்து கொள்ள வேண்டும் போல.

பிக் பாஸ் ரசிகப் பெருமக்களே! மனம் கலங்காதீர்கள்! சோர்ந்து விடாதீர்கள். வார இறுதியில் சிம்பு வந்தவுடன் நிகழ்ச்சி நிச்சயம் களை கட்டும். அப்போது பாருங்கள் ஆட்டத்தை! (அவ்வ்வ்வ்வ்வ்வ்!)