Published:Updated:

BB Ultimate -31: வக்கீலான அனிதா; வனிதாவான ஜூலி! - கிராமத்து டாஸ்க்கில் நடந்தது என்ன?

BB Ultimate - அனிதா

தாங்கள் கைப்பற்றாத பகுதிக்குள் இன்னொரு குடும்பத்தின் உறுப்பினர் நுழைய வேண்டுமானால் உரிமையாளருக்கு பிக் பாஸ் பாயிண்ட்டுகளை அளித்து விட்டுத்தான் செல்ல முடியும். அங்குள்ள மளிகைக்கடையின் உரிமையாளர் சிநேகன்.

Published:Updated:

BB Ultimate -31: வக்கீலான அனிதா; வனிதாவான ஜூலி! - கிராமத்து டாஸ்க்கில் நடந்தது என்ன?

தாங்கள் கைப்பற்றாத பகுதிக்குள் இன்னொரு குடும்பத்தின் உறுப்பினர் நுழைய வேண்டுமானால் உரிமையாளருக்கு பிக் பாஸ் பாயிண்ட்டுகளை அளித்து விட்டுத்தான் செல்ல முடியும். அங்குள்ள மளிகைக்கடையின் உரிமையாளர் சிநேகன்.

BB Ultimate - அனிதா
இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கும் ‘பணால்’ ஆகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தெரிகின்றன. கிராமத்து கேரக்ட்டர்கள், அவற்றின் குணாதிசயம், பிராது விதிமுறைகள், கிராம செட்அப் என்று சகல பின்னணிகளையும் பிக் பாஸ் மிகத் துல்லியமாக திட்டமிட்டுத் தந்தது பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால் – ‘பேரு வெச்சியே.. நாய்க்கு சோறு வெச்சியா?” என்கிற காமெடி போல ‘அல்டிமேட் சீசனில் நடந்த பழைய சர்ச்சைகளை பஞ்சாயத்தில் பிராதாக தரலாம்’ என்று சொல்லி சொதப்பி விட்டார்கள். இதனால் போட்டியாளர்களின் ஆறு வயதில் நடந்த பென்சில் சண்டை முதற்கொண்டு ஆரம்பித்து பேசினார்கள்.. பேசினார்கள்.. அப்படிப் பேசினார்கள். போட்டியாளர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் அதன் பிரச்சினைகள் அவர்களுக்கு பசுமையாக ஃபோகஸில் நினைவிருக்கும். ஆனால் பார்வையாளர்கள் அப்படியா? தினசரி பல்வேறு லெளகீக பிரச்சினைகளில் உழன்று விட்டு வந்து இவர்கள் ஃபிளாஷ்பேக் காலத்தில் நடந்ததையெல்லாம் வைத்து சண்டை போடுவதைப் பார்க்கும் போது அவர்களின் தலை நிச்சயம் சுற்றியிருக்கும். இதையெல்லாம் நாம் ஞாபகம் வைத்திருக்க முடியும்? கிராமத்து டாஸ்க் ஆரம்பித்ததெல்லாம் ஓகே. ஆனால் அதிலேயே ஒரு புதிய சவாலை அமைத்திருந்தால் இந்தச் சவால் ஒருவேளை களை கட்டியிருக்கலாம். சொதப்பிட்டியே குமாரு!

எபிசோட் 31-ல் நடந்தது என்ன?

மக்களை பெட்ரூமில் அடைத்து வைத்திருந்த பிக் பாஸ் டீம், திரையைப் போட்டு மூடி வெளியே ஏதோ ஒன்றிற்காக பிளான் செய்து கொண்டிருந்தது. திரை விலக்கப்படுவதற்குள் தலையை நுழைத்து ஆவலாகப் பார்த்த ஜூலி “வீடு முழுக்க வேலி போட்டிருக்காங்க” என்று கூவி ஊருக்கு செய்தி தெரிவித்தார்.

முன்னாள் கவுன்சிலர் சிநேகன், நாட்டு வைத்தியர் பாலாஜி,

கிராமத்து செட்அப்பில் வீடு ஏழு பகுதிகளாக வேலி கட்டி பிரிக்கப்பட்டிருந்தது. “கோதாவரி. வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு போடுடி” என்பார் ‘சம்சாரம் அது மின்சாரம்’ விசு.. ஆனால் இங்கோ வீடு ஏழு கோடுகளின் மூலம் பிரிக்கப்பட்டிருந்தது.

இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் பற்றி வாசிக்க ஆரம்பித்தார் சிநேகன். ஏதோ இரண்டரை மணி நேர திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட் மாதிரி அது நீண்டு கொண்டே சென்றது. அவர் வாசித்து முடிப்பதற்குள் சிம்பு வரும் வார இறுதி வந்து விடுமோ என்று கூட தோன்றியது. அத்தனை ஒரு நீளமான விதிமுறைகள். அது என்னவென்று சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

சிநேகன் - அனிதா - நிரூப்
சிநேகன் - அனிதா - நிரூப்

அந்தக் கிராமத்தில் இரண்டு தலைக்கட்டு குடும்பங்கள். ஒன்று சிநேகன். இன்னொன்று பாலாஜி. சிநேகன் முன்னாள் கவுன்சிலராம். (சமீபத்தில் நடந்த தேர்தலில் தோற்று விட்டார் போலிருக்கிறது). இவர் ஊருக்காக உழைப்பவராம். சிநேகனின் மனைவி அனிதா. சரியான வாயாடி. (கரெக்ட்டுப்பா!). இவருக்கு புருஷன்தான் உலகமாம். இவர்களின் ஒரே மகன் நிரூப். வேலை வெட்டியில்லாத ஜாலி மைனர். அப்பாவின் சொத்தை செலவு செய்வதுதான் இவரின் ஒரே வேலை. மாமா பொண்ணு சுருதியின் பின்னாலேயே லவ்ஸ் பண்ணி அலைவது இன்னொரு உப வேலை. பிரிந்திருக்கும் இரண்டு குடும்பங்களையும் இணைத்து வைக்க நிரூப் எண்ணுகிறாராம். (யப்பா. டேய். இதெல்லாம் எத்தனை சினிமாவில் பார்த்திருக்கிறோம்?!)

இன்னொரு குடும்பம், பாலாஜியுடையது. இவர் நாட்டு மருத்துவர். இவருடைய கேரக்ட்டர் பற்றிய குறிப்பு வரும் போது பிக் பாஸ் உள்குத்தாக நிறைய குத்தியிருந்தார். பாலாஜி நகைச்சுவை உணர்வு உள்ளவராம். யாருமே சிரிக்காத ஜோக்களை சொல்வாராம். யாரும் சிரிக்கவில்லையென்றால், அவரே சிரித்து அதை ‘ஜோக்’ என்று மற்றவர்களுக்கு உணர்த்த விரும்புவாராம். (கரெக்ட்டு!). பாம்புக்கடிக்காக வைத்தியம் பார்க்க வந்த தாமரையுடன் லவ்ஸ் ஏற்பட்டு திருமணம். இரண்டு குடும்பமும் பிரிவதற்கு தாமரைதான் மெயின் காரணமாம். அவ்வப்போது அருள் வந்து சத்தமாக கத்துவாராம். (கரெக்ட்டா எழுதியிருக்காம்ப்பா!). பணத்தாசை, சிக்கனம் போன்றவற்றைக் கொண்ட தாமரை, வீட்டுப் பெண்களை வெறுப்புடன் பேசி வேலை வாங்குவாராம்.

சுருதியை லவ் பண்ணும் நிரூப்

பாலாஜி – தாமரை தம்பதியினரின் மூத்த மகன் பாலா. முன்கோபக்காரன். சிம்பு ரசிகர்மன்றத் தலைவர். (தலைவா…!) தன் தங்கை சுருதியிடம் யாராவது வம்பு செய்தால் போட்டுப் பொளந்து விடுவாராம். (இந்தச் சமயத்தில் நிரூப்பை நோக்கி ‘மவனே.. ஜாக்கிரதை! என்பது மாதிரி சுருதி ஜாடை காட்டியது சுவாரசியம்!). இவருடைய மனைவி அபிராமி. பயந்த சுபாவம் உள்ளவராம். (“மனைவியை மாத்துங்கப்பா” – பாலா). அந்த ஊரிலேயே படித்த பெண் சுருதி. அண்ணன் மீது பாசம் உள்ளவர். (எங்க அண்ணன். எங்க அண்ணன்..). சுருதிக்கும் நிரூப் மீது ஒரு ‘இது’ உண்டாம். என்றாலும் குடும்பப் பகை காரணமாக அடக்கி வாசிக்கிறாராம். (இது எந்தப் படத்துல இருந்து உருவியது?!).

அந்த ஊரின் கிழவி ஜூலி. (முதல் மரியாதை வடிவுக்கரசி மாதிரி) ஆதரவு இல்லாத இந்தக் கிழவிக்கு யாராவது ஒற்றுமையாக இருந்தால் பிடிக்காதாம். எதையாவது போட்டுக் கொடுத்து சண்டை மூட்டி விடுவாராம். சுரேஷ் தாத்தாவிற்கு வழக்கமான பாட்டி வேடம். ஊர்க்கிழவி. பஞ்சாயத்து தலைவியும் கூட. இவருடைய உதவியாளர் சதீஷ். பஞ்சாயத்து நேரம் தவிர புறணி, வம்பு பேசுவது இவர்களின் பொழுதுபோக்கு.

சுருதி - பாலா
சுருதி - பாலா

ஓகே.. இதெல்லாம் கேரக்ட்டர் ஸ்கெட்ச். இந்த டாஸ்க்கை எப்படி விளையாடுவது? இரு குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒரு பிராதை பஞ்சாயத்தின் முன் வைக்க வேண்டும். அது உண்மையாகவும் சீரியஸாகவும் இருக்க வேண்டும். இதுவரை அல்டிமேட் சீசனில் நடந்த பழைய பஞ்சாயத்தாக அது இருக்கலாம். தன் தரப்பைப் பற்றி பஞ்சாயத்தில் விளக்கமாகச் சொல்ல வேண்டும். எதிர் தரப்பு இதற்கு விளக்கம் அளிக்கலாம். பஞ்சாயத்தில் யார் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வருகிறதோ, அவர்கள் வீட்டின் ஏழு பகுதிகளில் ஒரு பகுதியை கைப்பற்றிக் கொள்ள முடியும். இப்படியே ஒவ்வொரு பிராதின் மூலமும் வீட்டின் இதர பகுதிகளை கைப்பற்ற இரண்டு குடும்பமும் போட்டி போட வேண்டும்.

தாங்கள் கைப்பற்றாத பகுதிக்குள் இன்னொரு குடும்பத்தின் உறுப்பினர் நுழைய வேண்டுமானால் உரிமையாளருக்கு பிக் பாஸ் பாயிண்ட்டுகளை அளித்து விட்டுத்தான் செல்ல முடியும். அங்குள்ள மளிகைக்கடையின் உரிமையாளர் சிநேகன். கை பம்ப்பின் உரிமையாளர் பாலாஜி. மளிகைப் பொருட்களோ, தண்ணீரோ வேண்டுமானால் பரஸ்பரம் இரு குடும்பமும் பாயிண்ட்டுகளை தந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆட்டத்தின் துவக்கத்தில் இரு அணிகளும் மெயின் பாத்ரூம் உள்ளிட்ட வீட்டின் இதர பகுதிகளில் புழங்க முடியாது. கார்டன் ஏரியாவில் மட்டுமே இருக்க வேண்டும். பஞ்சாயத்து தீர்ப்பில் ஜெயித்தால்தான் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி அங்கு செல்ல முடியும்.

“பல்லைத் தட்டி கையில் தந்துடுவேன்” – வனிதாவாக மாறிய ஜூலி

இதுதான் ஆட்ட விதிமுறை. டாஸ்க் விதிகள் பற்றிய அறிவிப்பை சிநேகன் வாசித்து முடித்ததும் நிரூப்பிற்கும் ஜூலிக்கும் இடையே முட்டிக் கொண்டது. ஜூலியை பல இடங்களில் நிரூப் ஓரங்கட்ட முயல்கிறார். இது குறித்த அதிருப்தி ஜூலிக்கு ஏற்கெனவே இருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஜூலியின் உடன்பிறவா தோழியான அபிராமியும் நிரூப் பற்றி எரிச்சலாக அனத்திக் கொண்டேயிருப்பதால், நண்பனுக்கு எதிரி. தனக்கும் எதிரி என்கிற ஃபார்முலாவில் ஜூலி இருக்கிறார்.

இந்த டாஸ்க்கில் ஜூலிக்கு வம்பு பேசும் கிழவி என்கிற பாத்திர அமைப்பு பற்றி சொல்லப்பட்ட போது நிரூப் ஏதோ கிண்டலாக கமெண்ட் அடித்து விட ஜூலிக்கு கோபம் வந்து விட்டது. “என் கேரக்ட்டர் பத்தி பேசாத. பல்லை உடைச்சு கையில் கொடுத்துடுவேன்” என்று வனிதாக்கா பாணியில் பேச ஆரம்பித்து விட்டார். “உன்னையெல்லாம் நான் சீரியஸாவே எடுத்துக்கலை” என்று இடதுகையால் ஜூலியின் கோபத்தை அலட்சியமாக நிராகரித்தார் நிரூப்.

BB Ultimate
BB Ultimate

முதல் பிராது – வக்கீலாகக் கலக்கிய அனிதா

டாஸ்க் துவங்கியது. பஞ்சாயத்தில் ஒரு பிராது வந்திருப்பதை தண்டோரா மூலம் அறிவித்தார் சதீஷ். இதைத் தவிர இவர் வேறு எதையுமே ஸ்கோர் செய்யவில்லை. முதல் நாள் டாஸ்க்கை பாலா, அனிதா, சுரேஷ் ஆகியோர் மட்டுமே ஆக்ரமித்தார்கள். பாலாவிற்கும் அனிதாவிற்கும் நடந்த வாக்குவாதம் நெடுநேரத்திற்கு காட்டப்பட்டது. ஒரு முறையான நீதிபதியாக தன்னிடம் வந்த புகாரை நிதானமாகவும் பகுதி பகுதியாகவும் அலசி ‘சிறந்த நாட்டாமை’யாக விளங்கினார் சுரேஷ். ஒரு திறமையான வக்கீல் போல தன் தரப்பை வைப்பதில் ஆகட்டும், எதிர் தரப்பின் புகார்களை லாஜிக் கொண்டு உடைப்பதாகட்டும், அனிதா கலக்கி விட்டார். (கிராமத்து கெட்டப்பில் ஆளும் க்யூட்டாக இருந்தார்).

ஜூலி
ஜூலி

முதல் பிராதை வைத்தவர் அனிதா. தாமரைக்கும் பாலாவிற்கும் நடந்த தலைவர் போட்டியில் அபிராமி முறையாக பங்கேற்கவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. பாலாவிற்கு வழக்கம் போல் தலைவர் போட்டியில் பங்கேற்க விருப்பமில்லை. இதை அவர் பொதுவில் தெரிவித்து விட்டார். பாலா அப்படித் தெரிவித்தாலும் டாஸ்க் நடந்தாக வேண்டுமே? அந்தக் கடமையுணர்ச்சியோடு நிரூப், அனிதா, சுருதி போன்றவர்கள் பாலாவிற்காக இரவு முழுவதும் கண் விழித்தார்கள். ஆனால் யாருக்காக விளையாடுவது என்பதிலேயே அபிராமிக்கு குழப்பம். “எனக்காக வேண்டாம், பாலாவிற்காக விளையாடு” என்று தாமரை திருப்பியனுப்பி விட்டார். ஆனால் பாலாவோ ‘எனக்கே விருப்பமில்லை’ என்று தூங்கச் சென்று விட்டார். ஆகவே அபிராமியும் தூங்கப் போய் விட்டார். மறுநாள் எழுந்து வந்து கூட டாஸ்க் பற்றி விசாரிக்கவில்லை.

இதுதான் வாதப்பிரதிவாதங்களின் மூலம் வெளிப்பட்ட தகவல்கள். இதை இரு தரப்பிலும் நிதானமாக விசாரித்த சுரேஷ், அபிராமியின் மீதான புகாரில் முகாந்திரமில்லை என்று சொல்லி பிராதை தள்ளுபடி செய்து விட்டார். ஆக யாருக்குமே இதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சுரேஷின் இந்த தீர்ப்பில் நியாயமிருப்பதாக தெரியவில்லை.

“நாட்டாமை.. தீர்ப்பை மாத்திச் சொல்லு”

பாலா தலைவர் போட்டியை மறுத்தது அவருடைய பிரச்சினை. ஆனால் யாருடைய அணிக்கு விளையாடுவது என்பதிலேயே அபிராமிக்கு குழப்பம். இது அவர் செய்த முதல் பிழை. பாலா அணி பக்கம் சென்று விட்டு பிறகு விலகி தூங்கச் சென்றது இரண்டாவது பிழை. எனில் பாலாவிற்காக கண் விழித்து விளையாடிய மற்றவர்கள் மட்டும் முட்டாள்களா? இந்த விளக்கத்தை சிநேகன், அனிதா, நிரூப் உள்ளிட்டவர்கள் தெளிவாக வைத்தும் பஞ்சாயத்து தலைவர் ஏற்கவில்லை.. “தூங்கினா. என்ன… யாராவது வந்து எழுப்ப வேண்டியதுதானே?” என்று அபிராமி கேட்டதெல்லாம் அழிச்சாட்டியம்.

ஜூலி - அபிராமி
ஜூலி - அபிராமி

“சுரேஷ் வெளில ஷோ பார்த்துட்டு வந்திருப்பாரு. அதுல அபிராமி பக்கம்தான் நியாயம்-ன்ற மாதிரி காட்டியிருக்கலாம். அதனால மக்கள் கருத்தோட தாத்தா ஒத்துப் போறாரு போல” என்று பிறகு அனிதா ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். சுரேஷ் தீர்ப்பு சொல்லி முடித்தாலும் கூட இந்தப் பிரச்சினை இன்னமும் சரவெடி மாதிரி வளர்ந்து கொண்டேயிருந்தது. சிநேகனிடம் எதையோ விசாரிக்கப் போன பாலாவிடம், அதற்கான விளக்கத்தை அனிதா தர, “நான் அவர் கிட்டதானே பேசிக்கிட்டு இருக்கேன்.. நீங்க என்ன அவரோட சொம்பா?” என்று வில்லங்கமான கமெண்ட்டை பாலா முன்வைத்தார். “அந்தச் சமயத்துல நான்தான் அங்க இருந்தேன். அதனாலதான் விளக்கம் சொல்றேன். நீ கூடத்தான் அபிராமி பக்கம் பேசறே. அபிராமிக்கு சொம்பு தூக்கறேன்னு நானும் சொல்லட்டுமா?” என்று அனிதாவும் பதிலுக்கு அடித்து விளையாடினார்.

அனிதா - நிரூப்
அனிதா - நிரூப்

“நான் கேப்டன் ஆக விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறமும் எனக்காக விளையாடினது முட்டாள்தனம்” என்று பாலாவின் அழிச்சாட்டியம் கூடிக்கொண்டே போனது. “நாங்களும் அப்படி விளையாடாம இருக்க முடியாதில்லையா.. அப்ப பிக் பாஸ் கிட்ட போய் நீ சொல்லியிருக்க வேண்டியதுதானே?” என்று அனிதாவும் நிரூப்பும் மல்லுக்கட்ட, “பிக் பாஸ் ஒத்துக்க மாட்டாரு” என்று பாலா சொல்ல “அப்ப. நாங்க விளையாடாம இருந்தாலும் கேள்வி கேப்பாருல்ல” என்று அனிதா மடக்க, ஒரே கஷ்டமப்பா..

‘நாங்களும் இந்த டாஸ்க்கில் இருக்கிறோம்’ என்பதை காட்டிக் கொள்வதைப் போல தாமரையும் ஜூலியும் இந்தச் சண்டையில் இடையில் வந்து எதையோ கத்தினார்கள். ‘Women Card-ஐ தூக்கிட்டு வராதீங்க” என்று பாலாவைப் போலவே ஜூலியும் அனிதா மீது புகார் சொல்ல அனிதாவின் முகம் சுருங்கியது.

பல அணிகளாக பிரிந்திருக்கும் பிக் பாஸ் வீடு

அனிதா – நிரூப், அபிராமி – ஜூலி, பாலா – தாமரை, பாலாஜி – சிநேகன் என்று வீடு பல்வேறு அணிகளாகப் பிரிந்திருப்பதை உணர முடிகிறது. பாவம், சுருதியை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. அடுத்த பிராது ஆரம்பித்தது. அனிதாவின் மீது பாலா வைத்த புகார் இது. “பாலா எமோஷனலா வீக்கா இருக்கறவங்களை டார்கெட் செய்கிறார்” இந்தப் புகாரை FIR-ல் எழுதியவர் அனிதா. ஆனால் இது பொய் புகார். எப்பப்பாரு பொண்ணுங்களை வெச்சு என்னை அடிக்கப்பார்க்கறாங்க.. என்னன்னு கேளுங்க நாட்டாமை” என்று பாலா தன் பிராதை முன்வைக்க, அதற்கு அனிதா அளித்த நீளமான விளக்கம் ரணகளம். பாயிண்ட் பாயிண்ட்டாக அவர் புட்டு வைக்க பாலாவால் அதை ஏற்க முடியாமல் அதிருப்தியான முகபாவங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

சதீஷ்
சதீஷ்

அனிதா ஒரு பக்கம் சீரியஸாக விளக்கம் தந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் நிரூப் செய்த ரொமான்ஸ் சுவாரஸ்யம். டாஸ்க் என்று வந்து விட்டால் நிரூப்பைப் போன்று ஒரு விசுவாசியைப் பார்க்க முடியாது. இந்த டாஸ்க்கின் படி அவர் சுருதியை லவ் பண்ணுகிறவர் என்பதால், பஞ்சாயத்துக் கூட்டத்திலேயே சுருதியைப் பார்த்து காதல் சமிக்ஞைகள் தந்ததும், அதற்கு சுருதி செல்லமாக கோபித்து மறுத்ததும் சுவாரசியமான காட்சிகள்.

இரண்டாவது பிராதுக்கு சுரேஷ் நாட்டாமை தீர்ப்பு சொல்வதற்குள் பிக் பாஸிற்கே சலித்துப் போனதோ, என்னமோ, எபிசோடை நிறைவு செய்து இந்தப் பஞ்சாயத்திலிருந்து நம்மைக் காப்பாற்றினார்.