Published:Updated:

BB Ultimate -33 : எந்த டாஸ்க்கிலும் சுவாரஸ்யமில்லை; என்ன நடக்கிறது பிக் பாஸ் அல்டிமேட்டில்?

BB Ultimate -33 அபிராமி, பாலா

சுருதியை தனியாக அழைத்த பிக் பாஸ், இரண்டு சீக்ரெட் டாஸ்க்குகளைத் தந்தார். ஒன்று, நிரூப்பை எப்படியாவது கன்வின்ஸ் செய்து இரண்டு முறை காசு தராமல் பாத்ரூமை உபயோகிக்க வேண்டும்.

Published:Updated:

BB Ultimate -33 : எந்த டாஸ்க்கிலும் சுவாரஸ்யமில்லை; என்ன நடக்கிறது பிக் பாஸ் அல்டிமேட்டில்?

சுருதியை தனியாக அழைத்த பிக் பாஸ், இரண்டு சீக்ரெட் டாஸ்க்குகளைத் தந்தார். ஒன்று, நிரூப்பை எப்படியாவது கன்வின்ஸ் செய்து இரண்டு முறை காசு தராமல் பாத்ரூமை உபயோகிக்க வேண்டும்.

BB Ultimate -33 அபிராமி, பாலா
அல்டிமேட் சீசனின் சமீபத்திய எபிசோடுகளை கமல் ஒருவேளை பார்த்திருந்தால், ‘ஹப்பாடா! கரெக்ட் டைம்ல நாம எஸ்கேப் ஆகிட்டோம்’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார். அந்தளவிற்கு நிகழ்ச்சி மிக மிக சலிப்பாகவும் சூர மொக்கையாகவும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

எபிசோட் 33 -ல் நடந்தது என்ன?

பழைய காலத்தில், பண்டமாற்று என்னும் முறையில் பொருட்களை மதிப்பிடுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டதால்தான் ‘பணம்’ என்னும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ‘பணம்’ என்னும் இந்த விஷயம்தான் மனித குல வரலாற்றில் இன்றளவிற்கும் பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

தாமரை
தாமரை

பிக் பாஸ் வீட்டிலும் இதே பிரச்னைதான். நிகழ்ச்சி பூராவும் ‘காசு. கொடு.. காசு கொடு..’ என்கிற நச்சரிப்பு குரல்கள் நம்மை இம்சை செய்கின்றன. ‘தண்ணிக்கு காசு.. சுச்சா போவதற்கு காசு’… என்று ஒரே அற்ப வியாபாரம். மனிதாபிமானம் என்பதே சுத்தமாக இல்லை. நிரூப் ஏதோ பேசும்போது தொண்டை கமறியதால், தன்னிச்சையாக அவருககு தண்ணீர் கொடுத்த தாமரை, பிறகு சட்டென்று “நூறு ரூபாய் கொடு” என்று கேட்டு விட்டார். ஒரு கிராமத்துப் பெண்மணியைக் கூட நீருக்கு காசு பிடுங்கும் மனோபாவத்திற்குள் தள்ளி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சி.

பொருளாதார மேதை அனிதா

ஏதோவொரு பாடலுடன் பொழுது விடிந்தது. ‘தண்ணி குடிச்சிட்டு பேசுங்க’ விவகாரத்தில் சுரேஷ் தாத்தா தந்த தீர்ப்பு பற்றி இன்னமும் அனத்திக் கொண்டிருந்த பாலா, கூடவே சிநேகனைப் பற்றியும் புறணி பேசிக் கொண்டிருந்தார். “காஃபி வேணும்னா ஆயிரம் கொடு” என்று காலையிலேயே தன் வியாபாரத்தை ஹைஸ்பீடில் ஆரம்பித்தார் தாமரை. “என்னது! காஃபிக்கு ஆயிரமா?” என்று நிரூப் அதிர்ச்சியில் வாயைப் பிளக்க “நீ மட்டும் பாத்ரூம்ல அவ்வளவு காசு பிடுங்கலை?” என்று பதிலுக்கு தாமரை மல்லுக்கட்ட, அந்தச் சமயத்தில் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்தார் பொருளாதார மேதை அனிதா. “நிரூப்.. நாமளும் செலவு செஞ்சாதான்.. பணப்புழக்கம் இருக்கும். பொருளாதாரம் வளரும். ரேட்டை பேரம் பேசு” என்று ஐடியா தந்த போது ‘அடடே! அடுத்த வருட பட்ஜெட்டை அனிதாவை விட்டே போடச் சொல்லலாம் என்கிற அளவிற்கு பிரமிப்பு ஏற்பட்டது. Demand, Supply பற்றியெல்லாம் பேசி ஆச்சரியமூட்டினார் அனிதா. “சாப்பாட்டிற்கு அதிகம் காசு வாங்க மாட்டேண்டா..” என்று தனது வியாபாரத்தில் சிறிது நியாயத்தைக் கடைப்பிடித்த தாமரை “அதனாலதான் காஃபில அதை சேர்த்துட்டேன்” என்று பின்குறிப்பாக சொல்லி அதிர்ச்சியூட்டினார்.

அனிதா
அனிதா

“இப்ப பாரேன்.. ஜீவா பல்லைக் கடிக்கப் போறான்”.. என்கிற பசங்க படத்தின் காட்சி போல அபிராமியும் ஜூலியும் பாலாவிடம் பற்ற வைத்து அவரின் உக்கிரத்தைக் கூட்ட முயன்றார்கள். “பஞ்சாயத்துல சிநேகனும்தானே தப்பு பண்ணாரு.. இந்த நாட்டாமை சொன்ன தீர்ப்பில் நியாயமில்லை” என்று இன்னமும் புலம்பிக் கொண்டிருந்தார் பாலா. இதை நாட்டாமையே இரவில் ரகசியமாக ஒப்புக் கொண்டாராம்.

பாலானந்தா vs நிரூப்பானந்தா - தத்துவ மோதல்

கிச்சன் ஏரியாவில் பாலாவிற்கும் நிரூப்பிற்கும் இடையில் தத்துவப் போட்டி நடந்து கொண்டிருந்தது. “காசு சம்பாதிக்கறதை விடவும் மனுஷங்களைச் சம்பாதிக்கறதுதான் முக்கியம்” என்று திடீர் ஞானோதயம் பெற்ற பாலானாந்தா சொல்ல “நீ அதைச் சொல்றியா..? இந்த பிக் பாஸ் கரன்ஸியை வெச்சு வெளியே போய் ஒரு சிங்கிள் டீ வாங்க முடியுமா? இந்தப் பணமே ஒரு பொய்.. ஒரு மாயை” என்று எதிர் தத்துவம் பேசினார் நிரூப்பானந்தா. ஆனால் இப்படி இருவருமே வாழ்க்கையின் நிலைமையாமை பற்றி தத்துவமாக பேசினாலும் காசில் குறியாகத்தான் இருந்தார்கள்.

சுருதியை தனியாக அழைத்த பிக் பாஸ், இரண்டு சீக்ரெட் டாஸ்க்குகளைத் தந்தார். ஒன்று, நிரூப்பை எப்படியாவது கன்வின்ஸ் செய்து இரண்டு முறை காசு தராமல் பாத்ரூமை உபயோகிக்க வேண்டும். இரண்டாவது டாஸ்க், தாமரைக்கானது. அவர் தனது அண்ணன் சிநேகனை தனியாக அழைத்து சாப்பாடு போட்டு சாப்பிட வைக்க வேண்டும். தங்களுக்கு காரியம் ஆக வேண்டுமானால் பெண்கள் ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் வளைத்து இழுத்துச் செல்வார்கள் என்பது இந்தச் சமயத்தில் நிரூபணம் ஆனது.

நிரூப் - சுருதி
நிரூப் - சுருதி

அதுவரை நிரூப்பின் சில்மிஷங்களை செல்லக் கோபத்துடன் மறுத்த சுருதி, திடீரென்று தானாக முன்வந்து ‘மாமா. மாமா..’ என்று ஈஷிக் கொண்டே ரொமான்ஸாக பேச, ‘ஸ்ட்ராட்டஜி கிங்’ ஆன நிரூப்பிற்கு அப்போதாவது மூளைக்குள் பல்பு எரிந்திருக்க வேண்டாமா? ம்ஹூம்.. மாமா பொண்ணு மயக்கத்தில் அந்த பல்பு அணைந்து விட்டது. நிரூப்பிற்கு தண்ணீரை லஞ்சமாக கொடுத்த சுருதி “எனக்கு கூடவா பாத்ரூம் காசு கேப்பே?” என்று கொஞ்சலுடன் கேட்க “உனக்காகத்தானே அதைக் கட்டி வெச்சிருக்கேன்.. அதுதான் நம்மோட தாஜ்மஹால். நீ எப்ப வேணா போயிட்டு வா” என்று நிரூப்பும் முழு மயக்கத்துடன் சம்மதம் தெரிவிக்க, சுருதியின் சீக்ரெட் டாஸ்க் சக்ஸஸ். பிக் பாஸ் ஷோவில் எப்போதும் பின்தங்கியிருக்கும் சுருதி, வெற்றிப்புன்னகையுடன் பிக் பாஸிடம் சென்று நற்சான்றிதழ் பெற்றார். நிரூப்பிடம் காட்டியதை விடவும் அதிகமான வெட்கத்துடன் பிக் பாஸிடம் “தாங்க்ஸ்” என்று சுருதி சொல்லியதைப் பார்த்து பயத்தில் பிக் பாஸிற்கே சுரம் வந்திருக்கும்.

தலையால் தண்ணீர் குடித்த தாமரை

தேங்காய் உடைத்த தண்ணீரை பாசத்துடன் நிரூப்பிற்கு தற்செயலாக கொடுத்து விட்டார் தாமரை. இது மட்டுமல்லாமல் பஞ்சாயத்து உபதலைவரான சதீஷிற்கு தரப்பட்ட ஜூஸையும் நைசாகப் பிடுங்கி குடித்து விட்டார் நிரூப். இப்படி காசு தராமலேயே நிரூப் காரியத்தை சாதித்துக் கொள்வதால் கோபம் அடைந்த அபிராமி, இந்த விஷயத்தைக் கொண்டு போய் பாலாவிடம் பற்ற வைக்க, இந்த நெருப்பை சுரேஷ் தாத்தாவும் நன்றாக ஊதி விட்டார். ஆவேசமாக எழுந்து வந்த பாலா, “டாஸ்க்ல உன் பாசத்தைக் காட்டாதே” என்று தாமரையிடம் கோபத்தைக் காட்டினார்.

அதுவரை எதிர் டீமிடம் காசு பிடுங்குவதில் கவனமாக இருந்த தாமரை, சீக்ரெட் டாஸ்க் காரணமாக “என் அண்ணன் கூட நான் பேசியாகணும்.. அவரை வெச்சு ஒரு வேளை சாப்பாடு போட்டாத்தான் என் மனசு ஆறும்.. அதுவரை நானும் சாப்பிட மாட்டேன்” என்றெல்லாம் திடீர் சென்ட்டி நாடகம் போட “யப்பா.. உலக நடிப்புடா சாமி..’ என்று தோன்றியது. இந்த விஷயத்தை அபிராமி போய் பாலாவிடம் சொன்னார். பாலா, நிரூப்பை விடவும் உஷாரான ஆசாமி என்று இந்தச் சமயத்தில் தெரிந்தது. இது சீக்ரெட் டாஸ்க்காக இருக்குமோ என்கிற சந்தேகம் அவருக்கு வந்து விட்டது. “தாமரை கன்ஃபெஷன் ரூமிற்கு போய் வந்தாரா?” என்று கேட்டார் பாலா. “நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா” என்கிற ரேஞ்சில் இருக்கும் பிக் பாஸ், இதை முன்பே யோசித்துதான் சுருதியிடமே இரண்டு டாஸ்க்கையும் தெரிவித்து விட்டார். (எப்பூடீ?!).

தாமரை - சுருதி
தாமரை - சுருதி

சுருதி தனது டாஸ்க்கை எளிமையாக முடித்து விட்டாலும் தாமரையால் அப்படி முடிக்க முடியவில்லை. தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருந்தது. “அண்ணனுக்கு ஒரு வேளை சாப்பாடு தரணும்” என்கிற அவரின் நாடகம் எதிர்திசையில் பயணிக்க ஆரம்பித்தது. தாமரையின் கண்ணீரைப் பார்த்த அபிராமி “சாப்பாடு போட்டா அந்தக் குடும்பத்துல இருக்கற மூணு பேருக்குமே தரலாம். அதென்ன ஒருவருக்கு மட்டும் தர்றது?” என்று சொல்ல திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக தாமரைக்கு ஆகி விட்டது. சிநேகனுக்கு மட்டும்தான் சாப்பாடு தர வேண்டும். அதுதான் டாஸ்க்.

எந்தவொரு சிக்கலான வேலையையும் ஆண்களிடம் நேரடியாகச் சொல்லாமல் பெண்களை வைத்தே முடிக்க முடியும் என்பது பெண்களுக்கே நன்கு தெரிந்திருக்கிறது. எனவே சிநேகனை சம்மதிக்க வைக்க சிநேகனின் மனைவி அனிதாவின் மூலமாக தூது விட்டார் தாமரை. நிரூப்பிற்கும் சுருதிக்கும் இடையே கல்யாணப் பேச்சு பேசுவது இதற்கான சாக்காக அமைந்து விட்டது. தன் கணவரிடம் அனிதா நைச்சியமாகப் பேசினாலும் சிநேகன் எளிதில் மசியவில்லை. “ஏற்கெனவே ரெண்டு குடும்பத்துக்கும் பகையா இருக்கு. நான் எப்படி போய் சாப்பிடறது? அப்புறம் ராசியாகலைன்னா. அசிங்கமாப் போயிடும்” என்று கெத்தாக இருந்தார்.

திரிசூலம் சிவாஜி ரேஞ்சிற்கு நடிப்பில் பின்னிய சிநேகன்

எனவே சுருதியே களத்தில் இறங்க வேண்டியதாக இருந்தது. “மாமா.. உங்க மகனைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்” என்று பாசத்தை கன்னா பின்னாவென்று காண்பிக்க “பேசிப் பார்ப்போம்மா.. சரியா வரலைன்னா. உன்னைத் தூக்கிட்டுப் போயாவது இந்தக் கல்யாணத்தை நடத்திடுவோம்” என்று திடீர் வில்லனாக மாறினார் சிநேகன். (இந்த பிஞ்சு மூஞ்சிக்கு வில்லன் ரோல் செட் ஆகலை.. கவிஞரே!).

கட்டக் கடேசியில் அது நிகழ்ந்தே விட்டது. ஆம், இருபது வருடங்களுக்கும் மேலாக பேசாமல் இருந்த அண்ணனும் தங்கையும் சந்தித்துப் பேசி கண்ணீர் விட்டு பாசத்தில் கதறிய அந்தச் சம்பவம் நடந்தே விட்டது. ஆனால் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரலாற்று நிகழ்வு, பாத்ரூம் அருகே நடந்ததுதான் சற்று அசிங்கமாக இருந்தது. பரவாயில்லை, பாசம்தான் முக்கியம். மாமா பொண்ணுடன் ரொமான்ஸ் செய்து வீடு முழுதும் சுற்றிக் கொண்டிருந்த நிரூப், தனது தந்தையை மட்டும் பாத்ரூமின் அருகேயே நிற்க வைத்து டோக்கன் போட வைத்து விட்டார். எனவே இறுக்கமான முகத்துடன் கழிப்பறையின் அருகிலேயே காலையில் இருந்து கடமையே கண்ணாக காவல் இருந்தார் சிநேகன். எத்தனை கவிதைகளை அங்கு எழுதினாரோ?!

தாமரை - சிநேகன்
தாமரை - சிநேகன்

திடீரென்று தன் தங்கை தாமரையை அங்கு பார்த்ததும் சிநேகனுக்கு பேச்சு வரவில்லை. மாறாக கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. ஆம், உண்மையான அண்ணனாகவே மாறி பாசத்தைப் பிழிந்தெடுத்து நடிப்பில் திரிசூலம் சிவாஜிக்கே கடுமையான சவாலைத் தந்தார் சிநேகன். தனது பங்களிப்பைச் சிறப்பாகத் தர அவர் முயன்றது பாராட்டத்தக்க விஷயம்தான் என்றாலும் “இன்னாடா! அவார்டா தராங்க?!” என்கிற வசனமே நம் மனதிற்குள் அநாவசியமாக வந்து ஓடிக் கொண்டிருந்தது.

ஒரே சீரியஸ் காட்சிகளாக நடந்து கொண்டிருந்த ஷோவில் திடீரென்று காமெடிக் காட்சிகளை இணைக்கத் துணிந்து விட்டார் பிக் பாஸ். கார்டன் ஏரியாவில் மக்கள் ரிலாக்ஸ் மோடில் தங்களுக்குள் பரஸ்பரம் கிண்டலடித்துப் பேசுவதைக் காண முடிந்தது. இதன் நடுவிலும் ஒரு மினி பஞ்சாயத்தைக் கூட்டினார் அனிதா. ஜூலி தன்னைப் பார்த்து எச்சில் துப்பினார் என்பது அவரது பிராது. “அது கேரக்ட்டர் டெவலப்மெண்ட். நான் கிராமத்துக் கிழவி. வெத்திலையைப் போட்டுத் துப்புவேன்” என்று தேசிய விருது பெற்ற நடிகைக்கு ஈடாகப் பேசிய ஜூலி, பிறகு மன்னிப்பும் கேட்டார். “அடிச்சக்கைன்னான்னா..” என்று சொல்லி விட்டு பின்குறிப்பாக ‘த்தூ..” என்று துப்புவது அவரது கேரக்ட்டர் மேனரிஸமாம். இதையே பல முறை சொல்லி காறித் துப்பிக் கொண்டேயிருந்தார். தொலைக்காட்சிப் பெட்டியையும் மீறி எச்சில் வெளியே வந்து விழுந்து விடுமோ என்று நமக்குத்தான் பதட்டமாக இருந்தது.

அபிராமி - சுரேஷ்
அபிராமி - சுரேஷ்

“இங்க நான் ஒரு விஷயத்தைப் பதிவு பண்ண விரும்பறேன்” என்று அடிக்கடி சுரேஷ் தாத்தா சொல்ல, அதற்கு மிகச் சுமாராக ஒரு கவுன்ட்டர் தந்தார் சதீஷ். பாவம், இந்தத் தம்பி வந்த நாளில் இருந்தே மந்திரித்து விட்ட கோழி மாதிரி பீதியுடன் உலவிக் கொண்டிருக்கிறார். நம்பி உள்ளே அனுப்பிய சிம்புவிற்காகவாவது ஏதாவது வம்பு செய்யலாம். இதே போல்தான் தாடி பாலாஜியும். அவர் பாட்டுக்கு மூலைக்கு மூலை அமைதியாக நின்று கொண்டிருக்கிறார்; அல்லது கட்டிலில் படுத்து சுவாரசியமாக மூக்கு நோண்டிக் கொண்டிருக்கிறார். இந்த வார எவிக்ஷனில் சிநேகனையும் பாலாஜியையும் ஒன்றாக வெளியே அனுப்பி விடலாம். சுத்த வேஸ்ட்.

மைனர் நிரூப்பிற்கும் ஜூலி கிழவிக்கும் திருமணம்

“இரண்டு குடும்பமும் ராசியாகும்ன்னுதான் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சோம். ஆனா அது சரிப்பட்டு வராது போல. எனவே மைனர் நிரூப்பிற்கு நம்ம ஜூலிக் கிழவியை கட்டி வெச்சிடலாம். இதுதான் நாட்டாமையோட தீர்ப்பு” என்று சுரேஷ் அதிரடியாக அறிவிப்பு செய்ய “அடிச்சக்கைன்னானாம். த்தூ” என்று காறி உமிழ்ந்தார் ஜூலி. ஒரு வழியாக சிநேகனின் குடும்பமும் பாலாஜியின் குடும்பமும் ராசியானது. தனது சீக்ரெட் டாஸ்க் நிறைவேறப் போகும் சந்தோஷத்தில் இருந்த தாமரை, மகிழ்ச்சியை உள்ளே மறைத்துக் கொண்டு பரபரப்பாக செயல்பட்டார். (என்னாவொரு வில்லத்தனம்?!). ஒருவழியாக சிநேகனை அமர வைத்து சாப்பாடு தர, தாமரையின் பிரம்மப் பிரயத்தனம் ஒருவழியாக முடிவிற்கு வந்தது. டாஸ்க் சக்ஸஸ். பெண்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் திறமையாக நடத்திக் காட்டி விடுவார்கள் என்பதற்கு தாமரையின் சூதானம் ஒரு நல்ல உதாரணம்.

ஜூலி - அபிராமி
ஜூலி - அபிராமி

என்ன நடந்ததோ. தெரியவில்லை. திடீரென்று கதறியழும் மோடிற்கு சென்றார் அனிதா. “நான் அழல. கண்ணு வேர்க்குது.. டாஸ்க்கை முடிச்சுடுவோம்” என்பதைச் சொல்லியே மற்றவர்களை சமாளித்த அனிதா, நிரூப் வந்து விசாரிக்கும் போது மட்டும் “நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கேன்டாள.. புரிஞ்சுக்கோ.. பாலாஜி அண்ணா வரட்டும்” என்று கதறியழ இத்துடன் எபிசோடும் முடிந்துத் தொலைத்தது.