Published:Updated:

BB Ultimate - 35: சிம்பு நடத்தப்போகும் முதல் எவிக்சன்! என்ட்ரி ஆகிறாரா நடிகை?

BB Ultimate

BB Ultimate: நிரூப்தான் வரப்போகிறார் என்பது இருவருக்குமே உள்ளூற நன்கு தெரிந்திருந்தாலும் ‘சும்மா’ டைம்பாஸிற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசட்டும், அதில் தவறில்லை. ஆனால்...

Published:Updated:

BB Ultimate - 35: சிம்பு நடத்தப்போகும் முதல் எவிக்சன்! என்ட்ரி ஆகிறாரா நடிகை?

BB Ultimate: நிரூப்தான் வரப்போகிறார் என்பது இருவருக்குமே உள்ளூற நன்கு தெரிந்திருந்தாலும் ‘சும்மா’ டைம்பாஸிற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசட்டும், அதில் தவறில்லை. ஆனால்...

BB Ultimate
“பெட்ரோல் விலை அதிகமா இருக்கேன்னு மண்ணெண்ணைய் ஊத்தினேன். அதுவும் விலையேறுச்சுன்னு க்ரூட் ஆயில் ஊத்தினேன். இப்ப இந்த வண்டி எதுல ஓடுதுன்னு அதுக்கும் தெரியல.. எனக்கும் தெரியல..” – இது ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் கவுண்டமணி பேசும் வசனம். இதைப் போல அல்டிமேட் சீசன் எந்தத் திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் புதிதாக ஒரு ஆயிலை ஊற்றப் போகிறார்களாம். ஆம், வைல்ட் கார்டு என்ட்ரியாக ‘லோஸ்லியா’ வரவிருக்கிறாராம். “நீ நடித்தது போதும்மா. ஒரிஜினலையே உள்ளே கொண்டு வருகிறோம்” என்று அபிராமிக்கு மறைமுகமாக செய்தி சொல்கிறார்கள் போலிருக்கிறது. இந்த ஷோ லாஸ் ஆகாமல் லோஸ்லியா காப்பாற்றுவாரா?

எபிசோட் -35 ல் நடந்தது என்ன?

“நான் அடிச்சா தாங்க மாட்டே.. நாலு மாசம் தூங்க மாட்டே’ என்கிற பாட்டு ரேஞ்சில் நிரூப்பிடம் பேசிக் கொண்டிருந்தார் சுரேஷ். அது அனிதாவைப் பற்றி. “என்னை Fake-ன்றாங்க. கேவலம்-ன்றாங்க.. நான் இறங்க ஆரம்பிச்சா தாங்காது. அவங்களே அவங்களுக்கு குழி பறிச்சிக்கும் போது நான் எதையும் செய்யவே தேவையில்லை” என்று தாத்தா சொன்ன அப்சர்வேஷன் சரி. தன் இமேஜ் கெட்டு விடுமோ என்கிற பதட்டத்தில் அனிதா செய்யும் காரியங்களால்தான் அவரின் இமேஜ் கெடுகிறது.

‘பாட்டரி சார்ஜ் எந்த லெவலில் இருக்கிறது?’

‘தத்தை.. தத்தை…’ என்கிற அதிரடியான பாடலோடு பொழுது விடிந்தது. தலைவர் போட்டியில் சதீஷூம் நிரூப்பும் எஞ்சியிருக்கிறார்கள். ரஷ்யா – உக்ரைன் பிரச்சினையை தீர்க்கப் போகும் தீவிரத்தோடு இதைப் பற்றி ஜூலியும் அபிராமியும் பேசிக் கொண்டிருந்தார்கள். “பேசாம நம்ம சதீஷை தலைவராக்கி விடுவோமா?” என்று ராஜதந்திரியாக அபிராமி கேட்க “அதுக்கு இவன் சரிப்பட்டு வரமாட்டான்” என்று ரிஜெக்ட் செய்தார் ஜூலி. “நிரூப் கேப்டனா வந்தாக் கூட நல்லாத்தான் இருக்கும்” என்று இழுத்தார் அபிராமி. நிரூப்தான் வரப்போகிறார் என்பது இருவருக்குமே உள்ளூற நன்கு தெரிந்திருந்தாலும் ‘சும்மா’ டைம்பாஸிற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசட்டும், அதில் தவறில்லை. ஆனால் அடுத்த லீடரையே இவர்கள்தான் தீர்மானிக்கப் போகிறார்கள் என்கிற ரேஞ்சிற்கு பேசியதுதான் காமெடி.

சதீஷ்
சதீஷ்

ஒவ்வொரு போட்டியாளரின் ‘பாட்டரி லெவல்’ எந்த அளவில் இருக்கிறது என்பதை மதிப்பிடும் டாஸ்க் அடுத்ததாக நடந்தது. முழு எனர்ஜி, பாதி எனர்ஜி, அபாய லெவல் என்று மூன்று கட்டங்களில் தேர்வு செய்ய வேண்டும். எதிர்பார்த்தபடியே, ஃபுல் எனர்ஜி பிரிவில் அதிக வாக்குகளைப் பெற்றார் நிரூப். ‘வயசானாலும் உங்க ஸ்டைல் மாறலை” என்கிற வசனம் மாதிரி நிரூப்பிற்கு இணையான வாக்குகளைப் பெற்று அசத்தினார் சுரேஷ். டேஞ்சர் லெவல் கேட்டகிரியிலும் எதிர்பார்த்த முடிவே வந்தது. தாடி பாலாஜிக்கு பெரும்பாலான வாக்குகள் வந்தன. “நான் இருக்கற இடத்தை கலகலப்பா வெச்சுப்பேன்” என்கிற நோக்கத்துடன் உள்ளே வந்த பாலாஜி, பெரும்பாலும் கலகலத்துப் போய் ஓரமாக அமர்ந்திருக்கிறார்.

பொதுவாக நகைச்சுவை உணர்வு உள்ளவர்களின் இன்னொரு பக்கம் துயரமாகவும் மனக்கொந்தளிப்புடனும் இருக்கும். ஆனால் மேடை என்று வந்து விட்டால் தன்னுடைய அத்தனை சொந்தக் கவலைகளையும் உதறி விட்டு தங்கள் திறமையைக் காட்டுவார்கள். ஏனெனில் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் சிரிப்பொலிதான் அவர்களுக்கான பெரும் மருந்து. ஆனால் பாலாஜியோ, பிக் பாஸ் என்னும் பிரம்மாண்டமான மேடை கிடைத்தாலும் கூட வெத்தாக இருக்கிறார். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. கூட இருக்கும் சிநேகனின் கவிதைகளைக் கேட்டு கேட்டு நொந்து போய் விட்டாரோ?! சதீஷின் சுமாரான மிமிக்ரி ஷோ

சதீஷ்
சதீஷ்

“ஏம்ப்பா. தம்பி.. நானும் உன்னை ரொம்ப நேரமா பார்த்துட்டுதான் இருக்கேன். வந்த நாள்ல இருந்து சும்மாவே இருக்கியே.. போரடிக்கலையா?” என்று பிக் பாஸிற்கு தோன்றியதோ.. என்னமோ.. “சரி.. உனக்குத் தெரிந்த விஷயத்தையாவது பண்ணு” என்று சக போட்டியாளர்களைப் போல மிமிக்ரி செய்யும் டாஸ்க்கை சதீஷிற்குத் தந்தார். இந்த நிகழ்ச்சியில் ‘தாடி’ பாலாஜியைப் போல சதீஷ் செய்தது அருமை. குரலும் மாடுலேஷனும் அச்சு அசலாகப் பொருந்தியது. பாலாவைப் போல் நடித்ததற்கு சபையில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை. புதிய சூழலில் பீதியடைந்து சதீஷ் இன்னமும் தயங்கித் தயங்கி நிற்காமல் இறங்கி அடித்தால் ஆட்டம் களைகட்டும். செய்வாரா?

பிக் பாஸ் டாஸ்க்
பிக் பாஸ் டாஸ்க்

‘மண்ணின் மைந்தன்’ என்கிற தலைப்பில் தலைவர் போட்டிக்கான இறுதிப் போட்டி நடந்தது. தலைப்பைக் கேட்டதும் ‘சீமான்’ வாய்ஸில் மிமிக்ரி செய்யச் சொல்வார்களோ என்று தோன்றியது. இல்லை. சதீஷ் மற்றும் நிரூப்பின் பெயர்கள் கொண்ட கண்ணாடிப் பெட்டிகள் இருக்கும். சிறிது தூரத்தில் மணல் கொட்டி வைக்கப்பட்டிருக்கும். இரு போட்டியாளரும், தங்களின் எதிர் போட்டியாளருடைய தொட்டியில் சென்று மண்ணைக் கொட்ட வேண்டும். இறுதியில் யாருடைய தொட்டியில் மண் அளவு குறைவாக இருக்கிறதோ, அவரே தலைவர். (அடுத்தவன் தலையில் மண்ணைப் போட்டால்தான் தலைவராக முடியும் என்பதே இதன் நீதி).

எல்கேஜி குழந்தைக்கும் பிஹெச்டி மாணவனுக்கும் இடையில் நடந்த போட்டி போல இது நடந்தது. ‘அய்யோ. நிரூப் ஸ்டார் பிளேயர் ஆச்சே..’ என்பது மாதிரி தயக்கத்துடன் விளையாடினார் சதீஷ். நிரூப் விளையாட்டுக்கு செய்ததை தானும் அப்படியே பின்பற்றினார். மற்றவர்கள் இது பற்றி எச்சரித்து கிண்டலடித்தாலும் சதீஷ் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இறுதியில் நிரூப் வின்னர். அடுத்த வாரத்திற்கான தலைவர்.

ஃபுல் என்ர்ஜியில் விளையாடும் நிரூப்

பாட்டரி டாஸ்க்கின் போது சுருதி சொன்ன ஒரு அப்சர்வேஷன் சிறப்பு. “போன சீசன்ல நிரூப் அப்பப்ப டவுன் ஆகி உக்காந்துடுவான். ஆனா இந்த சீசன்ல அவன் எனர்ஜி குறையவேயில்லை. டாஸ்க் நல்லாப் பண்றான்.. எப்பவும் ஜாலியா இருக்கான்.. தன்னைச் சுத்தி இருக்கிறவங்களையும் அதே மாதிரி வெச்சுக்க டிரை பண்றான்.. சண்டை வந்தாலும் அதை தலையில் ஏத்திக்கறதில்ல” என்று சான்றிதழ் தந்தார். இதே ரேஞ்சில் போனால் இந்த அல்டிமேட் சீசனின் வெற்றியாளராவதற்கு கூட நிரூப்பிற்கு கணிசமான வாய்ப்பு இருக்கிறது. எதையாவது செய்து சொதப்பாமல் இருந்தால் இது நடக்கக்கூடும்.

நிரூப்
நிரூப்

தலைவருக்கான டாஸ்க் முடிந்து வெளியில் வந்து அனிதாவும் நிரூப்பும் பேசிக் கொண்டிருந்தார்கள். “மத்தவங்க மண் எடுத்துட்டுப் போறதை தடுக்கலாம்-ன்னு ரூல்ஸ்ல இருந்தது. அதனாலதான் கீழே கூட பிளாஸ்டிக் கவர்லாம் போட்டிருந்தாங்க. அப்படிப் பண்ணியிருந்தா டாஸ்க் சுவாரஸ்யமா இருந்திருக்கும்” என்று அனிதா சொல்ல “கரெக்ட்தான். டாஸ்க் கலாட்டாவா இருந்திருக்கும்தான். ஆனா சதீஷ் கூட என்னத்த விளையாடறது..?! அவன் இப்பத்தான் வந்திருக்கான். இதுவே பாலாக்கும் எனக்கும் போட்டி இருந்திருந்தா நல்லா இருக்கும்” என்றார் நிரூப். உண்மையான ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் உள்ளவர்களின் குணாதிசயம் இது. தங்களுக்கு நிகரான போட்டியாளர்களுடன் மோதி ஜெயிப்பதில்தான் அவர்களுக்கு உள்ளார்ந்த திருப்தி கிடைக்கும். ஏறத்தாழ பாலாவும் இதே மாதிரியான பிளேயர்தான்.

‘இந்த வாரம் தான் வெளியேறி விடுவோமோ’ என்கிற பாவனையான பீதியுடன் பாலாவிடம் அனத்திக் கொண்டிருந்தார் தாமரை. “நான் வெளியே போனா நிரூப்பிற்கு காசைக் கொடுப்பேன்.. வெடிகுண்டை உனக்குத் தருவேன். அப்பதான் டாஸ்க் கொடுப்பாங்க. நீ நல்லா செய்வே” என்று தாமரை சொல்ல “எனக்கு எதுவும் வேணாம். அதெல்லாம் நீ போகாம என் ரசிகர்கள் பார்த்துப்பாங்க” என்று கெத்தாக சொன்னார் பாலா. மக்கள் கரன்ஸி செலவு செய்து பிக் பாஸ்ஸிடம் ஷாப்பிங் செய்திருந்த பொருட்கள் வந்திருந்தன. அதில் தான் ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஆர்டர் போட்டிருந்த ‘பானி பூரி’ மட்டும் வரவில்லையே என்று பிக் பாஸை இம்சை செய்து கொண்டிருந்தார் தாமரை. (கிராமத்தில் கூழ் என்கிற அருமையான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை ‘பானி பூரி’ என்கிற நவீன நாசகார உணவிற்கு அலைமோத வைத்திருப்பது காலத்தின் கோலம்).

பாலா - தாமரை
பாலா - தாமரை

“நான் என்ன சொல்லிட்டுப் போனேன்.. நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?” என்று இந்த வாரமாவது போட்டியாளர்களை சிம்பு அழுத்தமாக கேள்வி கேட்பார் என்று நம்புவோம். வைல்ட் கார்ட் என்ட்ரியான லோஸ்லியாவின் மூலமாகவாவது ஷோ சுவாரசியம் பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம். வேற வழி?