எப்படியிருந்தது சிம்புவின் இரண்டாவது வாரம்? வழக்கமாக வகுப்பிற்கு வரும் ‘ஸ்டிரிக்ட்’ வாத்தியார் அன்று விடுமுறை என்றால், ‘ஆக்டிங் டீச்சர்’ என்று ஒருவர் சம்பிரதாயத்திற்கு வருவார். அப்போதே மாணவர்கள் ரிலாக்ஸ் மோடிற்கு சென்று விடுவார்கள். வருபவர் வயதில் சிறியவராக, ஜாலியானவராக இருந்தால் போயிற்று. மாணவர்களின் உற்சாகம் எல்லை மீறி விடும். இதே மாதிரிதான் சிம்பு எபிசோட் இருந்தது. இந்த வகையில் கமல் இல்லாததின் குறையை உணர முடிந்தது. சிம்பு அவரது பாணியில் இயல்பாக நிகழ்ச்சியை நடத்துகிறார்; சொல்ல வேண்டியதை ஆங்காங்கே அழுத்தமாக சொல்லி விடுகிறார். ஆனால் சபையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவர் இன்னமும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எபிசோட் 36-ல் நடந்தது என்ன?
கடந்த வாரத்தை விடவும் இளமையான லுக்கில் சிம்பு நுழைந்ததும் அவரது ரசிகைகள் மகிழ்ச்சியில் கண் விரிய பூரித்துப் போனார்கள். “நான் என்ன சொல்லிட்டுப் போனேன்.. ஜாலியாக ஃபன்னா.. விளையாடுங்கன்னு. இவங்க.. என்ன பண்றாங்க .. ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. வாங்க.. என்னன்னு அவங்களையே கேட்போம்” என்றபடி வீட்டிற்குள் சென்றார் சிம்பு.
கடந்த வாரமே இதை பிக் பாஸ் செய்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வயதாகிக் கொண்டிருப்பதால் மறதி ஏற்பட்டிருக்கலாம். “STR… பிக் பாஸ் வீட்டிற்கு உங்களை வரவேற்கிறேன்” என்கிற அசரிரீ குரல் கேட்டதும், “போன வாரமே இதை எதிர்பார்த்தேன்” என்று சிம்பு சரியாக சுட்டிக் காட்ட “சில விஷயங்களை சரியான நேரத்துலதான் செய்யணும். இன்னிக்கு மாநாடு திரைப்படம் வெளியாகி நூறு நாள் ஆகிறது” என்று சமாளித்தார் பிக் பாஸ்.

“பாலா... நீங்க ஏன் காதலைத் தடுக்கலை?”
“நிகழ்ச்சியை ஜாலியா கொண்டு போங்கன்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டுப் போனேன்.. ஆனா நீங்க என்ன செஞ்சி வெச்சிருக்கீங்க? எந்த டாஸ்க்லயாவது இத்தனை நீளமான விதிமுறைகளை பிக் பாஸ் தந்து பார்ததிருக்கீங்களா? அவர் அத்தனை பெரிய கோடு போடும் போது நீங்க எவ்ள பெரிய ரோடு போட்டிருக்கணும்? ஆனா குண்டு சட்டில குதிரை ஓட்டினீங்களே?” என்பது மாதிரி ஆரம்பத்திலேயே தன் ஆட்சேபத்தை போட்டியாளர்களிடம் சிம்பு வெளிப்படுத்தியது சிறப்பு.
“உங்களுக்கு தரப்பட்ட கேரக்கட்டர்களை புரிஞ்சு டெவலப் பண்ணி நடிச்சீங்களா? என்று ஒவ்வொருவரிடமும் கேட்கத் துவங்கிய சிம்பு “உங்க கேரக்ட்டர் படி தங்கச்சியோட காதலைக் கண்டிச்சிருக்கணும். செஞ்சீங்களா?” என்று பாலாவை நோக்கி முதலில் கேட்க “முதல்ல கண்டிச்சேன். ஆனா அவ உறுதியா இருந்தா… எஸ்டிஆர் ரசிகரா இருந்துட்டு எப்படி காதலைத் தடுக்கறது?” என்று சிம்புவிற்கே பாலா அல்வா தர “ஹார்ட்டை டச் பண்ணிட்டானே!” என்பது போல் சிரித்து விட்டார் சிம்பு. இப்படி ஒவ்வொருவரும் தாங்கள் செய்த சொதப்பல்களை சிறப்பாக மழுப்பத் தொடங்கினார்கள்.
ரணகள பஞ்சாயத்தின் இடையிலும் சுருதியுடன் ரொமான்ஸ் செய்து ‘மைனர் குஞ்சுவாகவே’ வாழ்ந்த நிரூப்பின் அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டினார் சிம்பு. ஜூலிக்கிழவி விடுமுறையில் சென்று விட்டதால் அவருடைய பங்கையும் தான் எடுத்துக் கொண்டு புறணி பேசியதாக சுரேஷ் தாத்தா தெரிவிக்க, ‘அடிச்சக்கைன்னானாம்.. த்தூ..’ என்றதைத் தவிர தன்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்பதை ஜூலியே ஒப்புக் கொண்டார். “நீங்க செஞ்சதே அவ்வளவுதான். அதுலயும் அனிதா குறுக்கே வந்து பஞ்சாயத்து வெச்சாங்க” என்கிற சிம்புவின் ஜாலி கமெண்ட்டிற்கு சபை கலகலத்தது. அனிதாவும் சங்கடத்துடன் சிரித்தார். “சிநேகன் அண்ணே.. அந்த தங்கச்சி சீன்ல பின்னிட்டீங்க” என்று சிம்பு பாராட்ட, “தாமரை மேல ஒரு விஷயத்துல உண்மையாவே எனக்கு வருத்தம் இருந்தது. அவங்க கால்ல வந்து விழுந்ததும் எமோஷனல் ஆகிட்டேன்” என்று இன்னமும் அந்த ஃபீல் குறையாமல் உருக்கமாகச் சொன்னார் சிநேகன். ‘வைத்தியருக்கே வைத்தியம் பார்க்க வேண்டிய நிலைமை’

அடுத்து பலரையும் விசாரித்த சிம்பு, பாலாஜி பக்கம் வந்ததும், “இருங்க.. உங்க கிட்ட ஸ்பெஷலா பேச வேண்டியிருக்கு” என்று அவரைத் தாண்டிச் சென்று “என்னப்பா.. தம்பி.. இவங்க எல்லாம் ஆஃப் ஆகி இருந்தாங்கன்னுதான் உன்னை உள்ளே அனுப்பினோம். நீ ஆஃப் ஆயிட்டே. அவங்க ஆன் ஆயிட்டாங்க.. புது ஆளுங்களைப் பார்த்து தயங்கினே.. சரி.. டாஸ்க்ல கூட நீ வெளியே வரலையே?” என்று சதீஷின் மெத்தனத்தை சுட்டிக் காட்டிய சிம்பு, மீண்டும் பாலாஜிக்கே வந்து “கேரக்ட்டர் படி நீங்க நாட்டு வைத்தியர். ஆனா வைத்தியருக்கே வைத்தியம் பார்க்க வேண்டியபடி ஆயிடுச்சே? என்று நையாண்டியாக கேட்க, அனிதாவுடன் நிகழ்ந்த பஞ்சாயத்தை இழுத்து இழுத்து சொன்னார் பாலாஜி. இதைக் கேட்கும் நமக்கே எரிச்சலாகும் போது சிம்புவிற்கு ஆகாதா? எனவே சற்று கண்டிப்பான குரலில் ஆரம்பித்தார்.

“நீங்க எல்லோரும் இங்க ஏற்கெனவே விளையாடி அனுபவம் உள்ளவங்க. இந்த வீடு, இந்த கேம் அனுபவம், அதன் பிரஷர்.. எப்படி இருக்கும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். மக்கள் உங்களை பார்த்துட்டே இருக்காங்க. அவங்களுக்கு மரியாதை கொடுங்க.. அவங்க முட்டாள் இல்லை” என்றெல்லாம் சிம்பு இறங்கி அடித்து ஆட சபை சற்று மெளனம் ஆனது. “நான் ஒரு பாலம் மட்டும்தான். லைட்டாதான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அதிகம் சொல்ல முடியாது. நீங்கதான் அதைப் புரிஞ்சுக்கணும்” என்று கமல் அடிக்கடி சொல்வதையே தன்னுடைய பாணியில் சொன்னார் சிம்பு.
“பாலாஜி அண்ணா மாத்தி மாத்தி பேசினாரு” என்று அனிதா பிராது கொடுத்திருந்ததால் பாலாஜி அப்செட் ஆகியிருந்தாராம். சாப்பிடவும் இல்லையாம். அனிதா இதற்கான விளக்கத்தைத் தந்து ஜூலிக் கிழவிதான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்று சிம்புவிடம் விளக்க, “பரவாயில்லம்மா.. ஜூலி. உன் கேரக்ட்டரை அங்கங்கே நல்லாத்தான் பண்ணியிருக்க” என்று நையாண்டி குத்தலுடன் பாராட்டிய சிம்பு “இப்பவாவது ரெண்டு பேரும் பேசி ஒண்ணாயிடுங்களேன்” என்று வேண்டுகோள் வைக்க அனிதாவும் பாலாஜியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பிரதாயமாக சிரித்து அமர்ந்தார்கள்.

“தண்ணிய குடிச்சிட்டு பேசுங்க” என்று பாலா சிநேகனிடம் சொன்ன பிராது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து முடித்த சிம்பு “இதெல்லாம் ஒரு காரணமா? ஒரு விஷயம் பஞ்சாயத்திற்கு வருதுன்னா அதுக்கு அழுத்தமான காரணம் இருக்க வேண்டாமா?” என்று கேட்டது சரியான விஷயம். (உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் பஞ்சாயத்து கூட்டி கடுப்பேத்தினாங்க மை லார்ட்!) “நான் எங்க பேசிக்கணுமோ. அங்க பேசிக்கறேன்” என்று முன்பு கெத்து காட்டிய சிநேகன், இப்போது சபையில் அடக்கியே வாசித்தார். “என்ன தீர்ப்பு சொன்னேன்னு இப்ப நினைவுல இல்லை” என்று சுரேஷ் ஒரே போடாக போட்டார்.
அனிதாவை இமிடேட் செய்து காட்டிய சிம்பு
ஒரு பிரச்சினையை சொல்லும் போது அனிதா எப்படியெல்லாம் நீட்டி முழக்கிச் சொல்லி எதிராளியின் தலையை சுற்ற வைப்பார் என்பதை ஜாலியாக சிம்பு டெமோ செய்து காண்பிக்க சபையே வெடித்து சிரித்தது. சங்கடத்துடன் சிரித்த அனிதாவிடம் “நீங்க Saved” என்று சொல்லி அவரை கூல் செய்தார் சிம்பு. ‘தன்னுடைய இமேஜ் வெளியில் எப்படித் தெரியுமோ” என்று டிசைன் டிசைனாக தானும் குழம்பி, மற்றவர்களையும் டென்ஷன் ஆக்கிய அனிதாவின் முகத்தில் இப்போதுதான் சற்று நிம்மதி. “ரொம்ப டவுனா இருந்தேன். நிறைய நெகட்டிவ் விஷயங்களை என் மண்டைக்குள்ள போட்டாங்க. சுரேஷ் தாத்தா ஜாடை மாடையா பாட்டு பாடி எனக்கு மென்ட்டல் டார்ச்சர் தந்தார். என் மேல் நம்பிக்கை வெச்சு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று நிம்மதி பெருமூச்சு விட்ட அனிதா “வோட்டு போட்ட ஒவ்வொரு விரலுக்கும் ஆயிரம் முத்தங்கள்” என்று சொல்லி தன் ஆதரவாளர்களை குஷிப்படுத்தினார். “மக்கள் மேல நம்பிக்கை வெச்சு உங்க விளையாட்டை ஆடுங்க.. மத்த விஷயங்களை அவங்க பார்த்துப்பாங்க” என்று சிம்பு சொன்னது சரியானது.
அடுத்ததாக ‘வெள்ளைப் புடவை’ விவகாரத்திற்கு வந்த சிம்பு “நான் அதைப் பத்தி பேசக் கூட விரும்பலை.. ஆனா இந்த விஷயம் ரொம்ப தப்பு” என்று அழுத்தமாகச் சொல்லி விளக்கம் சொல்ல வந்த சுரேஷையும் தடுத்து விட்டார். “விளையாட்டை சுறுசுறுப்பாக்கறதுக்காக நீங்க பத்த வெக்கற விஷயம்லாம் ஓகே.. ஆனா அதை முதிர்ச்சியா ஹாண்டில் பண்ணுங்க.. சில விஷயங்கள் உங்களுக்கே உளைச்சல் தந்துடும்” என்று சுரேஷ் தாத்தாவின் ஓவர் ஆக்டிங்கை சிம்பு கட்டுப்படுத்த முயன்றது அருமை.

குறும்படத்திற்குப் பதிலாக ஒலிச்சித்திரம்
கடந்த வாரம் நிறைய குறும்படங்களைப் போட்டு சமாளித்த சிம்பு, இந்த வாரம் அதற்குப் பதிலாக ‘வாய்ஸ் நோட்’களை எடுத்து வந்திருந்தார். வட்டார வழக்கில் தீபாக்கா பேசிய ஒலித்துண்டுகள் ஒலிபரப்பப்பட்டன. “சேஃப் கேம் ஆடறாங்க” என்பது முதல் உரையாடலின் மையம். “இது யார், யாரைப் பற்றி பேசியது?” என்பதை போட்டியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதிலும் அனிதா ஒரு சந்தேகத்தைக் கேட்க “அனிதா. நீங்க வேற லெவல்” என்று கிண்டலடித்தார் சிம்பு. அடுத்ததாக “பொண்டாட்டியை அடக்க முடியலை” என்கிற மாதிரி வசனம் வர, குடும்பத் தலைவர்களாக நடித்த அனைவருமே ‘இது நானா இருக்குமோ” என்று தாங்களாகவே வந்து வாக்குமூலம் கொடுத்தார்கள். (ஆக.. மனைவியிடம் அடிபணிவது யூனிவர்சல் பிரச்சினை போலிருக்கு!). தாமரைக்கும் சுரேஷிற்கும் இடையில் நிகழ்ந்த ஜாலியான பழமொழி சண்டையின் இறுதியில் தாமரை காப்பாற்றப்பட்டதை தெரிவித்தார் சிம்பு.

சிம்பு பிரேக் விட்டு திரும்பிய போது, சுரேஷின் இடுப்பில் நிரூப் கிள்ளி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு ‘என்னதிது?’ என்கிற மாதிரி சிம்பு ஜெர்க் ஆக “தாத்தா போட்டிருக்கறது.. சுரிதார் மாதிரி இருக்குல்ல சார். அதான் அவர் கிள்ளி விளையாடறாரு” என்று சதீஷ் கலாய்க்க “அடப்பாவி” என்று சிரித்தார் சிம்பு. (இப்பதான் தம்பி.. வாயைத் திறந்து பேச ஆரம்பிச்சிருக்கு!). “மாநாடு நூறாவது நாள் ஸ்பெஷலா அந்தப் படத்துல இருந்து ஒரு பாட்டு பாடலாமா?” என்று வம்படியாக ஆஜரான ஜூலி, ஓரிரு வரிகளை அவர் இஷ்டத்திற்கு பாட “இது அந்தப் படத்துல வர பாட்டுதானே?” என்று சிம்பு கேட்டிருந்தால் ரகளையாக இருந்திருக்கும்.
“இந்த மாதிரி வார்த்தைகளை தவிர்க்கலாமே பிக் பாஸ்?”
அடுத்ததாக ஒரு வில்லங்கமான டாஸ்க். இதன் தலைப்பு ரசிக்கத்தக்கதாக இல்லை. “யாரு. யாருக்கு சொம்பு தூக்கறாங்க?” என்று சொல்ல வேண்டுமாம். சமூகத்தில் சில மலினமான சொற்கள் உருவாவதும், அதை நடைமுறையில் நிறைய பேசப்படுவதும் ஒரு வழக்கம்தான். ஆனால் அம்மாதிரியான சொற்களை மேடைகளில் பயன்படுத்தி அவற்றிற்கு அங்கீகாரம் தந்து விடக்கூடாது. பிக் பாஸ் டீமும் சரி, சிம்புவும் சரி இது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். கமல் இருந்திருந்தால், இந்த வார்த்தையை நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டார்.
மற்றவர்களை விடவும் நிரூப்பிற்கு இந்த வார்த்தை ஆட்சேபகரமாகத் தெரிந்தது நல்ல விஷயம். “இதுல வில்லங்கமான அர்த்தம் இருக்குமோ” என்று சந்தேகம் கேட்பது போல் தன் ஆட்சேபத்தை பதிவு செய்தார் நிரூப். “ச்சே.. அப்படில்லாம் இல்லை” என்ற சிம்பு “ஒருத்தரை tag பண்றது… Connectivity..” போன்ற ஆங்கிலச் சொற்களை சொல்லி மழுப்பி விட்டார். இந்த விளையாட்டில் சுரேஷையும் சதீஷையும் ஒதுக்கி விட்டார்கள். அவர்கள் வைல்ட் கார்டில் சமீபத்தில் வந்தவர்கள் என்பது காரணமாக இருக்கலாம். மேலும் சுரேஷிற்கு சொம்பு பத்தாது. ‘அண்டா’தான் தேவைப்படும்.

மற்றவர்கள் தயங்கிக் கொண்டிருக்க முதலில் பளிச் என்று எழுந்து வந்த அபிராமி, எதிர்பார்த்தபடியே அனிதாவிற்குத் தந்தார். அவர் நிரூப்பின் வலதுகரமாக இருக்கிறாராம். (நாமாவது அந்த வார்த்தையை தவிர்ப்போம்!). சுருதி, ஜூலியைத் தேர்ந்தெடுத்தது சரியான தேர்வு. அந்த அளவிற்கு அபிராமியும் ஜூலியும் ஒட்டித் திரிகிறார்கள். ஜூலிக்கு பாத்திரம் தரப்பட்டதும் “இனிமே அதுலயே துப்பிக்கலாம்” என்று சிம்பு டைமிங்கில் கிண்டலடிக்க, அதை உடனே டெமோ செய்து காட்டி கலீஜ் செய்தார் ஜூலி.
“பாசம் ஓகே.. ஆனா பாரபட்சம் கூடாது”
இதைப் போலவே சிநேகன் – பாலாஜி ஜோடிக்கு ஜூலி தந்தது சிறப்பு. “அபிராமியை பாட வேண்டாம்னு சொல்லுங்க சார்… பயந்து வருது” என்று நடுங்கினார் சதீஷ். “யார், யாருக்கு ஆதரவா இருக்காங்கன்னு சொல்லச் சொன்னா. இதை ப்ரெண்ட்ஷிப் பேண்ட் மாதிரி ஆக்கிட்டீங்க” என்று சிரித்தார் சிம்பு. “இந்தச் சொம்புகளை நாங்களே வெச்சுக்கறோம். திருப்பித் தர மாட்டோம்” என்று தாமரை சொன்னது, சுவாரசியமான மிடில் கிளாஸ் மனோபாவம். “ஓகே… உங்களுக்குள்ள பாசம்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பார்க்க நல்லா இருக்கு. ஆனா அது விளையாட்டுல biased-ஆ ஆகிடக்கூடாது. அதுக்காகத்தான் இந்த விளையாட்டு” என்று சிம்பு சுட்டிக் காட்டியது அவசியமான உபதேசம்.
பாத்ரூமில் கொள்ளைக் கட்டணம் வசூலித்த நிரூப்பை அடுத்ததாக விசாரணையில் நிறுத்தினார் சிம்பு. “சுச்சாவிற்கு சுங்க வரியா… கக்காவிற்கு கட்டணமா.. என்னப்பா. இது?” என்று அவர் ஆரம்பிக்க “ஐயா. அவங்கதான் ரேட்டை ஏத்தினாங்க.. நாங்களும் அதுக்கு ரியாக்ட் செய்ய வேண்டியதா போச்சு” என்று நிரூப் விளக்கத்தை ஆரம்பிக்க, பாலாவும் இந்த உரையாடலில் வந்து மோத இவர்களின் வணிகப் பேர கலாட்டா மறுபடியும் சபையில் அரங்கேறியது.

“நீங்க சம்பாதிச்ச மாதிரி தெரியல. கொள்ளையடிச்ச மாதிரிதான் தெரிஞ்சது” என்று ஒரே போடாக போட்ட சிம்பு, பணப்புழக்கம் பற்றியெல்லாம் பேசிய பொருளாதார மேதை அனிதாவை அழைக்க “ஹிஹி.. எனக்கு ஒண்ணும் தெரியாது” என்று இப்போது பின்வாங்கினார் அனிதா. “சாப்பாடு, கழிவறைல்லாம்.. மனுஷனுக்கு அவசியமான விஷயங்கள். இதில் நீங்க எல்லோரும் கொஞ்சம் மனிதாபிமானம் காட்டியிருக்கலாம்.. நிரூப் நீங்க இதில் கொஞ்சம் முதிர்ச்சி காட்டியிருக்கணும்” என்று சிம்பு கவலையுடன் சுட்டிக்காட்ட மன்னிப்பு கேட்டார் நிரூப். இதனாலேயே நிரூப் காப்பாற்றப்பட்ட விஷயம் சபையில் அறிவிக்கப்பட்டது. கட்டணக் கொள்ளையை எதிர்த்து பாத்ரூம் கதவை உடைக்கப் போன பாலாவின் செய்கையை ஆதரித்து புரட்சி செய்தார் சிம்பு.

சுருதியை டார்ச்சர் செய்த சிநேகன்
ஒரு பிரேக் விட்டு சிம்பு சென்றதும் சுருதியின் தலையை உருட்ட ஆரம்பித்தார் சிநேகன். ஏனெனில் அவரால் நிரூப்பையோ, அனிதாவையோ, பாலாவையோ எதிர்க்க முடியாது. எனவே ஊருக்கு இளைத்தவன், பிள்ளையார் கோவில் ஆண்டி என்கிற கணக்காக அவ்வப்போது சுருதியிடம் கோபத்தைக் காட்டுகிறார். “பாத்ரூம் விஷயத்தில் நாங்கள் நியாயமாக நடந்து கொள்ள முயன்றோம் என்பதை ஏன் சுருதி சபையில் சொல்லவில்லை?” என்பது சிநேகனின் கோபம். இதை இவரே சபையில் விளக்கியிருக்கலாமே? “என் மவனுக்காக பத்து சொம்பு கூட தூக்குவேன்” என்று வீரமுழக்கம் செய்தார் அனிதா. “சொம்பையெல்லாம் நாங்களே வெச்சுக்கலாமா?” என்று ஆசையுடன் கேட்ட தாமரைக்கு, இப்போதுதான் அதில் வில்லங்கமான அர்த்தம் இருக்குமோ என்கிற சந்தேகம் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார். டூ லேட் மேடம்.
சிம்பு என்ட்ரி. சிநேகனின் டார்ச்சர் தாங்காத சுருதி, சுச்சாவிற்கு அனுமதி கேட்கும் மாணவன் மாதிரி ஒருவிரலை உயர்த்தி பேசுவதற்காக அனுமதி கேட்க “ஏன் இத்தனை அவசரம்?” என்கிற மாதிரி வியப்புடன் பார்த்தார் சிம்பு. “நான் பாத்ரூமிற்காக ஒரு மணி வெயிட் பண்ணதில் சிநேகன் டீம் பக்கம் தப்பு இல்லை” என்பதை தவிப்புடன் சொல்லி முடித்தார் சுருதி. (இப்பவாவது கவிஞர் மனது சமாதானம் ஆகியிருக்குமா?!).
‘வந்தான்.. சாப்பிட்டான். ரிப்பீட்டு’
“வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு” என்கிற மாநாடு திரைப்படத்தில் வந்த பிரபலமான வசனத்தை வைத்து அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் சிம்பு. போர்டில் ‘வந்தான்.. ___________ ரிப்பீட்டு” என்கிற வாசகம் இருக்கும். ஒவ்வொரு போட்டியாளரும் எழுந்து வந்து குலுக்கல் முறையில் தனக்கு வரும் போட்டியாளரைப் பற்றிய அபிப்ராயத்தை அந்த இடைவெளியில் எழுத வேண்டும். ஆனால் பெரும்பாலோனோர் இதில் சேஃப் கேம் ஆடினார்கள். உண்மையான அபிப்ராயங்களைச் சொல்லியிருந்தால் இந்த ஆட்டம் சுவாரசியமாகியிருக்கும். பாலாஜியைப் பற்றி எழுதும் போது “காமெடி டிரை பண்றாரு” என்று நிரூப் எழுதியது சுவாரசியம். ஆட்டத்தின் இறுதியில் எஸ்.ஜே.சூர்யா வாய்ஸில் ‘ரிப்பீட்’ வசனத்தை சிம்பு பேசிக் காட்டியது அருமை. (சதீஷிற்குப் போட்டியாக அடுத்த வைல்ட் கார்டாக சிம்புவையே வீட்டிற்குள் இறக்கலாம்!). ஜூலி காப்பாற்றப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டதும் “அடி சக்கைன்னானாம்” என்று மகிழ்ச்சியில் துள்ளினார் ஜூலி.

ஆக எவிக்ஷன் வரிசையில் எஞ்சியருந்தவர்கள் “பாலாஜி, அபிராமி மற்றும் சிநேகன்”. எவிக்ஷன் கார்டோடு நுழைந்தார் மறுபடியும் நுழைந்தார் சிம்பு. “யாரு போவாருன்னு நெனக்கறீங்க?” என்று சிம்பு கேட்ட அடுத்த கணமே.. “ஐயா.. நான்தாங்க ஐயா.. அந்த குற்றவாளி” என்று முழுசரணாகதி அடைந்து விட்டார் பாலாஜி. “நான் போகணும்.. பாலாஜி இருக்கணும்” என்று கண்கலங்கினார் சிநேகன். தன்னுடைய எவிக்ஷன் பற்றி அபிராமி பேசத் துவங்கிய போதே கண்கலங்கி தன் பர்பாமன்ஸை ஆரம்பித்து விட்டார் ஜூலி. (இந்தத் திறமையை டாஸ்க்கில் காட்டியிருக்கலாமே?!).
“நான் போயிடுவேன்.. நான் போயிடுவேன்னு வெறுப்பேத்திக்கிட்டே இருக்கா” என்று அபிராமியை விட்டு பிரிய முடியாத பாசத்தை கோப உணர்ச்சியோடு ஜூலி வெளிப்படுத்த “அதுக்கு அவசியமில்லை” என்று சொல்வதின் மூலம் அபிராமி காப்பாற்றப்பட்டதை தெரிவித்தார் சிம்பு. உடன்பிறவா சகோதரிகள் இருவரும் ஆரத்தழுவிக் கொண்டார்கள். “இருடி.. உன் மூஞ்சில சுடுதண்ணி ஊத்தறேன்” என்று பாசக்கோபம் குறையாமல் ஜூலி சொல்ல “அய்யய்யோ. சுடுதண்ணியா.. அதுக்கு அவங்க எவிக்ட் ஆகி வெளியவே வந்திருக்கலாமே?” என்று ஜாலியாக கமெண்ட் அடித்தார் சிம்பு.
“எங்க அப்பாவை பார்த்துக்கங்க” – பாலாஜி உருக்கம்
“கடைசியா என்ன சொல்ல விரும்புறீங்க?” என்று தூக்குத்தண்டனை கைதியின் கடைசி விருப்பம் போல் சிம்பு கேட்க, சிநேகனும் பாலாஜியும் பரஸ்பரம் ஒருவருக்காக ஒருவர் உருகி பேசினார்கள். அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் ‘பாலாஜி’ எவிக்ட் ஆனதை காட்டினார் சிம்பு. அதை பாலாஜி முழுக்கவே எதிர்பார்த்திருந்தார். ரஜினி ஸ்டைலில் விறுவிறுவென மெயின் கதவை நோக்கி பாலாஜி நடந்தாலும் கதவு திறக்காததால் மீண்டும் சிநேகனிடம் கண்ணீர் மல்கி சிநேகத்தை வெளிப்படுத்தினார். “நிரூப்பு .. எங்க அப்பாவை இங்க விட்டுட்டுப் போறேன். பார்த்துக்க” என்றெல்லாம் அவர் கலங்கிய போது பரிதாபமாக இருந்தது. (இத்தனை எமோஷனல் ஆசாமி, ஏன் குடும்ப சிக்கலை இன்னமும் தீர்க்காமல் தவிக்கிறார்..?;!).
மேடையில் வந்த பாலாஜியிடம் “உங்களை மாதிரியே எனக்கும் தனிப்பட்ட சிக்கல்கள் இருந்தது. நான் இறைவனைப் பிடிச்சிக்கிட்டேன். நீங்களும் அந்த ரூட்ல வாங்க” என்று சிம்பு ஆறுதல் சொன்னதும், “நான் வீட்ல போயும் தனியாத்தான் இருக்கணும்” என்று அனுதாபம் தேடுவதைப் போல் சொன்னார் பாலாஜி. (எனில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளாவது சந்தோஷமாக இருந்திருக்கலாம் அல்லவா?!). பாலாஜியின் பயண வீடியோ முடிந்ததும், தொலைக்காட்சியின் வழியாக வீட்டிற்குள் பேசிய பாலாஜி “நல்லா பார்த்து விளையாடுங்க” என்று சொல்லி விட்டு “இதைச் சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதியிருக்குன்ற கேள்வி உங்க மைண்ட்ல ஓடும். எனக்குத் தெரியும்” என்று டைமிங்கில் சொன்னது அருமை. (இந்தப் பாலாஜியைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.. பாஸ்!).

“எனக்காக அழுத ஒரு சில நபர்களில் சிநேகனும் ஒருவர். அவரை நல்லா பார்த்துக்கங்க” என்று பால்வாடி பிள்ளையை விட்டுச் செல்வது மாதிரி சொன்ன பாலாஜி, கரன்ஸியை சிநேகனுக்கும் வெடிகுண்டை சதீஷிற்கும் தந்தது நல்ல தேர்வு. வெடிகுண்டு மூலம் தரப்படும் டாஸ்க்கிலாவது சதீஷின் திறமை வெளிப்படுகிறதா என்று பார்க்கலாம். பாலாஜி விடைபெற்றுக் கொண்டவுடன் “ஓகே.. டாஸ்க்கை ஜாலியா விளையாடுங்க.. நான் சொன்னதை மறந்துடாதீங்க.. விளையாட்டு, வெற்றியெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். அடிப்படையான மனிதாபிமானம் முக்கியம்” என்று சிம்பு சொன்ன மெசேஜ் அருமை.
‘வைல்ட் கார்டு வர்றாங்களாம்’
பாலாஜி தந்தது மட்டுமில்லாமல், போகிற போக்கில் சிம்புவும் ஒரு வெடிகுண்டை வீசி விட்டுச் சென்றார். “ஒரு வைல்ட் கார்டு வருவாங்க” என்கிற தகவலை அவர் சொல்லி விட்டுச் சென்றதும் “அது வனிதாக்காவா இருக்குமோ?” என்று அப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டார் அனிதா. “அதெப்படி முடியும்? அதெல்லாம் தப்பு” என்று கடுமையாக ஆட்சேபித்த பாலா “ஒரு வேளை மஹத்தா இருக்குமோ? அவரு சிம்புவோட பிரெண்டு” என்று தனது ஆராய்ச்சியை வெளிப்படுத்தினார்.
சிம்புவின் அறிவுரை, புதிய வரவு ஆகிய விஷயங்கள் அல்டிமேட் சீஸனில் மாற்றங்களை ஏற்படுத்துமா? அல்லது இதே மாதிரியே சீசனை தொடர்ந்து சொதப்புவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.