தரவரிசை டாஸ்க் நடந்தது. இதில் பாலா ஒன்றாம் எண்ணில் தேர்வானார். எவிக்ஷன் பிராசஸில் நான்கு பேர் அபாயக் கட்டத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே நேற்றைய எபிசோடில் நடந்தன.
எபிசோட் - 37-ல் நடந்தது என்ன?
சிம்பு படத்தின் பாடல்களாகத் தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருந்த பிக் பாஸ், இன்று திடீரென மனம் மாறி 12B படத்திலிருந்து ‘ஒரு புன்னகைப் பூவே’ என்கிற அட்டகாசமான பாடலை ஒலிக்க விட்டார். படுக்கையில் இருந்தபடியே ஜூலி தலையாட்டிக் கொண்டிருக்க, கார்டன் ஏரியாவில் நடனம் களைகட்டியது. நிரூப்பின் பக்கத்தில் நிற்கும் போதுதான் அனிதா எத்தனை குட்டியானவர் என்பது தெரிகிறது. பொம்மை போல இருக்கிறார். (இந்தப் பொம்மையில் இருந்தா அத்தனை சத்தம் வருகிறது?!).
தாறுமாறாக நடந்த ‘தரவரிசை டாஸ்க்’
போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாப் 10 டாஸ்க் தொடங்கியது. இந்த விஷயம் எப்படியும் மக்களின் வாக்குகள் மூலம்தான் முடிவாகும். (அப்படியாக நம்புவோமாக!) என்றாலும் விளையாட்டிற்குள் இந்தச் சவாலை பிக் பாஸ் நுழைப்பது ஒரு வழக்கமான சடங்கு. இதன் மூலம் போட்டியாளர்களின் தன்னம்பிக்கை எந்த லெவலில் இருக்கிறது என்பதை நாம் அறிய முடியும். அவர்களின் ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்டுகள் ஆவேசமாக அலசப்படும். மிக முக்கியமாக அவர்களுக்குள் ஆக்ரோஷமான மோதல்கள் நிகழும். இந்தக் கடைசி விஷயம்தான் பிக் பாஸிற்கு முக்கியம். (ப்ரமோவிற்கான ஃபுட்டேஜ் இதிலிருந்துதான் கிடைக்கும்).

இந்தச் சடங்கு தொடங்கியது. கடந்த சீசனில் பேருந்தில் துண்டு போட்டு இடம் பிடிப்பது மாதிரி நடந்த அழிச்சாட்டியமெல்லாம் இப்போது நடக்காதது பெரிய ஆறுதல். ஒவ்வொருவரும் தாங்கள் ஏன் இந்த நிலைக்கு தகுதியானவர் என்பதை முன்வைத்து, வாதங்களை எதிர்கொண்டு பின்பு தேர்வானது நல்ல விஷயம். இந்த ஜனநாயகத்தன்மை ஒவ்வொரு டாஸ்க்கிலும் வெளிப்பட வேண்டும்.
“எத்தனை பேரா இருந்தாலும் வாங்கடா’
இந்த டாப் டென் திருவிழாவில், வழக்கம் போல் பாலாவின் லாஜிக் திறமை நிறைய பளிச்சிட்டது. “எத்தனை பேரா இருந்தாலும் வாங்கடா! பதில் சொல்றேன்’ என்கிற தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டார். இதில் அவரின் அழிச்சாட்டியங்களும் வழக்கம் போல் கலந்திருந்தன. பாலாவைப் போல லாஜிக் பேசுவதில் திறமையாளரான நிரூப் ஏனோ இன்று அடக்கி வாசித்தார். இதில் ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்தது. ஒவ்வொரு நிலையிலும் தோற்றுப் போனாலும் சளைக்காமல் அடுத்த நிலைக்கான போட்டியில் நின்றதோடு மட்டுமல்லாமல், துணிச்சலாகவும் பேசி அசத்தினார் ஜூலி. வைல்ட் கார்ட் என்ட்ரி என்பதால் சுரேஷ் அடக்கி வாசித்தார். இல்லையென்றால் ரகளையாக தன்னை முன்னே நிறுத்திக் கொண்டிருப்பார்.

அறிவிப்பே இல்லாமல் திடீரென்று தொடங்கிய இந்த டாஸ்க்கில் முதல் இடத்திற்காக வந்து நின்றார் பாலா. “நிறைய முறை best perfomer வாங்கியிருக்கேன். டிரெண்டிங் பிளேயர் ஆகியிருக்கேன். டாஸ்க்லாம் சிறப்பா பண்ணியிருக்கேன். மூணு பிராதுல ஜெயிச்சுக் கொடுத்திருக்கேன். இந்த வீட்டில் கேப்டனா அதிக மார்க் வாங்கியது நான் மட்டும்தான்” என்று தன் தரப்பு காரணங்களை பாலா பெருமிதத்துடன் அடுக்க, “செல்லாது.. செல்லாது..” என்று அத்தனை காரணங்களையும் கீழே போட்டு அலட்சியமாக மிதித்தார் அனிதா.
“பெஸ்ட் ஃபர்பார்மரையெல்லாம் இங்க ஒரு காரணமா கொண்டு வர முடியாது. பிராது டாஸ்க்ல உன்னால மட்டும் நீ ஜெயிக்கல. சிம்பு ரசிகர் மன்றத் தலைவரா எந்த ஸ்டைலும் நீ பண்ணலை. அதனால டாஸ்க்கும் சரியா பண்ணலை..” என்று அனிதா அழிச்சாட்டியம் செய்ய சற்று டென்ஷன் ஆன பாலா, “உங்களுக்கு என்னதான் பிரச்சினை…. வாங்க உக்காந்து பேசுவோம்” என்று ஆரம்பித்து ஒவ்வொரு பாயிண்ட்டையும் உடைக்க ஆரம்பித்தார். பாலாவிற்கான கேப்டன்சிக்காக சதீஷ் பத்து மார்க் தந்தது வெறும் ஆர்வக் கோளாறு. எனவே இந்தப் பாயிண்டை அனிதா ஆட்சேபிப்பது நியாயம். ஆனால் இதர காரணங்களை மறுப்பது நியாயமல்ல. அவைதானே ஒருவரின் ஆட்ட வரிசையை நிர்ணயிக்கும்? அனைத்திற்கும் லாஜிக் பேசும் அனிதா, பாலாவின் மீதுள்ள எரிச்சலால் கண்மூடித்தனமாக இவற்றை ஆட்சேபிக்கிறார் என்பது வெளிப்படை.
முதல் இடத்திற்கு வந்து சேர்ந்த பாலா
இதுவரை அமைதியாகவே இருந்த சதீஷ், இப்போது வாயைத் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார். இது நல்ல விஷயம். “நான் பாலாவை சப்போர்ட் பண்றேன்.. முதல் இடத்திற்காக முதல்ல வந்து நின்றதற்காக இந்த ஆதரவு’ என்று இறங்கி அடித்தார் சதீஷ். முன்னணி பிளேயரை சப்போர்ட் செய்தால் தனக்கு பாதுகாப்பு என்று சதீஷ் யோசிக்கிறாரோ?! “நானும் முதல் இடத்திற்கு போட்டி போடறேன்” என்று களத்தில் இறங்கிய நிரூப்பிடம் ஏனோ அத்தனை தன்னம்பிக்கையும் துணிச்சலும் இல்லை. “நான் இங்க இருக்க ஆசைப்படறேன். எனக்கு யாரிடமும் பகையில்லை. என்னை எல்லோருக்கும் பிடிக்கும். மத்தபடி பாலா சொன்ன அதே காரணங்கள்தான் எனக்கும்” என்று நிரூப் சுமாராகப் பேச “சொந்தமா கூட பாயிண்ட் பேசத் தெரியல. என்னைப் பார்த்து காப்பியடிக்கறான்” என்று பங்கம் செய்தார் பாலா.

நான்கு பேர் பாலாவிற்கு ஆதரவு தெரிவிக்க, பாலாவை எதிர்த்து ஒரு பாயிண்ட் பேச ஆரம்பித்தார் சுருதி. “எமோஷனலா வீக்கா இருக்கறவங்களை டார்கெட் பண்ணக்கூடாதுன்னு உன் டீம்ல கூடவே வெச்சுக்கிட்டியா?” என்று குழப்பமாக சுருதி கேட்க “என்னை ஏன் உன் டீம்ல வெச்சுக்கலை.. அப்ப என்னை டார்கெட் பண்றியா?” என்று இன்னொரு பக்கம் அனிதா மடக்க எப்படியோ பதில் சொல்லி சமாளித்தார் பாலா. “போட்டில நிக்கற ரெண்டு பேருக்கும் கை தூக்கினா என்ன தப்பு?” என்று விதிமுறையில் குட்டையைக் குழப்ப ஆரம்பித்தார் சுரேஷ். “நிரூப்பை இலகுவா அணுக முடியும். பாலா எல்லாத்துலயும் தன்னை முன்நிறுத்திக்கற மாதிரி தோணுது” என்று சொல்லி நிரூப்பிற்கு ஆதரவு தந்தார் சிநேகன்.

இந்தச் சமயத்தில் ஆட்டத்தில் ஒரு டிவிஸ்ட். ‘உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க’ன்ற காமெடி மாதிரி “நானும் முதல் இடத்திற்கு போட்டியிடறேன்” என்று களத்தில் குதித்தார் ஜூலி. பேராசைதான் என்றாலும் ஜூலியின் இந்த கான்பிடன்ஸ் லெவல் பாராட்டத்தக்கது. இந்தச் சமயத்தில் பாலாவிற்கு தாமரை ஆதரவு தர, பாலா முன்னணி நிலைக்கு நகர்ந்தார். தனக்கே கவுன்ட்டர் தந்து தாமரை லாஜிக்கலாக பேசியதை மனமார பாராட்டிய சுரேஷ் “செம.. சூப்பரா பேசினே” என்று மகிழ்ந்தார். ஆக.. இதன் இறுதியில் பெரும்பான்மை வாக்கு பெற்று பாலா முதலாம் இடத்திற்கு தேர்வானார்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜூலி
எனவே இரண்டாம் இடத்திற்கு நிரூப் போட்டியிட வேண்டியிருந்தது. கடந்த முறை பாலாவிற்கு ஆதரவு தந்த சதீஷ், இம்முறை நிரூப்பிற்கு ஆதரவு தந்தார். (புத்திசாலி புள்ள!). தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜூலி, இரண்டாம் இடத்திற்கும் போட்டியிட முன் வந்தார். கடைசியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் நிரூப். “எனக்கு காரணம் எதுவும் இல்ல. ஆனா இந்த நிலைக்கு நீ தகுதியில்ல” என்று நிரூப்பின் தேர்வை அலட்சியமாகப் பேசி அழிச்சாட்டியம் செய்தார் பாலா. அனிதாவும் நிரூப்பும் இணைந்து தன் பெருமைகளை சிதைக்க முயன்றதால் அவர்கள் மீது இந்த டாஸ்க் முழுவதும் பாலா புகைந்துகொண்டே இருந்தார்.

இரண்டாம் இடம் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதால் மூன்றாம் இடத்திற்கான போட்டி ஆரம்பித்தது. இதிலும் வந்து நின்றார் ஜூலி. இதுவரை அமைதியாக இருந்த அனிதாவும் தாமரையும் கூட மூன்றாம் இடத்திற்கு வந்து போட்டியிட்டார்கள். “பேச்சுத்திறமையைத் தவிர மத்த விஷயங்கள்ல நான் அனிதாவை விட உயர்ந்த நிலைல இருக்கேன்” என்று அடித்து ஆடினார் தாமரை. பாலாவின் ஆதரவும் தாமரைக்கு கிடைத்தது. (நிரூப்பின் காதில் புகை!). “எனக்கு முதல் இடம் ஏதோ சும்மா கிடைச்ச மாதிரி பேசற?” என்று பாலாவிற்கும் நிரூப்பிற்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது. ஏனோ மந்திரித்து விட்ட கோழி மாதிரி அடங்கிப் போனார் நிரூப். தாமரைக்கான வாக்குகள் அதிகரித்ததால் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

இரண்டாம் இடத்திற்கு ஏற்கெனவே தேர்வாகியிருந்த நிரூப், திடீரென்று ஆட்டத்தில் ஒரு டிவிஸ்ட்டை வைத்தார். “தாமரைக்கு அப்புறம்தான் நான் வரணும். அதுதான் நியாயம்.. ஸோ.... நான் நாலாம் இடத்திற்கு போட்டியிடறேன்” என்று அநியாயம் செய்ய ஆரம்பிக்க ‘அண்ணன் எப்படா போவான்.. திண்ணை எப்ப காலியாவும்?’ என்கிற மோடில் இருக்கும் ஜூலி “அப்ப நான் ரெண்டாம் இடத்திற்கு போகவா?” என்று கேட்டு கலவரத்தைக் கூட்டினார். நான்காம் இடத்திற்கு போட்டியிட்ட சுருதி, விஜயகாந்த் திரைப்பட வசனம் மாதிரி புள்ளி விவரங்களை அடுக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்த சீசனில் அவர் மிக நீளமாக பேசிய வசனம் இதுவாகத்தான் இருக்கும். ஜூலிக்கு பாலா ஆதரவு தர, ஒருவழியாக நான்காம் இடத்தைப் பெற்றார் ஜூலி. (ஹப்பாடா!).
“போனா... பென்ஸ் கார்லதான் போவேன்”
அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிநேகன், ஐந்தாம் இடத்திற்கு போட்டியிட எழுந்து வந்தார். “போனா பென்ஸ் கார்ல போகணும்.. இல்லைன்னா நடந்து போயிடணும்” என்று ஒரு நகைச்சுவைக் காட்சியில் செந்தில் சொல்வார். இந்த பாலிசியை கடைப்பிடித்த சிநேகன் “எனக்கு அஞ்சாம் இடம் கொடுத்தா கொடுங்க.. இல்லைன்னா. நான் கடைசி இடத்துல போய் நின்னுக்குவேன்” என்று சொன்னது எமோஷனல் பிளாக் மெயில் போலவே தெரிந்தது.

இதே 5-ம் எண்ணுக்கு போட்டியிட வந்த அனிதா “நான் ஃபெஸ்ட் பர்பார்மர் பத்தியெல்லாம் சொல்லப் போறதில்லை” என்று பாலாவை மறைமுகமாக சீண்ட ஆரம்பிக்க “ஒருத்தரோட உழைப்பை குறை சொல்லாதீங்க” என்று பதிலுக்குச் சீறினார் பாலா. “அது என்னோட அபிப்ராயம். Best performer வாங்கினவங்க ஆட்டத்தை விட்டே வெளியே போயிருக்காங்க. எனவே அதை காரணமா சொல்ல முடியாது” என்று அனிதா மறுபடியும் சொல்ல பாலாவின் டென்ஷன் ஏறியது. “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்” என்று உணர்ச்சிகரமாக சிநேகன் சொன்னதாலோ, என்னமோ, அவருக்கான ஆதரவு அதிகம் இருந்தது. எனவே சிநேகனுக்கு அவரது விருப்பப்படியே ஐந்தாம் இடம் கிடைத்தது. ஆச்சா..

ஜூலியின் பேராசையும் நிரூப்பின் தியாகமும்
திடீரென புயல் மாதிரி எழுந்து வந்தார் அபிராமி. ஒருவேளை ஆறாம் இடத்திற்காக போட்டியிட வந்திருக்கிறாரோ என்று பார்த்தால் இல்லை. “நான் நாமினேஷன்ல அதிகம் வந்ததில்லை. மக்களை சந்திச்சிட்டு வரணும்னு அனிதா சொன்னாங்க. இதோ சந்திச்சு வந்துட்டேன்..” என்று கெத்தாகப் பேசிய அபிராமி ‘உங்க அங்கீகாரம்லாம் எனக்குத் தேவையில்லை’ என்று சொல்லாமல் சொல்வது போல “எனக்கு கடைசி இடம் போதும். நான் அங்க போயி நின்னுக்கறேன்” என்று முடிவு செய்து விட்டார். எனவே ஆறாம் இடத்திற்கான போட்டி ஆரம்பித்தது. இதில் அனிதாவும் சுருதியும் மோதினார்கள். தலையைச் சுற்ற வைக்கும் லாஜிக்கை அனிதா பேசுவதால் பலருக்கும் அவர் மீது காண்டாகியிருக்கலாம் போல. எனவே சுருதிக்கு ஆதரவு பெருகி அவருக்கு ஆறாம் இடம் கிடைத்தது.
பிக் பாஸ் எடிட்டிங் டீமிற்கே இந்தச் சண்டை போரடித்திருக்கும் போல. எனவே இதர பகுதிகளை தூக்கி விட்டு ‘குரூப் போட்டோ மாதிரி’ மக்கள் வரிசையாக நிற்கும் கடைசிப் பகுதிக்கு வந்தார்கள். முதல் இடத்தில் நின்று கொண்டிருந்த பாலா “இப்பவும் யாராவது மாத்திக்கறதா. இருந்தா மாத்திக்கலாம்” என்று மறுபடியும் பாயைப் பிறாண்ட ஆரம்பிக்க “யப்பா. டேய். காலைல ஆரம்பிச்சோம்.. லன்ச் டைமே வந்துடுச்சு.. போய் வேலையைப் பார்க்கலாம்” என்று பதறினார் கேப்டன் நிரூப். பாலா ஆசை காட்டி விட்டதால், நான்காம் இடத்திலும் திருப்தியுறாத ஜூலி, “எனக்கு மூணாம் நெம்பர் வேணும்” என்று ஆசைப்பட “எடுத்துக்கோம்மா. என்ன இப்ப?” என்று கர்ண மகாராஜா மாதிரி உடனே தூக்கிக் கொடுத்தார் நிரூப். ஆக.. ஒருவழியாக இந்த தரவரிசை டாஸ்க், கீழ்கண்டவாறு நிறைவிற்கு வந்தது.

(1) பாலா, (2) தாமரை (3) ஜூலி (4) நிரூப் (5) சிநேகன், (6) சுருதி (7) சதீஷ் (8) சுரேஷ் (9) அனிதா (10) அபிராமி. இதில் அனிதா ஒன்பதாம் இடத்தில் இருக்க சமீபத்தில் வந்த சதீஷ் ஏழாம் இடத்தில் இருப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.
இஞ்சி, பாகற்காய் ஜூஸ் உடன் நாமினேஷன்
தாறுமாறாக நடந்து முடிந்த இந்த தரவரிசை டாஸ்க்கின் சூடு ஆறுவதற்குள் அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். நாமினேஷன் வைபவம். ஒவ்வொருவரும் இரண்டு நபர்களை ‘காப்பாற்ற’ வேண்டுமாம். போட்டியாளர்கள் பிக் பாஸை ரொம்பவும் வெறுப்பேற்றி இருப்பார்கள் போலிருக்கிறது. எனவே சூதானமாக அவர்களை பழிவாங்க பிக் பாஸ் முடிவு செய்து விட்டார். நாமினேட் செய்ய எழுந்து செல்லும் ஒவ்வொருவரும் தங்களின் அதிர்ஷ்ட தேர்வின் படி பாகற்காய், இஞ்சி போன்றவற்றின் ஜூஸ்களை குடித்து விட்டுத்தான் நாமினேஷன் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

பார்வையாளர்கள் உணவு சாப்பிடும் நேரத்தில் பிக் பாஸ் ஷோ பார்ப்பது ஆபத்து என்பது மீண்டும் நிரூபணம் ஆனது. ஒவ்வொருவரும் தங்களுக்கு தரப்பட்ட ஜூஸ் கப்களை முகச்சுளிப்புடன் முகர்ந்து பார்ப்பது, நக்கிப் பார்ப்பது, பல்லைக் கடித்து குடித்து விட்டு குமட்டுவது, ‘உவ்வேக்’ என்று வாந்தி வருவதைச் சமாளிப்பது.. போன்ற காட்சிகளை க்ளோசப்பில் பார்க்கும் போது நமக்கும் வாந்தி வந்து விடும் போல் இருந்தது. (பிக் பாஸ்.. இப்படி பார்வையாளர்களுக்கும் தண்டனை தருவது நியாயமா?!). சுரேஷ் மட்டுமே “ஜூஸ் நல்லாயிருக்கு. எக்ஸ்ட்ரா கிடைக்குமா?” என்று கேட்டு அநியாயக் குறும்பு செய்தார்.
ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் காப்பாற்ற விரும்பும் இரண்டு நபர்களை குறிப்பிட்ட பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சிநேகன், சுருதி, பாலா மற்றும் ஜூலி ஆகிய நான்கு நபர்கள் எவிக்ஷன் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். சிநேகன் அல்லது சுருதிக்கு அதிக கண்டம் இருப்பது போல் தோன்றுகிறது. பார்ப்போம்.