இப்போதெல்லாம் மக்களின் மீது கருணை கொண்டு மெயின் எபிசோடை சுருக்கமாக முடித்துக் கொள்கிறார் பிக் பாஸ். சிறப்பும் மகிழ்ச்சியும்.
எபிசோட் 38-ல் நடந்தது என்ன? வீட்டில் உள்ள பத்து நபர்களும் ஐந்து ஜோடிகளாக பிரிக்கப்பட்டார்கள். நிரூப் + சுருதி, தாமரை + சுரேஷ், ஜூலி + சதீஷ், சிநேகன் + அனிதா, பாலா + அபிராமி என்பதாக இந்த ஜோடிகளின் வரிசை அமைந்தது. இவர்களுக்கு காலையிலேயே ஒரு டாஸ்க் தந்தார் பிக் பாஸ். ஒவ்வொருவரும் தங்களின் ஜோடியைப் பற்றிய நல்ல குணாதிசயங்களைச் சொல்ல வேண்டுமாம். அப்பாடா! இப்போதாவது பாசிட்டிவ்வான நோக்கில் ஒரு விளையாட்டைத் தந்த பிக் பாஸை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
“நல்ல விஷயங்களைப் பேச வெச்சதுக்கு நன்றி”
சுருதிக்கு பொறுமை, புரிதல், முதிர்ச்சி போன்ற நல்ல விஷயங்கள் இருப்பதாக நிரூப் சொல்ல, ‘நல்ல நண்பன்’ என்று நிரூப்பிற்கு புகழாரம் சூட்டினார் சுருதி. “எனக்கு ரொம்ப நல்லா ஆதரவு தராரு” என்று சுரேஷின் நற்குணம் பற்றி தாமரை சொல்ல, “பாசம், வீட்டுப்பணி போன்றவற்றில் தாமரையை அடிச்சுக்கவே முடியாது” என்றார் சுரேஷ். “யதார்த்தமான நபர்” என்று சதீஷைப் பற்றி ஜூலி சொல்ல “இந்தம்மா ஜெயிக்கறதுல வெறித்தனமா இருக்காங்க” என்றார் சதீஷ். (இதெல்லாம் எங்க கண்ணுக்கு தெரியமாட்டேங்குதே?!). “அனிதாவின் தமிழ் உச்சரிப்பு பிடிக்கும்” என்று சிநேகன் உருக “எல்லாத்தையும் சரியா அனலைஸ் பண்ணுவாரு” என்று சிநேகனைப் பாராட்டினார் அனிதா. (அதை நீங்க சொல்றீங்களா மேடம்?!).
“பாலா பலாப்பழம் மாதிரி. வெளியே பார்க்கத்தான் கரடுமுரடா இருப்பான்.. உள்ளே அத்தனையும் த்த்த்தேன்…” என்று சந்தானம் பாணியில் நாக்கைச் சுழற்றிக் கொண்டே பாலாவைப் புகழ்ந்தார் அபிராமி. “இந்தப் பொண்ணு ஏன் வந்தோம், எதுக்கு வந்தோம்ன்னு கவலைப்படாம இங்க உலாத்துது.. வேற ஒண்ணும் சொல்றதுக்கு பெரிசா இல்ல” என்று பதிலுக்கு பாலா கலாய்த்துவிட, அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு கோபமாக அகன்றார் அபிராமி. “அவங்க நடிக்காம இயல்பா இருக்கறதைத்தான் அப்படிச் சொன்னேன்” என்று பிறகு சமாளித்தார் பாலா.

“சதீஷ் ஏன் சரியா விளையாடலை?”
சுரேஷூம் சதீஷூம் நீண்ட நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்கள். கதை வசனம் புரியவில்லை. ஒரு மாதிரி ‘குன்சாக’ புரிந்துகொண்டது என்னவென்றால், சதீஷ் மெத்தனமாக விளையாடுவது குறித்து சுரேஷிற்கு வருத்தம் இருக்கிறது. அதே சமயத்தில் ‘நல்ல பையன்’ என்கிற பாசமும் இருக்கிறது. எனவே இது குறித்து சதீஷிற்கு சுரேஷ் ஆலோசனை சொல்ல “அண்ணே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி ஐடியா இருக்கும்.. இங்க எப்ப சீரியஸா இருக்காங்க. எப்ப காமெடியா மார்றாங்கன்னே தெரியல” என்று சதீஷ் மென்மையாக விவாதிக்க பிறகு இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அருகில் வந்தார் தாமரை. “பரவாயில்ல.. உக்காரும்மா” என்று தாமரையை அனுமதித்தார் சுரேஷ். சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்த தாமரை, பிறகு “நீங்க பேசுங்க.. நான் அப்படிப் போறேன்” என்று அங்கிருந்து அகன்றுவிட்டார். இதே பழைய தாமரையாக இருந்திருந்தால் அந்த உரையாடலில் தானும் மூக்கை நுழைத்து எதையாவது பேசி எரிச்சலாக்கியிருப்பார். இப்போதோ நாகரிகமாக விலகிச் சென்றுவிட்டார். தாமரையிடம் நிகழ்ந்திருக்கும் இந்த மாற்றம் பாராட்டத்தக்கது. பிக் பாஸ் வீடு கற்றுத்தந்த பாடமாக இது இருக்கலாம்.
“யாரு மனசுல யாரு?” தங்க நாணயம் பரிசு
அடுத்ததாக ஒரு விளையாட்டை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஒவ்வொரு ஜோடியும் தங்களின் சக நபரைப் பற்றி எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார் என்பதை பரிசோதிக்கும் ஆட்டம் இது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு தங்க நாணயம் பரிசாகத் தரப்படும். (நெஜ தங்கம் இல்ல.. சும்மா!) ஒரு சிறப்புக் கேள்விக்கு சரியாக பதில் சொல்லிவிட்டால் மூன்று தங்க நாணயங்கள் வழங்கப்படுமாம்.
ஒவ்வொரு ஜோடியும் கார்டன் ஏரியாவில் இருந்த சோபாவில் தனித்தனி அணியாக அமர வைக்கப்பட்டு ஏதோ ‘இண்டர்வியூ’விற்கு காத்திருந்தது போல் தங்களுக்கு பேசிக் கொண்டு இருந்தார்கள். வங்கிகளின் கேஷ் கவுன்ட்டர்களில் காணப்படும் டோக்கன் போர்டு, அந்த ‘டிங் டொய்ங்க்’ சத்தம் உள்ளே ATM மெஷின் மாதிரியான செட்டப்.. என்று ஏற்பாடுகள் கனஜோராக இருந்தன. (இவ்ளோ செலவழிக்கறீங்களே.. கட்டுப்படியாகுதா பிக் பாஸ்?)

ஒவ்வொரு ஜோடியும் ஆக்டிவிட்டி ஏரியாவிற்குள் அழைக்கப்பட்டதும், தடுப்பால் பிரிக்கப்பட்ட நாற்காலிகளில் இருவரும் தனித்தனியாக அமர வைக்கப்படுவார்கள். ஒருவர் காதில் ஹெட்போனில் பாட்டு ஓடிக் கொண்டிருக்கும். அதே சமயத்தில் இன்னொரு நபர் ஹெட்போனில் வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். முதலில் டோக்கன் நெம்பர் ஒன்று அழைக்கப்பட்டு சுரேஷ் – தாமரை ஜோடி உள்ளே நுழைந்தார்கள்.
தனது ஜோடியின் முழுமையான பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், பிடித்த உணவு, பாடல், குடும்ப உறுப்பினரின் பெயர் போன்ற கேள்விகளே பெரும்பாலும் அமைந்திருந்தன. ஐந்து சாதாரண கேள்விகளும் ஒரு சிறப்புக் கேள்வியும் இருந்தது. ‘தாமரையின் மாமியார் பெயர் என்ன?’ என்கிற சிறப்புக் கேள்வி உள்ளிட்டு தாமரை தொடர்பான பல கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொன்னார் சுரேஷ். ஆனால் சுரேஷ் தொடர்பானவற்றிற்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் தாமரை நிறைய தடுமாறினார். இறுதியில் இந்த அணிக்கு 11 தங்க நாணயங்கள் ATM இயந்திரம் வழியாக வழங்கப்பட்டன. தாமரை இவற்றை பெருமையாக சுமந்து வெளியே வர “எவ்ளோ பெரிய மாத்திரை?!” என்று கண் விரித்தார் அபிராமி.

சிநேகனின் புனைப்பெயர் ‘கவிஞர்’ – அனிதாவின் அழிச்சாட்டியம்
டோக்கன் எண்.2-ல் சிநேகன் – அனிதா ஜோடி அழைக்கப்பட்டார்கள். அனிதாவை அவரது கணவர் அழைக்கும் செல்லப் பெயர் என்ன? என்பது உள்ளிட்டு பல கேள்விகளுக்கு சிநேகன் சரியாக பதில் சொல்லி அசத்தினார். (கன்னுக்குட்டி என்பது நமக்கே தெரியும்!) சிறப்புக் கேள்விக்கு மட்டுமே (அனிதாவின் தம்பி பெயர் என்ன?) சிநேகனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் சிநேகன் குறித்த பெரும்பாலான கேள்விகளுக்கு தடுமாறியது மட்டுமல்லாமல் சொதப்பித் தீர்த்தார் அனிதா. சிநேகனின் புனைப்பெயர் என்பதற்கு ‘கவிஞர்’ என்று அனிதா சொன்னதெல்லாம் அநியாயம். இதைப் போலவே சிநேகனுடைய மனைவியின் முழுப்பெயரும் அனிதாவிற்குத் தெரியவில்லை. இறுதியில் இந்த ஜோடியால் 9 தங்க நாணயங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
கார்டன் ஏரியாவில் பாலாவும் அபிராமியும் சுவாரசியமாக புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். தன்னை அனிதாவும் நிரூப்பும் இணைந்து ரவுண்டு கட்டுவதாக ஆதங்கப்பட்ட பாலா, ஒவ்வொருவருமே இங்கு பரஸ்பர ஆதாய நோக்கத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பதாக புலம்பினார். இதற்கு ஒத்து ஊதிய அபிராமி, இதனாலேயே தன் ஆருயிர்த் தோழி ஜூலியிடமிருந்து டாஸ்க் நேரத்தில் விலகியிருப்பதாக சொல்லி வேதனைப்பட்டார்.

டோக்கன் எண்.3 அழைக்கப்பட்டதும் பாலா – அபிராமி ஆகிய இருவரும் உள்ளே சென்றார்கள். அபிராமி தொடர்பான கேள்விகளுக்கு படு ஷார்ப்பாக பதில் சொன்னார் பாலா. அபிராமியின் நாய் பெயர் கூட அவருக்குத் தெரிந்திருந்தது. அந்த அளவிற்கு பக்காவாக ஹோம்ஒர்க் செய்திருந்தார். அபிராமியும் பாலாவிற்கு ஈடு கொடுத்து பதில் சொல்லியிருந்தாலும் சிலவற்றில் மட்டும் தடுமாறினார். “பாலா இன்னமும் வெளிக்காட்டாத திறமை எது?” என்கிற கேள்விக்கு ‘கவிதை எழுதுவது” என்று அபிராமி சொன்னதும் நமக்கே ஷாக்காக இருந்தது. (சிநேகனுக்கு இதிலும் போட்டியிருக்கிறதா?!) இந்த ஜோடிதான் அதிகபட்சமாக 15 தங்க நாணயங்களைப் பெற்று சாதனை படைத்தது.
பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் டிஜிட்டல் எரர்
அடுத்ததாக நிரூப்பும் சுருதியும் உள்ளே சென்றார்கள். அனிதாவை விட்டு விட்டு சுருதியுடன் ஏன் நிரூப் ஜோடி சேர்ந்தார் என்று தெரியவில்லை. (கிராமத்து டாஸ்க் ஜோடிகள் ஏறத்தாழ இதிலும் தொடர்கிறார்கள் போல). பாலா – அபிராமி ஜோடி கைநிறைய தங்க நாணயங்களைக் கொண்டு வரும் போது நிரூப்பின் காதில் புகையைக் காண முடிந்தது. எனவே பாலாவை முந்த வேண்டும் என்கிற வெறி நிரூப்பிடம் காணப்பட்டது. ஆனால் நிரூப் - சுருதி ஜோடியால் 12 தங்க நாணயங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. முதலில் 11 நாணயங்களை மட்டுமே வழங்கிய பிக் பாஸ் டீம், பிறகு ‘டெக்னிக்கல் ஃபால்ட்’ என்று சொல்லி கூடுதலாக ஒரு நாணயத்தை வழங்கினார்கள். (பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் டிஜிட்டல் இந்தியா பிரச்சினையா?!).

சதீஷ் மெத்தனமாக இருப்பது குறித்து சிநேகனிடம் அலுத்துக் கொண்டார் சுரேஷ். “இந்த ஷோவோட வேல்யூ தெரியாம இருக்காங்க” என்று சுரேஷின் அனத்தலில் இணைந்து கொண்டார் சிநேகன்.
அடுத்ததாக ‘அறிவுக்கொழுந்து’ என்கிற தலைப்பில் புதிய டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். பொதுஅறிவு, சினிமா, அரசியல் என்று ஏதாவது ஒரு தலைப்பில் ஒரு அணி பொதுவில் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு சரியாக பதில் சொல்லும் அணிக்கு ஒரு தங்க நாணயத்தை பரிசாக அளிக்க வேண்டும். தவறான பதில் சொன்னால் அந்த அணி, கேள்வி கேட்ட அணிக்கு ஒரு நாணயத்தை அளிக்க வேண்டும். கேட்கப்பட்ட கேள்வியோ அல்லது அதற்கான பதிலோ தப்பு என்றால் பிக் பாஸிற்கு இரண்டு நாணயங்களை அபராதமாக அளிக்க வேண்டுமாம். (கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்டி!).

‘கிளியோபாட்ராவோட அப்பா பெயர் தெரியுமா?’
போட்டி ஆரம்பித்தது. முதல் கேள்வியையே ரகளையாக வைத்தார் சுரேஷ். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? என்பதுதான் கேள்வி. ‘ராஜாஜி’ என்கிற பெயர்தான் பலரின் மனதில் ஓடியிருக்கும். அதுதான் பதில் என்றே சுரேஷூம் உள்ளூற நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் பொதுஅறிவிலும் தான் ஒரு கில்லி என்பதை நிரூபித்தார் பாலா. ‘லார்ட் மவுண்ட்பேட்டன்’ என்று பாலா பதில் சொல்லிய போது ‘அது தப்பு” என்று சாதித்தார் சுரேஷ். இந்தப் பஞ்சாயத்து பிக் பாஸிடம் செல்ல, பாலா சொல்லிய பதில் சரியானது என்று தீர்ப்பு வந்தது. ஆக சரியான பதில் சொன்ன பாலாவிற்கு ஒரு நாணயமும் தவறான பதிலைச் சொன்ன காரணத்திற்காக இரண்டு நாணயங்களை அபராதமாகவும் சுரேஷ் செலுத்த வேண்டியிருந்தது.

‘கிளியோபாட்ராவின் தந்தை பெயர் என்ன?’ என்கிற விநோதமான கேள்வியை தூக்கிப்போட்டார் பாலா. “சூப்பரான கேள்வி’ என்று அவரின் ஜோடியான அபிராமி இதற்கு மகிழ்ந்தார். “ம். சிக்கலான கேள்விதான்” என்று சுரேஷே பாலாவின் திறமையை ஒப்புக் கொண்டார். யாருக்குமே இதற்கு பதில் தெரியவில்லை. (எப்படி தெரியும்? நமக்கே தெரியாது!). ‘இரண்டாம் தாலமி’ என்று பெருமிதமாக பதில் முடிச்சை அவிழ்த்த பாலா, “எடுங்க பணத்தை” என்று பெருமையாக கேட்க, பிக் பாஸின் குரல் உள்ளே நுழைந்து பாலாவின் மகிழ்ச்சியை கெடுத்தது. அது ‘இரண்டாம் தாலமி’ இல்லையாம். ‘பன்னிரெண்டாம் தாலமி’யாம். “அய்யோ.. பன்னிரெண்டுக்கு பதிலா ரெண்டுன்னு சொல்லிட்டனே?” என்று புலம்பினார் பாலா. (அப்பா பெயர்ல குழப்பம் வரலாமா? கிளியோபாட்ரா இதைக் கேள்விப்பட்டா எவ்வளவு வருத்தப்படுவாங்க?!).
கடைசியாக சேர்க்கப்பட்ட ஆங்கில எழுத்து எது?
வந்தார் ஜூலி. அவர் கேட்ட கேள்வியும் சிக்கலானதுதான். ‘சூப்பர்மா’ என்று பாராட்டினார் சுரேஷ். ‘ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் (Alphabet) கடைசியாக சேர்க்கப்பட்ட எழுத்து எது?’ – இதுதான் ஜூலி கேட்ட கேள்வி. பலரும் Z என்றே நினைத்திருப்பார்கள். ஆனால் ஜூலியின் பெயரிலேயே பதில் இருந்தது. ஆம், ‘J’ என்பதுதான் சரியான பதில். யாருமே சரியான விடையைச் சொல்லவில்லை.
அடுத்ததாக மேடைக்கு வந்த அனிதா “சிநேகன் எழுதிய இரண்டு பாடல்களுக்கு மாநில விருது கிடைத்தது. ஒன்று, ‘பாண்டவர் பூமி’ படத்தில் வரும் ‘தோழா.. தோழா’ பாடல். இன்னொரு பாடல் என்ன? இதுதான் அனிதா கேட்ட கேள்வி. “ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா.. அப்பா.. இந்தப் பாட்டுதானே?” என்று கேட்டார் பாலா. சரியான ரெஸ்பான்ஸ் வரவில்லை என்றதும் சட்டென்று மாற்றிக் கொண்டு ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம்..” பாட்டுதானே? என்றார். இதுவும் தவறான பதில். ‘பேரழகன்’ படத்தில் ‘ஒரே ஒரு பிறவி’ பாடல்தான் சரியான விடையாம். சிநேகனே கடைசியில் இதைச் சொல்ல வேண்டியிருந்தது.
“எந்த நாட்டின் தேசியக்கொடியில் சிவப்பு, நீலம், வெள்ளை நிறங்கள் இருக்காது?” என்று பத்து மார்க் கேள்வியைக் கேட்டு அசத்தினார் பாலா. “வெஸ்ட் இண்டீஸ்” என்று ஜூலி பெருமையாக சொன்ன பதில் தப்பு. அது ‘ஜமைக்கா’ நாட்டின் கொடியாம். கடைசியாக வந்த சதீஷ் “தர்பார் திரைப்படம் வெளியான தேதி எது?” என்று அதிமுக்கியமான கேள்வியைக் கேட்க “அய்யோ. நான் கூட அந்தப் படத்துல நடிச்சிருக்கேன். எனக்கே தெரியலையே” என்று சபையில் தன் பெருமையை பதிவு செய்து கொண்டார் அனிதா. (நியூஸ் ரீடரா ஒரு சீன்ல வர்ரது நடிப்பாம்மா?!). ஆனால் இறுதியில் சதீஷ் சொன்னதே தவறான பதில். பிக் பாஸ் இதைச் சுட்டிக் காட்டினார்.
பரவாயில்லை. உலக அழகி கிளியோபாட்ராவின் தந்தை யார் என்பதற்கு நமக்கு விடை தெரிந்தது. இதுதான் நேற்றைய எபிசோடை பார்த்ததற்கு மிச்சம்.