ரம்யா பாண்டியன் உள்ளே வந்த நேரமோ, என்னமோ... நேற்றைய எபிசோடின் விளையாட்டுக்களில் சுவாரசியம் தென்படத் துவங்கியிருக்கிறது. சிம்பு குறிப்பிட்ட ‘Fun’, ‘ஜாலி’ போன்றவற்றின் தடயங்கள் காணப்பட்டன. இது தொடர்ந்தால் நல்லது.
எபிசோட் 40-ல் நடந்தது என்ன?
நள்ளிரவில்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. பிக் பாஸ் வீட்டிற்கும் இந்த விஷயத்தைப் பொருத்திப் பார்க்கலாம்போல. ஆம், நள்ளிரவு நேரத்தில்தான் வைல்ட் கார்ட் ஆக ரம்யா பாண்டியனின் என்ட்ரி நிகழ்ந்தது. அதுவரை இருள் அடைந்திருந்த பிக் பாஸ் வீட்டில் சிரிப்பின் பிரகாசம் ஒளிரத் தொடங்கியது. (கொஞ்சம் ஓவராத்தான் போறமோ... போய்த்தான் பார்ப்போமே...). இதற்கான இசை கேட்டதும் மற்றவர்கள் பரபரப்பாகி “யார் வரப் போகிறாரோ?” என்று மெயின் கேட்டின் முன்பு நின்று அலைமோத ஆரம்பிக்க சதீஷ் மட்டும் “எவன் வந்தா.. எனக்கென்ன?” என்கிற மாதிரி சோபாவில் சலனமின்றி அமர்ந்திருந்தார்.
பிரகாசமானது பிக் பாஸ் வீடு
தனது பிரத்யேக புன்னகையின் வெளிச்சம் முகம் முழுக்க ஒளிரும்படியாக அட்டகாசமான லுக்கில் உள்ளே வந்தார் ரம்யா. “இதை நீங்க எதிர்பார்க்கலைல்ல. நானும் எதிர்பார்க்கலை” என்று சிம்பு ப்ரமோவில் சொன்ன அதே பன்ச் வசனத்தை இவரும் காப்பிடியத்தார். “ஹைய்யா.. எனக்கு மொக்கை ஜோக் போட ஜோடி கிடைச்சிருச்சு” என்று அனிதா குஷியாக, “அப்ப என் கதி?” என்று சோகமானார் நிரூப். “போன சீசனை விட இந்த சீசன்ல வீடு ரொம்ப பிரைட்டா இருக்கு” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தார் ரம்யா. (அது நீங்க உள்ளே வந்ததால்தான் என்றா சொல்ல முடியும்?!).

ஒவ்வொருவரையாக நிரூப் அறிமுகப்படுத்த ‘அதான் தெரியுமே?” மோடில் பதில் சொன்ன ரம்யா, சுரேஷின் டர்ன் வந்தததும் “சுரேஷ்ன்னு பெயர் வெச்சிருக்கிறவங்க எல்லாம் ஒழுங்கா இருக்கமாட்டாங்க” என்று சர்காஸ்டிக்கான சிரிப்புடன் சொன்னார். (இதைக் கேட்ட சமயத்தில் தன்னிச்சையாக ஜெர்க் ஆகி மனம் சற்று வலித்ததென்னமோ உண்மை.) “கூடவே தாத்தா –ன்ற பட்டத்தையும் சேர்த்து என்னை சாஃப்ட் பண்ணிட்டாங்கம்மா” என்று இந்தக் கிண்டலை சமாளித்தார் சுரேஷ். நள்ளிரவைத் தாண்டியும் பிக் பாஸ் வீட்டில் உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. “இந்த வீட்டில் எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க” என்று ரம்யாவிடம் பாலா கிண்டலாக கூறிக் கொண்டிருந்தார். “நீங்க வந்துட்டீங்கள்ல. இனிமே ஷோ ஹிட் ஆயிடும்” என்பதும் பாலாவின் கிண்டல். இன்னொரு பக்கம் நிரூப்பிடம் பாலாவைப் பற்றி அனிதா அனத்திக் கொண்டிருந்தார். (அது நீளமான அனத்தல் என்பதை தனியாக குறிப்பிடத் தேவையில்லை). “இந்த FIR விஷயத்தை வெச்சு பாலா சீசன் முழுக்க இழுப்பான் போல. ‘நிரூப் மீது பொறாமை’-ன்ற விஷயத்தை எவ்ள நாள் பேசுவான்?. உன் மேல இருக்கிற தப்பையெல்லாம் சபைல பதிவு பண்ணிட்டு.. அவனே அதை நீர்த்துப் போக வெச்சுடுவான். அதுதான் பாலாவோட உத்தி” என்று அனிதா சொன்ன அனத்தலை பொறுமையாக கேட்ட நிரூப் “ரொம்ப யோசிச்சி மண்டையைக் குழப்பிக்காத. கடைசில மனிதனுக்கு தேவை நிம்மதி. அதுதான் முக்கியம்” என்று சொன்ன உபதேசம் அருமை.
கிச்சன் ஏரியாவில் ஒரு உப்புமா கலவரம்
விடிந்தது. அபிராமியின் பிறந்த நாள் என்பதால் ஸ்பெஷல் பாடலை ஒலிக்க விட்டார் பிக் பாஸ். அம்மணிக்கு மகிழ்ச்சி. “நேற்று வந்தது இரவு. ரம்மியமாக நுழைந்தது நிலவு” என்று ரம்யாவின் வரவைப் பற்றி ரொமாண்டிக்காக கவிதை பாடிக் கொண்டிருந்தார் சிநேகன். இந்த விஷயத்தை அப்படியே ஒரு கிழவியின் மாடுலேஷனில் அனிதா சொல்ல வேண்டுமாம். ரம்யா வந்த காரணத்தினால் அனிதா உண்மையிலேயே உற்சாகமாகியிருக்கிறார்போல. இதுவரை வெளிப்படாத சிரிப்பும், குதூகலமும் அவரது முகத்தில் தென்பட்டது. இட்லிக் கடை ஆயாவின் மாடுலேஷனில் அனிதா இழுவையாக சொன்னதில் ரம்யாவின் இமேஜ் சற்று டேமேஜ் ஆனாலும் ரம்யா இதை ரசித்துப் பாராட்டவே செய்தார்.

கிச்சன் ஏரியாவில் ஒரு மினி கலவரத்திற்கான ஆரம்பம் தெரிந்தது. முந்தைய நாள் செய்த பொங்கல் கணிசமாக மீந்திருந்ததுபோல. ஆனால் அதை அப்படியே வைத்து விட்டு காலையில் செய்த உப்புமாவை மக்கள் தின்று தீர்த்துவிட்டார்கள். சாப்பிடுவதற்காக வந்த அனிதா, ஃப்ரெஷ் ஆன உணவு தீர்ந்துபோய், நேற்றைய உணவு அப்படியே இருந்ததைப்பார்த்து டென்ஷன் ஆகிவிட்டார். “நான் நேத்திக்கு காலைலயும் நைட்டும் பொங்கல்தான் சாப்பிட்டேன். இன்னிக்கும் அதேவா..? உப்புமா கூடுதலா பண்ணியிருக்கலாம்ல.. பிளான் பண்ணி செய்ங்க” என்று தாமரையிடம் அனிதா சலித்துக்கொள்ள ஒரு கசப்பிற்கான விதை முளைத்தது. அனிதாவின் முணுமுணுப்பில் நியாயம் உண்டு. ஆனால் அதை தாமரையிடம் சற்று தன்மையாகச் சொல்லியிருக்கலாம். பசி ஏற்படுத்திய எரிச்சலோ, என்னவோ?! “ஏன் பொங்கல் சாப்பிடலை” என்பதை வெவ்வேறு விதமாக கேப்டன் நிரூப் கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு டிசைன் டிசைனாக பதில் சொல்லி சமாளித்தார் அனிதா. தாமரைக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை சுருதி சமாதானப்படுத்தினார்.

இந்த விஷயம் நம்முடைய வீடுகளில் கூட பெரும்பாலும் நிகழும். முந்தைய நாள் தயாரித்த உணவு மிகுந்திருந்தால், வீட்டிலுள்ளவர்கள் – குறிப்பாக ஆண்கள், குழந்தைகள் – அதைச் சாப்பிட விரும்பாமல் முகஞ்சுளிப்பார்கள். எனவே அவர்களுக்கு புதிதான உணவைச் சமைத்துத் தந்து விட்டு ‘வீணாகக்கூடாதே’ என்கிற எண்ணத்தில் மிகுந்த விட்ட உணவை பெண்களே சாப்பிடுவார்கள். இது அவர்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கலாம். இதற்கு மாறாக, எஞ்சிய உணவு சாப்பிடக்கூடிய நிலையில் இருந்தால், அதை அனைவரும் பகிர்ந்து உண்டு முதலில் காலி செய்து விட்டு பிறகு புதிய உணவில் கை வைப்பதுதான் சரியான அணுகுமுறை. இதை ஒரு கட்டாய நடைமுறையாகவே பெண்கள் பழக்க வேண்டும்.

அடுத்த பஞ்சாயத்தை மங்கலகரமாகத் தொடங்கினார் ரம்யா. அவரது செருப்புகளை படுக்கையின் அருகேயே அடுக்கி வைக்க “இங்க வெக்காதீங்க. கொசு வருது.. வெளில கவர்ல போட்டு வெச்சுடுங்க. இந்த வீட்டில் அதான் நடைமுறை” என்று கேப்டன் நிரூப் தன்மையாக ஆட்சேபிக்க “வனிதா அக்காவே அப்படித்தான் பண்ணாங்க” என்று ஒத்து ஊதினார் அனிதா. இது எளிய விஷயம். ரம்யா இந்த விதிக்கு உடனே உடன்பட்டிருக்கலாம். ஆனால் “வந்தவுடனேயே நம்மளை ராகிங் பண்றாங்க போல” என்று அவரது ஈகோ காயப்பட்டதோ, என்னமோ விதம் விதமாக சமாளித்துப் பார்த்தார். பிறகு இந்தப் பஞ்சாயத்தை பிக் பாஸிடம் கொண்டு சென்று “நான் செருப்பு உள்ள வைக்கறதுல உங்களுக்கு உடன்பாடு இல்லைன்னா.. ஒரு கவர் அனுப்புங்க” என்று விடாக்கண்டனாக பிரச்சினையை இழுத்தார்.
“தடவிப் பார்த்து ஜோடியைக் கண்டுபிடி”
அடுத்து ஒரு சுவாரசியமான டாஸ்க் நடந்தது. ஜோடிகளில் பெண்கள் மட்டும் சோபாவில் அமர வைக்கப்படுவார்கள். ஆண்களின் கண்கள் கட்டப்பட்டு பெண்களின் அருகில் அழைத்து வரப்படுவார்கள். பெண்களின் கைவிரல், உள்ளங்கை, மேல் தலை போன்றவற்றை மட்டும் தடவிப் பார்த்து தங்களின் சரியான ஜோடியை ஆண்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு நடுவர் ரம்யா.
முதலில் வந்த சதீஷ் பலரின் கைவிரல்களை தடவிப் பார்த்து விட்டு கடைசியில் தனது ஜோடியை தவறாக அடையாளம் காட்டினார். அது அனிதா. இதே மாதிரியான தவறையே சுரேஷூம் செய்தார். “பேசாதீங்க” என்று விதிமுறையை ரம்யா பல முறை சுட்டிக் காட்டியும் ‘தொணதொணவென்று’ கேள்விகள் கேட்ட சுரேஷ், தேர்ந்தெடுத்தது அனிதாவை. தன்னுடைய முறை வரும் போது ஒவ்வொருவரின் நகங்களையும் தேடித் தடவினார் பாலா. இறுதியில் பாலா, சிநேகன், நிரூப் ஆகிய மூவர் மட்டும் தங்களின் சரியான ஜோடியைக் கண்டுபிடித்தார்கள். இவர்களுக்கு ஒரு நாணயம் பரிசு. சுரேஷ் மற்றும் சதீஷ் இந்த ஆட்டத்தில் அவுட். அவர்கள் ஒரு நாணயத்தை பிக் பாஸிற்கு அபராதமாக செலுத்த வேண்டும்.

இந்த டாஸ்க்கின் இரண்டாவது சுற்று நடந்தது. ‘என் ஸ்வப்னா புத்திசாலிடா’ என்கிற வசனத்தைப் போல, நடுவர் ரம்யா ஆண்களை அழைத்து வரும் போது பெண் போட்டியாளர்களைிடம் ஒரே ஆர்டரில் கொண்டு போய்ச் சேர்க்காமல் வரிசையை மாற்றி மாற்றி அழைத்துச் சென்று குழம்ப வைத்தார். ஆச்சரியம். இரண்டாம் சுற்றிலும் அதே ரிசல்ட்தான் வந்தது. சதீஷ் மற்றும் சுரேஷ் அவுட் ஆகி விட மற்றவர்கள் ஜெயித்தார்கள். சுரேஷிற்கும் அனிதாவிற்கும் அப்படி என்ன ராசியோ, இந்த முறையும் அவரையே தவறாகத் தேர்ந்தெடுத்தார் சுரேஷ். இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்றவர்களுக்கு போனஸாக 3 நாணயங்கள் வழங்கப்பட்டன. “யோவ் கெளவா. தலையைக் கூட தடவிப் பார்க்கலாம்ன்னு சொன்னாங்கள்ல.. அதை நீ செய்யவே இல்லையே?” என்று தன் ஜோடியான சுரேஷை ஜாலியாக கடிந்து கொண்டார் தாமரை. “நான் படிதாண்டா பத்தினன்” என்று சொல்லி சமாளித்தார் சுரேஷ்.
“இது நியாயமா சதீஷ்?. நீங்க கலக்கவே ஆரம்பிக்கலை..”
இந்த டாஸ்க்கில் என்றல்ல, பொதுவாகவே சதீஷ் மெத்தனமாக இருப்பதை அந்த வீட்டில் அனைவரும் அறிந்திருக்கிறார்கள்; அதற்காக ஆதங்கப்படுகிறார்கள். தனக்கு கிடைத்த வாய்ப்பை சதீஷ் ஏன் இப்படி அலட்சியமாக வீணடிக்கிறார் என்று தெரியவில்லை. ‘உங்களுக்கு ஒரு நாணயம் அபராதம்’ என்று பிக் பாஸ் அறிவித்த போது ‘ரெண்டா கூட எடுத்துக்கோங்க’ என்று விட்டேற்றியாக பதில் சொன்னார் சதீஷ். ஆனால் இது தன்னை மட்டும் பாதிக்காமல், தனது ஜோடியான ஜூலியின் மதிப்பெண்ணையும் குறைக்குமே என்கிற கவலை சதீஷிடம் இருப்பது போலவே தெரியவில்லை. இந்த ஆட்சேபத்தை சதீஷிடம் மிக நயமாக எடுத்துரைத்தார் ஜூலி.

“உன் விரல்ல வாக்களிச்ச மை இருந்த தடயத்தை கூட நான் பார்த்து வெச்சிருந்தேன்” என்கிற அளவிற்கு ஜூலி டாஸ்க்கில் ஆர்வமாக இருக்க “நான் அதையெல்லாம் யோசிக்கலை” என்று பட்டும் படாமல் பதில் சொன்னார் சதீஷ். ஆட்டம் ஜாலியாக இருந்தால் சதிஷீற்குப் போதுமாம். வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலையில்லையாம். சதீஷிடம் இதைப் புரிய வைக்க முடியாமல் தோற்றுப் போன ஜூலி, தன் ஆதங்கத்தைப் பாலாவிடம் பகிர்ந்து கொள்ள முயற்சித்தார். இந்தச் சமயத்தில் பாலா செய்தது மிக அநியாயம். ஜூலி சொல்வதை காதில் கூட சரியாக வாங்காமல், கண்ணாடியைப் பார்த்து தன் மீசையை சரி செய்வது, செருப்புக் காலை ஜூலியின் முகத்திற்கு நேராக வைத்துக் கொள்வது போன்ற அழிச்சாட்டியங்களைச் செய்தார். பொதுவாகவே பாலாவின் உடல்மொழியில் ஒரு ஆணாதிக்கவாதியின் அலட்சியத்தை கவனிக்க முடிகிறது. ஓர் ஆண் கம்பீரமாக இருப்பது வேறு; திமிருடன் இருப்பது வேறு.
புகைப்படத்துடன் பூகம்ப கேள்விகள்
‘இவங்க இப்படித்தான்’ என்று அடுத்த டாஸ்க்கை துவங்கினார் பிக் பாஸ். இதற்கும் நடுவர் ரம்யாதான். (இவருக்கு ஜோடி இல்லையே?!) ஒவ்வொரு ஜோடியும் ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு அழைக்கப்பட்டு தனித்தனியாக அமர வைக்கப்படுவார்கள். பிக் பாஸ் போட்டியாளர்கள் இதுவரை செயல்பட்டிருப்பதை வைத்து சில பொதுவான அபிப்ராயங்கள் சொல்லப்படும். அந்த க்ளூவை வைத்து ‘அது யாருக்குப் பொருந்தும்?’ என்று யோசித்து சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்தை எடுத்து காட்ட வேண்டும். ஜோடிகளில் இருவருமே ஒத்த கருத்துடன் ஒரே ஆசாமியின் புகைப்படத்தைக் காட்டினால் நாணயம் பரிசு.
முதலில் வந்தது சதீஷ் மற்றும் ஜூலி. “இந்த விளையாட்டை அதிகமாகப் புரிந்து விளையாடுபவர்” என்கிற முதல் பாயிண்ட் சொல்லப்பட்டதும் பாலாவின் புகைப்படத்தைக் காட்டினார் சதீஷ். ஆனால் ஜூலியோ நிரூப்பின் புகைப்படத்தைக் காட்டினார். இந்த வகையில் இந்த ஜோடிக்குள் பெரும்பாலும் மாறுபட்ட அபிப்ராயங்களே வெளிப்பட்டன. சிலவற்றில் மட்டுமே ஒத்துப் போனார்கள். “போற வரைக்கும் போவோம்-ன்னு விளையாடறவரு” என்கிற பாயிண்ட்டிற்கு தன் புகைப்படத்தையே சுட்டிக் காட்டினார் சதீஷ். ஜூலியும் இதைச் சரியாகப் பிரதிபலித்தார். ‘சலிப்பான ஆண் போட்டியாளர்’ என்பதற்கும் தன்னையே சுட்டிக் காட்டிக் கொண்டார் சதீஷ். ஜூலியோ சிநேகனைக் காண்பித்து முரண்பட்டார். கடைசியில் இவர்களுக்கு 3 நாணயங்கள் மட்டுமே கிடைத்தன.

அடுத்ததாக வந்த ஜோடி நிரூப் மற்றும் சுருதி. இவர்களும் பல பாயிண்ட்களில் ஒத்துப் போகாமல் சொதப்பினாலும் சிலவற்றிற்கு ஒரே மாதிரியாக சிந்தித்து அசத்தினார்கள். இவர்களுக்கு 6 நாணயங்கள் பரிசாக கிடைத்தன. வெளியில் வந்த நிரூப்பும் சுருதியும் தனிமையில் இந்த விளையாட்டைப் பற்றி பேசிக் கொண்டது மிக முக்கியமான விஷயம். இது போன்ற விளையாட்டுகளுக்கு எத்தனை முன்தயாரிப்புடன் செல்ல வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த உரையாடல் அமைந்திருந்தது.
‘சலிப்பான பெண் போட்டியாளர்’ என்பதற்கு சுருதியின் புகைப்படத்தைக் காட்டியிருந்தார் நிரூப். ஆனால் சுருதி காட்டியதோ ‘ஜூலி’யின் புகைப்படத்தை. “ஏண்டா. என் போட்டோவை நானே காட்டிப்பனா. கொஞ்சம் கூட நீ யோசிக்க மாட்டியா?” என்று சுருதி சற்று கோபமாக கேட்க “நான் உண்மையாத்தான் விளையாடுவேன். அது உனக்கும் தெரியும். அதை நீ யோசிச்சிருக்க வேண்டாமா?” என்று லாஜிக்காக நிரூப் மடக்கியது சுவாரசியம்.
எலியும் பூனையுமாக பிறாண்டிக் கொண்டிருந்த ‘ஜோடிகள்’ டாஸ்க்கில் சற்று சுவாரசியம் கூடியிருப்பது நல்ல விஷயம். அது ரம்யாவின் வருகையினால் நிகழ்ந்தது என்பது நிச்சயம் தற்செயலாகத்தான் இருக்க வேண்டும்.