Published:Updated:

BB Ultimate - 41: பற்றவைத்த ரம்யா பாண்டியன்; பற்றி எரிந்த அனிதா! பிக் பாஸ் வீட்டில் நடந்ததென்ன?

ரம்யா பாண்டியன்

BB Ultimate - 41: "தாமரை கிட்ட மட்டும் காட்டற பாசத்தை மத்தவங்க கிட்டயும் காட்டலாம். அநாவசியமா நிறைய யோசிக்கறான்னோன்னு தோணும்"- என்று சொல்லி அமர்ந்தார் அபிராமி

Published:Updated:

BB Ultimate - 41: பற்றவைத்த ரம்யா பாண்டியன்; பற்றி எரிந்த அனிதா! பிக் பாஸ் வீட்டில் நடந்ததென்ன?

BB Ultimate - 41: "தாமரை கிட்ட மட்டும் காட்டற பாசத்தை மத்தவங்க கிட்டயும் காட்டலாம். அநாவசியமா நிறைய யோசிக்கறான்னோன்னு தோணும்"- என்று சொல்லி அமர்ந்தார் அபிராமி

ரம்யா பாண்டியன்
எவ்வளவு பெரிய கலவரமெல்லாம் நடந்த ரத்தபூமி பிக் பாஸ் வீடு?! ஆனால் இன்றோ ரம்யாவின் செருப்பை எங்கே வைக்கலாம் என்கிற அற்ப பிரச்சினைக்காக கிடந்து அல்லாடுகிறது. ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு!

நாள் 40-ல் நடந்தது என்ன?

நாட்டுப்புற இசைப் பாட்டுடன் பொழுது விடிந்தது. ரம்யாவின் செருப்பு பிரச்சினை இன்னமும் முடிந்தபாடில்லை. அவர் தனது செருப்புக்களை இன்னமும் பெட்ரூமில் இருந்து எடுத்து வெளியில் வைக்கவில்லை. நிரூப் இதை மென்மையாக சுட்டிக் காட்ட, அனிதாவோ வழக்கம் போல் தன் லாஜிக் திறமையையெல்லாம் கொட்டி ரம்யாவிடம் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார். ஆனால் ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்கிற பழமொழியின்படி அனிதாவைத் தாண்டியும் நீளமாக லாஜிக் பேசி அவரை திறமையாக சமாளித்துக் கொண்டிருந்தார் ரம்யா. (என்ன இருந்தாலும் சீனியர் விஷபாட்டில் அல்லவா?!)

நிரூப்
நிரூப்

செருப்பூ vs நிரூப்பூ – விடாது பிரச்சினை

இதே பிரச்சினையைப் பற்றி தாமரையும் சுரேஷூம் பிறகு தனியாக பேசினார்கள். இந்த விவகாரத்தில் அனிதா டென்ஷன் ஆவதில் சுரேஷிற்கு உள்ளூற குஷி போல. எனவே “செருப்பை உள்ளே வைக்கறதுல எனக்கொன்னும் பிரச்சினையில்லை. பாலா கூட அப்படித்தான் வெச்சிருக்கான். நான் சில முறை தடுக்கி கூட விழப்போனேன்.. இருந்தாலும்.. நான்தானே பார்த்துப் போகணும்?!. ஊருடன் ஒத்து வாழ வேண்டியிருக்கு. அவங்க அவங்களுக்கா புத்தி தெரியணும்” என்று ‘இங்கிட்டும் இல்லாமல், அங்கிட்டும் இல்லாமல்’ மதில் மேல் பூனை கணக்காக சுரேஷ் தன் அனத்தலை பதிவு செய்து கொண்டிருக்க “அப்படி ஏன் சகிச்சிக்கிட்டு நீங்க இருக்கணும்.? வீட்டுல ரூல் இருந்தா அதை ஃபாலோ செஞ்சிதானே ஆகணும்?” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் தாமரை. இந்த அற்ப விவகாரத்திற்கு ரம்யா இன்னமும் மல்லுக்கட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும். பாலாவின் செருப்புகள் மட்டும் இன்னமும் படுக்கையறையின் உள்ளேயே இருப்பது குறித்து நிரூப்பிற்கும் அனிதாவிற்கும் ஆட்சேபணை இல்லையா?!

அனிதா
அனிதா

கட் செய்தால் சில பல சீன்களுக்குப் பிறகு இதே விவாகரத்தை இன்னமும் விடாமல் அலசிக் கொண்டிருந்தார் அனிதா. நிரூப்பிடம் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது “இது எனக்கொன்னும் பிரச்சினையா இல்லை’ன்னு சொல்லி சிலர் நழுவிடறாங்க.. அப்படி செஞ்சி உன்னைப் பழிவாங்கிட்டாங்க” என்று சுரேஷைப் பற்றி நிரூப்பிடம் பற்ற வைத்துக் கொண்டிருந்தார். “பாரேன். இப்ப ஜீவா பல்லைக் கடிக்கப் போறான்” என்கிற அனிதாவின் பாச்சா எல்லாம் நிரூப்பிடம் செல்லுபடியாகவில்லை. ‘இதெல்லாம் ஒரு மேட்டரா?’ என்கிற தனது வழக்கமான பாணியில் கூலாக இருந்தார் நிரூப்.

ஐந்து, ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்டுகள்

‘உன்னைக் கண்ட நாள் முதல்’ என்று அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஜோடிகள் ஒவ்வொருவரும் தங்களின் இணையைப் பற்றி ஐந்து நல்ல விஷயங்களும் ஐந்து மைனஸ் பாயிண்ட்டுகளைப் பற்றியும் சொல்ல வேண்டுமாம். முதலில் எழுந்து வந்த நிரூப், தனது பார்ட்னரான சுருதி பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

“சுருதி கிட்ட நல்ல விஷயங்கள்னா.. பொறுமையா இருப்பா. டிரெஸ்ஸிங் சென்ஸ் நல்லாயிருக்கும்.. நேர்மையா நடந்துப்பா. சொல்ற விஷயத்துல தெளிவு இருக்கும்.. யாரையும் ஹர்ட் பண்ண மாட்டா.. நட்பா இருப்பா” என்று ப்ளஸ் பாயிண்ட்டுகளை சொல்லி முடித்து விட்டு “என் முன்னாடி அவ யாரையும் ஹர்ட் பண்ணதில்லை. எனக்குப் பின்னாடி பண்ணியிருப்பாளோ.. என்னமோ” என்று disclaimer போட்ட போது சுருதியின் முகத்தில் வந்து போன அந்த மெல்லிய சர்காஸ்டிக் சிரிப்பு இருக்கிறதே?!.. பிக் பாஸ் வீட்டில் வெளிப்படும் தன்னிச்சையான முகபாவங்களை செயற்கையான நடிப்பில் வரவழைக்கவே முடியாது என்பதற்கான உதாரணக்காட்சி அது.

நிரூப் - சுருதி
நிரூப் - சுருதி

அடுத்ததாக மைனஸ் பாயின்ட்டுகளை உதறி உதறி சொல்லத் துவங்கினார் நிரூப். “இன்னமும் கூட அவளோட குரல் நல்லா வெளியே வரலாம்.. தனிப்பட்ட முறைல அவ அமைதியா பேசறது நல்ல விஷயம்தான். ஆனா இந்த ஷோ –க்கு சில குணாதிசயங்கள் தேவைப்படுது. அப்போதான் எப்படி விளையாடறோம்ன்னு மக்களுக்குத் தெரியும். செய்ய வேண்டிய வேலையை அப்படியே பாதியிலேயே விட்டுட்டுப் போயிடுவா.. அது எல்லோருமே செய்யறதுதான். உதாரணத்திற்கு மாவு ரெடி பண்ணும் போது…” என்று நிரூப் பேசிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்த சுருதி “இந்த மாவுப் பிரச்சினையை வெச்சு இந்த வீட்ல எனக்கு தூக்குத் தண்டனையே வாங்கிக் கொடுத்துருவீங்க போலிருக்கு. அந்த அளவிற்கு அதை ரிப்பீட்டா சொல்லிக் காண்பிக்கறீங்க” என்று ஜாலியாக அலுத்துக் கொள்ள வீடு கலகலத்தது.

அபிராமி, பாலா
அபிராமி, பாலா

“ஓகே.. அடுத்த மைனஸ் என்னன்னா.. ஒரு பிரச்சினையை பர்சனலா எடுத்துட்டு மண்டையைப் போட்டு உடைச்சுப்பா.. ஆக்சுவலி எனக்கான ரெண்டு சொம்புகளுக்கும் (சுருதி, அனிதா) இதே பிரச்சினை இருக்கு” என்று சொல்லி முடித்தார் நிரூப். ‘சொம்பு’ என்கிற வார்த்தையை வைத்து பாலாவும் அனிதாவும் பரஸ்பரம் சண்டைக் கோழிகள் போல முறைத்துக் கொண்டேயிருக்க, அதே வார்த்தையை நிரூப் கூலாக ஹாண்டில் செய்யும் விதம் பாராட்டத்தக்கதது. அவரே அந்தக் கிண்டலை நீர்த்துப் போக வைத்து விடுகிறார். சென்சிட்டிவ்வாக இருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

‘மூணு நாள் ஆனாலும் குளிக்காமல் நீர் சேமிப்பில் ஈடுபடும் நிரூப்’

அடுத்ததாக எழுந்து வந்தார் சுருதி. இப்போது அவர் நிரூப்பின் ப்ளஸ் பாயிண்ட்டுகளை சொல்ல வேண்டும். “எந்தவொரு பிரச்சினையையும் அடுத்தவங்க கோணத்துல இருந்தும் பார்ப்பான்.. யார் மேலயும் முத்திரை குத்த மாட்டான். எல்லோராலயும் எல்லாமும் பண்ண முடியும்ன்னு நம்புவான்.. மத்தவங்களையும் சந்தோஷமா வெச்சுப்பான். தன் கருத்தை தெளிவா, தன்னம்பிக்கையா முன்வைப்பான்.. புதுப்புது விஷயங்களை கத்துக்க ஆர்வம் காட்டிட்டே இருப்பான்” என்று சொல்லி முடித்த சுருதி, அடுத்ததாக மைனஸ் பாயிண்ட்டுகளை அடுக்க ஆரம்பித்தார்.

BB Ultimate
BB Ultimate

“மூணு நாள் ஆனா கூட குளிக்காம இருப்பான்” என்று சுருதி ஆரம்பித்த போதே நிரூப்பிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்து காமெடி செய்தார் சுரேஷ். “குளிக்காம இருக்கறதுக்கு அவன் சொல்ற காரணம் இருக்கே.. நீர் சேமிப்பு.. ன்னு என்ன என்னமோ கம்பி கதையெல்லாம் கட்டுவான்” என்று சுருதி சொல்ல “ஆமாம். அவனுக்கு இருக்கற ஹைட்டான உடம்புக்கு நிச்சயம் நிறைய நீர் சேமிக்கலாம்” என்று டைமிங்கில் அடித்தார் சுரேஷ். “அடுத்தவர் பேசும் போது பொறுமையா கேட்க மாட்டான். ஆர்வக்கோளாறுல இடையூறு செய்வான்.. ‘இந்த சப்ஜெக்ட் கிட்ட எந்த அசைவும் தெரியலயே’ –ன்ற மாதிரி இருப்பான். மனுஷனா பொறந்தா எமோஷன்ற விஷயம் இருக்கணும். இவன் கிட்ட அது சுத்தமா இல்ல.. On Spot-லதான் ஒரு விஷயத்தை யோசிப்பான்… தன்னை தானே கவனிச்சிக்க மாட்டான்..” என்று சொல்லி முடித்தார் சுருதி.

அபிராமி, பாலா
அபிராமி, பாலா

அடுத்த ஜோடி சதீஷ் மற்றும் ஜூலி. அமைதியாக இருந்து சொதப்பும் சதீஷ் இப்போதுதான் வாய் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார். “அன்பு, பொறுப்பு, டிரெஸ்ஸிங் சென்ஸ் போன்ற நல்ல விஷயங்கள் ஜூலி கிட்ட இருக்கு. அவங்க மாத்திக்கலாம்ன்னு நான் நெனக்கற விஷயங்கள் என்னன்னா.. ஒருத்தர் கிட்ட மட்டும்தான் அதிகமா பழகறாங்க.. இன்னமும் கூட அவங்க ஜாலியா இருக்கலாம். டாஸ்க்ல அவங்களோட கான்பிடன்ஸ் லெவல் ஓவரா இருக்கு” என்று சொல்லி அமர்ந்தார்.

அடுத்தததாக எழுந்து வந்த ஜூலி “சதீஷ் கிட்ட இருக்கிற நல்ல குணங்கள் இந்த கேமிற்கு செட் ஆகாது.. இருந்தாலும் சொல்றேன்.. முன்னல்லாம் நெர்வஸா இருப்பான்.. இப்ப பரவாயில்ல. அடிச்சு ஆட ஆரம்பிச்சிருக்கான்.. வீட்டு வேலைகளைக் கேட்டு ஆர்வமா கத்துக்கறான்.. இந்த விளையாட்டிற்காக தன் கேரக்ட்டரை மாத்திக்க அவன் தயாரா இல்லை.. என்று நல்ல விஷயங்களை சொல்லி முடித்தவர், அடுத்தது மைனஸ் பாயிண்ட்டுகளுக்கு நகர்ந்தார். “இன்னமும் அவனுக்கு கேம் ஸ்பிரிட் வேணும்.. சண்டை சத்தம் அவனுக்கு பிடிக்காது.. அது இங்க செட் ஆகாது. (சண்டை போடத் தெரியாதுன்னு அர்த்தமில்ல, வேணாமின்னு ஒதுங்கிப் போறேன்’ என்று பன்ச் வசனத்தால் இதற்கு பதில் சொன்னார் சதீஷ்).. விளையாட்டில் இன்னமும் முதிர்ச்சி வேணும். ‘இருக்கற வரைக்கும் போவோம்’ன்னு அவன் விட்டெத்தியா இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கலை” என்று சொல்லி முடித்தார் ஜூலி.

“சொல்ற விஷயத்தைக் காதுல வாங்குங்க பாலா”

அடுத்ததாக பாலா –அபிராமி ஜோடியின் முறை. முதலில் எழுந்து வந்த அபிராமி ‘இவனைப் பத்தி என்னாத்த நல்லதா சொல்றது’ என்று யோசிப்பவர் மாதிரியே நின்றிருந்தார். பிறகு ‘அய்யோ. அப்படிச் சொல்லலைன்னாலும் வம்பு பண்ணுவானே?!’ என்று சுதாரித்துக் கொண்டவர் போல் முகம் மாறி பேச ஆரம்பித்தார். “எல்லோரையும் சமமா நடத்துவான்.. பாரபட்சம் பார்க்க மாட்டான்.. ரகிட ரகிட பாடல் வரிகள் இவனுக்கு ரொம்ப பொருந்தும். ‘எனக்கு ராஜா நான்..’ ன்ற வரி கன கச்சிதம்.. யாராவது தனியா உக்காந்திருந்தா என்னன்னு போய் ஆதரவா விசாரிப்பான்.. டாஸ்க் 100 சதவீதம் இறங்கி விளையாடுவான். லாஜிக்கலா யோசிப்பான்..” என்று முடித்து அடுத்ததாக மைனஸ்களை அடுக்க ஆரம்பித்தார்.

“யாராவது அன்பு செலுத்தினா.. அதை இவன் நம்பலாம். சந்தேகமா பார்க்கத் தேவையில்லை… முன் கோபம் அதிகம். யாராவது ஒரு பிரச்சினையை சொல்லும் போது அதை அவன் சரியா காதில் வாங்காம.. கண்ணாடில மீசையை, தாடியை சரி பண்ணிக்கும் போது எரிச்சலா வரும்.. (இந்த விஷயம் நேற்றைய நாளின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது). தாமரை கிட்ட மட்டும் காட்டற பாசத்தை மத்தவங்க கிட்டயும் காட்டலாம். அநாவசியமா நிறைய யோசிக்கறான்னோன்னு தோணும்” என்று சொல்லி அமர்ந்தார் அபிராமி. சிரிப்பு, டெரர் என்று பாலாவின் முகபாவங்கள் இதற்கு மாறிக் கொண்டேயிருந்தன.

அபிராமி
அபிராமி

அடுத்ததாக எழுந்து வந்தார் பாலா.. “கொடுத்த வேலையை சரியா செஞ்சிடுவா.. நாம் சொல்ற விஷயத்தை வாக்குவாதம் செய்யாம புரிஞ்சுப்பா.. (உங்க கிட்ட வாக்குவாதம் செய்ய முடியுமா?!).. நாம தர்ற அன்பிற்கு சமமா அன்பு தருவா.. டாஸ்க்கில் நிறைய ஆர்வம் இருக்கு” என்று அபிராமியின் ப்ளஸ் பாயிண்டுகளை சொல்லி முடித்து “கம்மியா யோசிக்கறது. டாஸ்க் உள்ள நட்பை கொண்டு வர்றது.. (உதாரணம் ஜூலி) ஒரு விஷயத்தை முழுசா புரிஞ்சுக்காம ரியாக்ட் பண்றது.. தனக்குத் தெரிஞ்ச கலைத்திறமையை இன்னமும் நல்லா வெளிப்படுத்தாதது.. அடைய விரும்பற விஷயத்திற்கு முழு ஆர்வத்தோட போட்டி போடாதது” என்று மைனஸ்களை சொல்லி அமர்ந்தார்.

போட்டியாளர்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி அலசும் இந்த நீளமான டாஸ்க்கை பார்க்கும் போது நமக்கு நிச்சயம் சலிப்பாக இருந்திருக்கலாம். ஆனால் நம் வீடுகளில் கூட இதை பயன்படுத்திப் பார்க்கலாம். பல வருடங்கள் கடந்திருந்தாலும் கூட ஒருவரின் நிறை,குறைகளைப் பற்றி நாம் திறந்த மனதுடன் அலசியிருக்க மாட்டோம். இப்படி அமர்ந்து பேசினால் பல பிரச்சினைகள் மட்டுப்படுவதற்கு அந்த உரையாடல் ஒரு காரணமாக இருக்கக்கூடும். (டிரை பண்ணிப்பாருங்க!).

அவித்த முட்டை, ஜெம்ஸ் மிட்டாய், சுருதியின் சர்க்கஸ் வித்தை

கடந்த டாஸ்க்கில் பேசிப் பேசி ஓய்ந்த காரணத்தினால் அடுத்த டாஸ்க்கை ஆக்ஷன் காட்சிகளாக இறக்கினார் பிக் பாஸ். அவித்த முட்டையை அப்படியே விழுங்குவது, ஜெம்ஸ் மிட்டாயை ஸ்டிராவினால் உறிஞ்சி சேகரிப்பது, பந்தை எறிந்து பிளாஸ்டிக் டம்ளரில் விழச் செய்வது, ஒரு நபரின் உடலில் பிளாஸ்டிக் டம்ளர்களைக் கட்டி அதில் பந்து எறியச் செய்வது என்று பல சர்க்கஸ் வித்தைகளை நிகழ்த்தினார் பிக் பாஸ். ‘தங்களால் எத்தனை சாதிக்க முடியும்?’ என்பதை ஒரு நாணயத்தை பந்தயமாக வைத்து மற்றவர்களுடன் போட்டியிட்டு ஏலத்தில் மோத வேண்டும்.

‘உயிருக்கு ஆபத்து ஏற்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன’ என்பதால் கின்னஸ் சாதனையிலேயே உணவு சாப்பிடுவது தொடர்பான போட்டிகளை நிறுத்தி விட்டார்கள். பிக் பாஸ் இதை கருத்தில் கொள்வது நல்லது. சுரேஷ் உசுப்பேத்தியதின் காரணமாக 24 அவித்த முட்டைகளை உண்ணும் பந்தயத்தில் அநாவசியமாக இறங்கினார் தாமரை. இந்தச் சவாலை மூன்று நிமிடத்திற்குள் முடிப்பது என்பது ஆகக்கூடிய காரணமா? முதல் முட்டையை விழுங்கிய போதே மூச்சுத் திணற ஆரம்பித்தார் தாமரை. சுரேஷ் ஏதோவொரு பிளானோடுதான் தாமரையை இறக்கியிருக்கிறார் போல. எதிர்பார்த்தபடி தாமரைக்கு தோல்விதான் கிடைத்தது.

சுரேஷ், தாமரை
சுரேஷ், தாமரை

ஜெம்ஸ் மிட்டாயை ஸ்டிராவினால் ஊதி சேகரிக்கும் போட்டியில் அதிக எண்ணிக்கையில் ஏலம் எடுத்து களத்தில் இறங்கினார் பாலா. அவர் மான் போல துள்ளித் துள்ளி குதித்து ஆடினாலும் வேலைக்கு ஆகவில்லை. தோல்வி அறிவிக்கப்பட்டதும் ஜெம்ஸ் மிட்டாய்கள் இருந்த குடுவையை கவ்விக் கொண்டு ஓடினார் பாலா. (அடப்பக்கி! அப்ப மிட்டாய்க்கு போட்ட பிளானா இது?!). பிளாஸ்டிக் டம்ளரில் பந்தைப் போடும் டாஸ்க்கில் தடாலடியாக செயல்பட்டாலும் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டார் பாலா. சுருதியின் உடம்பில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் டம்ளர்களில் நிரூப் பந்து எறிய, அதை லாகவமாக ஏந்தி பல பந்துகளைச் சேகரித்து அசத்தினார் சுருதி. (நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ!). ஆனால் இவர்களும் ஒரு பந்து வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது சோகம்.

அடுத்ததாக கோலியாட்டம், பாண்டியாட்டம், கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுக்களையும் பிக் பாஸ் வீட்டு குழந்தைகள் ஆடுவதை இனி நாம் காண முடியும் போலிருக்கிறது.