Published:Updated:

BB Ultimate -44 : ஆட்டத்தைத் தொடங்கிய ரம்யா பாண்டியன்; உஷ்ணத்தில் தாமரை, பாலா!

BB Ultimate

BB Ultimate: ‘பாலாவிற்கு நிரூப் மீது பொறாமை’ என்று அனிதா சொன்ன ஒற்றை வாக்கியம் பாலாவின் மனதை 24x7 குடைந்து கொண்டேயிருக்கிறது. இந்த சீசன் முழுக்க இதை வைத்து புகைந்து கொண்டேயிருக்கிறார் பாலா.

Published:Updated:

BB Ultimate -44 : ஆட்டத்தைத் தொடங்கிய ரம்யா பாண்டியன்; உஷ்ணத்தில் தாமரை, பாலா!

BB Ultimate: ‘பாலாவிற்கு நிரூப் மீது பொறாமை’ என்று அனிதா சொன்ன ஒற்றை வாக்கியம் பாலாவின் மனதை 24x7 குடைந்து கொண்டேயிருக்கிறது. இந்த சீசன் முழுக்க இதை வைத்து புகைந்து கொண்டேயிருக்கிறார் பாலா.

BB Ultimate
பிக் பாஸ் வீட்டில் முதன்முறையாக இரண்டு கேப்டன்கள், நாமினேஷன் செயல்முறையில் கோக்குமாக்கான விதிகள் என்று புதுமையான அம்சங்களுடன் நேற்றைய எபிசோட் நடந்தது. வழக்கம் போல் பரஸ்பர பிறாண்டல்களுக்கும் குறைவில்லை.

எபிசோட் 44-ல் நடந்தது என்ன?

‘வலி மாமே வலி’ என்கிற அர்த்தம் பொதிந்த பாடல் காலையில் ஒலிபரப்பாக, வழக்கம் போல் ஆவேசமாக குத்தி ஆடினார் அனிதா. ஹவுஸ்மேட்ஸ்களை கேப்டன் நிரூப் மதிப்பீடு செய்யும் நேரம். ஒவ்வொருவராக அழைத்து அவர்களைப் பற்றி அலசி மதிப்பெண் போடத் துவங்கினார் நிரூப். “இன்னமும் வெளியே வரணும்” என்று சதீஷிற்கும், ‘you have mind of own’ என்று அபிராமிக்கும் கருத்து சொன்ன நிரூப், அடுத்ததாக பாலா பக்கம் வந்த போது “முடிஞ்சு போன பிரச்சினையை விட்டுடலாம்” என்பது போல் சொல்ல பாலா சைடில் இருந்து பக்கென்று பற்றிக் கொண்டது.

“நான் பேசினா நாறிப் போயிடும்” – டெரர் பாலா

‘பாலாவிற்கு நிரூப் மீது பொறாமை’ என்று அனிதா சொன்ன ஒற்றை வாக்கியம் பாலாவின் மனதை 24x7 குடைந்து கொண்டேயிருக்கிறது. இந்த சீசன் முழுக்க இதை வைத்து புகைந்து கொண்டேயிருக்கிறார் பாலா. எனில் உண்மையாகவே அவருக்கு நிரூப் மீது புகைச்சல் என்றுதான் யூகிக்கத் தோன்றுகிறது. அதைத்தான் தனது கோபத்தின் மீது மறைத்துக் கொள்கிறாரோ?! “இல்லடா. நீ முடிஞ்சு போன பிரச்சினையையே பிடிச்சிக்கிட்டு நிக்கறே?” என்று நிரூப் தன்மையாக விளக்கம் சொல்ல “அது முடியாத பிரச்சினை” என்று அழும்பு செய்தார் பாலா. நிரூப்பிற்கு ஆதரவாக தானாக முன்வந்து ஆஜரான அனிதா “நீ கூடத்தான் Women card’ன்னு என்னைச் சொன்னே.. நீ பெண்களை இழிவுப்படுத்தறேன்னு நான் சொல்லவேயில்ல” என்று பாலாவுடன் விவாதத்தில் இறங்கினார். ‘இவனை அடிச்சா அவனுக்கு வலிக்கும்’ என்கிற பாலிசியை சரியாகப் பின்பற்றுகிறார் அனிதா.

பாலா
பாலா

“எனக்கு வெளிய பாலாவைப் பழக்கம் இருக்கு. எனக்குத் தெரிஞ்ச பாலா வேற. ஆனா இங்க தன் மேல் எந்தவொரு களங்கமும் வந்துடக்கூடாதுன்னு அவனுக்குள்ள ஒரு பயம் இருக்கு” என்று நிரூப் இயல்பாக சொன்ன கமெண்டிற்கு பாலா உக்கிரமானார். “வெளியில உள்ள விஷயங்களை பத்தியெல்லாம் பேசாத. வீட்டு விஷயங்களை மட்டும் பேசு. நானும் உன்னைப் பத்தி பேசினா நாறிடும்” என்று கோபத்துடன் சொல்ல நிரூப் அதிகம் டென்ஷன் ஆகாமல் “அப்படி என்ன நாறிப் போச்சு?.. எனக்கு விளக்கம் சொல்லு.. கேட்டுக்கறேன்” என்று நச்சரிக்க “அதெல்லாம் சொல்ல முடியாது” என்று ரிவர்ஸ் கியர் போட்டார் பாலா. இதுவொரு மோசமான டெக்னிக். “நீ போன சனிக்கிழமை எங்க இருந்தேன்னு எனக்குத் தெரியும்” என்று பொதுவில் ஒருவரைப் பற்றி பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு அதைப் பற்றி விளக்காமல் விடுவது தவறான கற்பனைகளுக்கு வழிவகுக்கும். “Move On’ என்று பாலாவைப் பற்றி குறிப்பு எழுதினார் நிரூப்.

“ரம்யாவுக்கு அஞ்சு மார்க்கா?” – கொதித்தெழுந்த தாமரை

“நிறைய விஷயங்களுக்கு விடை தேடி நீ இமயமலை வரைக்கும் போயிடற. அவ்ளோ சிந்தனை இங்க தேவையில்லை” என்கிற குறிப்பு அனிதாவிற்குச் சொல்லப்பட்டது. “ரம்யா இன்னமும் ஏன் சைலண்ட்டா இருக்காங்கன்னு தெரியல. வலியே தெரியாம ஊசி போடறவங்கன்னு உங்களைப் பத்தி சொன்னாங்க. இன்னமும் துணிச்சலா வெளியே வாங்க” என்று ரம்யாவைப் பற்றி சொன்ன நிரூப் அவருக்கு 5 மார்க் அளிக்க தாமரையின் மண்டையில் ‘சுர்’ என்று ஏறியது. “ஏண்டா. டேய்.. இத்தனை நாள் இருக்கறவங்களுக்கெல்லாம் 3 மார்க் போட்டுட்டு இப்ப வந்தவங்களுக்கு 5 மார்க் போடுவியா?” என்று நிரூப் மீது காட்டமானார் தாமரை.

தாமரை
தாமரை

ரம்யாவிற்கும் தாமரைக்கும் இடையே நிச்சயம் ஒருநாள் பெரிதாக வெடிக்கும் என்று தோன்றுகிறது. வந்த நாள் முதலே ரம்யாவை தாமரைக்குப் பிடிக்கவில்லை. ஒரிஜினல் ரேங்கிங் டாஸ்க்கில் இரண்டாவது இடத்தில் பெருமையாக நின்று கொண்டிருந்த தன்னை, பரமபத பாம்பு மாதிரி ‘சர்’ரென்று கீழே இறக்கி ஏழாவது ராங்கிற்கு கொண்டு வந்த ரம்யா மீது ஏற்கெனவே கோபமாக இருக்கிறார் தாமரை. அது மட்டுமல்லாமல், தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட இரண்டாவது ராங்க், அனிதாவிற்கு சென்று விட்டதால் அம்மணி கொலைவெறியில் இருக்கிறார். “ஒரு கேப்டனா இது என்னோட கருத்து” என்று நிரூப் மல்லுக்கட்டினாலும் தாமரைக்குப் புரியவில்லை. “அதுக்கு நாங்க விளக்கம் கேட்கக்கூடாதா?” என்று எனர்ஜி குறையாமல் வாக்குவாதம் செய்ய நிரூப்தான் சரணாகதி அடைய வேண்டியிருந்தது. “எனக்கு அஞ்சு மார்க் தந்ததுதான் அவங்களுக்குப் பிரச்சினை” என்று புன்னகை மாறாமல் தாமரைக்கு ஊசி போட்டார் ரம்யா.

“டாஸ்க் பிரச்சினையை டாஸ்க்கோட விட்டுடணும்” என்று சுரேஷிற்கும் “வாயைத் திறந்து இன்னமும் நல்லாப் பேசணும்” என்று சுருதிக்கும் “ஒருத்தர் கிட்ட மட்டும் பழகறது சரியில்லை” என்று ஜூலிக்கும் “நீ நீயா இரு. அது போதும்” என்று தாமரைக்கும் தீர்ப்பு எழுதி இந்த டாஸ்க்கை ஒருவழியாக முடித்து எஸ்கேப் ஆனார் நிரூப்.

அனிதாவின் இமயமலை நடிப்பு

இந்த வாரத்தின் தலைவர் போட்டிக்கான இறுதிக்கட்ட விளையாட்டு ஆரம்பித்தது. பாலா – அபிராமி அணியும், ரம்யா – அனிதா அணியும் மோதுவார்கள். ஜெயிக்கிற அணி இந்த வீட்டின் கேப்டன்கள் ஆகலாம். ஆம், பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு தலைவர்கள். (வெளங்கிடும்!). A வடிவத்தில் உள்ள சாய்பலகையின் இரு முனையிலும் ஒரு ஜோடி கயிற்றைப் பிடித்துக் கொண்டு சமாளித்து நிற்க வேண்டும். யார் அதிக நேரம் சமாளிக்கிறாரோ அந்த அணியே வெற்றி.

போட்டியின் ஆரம்பம் முதலே சாய்பலகையின் மீது சமாளித்து நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டே இருந்தார் அனிதா. “உன்னால முடியலைன்னா பரவாயில்ல” என்று ரம்யா சம்பிரதாயத்திற்கு சொன்னாலும் “கொஞ்சம் டிரை பண்ணித்தான் பாரேன்” என்கிற தொனி பின்னால் இருந்தது. அனிதாவை விட்டால் ஒரு மணி நேரத்திற்கு கூட நான் ஸ்டாப்பாக தன் கருத்துக்களை பேசிக் கொண்டே இருப்பார். ஆனால் உடல்ரீதியான டாஸ்க் என்றால், சுண்டு விரலை யாராவது உரசி விட்டால் கூட ‘அய்யோ. யம்மா. வலிக்குதே’ என்று முகத்தை சுளித்துக் கொண்டு அனத்த ஆரம்பித்து விடுவார்.

அனிதா
அனிதா

இந்த டாஸ்க்கிலும் அதேதான் நடந்தது. முகம் முழுக்க வியர்த்துப் போக, கால் தடுமாற, பலகையின் மீது சமாளிக்க முடியாமல் ‘ஹய்யோ.. அம்மா… ரம்யா.. ரம்யா.. ஹய்யோ..” என்று அனத்திக் கொண்டே இருந்தார் அனிதா. உண்மையாகவே அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லையென்றால் ரம்யாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சட்டென்று கீழே இறங்கி விடலாம். ஆனால் கீழேயும் இறங்காமல், அவர் கத்தி கூப்பாடு போடுவதைப் பார்க்கும் போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் கலவரமாகவும் இருக்கிறது. அனிதா ஏதோ இமயமலை உச்சியின் ஒரு பள்ளத்தாக்கு முனையில் தடுமாறி விழுந்து முனையில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போலவும், ரம்யா ஒரு கயிற்றின் மூலம் அவரைக் காப்பாற்றிப் பிடித்துக் கொண்டிருந்தது போலவும் இந்தக் காட்சி இருந்தது. அனிதா போட்ட சீன் அப்படி. (‘சிங்கப்பெண்ணே..’ பாடலை பேக்ரவுண்டில் போட்டிருக்கலாம்!).

ரம்யா
ரம்யா

“ஹய்யோ. என்னால முடியல.. ரம்யா” என்று அனிதா கதற “பரவாயில்ல. முடியலைன்னா விட்டுடுங்க” என்று ரம்யா நட்புடன் சொல்ல, ஒருவழியாக கீழே இறங்கினார் அனிதா. ஆக.. பாலாஜி – அபிராமி வீட்டின் தலைவர்கள் ஆனார்கள். ஏற்கெனவே எலியும் பூனையுமாக இருந்து அவ்வப்போது சமாதானம் ஆகும் இவர்களுக்குள், அதிகாரப்பங்கீட்டுப் பிரச்சினை தொடர்பாக என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?! “என் இத்தனை வருட பிக் பாஸ் வாழ்க்கையில் முதன்முறையாக நான் ஜெயிச்சு தலைவர் ஆகியிருக்கேன்” என்று பெருமையுடன் சொன்னார் பாலா. ஆனால் அந்தப் பெருமையில் அபிராமிக்கும் சரிசமமான பங்கிருக்கிறது. அதையும் குறிப்பிட்டார் பாலா.

சதீஷ் - வேலையே செய்யாத வானொலிப் பெட்டி

இந்த வார லக்ஸரி பட்ஜெட்டிற்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு வீடு மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டது. வயதான காரணத்தினால் சுரேஷ் நடுவராக இருக்கட்டும் என்று பாலா சொல்ல நன்றியுடன் கைகூப்பினார் தாத்தா. முதல் அணி, ரம்யா, நிரூப், சதீஷ். இரண்டாவது அணி, அபிராமி, அனிதா, தாமரை. மூன்றாவது அணி பாலா, சுருதி, ஜூலி.

சிநேகன் தந்து விட்டுப் போன வெடிகுண்டு தொடர்பாக சதீஷிற்கு ஒரு புதிய டாஸ்க்கை வழங்கினார் பிக் பாஸ். இந்த வாரம் முழுவதும் சதீஷ் வானொலிப் பெட்டியாக செயல்பட வேண்டுமாம். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி ஒலிபரப்பு செய்து கொண்டே இருக்க வேண்டுமாம். குறிப்பாக டாஸ்க் நேரத்தில் விளையாட்டைப் பற்றியும் வர்ணணை செய்ய வேண்டும். உண்மையில் இது சதீஷிற்கு கிடைத்த அருமையான வாய்ப்பு. அவர் தனது நகைச்சுவைத் திறனை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய மேடையை பிக் பாஸ் வழங்கியிருக்கிறார். ஆனால் சதீஷின் முகத்தில் எந்த வித சுரத்தும் இல்லை. அதை தண்டனையாகவே ஏற்றுக் கொண்டு “என்னால முடிஞ்சத பண்றேன்” என்று மொண்ணையாகச் சொல்ல “யப்பா. சாமி. இந்த வார எவிக்ஷன்ல இவரை மொதல்ல வெளியே அனுப்புங்கப்பா” என்று கொலைவெறியாக கத்தத் தோன்றியது. அப்படியொரு சிரத்தையின்மை சதீஷிடம் இருக்கிறது.

சதீஷ்
சதீஷ்

சதீஷின் வெடிகுண்டு டாஸ்க்கில் அனிதாவையும் கோர்த்து விட எண்ணிய பாலா, ‘தமிழ் செய்தி வாசிக்க சதீஷிற்கு சொல்லித்தர வேண்டும்’ என்று சொல்ல அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார் அனிதா. (நோ.. நோ.. இந்தச் சமயத்தில் அந்தக் கெட்ட வார்த்தைகள் எல்லாம் உங்கள் நினைவிற்கு வரக்கூடாது! தப்பு..!) ‘சதீஷ் செய்தி வாசிப்பதை பாலாவும் அபிராமியும் மேற்பார்வை செய்ய வேண்டும்’ என்று பிக் பாஸின் அறிவிப்பில் இருந்தது. “நீ சரியா செய்யலைன்னா அஞ்சு தோப்புக்கரணம் போடணும்” என்று பாலா ஜாலியானதொரு தண்டனையைத் தர சதீஷின் முகம் மாறியது.

“வெடிகுண்டு தந்ததே.. ஒரு தண்டனைதான். இதில் கூடுதல் தண்டனையா?. தோப்புக்கரணமெல்லாம் என்னால் போட முடியாது” என்று சீரியஸான முகத்துடன் சதீஷ் சொல்ல, ‘என் உத்தரவிற்கு இந்த வீட்டில் எதிர்ப்புக்குரலா?” என்று பாலா சற்று உள்ளூற டென்ஷன் ஆனாலும் “ஓகே. சதீஷ் நம்ம பையன்தான்” என்கிற ஆறுதலுடன் “சரி. உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்ன்னு நீயே சொல்லு” என்று சாய்ஸ் தர “அதெல்லாம் என்ன தண்டனை கொடுத்தாலும் செய்ய முடியாது” என்று தன்மானம் பெருகும் உணர்ச்சியுடன் சொன்னார் சதீஷ். (பார்க்க சைலண்ட்டா இருந்தாலும் தம்பி உள்ளே வயலண்ட்டா இருப்பார் போல!).

பாலா
பாலா

ஆனானப்பட்ட பாலாவையே தன் வழிக்குக் கொண்டு வந்த பெருமை சதீஷையே சேரும். சதீஷை தனியாக அழைத்துச் சென்ற பாலா “நான் உனக்கு ஜாலியாத்தானே தண்டனை தந்தேன்? ஏன் இப்படி அடம் பிடிக்கறே?” என்று நட்புணர்ச்சியுடன் கேட்க “இல்லைண்ணே.. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை.. காப்டன்சின்னா என்ன கடவுளா.. சொல்றத தன்மையா சொல்லணும்.. இப்ப நீங்க என்னைத் தனியா கூப்பிட்டு பேசினது சந்தோஷம்தான்” என்று சதீஷ் சொல்லும் போதுதான், பாலாவின் அலட்டல்தான் அவரை எரிச்சலூட்டியிருக்கிறது என்பது புரிந்தது. “சரிங்க. பிரதர் மன்னிச்சுக்கோங்க” என்று பாலாவே கேட்ட போது பிக் பாஸிற்கே ஆச்சரியத்தில் மூச்சடைத்திருக்க வேண்டும். (நம்ம பாலாவா இது?!).

நிரூப்பிற்கே அல்வா கிளறித் தந்த அனிதா

அடுத்த அலப்பறையை ஆரம்பித்தார் அனிதா. கிச்சன் ஏரியாவில் நிரூப் தனியாக போராடிக் கொண்டிருக்க “நீங்க வந்து அவருக்கு ஹெல்ப் பண்ணலாமில்ல.. நீங்களும் அந்த டீம்தானே?” என்று ரம்யா நியாயமானதொரு கேள்வியைக் கேட்க “அவன் என்ன பண்றான்னே எனக்குத் தெரியாது. சமையல் வேலை முடிஞ்சாலும் கூட அவன் திடீர்ன்னு வந்து எதையாவது பண்ணிட்டு இருப்பான்.. எனக்கெப்படி தெரியும்?” என்று அழிச்சாட்டியம் செய்தார் அனிதா. “கிச்சன் டீம்ல இருக்கற உங்களுக்கே.. நிரூப் இப்ப டின்னர் செய்யறார்ன்னு தெரியாதா?..வெரி குட்.. உங்களுக்கே தெரியும்.. இதையெல்லாம் நான் ஞாபகம் வெச்சுப்பேன்” என்று ரம்யா வலிக்காமல் ஊசி போட்டு விட்டுச் சென்றதும் அந்த மருந்து அரைமணி நேரம் கழித்து வேலை செய்தது.

அனிதா
அனிதா

“டின்னருக்கு என்ன செய்யப் போறோம்னு என் கிட்ட யாருமே டிஸ்கஸ் பண்ணலை. அவங்களா ஏதாவது பண்ணா எனக்கெப்படி தெரியும்?” என்று சிறிது நேரம் கழித்து அனிதா காரணம் சொன்னார். ஆக, தன்னைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்பதுதான் அனிதாவின்இந்த ஒத்துழையாமைக்கு காரணம். அதை அப்போதே சொல்லியிருக்கலாம். இதையே ரம்யாவும் கேட்க “எதை எப்ப சொல்லணும்னு எனக்குத்தான் தெரியும்” என்று முரண்டு பிடித்தார். அனிதாவின் ஆட்சேபத்தில் நியாயமுள்ளது. ஆனால் அதை அப்போதே தன்மையாகச் சுட்டிக் காட்டியிருக்கலாம். தனது ‘நண்பர்’ நிரூப், கிச்சனில் தனியாக வேலை செய்து கொண்டிருக்கும் போது கூட தன் ஈகோதான் முக்கியம் என்று வீம்பு பிடித்திருக்க வேண்டாம்.

ரகளையாக நிகழ்ந்த நாமினேஷன் சடங்கு

திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை இந்தத் திருவிழாவை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தார் பிக் பாஸ். எனவே இதற்கான விதிமுறைகள் ரகளையாக இருந்தன. இது போன்ற திடீர் ஆச்சரியங்கள் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக ஆனால் ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.

மூடப்பட்ட கார்டுகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொருவரும் எழுந்து வந்து அந்தக் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறையின்படி நாமினேட் செய்ய வேண்டும். வீட்டின் தலைவர்களான பாலா, அபிராமியை நாமினேட் செய்ய முடியாது. புதுவரவு என்பதால் ரம்யாவும் தப்பித்தார். “யாரும் இடம் மாறி உட்காராதீர்கள்” என்று நாமினேஷனுக்கு முன்பு அறிவித்தார் பிக் பாஸ். மிக சூட்சுமமான குறிப்பு இது என்பது பின்னால்தான் தெரிந்தது.

சுருதி, அனிதா
சுருதி, அனிதா

ஆட்டம் ஆரம்பித்தது. முதலில் எழுந்த வந்தார் தாமரை. ‘உங்களுக்கு வலது மற்றும் இடது பக்கத்தில் அமர்நதிருந்தவர்களை நாமினேட் செய்ய வேண்டும்” என்று சொன்னது கார்டு. அதாவது தங்களின் விருப்பப்படி ஒவ்வொருவரும் நாமினேட் செய்ய முடியாது. கார்டில் உள்ள கோக்குமாக்கு விதிகளின்படிதான் செயல்பட வேண்டும். ‘செம ஐடியா’ என்று பாராட்டினார் சுரேஷ். இதன்படி தனக்கு அருகில் அமர்ந்திருந்த சுருதி மற்றும் ஜூலியை தாமரை நாமினேட் செய்ய வேண்டியிருந்தது. (நண்பனா இருந்தா கூட பக்கத்துல உட்காராதே – பிக் பாஸ் தந்த பாடம் இது). அடுத்த வந்த சுருதிக்கும் இதே வழிமுறை கொண்ட கார்டு கிடைக்க அவர் தாமரை மற்றும் அனிதாவைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

அடுத்து வந்த நிரூப்பிற்கு விதிமுறை மாறியிருந்தது. ‘இரண்டு நபர்களை இரண்டு முறை அவர் நாமினேட் செய்யலாம்’. அதாவது நான்கு நபர்கள். சதீஷ், சுரேஷ், ஜூலி, தாமரை ஆகியோரை இதற்கான காரணங்களுடன் தேர்ந்தெடுத்தார் நிரூப். சதீஷிற்கு காரணமே தேவையில்லை. மிக மெத்தனமாக இருக்கிறார். ‘அடிக்கடி கோபப்படுகிறார்’ என்கிற காரணம் சுரேஷிற்கு. ஜூலியை நாமினேட் செய்வது நிரூப்பின் பொழுதுபோக்குகளில் ஒன்று. ‘மக்கள் எப்படியும் காப்பாத்திடுவாங்க” என்கிற சேஃப் காரணம் தாமரைக்கு.

அபிராமி
அபிராமி

அடுத்த வந்த அனிதாவிற்கு ‘மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும்’ என்று கார்டு ஜோசியம் சொல்லியது. சதீஷ், சுரேஷ், ஜூலி ஆகியோரைத் தேர்ந்தெடுத்து மகிழ்ந்தார் அனிதா. அடுத்ததாக வந்த சதீஷிற்கு “நீங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் இரண்டு நாமினேஷன்களைச் செய்வார்’ என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருந்தது கார்டு. இதுவும் சுவாரசியமான விதிதான். இதன்படி ரம்யாவை சதீஷ் தேர்ந்தெடுத்து அனுப்ப தனக்கு வழங்கப்பட்ட திடீர் அதிகாரத்தின்படி ஜூலி மற்றும் சுருதியை நாமினேட் செய்தார் ரம்யா.

ரம்யாவிற்கான வாய்ப்பு வந்த போது ‘இரண்டு நபர்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்” என்கிற டிவிஸ்ட் வந்தது. சதீஷ் மற்றும் ஜூலியைக் காப்பாற்றினார் ரம்யா. இதே ஜூலியை முன்பு நாமினேட் செய்தவரும் ரம்யாதான். (நானே அழிப்பேன்.. நானே காப்பேன்’ என்கிற தத்துவம்). ஜூலிக்கு வந்ததுதான் அதிரடியான வாய்ப்பு. அவர் நேரடியாக ஒருவரை டைரக்ட் நாமினேட் செய்யலாம். காரணங்களை அடுக்கி நிரூப்பை நாமினேட் செய்து பழிவாங்கினார் ஜூலி.

‘யாராவது ஒருவரை காப்பாற்றலாம்’ என்கிற வாய்ப்பு பாலாவிற்கு தரப்பட “கேம் விளையாடதவங்கள்லாம் வீட்டில் இருக்கும் போது தாத்தாவிற்கு என்ன குறைச்சல்? அவர் இருக்கணும். அப்பதான் வீடு எனர்ஜியா இருக்கும்” என்று டெரரான குரலில் சொன்னார் பாலா. அதாவது நிரூப்பிற்கு செக்மேட் வைக்கிறாராம். இப்படியாக… இந்த நாமினேஷன் விளையாட்டு சுவாரசியமாக நடந்து முடிந்ததில் இந்த வார எவிக்ஷன் செயல்முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகள்:

நிரூப், ஜூலி, சுருதி, தாமரை, அனிதா மற்றும் சதீஷ்

காலையில் நிரூப்புடன் ஏற்பட்ட பிரச்சினையை பாலா இன்னமும் மறக்கவில்லை. அனிதாவுடன் நிகழ்ந்த ஆறு வாரத்திற்கு முந்தைய சண்டையையே இன்னமும் அவரால் மறக்க முடியவில்லை என்னும் போது இது சாத்தியமா என்ன? எனவே இது பற்றி தனது பாசத் தாயான தாமரையிடம் தனியாக அனத்தத் தொடங்கினார் பாலா.

“பாலாவை வெளியே எனக்கு தெரியும்’ன்னு நிரூப் சொன்னதில் தப்பு இருக்கற மாதிரி எனக்குத் தெரியல” என்று தன்னுடைய இன்னொரு மகனான நிரூப்பை விட்டுத்தராமல் தாமரை பேசினாலும் பாலாவுடைய விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்ள விருப்பமில்லாமல் “நீ எதுக்கும் அவன் கிட்ட போய் தனியா பேசு. ஆனா அனிதா முன்னாடி பேசாத. அவ லெங்க்த்தா பேசி குழப்பிடுவா” என்று மந்திராலாசனை சொல்ல “ஓகே” என்று அன்னையின் ஆணைக்கு அடிபணிந்த படி எழுந்தார் பாலா.

தொடர்ச்சியாகத் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அலட்சியமாக கையாளும் சதீஷ் எதற்காக பிக் பாஸ் விளையாட்டிற்கு வந்தார் என்பது அவருக்கும் தெரியாது; நமக்கும் தெரியவில்லை.