Published:Updated:

BB Ultimate - 46: சுருதி- அபிராமி வாக்குவாதம்; கப்சிப் ஆன காரணகர்த்தா பாலா!

பாலா - சுருதி

BB Ultimate: ஆனால் நிரூப்பிற்கு ஒரு பிரச்னை என்றால் தானாக முன்வந்து ஆஜராகும் அநாவசியமான வக்கீல்போல உடனே அனிதா ஓடி வந்து விடுகிறார். இதனால் நிரூப்பின் பெயர்தான் கெட்டுப்போகும்.

Published:Updated:

BB Ultimate - 46: சுருதி- அபிராமி வாக்குவாதம்; கப்சிப் ஆன காரணகர்த்தா பாலா!

BB Ultimate: ஆனால் நிரூப்பிற்கு ஒரு பிரச்னை என்றால் தானாக முன்வந்து ஆஜராகும் அநாவசியமான வக்கீல்போல உடனே அனிதா ஓடி வந்து விடுகிறார். இதனால் நிரூப்பின் பெயர்தான் கெட்டுப்போகும்.

பாலா - சுருதி
ஜோடிகள் டாஸ்க்கில் இருந்த சிறு சுவாரஸ்யம் கூட ‘கோழிகள்’ டாஸ்க்கில் இல்லை. போட்டியாளர்களுக்கு ரொமான்ஸ் என்கிற சமாச்சாரமாவது சிறிது வருகிறது. ஆனால் ‘ஆக்ஷன்’ காட்சிகளில் சுத்த மோசம். இவர்கள் கோழியை அப்படிப் போட்டு பலவந்தப்படுத்தியதில், ப்ளூகிராஸில் இருந்து யாராவது வந்து விடப்போகிறார்கள் என்று பயந்தோ, என்னமோ கோழியை உயரத்தில் வைத்து ‘பறக்கும் கோழி’யாக்கி விட்டார் பிக் பாஸ்.

எபிசோட் 46-ல் நடந்தது என்ன?

‘காலை எழுந்தவுடன் நல்ல படிப்பு’ என்றார் பாரதி. ஆனால் தாமரையோ விடிவதற்கு முன்பே அடுத்தவர் முட்டையை ஆட்டையைப் போடும் கெட்ட காரியத்தில் இறங்கினார். இந்த முன்னோடியைப் பின்தொடர்ந்தார் சுருதி. அடுத்ததாக ஜூலி திருட வரும்போது காரியம் கெட்டது. இந்தப் பஞ்சாயத்து விடிந்த பிறகும்கூட நீடித்தது.

முட்டைகளைக் காவல் காக்காமல் பறிகொடுத்த நிரூப்

முட்டைகள் யாரிடமிருந்து திருடப்பட்டன? ரம்யா டீமில் மூவர் உள்ளனர். ரம்யா, நிரூப், சதீஷ். இதில் ரம்யா கூட்டிற்கு உள்ளேயே சுருண்டு தூங்கி விட்டார். முட்டைகள் சம்பாதித்தால்தான் வீட்டின் உள்ளே தூங்குவதற்கு இடம் கிடைக்கும். எனவே போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவிலேயே அமர்ந்து, படுத்து பொழுதைக் கழித்தார்கள். சதீஷை கணக்கிலேயே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த டாஸ்க்கில் கூட அவர் எங்கே இருக்கிறார் என்றுதான் தேட வேண்டியிருந்தது. ஆக.. இந்த அணியில் தூங்காமல் இருந்தவர் நிரூப் மட்டுமே, அவர் முட்டைகளை சரியாகக் காவல் காக்க வேண்டுமா.. இல்லையா?..

நிரூப்
நிரூப்

‘சங்கீத ஸ்வரங்கள்.. ஏழே கணக்கா..’ பாடல் மாதிரி அக்கா அனிதாவுடன் விடிய விடிய புறணி பேசிக் கொண்டிருந்தார் நிரூப் தம்பி. வேறு எதைப் பற்றி? பாலாதான் டாப்பிக். “எதுவா இருந்தாலும் யோசிச்சுதான் பேசணும்” என்று ஆலோசனை தந்து கொண்டிருந்தார் வழக்கறிஞர் அனிதா. இந்த சுவாரசியத்தில் முட்டை திருடு போவதை நிரூப் கவனிக்கவில்லை. கண் எதிரேயே இரண்டு வெள்ளை முட்டைகளை லவட்டிக் கொண்டு சென்றார் சுருதி. இந்த சீசனில் நிரூப்பிற்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்றால் அது அனிதாவால்தான். இவர்களின் நட்பில் சில நல்ல விஷயங்களும் நடக்கிறதுதான். ஆனால் நிரூப்பிற்கு ஒரு பிரச்னை என்றால் தானாக முன்வந்து ஆஜராகும் அநாவசியமான வக்கீல்போல உடனே அனிதா ஓடி வந்து விடுகிறார். இதனால் நிரூப்பின் பெயர்தான் கெட்டுப்போகும்.

இரண்டு மகன்களுக்கு இடையே பாசத்தில் தவிக்கும் தாமரை

தாமரை திருடிய பச்சை முட்டை தொடர்பாக அவருடன் டீலிங் பேசத் தொடங்கினார் பாலா. ஆனால் இரண்டு மணி நேரமாகியும் பேரம் படியாமல் இழுத்தடித்தார் தாமரை. ஒரு வழியாக நிரூப் விழித்துக் கொண்ட பிறகு இந்தத் திருட்டு தொடர்பான பஞ்சாயத்து ஆரம்பித்தது. இதற்கும் கதை வசனம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் ஒரு மாதிரியாகத்தான் புரிந்து கொள்ள முடிந்தது. ‘முட்டையை திருடினாலும்கூட அது கூட்டிற்கு வந்து சேர்ந்தால்தான் சொந்தமாகும்’ என்கிற விதியை சுட்டிக்காட்டினார் சுருதி. அதாவது தன் அணிக்கு எதிராகவே இருந்தாலும் இருக்கும் நியாயத்தை சரியாகப் பேசினார் சுருதி. இதனால் பாலாவிற்கு கோபம் வந்துவிட்டது “பேசாம. அவங்க டீம்ல போய் சேர்ந்துடேன்” என்று சலித்துக்கொண்டார்.

சுருதி
சுருதி

சுருதி சொன்ன விதியை வைத்து தாமரையிடம் நியாயத்தைப் பேசினார் நிரூப். தாமரையால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை. இரண்டு மகன்களுக்கு இடையிலான பாசப் பிணைப்பில் தவித்துக் கொண்டிருக்கிறார் தாமரை. ஒரு பையனுக்கு மம்மூ ஊட்டினால் இன்னொரு பையனுக்கு அசாத்திய கோபம் வந்து விடுகிறது. நிரூப்பின் கெஞ்சலை சகிக்க முடியாமல் தாமரை முட்டையை திருப்பிக் கொடுத்து விட, இப்போது பாலாவிற்கு கோபம் வந்து விட்டது. “நான் அவ்வளவு நேரம் உன் கிட்ட டீலிங் பேசினேன்? அதுக்கு ஒத்து வரலை. இப்ப யாருக்கும் பயன் இல்லாம திருப்பிக் கொடுத்தா என்ன நியாயம்?” என்று பாலா தாமரையுடன் வாக்குவாதம் செய்ய இந்தப் பஞ்சாயத்து சுற்றிச் சுற்றி நீண்ட நேரத்திற்கு போய்க் கொண்டிருந்தது.

எட்டு மணியானதால் காலை பாட்டை ஒலிக்க விட்டார் பிக் பாஸ். “எங்க ஏரியா உள்ள வராதே” என்கிற ரகளையான பாடல் வந்ததும், அனைவருமே அதுவரை நடந்த சண்டையின் சுவடு எதுவும் இல்லாமல் ஜாலியாக நடனம் ஆடத் துவங்கியதைக் கண்டதும் நமக்குத்தான் ஷாக்காக இருந்தது. இப்படித்தான் தினமும் நடக்கிறதா? அடப்பாவிகளா!..

நிரூப்மீது உச்சபட்ச கோபம் கொண்ட ஜூலி

கார்டன் ஏரியாவில்தான் அனைவரும் இருக்க வேண்டிய நிலைமை. வீட்டிற்குள் செல்ல முடியாது. ஒரே இடத்தில் அனைவரும் இருந்தால் நிச்சயம் சண்டை உற்பத்தியாகும் என்பது பிக் பாஸின் உத்திகளுள் ஒன்று. அது நிதர்சனமாகியது. ஜூலிக்கும் நிரூப்பிற்கும் இடையில் முட்டிக் கொண்டது. ஏற்கெனவே இருவருக்கும் ஒரு பனிப்போர் போய்க் கொண்டிருக்கிறது. நாமினேஷன் சமயங்களில் எல்லாம் ஜூலியைக் குத்துவதை நிரூப் ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருக்கிறார். “நீதான் பொய் சொல்றே.. நான்தான் பொய் சொல்றேன்” என்று இவர்கள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டதில், நிரூப் ஒரு கெட்ட வார்த்தையைத் தன்னிச்சையாக சொல்லிவிட்டார்.

 ஜூலி
ஜூலி

இதனால் கொதித்தெழுந்த ஜூலி உச்சபட்ச கோபத்துடனும் அழுகையுடனும் நிரூப்பிடம் சண்டையிட “அது வெளியில நான் சாதாரணமா பேசற வார்த்தை. அதோட சரியான அர்த்தம் தெரியாது. பொய்-ன்ற மீனிங்தான் அதுக்கு” என்று நிரூப் விதம் விதமாக சமாதானப்படுத்த ஜூலி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நிரூப் மன்னிப்பு கேட்டும் இந்த விவாதம் நீ்ண்ட நேரத்திற்கு போனது. இதனால் எரிச்சலான அனிதா “அதான் மன்னிப்பு கேட்டுட்டல.. விடு.. இழுத்துக்கிட்டே போகாத… சப்பை மேட்டர் இது” என்று நிரூப்பிற்கு ஆலோசனை சொன்னார். (அனிதா ஜாலியாக இறைத்த கெட்ட வார்த்தைகள் வீடியோ வைரலாக ஆனதை வெளியில் வந்து அறிந்ததும் என்ன செய்வாரோ?!).

ரம்யா பாண்யடின்
ரம்யா பாண்யடின்

ஒவ்வொரு அணியும் தாங்கள் சம்பாதித்த வெள்ளை முட்டைகளைக் கொண்டு உணவு வாங்க வேண்டிய நேரம். சாம்பார்+ தோசை+ இட்லி என்று சில Combo offer-களை அட்டையில் எழுதி தொங்க விட்டிருந்தார் பிக் பாஸ். ரம்யா அணி கடன் வாங்கி சாப்பிட்டார்கள். “அங்க பாரேன். ஒரு தவளை போகுது” என்று வேடிக்கை காட்டி அபிராமியிடமிருந்து ஒரு கலர் முட்டையை சுட்டுவிட்டார் பாலா. இப்படி அபத்தமாக ஏமாந்தது குறித்து அபிராமிக்கு தன் மீதே கோபம் வந்திருக்க வேண்டும். எனவே அதை பாலாவின் மீது காட்டினார். முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். “டாஸ்க்ல பிரெண்ட்ஷிப்லாம் பார்க்கக்கூடாது” என்று யதார்த்தத்தைப் பேசினார் பாலா. என்றாலும் அபிராமியின் முகவருத்தத்தைக் காண முடியாமல் முட்டையை திருப்பிக் கொடுத்து விட்டார்.

மெகா சைஸ் கோழியைக் கட்செய்து பறக்கும் கோழியாக்கிய பிக் பாஸ்

கார்டன் ஏரியாவில் இருந்த பிரம்மாண்ட கோழியைக் காணோம். மக்கள் அலைமோதி உள்ளே கைவிட்டு அதை விதம் விதமாக இம்சைப்படுத்தியதின் காரணமாக கோழியைக் கொண்டு போய் கட்டிடத்தின் உயரத்தில் வைத்து விட்டார் பிக் பாஸ். இதனால் கையை உள்ளே விடும் உத்தியெல்லாம் இனி பலிக்காது. மேலே இருந்து விழும் முட்டையை போட்டியிட்டு எடுத்தாக வேண்டும்.

முட்டை வருவதற்கான சத்தம் ஒலித்ததும் மக்கள் பாய்ந்து ஓடினார்கள். இதில் ரம்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. ரம்யாவிடமிருந்த முட்டைகளை பலவந்தமாகப் பறிக்கும் நோக்கத்தில் பாலா அவரை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள பாலாவின் கையைக் கடித்து தப்பித்து விட்டார் ரம்யா. (ஓ.. இதுதான் வலிக்காம ஊசி போடறதா?!) “என்னதிது. கையெல்லாம் கடிக்கறாங்க?” என்று சிரித்துக் கொண்டு பாலா புகார் செய்ய “பின்ன.. நீ அப்படிப் பிடிச்சா. நான் என்ன பண்றது?” என்று கோபத்துடன் கேட்டார் ரம்யா. இதனால் டென்ஷன் ஆன பாலா “நான் தப்பா தொட்டேன்னு சொல்றீங்களா?” என்று நேரடியாகவே கேட்டு விட “அப்படின்னு நீங்களா சொல்லிக்காதீங்க” என்று மையமாகவே பேசினார் ரம்யா. உண்மையாகவே சங்கடம் அடைந்தாரா அல்லது முட்டையைக் காப்பாற்றிக் கொள்ள போராடினாரா என்பது ரம்யாவிற்குத்தான் தெரியும். ஆனால் அவர் சொன்ன பதிலில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பெண்கள் எதிர்கொள்ளும் சில சங்கடங்களை டக்கென்று பொதுவில் சொல்லி விடவும் முடியாது.

அனிதா
அனிதா

ஒவ்வொரு அணியும் தாங்கள் சம்பாதித்த தங்க முட்டைகளின் படி சில சிறப்புச் சலுகைகள் பெறலாம். இதன் படி முதலில் சென்றார் நிரூப். அதிர்ஷ்ட தேர்வின் மூலம் அவருக்கு கிடைத்த சீட்டில் “ஏதாவது ஒரு அணியை தேர்வு செய்து அவர்களிடமிருந்து இரண்டு தங்க முட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று இருந்தது. நிரூப் யாரைத் தேர்வு செய்வார் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. அவர் நேராக பாலாவின் அணியிடம் சென்று ‘ரெண்டு தங்க முட்டையைக் கொடுங்க” என்று தெனாவெட்டாக கேட்க மெல்லிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நடுவர் சுரேஷ் தலையிட வேண்டியிருந்தது. “எல்லாத்துக்கும் நானேதான் வரணுமா?” என்று டென்ஷன் ஆனார் சுரேஷ்.

நடுவராக ஓவர் சீன் போட்ட சுரேஷ் தாத்தா

எல்லோரையும் கட்டி மேய்க்கும் நடுவர் பதவி சுரேஷிற்குத் தரப்பட்டது ஒருவகையில் நியாயமே. அவரால்தான் மற்றவர்களை அதட்டி சில விஷயங்களை அழுத்தமாகச் சொல்ல முடியும். வயது காரணமாகவும் அவர் மீது மற்றவர்களுக்கு மரியாதை உண்டு. ஆனால் தனக்கு தரப்பட்ட அதிகாரத்தை வைத்துக் கொண்டு சுரேஷ் சில சமயங்களில் ஓவராக சீன் போட்டுக் கொண்டிருந்தார். தனக்குப் பிடிக்காதவர்களிடம் எரிந்து எரிந்து விழுந்தார். ‘மொட்டை அதிகாரம்’ என்று இதைச் சொல்லுவார்கள். (நோ… நோ. சுரேஷின் தலையை வைத்து சொல்லவில்லை).

பாலா அணியிடமிருந்து ஐந்து வெள்ளை முட்டைகளை வாங்கி ஜூஸ் சாப்பிட்டார் அபிராமி. தனக்கான வாட்டர்மெலன் ஜுஸை ஆர்டர் செய்யும் போது “ஐஸ் தூக்கலா இருக்கணும். சர்க்கரையும் தூக்கலா இருக்கணும்” என்கிற ஜூலியின் குறிப்புகளைக் கேட்டு பிக் பாஸ் உள்ளே டென்ஷன் ஆனாரோ.. என்னமோ?..

சுரேஷ்
சுரேஷ்

“நான் கடன் வாங்கவில்லை. விலையில்லா முட்டை அது”

ஓகே.. அபிராமி ஐந்து முட்டைகளை வாங்கினார் அல்லவா? அது பின்னால் பெரிய பிரச்சினையாக மாறிற்று. ‘நான் கடனாக வாங்கவில்லை. பாலாவிடம் இலவசமாக வேண்டித்தான் பெற்றேன்” என்று தற்செயலாக அபிராமி கூறியதைக் கேட்டு சுருதிக்கு ஷாக். “ஹலோ.. என்ன சொல்றே? நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச முட்டைகளை சும்மா தூக்கிக் கொடுப்போமா.. நான் உன் கிட்ட தரும் போது ‘பாலா கிட்ட கடன் கேட்டியாமே.. இந்தா’ன்னு சொல்லித்தான் கொடுத்தேன்” என்று சுருதி ஆத்திரமாக பேச “இதையெல்லாம் என் கிட்ட பேசாத. நான் பாலா கிட்டத்தான் கேட்டு வாங்கினேன். கடன்-ன்ற வார்த்தையே என் வாயில் வரலை” என்று அபிராமியும் பதிலுக்கு மல்லுக்கட்டினார். இந்தச் சமயத்தில் பிரச்சினையில் தலையிட வேண்டிய பாலாவோ தாமரையிடம் எதையோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார். மெயின் சாட்சியான பாலாவைக் கூப்பிடாமல் அபிராமியும் சுருதியும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

பாலா
பாலா

ஒருவழியாக வந்து சேர்ந்தார் பாலா. இது அபிராமி தொடர்பானது என்பதால் பாலாவால் வழக்கம் போல் டெரராக பேச முடியாது. அம்மணி ஏற்கெனவே வருத்தத்தில் இருக்கிறார். எனவே முகத்தை சாஃப்ட்டாக மாற்றிக் கொண்டு “நான் கடன்-ன்ற அர்த்தத்திலதான் கொடுத்தேன்” என்று மெல்லிய குரலில் பாலா சொல்ல “பாத்தியா.. இப்ப என்ன சொல்றே?” என்று சுருதியின் குரல் உற்சாகமாக உயர்ந்தது. ஆனால் அப்போதும் “நான் கடன் வாங்கவேயில்லை. திருப்பித்தர முடியாது” என்று சாதித்தார் அபிராமி. இது அபத்தமான வாதம். சுருதி சரியாக கேட்பது போல், யாராவது ஐந்து முட்டைகளை இலவசமாக தருவார்களா என்ன? அதற்கு எத்தனை பிறாண்டல்களைக் கடந்து வர வேண்டியிருந்தது?

அடுத்த தங்க முட்டை சலுகையைப் பெற அபிராமி அழைக்கப்பட்டார். இதற்கான துண்டுச்சீட்டின் விதியை அறிவதற்காக அனிதா அவசரப்பட சுரேஷ் டென்ஷன் ஆகி “அந்தப் பொண்ணு இங்க நின்னா.. நான் தர மாட்டேன்” என்று பந்தா பண்ண “நான் இங்க நின்னா என்னவாம்?” என்று சுரேஷை வெறுப்பேற்றினார் அனிதா. ஒருவழியாக அந்த விதியை நாம் அறிய முடிந்தது. ‘அடுத்த முறை முட்டைக்கான பஸ்ஸர் ஒலி வந்ததும், ஏதாவது ஒரு அணியைத் தேர்வு செய்து இரண்டு கோழிகளை ஒன்றாக கட்டி விடலாம்”.. இதுதான் அபிராமி அணிக்கு வந்த சிறப்புச் சலுகை. இதற்காக நிரூப் மற்றும் ரம்யாவைத் தேர்ந்தெடுத்தார் அபிராமி. ஆனால் பஸ்ஸர் அடித்த போது தங்களுக்கு இடப்பட்டிருந்த கைவிலங்கு தடையையும் மீறி இரண்டு முட்டைகளை சாமர்த்தியமாக கைப்பற்றிக் கொண்டு வந்தது நிரூப்+ ரம்யா கூட்டணி.

தங்க முட்டை சலுகைக்காக இரண்டாவது முறை சென்றார் நிரூப். அவருக்கான அதிர்ஷ்ட சீட்டில் “அடுத்த முறை பஸ்ஸர் அடிக்கும் போது கீழே விழும் அனைத்து முட்டைகளையும் நிரூப் அணி மட்டுமே எடுக்க வேண்டும். மற்றவர்கள் அருகே வரக்கூடாது” என்கிற சலுகை தரப்பட்டிருந்தது. இதனால் நிரூப் அணி உற்சாகம் ஆனது.

BB Ultimate
BB Ultimate

நிரூப் அணிக்கு செக் மேட் வைக்க பாலா அணியினர் முடிவு செய்தார்கள். அவர்களும் தங்க முட்டைக்கான சிறப்புச் சலுகையை தேடிச் சென்றார்கள். அதில் வரும் வாய்ப்பை வைத்து நிரூப் அணியை கட்டுப்படுத்த முடியுமா என்பது அவர்களின் நோக்கம். அவர்களுக்கு வந்த சலுகை என்னவென்றால் “முட்டை எடுப்பதற்கான இரண்டு பஸ்ஸர்களுக்கு இடைப்பட்ட நேரம் முழுவதற்கும் எதிரணி நபர்களை நொண்டி நொண்டி வரச் செய்ய முடியும். இந்த கோக்குமாக்கான விதியை எப்படி திறமையாக பயன்படுத்த முடியும் என்று பாலா, சுருதி, ஜூலி ஆகிய மூவரும் தீவிரமாக ஆலோசனை செய்வதோடு எபிசோட் நிறைவடைந்தது.

இதற்கிடையில் ஒரு விஷயம். கார்டன் ஏரியாவில் இருந்த மெகா சைஸ் கோழி மட்டுமல்ல, சதீஷ் என்கிற ரேடியோப் பெட்டியையும் கூடவே காணவில்லை.