பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கண்ணீர் மல்க ஒரு வேண்டுகோள். “சண்டை போடுங்க. வேணாங்கலை. ஆனா எதுக்கு சண்டை போடறீங்கன்னு தெளிவா சொல்லிட்டு போடுங்க. பக்கத்து வீட்டு சண்டையை பத்து நிமிஷம் கழிச்சு வேடிக்கை பார்க்கப் போனா மாதிரி ஒரே குழப்பமா இருக்குது”…
எபிசோட் 47-ல் நடந்தது என்ன?
பாசமலர் திரைப்படத்திலிருந்து ‘மலர்ந்தும் மலராத’ பாடலை ஒலிக்க விட்டார் பிக் பாஸ் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்? இல்லைல்ல.. எனவே ஏதோ ஒரு குத்துப்பாடல் அலற ஆரம்பிக்க, மக்கள் தூங்கியபடி ஆடினார்கள். அனிதா நல்ல உறக்கத்தில் இருந்ததால், ஒரு தேர்ந்த திருடன் போல அவரின் கூட்டை மெல்ல நெருங்கினார் ஜூலி. ‘சத்தம் வந்து விடக்கூடாது’ என்பதற்காக அப்போது ஜூலி கொடுத்த எக்ஸ்பிரஷன் இருக்கிறதே.. பயங்கரம். இந்தக் காட்சியை திகில் படத்தின் கிளைமாக்ஸ் மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார் ரம்யா.
ஜூலியின் திருட்டு சக்ஸஸ் ஆனதும், ரம்யாவும் களத்தில் இறங்கி தானும் ஒரு முட்டையை சுட்டுக் கொண்டு வந்தார். அதே டெரரான எக்ஸ்பிரஷனுடன் அடுத்த சுற்று வேட்டைக்காக ஜூலி சென்ற சமயத்தில் குளிக்கச் சென்றிருந்த அபிராமி திரும்பி வந்து இந்தக் களவாணித்தனத்தைப் பார்த்து விட ஜூலி வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று. ‘ஸாரிடா… தூங்கிட்டேன்’ என்று மன்னிப்பு கோரும் தொனியில் சொன்னார் அனிதா.
“உங்களில் யார் சிறந்த வாயாடி?”
எந்த அறிகுறியும் இல்லாமல் அடுத்த டாஸ்க் துவங்கியது. “சும்மா பேசிட்டே இருக்காதீங்க.. அடிச்சுக் காட்டுங்க” என்று பிக் பாஸ் திட்டமிட்டிருக்க வேண்டும். வெவ்வேறு அணியில் இருந்து தலா ஒரு நபர் எழுந்து வந்து பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார்களைப் பதிவு செய்ய வேண்டும்; அதற்கு விளக்கமும் தர வேண்டும். இந்த வாக்குவாதத்தில் யார் சிறந்த வாயாடியாக விளங்குகிறாரோ, அவரை மற்ற போட்டியாளர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். வெற்றி பெற்ற வாயாடிக்கு சிறப்பு முட்டை பரிசு.
முதலில் வந்து நின்றவர்கள் தாமரை மற்றும் சுருதி. “எப்பப் பாரு ‘நான் கிராமத்துல கஷ்டப்படறவ’ன்னு தாமரையக்கா சொல்லி அனுதாப ஓட்டு தேடறாங்க. இதை நிறைய முறை சொல்றாங்க.. நாங்களும்தான் கஷ்டப்படறோம்” என்கிற குற்றச்சாட்டை சுருதி முன்வைக்க “பக்கி.. நான் அப்படிச் சொல்லிக்கிட்டே இருந்தேனா?” என்பது மாதிரி தன் தரப்பை ஆரம்பித்த தாமரை “நீங்க கொஞ்ச காலம் வளர்ந்தது கிராமமா இருக்கலாம். நான் பொறந்து இன்னமும் வாழறதே கிராமம்தான். அங்க இருக்கற பிரச்சினையை நான்தான் சொல்லியாகணும். அது எனக்கு தப்பா தெரியல. நான் மட்டும்தான் கஷ்டப்படறேன்னு சொல்லல” என்று ஆவேசமாக இறங்கி அடித்தார்.

“கிராமத்துல இருந்து வந்தேன்னு பொழுதன்னிக்கும் ஒப்பாரி வெச்சுட்டா இருக்கேன்? டாஸ்க்லாம் நான் நல்லா விளையாடலையா? எல்லா வீட்டு வேலையும் செய்யலையா?.. நீ கூடத்தான் ‘நான் ஒரு மாடல்.. அதுக்கேத்த மாதிரி டாஸ்க் கொடுங்க’ன்னு பிக் பாஸ் கிட்ட கேட்கலை? நான் நாடக நடிகைன்னு சொல்றதுல என்ன தப்பு?.. எங்க நாடக உலக சமுதாயத்திற்காக நான் போராடியே தீருவேன். எங்க கிராமத்தை நான் முன்னுக்கு கொண்டு வந்தே தீருவேன்” என்று மாஸ் படத்தின் ஹீரோ மாதிரி பன்ச் டயலாக்குகளை தாமரை அள்ளி விட கூட்டத்தில் விசில் பறந்தது. “இந்த சோகக் கதையெல்லாம் ‘கடந்து வந்த பாதை’-லயே சொல்லியாச்சு. கிராமத்துல மட்டும்தான் கஷ்டமா? எல்லோருக்கும்தான் கஷ்டம் இருக்கு” என்று சுருதி சமாளித்தாலும் தாமரையின் ஆவேசப் பேச்சிற்குத்தான் வரவேற்பு கிடைத்தது. (அது சரியோ, தவறோ.. பேச்சுப் போட்டியில் ஏற்ற இறக்கத்துடன் உரக்கப் பேசுகிறவர்களுக்குத்தான் கைத்தட்டலும் வெற்றியும் கிடைக்கும்).
இறுதியில் தாமரைக்கு 13 முட்டைகளும் சுருதிக்கு வெறும் மூன்றே முட்டைகளும் கிடைத்தன. கிராமம் சார்பாக ஆவேசப்பட்ட தாமரைக்கு ‘கிராமபோன்’ என்கிற பட்டத்தை அளித்து மகிழ்ந்தார் சுரேஷ். தாமரைக்கு ஆதரவாக அனிதாவும் வந்து சாட்சி சொன்னார். இந்தச் சமயத்தில் பாலாவைப் பற்றி இவர் சாடைமாடையாக எதையோ பேச “நேராப் பேசுங்க” என்று டென்ஷன் ஆனார் பாலா. (இவிய்ங்க சண்டை என்னிக்கு ஓயுமோ?!). வெற்றி பெற்றி தாமரை அணிக்கு நீல நிறத்திலான முட்டை பரிசாக கிடைக்கும்.
“பிக் பாஸ் மட்டும் முட்டையை தூக்கிப் போடலையா?” – நிரூப்பின் அழிச்சாட்டியம்
கோழி டாஸ்க் தொடர்ந்த போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார் நிரூப். உணவு வாங்குவதற்காக அபிராமி அணி ஒரு வெள்ளை முட்டையை கடனாக கேட்க, அதை தனது இடத்திலிருந்தே தூக்கிப் போட்டார் நிரூப். நட்பு கருதி அனிதா இதை பொறுத்துக் கொண்டார். பாசம் கருதி தாமரையும் பொறுத்துக் கொண்டார். ஆனால் முன்னாள் காதலிகள் சமயங்களில் ஆபத்தானவர்கள். இதை அவமதிப்பாக எடுத்துக் கொண்ட அபிராமி கடுமையாக ஆட்சேபித்தார்.

“இது தெர்மகோல் முட்டைதானே. அதனாலதான் தூக்கிப் போட்டேன். நான் என்ன சாப்பாட்டையா தூக்கிப் போட்டேன்.. இதுக்கு ஏன் இவ்வளவு சீனு?” என்றெல்லாம் டென்ஷன் ஆன நிரூப் அடுத்து சொன்ன ஒரு லாஜிக்கைக் கேட்டு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. “பிக் பாஸ் கூடத்தான் மேலே இருந்து முட்டையைத் தூக்கிப் போடறாரு.. அதை நாம போய் எடுக்கலையா?” என்று அதிரடியாக சொல்ல எதிரணி வாயடைத்துப் போனது. “ஸாரி” என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கக்கூடிய விஷயத்தை நிரூப் இத்தனை இழுத்திருக்க வேண்டாம். அவர் இப்படி சமாதானமாக போகக்கூடியவர்தான். ஆனால் நிரூப்பின் நேரடியான புகைச்சல் பாலா மீது. எனவே பாலாவின் ‘நண்பரான’ அபிராமியின் மீதும் அது தன்னிச்சையாக பாய்கிறது.
“உரக்கப்பேசினா அது உண்மையாயிடாது” – ரம்யாவின் வாக்குவாதம்
‘வாயாடி’ டாஸ்க்கில் அடுத்ததாக பாலா மற்றும் ரம்யா வந்து மோதத் துவங்கினார்கள். (சபாஷ்! சரியான போட்டி!). “பாலாவை விட எனக்கு தன்னம்பிக்கை அதிகம்” என்று ஆரம்பத்திலேயே திரியைப் பற்ற வைத்தார் ரம்யா. “ஹே.. ஹே.. ஊரே இதை நம்பாது.. இந்த விஷயத்துல சிம்புவே என்னை பாராட்டியிருக்கார். என் கான்ஃபிடன்ஸ் லெவலை யாரும் கேள்வி கேட்கவே முடியாது” என்று பாலா கவுன்ட்டர் கொடுக்க “இதுக்குப் பேரு ஓவர் கான்பிடன்ஸ். கத்திப் பேசினா அது உண்மைன்னு ஆயிடாது. சரியான விஷயத்தை சாதாரண டோன்லயும் சொல்லலாம்” என்று ரம்யா பதில் கவுன்ட்டர் தந்தார்.
இந்தச் சமயத்தில் பாலா வாயை விட்டு மாட்டிக் கொண்டார். “எனக்கு இருக்கறது ஓவர் கான்பிடன்ஸா.. இல்லையான்னு வெளியே மக்கள் சொல்வாங்க” என்று சவடால் விட, “ரேங்கிங் டாஸ்க்ல இதே விஷயத்தை நீங்கதானே மறுத்தீங்க.? இது வீட்டுக்குள்ள நடக்கற டாஸ்க்கு. இதுக்கும் மக்களுக்கும் என்ன சம்பந்தம்ன்னு சொன்னீங்களே?” என்று சரியான கிடுக்கிப்பிடியை போட்டார் ரம்யா. (என்ன இருந்தாலும் ஸ்வப்னா புத்திசாலிதான்!). “இது என் கேரக்ட்டர் பத்தின விஷயம்” என்று சொல்லி பாலா சமாளிக்க வேண்டியிருந்தது.

‘குஷி’ திரைப்படத்தின் ‘இடுப்பைப் பாத்தியா” காட்சியைப் போல, அடுத்ததாக ரம்யாவை பாலா வளைத்துப் பிடித்த விவகாரம் விவாதத்திற்கு வந்தது. “பாலா என்னை வளைச்சுப் பிடிக்கும் போது நான் கடிச்சது ரிப்ளெக்ஸ் ஆக்ஷன். நான் அதை தப்பாவே சொல்லலை. ஆனா பாலாவிற்கே உள்ளூற பயம் வந்துடுச்சு. நம்ம பேரு கெட்டுடுமோன்னு. எனவேதான் அதை கேள்வியா கேட்டு ரிஜிஸ்டர் பண்ணிட்டார்” என்று ரம்யா அடுத்த புகாரை வைக்க “நீங்க கடிச்சத பத்தி நான் கம்ப்ளெயிண்ட்டே பண்ணலை. உங்களுக்குத்தான் கடிச்சத பத்தி பயம்” என்று பாலாவும் பதிலுக்கு மல்லுக்கட்டினார்.
இந்த விஷயத்தில் பாலாவின் பக்கம் நியாயமுள்ளது. பெண்களுடனான டாஸ்க் நேரத்தில் விவகாரமான புகார் வந்தால் அதை உடனே பொதுவில் தெளிவுப்படுத்தி விட வேண்டியது ஆண்களின் கடமை. ஏன் உள்ளார்ந்த அச்சம் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இந்தக் கேஸ் அப்படியானது. சம்பவம் நடந்த போது, ரம்யா உள்குத்தாக எதையோ சொல்லிக் கொண்டேயிருக்க “நான் தப்பா தொட்டதா சொல்றீங்களா?” என்று பாலா நேரடியாக கேட்டது இயல்பான டிஃபென்ஸ் ஆட்டம். (சேரன் – மீரா மிதுன் விவகாரமெல்லாம் நினைவிற்கு வருகிறதா?!)
“பாலாவே ஒரு ரூல் போடுவாராம். அப்புறம் அவரே..”
“இவரே பாம் வைப்பாராம்.. இவரே அப்புறம் எடுப்பாராம்” என்கிற முதல்வன் திரைப்படம் வசனம் மாதிரி “பாலாவே ஒரு ரூல்ஸ் போடுவாராம். அப்புறம் அவர் செளகரியத்திற்கு ஏத்த மாதிரி இவரே மாத்திடுவாராம்” என்று ரம்யா அடுத்த புகாரை முன் வைக்க “வைல்ட் கார்ட் எண்ட்ரில வந்துட்டதால எதையாவது செஞ்சு பேர் வாங்க நெனக்கறாங்க. ரம்யா.. அது நடக்காது” என்று இதை மறுத்தார் பாலா. “கேப்டனே தூங்கினா அவருக்கும் தண்டனை பொருந்தும்” என்று இந்த விவாதம் இன்னமும் இழுத்துக் கொண்டே போனது.

ஒருவழியாக பஸ்ஸர் அடித்ததும் இதர போட்டியாளர்கள் வாக்களிக்க எழுந்து வந்தார்கள். “ரேடியோ டாஸ்க் சரியா பண்ணலைன்னா ஜாலியா தண்டனை தருவேன்” என்று பாலா இயல்பாக முன்பு சொன்னதை சதீஷ் இன்னமும் மறக்கவில்லை போல. எனவே ரம்யாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். இந்தச் சுற்றில் ரம்யாவிற்கே அதிக ஆதரவு வந்தது. அனிதா எழுந்து வந்த போது அவர் யாரை எதிர்ப்பார் என்பதை யூகிக்க சிரமமே தேவையில்லை. பாலாவை எதிர்த்தாலும் ஒரு பாயிண்ட்டிற்கு மட்டும் பாலாவை ஆதரித்து ஆச்சரியப்படுத்தினார் அனிதா.
‘கேப்டன்களின் புகைப்படம் கொண்ட ஸ்பெஷல் முட்டை’
இந்தச் சமயத்தில் பாலாவிற்கும் அனிதாவிற்கும் விவாதம் எழுந்து மேலும் இழுத்துக் கொண்டே போகவே சுரேஷ் டென்ஷன் ஆகி விட்டார். அவருக்கு பசி நேரம் வந்து விட்டதோ என்னமோ. “சீக்கிரம் ஓட்டு போட்டு முடிங்க” என்று சுரேஷ் எரிந்து விழுந்ததும் “அடுத்த பாயிண்டை சுருக்கமா முடிச்சுடறேன்” என்று ஆரம்பித்த அனிதா, இன்னமும் அரைமணி நேரத்திற்கு எனர்ஜியுடன் பேச தயாராக இருந்தார். பிக் பாஸிற்கே இப்போது பசி நேரம் வந்து விட்டது போல. “இந்த விவாதம் பாலாவிற்கும் ரம்யாவிற்குமானது. அவர்கள் விவாதித்து முடித்து விட்டார்கள்” என்று டென்ஷன் ஆன குரலில் அறிவிப்பு செய்ததும் அடிஷனல் ஷீட் வாங்க முடியாத மாணவன் போல அரைமனதாக வந்து அமர்ந்தார் அனிதா. இந்தச் சுற்றில் பாலாவிற்கு ஏழு வாக்குகளும் ரம்யாவிற்கு ஒன்பது வாக்குகளும் விழுந்தன. ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார் பிக் பாஸ்.

“நம்ம கதைல இனிமேதான் ஒரு முக்கியமான டிவிஸ்ட் நடக்கப் போவுது” என்பது போல் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் நடுவர் சுரேஷ். இதுதான் டாஸ்க்கின் முக்கியமான திருப்புமுனையாம். அதாவது ஒரு புதுவகையான முட்டை வந்து விழுமாம். அந்த முட்டையில் அணித்தலைவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்குமாம். சம்பந்தப்பட்ட அணி அந்த முட்டையை கைப்பற்றி விட்டால் அதிக ஆற்றல் கிடைக்குமாம். எனவே இதைக் கவனமாக பாதுகாக்க வேண்டுமாம். மாறாக எதிரணி கைப்பற்றி விட்டால் முட்டையின் ஆற்றல் பறிபோய் விடுமாம். கைப்பற்றிய எதிரணி முட்டையை வீட்டினுள் எங்காவது ஒளித்து வைக்கலாமாம். சம்பந்தப்பட்ட அணி இதைத் தேடி எடுத்துக் கொள்வது அவர்களின் சாமர்த்தியமாம்.
டாஸ்க் ஆரம்பித்தது. முட்டைகள் விழ ஆரம்பித்தன. “மூச். யாரும் முட்டையை எடுக்க போகக்கூடாது. கோழி கத்தினாதான் நீங்க நகரணும்” என்று கறாராக சொல்லி விட்டார் சுரேஷ். ஆனால் அவர் பிக் பாஸ் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டாரோ, என்னமோ. கண் எதிரிலேயே முட்டை விழுந்தும் எடுக்க முடியாமல் போட்டியாளர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள்.
‘நாம ஒண்ணும் ஸ்கூல் பசங்க கிடையாது’ – டென்ஷன் ஆன சுரேஷ்
சில நிமிடங்கள் கழித்து ஸ்கூல் ஹெட்மாஸ்டர் தொனியில் சுரேஷ் காட்டமாக பேச ஆரம்பித்தார். “நாம கின்டர் கார்டன் பசங்க கிடையாது. பெரியவங்க. எனவே டாஸ்க்கை புத்திசாலித்தனமாவும் சுவாரசியமாகவும் ஆடணும். இனிமே கோழி கூவாது. நீங்களாத்தான் யோசிச்சு திறமையா ஆடணும்”………… இப்படி தொண்டைத் தண்ணீர் போக பாடம் எடுக்கும் வாத்தியார் மாதிரி சுரேஷ் உயிரை விட்டு பேசிக் கொண்டிருக்க, பின்பெஞ்ச் மாணவன் மாதிரி ஹாயாக தூங்கிக் கொண்டிருந்தார் ஜூலி. கிட்டத்தட்ட பள்ளியில் அதே நடக்கும் அதே பாணியிலான சம்பவங்கள் இப்போது நடந்தன. “ஜூலி.. கெட் அப்.. என்ன பண்ணிட்டு இருக்கே.. இங்க ஒருத்தன் கத்திக்கிட்டு இருக்கான்.. நீ பாட்டுக்கு தூங்கறே.. நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்.. சொல்லு பார்க்கலாம்” என்று வாத்தியார் மாதிரியே சுரேஷ் மிரட்டினார்.

ஜூலிக்குள் இருக்கும் எல்கேஜி மாணவி இன்னமும் அவருக்குள் கணிசமாக மீதமிருக்கிறார் போலிருக்கிறது. நாமினேஷன் சமயத்தில் தன் பெயர் சொல்லப்படும் அசந்தர்ப்பமான நேரத்தில் கூட ‘பிரசண்ட் சார்’ என்று பின்பெஞ்ச் காமெடி செய்வது ஜூலியின் வழக்கம். எனவே இந்தச் சமயத்திலும் அதையே செய்தார். “கண் அசந்து தூங்கிட்டேன் தாத்தா..” என்று வைக்கோலை கடித்துக் கொண்டு குழந்தை மாதிரியே மலங்க மலங்க விழித்து ஜூலி பேச, இதர மாணவர்களுக்கு சிரிப்பாணி பொங்கியது. சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்கள். இதனால் சுரேஷின் டென்ஷன் இன்னமும் கூடியது. “இதுக்குத்தான் சொன்னேன்.. நாம எல்கேஜி பசங்க கிடையாது” என்று தன் குரலில் டெரரைக் கூட்ட பள்ளி மாணவர்கள் இன்னமும் உற்சாகமாக சிரிக்க ஆரம்பித்தார்கள். ஜூலியும் தன் குழந்தை முகத்தை மாற்றிக் கொள்ளாமல் சேட்டை செய்தார்.

சுரேஷ் ஏற்கெனவே டென்ஷன் பார்ட்டி. இதில் பிக் பாஸ் வேறு உள்ளே கூப்பிட்டு டோஸ் விட்டிருக்கிறார் போலிருக்கிறது. அதையெல்லாம் சொல்லி போட்டியாளர்களை எச்சரித்து ஒழுங்காக விளையாடச் சொல்லலாம் என்று பார்த்தால். இந்தப் பால்வாடி பசங்களை வைத்து மேய்ப்பதற்குள்.. ஒரு கணம் பிக் பாஸாகவே மாறி “இன்னிக்கு சம்பளம் உங்களுக்கு வேஸ்ட்டு” என்று சொல்லும் அளவிற்கு சென்று விட்டார் சுரேஷ். ஆனால் சுரேஷின் டென்ஷனையும் அதிகம் குற்றம் சொல்ல முடியாது. பசங்க செய்த ராவடி அப்படி.
‘கோழிக்கு தொண்டை கட்டிக்கிச்சு.. இனிமே கூவாது’
‘அலெர்ட்டா இருங்க’ என்று சொன்ன சுரேஷ், கோழி கத்துவதற்குப் பதிலாக ‘1… 2.. 3.. கோ’ என்று திடீரென்று சத்தம் போட, இதை எதிர்பார்க்காத போட்டியாளர்கள் அலறியடித்துக் கொண்டு முட்டையை எடுக்க ஓடினார்கள். “இனிமே கோழி கூவாது” என்று சுரேஷ் சொன்னாலும், அடுத்த முறை கோழி கூவிய பின்புதான் முட்டைகள் விழ ஆரம்பித்தன. இந்த நெரிசலில் புகுந்து எதிர் அணித் தலைவர் புகைப்படம் உள்ள ஸ்பெஷல் முட்டையை சதீஷ் எப்படியோ லவட்டிக் கொண்டு வந்து விட்டார். இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து சதீஷ் உருப்படியாக செய்த முதல் காரியம் இதுதான் போல. எனவே நிரூப்பும் சுரேஷூம் “சூப்பர்டா.. செம” என்று சதீஷைப் பாராட்டினார்கள்.

இப்போது முட்டையை ஒளித்து வைக்க வேண்டிய நேரம். ஒரு முட்டையை கட்டணமாக செலுத்தி வீட்டிற்குள் நிரூப்பும் சதீஷூம் சென்றார்கள். கிச்சன் ஏரியா அருகில் இருக்கும் வட்டமான படுக்கையை பாகுபலி மாதிரி நிரூப் தூக்க “இங்க வேணாம் ப்ரோ. கண்டுபிடிச்சுடுவாங்க” என்று தடுத்தார் சதீஷ். வேறு வாகான இடம் தேடி இவர்கள் அலைந்து கொண்டிருக்கும் போது “பாலா.. இந்தப் பக்கமே பார்ப்பான்.. பாரேன்” என்று நிரூப் சொல்ல அது உண்மையாகவே நடந்தது. இவர்களை வெளியில் இருந்து ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார் பாலா.
எனவே ரூட்டை மாற்றிய நிரூப் பெட்ரூமிற்குச் சென்று ஒரு படுக்கையைத் தேர்ந்தெடுத்தார். ஏதோ கொலை செய்து பிணத்தை மறைப்பது போல கருப்புத் துணியால் முட்டையை முடி படுக்கையின் அடியில் தள்ளி அதன் மீது போலியான தடங்களை ஏற்படுத்தி.. ஃபுரொபஷனல் கில்லர் போல செயல்பட்டுக் கொண்டிருந்த நிரூப்பிற்கு உதவி செய்தார் சதீஷ்.
மூன்று பாக்கெட் காஃபி பவுடர், அரைகிலோ சிக்கன், இரண்டு தோசை மாவு பாக்கெட் என்று லக்ஸரி பட்ஜெட்டிற்காக இவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே?! முடியல.