Published:Updated:

BB Ultimate 51: "கையைக் கடிச்சாங்க,பெரிசா எடுத்துக்கல; சொன்ன விதம்..." ரம்யாவை நாமினேட் செய்த பாலா!

ரம்யா பாண்யடின்

பாலா வின் முறை வரும்போது ஒவ்வொரு போட்டியாளரையும் மதிப்பிடுவதற்காக அவர் நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டார். அலசி, பிழிந்து, காயவைத்து, மடித்து, அயர்ன் செய்த பிறகுதான் கிளம்பினார்.

Published:Updated:

BB Ultimate 51: "கையைக் கடிச்சாங்க,பெரிசா எடுத்துக்கல; சொன்ன விதம்..." ரம்யாவை நாமினேட் செய்த பாலா!

பாலா வின் முறை வரும்போது ஒவ்வொரு போட்டியாளரையும் மதிப்பிடுவதற்காக அவர் நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டார். அலசி, பிழிந்து, காயவைத்து, மடித்து, அயர்ன் செய்த பிறகுதான் கிளம்பினார்.

ரம்யா பாண்யடின்
அல்டிமேட் சீசனின் ஐம்பதாவது நாள். “இப்பத்தான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு” என்று சொல்வது ஒரு மரபு. இந்தச் சிறப்பான நாளில், நிகழ்ச்சியும் சிறப்பாக இருக்குமா என்று பார்த்தால்.. ம்ஹூம்.. ஒரு சுமாரான கருத்தரங்கில் அதை விடவும் ஒரு சுமாரான பவர்பாயிண்ட் பிரசன்டேஷணை கொட்டாவியை மென்று கொண்டே பார்த்தது போல் இருந்தது. இடையில் பிக் பாஸ் நமக்கு டீ தந்திருந்தாலாவது தூக்கம் கலைந்திருக்கும்.

எபிசோட் 51-ல் நடந்தது என்ன?

50-வது நாள் மூடில் பிக் பாஸ் உற்சாகமாக இருக்கிறார்போல. எனவே ‘இச்சு.. இச்சு.. இச்சு.. கொடு’ என்கிற பாடலை காலையில் அலறவிட்டார். அனிதா சென்றுவிட்டதால் சுரேஷின் சக்தியும் போயவிட்டதுபோல. உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரை கைத்தாங்கலாக கன்பெஷன் ரூமிற்கு அழைத்துச் சென்றார்கள். இதைப்போலவே அனிதாவின் வெற்றிடம் நிரூப்பிற்கும் இழப்புதான். ஆனால் ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ பாலிசியில் அவர் சுருதியோடு செல்லமாக விளையாடிக் கொண்டிருந்தார். “இங்க பெருக்கு.. அங்க பெருக்கு.. கார்டன் ஏரியா முழுக்க சுத்தமா இருக்கணும்” என்று சுருதிக்கு இம்சை தந்து கொண்டிருந்தார்.

பாலா
பாலா

அது எத்தனை நெருங்கிப் பழகுபவராக இருந்தாலும் அவரிடம் சட்டென்று ஏடாகூடமாக எதையாவது சொல்லிவிடுவது பாலாவின் வழக்கம். இந்த வகையில் அவர் தாமரையிடம் ‘சுள்’ளென்று ஏதோ சொல்லிவிட “ஏன்டா… தம்பி இப்படியெல்லாம் பேசறே?” என்று பரிதாபமாக கேட்டுக் கொண்டிருந்தார் லோட்டஸ்.

தைரியசாலியா, நடிகரா, சிறந்த போட்டியாளரா?

‘யாரென்று தெரிகிறதா?’ என்கிற தலைப்பில் ஒரு டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஒருவர் தன்னுடைய சக போட்டியாளர்களைப் பற்றி என்ன நினைக்கிறார், அவரின் குணாதிசயங்களை எப்படி மதிப்பிடுகிறார் என்பதை அலசி ஆராய வேண்டும். இதன் மூலம் பார்வையாளர்களுக்கும் சில விஷயங்கள் தெளிவாகும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒருவரைப் பற்றி இதர போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக வந்து ‘இவரைப் பத்தி நான்.. என்ன சொல்றது.. ம்..” என்று இழுத்து இழுத்து பேசி மதிப்பிடுவதற்குள் நம் பொறுமை காணாமல் போனது. அத்தனை நீளமான டாஸ்க். இத்தனைக்கும் இதில் மதிப்பிடப்பட்டவர்கள் ஆறு நபர்கள்தான். ரம்யாவும் அபிராமியும் அடுத்த ரவுண்டில் வருவார்கள் போலிருக்கிறது. உடல்நலம் குன்றிய காரணத்தினால் சுரேஷ் தாத்தா இதில் காணப்படவில்லை.

தாமரை
தாமரை

ஒரு குறிப்பிட்ட போட்டியாளரின் புகைப்படம் போர்டின் தலைப்பில் ஒட்டப்பட்டிருக்கும். ‘சிறந்த போட்டியாளர்’, ‘நடிகர்’, ‘தைரியசாலி’, ‘பொறாமை பிடித்தவர்’, ‘நமக்கு ஏன் வம்பு?’, ‘சிறந்த பொழுதுபோக்கு கலைஞர்’ என்று ஆறு பிரிவுகளில் உள்ள மேக்னடிக் போர்டை எடுத்து தரப்பட்டிருக்கும் சதவீதத்திற்குள் பொருத்த வேண்டும். ‘பொறாமை பிடித்தவர்’ என்கிற தலைப்பில் வைக்க யாருமே விரும்பவில்லை. அந்த ஆப்ஷன் இருந்ததால் அரைமனதாக வைத்தார்கள். ‘இந்த வீட்டில் பொறாமை பிடிச்சவங்கன்னு யாரும் கிடையாது’ என்று வந்த அனைவருமே சொல்லியது நல்ல அடையாளம்.

‘என்டர்டெயின்மென்ட் ஏரியால சுருதி வீக்’

முதலில் சுருதியின் புகைப்படம் வந்தது. மற்றவர்கள் ஒவ்வொருவராக ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு வந்து தனிமையில் சுருதியைப் பற்றி மதிப்பிடவேண்டும். முதலில் வந்த நிரூப் ‘தைரியசாலி’ என்கிற சான்றிதழை சுருதிக்குத் தந்து ‘அவ Introvert.. டாஸ்க்லாம் நல்லாப் பண்ணிடுவா. பொழுதுபோக்கு விஷயங்கள் கம்மிதான்” என்று மதிப்பிட்டார். பின்னால் வந்தவர்களும் ஏறத்தாழ இதே விஷயத்தைத்தான் சொன்னார்கள். மற்றவர்களை என்டர்டெயின் செய்வதில் சுருதி பெரிதும் பின்தங்கியிருக்கிறார். அடுத்து வந்த ரம்யா ‘சிறந்த போட்டியாளர்’ என்கிற பிரிவில் சுருதிக்கு அதிக சதவிகிதத்தைத் தந்தார். “நடிக்கறாங்க” என்று ஜூலியும் “மாத்தி மாத்தி பேசறாங்க” என்று அபிராமியும் சுருதியைப் பற்றி குறை சொன்னார்கள்.

சுருதி
சுருதி

பாலாவின் முறை வரும்போது ஒவ்வொரு போட்டியாளரையும் மதிப்பிடுவதற்காக அவர் நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டார். அலசி, பிழிந்து, காயவைத்து, மடித்து, அயர்ன் செய்த பிறகுதான் கிளம்பினார். “சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” என்பதே சுருதியைப் பற்றிய பாலாவின் புகாராக இருந்தது. அனிதா மற்றும் நிரூப்புடன் சேர்ந்து பாலாவைப் பற்றிய தவறான எண்ணங்களை பரப்புகிறாராம். மற்றபடி ‘தைரியசாலி’ என்கிற பாராட்டு சுருதிக்கு பெரும்பான்மையாக கிடைத்தது.

அடுத்தது ஜூலியின் புகைப்படம். “பாட்டுப் பாடிட்டு அவ பாட்டுக்கு ஜாலியா இருப்பா.. மத்தவங்களையும் சிரிக்க வைப்பா” என்கிற நோக்கில் ‘பொழுதுபோக்கு கலைஞர்’ என்கிற பிரிவில் ஜூலிக்கு நிறைய மதிப்பெண் கிடைத்தது. ‘தைரியசாலி, சிறந்த போட்டியாளர்’ என்று ஜூலியைப் பற்றி பாலா சொன்னதில் ஆச்சரியமில்லை. அபிராமி வந்தபோது எல்லா ஏரியாக்களிலும் தன் தோழியைப் புகழ்ந்து விட்டு ‘நெகடிட்டிவ் விஷயங்கள் அவளிடம் கிடையாது.. ஏதோ போர்டு வெச்சிருக்கறதால அதுல வெக்கறேன்” என்று தன் நட்பை ஆழமாக உணர்த்தி விட்டுச் சென்றார்.

அடுத்ததாக வந்தது முக்கியமான புகைப்படம். ஆம், பாலா. ‘இவர் ஒரு சிறந்த போட்டியாளர்’ என்று ஒப்புக் கொள்வதில் பெரும்பான்மையோருக்கு மாற்றுக்கருத்தில்லை. சதீஷூம் கூட ஒப்புக் கொள்கிறார். ஆனால் பாலாவின் அலட்டல் மீது சதீஷிற்கு ஏதோவொரு கோபம் இருக்கிறது போல. ‘நடிகர்’ என்கிற சதவிகிதத்தை பெரும்பான்மையாக அளித்தார். ‘தைரியசாலி’ என்கிற பட்டமும் பாலாவிற்கு நிறைய கிடைத்ததில் ஆச்சரியமில்லை. “அவனுக்கு பொறாமை கிடையாது” என்று பாசிட்டிவ்வாக சொன்னார் நிரூப். சதீஷைப் போலவே சுருதியும் பாலாவை ‘நடிகர்’ கேட்டகிரியில் குறிப்பிட்டார். நல்லவேளையாக மூன்று நபர்களோடு இந்த டாஸ்க் முடிந்தது. இதர மூன்று நபர்களை காட்டாமல் எடிட்டிங் டீம் கருணை காட்டினார்கள். உடல்நலக்குறைவு காரணமாக சுரேஷ் வரவில்லை. வந்திருந்தால் ‘வித்தியாசமான’ பாயின்ட்டுகளைச் சொல்லி சிரிக்க வைத்திருப்பார்.

அதிர்ஷ்டவசமாகத் தப்பித்த நிரூப்

அடுத்ததாக நாமினேஷன் சடங்கு ஆரம்பித்ததால் நமக்கு தூக்கம் கலைந்து சற்று நிமிர்ந்து உட்கார முடிந்தது. வீட்டின் தலைவர் தாமரையை நாமினேட் செய்ய முடியாது. மற்றபடி ஒவ்வொருவரும் கன்பெஷன் ரூமில் மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும். முதலில் சதீஷ் அழைக்கப்பட்டதும் மற்றவர்கள் தன்னிச்சையாக சிரித்தார்கள்.

இந்தச் சடங்கில் சதீஷின் பெயர் பெரும்பான்மையாக உச்சரிக்கப்பட்டது. எத்தனை உத்வேகம் அளித்தும் பிக் பாஸ் வாய்ப்பை சதீஷ் தொடர்ந்து அலட்சியமாகவே கையாள்வது முதன்மையான காரணம். ‘ஐம்பது லட்சத்திற்காக இதெல்லாம் செய்வார்களா?’ என்கிற சதீஷின் கமென்ட் பலரைப் புண்படுத்தியிருப்பது நியாயமே.

சதீஷ்- ரம்யா பாண்டியன்
சதீஷ்- ரம்யா பாண்டியன்

அடுத்ததாக சுரேஷின் பெயரும் நிறைய தடவை வந்தது. டாஸ்க் விதியை தவறாகப் புரிந்துகொண்டது மட்டுமல்லாமல், அதை மறைத்து அலட்டலாகப் பேசியது முதன்மையான காரணம். இதுதவிர அவரின் உடல்நிலை, மற்றவர்களை இம்சை செய்யும் விதம் போன்றவையும் சொல்லப்பட்டன. ரம்யா கடித்த விவகாரத்தை மறக்காமல் குறிப்பிட்டு அவரை நாமினேட் செய்தார் பாலா. டல்லான முகத்துடன் வந்த சுரேஷ், ‘சுருதி, ரம்யா, அபிராமி ஆகிய மூவரையும் சுட்டிக்காட்டி விட்டுச் சென்றார்.

சுரேஷ்
சுரேஷ்

நாமினேஷன் முடிவுகள் வந்தன. இந்த வாரத்தின் எவிக்ஷன் வரிசையில் தேர்வாகியிருப்பவர்கள் – சுரேஷ், சதீஷ், ரம்யா, அபிராமி, ஜூலி, சுருதி மற்றும் பாலா. ஆக தாமரையைத் தவிர மற்ற அனைவருமே நாமினேட் ஆகியிருந்தார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பித்தவர் நிரூப் மட்டுமே. இதுகுறித்து மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கே ஆச்சரியம். “என்னடா. இது.. இப்பத்தான் பயமா இருக்கு” என்று சந்தோஷத்துடன் அலுத்துக் கொண்டார்.

BB Ultimate
BB Ultimate

பவர்பாயிணட் பிரசன்டேஷன் டாஸ்க்கின் சதவிகித முடிவுகள் வெளியே இருந்த பலகையில் பிரிவுகளின்படி தொகுக்கப்பட்டிருந்தன. மக்கள் வெளியே வந்து ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். “ஹேய்.. உன்னை விடவும் சிறந்த போட்டியாளர் பிரிவுல எனக்கு அதிக பர்சன்டேஜ் கிடைச்சிருக்கு” என்று நிரூப்பிடம் சொல்லி சந்தோஷப்பட்டார் சுருதி. “ஏய்.. 18% தைரியமானவனே. ஹலோ.. 12% நடிகரே” என்று பரஸ்பரம் ஒவ்வொருவரையும் கிண்டல் செய்து கொண்டதோடு எபிசோட் நிறைந்தது. ரம்யா மற்றும் அபிராமியின் மதிப்பீடு மட்டும் இதில் வரவில்லை.