Published:Updated:

BB Ultimate 52: `ஒரு வண்டியில் பல பேர்' - விடாப்பிடியாக வென்ற பாலா கண்ணீர்விட்ட தாமரை, ஜூலி!

BB Ultimate

BB Ultimate: “இறங்கிடுடா நிரூப்பு” என்று தாமரையே சொன்னதும் ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்பு கமல் மாதிரி அடிபட்ட முகத்துடன் தாமரையைப் பார்த்தார் நிரூப்.

Published:Updated:

BB Ultimate 52: `ஒரு வண்டியில் பல பேர்' - விடாப்பிடியாக வென்ற பாலா கண்ணீர்விட்ட தாமரை, ஜூலி!

BB Ultimate: “இறங்கிடுடா நிரூப்பு” என்று தாமரையே சொன்னதும் ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்பு கமல் மாதிரி அடிபட்ட முகத்துடன் தாமரையைப் பார்த்தார் நிரூப்.

BB Ultimate
கார் டாஸ்க்கை வைத்தே இன்றைய காலட்சேபத்தை முடித்துவிட்டார் பிக் பாஸ். பழைய கேம்தான். ஆனால் ஒரு நெருக்கடியான சூழலிலும் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்காமல், அதே சமயத்தில் எதிராளியின் மனஉறுதியை உடைக்க முயலும் மைண்ட் கேம் இது. பாலா இதை பல வழிகளிலும் கையாண்டு கடைசியில் வெற்றி பெற்றார். உடல் நலம் சரியில்லாததால் சுரேஷ் தாத்தா ஷோவிலிருந்து வெளியேறியதாக ஒரு தகவல் உலவுகிறது. உண்மையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

BB Ultimate -52-ல் நடந்தது என்ன?

மக்கள் இன்று நாற்றத்தில் அவஸ்தைப்படப் போவதின் முன்னோட்டமாக ‘அய்யோ.. அய்யோ..’ என்று கதறும் பாடல் ஒன்றை காலையில் அலறவிட்டார் பிக் பாஸ். இந்த வாரத்தின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதுவரையான அனைத்து சீசன்களில் நடந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை தினமும் வரிசையாக நடத்தப்படுமாம். ‘போட்டியாளர்களை பேச வைத்துக் கொண்டேயிருந்தால் நிகழ்ச்சி இழுவையாகி விடும்’ என்பதை ஒருவழியாக பிக் பாஸ் புரிந்து கொண்டு ஆக்ஷன் காட்சிகளை ஆரம்பித்திருப்பது நன்று. “ஹைய்யா. தினம் தினம் ஒரு டாஸ்க் பண்ணலாம்” என்று உற்சாகமானார் பாலா. நிரூப்பிற்கும் அதே உற்சாகம். ஸ்போர்ட்ஸ்மென்களின் குணாதிசயம் இது.

ஜூலி
ஜூலி

“ஓரம் போ... ஓரம் போ... ருக்குமணி வண்டி வருது”

அதேதான். ஒரு வண்டிக்குள் அனைத்து போட்டியாளர்களையும் அடைத்து வைத்திருப்பார்கள். பல்வேறு இடையூறுகள் அவர்களுக்கு தரப்படும். பஸ்ஸர் அடிக்கும் போதெல்லாம் அவர்கள் கலந்து பேசி தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி ஒருவர் இறங்கிவிட வேண்டும். கடைசி வரைக்கும் தாக்குப் பிடிப்பவர் வெற்றியாளர். இது தவிர முதல் மூன்று இடத்திற்கு வருபவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் உண்டாம். பீக் ஹவர் பல்லவன் பேருந்து மாதிரி அனைவரும் உள்ளே நெருக்கியடித்துக் கொண்டு அமர ஆட்டம் ஆரம்பித்தது.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

ரம்யா எதையோ சொல்லப் போய் கையை வெளியே நீட்டி விட (கரம், சிரம் புறம் நீட்டாதீர் என்பது விதி!) “நீ அவுட்டு..” என்று உற்சாகமாகக் கத்தினார் நிரூப். ‘அச்சச்ச்சோ..’ என்று வெட்கப்பட்டுக்கொண்டே ரம்யா வருந்த, பிக் பாஸ் மனது இளகிவிட்டதுபோல. “இதுதான் முதல் மற்றும் கடைசி வார்னிங்’ என்று மன்னித்துவிட்டார். “ஓகே.. ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று சுரேஷ் கேட்க, ஏதோ வண்டியைத்தான் கிளப்பப் போகிறார் என்று பார்த்தால் இல்லை. அவர் கிளப்ப நினைத்தது வில்லங்கமான ‘உவ்வேக்’ சமாச்சாரம். ரம்யா அப்போதே மூக்கைப் பொத்திக் கொள்ள “கமான்.. தாத்தா.. உங்களால் முடியும்..” என்று பின்னால் இருந்த பாலா உற்சாகப்படுத்தினார்.

“கிச்சான்னாலே எல்லோருக்கும் இளிச்சவாயன்தானே?"

‘குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா’ என்று வண்டியின் பக்கவாட்டுக்களில் இருந்து அருவி மாதிரி நீர் பொழிய ஆரம்பித்தது. இந்த இக்கட்டான நேரத்திலும் ஒருவரையொருவர் பிறாண்டிக் கொள்வதை மக்கள் நிறுத்தவில்லை. தாமரை எதற்கோ ‘மூசுமூசு’வென்று அழ ஆரம்பிக்க “எனக்கு டென்ஷன் ஆவுது. அழாதக்கா” என்று ஆவேசமானார் நிரூப். “கிச்சான்னாலே எல்லோருக்கும் இளிச்சவாயன்தான்” என்கிற மீம் படம் மாதிரி “ஜூலின்னா உங்களுக்கெல்லாம் கிள்ளுக்கீரை. எல்லோருமே கழுகா மாறி என்னை இரையாக்கிக்கிறீங்க” என்று ஜூலி அனத்திவிட அதை பாலாவும் வழிமொழிந்து விட்டார். “ஏண்டா என்னையும் சொல்றே... நான் ஜூலியை என்ன பண்ணேன்?” என்று பாலாவிடம் கோபித்துக் கொண்டார் தாமரை.

தாமரை
தாமரை

இந்த விளையாட்டின் அழுத்தம் தருகிற மனவருத்தத்திற்கும் உண்மையான வருத்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தாமரையால் புரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டையும் பிரித்துப்பார்க்கிற குணாதிசயம் தாமரையிடம் இல்லை. “என்னால அப்படில்லாம் பார்க்கமுடியாது” என்று அடம்பிடித்து அவ்வப்போது கோபித்துக்கொள்கிறார். வாக்குவாதம் செய்து இம்சிக்கிறார். “நீ பேசறது தப்பு பாலா” என்று அபிராமி கண்டிக்க வாக்குவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதில் மேலும் மசாலாவை சேர்க்கும் உத்தேசத்தில் இருந்த பிக் பாஸ், ‘வாகனத்தில் இருந்து ஒரு இருக்கை அகற்றப்படும்.. யாரும் கீழே உட்காரக் கூடாது' என்று இம்சையைக்கூட்ட ஆரம்பித்தார்.

டாஸ்க்கிற்கான வாகனம்
டாஸ்க்கிற்கான வாகனம்

முதல் ஆடாக நிரூப்பை பலியிட தீர்மானித்தார்கள். ஆனால் அதற்கும் முன்பே சுரேஷ் இறங்கிவிட்டார் போல. உடல்நலக்குறைவு ஒரு காரணமாக இருக்கும். சதீஷ் எல்லாம் இன்னமும் இருந்தால்தான் ஆச்சரியம். “மெஜாரிட்டியா வோட்டு வந்தா நான் இறங்கிடறேன். ஆனா தகுந்த காரணம் சொல்லணும்” என்கிற நிரூப்பின் கோரிக்கை நியாயமாகவே இருந்தது. சிலர் அமைதியாக இருக்க, சிலர் காரணம் சொல்ல ஒரு கட்டத்தில் “இறங்கிடுடா நிரூப்பு” என்று தாமரையே சொன்னதும் ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்பு கமல் மாதிரி அடிபட்ட முகத்துடன் தாமரையைப் பார்த்தார் நிரூப். “என்னா விளையாடறீயா... இப்ப இறங்குன்னு சொல்லுவே... அப்புறம் “ஏண்டா இறங்கினே’ன்னு நீயே கேட்பே. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?” என்று நிரூப் காண்டானார். ‘உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க” என்கிற கதையாக "நிரூப். உன் கால் வெளியே நீட்டிடுச்சு..” என்று பாலா சுட்டிக் காட்ட “அதை பிக் பாஸ் சொல்லட்டும்” என்று அடம் பிடித்தார் நிரூப். ஆனால் ஒரு கட்டத்தில் மற்றவர்களின் நெருக்கடி தாங்காமல் நிரூப் இறங்கி விட்டார். உயரம் அதிகமான அவரால் காலை மடித்து வைத்து உட்கார முடியவில்லை போல.

“நீங்க வைல்ட் கார்ட்தானே?” – ரம்யாவை மடக்க முயன்ற ஜூலி

ஆட்டத்திலிருந்து விலகிய பிறகு வீட்டின் கடைக்குட்டி சிறுவன் மாதிரி நிரூப் செய்த ஜாலியான அழிச்சாட்டியங்கள் இருக்கிறதே..?!. ஏதோவொரு உணவுப்பொருளை கொண்டு வந்து போட்டியாளர்களின் முன்னால் சாப்பிட்டு வெறுப்பேற்றுவது முதல் ‘கலீஜ்’ சமாச்சாரங்களை வாகனத்தில் ஊற்றுவது வரை பிக் பாஸின் சரியான வாரிசாக இருந்தார். ஆனால் இந்த ஆட்டத்தின் டென்ஷனை மைண்டிலேயே ஏற்றிக் கொள்ளாமல் அவர் பாட்டுக்கு ஜாலியாக உலவுவதைப் பார்க்க சுவாரசியமாகவே இருக்கிறது.

ரம்யா
ரம்யா

அடுத்த ஆடாக தாமரையை பலியிட தீர்மானித்தார்கள். அவர் நாமினேஷனில் இல்லை என்பது ஒரு முக்கிய காரணம். இதற்கு நடுவில் ரம்யாவிற்கும் ஜூலிக்கும் இடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. “நாங்கள்லாம் ரொம்ப நாள் இருந்தவங்க. நீங்க இப்பத்தான் வைல்டு கார்டுல வந்திருக்கீங்க” என்ற அரதப் பழசான காரணத்தை ஜூலி சொல்ல, “அப்ப.. எனக்குத்தானே ப்ரூவ் பண்ண டைம் நிறைய வேணும்?” என்று லாஜிக்காக மடக்கினார் ரம்யா. “நான் ரம்யாவிற்கு ஓட்டு போடறேன்” என்று ஆரம்பித்தார் சுருதி. “ரேங்கிங் டாஸ்க்கில் உங்க ஆர்க்யூமெண்ட்டை எனக்குப் பார்க்கணும்” என்று சுருதி சொல்ல “நான் என்ன ரேடியோவா.. நீங்க சொல்ற பாட்டையெல்லாம் ஒலிபரப்பறதுக்கு.? இந்த டாஸ்க் அது இல்ல” என்று சூடானார் ரம்யா. “நானும் ரம்யாவுக்கு வோட் பண்றேன்” என்று பாலாவும் ஆரம்பிக்க “ச்சை.. போங்கய்யா” என்று வெறுப்போடு இறங்கினார் ரம்யா.

ஜூலி
ஜூலி

எதை நடத்தியாவது இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற உறுதியில் பாலா இருந்தார். எனவே அடுத்ததாக தன் பாசத் தாயான தாமரையையும் பலியிடத் தயாரானார். “அபிராமிக்கு விட்டுத் தரேன்னு நீ சொன்னது தப்பு” என்கிற நாமினேட் காரணத்தை தாமரைக்கு அவர் சொல்ல, சற்று நேரம் வாதாடிப் பார்த்த தாமரை வேறு வழியில்லாமல் வெறுப்புற்று இறங்கினார். இந்தச் சமயத்தில் பாலாவிற்கும் சுருதிக்கும் இடையே ஒரு நீண்ட வாக்குவாதம் ஆவேசமாக நிகழ்ந்தது. தாமரையை வெளியேற்றுவது தொடர்பாக சுருதி ஏன் வாக்களிக்கவில்லை? என்பது பாலாவின் ஆட்சேபம். “நான் வோட் பண்றதுக்குள்ள அவங்க இறங்கிட்டாங்க. மெஜாரிட்டியும் வந்துடுச்சே.. அப்புறம் என்ன?” என்கிற சுருதியின் வாதம் நியாயமாகவே இருந்தது.

சுருதியை டென்ஷன் ஆக்கிய பாலா

ஆனால் சுருதியை டென்ஷன் ஆக்கும் முடிவோடு பாலா இருந்ததால் “வோட்டுப் போட்ட நாங்க முட்டாள்.. போடாத நீங்க அறிவாளியா?” என்று டென்ஷன் ஆக “நிரூப் வெளியேபோகும்போது ஜூலி கூடத்தான் வோட் பண்ணலை. நீ கேட்டியா?” என்று சுருதியும் பதிலுக்கு வெடிக்க “உங்க சண்டைல ஏம்மா என்னை இழுக்கறீங்க. என்னை யாரு கேட்டீங்க.. அதுக்குள்ள நிரூப் இறங்கிப் போயிட்டான்” என்று அழாத குறையாக சொன்னார் ஜூலி. சுருதி மற்றும் ஜுலியின் தரப்பில் நியாயமுள்ளது. அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பே ஒரு போட்டியாளர் இறங்கிச் சென்றுவிட்டால் அது அவர்கள் பிழையா என்ன?. ஆனால் இதை முரட்டு வாதமாக எடுத்துச்சென்ற பாலா, ஒரு கட்டத்தில் கூடுதலாக வெறுப்பேற்ற பிக் பாஸ் தந்திருந்த காய்கறிக்கழிவுகளை வாகனத்தில் தாராளமாக ஊற்றி வாசனையைப் பரப்பினார். “பாலா.. சூப்பர்டா.. மச்சான்” என்று வெளியில் இருந்து உற்சாகமானார் நிரூப். டாஸ்க்கில் ஏதாவது கலாட்டா நடந்தால் சின்ராசுவை கையிலேயே பிடிக்கமுடியாது. ‘யெஸ்.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று நிரூப் உற்சாகமாகி விடுவார்.

அபிராமி
அபிராமி

“சந்தைக்குப் போகணும்.. ஆத்தா வையும்.. காசு கொடு” என்று தொடர்ந்து அனத்துகிற பதினாறு வயதினிலே ‘சப்பாணி’யைப் போல “வோட்டுப் போடாம நீங்க புத்திசாலியா இருப்பீங்க. நாங்க வோட் பண்ணி கெட்ட பேரு வாங்கிக்கணுமா?” என்று அதே பாயிண்ட்டை வைத்து சுருதியை இம்சிக்கத் தொடங்கினார் பாலா. சுருதியும் விடாமல் மல்லுக்கட்டினாலும் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் “நீ எதை வேணா சொல்லிக்க” என்று எரிச்சலானார். “நான் ஜூலியை நாமினேட் பண்றேன்” என்று பாலா ஆரம்பிக்க, அவருடன் அபிராமியும் இணைந்து கொண்டதுதான் ஆச்சரியம். தன் உயிர்த்தோழியே தனக்கு எதிராக செயல்படுவதைக் கண்டு அதிர்ச்சியானார் ஜூலி. இவருக்கு எதிராக சுருதியும் வாக்களித்ததால் ஜூலி வெளியேற வேண்டியிருந்தது.

சுரேஷ், ரம்யா பாண்டியன்
சுரேஷ், ரம்யா பாண்டியன்

மாலை ஏழு மணியைத் தாண்டியும் இந்த டாஸ்க் நீண்டு கொண்டிருந்தது. வாகனத்தில் மீதமிருந்தவர்கள் பாலா, அபிராமி மற்றும் சுருதி. “நான் சுருதியை நாமினேட் பண்றேன்” என்று சுருதியை அடுத்ததாக டார்கெட் செய்ய ஆரம்பித்தார் பாலா. அபிராமியும் பாலாவுடன் இணைந்து கொண்டதால் சற்று நேரம் ஆவேசமாக வாதாடிப் பார்த்த சுருதி ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் இறங்கி விட்டார். ஆக அடுத்த விக்கெட்டும் அவுட்.

விடாக்கண்டனாக செயல்பட்ட அபிராமி

‘விட்டால் இவர்கள் நள்ளிரவு வரை டாஸ்க்கை இழுப்பார்கள் போல’ என்று எண்ணிய பிக் பாஸ், ‘வண்டியில் இருந்து இரண்டு இருக்கைகள் அகற்றப்படும்’ என்று அறிவிக்க மீதமிருந்த ஒரே இருக்கையை வலுவாக ஆக்ரமித்துக் கொண்டார் பாலா. ஆனால் விடாக்கண்டனாக இருந்த அபிராமி, பாலாவின் மடியிலேயே அமர்ந்து கொள்ள இதுவரை டிராஜிடியாக சென்று கொண்டிருந்த காட்சிகள் காமெடியாக மாறத் துவங்கின. “அய்யோ. என்னால முடியல. செம வெயிட்டா இருக்கா” என்று பாலா ஜாலியாக அலறினாலும் அபிராமி விடுவதாக இல்லை. பாலாவிடமிருந்து இருக்கையைப் பறிக்கும் சாகசத்தில் இறங்கினார். ஆனால் அது முடியாமல் ஒரு கட்டத்தில் அபிராமி இறங்கிவிட இறுதியில் பாலா வெற்றி. ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன். நான்.. நான்.. ‘ என்கிற பாடல் வரி மாதிரி உற்சாகத்தில் கையைத் தூக்கி நின்றார் பாலா. பிக் பாஸூம் சுரேஷூம் பாலாவிற்கு வாழ்த்து சொன்னார்கள்.

அபிராமி, பாலா
அபிராமி, பாலா

டாஸ்க்கில் இருந்து போனோமா, நிரூப்பைப் போல ஜாலியாக ரெஸ்ட் எடுத்தோமா என்றில்லாமல், ஜூலியும் தாமரையும் பரஸ்பரம் சென்டியாக பேசி கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தார்கள். “உங்களை அப்படி நினைப்பேனாக்கா?" என்று ஜூலி கண் கலங்க “இந்தப் புள்ள அழறத பார்த்தா பரிதாபமா இருக்கு” என்று தாமரையும் பதிலுக்கு கண்கலங்க “என்னா பண்றீங்கோ?” என்று அவர்களை ஜாலியாக கேட்டு அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்தார் நிரூப்.

“பிக் பாஸ் வீடு இப்படித்தான் நம்மளை மாத்தும்.. இதுக்கெல்லாம் கவலைப்படாம நீ நல்லா விளையாடு” என்று தாமரைக்கு சரியான ஆலோசனையைத் தந்தார் சுரேஷ் தாத்தா. “நீயெல்லாம் எனக்கு ஆளே கிடையாது. உன்னை டார்க்கெட் பண்ணனும்னு எனக்கு அவசியமே கிடையாது. அப்படி பண்றதா இருந்தா சொல்லிட்டே செய்வேன். அதுதான் என் ஸ்டைல்” என்று ஜூலியிடம் பந்தாவாக தெளிவுப்படுத்திக் கொண்டிருந்தார் நிரூப். (அப்புறம் எதுக்கு வாரா வாரம் ஜூலியை தொடர்ந்து நாமினேட் செய்யணும்?!).

அந்த வண்டியை பத்து நாள் வாட்டர் வாஷிற்கு விட்டால்தான் சுத்தமாகும் போலிருக்கிறது. அப்படியொரு ‘கலீஜ்’ டாஸ்க் இது.