Published:Updated:

BB Ultimate 53: உடல்நிலை காரணமாக வெளியேறிய சுரேஷ்; பிக் பாஸ் நடத்திய வில்லங்க டாஸ்க்!

BB Ultimate

BB Ultimate பாலாவின் கோபத்திற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும். ஒரு வழக்கறிஞராக தன் பணியைத்தான் அபிராமி செய்தார். “ஒரு டாஸ்க்கிற்காக காரெக்ட்டர் அஸாஸினேஷன் செய்வியா?” என்று பாலா இதற்காக கோபித்துக் கொள்வது நியாயமல்ல.

Published:Updated:

BB Ultimate 53: உடல்நிலை காரணமாக வெளியேறிய சுரேஷ்; பிக் பாஸ் நடத்திய வில்லங்க டாஸ்க்!

BB Ultimate பாலாவின் கோபத்திற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும். ஒரு வழக்கறிஞராக தன் பணியைத்தான் அபிராமி செய்தார். “ஒரு டாஸ்க்கிற்காக காரெக்ட்டர் அஸாஸினேஷன் செய்வியா?” என்று பாலா இதற்காக கோபித்துக் கொள்வது நியாயமல்ல.

BB Ultimate
‘சிரிப்பு போலீஸ்’ கேள்விப்பட்டிருக்கிறோம். ‘சிரிப்பு வக்கீல்’ என்பதை பிக் பாஸ் கோர்ட்ரூம் டாஸ்க்கின் மூலம் நேற்று அறிய முடிந்தது. அந்த அளவிற்கு நீதிமன்றக் காட்சிகளை காமெடியாக்கினார்கள். தாமரைக்கு எதிராக வாதாட வேண்டிய நிலையில் ‘முடியாது’ என்று பாலா விலகிச் சென்றது, நிச்சயம் ஒரு சேஃப் கேம். ஒரு புகாரின் தன்மையின்மீது சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு நம்பிக்கையிருக்கிறதோ, இல்லையோ, அது தொடர்பான வாதப் பிரதிவாதங்களை நீதிமன்றத்தின் முன் வைப்பதுதான் வழக்கறிஞரின் ஆதாரமான தொழில் தர்மம். அப்போதுதான் நீதி வெளிச்சத்திற்கு வரும். இதை பாலா நிறைவேற்றவில்லை.

எபிசோட்-53 ல் நடந்தது என்ன?

இரவு நேரத்தில் திடீர் என்று சுரேஷ் வாந்தி எடுத்தார். தாமரை உள்ளிட்டவர்கள் பதறி ஓடிச்சென்று அவருக்கு உதவினார்கள். பின்னர் நிரூப் கைத்தாங்கலாக அழைத்துச் செல்ல மருத்துவ அறைக்குச் சென்றார் சுரேஷ்.

அல்டிமேட் சீசனில் இருந்து சுரேஷ் வெளியேற்றம்

விடிந்தது. இந்தப் பாட்டை எத்தனை முறைதான் சலிக்காமல் போடுவார்களோ?! ‘எங்க வீட்டு குத்து விளக்கு’ என்கிற பாடலை பிக் பாஸ் ஒலிபரப்ப, உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் சுரேஷ் வந்து ஆட முயன்றது சிறப்பு. பெரும்பாலான சமயங்களில் டெரர் முகபாவத்துடன் இருக்கும் பாலா, அப்போது குஷி மூடில் இருந்தார் போலிருக்கிறது. கிச்சன் ஏரியாவில் இருந்த தாமரையையும் ஜூலியையும் இழுத்து வைத்து வன்முறையாக கொஞ்சிக் கொண்டிருந்தார்.

சுரேஷ்
சுரேஷ்

சுரேஷ்ஷை கன்பெஷன் ரூமிற்கு அழைத்தார் பிக் பாஸ். ‘மருத்துவர்களின் கருத்துப்படி நீங்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதுதான் உங்கள் உடல்நலத்திற்கு நல்லது” என்று சொல்லப்பட அதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கொண்டார் சுரேஷ். “ஒரு பிக் பாஸ் ரசிகனா இந்த முடிவை சரியானதா எடுத்துக்கறேன். என்னால விளையாட்டில் இடையூறு ஏற்படக்கூடாது. ஆனா ஒரு போட்டியாளரா கஷ்டமாத்தான் இருக்கு” என்ற சுரேஷ், ஒட்டு மொத்த பிக் பாஸ் டீமின் உழைப்பிற்கு நன்றி சொல்லி “திரும்பி வருவேன்” என்று கையசைத்து விடைபெற்றார். “உடம்பைப் பார்த்துக்கங்க தாத்தா” என்று இதர போட்டியாளர்களும் வழியனுப்பி வைத்தார்கள். கடைசி நிமிடத்தில் ஓடிச் சென்ற பாலா, சுரேஷ் பெற்றிருந்த அதிக சதவிகித எண் கொண்ட ஸ்டிக்கரை பரிசாக அளித்தார்.

“நீயும். நானுமா.. கண்ணா… நீயும். நானுமா?’

தினம் ஒரு லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் என்கிற வகையில் ‘வாய்மையே வெல்லும்’ என்கிற தலைப்பில் கோர்ட்ரூம் டாஸ்க்கை இன்று கையில் எடுத்தார் பிக் பாஸ். போட்டியாளரைப் பற்றிய புகார் ஒன்று வழக்காக தரப்படும். தன் கட்சிக்காரரை ஆதரித்து, அந்தப் புகாரை மறுத்து ஒருவர் வாதாட வேண்டும். எதிர் தரப்பு வழக்கறிஞர் புகாரை நிரூபணம் செய்வதற்காக வாதாட வேண்டும். இதுதான் டாஸ்க்.

ஒவ்வொரு ஜோடி வழக்கறிஞரையும் கன்பெஷன் ரூமிற்கு தனியாக அழைத்த பிக் பாஸ், புகாரை வாசிக்கச் சொல்லி அவர்களை தயார் செய்தார். இதில் வழக்கம் போல் பிக் பாஸின் குறும்பு வெளிப்பட்டது. யாருக்கு யார் மீது ஏற்கெனவே பஞ்சாயத்து இருக்கிறதோ, அந்த நபரை ஆதரித்து கோர்ட்டில் வாதாட வேண்டும். இதைப் போலவே நெருக்கமான நண்பரை எதிர்த்து கோர்ட்டில் வாதாட வேண்டும். இப்படியொரு ‘கோர்த்துஃபையிங்கை’ திறமையாக வடிவமைத்திருந்தார் பிக் பாஸ்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் BABL

முதல் ஜோடி வழக்கறிஞராக பாலா மற்றும் நிரூப் அழைக்கப்பட்டார்கள். தலைப்பு இதுதான். “புரியாது.. தெரியாது.. என்று தாமரை சொல்வதெல்லாம் நடிப்பு’.. என்பதுதான் புகார். தாமரைக்கு ஆதரவாக நிரூப் வாதாட வேண்டும். “தாமரை நடிக்கிறார்” என்று பாலா வாதாட வேண்டும். (பிக் பாஸின் விஷமம் புரிகிறதா?!). வாதங்களை தயார் செய்து கொள்வதற்காகத் தரப்பட்ட நோட்டின் முதல் பக்கத்தில் ‘ரம்யா பாண்டியன் BABL’ என்று எழுதி வைத்துக்கொண்டார் ரம்யா. (கேரக்ட்டராகவே மாறுவதென்பது இதுதான்!).

அடுத்த ஜோடி வழக்கறிஞர்களாக அபிராமி மற்றும் நிரூப் அழைக்கப்பட்டார். கன்ஃபெஷன் ரூம் இருக்கையில் அமர இடமில்லாததால் நிரூப் நிற்க, “இடம் இருக்குல்ல.. உக்காரு” என்று அபிராமி சொன்னது சுவாரசியமான காட்சி. “ஷோவைப் பத்தி எந்தப் புரிதலும் இல்லை. ஆனால் புலம்பல் அதிகமாக இருக்கு” என்பது புகாரின் தலைப்பு. இது சதீஷ் பற்றியதாக இருக்க வேண்டும். ஆதரித்து அபிராமியும் எதிர்த்து நிரூப்பும் பேச வேண்டும்.

சுருதி, தாமரை
சுருதி, தாமரை

அடுத்ததாக அழைக்கப்பட்டவர்கள் சுருதி மற்றும் தாமரை. இருவரும் ஜாலி மூடில் இருந்தார்கள் போலிருக்கிறது. சிரித்துக் கொண்டே இருந்தார்கள். ‘கிளம்புங்க’ என்று பிக் பாஸ் சொல்லியும் இருவரும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்கள். ‘மொழி’ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜூம் பிருத்விராஜூம் ஒரு விஷயத்தை நினைத்து லிப்டிற்குள் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பார்கள். தாமரை மற்றும் சுருதி சிரிப்பதைப் பார்த்ததும் அந்தக் காட்சியின் சுவாரசியம்தான் நினைவிற்கு வந்தது. காயின் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, போன சீசனில் பூனையும் எலியுமாக இருந்தவர்கள், இப்போது நெருங்கிய தோழிகளாக மாறியிருப்பதைக் காணவே நன்றாக இருந்தது.

“நானும் ரவுடிதான்.. என்று சம்பந்தமில்லாத விஷயத்தில் கூட ஜூலி மூக்கை நுழைக்கிறார்’ என்பதுதான் புகாரின் தலைப்பு. இதை ஆதரித்து சுருதி பேச வேண்டும். எதிர்த்து தாமரை பேச வேண்டும். “ஹய்யோ.. நேத்துதான் அந்தப் புள்ள கிட்ட பேசி சமாதானம் ஆனேன்.. என்ன ஆகப் போகுதோ?” என்று ஜாலியாக அலுத்துக் கொண்டார் தாமரை. வெளியே சென்றும் கூட இவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அபிராமிமீது பாலா காண்பித்த நியாயமற்ற கோபம்

ஒரு வழக்கு முடிந்து அனைவரும் ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்து வெளியே வரும் காட்சி திடீரென்று காண்பிக்கப்பட்டது. “ஆர்க்யூமெண்ட் –ன்ற பேர்ல கண்ட கருமத்தையும் வாந்தியெடுக்கக்கூடாது” என்று அபிராமியிடம் பாலா கடுமையாக சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டார் அபிராமி. பாலாவிடம் இம்மாதிரியான அவமதிப்புகளை தொடர்ந்து பெற்றும் ஏன் அவரை அபிராமி சகித்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை. “நான் வாதாடியதை வெச்சு மக்கள் உன்னை தப்பா நெனப்பாங்கன்னு நெனக்கறியா.. அது ஒரு டாஸ்க்தானே?” என்று அபிராமி விளக்கம் சொல்லியும் பாலா ஏற்கவில்லை.

அபிராமி
அபிராமி

ஓகே. அந்த வழக்கில் என்ன நடந்தது என்பது தெரிந்தால்தான் பாலாவிற்கும் அபிராமிக்கும் நடந்த இந்த உரசல் பற்றி நமக்குத் தெரியும். பிக் பாஸ் எடிட்டிங் டீம், மெயின் எபிசோடில் பல விஷயங்களைக் காட்டாமல் நம்மைப் பாயைப் பிறாண்ட வைக்கிறார்கள். எனவே மெயின் எபிசோடில் வரவில்லையென்றாலும், நாமே வழக்கறிஞராக மாறி ஆதாரத்திற்காக சம்பந்தப்பட்ட பகுதியை தேடிக் காண வேண்டியிருந்தது. ‘மன்னிப்பு என்பதை சமயத்திற்கு ஏற்ப பாலா ஒரு உத்தியாக பயன்படுத்திறார்; ஆத்மார்த்தமாகக் கேட்பதில்லை’ என்பது புகார். பாலாவின் சார்பில் ரம்யா திறமையாகவே வாதாடினார். எனவே ரம்யாவை எதிர்கொள்வதற்காக அபிராமியும் பதிலுக்குக் கடுமையான வாதங்களை வைக்க வேண்டியிருந்தது. இறுதியில் சக போட்டியாளர்களின் வாக்கெடுப்புபடி (ஜூரிகள்?!) பாலாவின் மீதான புகார் உண்மை என்று முடிவு செய்யப்பபட்டது.

நிரூப், பாலா
நிரூப், பாலா

பாலாவின் கோபத்திற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும். ஒரு வழக்கறிஞராக தன் பணியைத்தான் அபிராமி செய்தார். “ஒரு டாஸ்க்கிற்காக காரெக்ட்டர் அஸாஸினேஷன் செய்வியா?” என்று பாலா இதற்காக கோபித்துக் கொள்வது நியாயமல்ல. எனில் இந்தப் புகார் உண்மை என்று வாக்களித்த மற்றவர்களிடமும் பாலா கோபத்தைக் காட்டுவாரா?. பாலாவின் நியாயமற்ற சீற்றத்தைப் பற்றி பிறகு ஜூலியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அபிராமி. பாலாவும் தாமரையிடம் ‘மன்னிப்பு’ என்கிற தலைப்பில் நெடுநேரம் அனத்திக் கொண்டிருந்தார்.

‘தெரியாது.. புரியாது.. என்று தாமரை நடிக்கிறாரா,?’

அடுத்த புகார் விசாரணைக்கு வந்தது. ‘நானும் ரவுடிதான் என்று ஜூலி சம்பந்தம் இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கிறாரா?’ என்பது தலைப்பு. ஜூலிக்கு ஆதரவாக தன் தரப்பு வாதத்தை வைத்த சுருதி “இங்க எண்பது காமிராக்கள் நடக்கற விஷயங்களை பதிவு பண்ணிட்டு இருக்கு. அந்த மாதிரி ஜூலியும் தன் கருத்தைப் பதிவு பண்றாங்க. இது தவறா?” என்று கேள்வி கேட்க எதிர் தரப்பு வழக்கறிஞராக வந்து நின்றார் தாமரை. இருவரும் சிரிப்பு வக்கீல் மாதிரி நீண்ட நேரம் சண்டை போட்டனர். இறுதியில் புகார் உண்மை என்று வாக்கெடுப்பில் தீர்மானமானது. “முதுகெலும்பு இல்லாதவங்கள்லாம் இங்க நிறைய பேர் இருக்காங்க” என்று தாமரையிடம் இன்னமும் அனத்திக் கொண்டிருந்தார் பாலா. அவருடைய கோபம் நிரூப்மீது போல. முன்னர் நடந்த ஒரு பிரச்சினையை வைத்து தாமரையிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

அபிராமி, சுருதி, தாமரை
அபிராமி, சுருதி, தாமரை

அடுத்ததாக தாமரை பற்றிய விசாரணை நீதிமன்றத்திற்குள் வந்தது. ‘தெரியாது. புரியாது.. என்று தாமரை சொல்வது நடிப்பு’ என்பதுதான் புகாரின் தலைப்பு. தாமரையின் சார்பில் வாதாடிய நிரூப் “டாஸ்க் பற்றிய விஷயங்களை மட்டும்தான் தாமரை புரியாது என்று சொல்லியிருக்கிறார். வீட்டு வேலைகள் உள்ளிட்ட மற்றவற்றை செய்து கொண்டுதான் இருக்கிறார்” என்று தன் ஆரம்ப வாதத்தை எடுத்து வைக்க “இந்த வழக்கில் என்னால் வாதாட முடியாது” என்று கோட்டைக் கழற்றி வைத்து அதிர்ச்சி தந்தார் பாலா. ஏனாம்? தாமரை நடிக்கிறார் என்று ஒரு வாதத்திற்காகக் கூட அவரால் சொல்ல முடியாதாம். தாமரையின் கேரக்ட்டர் பற்றி பொய் சொல்ல முடியாதாம். பாலா. நீங்க இம்பூட்டு நல்லவரா?

கட்டுரையின் முன்னுரையில் சொன்னபடி, ஒரு வழக்கின் தன்மையில்மீது சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களை நீதியின் முன் வைக்க வேண்டும். அது உண்மையா அல்லது பொய்யா என்பதை நீதிபதிகளும் ஜூரிகளும் பார்த்துக் கொள்வார்கள். இதுதான் வழக்கறிஞரின் தொழில் தர்மம். பாலா வழக்காட மறுத்தது தாமரை மீதான பாசத்தினால் அல்ல.

பாலா
பாலா

முன்னதாக அபிராமியிடம் சண்டை போட்ட குற்றவுணர்வு. ‘டாஸ்க்கிற்காக பொய் சொல்வியா?” என்று அபிராமியிடம் சண்டை போட்டு விட்டு அதே விஷயத்தை இப்போது பாலாவால் செய்ய முடியாது. எனவே திருடனுக்கு தேள் கொட்டியது போல் ‘எனக்கு நடிக்கத் தெரியாதுங்க” என்பது மாதிரி சீன் போடுகிறார் என்று தோன்றுகிறது. ‘வெற்றி. வெற்றி’ என்று கத்தினார் நிரூப். வாக்கெடுப்பின் இறுதியில் ‘புகாரில் உண்மையில்லை’ என்றுதான் தீர்ப்பு வந்தது. ஜூலி மற்றும் சதீஷ் ஆகிய இருவர் மட்டும் ‘தாமரை நடிக்கிறார்’ என்று வாக்களித்திருந்தார்கள்.

பாலாவின் அழிச்சாட்டியம்

பாலா வழக்காட மறுத்தது குறித்து “அப்ப டாஸ்க் விளையாடிய நாங்கள்லாம் முட்டாள்களா?” என்று அபிராமி கடுமையான ஆட்சேபம் தெரிவிக்க “நான் உங்களை விளையாடுங்கன்னு சொன்னேனன்னா. எனக்குப் பிடிக்கலை.. அவ்வளவுதான்.. விளையாடினா நீங்க ஜெயிக்கப் போறீங்க. விளையாடலைன்னா நான் தோக்கப் போறேன்.. அவ்வளவுதானே?” என்று வெட்டி வாதம் செய்தார் பாலா. “டாஸ்க்கில் பாசத்தைக் கலக்காதீங்க” என்று எப்போதும் சொல்லும் பாலா, இப்போது மட்டும் தாமரையிடம் பாசத்தைக் காட்டி டாஸ்க் விளையாட மறுப்பது சரியா?

சுருதி, பாலா
சுருதி, பாலா

“என்னை சேஃப் கேம்ன்னு சொன்னீங்க. நீங்க இப்ப பண்றதுதான் சேஃப் கேம்” என்று சுருதியும் பாலாவை குற்றம் சாட்ட “டாஸ்க்கிற்காக தாமரை நடிக்கறாங்கன்னு என்னால பொய் சொல்ல முடியாது” என்று அதே பாட்டைப் பாடினார் பாலா. “என் மேல மட்டும் பழி போட்டீங்களே?” என்று சுருதி கேட்க “என்ன விஷயம்ன்னு சொல்லுங்க. பதில் சொல்றேன்” என்று பாலா தயாராக நிற்க “ஞாபகமில்லை” என்று ரிவர்ஸ் கியர் போட்டு சொதப்பினார் சுருதி. (எத பண்ணாலும் பிளான் பண்ணித்தான் பண்ணணும்!). “உன்னை மாதிரியே வாதாடாம நாங்களும் எஸ்கேப் ஆகியிருக்கலாமே?” என்று அபிராமி மறுபடியும் வாதத்திற்கு வர “பண்ண வேண்டியதுதானே.. யாரு வேணாங்கிறா” என்று அதே பிடிவாதத்தைக் காட்டினார் பாலா. மற்றவர்கள் டாஸ்க் செய்ய மறுக்கும் போது தலையிட்டு கறார் காட்டும் பிக் பாஸ், வனிதா, பாலா போன்றவர்கள் அடாவடியாக மறுக்கும் போது மட்டும் மெளனம் சாதிக்கிறார்.

ரம்யாவை எதிர்த்து சிறப்பாக வாதாடிய சதீஷ்

அடுத்த புகார் ரம்யாவின் மீது வந்தது. “ரம்யா பாலாவை சமமான போட்டியாளராக பார்க்கிறார்’ என்பதுதான் தலைப்பு. இதில் ரம்யாவிற்கு சார்பாக ஆஜரானார் வக்கீல் தாமரை. ரம்யாவிற்கு எதிராக பேச வந்தார் சதீஷ். (அடப்பாவமே!) ஆனால் இந்த டாஸ்க்கில் சிறப்பாக வாதாடி ஆச்சரியப்பட வைத்தார் சதீஷ். தாமரையும் சிறப்பாக பதில் சொன்னாலும் சில இடங்களில் சேம் சைட் கோல் போட்டு ரம்யாவிற்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் வேலையைச் செய்து சபையோரின் பலத்த சிரிப்பிற்கு காரணமாக இருந்தார்.

சதீஷ்
சதீஷ்

இந்த கோர்ட்ரூம் டாஸ்க்கை நீதித்துறையைச் சார்ந்த யாரும் பார்க்காமல் இருக்க நாம் பிரார்த்தனை செய்வோம். அப்படி எவரேனும் பார்த்தால் “நாங்க இப்படில்லாம் கோர்ட்டில் காமெடி செய்ய மாட்டோம்” என்று அவமதிப்பு வழக்கினை பிக் பாஸ் மீது தொடரக்கூடும்.