Published:Updated:

BB Ultimate - 54: `நீ ஒரு பிராடு; இன்னும் மாறவேயில்ல' - மோதிக்கொண்ட நிரூப் - அபிராமி!

BB Ultimate நிரூப் - அபிராமி

BB Ultimate: பாலாவிடம் வெளிப்பட்ட பதட்டமே அவருக்குள் இருக்கும் குற்றவுணர்ச்சியை அம்பலப்படுத்திவிட்டது.

Published:Updated:

BB Ultimate - 54: `நீ ஒரு பிராடு; இன்னும் மாறவேயில்ல' - மோதிக்கொண்ட நிரூப் - அபிராமி!

BB Ultimate: பாலாவிடம் வெளிப்பட்ட பதட்டமே அவருக்குள் இருக்கும் குற்றவுணர்ச்சியை அம்பலப்படுத்திவிட்டது.

BB Ultimate நிரூப் - அபிராமி
வக்கீல்களாக கோர்ட்டில் அடித்துக் கொண்டவர்கள், நேற்றைய எபிசோடில் அரசியல் தொண்டர்களாக மாறி ‘கொடி பறக்குதா?” என்று தனுஷ் – த்ரிஷா மாதிரி கொடி காத்த குமரன்களாக மாறி மோதிக் கொண்டார்கள். ஒரே உணர்ச்சிக் கலவரம்.

‘ஒரு வலிமையான ஆணை சார்ந்திருந்தால்தான் பாதுகாப்பு’ என்கிற ஆதிமனுஷியின் குணாதிசயம் இன்றைய நவீன பெண்ணிடமும் அப்படியே நீடிக்கிறதா? அபிராமியின் செயல்களைப் பார்த்தால் இப்படித்தான் தோன்றுகிறது. இணைப்பில் இணைந்திருங்கள். தொடர்ந்து விவாதிப்போம்.
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

எபிசோட் 54 -ல் நடந்தது என்ன?

‘டக்குன்னு டக்குன்னு பார்க்காத’.. என்கிற ரகளையான பாடல் ஒலித்தது. அனிதா சென்றதில் இருந்து இப்போதெல்லாம் கார்டன் ஏரியாவில் நடனம் ஆட பெரும்பாலோனோர் ஆர்வம் காட்டுவதில்லை. இப்போது அபிராமி, ரம்யா ஆகிய இருவர் மட்டுமே ஆடினர்.

‘வாய்மையே வெல்லும்’ டாஸ்க்கில் அடுத்ததாக அபிராமியின்மீது ஒரு புகார் வந்தது. ‘யாரையாவது சார்ந்திருக்கிறாரா, அபிராமி?” என்பதுதான் அந்த வழக்கு. (அம்பூட்டூ சத்தமாவா கேக்குது?!). இது தொடர்பாக அபிராமியிடம் வலுவான கேள்விகளை ரம்யா முன்வைத்தார். “நான் வந்ததுல இருந்து பார்த்தவரைக்கும் சொல்றேன். உங்க கிட்ட தனித்தன்மையே இல்ல. பாலா என்ன சொல்றாரோ, அந்த பாயிண்ட்டுகளைத்தான் முன்வைக்கறீங்க” என்று வாக்களித்த ரம்யா விளக்கம் தர, அவருடன் மல்லுக்கட்டினார் அபிராமி.

அபிராமி, பாலா
அபிராமி, பாலா

இந்த டாஸ்க் முடிந்து வெளியே வந்ததும் அதை விடவும் அதிகமாக பாலாவுடன் மல்லுக்கட்ட வேண்டிய நெருக்கடி அபிராமிக்கு ஏற்பட்டது. “அது வெறும் டாஸ்க்தானே... ஏன் அதுக்கு அவ்வளவு டென்ஷன் ஆனே?... ஏன் இவ்வளவு ஃபீல் பண்றே... நேத்திக்கு இதை வெச்சுதானே என்னை மடக்கினே! எனக்கு வந்தா தக்காளிச் சட்னி! உனக்கு வந்தா ரத்தமா?” என்றெல்லாம் பாலா வரிசையாகக் கேள்விகள் கேட்க, சண்டையில் அடிவாங்கியவன், ‘எனக்கு வலிக்கலையே’ என்று சிரித்து மழுப்புவதைப்போல, “நான் ஒண்ணும் ஃபீல் பண்ணலை. கண்ணு வேர்க்குது” என்று சமாளித்தார் அபிராமி. “நான் யாரைச் சார்ந்திருக்கேன்னு கேட்டுத் தெளிவு பண்ணிக்கிட்டேன். அவ்வளவுதான்!” என்று அபிராமி சொல்வது மழுப்பல்.

“யாரு அது வண்டு முருகன்?” – பிக் பாஸின் காமெடியான கேள்வி

வக்கீல் டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்ற முதல் மூன்று நபர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவேண்டிய சமயம். ‘நம்ம வண்டு முருகன். சிரிப்பாவும் சீரியஸாவும் நல்லா பேசினார்” என்று ஜூலி சொன்னபோது குறுக்கிட்ட பிக் பாஸ், “யாரு அந்த புது போட்டியாளர். வண்டு முருகன்?” என்று கேட்டார். ஜோக் அடிக்கறாராம்... ஆனால் இதுகூட புரியாமல் திகைத்த ஜூலி, பின்பு அது புரிய வந்ததும் ஜாலியாக துள்ளிக்குதித்தார். தாமரை வாதம் செய்த அழகைப் பார்த்து ‘வண்டு முருகன்’ என்று வடிவேலுவாக அவரை மக்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாக்கெடுப்பின் இறுதியில் அபிராமி, நிரூப், ரம்யா ஆகிய மூவரும் சிறந்த பங்கேற்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

BB Ultimate
BB Ultimate

“அடுத்த டாஸ்க் ஜோடியா விளையாட வேண்டியிருக்கும். யாரு. யாரு ஜோடின்னு பேசித் தீர்மானிச்சுக்கங்க” என்று அறிவித்தார் பிக் பாஸ். இந்தச் சமயத்தில் அபிராமி செய்த விஷயம் வியப்பாக இருந்தது. முந்தைய ஜோடி டாஸ்குகளில் பாலா எப்படியெல்லாம் ‘சுள்’ளென்று எரிந்து விழுந்து தன்னை அவமதித்திருக்கிறார் என்பது அபிராமிக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் அதையெல்லாம் துடைத்துக்கொண்டு “ஜோடி சேர்ந்துக்கலாமா?” என்று பாலாவைக் கேட்டார் அபிராமி. பாலா என்கிற வலிமையான போட்டியாளரைச் சார்ந்திருந்தால்தான் தனக்கு பாதுகாப்பு என்று அபிராமி நம்புகிறாரா? அடாவடியாக நடந்து கொள்ளும் பாலாவிடம் இத்தனைப் பணிந்துபோகும் அபிராமி, நிரூப்புடன் சிறிய சண்டை என்றாலும்கூட பத்து மடங்கு கோபத்துடன் பொரிந்து தள்ளும் ரகசியம் என்ன?

அவமதிப்புகளையும் மீறி மறுபடியும் பாலாவிடம் அபிராமி செல்வது ஏன்?

அபிராமியே வந்து கேட்டாலும்கூட “இரும்மா.. யோசிச்சுதான் சொல்லணும்” என்று பாலா அலட்சியமாக சொன்னதால் முகம் மாறினார் அபிராமி. இந்தப் பஞ்சாயத்தில் நெருப்பை அள்ளி போடலாம் என்று நிரூப் நினைத்தாரோ, என்னமோ “நானும் சுருதியும் ஜோடி” என்று முதலில் அறிவித்தவர், டக்கென்று மனம் மாறி “நானும் பாலாவும் ஒரு டீமா விளையாடினா எப்படி இருக்கும்?” என்று ஜாலியாகக் கேட்டு அபிராமியை அதிர்ச்சியடைய வைத்தார். அபிராமி மட்டுமல்ல, மற்ற அனைவருமே இதற்கு அதிர்ச்சியடைந்திருப்பார்கள். திருமலை நாயக்கர் மாளிகை தூண் மாதிரி இருக்கும் நிரூப்பும் பாலாவும் ஒரு அணியாக இணைந்து விட்டால் மற்றவர்கள் எல்லாம் தூசுதான். இறுதியில் ஜோடி வரிசை இப்படியாகத்தான் அமைந்தது. பாலா – அபிராமி, நிரூப் – சுருதி, ஜூலி – தாமரை, சதீஷ் – ரம்யா.

நிரூப், சுருதி
நிரூப், சுருதி

டாஸ்க் ஆரம்பித்தது. ஒவ்வொரு அணிக்கும் தனித்தனி நிறங்களில் கொடி தரப்படும். கார்டன் ஏரியாவில் கம்பங்களும் அடித்தளமும் இருக்கும். பஸ்ஸர் அடித்தவுடன் அவற்றை சேகரிக்க வேண்டும். இறுதியில் யாருடைய கொடி முழுமையான அளவில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ, அந்த அணியே வெற்றிபெறும். ஆட்டம் ஆரம்பித்தது. “தாமரையக்கா. பழைய சம்பவங்கள் ஞாபகம் வருதா?” என்று நிரூப் கேட்க “மறக்க முடியுமா?” என்று சிரித்தார் தாமரை.

பாலா, சதீஷ்
பாலா, சதீஷ்

பஸ்ஸர் அடித்ததும் பாய்ந்து ஓடி கொடிக்கம்பங்களைச் சேகரித்தார்கள். ஒரே தள்ளு முள்ளு. கொடியை நடுவதற்கு அதன் அடித்தளமும் முக்கியம் என்பதை தாமதமாக உணர்ந்து அதையும் ஒதுக்கிக்கொண்டார்கள். இருப்பதிலேயே அதிக கம்பங்களைச் சேர்த்தவர் நிரூப்தான். இதற்கு அடுத்ததாக பாலா அணியைச் சொல்லலாம். தங்களைச் சுற்றி எவரும் அணுகாதவாறு தடைகளை ஏற்படுத்தி வைத்தார் பாலா. இருப்பதிலேயே குறைந்த கம்பங்கள் ரம்யாவிற்குத்தான் கிடைத்தன. சதீஷ் என்ன செய்தார் என்று கேட்காதீர்கள். அது ஒரு தனியான துன்பியல் சம்பவம்.

சதீஷின் சத்தியாக்கிரக போராட்டம்

தங்கள் அணியிடம் குறைவாக இருப்பதால் பாலா அணியிடமிருந்து எதையாவது பிடுங்க முடியுமா என்று ஜாலியாக முயன்று பார்த்தார் ரம்யா. அது இயலாது என்று அவருக்கே தெரியும் என்றாலும், டாஸ்க் என்று வந்துவிட்டால் ஏதாவது செய்தாக வேண்டும். சதீஷைப்போல சாமியாராக அமர்வதற்கு மிகப்பெரிய மனோதிடம் வேண்டும். ரம்யாவை எளிதாக சமாளித்த பாலா, கூடவே தாமரையுடன் இணைந்து கொண்டதும் ஜல்லிக்கட்டுக் காளைபோல உக்கிரமானார். அவர் அத்தனை ஓவர் சீன் போட்டிருக்கவே தேவையில்லை. மூர்க்கமாக பாய்ந்து சென்று ரம்யாவின் சொச்ச கொடிகள் மற்றும் தாமரை அணி வைத்திருந்த சில கொடிகளையும் ஆவேசமாக பிய்த்தெறிந்தார் பாலா. “ஏன். ஏன். இவ்வளவு ஆவேசம்…?” என்பது மாதிரியே அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் சதீஷ். அதைத் தடுப்பதற்குக்கூட அவர் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அல்லது வாதாடவும் இல்லை. காந்திக்குப் பிறகு அஹிம்சையை முழுவதுமாகப் பின்பற்றுவர் சதீஷ்தான் போலிருக்கிறது. அப்படியொரு சாத்வீகம்.

பாலா
பாலா

பாலா கிழித்துப்போட்ட கொடிகளை வைத்து ஏதாவது ஒப்பேற்ற முடியுமா என்று பரிதாபமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் ரம்யா. “நீ எதவும் தடுக்கலையா?” என்று சதீஷிடம் கேட்டதற்கு மெளனம் மட்டுமே பதிலாக வந்தது. ஆனால் ரம்யா இதற்காக டென்ஷன் ஆகவில்லை. “என்னப்பா..” என்பது மாதிரியே சிரித்து விட்டு நகர்ந்தார். பாலாவின் ஒரு சுற்று சண்டையை முடித்த தாமரை, அடுத்ததாக சுருதியிடம் ஏதாவது தேறுமா என்று ஆரம்பித்தார். சுருதி தடுத்தும் தங்களிடமிருந்த எக்ஸ்ட்ரா கொடிக் கம்பங்களை தியாகம் செய்து தாமரையிடம் தந்தார் நிரூப். இதன் மூலம் ஓர் அநாவசியமான சண்டையைத் தவிர்க்கலாம் என்பது நிரூப்பின் உத்தேசமாக இருக்கலாம்.

ரம்யா மற்றும் தாமரையின் கொடிகளைக் கிழித்தது பாலாவிற்கே உள்ளூற உறுத்தியிருக்கவேண்டும். “மன்னிச்சுடுங்க” என்று அவர் சம்பிரதாயமாக கேட்க “அதெல்லாம் முடியாது” என்று பதில் வந்தது. ஹார்ட்டின் ஒட்டுகிற டாஸ்க்கில் முன்பு செய்த அதே தந்திரத்தை இப்போதும் பின்பற்ற முயன்றார் நிரூப். கொடிகளையும் கம்பங்களையும் எடுத்துக்கொண்டு பாத்ரூமின் உள்ளே எவ்வித இடையூறும் இல்லாமல் ஒட்டலாம் என்பது அவரது கலீஜான ராஜதந்திரம். “ஏண்டா. பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுக்கறே?” என்று ஆவேசமாக ஆட்சேபம் செய்தார் தாமரை. “முன்னாடி பாலாவும் அதேதானே பண்ணனான். இதுதான் Lateral Thinking” என்றார் நிரூப். கழிவறைக்குள் ஒளிந்தால்தான் என்ன? இறுதியில் வெற்றிதானே முக்கியம் என்பது அவரின் கணக்கு.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

மற்றவர்களிடம் போராடி எதையாவது எடுக்க முயலுமா என்று அரைமனதுடன் அலைபாய்ந்து கொண்டிருந்த ரம்யா “வாங்க சதீஷ்” என்று அவசரமாக கூப்பிட, நம்மாள் அப்போது கூட நகரவில்லையே?! காந்தியின் சரியான வாரிசு. “எனக்கு இந்த மாதிரி விளையாடறது பிடிக்கலை” என்று சதீஷ் சொல்லும்போது “என்ன. இவர் இப்படி இருக்கிறாரே’ என்று நமக்குத் தோன்றுவதில் நியாயமுண்டு. ஆனால் பாலா மாதிரியான ஆட்கள் ஆவேசமாக விளையாடுவதைப் பார்க்கும் போது சதீஷ் சொல்வதும் நியாயம்தானோ என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கான விஷயங்கள் பிறகு நடந்தன.

தாமரையிடம் உக்கிரமாக மோதிய பாலா

பாலாவிடம் மோதி ஜெயிக்கமுடியாது என்பது நன்கு தெரிந்தும் அவரிடமிருந்த கொடிகளைப் பிடுங்குவதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்தார் தாமரை. “நமது அன்னைதானே?” என்று பாலாவும் சற்று இலகுவாக விளையாடியிருக்கலாம். ஆனால் அந்தக் கொடியில்தான் தனது உயிரே இருக்கிறது என்பதைப் போல ஆவேசமாகப் பிடுங்க தாமரை தடுமாறி விழுந்தார். அப்போதாவது பாலா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அடுத்த முறை இன்னமும் ஆவேசமாகச் செயல்பட, தாமரையில் தரையில் மோதி தலையில் அடிபட்டு அப்படியே சாய்ந்தார். பார்ப்பதற்கே பதட்டம் தர வைக்கும் காட்சியாக இது இருந்தது. ‘எனது மஸில் பவரை எப்போதுமே உபயோகிக்க மாட்டேன்' என்று நிரூப் தாக்கப்பட்ட சம்பவத்தின்போது முன்பு சொன்ன பாலா, ஏன் இத்தனை மூர்க்கமாக நடந்து கொள்கிறார்?

தாமரை, பாலா
தாமரை, பாலா

ஏறத்தாழ மயக்கம் போடும் அளவிற்கு தாமரை கீழே விழுந்ததால் பதட்டமான பாலா, தன் அணியின் கொடிகளை தானே ஆத்திரத்துடன் கிழித்துப் போட்டு விட்டு “உங்க கிட்டதான் நெறய இருக்குல்ல.. அப்புறம் இங்க வந்தே.. இதைப் பார்க்கும்போது நான்தான் அசிங்கமா தெரிவேன்.. எனக்கு பிபி ஏறுது..” என்று பதட்டத்துடன் கத்தினார். ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பது இதுதான். ஒரு பெண்ணிடம் மூர்க்கமாக மோதினால், அது என்னதான் டாஸ்க்கிற்காக என்றாலும் பார்வையாளர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று முன்னமே பாலா யோசித்திருக்க வேண்டும். “என்னாச்சு?” என்று நிரூப் பதட்டத்துடன் வெளியே வந்து விசாரிக்க “இல்லடா.. நான் கொடியைத்தான் பிடிச்சு இழுத்தேன். தாமரையும் கூடவே வந்து விழுந்துட்டாங்க” என்று இரண்டிற்கும் ஏதோ சம்பந்தம் இல்லாதது போலவே மறுபடி மறுபடி விளக்கம் அளித்தார். பாலாவிடம் வெளிப்பட்ட பதட்டமே அவருக்குள் இருக்கும் குற்றவுணர்ச்சியை அம்பலப்படுத்திவிட்டது.

அபிராமி, பாலா, ரம்யா
அபிராமி, பாலா, ரம்யா

பாலா மன்னிப்பு கேட்க “என் வலியை வாங்கிக்க முடியுமா?” என்று தாமரை அசட்டுத்தனமாக சென்டிமென்ட் பேச, “அப்படின்னா.. நானும் என்னை காயப்படுத்திக்கட்டுமா?” என்று அதையும்விட அபத்தமாக பாலா பேச, ஒரு மோசமான சீரியல் காட்சியைப் பார்த்த எபெக்ட் வந்தது. “பாத்ரூம்ல போய் சேஃபா ஒளிஞ்சிக்கிட்டு இருக்கறவங்க கிட்ட போய் விளையாடு. ஏன் எங்க கிட்டயே வர்றீங்க?” என்று பாலா கத்தியதற்கு அபிராமியும் பின்பாட்டு பாடினார்.

“நீ ஒரு பிராடு” – நிரூப்பிடம் வெடித்த அபிராமி

இந்தச் சமயத்தில் இன்னொரு கலவரம் வெடித்தது. யாராவது வருகிறார்களா என்று பாத்ரூமிலேயே காத்திருந்த நிரூப்பைப் பார்த்து, அந்தப் பக்கமாக வந்த அபிராமி “ஏண்டா. பயப்படறே... பொண்ணுதானே வர்றேன்... பாலா வர்ற மாதிரி அப்படிப் பயப்படறே” என்று சிரித்துக்கொண்டே கேட்க, அது நிச்சயம் நிரூப்பின் ஈகோவை உசுப்பியிருக்க வேண்டும். இந்த விஷயம் அபிராமிக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இயல்பாகக் கேட்பதாக நினைத்து நிரூப்பின் ஈகோவைத் தொட்டுவிட்டார். என்னதான் பாலாவும் நிரூப்பும் நட்பாக இருப்பதுபோல் பாவ்லா செய்தாலும் அவர்களுக்குள் புகைச்சல் அவ்வப்போது வெளிப்படுவதை வீடே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ‘ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது' என்கிற தத்துவம் இது.

அபிராமியின் கமெண்ட்டினால் கோபமடைந்த நிரூப் வார்த்தைகளை இறைக்க, அதை விடவும் உக்கிரமான அபிராமி ஆங்கில வசை வார்த்தைகளைத் தாராளமாக இறைத்தார். “நீ ஒரு பிராடு” என்பது முதல் அபிராமியின் தாக்குதல்கள் இடிபோல இறங்கின. இதே கோபத்தை பாலாவிடம் அபிராமியால் காட்டி விட முடியுமா? நிரூப் பழைய விஷயங்களையும் இணைத்து பேசி “இது பிக் பாஸ் வீடு” என்று சொல்லிவிட கோபத்தின் உச்சிக்கே சென்றார் அபிராமி.

நிரூப் , அபிராமி
நிரூப் , அபிராமி

“இவன் மாறவே மாட்டான்” என்று இன்னமும் கூடுதலாக வசைகளை இறைத்தபடி அபிராமி வெளியே வர “என்ன ஆச்சு?” என்று மக்கள் பதட்டமாக விசாரிக்க ஆரம்பித்தார்கள். “பாலாவைப் பார்த்து நான் பயப்படறதா சொல்றா” என்று நிரூப்பால் நேரடியாக சொல்லமுடியாது. எனவே “பொண்ணைப் பார்த்து பயப்பட வேண்டாம்ன்ற மாதிரி அபிராமி சொல்றா; டாஸ்க்ல ஆம்பளை என்ன... பொம்பளை என்ன?.. அவளே அவளை இளக்காரமா சொல்லிக்கிறா” என்று அந்த நிலையிலும் மிகச் சாமர்த்தியமாக ஆட்டத்தை ஆடினார் நிரூப்.

“நான் சொன்னது தப்புதான். ஆனா அந்த அர்த்தத்துல சொல்லல. பாலா கிட்ட இருக்கற பலம் என் கிட்ட கிடையாதுன்ற அர்த்தத்துலதான் சொன்னேன்” என்று அபிராமி கொதிப்புடன் விளக்கம் அளித்தார். “பொம்பளைங்களால விளையாட முடியாதுன்னு சொன்னியா” என்று தாமரை விசாரித்ததற்குத்தான் அபிராமியின் கோபம் இவ்வாறாக வெடித்தது. தாமரையின் விசாரிப்பைக் கண்ட போதுதான் நிரூப்பிற்கு அதிக ஆத்திரம் வந்தது. “பிரச்சினை முடிஞ்சதுக்கா. அத்தோட விட்டுடு” என்று மறுபடி மறுபடி அவர் கத்தியதைப் பார்த்ததும் “இதுல வேற என்னமோ இருக்கு போல” என்ற முகபாவத்துடன் தாமரை அடங்கிவிட்டார்.

கண்ணை மறைக்கும் தாமரையின் பாசம்

பாலா தன்னை ஆவேசமாக கையாண்டதற்கு கூட தாமரை பெரிய ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. பாலாவிற்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது போலவே, தாமரைக்கு பாசம் கண்ணை மறைத்து விட்டது. இதே மாதிரியான பிஸிக்கல் டாஸ்க்கில் முன்பு இமான் அண்ணாச்சியிடமும் சிநேகனிடமும் பயங்கரமாக ஆவேசப்பட்ட தாமரை, இப்போதோ பாலா என்பதால் அப்படியே பம்மியது பயங்கரமான பாச அரசியல். வீட்டில் இத்தனை களேபரம் நடந்து கொண்டிருந்தாலும் கிச்சன் ஏரியாவில் இருந்து ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டபடி சதீஷ் வந்த காட்சி இருக்கிறதே? அடடா! சதீஷிடமிருந்து உலகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

பாலாவிற்கும் ரம்யாவிற்கும் இடையே இன்னொரு வாக்குவாதம் ஆரம்பித்தது. தங்கள் அணியின் கொடிகளை பாலா பலவந்தமாக கிழித்துப் போட்டது, அதை சதீஷ் கண்டு கொள்ளாமல் இருந்தது போன்ற காரணங்களால் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்த ரம்யா, ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் வெடிக்க ஆரம்பித்தார். தாமரையை பலவந்தமாக இழுத்துப் போட்டது குறித்து ரம்யா புகார் தெரிவிக்க “சம்பந்தப்பட்ட நான் புகார் தரலைல்ல.. விடு” என்று பாலாவிற்கு கண்மூடித்தனமான ஆதரவைத் தந்தார் தாமரை “யாரையாவது காலி பண்ணனும்னே அலைவீங்களா?” என்று பாலா ஆவேசப்பட “உங்களை யாரும் காலி பண்ண வேணாம்.. நீங்களே அதை செஞ்சுக்குவீங்க” என்று ரம்யா சொன்னது ஒருவகையில் சரி. பாலாவின் ஆத்திரம் அவருக்கே எதிரான சாட்சியமாக அமையும்.

பாலா – அபிராமி – ரகசிய வாக்குவாதம்

ஒருவழியாக கொடி டாஸ்க் முடிந்தது. யாருடைய கொடிகளின் எண்ணிக்கை அதிகம் என்று பார்க்கப்பட்டது. நிரூப் + சுருதி அணிதான் முன்னிலையில் இருந்தது. என்றாலும் இந்த முடிவில் கூட பிக் பாஸ் டீம் ஆர்வம் காட்டவில்லை. அவர்களின் ஃபோகஸ் வேறு இடத்தில் இருந்தது. ஆம், பாலாவும் அபிராமியும் வாய்க்குள் ரகசியமாக பேசியபடி ஒரு விஷயத்தைத் தீவிரமாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். பாலா கொடிகளைக் கிழித்துப் போட்டதில் அபிராமிக்கே உடன்பாடில்லை. ஆனால் பொதுவில் அதைச்சொல்ல தன் பார்ட்னரை காட்டிக் கொடுக்கமுடியாது. எனவே பாலாவிடம் ரகசியமாக விசாரித்தார். “நானும் இந்த டீம்ல பார்ட்னர்தானே. என்கிட்ட கேக்காமயே..” என்று ஒரு வரிதான் அபிராமி ஆட்பேசமாக கேட்டார். அதற்கு பாலா அதே ரகசியக் குரலில் டிசைன் டிசைனாக சொன்ன லாஜிக் விளக்கம் இருக்கிறதே?! கேட்கும்போதே நமக்குத் தலைசுற்றியது. அபிராமியால் எதுவும் பதில் பேச முடியவில்லை. பேசினாலும் முருங்கை மரத்தில் பாலா மறுபடியும் ஏறிக் கொள்வார். எதற்கு வம்பு?

அபிராமி
அபிராமி

“எல்லோருமே என்னைத்தான் டார்க்கெட் பண்றாங்க. நான்தான் எல்லோருக்கும் வரிசையா பதில் சொல்ல வேண்டியிருக்கு” என்கிற பாலாவின் ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது. ஆனால் இருப்பதிலேயே அவர்தான் வலிமையான போட்டியாளர் என்னும் போது இந்தச் சவாலை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். குறைந்த எண்ணிக்கையிலான கொடிகளை வைத்திருந்த ரம்யா + சதீஷ் ஜோடி ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. மனம் பொறுக்காமல் “என்ன.. இப்படிப் பண்ணிட்ட?” என்று சதீஷிடம் தனியாக விசாரித்தார் ரம்யா. “வேணும்னா என் மேல கம்ப்ளெயிண்ட் பண்ணிக்கோங்க.” என்று அலட்சியமாக பதில் சொன்ன சதீஷ், இதற்குப் பிறகு “எனக்கு இப்படியெல்லாம் ஆடப் பிடிக்காது.. நான் என்ன பண்றது?” என்று சொல்லும்போது ரம்யாவால் வேறென்ன பேச முடியும்? தலையெழுத்தே என்று போக வேண்டியதுதான். அதே போல் கடந்து சென்றார் ரம்யா.

ரம்யா, சதீஷைத் தவிர இதர ஜோடிகள் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறினார்கள். நடந்த சம்பவங்களைப் பற்றி பாலா + தாமரை, அபிராமி + ஜூலி ஆகிய இரண்டு அணிகளும் தனித்தனியாக உட்கார்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். நாள் முடிந்து விளக்குகள் அணைக்கப்படும் நேரம். வெளியே இருந்த கொடிகளை ஜாலியாக கிழித்தெறிந்து விளையாடிக் கொண்டிருந்தார். “நிரூப் ஐயாம்.. ஸாரி ஓகே.. ஏதோ ஒரு இதுல பேசிட்டேன்” என்று அபிராமி தானாக முன் வந்து மன்னிப்பு கேட்க “அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன். நான் சும்மா டைம்பாஸிற்காகத்தான் சண்டை போட்டேன்” என்று ஜாலியாக சொன்ன நிரூப்பை பழுதென்று பக்கத்தில் செல்வதா, பாம்பென்று விலகிச் செல்வதா.. என்றே தெரியவில்லை. (விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கியேப்பா நிரூப்பு!). ஆனால் எத்தனை சண்டை நடந்தாலும் உடனே கூலாகி விடுகிற நிரூப்பிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இருக்கிறது.