Published:Updated:

BB Ultimate - 56: பிக் பாஸிலும் IPL ஏலம்; பாலாவைத் திட்டிய அபிராமி; எவிக்ஷனில் வெளியேறினாரா சதீஷ்?

BB Ultimate : ரம்யா பாண்டியன், அபிராமி

BB Ultimate: ‘இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை சிறப்பாக கையாண்டீர்கள். முழு மதிப்பெண்கள்' என்று பிக் பாஸ் அறிவிக்க மக்கள் சுறுசுறுப்பாக ஷாப்பிங்கில் இறங்கினார்கள்.

Published:Updated:

BB Ultimate - 56: பிக் பாஸிலும் IPL ஏலம்; பாலாவைத் திட்டிய அபிராமி; எவிக்ஷனில் வெளியேறினாரா சதீஷ்?

BB Ultimate: ‘இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை சிறப்பாக கையாண்டீர்கள். முழு மதிப்பெண்கள்' என்று பிக் பாஸ் அறிவிக்க மக்கள் சுறுசுறுப்பாக ஷாப்பிங்கில் இறங்கினார்கள்.

BB Ultimate : ரம்யா பாண்டியன், அபிராமி
சாண்டி, தீனா வந்ததிலிருந்து இரு தினங்களாக ரத்தப் பிறாண்டல்கள் குறைந்து, நகைச்சுவைச் சிதறல்கள் அதிகரிக்க ஆரம்பித்திருப்பது பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்திருக்கும் நல்ல மாற்றம். வழக்கம்போல இந்த வார எவிக்ஷன் யார் என்கிற தகவல் வந்து விட்டது. அதைப் பற்றி கட்டுரையின் கடைசியில்...

எபிசோட்- 56-ல் நடந்தது என்ன?

காலையில் பாடல் ஒலித்தபோது, தேர்விற்காக மகனை எழுப்பும் அம்மாபோல, அனைவரையும் தட்டி எழுப்பி நடனமாட வலியுறுத்தினார் சாண்டி. மிக நல்ல விஷயம் இது. கிச்சன் ஏரியாவில் சிறிய சர்ச்சை. பல சமயங்களில் பாலாவிடம் பம்மிச் சென்றாலும் அவசியமான நேரங்களில் பூனைக்குட்டிபோல சீற்றம் கொள்கிறார் அபிராமி.

மனோரமா, சரண்யா... ‘அம்மா’ வரிசையில் தாமரை

பாலாவின் ஒரு செய்கைக்கு அபிராமி ஆட்சேபம் தெரிவிக்க வழக்கம்போல் டெரர் முகத்தை ரியாக்ஷனாகக் காட்டினார் பாலா. சினிமாவில் வரும் மனோரமா, சரண்யா பொன்வண்ணன் போன்ற பல ‘அம்மா’ கேரக்ட்டர்களை தாமரை தூக்கிச் சாப்பிட்டுவிடுவார் போலிருக்கிறது. பாலாவின் தவறைப் பூசி மெழுகியதோடு மட்டுமல்லாமல் அபிராமியையும் அவர் தடுத்து நிறுத்த “நீங்களும் எந்த தப்பையும் தட்டிக் கேட்க மாட்டீங்க” என்று அபிராமி கொந்தளித்தது நல்ல மாற்றம். “தலைமுடியையெல்லாம் பிடிச்சு தரையில் உருண்டு சண்டை போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்” என்று கிண்டலடித்தார் சாண்டி. இப்படியாகக் கேலிசெய்து சண்டைகளைத் தடுப்பதும் ஒரு நல்ல உத்திதான்.

அபிராமி
அபிராமி

தாமரை பாடிக்கொண்டிருந்த ஒரு சினிமாப்பாடலின் வரிகளை அப்படியே திருப்பிப்போட்டு பாடி, லொள்ளு செய்து கொண்டிருந்தார் சுருதி. ‘துபாய், விவேகானந்தர் குறுக்கு சந்து’வில் வடிவேலு சொல்லும் “ஓ.. இது அந்த திருப்பியா?” என்பதுபோல் இருந்தது சுருதி செய்த குறும்பு. (பரவால்ல. மேடம் காமெடில்லாம் டிரை பண்றாங்க!). பாலா பாத்திரம் கழுவும் டீமில் இருக்கிறார். ஆனால் அந்தப் பக்கம் அவர் செல்லாததால் ஒரே ஆள் சிரமப்படும் நிலைமை. இதைச் சுட்டிக் காட்டி அபிராமி ஆட்சேபம் தெரிவிக்க, வழக்கம் போல் பாலா ‘உர்’ முகத்தைக் காண்பிக்க, இந்த விஷயத்திலும் பாலாவை சப்போர்ட் செய்து சரண்யா பொன்வண்ணன் ஆவேசமாக உள்ளே வந்து விட்டார். (ஆனி.. போயி. ஆவணி வந்தா. எம்புள்ள பாத்திரம் வெளக்க வந்துருவான்!).

பிக் பாஸ் வீட்டினுள் நடந்த ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பித்துவிட்டதால் பிக் பாஸ் அந்த மூடிற்குள் சென்றுவிட்டார் போல. வீரர்களை ஏலம் எடுக்கும் விஷயத்தை இங்கேயும் கோத்துவிட்டார். சாண்டியும் தீனாவும் போட்டியாளர்களை ஏலம் எடுக்க வந்த தொழிலதிபர்களாம். பாவம், சாண்டி. டவாலி வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டியிருந்தது. எளிமையான அதிபர் போல. ஒவ்வொரு போட்டியாளரும் மேடைக்கு வந்து தங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கி தன்னை அதிக ஏலத்தில் எடுக்கச் செய்யும் அளவிற்கு பேச வேண்டும். சாண்டியும் தீனாவும் இருந்த காரணத்தினால் இந்த டாஸ்க் ரகளையான நகைச்சுவையுடன் சென்றது. சிரிப்பிற்கு இடையே சீரியஸான கேள்விகளையும் உள்ளே ஒளித்துவைத்து இவர்கள் கேட்டது சிறப்பு. ஏனோ இந்த டாஸ்க்கில் பாலா கலந்து கொள்ளவில்லை. முதலில் சதீஷ் அழைக்கப்பட்டபோது அவர் மட்டுமல்லாமல் சபையே தன்னிச்சையாக வெடித்து சிரித்தது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தில். “உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு எனக்குத் தெரியல. நீங்களே ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்” என்று நயன்தாரவிடம் ஆர்யா கெஞ்சுவதைப் போல “ஐயா. இந்த வீட்டுக்குத் தெரியாம வந்துட்டேன்யா.. முடியல. படுத்தறாங்க” என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் சதீஷ். ஆனால் தன் குறைகளை மழுப்பி மறைக்காமல் அவரே ஒப்புக்கொண்டது நல்ல விஷயம்.

சாண்டியுடன் டான்ஸ்
சாண்டியுடன் டான்ஸ்

“என்னால அவ்வளவுதாங்கய்யா முடியும்” – சதீஷ் பரிதாப வாக்குமூலம்

பிக் பாஸ் ஆட்டத்தில் சதீஷ் சரியாக விளையாடாதது குறித்து நிறைய விமர்சனங்களும் கிண்டல்களும் எழுகின்றன. இந்தத் தொடரிலும் அவை பதிவாகியிருக்கின்றன. ஆனால், ஒருவன் யாரையும் காயப்படுத்திப் பேச நினைக்காமல், சூழல் காரணமாக தன்னுடைய அடிப்படையான குணாதிசயத்தில் இருந்து சிறிதும் மாறாமல் இருப்பது நல்ல பண்பே. இந்த விஷயங்களை தனது ப்ளஸ் பாயிண்ட்டாக சதீஷ் முன்வைத்திருக்கலாம். “நான் யாரையும் ஹர்ட் பண்ற மாதிரி பேசினது கிடையாது” என்று சதீஷ் சொன்னபோது இதர போட்டியாளர்கள் தாமாக முன் வந்து கைத்தட்டியதே இதற்கு சாட்சி.. சதீஷ் தன்னுடைய ஒரே பலமான நகைச்சவைத் திறனை இன்னமும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம் என்பதுதான் என் ஒரே ஆதங்கம். “சுத்தியிருக்கிறவன் எவனும் சிரிக்காம எப்பவும் டெரரா இருந்தா நான் என்னங்கய்யா பண்றது?” என்று சதீஷ் வருந்தியதிலும் ஒரு துளி நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

சதீஷ்
சதீஷ்

“நீங்க டைட்டில் ஜெயிக்க வாய்ப்பு இருக்கா?” என்று சதீஷை சம்பிதாயமாக கேட்ட சாண்டி, பிறகு அந்தக் கேள்வியில் இருந்த அபத்தத்தை அவரே உணர்ந்து “இருப்பா. சிரிச்சுட்டு வந்துடறேன்” என்று எழுந்து சென்றது நல்ல கிண்டல். “நீ. நீயா இருக்கணும்ன்றது ஓகே. ஆனா உன்னை மாதிரி இருக்கக்கூடாது” என்று போகிற போக்கில் சாண்டி சொன்ன தத்தவத்திற்கு சபையில் நல்ல வரவேற்பு இருந்தது. “பத்து ரூபா அளவிற்காவது ஏதாவது பேசுடா” என்று கெஞ்சினார் தீனா. “நீ அமைதியா இருக்கறது ஓகே. டாஸ்க்லயும் ஏதாவது செஞ்சியிருக்கலாம். கிராமத்து டாஸ்க்ல உபதலைவர் –ன்ற வாய்ப்பை பிக் பாஸ் தந்தார். அதை வெச்சும் நீ ஒண்ணும் பண்ணலை” என்று தீனா சுட்டிக் காட்டியது சரியான விஷயம். “குணாதிசயம் சரி. உன் குணமே ஒரு அதிசயம்தான்” என்று டைமிங்கில் ரைமிங்காக அசத்தினார் தீனா. இறுதியில் ஐம்பது ரூபாய்க்கு ஏலம் போனார் சதீஷ். (சரியாப் பாருங்க.. அது செல்லாத நோட்டா இருக்கப் போவுது!).

தாமரையின் ‘சண்டை ஸ்டைலை’ பயங்கரமாகக் கலாய்த்த தீனா

அடுத்து வந்தவர் அபிராமி. வரும் போதே டவாலியின் தலைப்பாகையை இரவல் கேட்டு அணிந்துகொண்டார். அத்தனை தன்னம்பிக்கையாக இருக்கிறாராம். “போன சீசன் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன். இந்த சீசன்ல கூப்பிட்டதே எனக்கு வெற்றிதான். Best Performer வாங்கியிருக்கேன். கேப்டன்சி டாஸ்க்ல நிறைய முறை கலந்திருக்கேன்..” என்று பெருமிதப்பட்ட அபிராமியிடம் “என்டர்டெயின்மென்ட் ஏரியால நீங்க எப்படி? தனியாத்தான் விளையாடி இருக்கீங்களா?” என்றெல்லாம் சரியான கேள்விகளைக் கேட்டு மடக்கினார் சாண்டி. “முட்டை டாஸ்க்ல மட்டும் அதிகமா கோபப்பட்டு சொல்லக்கூடாத வார்த்தைகளை இறைச்சிட்டேன். (அதுல மட்டுமா?!). ரெண்டு முறை ஏமாந்ததால நைட்டு முழுக்க கண்முழிச்சேன். கழுகு சாரை சமாளிக்கறதுதான் கஷ்டமா இருந்தது” என்று அபிராமி சொல்ல “செய்யாத தப்புக்கு பிரெண்டுன்னுகூட பார்க்காம என்னை கெட்ட வார்த்தைல திட்டினாங்கய்யா” என்று சாட்சி சொல்லிக் கதறினார் ஜூலி. இறுதியில் 75 ரூபாய்க்கு ஏலம் போனார் அபிராமி.

சாண்டி - தீனா
சாண்டி - தீனா

அடுத்ததாக வந்தார் தாமரை. “போன சீசனுக்கும் இந்த சீசனுக்கும் உங்க கிட்ட என்ன முன்னேற்றம் இருக்கு?” என்று சாண்டி கேட்க “டாஸ்க் விஷயங்கள் சிலது புரியாது. கேட்டுத் தெரிஞ்சுப்பேன்... இந்த சீசன்ல பல விஷயங்கள் புரியது. நாலு வாட்டி தலைவரா இருந்திருக்கேன். கயிறு டாஸ்க்ல 16 மணி நேரம் பிடிச்சு ரெக்கார்ட் பண்ணியிருக்கேன்” என்று அடுக்கிக்கொண்டேபோன தாமரையை இடைமறித்த சாண்டி “ஜாலியா ஏதாவது செஞ்சிருக்கீங்களா?” என்று மடக்கினார். இந்தச் சமயத்தில், ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு தாமரை எப்படியெல்லாம் சண்டைபோடுவார் என்று தீனா செய்து காட்டிய ‘டெமோ’ நாடகம் ரகளையாக இருந்தது. தாமரை உட்பட ஒட்டுமொத்த சபையும் விழுந்து விழுந்து சிரித்தது. தீனாவுடன் சாண்டியும் இணைந்து பின்னியெடுத்தார்.

தாமரை
தாமரை

“நாங்க வந்தப்புறம் சூப்பரா ஒரு தெம்மாங்கு பாட்டு பாடினீங்க. இந்தத் திறமையை முன்னாடியே நிறைய வெளிப்படுத்தியிருக்கலாமே?” என்று சாண்டி கேட்டது சரியான கேள்வி. “உங்க மேலதான் தப்பு.. ஏன் லேட்டா வந்தீங்க?” என்று பிளேட்டை திறமையாக திருப்பி ஆச்சரியப்படுத்தினார் தாமரை. தன் சமையல் திறமையையும் தாமரை முன்வைக்க அதை ஒப்புக் கொண்ட நடுவர்கள் அதிக பட்ச தொகையாக ரூ. 100-க்கு தாமரையை ஏலத்தில் எடுத்தார்கள்.

சுருதி – இன்னொரு வகையான ‘சதீஷா?’

அடுத்து வந்தவர் சுருதி. ஒருவகையில் இவரை இன்னொரு ‘சதீஷ்’ என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு மோசமில்லை என்றாலும்கூட இவர் செய்யும் முயற்சிகள் பலவும் வீணாகப் போய்விடுகின்றன அல்லது பளிச்சென்று தெரிவதில்லை. ‘என்டர்டெயின்மென்ட் ஏரியாவுல என்ன பண்ணியிருக்கீங்க?” என்று சாண்டி வீசிய முதல் பந்திலேயே சுருதி அவுட். என்றாலும் சமாளித்துக் கொண்டு “என்னால முடிஞ்சத பண்ணியிருக்கேன்.. ஆனா இவங்களை மாதிரி என்னால புரொஃபஷனலா பண்ண முடியாது. என்னுடைய ஆட்டம் கிரெளண்டில்தான்” என்று சுருதி சொன்னது சுமாரான சமாளிப்பு. “நீ என்ன வேணா காரணம் சொல்லிக்கோ. ஆனா இவங்களைப் போய் புரொஃபஷனல் திறமைசாலிகள்ன்னு சொன்னதுதான் எனக்கு ஹர்ட் ஆகுது” என்று மற்றவர்களை பங்கம் செய்தார் தீனா.

அபிராமி
அபிராமி

“நீங்க தனியா விளையாடினீங்களா?” என்று சாண்டி கேட்க “ஆமாம். அதுக்கு நிறைய உதாரணம் சொல்ல முடியும்” என்று கெத்தாக சொல்லி மாட்டிக்கொண்டார் சுருதி. “சரி. சொல்லுங்க” சாண்டி சட்டென்று கேட்டதும் சற்று நேரம் திகைத்து நின்று எதையோ சொல்லி சமாளித்தார். “தனியா விளையாடறதை ஒரு தகுதியா நெனக்கறீங்களா?” என்று தனது கேள்வியை அப்படியே திருப்பிப் போட்டு இம்சை செய்தார் சாண்டி. “துணிச்சலா பேசிடுவேன்” என்று சுருதி சொன்னது உண்மையான விஷயம். இறுதியில் ஐம்பது ரூபாய்க்கு ஏலம் போனார் சுருதி.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

தொழிலதிபர்களை அவ்வப்போது கலாய்த்துக்கொண்டு, மொக்கையும் வாங்கிக் கொண்டிருந்த ‘புன்னகை அரசி’ ரம்யா அடுத்ததாக எழுந்து வந்தார். ஆரம்பத்திலேயே ஒரு மொக்கை காமெடியை சொல்லி விட்டு ‘இதுக்கு ஒரு ரூபாய் கூடவா கொடுக்க மாட்டீங்க' என்று பரிதாபமாக சிரித்ததைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. “பாதில வந்திருக்கீங்களே?” என்கிற கேள்வியை சாண்டி முன் வைத்ததும் “அதுதான் எனக்கு பிரஷரே. இவங்க ஆல்லெடி ஒரு பார்மட்ல செட் ஆகியிருப்பாங்க. அதை நான் உடைச்சுட்டு உள்ளே வரணும்” என்று ரம்யா சொன்ன விளக்கம் சரியானதுதான்.

பங்கம் செய்யப்பட்ட `புன்னகை அரசி' ரம்யா

“உங்களைப் போலவே வைல்ட் கார்டாக உள்ளே வந்த சதீஷை நீங்க ஒரு கடுமையான போட்டியாளராக பார்க்கறீங்களா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சதீஷே எழுந்து நின்று சிரித்தார். தொழிலதிபர்களுடன் இணைந்து சதீஷூம் ரம்யாவை கலாய்த்துக் கொண்டிருந்தது ஒரு வகையில் ஜாலியாகத்தான் இருந்தது. ஆனால் தன் பார்ட்னராக இருந்த ரம்யா சில டாஸ்க்குகளில் தோற்றதுக்கு தானும் ஒரு காரணம் என்பதை சதீஷ் உணர்ந்திருப்பாரா? “சதீஷை பேச வெச்ச காரணத்திற்காகவே உங்களுக்கு பத்து ரூபா தருவேன்” என்ற தீனா “சிரித்த முகம் –ன்னு ஒண்ணைச் சொன்னதுக்காக அதை திருப்பி எடுத்துக்கறேன்” என்று ரம்யாவை பங்கம் செய்தார். “காலைல போடற பாட்டுக்கு எழுந்து ஆடறதுதான் முதல் டாஸ்க். அதை நான் எப்பவும் மிஸ் பண்ணதேயில்லை. தாமரை கிட்ட இருக்கற பாட்டுத் திறமையை அப்பப்ப வெளிய கொண்டு வருவேன்” என்று பாசிட்டிவ்வான விஷயங்களை ரம்யா சொன்னதற்காக ரூ. 75/-க்கு ஏலம் போனார்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

‘இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை சிறப்பாக கையாண்டீர்கள். முழு மதிப்பெண்கள்' என்று பிக் பாஸ் அறிவிக்க மக்கள் சுறுசுறுப்பாக ஷாப்பிங்கில் இறங்கினார்கள். இந்த வாரம் ‘சதீஷ்’ எலிமினேட் ஆகியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. இது எப்போதோ எதிர்பார்த்த, சரியான முடிவுதான். தனக்கு கிடைத்த வாய்ப்பை சதீஷ் தவற விட்டுவிட்டது வெளிப்படை. ஆனால் இதற்காக அவரை கிண்டலடிக்கவோ, குற்றம் சொல்லவோ முடியாது. அவரின் குணாதிசயத்திற்கும் பிக் பாஸ் என்னும் ரத்த பூமிக்கும் பல கிலோ மீட்டர்கள் தூரம் இருக்கிறது. அவர் என்ன செய்வார். பாவம்?!