Published:Updated:

BB Ultimate -57: "அப்புறம் நான் மூஞ்சில அடிச்சமாதிரி சொல்லிடுவேன்"- டெரரான சிம்பு;அதிர்ந்த அபிராமி!

BB Ultimate

BB Ultimate: “நான் எதை வேணா சமாளிச்சுடுவேன்.. இந்த ரம்யா போடற மொக்கை ஜோக் இருக்கே.. முடியல.. தல..” என்று இன்னொரு பக்கம் புலம்பினார் சாண்டி.

Published:Updated:

BB Ultimate -57: "அப்புறம் நான் மூஞ்சில அடிச்சமாதிரி சொல்லிடுவேன்"- டெரரான சிம்பு;அதிர்ந்த அபிராமி!

BB Ultimate: “நான் எதை வேணா சமாளிச்சுடுவேன்.. இந்த ரம்யா போடற மொக்கை ஜோக் இருக்கே.. முடியல.. தல..” என்று இன்னொரு பக்கம் புலம்பினார் சாண்டி.

BB Ultimate
ஒட்டு மொத்த பிக் பாஸ் வரலாற்றிலேயே சதீஷ் போன்ற ஒரு போட்டியாளரைப் பார்த்திருக்கமுடியாது. கீழே தங்கக் காசுகள் கொட்டியிருந்தாலும்கூட சலனப்படாமல் தொடர்ந்து நடக்கும் ஆன்மீகவாதி அவர். சிம்பு உட்பட எத்தனை பேர் அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினாலும் “இந்த கேம் எனக்குப் புரியலை. என் குணாதிசயத்திற்கு செட் ஆகலை” என்றே கடைசிவரை சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இன்னொரு கோணத்தில் சதீஷைப் பாராட்டியே ஆக வேண்டும். பொருளியல் ஆதாயத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவ சமூகம் “ஓடு.. ஓடு. வெற்றியை நோக்கி ஓடு” என்று பல நெருக்கடிகளைத் தந்து நம்மை அவசரப்படுத்திக் கொண்டிருக்கிறது. நாமும் நம்முடைய பல தனித்தன்மைகளையும் இயல்புகளையும் களைந்து விட்டு எதற்கென்றே தெரியாமல் அரக்கப்பரக்க எங்கோ ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு சூழலின் தாக்கத்தில் மாட்டாமல், அதற்காக தன்னையும் மாற்றிக் கொள்ளாமல் தன் இயல்பிலேயே நீடித்த சதீஷின் தனித்தன்மை பாராட்டத்தக்கது.

எபிசோட் 57-ல் நடந்தது என்ன?

கறுப்பு – சிவப்பு நிறத்தின் காம்பினேஷன் ஆடையில் கலக்கலாக உள்ளே வந்தார் சிம்பு. (ஏதேனும் அரசியல் குறியீடு?!). “இந்த வாரம் டாஸ்க்குல்லாம் நல்லாத்தான் பண்ணாங்க... பாராட்ட வேண்டியதுதான்.. .ஆனா...” என்று இழுத்த சிம்பு “சில கேள்விகளும் இருக்கு. வாங்க. கேட்டுடுவோம்” என்றபடி உள்ளே சென்றார்.

‘ரம்யாவோட மொக்கை ஜோக்கை தாங்க முடியலை’

“எப்படியிருக்கீங்க... அப்பாராவ்... சுப்பாராவ்...’ என்று சாண்டி மற்றும் தீனா என்கிற இரட்டையர்களுக்கு புதுப்பெயர் சூட்டி மகிழ்ந்தார் சிம்பு. ‘அடகுக்கடைக்காரரா முதல்ல வந்தீங்க. இப்ப வீட்டுக்கு சொந்தக்காரராவே மாறிட்டீங்க” என்று தீனாவிடம் சிம்பு சொல்லியபோது “என்னைத்தான் இங்க அடகு வெச்சிட்டாங்க. கத்துக்குடுக்க வந்த எனக்கே பல பாடங்களை கத்துக் கொடுத்துட்டாங்கண்ணே..” என்று ஜாலியாக கதறினார் தீனா. “நான் எதை வேணா சமாளிச்சுடுவேன்.. இந்த ரம்யா போடற மொக்கை ஜோக் இருக்கே.. முடியல.. தல..” என்று இன்னொரு பக்கம் புலம்பினார் சாண்டி. “ஓகே.. போட்டியாளர்களை நல்லா டான்ஸ் ஆட வெச்சீங்க.. பாராட்டுக்கள்” என்று சாண்டியைப் பாராட்டிய சிம்பு “இந்த வாரம் எப்படியிருந்தது?” என்று இதர போட்டியாளர்களிடம் முதல் கேள்வித் தூண்டிலைப் போட அதில் சரியாக வந்து மாட்டினார் ரம்யா என்கிற மீன். “Fun-ஆ இருந்தது” என்று அவர் சொல்ல, “எங்களுக்கும் Fun-ஆ இருந்திருக்கணும்ல” என்று சிம்பு மடக்கியதும் “போச்சா. சோனா முத்தா. போச்சா” என்கிற பரிதாப மோடிற்கு அனைவரும் மாறினார்கள்.

சாண்டி - தீனா
சாண்டி - தீனா

“சாண்டி. நீங்க போன சீசன்ல போட்டியாளரா இருந்திருக்கீங்க.. இப்ப உள்ள வந்திருக்கீங்க. என்ன வித்தியாசம் தெரியுது?” என்று சிம்பு கேட்க “இவங்க எல்லோர்கிட்டயுமே ஜாலி உள்ள இருக்கு. வெளியே கொண்டு வர மாட்றாங்க.. டாஸ்க் முடிஞ்சும் அதைவிட மாட்றாங்க.. தாமரையக்கா நல்லாப் பாடறாங்க. நிரூப் ஆள்தான் வளர்ந்திருக்கானே தவிர. பிள்ளைப்பூச்சி" என்று சாண்டி விளக்கம் அளிக்க “நிரூப் காட்டு விலங்கு மாதிரி இருக்கிற வீட்டு விலங்கு” என்று இடையில் குறுக்கிட்டார் சதீஷ். “ஹப்பாடா. ரோபோவிற்கு உயிர் வந்துடுச்சு” என்று சதீஷை நக்கலடித்தார் சிம்பு. “மதுரை முத்து + தங்கதுரை காம்பினேஷன்ல ரம்யா பண்ற அலப்பறையைத் தாங்க முடியல” என்று சாண்டியும தீனாவும் சேர்ந்து கதற, ஆஸ்கர் விருது பெற்ற மகிழ்ச்சியில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் ரம்யா.

சிம்பு
சிம்பு

“ஓகே… வந்தது வந்துட்டீங்க. ஒரு வாரம் இருந்துட்டுப்போங்க” என்று சாண்டி மற்றும் தீனாவிடம் சிம்பு கேட்டுக்கொண்டபோதுதான் அவர்கள் ‘கெஸ்ட்டாக’ வந்திருக்கிறார்கள் என்கிற விஷயமே புரிந்தது. “ஐயா. எங்களை விட்டுறுங்க.. இவங்ககூட மாட்டிக்கிட்டு.. முடியல. அது தவிர வெளில வேலைங்கள்லாம் இருக்கு” என்று இருவருமே கதற “ஓகே. ஒரு டாஸ்க் தரேன். அதைச் சிறப்பா செஞ்சீங்கன்னா. பார்க்கலாம்” என்றார் சிம்பு. சீசன் 3-ல் வனிதாவும் சேரனும் பேசும் ஒரு காட்சிக்கு சாண்டி டப்பிங் தந்த காட்சி சுவாரசியமானது. எனவே அதே பாணியில் “இப்ப சில வீடியோக்கள் வரும்.. அதுக்கு ரெண்டு பேரும் பேசணும்.” என்று சிம்பு சொல்ல, சூழல் ரணகளச் சிரிப்பாக மாறியது. தாமரையிடம் ஜூலி அழும் காட்சி, சதீஷ் கொட்டாவி விடும் வீடியோ, ஜூலி – நிரூப் சண்டை, அபியும் பாலாவும் ரகசியமாக போடும் வாக்குவாதம் ஆகிய வீடியோக்களுக்கு ரகளையாக டப்பிங் பேசினார்கள். இதன் மூலம் நமக்கு ஒரு உண்மை தெரியவருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் ஆவேசமாக சண்டை போட்ட ஒரு காட்சியை இப்போது பார்த்தால் அது எத்தனை காமெடியாக மாறி விடுகிறது?!

கார் டாஸ்க்கை அலசிப்பிழிந்து காயப் போட்ட சிம்பு!

“ஓகே.. சிரிச்சு முடிச்சாச்சு. சீரியஸ் விஷயங்களுக்கு வருவோம். கார் டாஸ்க்ன்னு ஒண்ணு நடந்ததே.. அது உங்களுக்கெல்லாம் புரிஞ்சுதா?” என்று டெரர் குரலில் ஆரம்பித்தார் சிம்பு. சபையில் உடனே பலத்த மெளனம் நிரம்பியது. இந்த டாஸ்க் பற்றிய விசாரணை பல நிமிடங்களுக்கு நீண்டது. சுற்றிச் சுற்றி வந்து சிம்பு கேட்ட கேள்வி என்னவென்றால் ‘பாலாவின் உத்திக்கு எப்படி மற்றவர்கள் எளிதில் இரையானீர்கள்..? புத்திசாலித்தனமாக யோசித்து ஆடியிருக்கலாமே?” என்பதுதான். இந்த நோக்கில் பல கேள்விகளை அடுக்கிய சிம்பு “தாமரையக்கா. அந்த இடம்தான் சண்டை போட்டு அழற இடமா..? அப்புறம் எப்படி நீங்க சரியா யோசிக்க முடியும்?” என்று கேட்டது சரியானது. ஆனால் ‘டாஸ்க் புரிஞ்சுச்சா?” என்று கேட்ட சிம்புவே சில இடங்களில் தடுமாறினார். ‘மத்தவங்களை கன்வின்ஸ் பண்ணி இறங்க வெக்கணுமா?.. ஓட்டுப் போட்டு இறங்க வெக்கணுமா?” என்று அவர் கேட்ட போது “அப்புறம் பிக் பாஸ் ரூல்ஸ் மாத்திட்டாரு. யாரையும் கன்வின்ஸ் பண்ணி இறங்க வெக்கறது கஷ்டம்-ன்னு” என்று பதில் அளித்தார் நிரூப்.

சிம்பு
சிம்பு

இந்த டாஸ்க்கை வெளியில் இருந்து பார்த்த நமக்கே தெரிந்திருக்கும். சிலந்தி வலை போல ஒவ்வொருவரையாக வளைத்துப் பிடித்து வெளியேற்றும் உத்தியை பாலா திறமையாகக் கையாண்டார். அவருடைய உத்தியைப் புரிந்துகொள்ளாமல் அப்போதைய சண்டைக்கும் உணர்ச்சிக்கும் பலியானதால் மற்றவர்கள் வெற்றியைத் தவற விட்டார்கள். ஒரு விஷயத்தை மேக்ரோ பார்வையில் பார்க்காமல் மைக்ரோ பார்வையில் பார்ப்பதால் வரும் சிக்கல் இது. பாலா இந்த டாஸ்க்கை எப்படி கையாள்வது என்கிற முழு வரைபடத்துடன் தெளிவாக வந்திருந்தார். எனவே பாலா குறித்து சிம்பு பாராட்டியது முழுமையான தகுதியைக் கொண்டது. இதற்காக பாலா குற்றவுணர்ச்சி அடையத் தேவையில்லை.

பாலா
பாலா

ஆனால் பாலாவால் அப்படி மகிழ்ச்சியடையவும் முடியாது. ஏனெனில் அவர் அதே வீட்டில் தொடர்ந்து இருந்தாக வேண்டும். ‘இவன் நம்மை ஏமாற்றி விட்டான்’ என்று மற்றவர்கள் கருதும் பது அதன் எதிரொலி நாமினேஷனில் வெளிப்படும். எனவே ‘எனக்கு கில்ட்டியாக இருக்கு' என்று தாமரையிடம் பாலா சொன்னதும் ஒரு நல்ல சமாளிப்பு உத்திதான். சிம்பு சொன்னத போல இந்த டாஸ்க்கில் அனைவருமே சொதப்பினார்களா என்ன? “ரம்யாதான் எனக்கு டஃப் பைட் கொடுப்பாங்கன்னு நெனச்சேன்” என்று பாலாவே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு ரம்யாவின் லாஜிக் திறன் இருந்தது. ஆனால் அவரை முதலிலேயே வாக்களித்து துரத்தி விட்டார்கள். போலவே நிரூப்பையும் ஆரம்பத்திலேயே வாக்களித்து கழற்றி விட்டார்கள். மற்றவர்களின் இந்த சறுக்கல் ஆட்டம் பாலாவிற்கு மிகச் சாதமாகப் போய்விட்டது. அவர் எதிர்பார்த்ததும் இதைத்தான். சிம்பு குறிப்பிட்டதைப் போல, இருப்பதிலேயே வலிமையான பாலாவைத்தான் அனைவரும் முதலில் டார்கெட் செய்திருக்க வேண்டும்?!

‘மக்கள் என்னை கேள்வி கேட்கறாங்க.’ – டென்ஷன் ஆன சிம்பு

சிம்பு மிக டீடெய்லாக இதை அலசியதைப் பார்த்து பயந்துபோன பாலா, ‘நான் அந்த அளவுக்கெல்லாம் யோசிக்கலை சார்' என்று பம்மியது சுவாரசியம். குறிப்பாக தாமரையின் விரோதத்தை சம்பாதிக்க பாலா விரும்பவில்லை என்று தோன்றுகிறது. மற்றவர்கள் சொன்ன விளக்கத்தைக் கேட்ட சிம்பு “இப்ப யோசிக்கறீங்க. இதை அப்பவே செஞ்சிருக்கலாமே?!” என்று மடக்கியதும் அனைவரும் திகைத்து அசடு வழிந்தனர்.

அடுத்ததாக அபிராமியின் பக்கம் சரியாக வண்டியைத் திருப்பிய சிம்பு “உங்களுக்கு பாலாகூட கொஞ்சம் பிரச்னைகள் இருந்தது. ஆனா ஜோடியா சேரணும்னு சொன்னவுடனே.. மறுபடியும் அவர் கிட்டத்தான் போய் நிக்கறீங்க.. உங்க Comfort Zone-லயே ஆடாதீங்க.. ஆடியன்ஸையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. வேற வேற காம்பினேஷன்ல பார்க்கறதுக்கு அவங்களுக்கும் ஆசை இருக்காதா?.. ஷோவே முடியப் போகுது. சுவாரசியமா ஆடப்பாருங்க.. வெளியே மக்கள் என்னை கேள்வியா கேக்கறாங்க.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குங்க –ன்னு சொல்றாங்க. அப்புறம் நான் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடுவேன்” என்று டெரரான குரலில் சிம்பு சொன்னதும் சங்கடமான மெளனம் நிலவியது.

தாமரை - அபிராமி
தாமரை - அபிராமி

சிம்பு வெளுத்துவிட்டு கிளம்பியதும் வழக்கம்போல் வீட்டிற்குள் குடுமிப்பிடிச் சண்டை ஆரம்பித்தது. “நான் பாலாவைத்தான் முதல்ல டார்கெட் பண்ண பிளான் பண்ணேன்” என்று தீனாவிடம் விளக்கம் தந்து கொண்டிருந்தார் ரம்யா. “நான் பாலாவை எதிர்த்து ஓட்டு போட்டேன். யாராவது என்கூட சேர்ந்தீங்களா?” என்று தாமரை ஆவேசப்பட “பாலாவை விடவும் உன்னைத்தான்க்கா ஸ்ட்ராங்க் பிளேயரா நெனக்கறேன்” என்று ஜூலி மழுப்பியதும், ‘கம்பி கட்ற கதைல்லாம் சொல்றா பாரு’ என்று தாமரையின் கோபம் உச்சிக்கு சென்றது. “இது நடந்து முடிந்த பிரச்னை.. நடக்கின்ற பிரச்னையைப் பார்ப்போம்” என்று சமாதானப்படுத்தினார் நிரூப். பிரேக் முடிந்து திரும்பிய சிம்பு “ஏன் பாலா டல்லா இருக்கீங்க. உங்களுக்கு கஷ்டப்பட்டு ஜெயிக்கணும்தானே ஆசையிருக்கு?.. அதுக்காகத்தான் மத்தவங்களை தயார் பண்ணிட்டு இருக்கேன்.. இது உங்களுக்குப் புரியலையா?’ என்று சொன்னதும்தான் பாலாவின் முகத்தில் சற்று புன்னகை வந்தது. “ஓகே. அடுத்தது வக்கீல் வண்டு முருகன் டாஸ்க்கைப் பார்ப்போம்” என்று சிம்பு சொன்னதும் மீண்டும் சபையில் சிரிப்பு திரும்பியது.

இழுவையாகச் சென்ற வண்டு முருகன் டாஸ்க்

‘கோர்ட்ரூம் டாஸ்க்கை’ மீண்டும் தூசு தட்டி எழுப்பிய சிம்பு, சில வழக்குகளின் தலைப்புகளைத் தந்து வாதாடச் சொன்னார். ‘ஜூலி மற்றவர்களுக்கு இரையாக இருக்கிறார்’.., ‘தாமரை வெற்றியை விட்டுத் தருகிறார்’..,, ‘தாமரை வழக்கை வாதாட பாலா மறுத்தது’, சதீஷ் விளையாடமல் இருந்தது போன்ற தலைப்புகளில் வழக்குகள் வந்தன. ரகளையான கலாட்டாவாகவும் சற்று இழுவையாகவும் சென்ற டாஸ்க் இது. இவர்களின் சண்டைச் சத்தம் தாங்காமல் தலையில் பக்கெட்டை கவிழ்த்துக் கொண்டு சாண்டியும் தீனாவும் செய்த குறும்புகள் ரசிக்க வைத்தன. “அடுத்ததாக சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சதீஷ் அவர்கள் வாதாடுவார்” என்று சதீஷை கோர்த்து விட்டார் சிம்பு. அவரோ “என்னப்பா.. என்ன விஷயம்?” என்று சாதாரணமாக கேட்டு வக்கீல்களின் மானத்தை வாங்கினார்.

வண்டு முருகன் டாஸ்க்
வண்டு முருகன் டாஸ்க்

தாமரையை எதிர்த்து வாதாடாமல் போன பாலா “அவங்க ரொம்ப ஃபீல் பண்ணுவாங்கன்னு பயமா இருந்தது. முன்னாடி அப்படி நடந்துச்சு” என்று ஒரு சமாளிப்பு காரணம் சொல்ல “இதெல்லாம் ஒரு கேம்தானே பாலா?” என்று சிம்பு சொன்னது சரியான விஷயம். தாமரை உட்பட யாரையும் சட்டென்று தூக்கிப் போட்டு பேசி விடும் முன்கோபக்காரர் பாலா. டாஸ்க்கில் பாசத்தைக் கலக்கக்கூடாது என்கிற தீர்மானமும் கொண்டவர். அன்றைக்கு அவர் வாதாடாமல் போனது, அபிராமியின் மீதான மனக்கசப்புதான் காரணமே ஒழிய, தாமரை மீதான கரிசனத்தால் அல்ல. ரம்யா டீமில் இருந்த சதீஷ் சரியாக விளையாடததை சிம்பு உள்ளிட்ட பலரும் சரமாரியாக கிண்டல் அடித்து தீர்த்தார்கள். போதாக்குறைக்கு இது தொடர்பான வீடியோவும் ஒளிபரப்பாக சிரிப்பின் உச்சத்திற்கே சபை சென்றது. என்றாலும் சதீஷ் அசரவில்லை. ‘எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா’ மூடிலேயே இருந்தார்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

சதீஷின் ஜாலி வீடியோவைக் காண்பித்து விட்டு திடீர் திருப்பமாக “அதுல ஒரு காட்சி வந்ததே. பார்த்தீங்களா. பாலா?” என்று சிம்பு சட்டென்று கேட்டவுடன் பாலாவின் முகம் இருண்டது. அவர் எந்தக் காரணத்திற்காக இவ்வளவு நேரம் பீதியுடன் அமர்ந்திருந்தாரோ, அந்த விசாரணை இப்போது சபைக்கு வந்து விட்டது. கொடி டாஸ்க்கில் தாமரை மீது பாலா பிரயோகித்த வன்முறை தொடர்பான விஷயம் இது. ஆனால் இப்போதும் பாலாவிற்கு தன் தவறு முழுமையாக தெரியவில்லை. “தாமரையக்கா பறந்ததை பார்த்தேன்” என்று நக்கலாகவே கூறினார். ஏதாவது விபரீதமாக ஆகியிருந்தால்?

தன் தவற்றை இப்போதும் உணராத பாலா

“கொடியைப் பிடிச்சு இழுத்தேன்.. கூடவே வந்துட்டாங்க” என்று அதே சப்பைக் கட்டு காரணத்தை இங்கேயும் கூறினார் பாலா. “நான் விரும்பித்தான் விளையாடினேன்” என்று பாலாவின் தவற்றை மழுப்பி சாட்சி சொன்னார் தாமரை. பல பிள்ளைகள் அடாவடியாக மாறுவதற்கும் திருந்தாமல் இருப்பதற்கும் இது போன்ற அம்மாக்களின் கண்மூடித்தனமான செல்லம்தான் காரணம். ஒரு பெண்ணின் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் காட்சியை ஏதோ விளையாட்டு என்பது போல் பேசினால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். பாலாவை சரியாகவே கண்டித்த சிம்பு, சில நிமிடங்களுக்குப் பிறகு “உங்களைத் தப்பா சொல்லலை” என்று ரிவர்ஸ் கியரையும் போட்டது ரசிக்கத்தக்கதாக இல்லை. (என்ன இருந்தாலும் ரசிகனாச்சே?!) சதீஷ் மெத்தனமாக இருந்தாலும், கொடி டாஸ்க்கில் இறுதி வரை போராடிய ரம்யாவை ஸ்பெஷலாக பாராட்டினார் சிம்பு.

சாண்டி- சிம்பு - தீனா
சாண்டி- சிம்பு - தீனா

நேரத்தைக் கணிக்கும் டாஸ்க்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாலா – நிரூப் ஜோடியைப் பாராட்டிய சிம்பு, “இப்படி புதுப் புது காம்பினேஷன்ல மாத்தி விளையாடுங்க. சேஃப் கேம் ஆடாதீங்க” என்பது போல் அறிவுறுத்தியது நன்று. கோபத்தில் ஆபாச வசைகளை இறைக்கும் அபிராமியையும் சிம்பு ஜாடையாக கண்டித்தது நன்று. “குறும்படம் வேண்டாம்னு பார்க்கறேன்” என்று சிம்பு எச்சரித்ததை சரியாகவே புரிந்து கொண்டார் அபிராமி.

சிம்புவை வாழ்த்தி சாண்டி வழக்கம்போல் ஒரு பாட்டுப் பாடினார். முன்பு கமலுக்கு கிடைத்துக் கொண்டிருந்த பரிவட்டம் இது. “ஒரு வாரம் இருங்களேன்..” என்று சிம்பு கேட்டும் “வேலை இருக்குங்க” என்று சொன்னதால் சாண்டியும் தீனாவும் வெளியே வந்தனர். “என்னதிது. நான் இருக்கேன். டான்ஸ் ஆடாம போனா எப்படி?” என்று சாண்டி உரிமையுடன் வற்புறுத்தியதால் நடனம் மாதிரியான ஒன்றைச் செய்து சமாளித்தார் சிம்பு. (சண்டைக்காட்சியில் நடித்ததால் உடல் வலியாம்!). “என்னையும் அப்படியே வெளியே அனுப்பிடுச்சிடுங்க” என்று தொணதொணத்த சதீஷிடம் “இந்த வாய்ப்பு எவ்வளவு முக்கியம்ன்னு நீங்களாவது சதீஷிற்கு சொல்லுங்க” என்று சாண்டியையும் தீனாவையும் முன்னுதாரணம் காட்டி சிம்பு சொல்லச் சொன்னது அருமையான காட்சி.

பிக் பாஸ் வரலாற்றில் ஒரு சாதனை எவிக்ஷன்

“ஓகே.. அவ்வளவுதானே.. சொன்னது நினைவிருக்கட்டும். நல்லா விளையாடுங்க” என்று கிளம்புவது போன்ற பாவனையில் சிம்பு சொன்னதும் “அப்ப எவிக்ஷன் இல்லையா?” என்று ஆச்சரியத்தில் கோரஸாக கத்தினார்கள், போட்டியாளர்கள். “எவிக்ஷன் இல்லை. ஆனா ஒரு சேவிங்க்ஸ் இருக்கு. இந்த கேமை காப்பாத்த விரும்பறேன்.. சதீஷ் நீ வெளியே வந்துடு.. நீதான் அடம்பிடிக்கிறியே” என்றவுடன் ‘அய்யா.. சாமி.. ரொம்ப நன்றி' என்று கும்பிடு போட்டார் சதீஷ்.

“நீ மேடைக்கெல்லாம் வர வேண்டாம். நான் உங்கிட்ட அப்புறம் தனியா பேசறேன்” என்ற சிம்பு “இந்த பிக் பாஸிற்கு நான் எப்படி வந்தேன்.. கமல் மாதிரி ஒரு லெஜண்ட் நடத்தின ஷோ இது. அந்த மரியாதை என்னால கீழே இறங்கக்கூடாது. ஒரு பக்கம் எனக்கு ஷூட்டிங் போயிட்டு இருக்கு. சண்டைக்காட்சில நடிச்சு உடம்பெல்லாம் வலி.. இருந்தாலும் வந்துட்டேன். இந்த வாய்ப்பை நான் தவறவிட விரும்பலை” என்று சதீஷிற்கு உபதேசம் செய்த விதம் அருமையானது. ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே கூட போகலாம்.

சதீஷ்
சதீஷ்

பிக் பாஸ் வரலாற்றிலேயே எவிக்ஷனுக்கான பில்டப், சஸ்பென்ஸ், பயண வீடியோ, வழியனுப்பி வைக்கும் சடங்கு போன்ற எதுவுமே இல்லாமல் “சரி. கிளம்பு.. காத்து வரட்டும்’ என்பது போல் வெளியே அனுப்பி வைக்கப்பட்ட சாதனையைப் புரிந்தவர் சதீஷ் மட்டுமே. “பாமை நீயே வெச்சுக்கோ” என்று சொல்லியபடி சிம்பு கிளம்ப, “இதுல இருக்க பணத்தை பிரிச்சு எடுத்துக்கோங்க” என்று மற்றவர்களை பங்கம் செய்தபடி கிளம்பினார் சதீஷ்.

சதீஷ் வெளியேறுவதற்கு முன்னால் இதர போட்டியாளர்களிடம் சொன்ன வாசகம் துணிச்சலானது. “இந்த கேமை சீரியஸா எடுத்துக்கங்க”.. ‘எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பார்த்தியா' என்று வடிவேலு காமெடியில் வரும் தருணத்திற்கு இணையான மோமென்ட் அது.