Published:Updated:

BB Ultimate - 58: `தலையில் துண்டைப் போட்ட பிக் பாஸ்'! - கடைசி வாரத்தில் அனைவரும் எவிக்‌ஷன்!

ரம்யா பாண்டியன்

BB Ultimate: தனக்கு எதிராக ரம்யா சொன்ன காரணங்களைக் கேட்டு பாலாவின் முகம் இருண்டது. ‘முன்னுக்குப் பின்னாக பேசி நடந்து கொள்கிறார்’ என்கிற காரணத்தை பாலாவிற்குச் சொன்ன ரம்யா...

Published:Updated:

BB Ultimate - 58: `தலையில் துண்டைப் போட்ட பிக் பாஸ்'! - கடைசி வாரத்தில் அனைவரும் எவிக்‌ஷன்!

BB Ultimate: தனக்கு எதிராக ரம்யா சொன்ன காரணங்களைக் கேட்டு பாலாவின் முகம் இருண்டது. ‘முன்னுக்குப் பின்னாக பேசி நடந்து கொள்கிறார்’ என்கிற காரணத்தை பாலாவிற்குச் சொன்ன ரம்யா...

ரம்யா பாண்டியன்
‘நேற்றைய எபிசோடில் சிலபல சுவாரசியமான, அட்டகாசமான சம்பவங்கள் நடைபெற்றன’ என்று எழுத எனக்கும் ஆசைதான். ஆனால் அவ்வாறு எதுவுமே நடைபெறவில்லை. ஒருவரை நாமினேஷன் செய்வதற்கு ‘தலையில் துண்டைப்போட வேண்டும்’ என்று அறிவித்தார் பிக் பாஸ். அல்டிமேட் சீசனின் வணிகக் குறியீடு இதுதான்போல.

எபிசோட் 58-ல் நடந்தது என்ன?

திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலித்தது. முதல் ஆளாக ரம்யா சின்சியராக வெளியே வந்து ஆடத் தொடங்கினார். கார்டன் ஏரியாவில் சதீஷின் கட்அவுட் உறைந்து நின்றிருந்தது. (“அவன் உள்ளே இருந்த போதும் அப்படித்தானே இருந்தான்?!” – இது தீனாவின் மைண்ட் வாய்ஸ்).

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

‘இது அல்டிமேட் சீசனின் கடைசி நாமினேஷன்’ என்று டெரரான குரலில் அறிவித்தார் பிக் பாஸ். 2 நபர்களை நாமினேட் செய்ய வேண்டுமாம். யாரை நாமினேட் செய்கிறாரோமோ, அவரின் தலையில் துண்டைப் போட வேண்டும் என்று பாரம்பரிய நடைமுறையை அமல்படுத்தியது சுவாரசியம். “யார் வலிமையைான போட்டியாளரோ.. அவங்களைத்தானே முதல்ல நீங்க டார்க்கெட் பண்ணியிருக்கணும்?” என்று சிம்பு கேட்ட ஸ்ட்ராங்கான கேள்வி போட்டியாளர்களின் மனதில் பசுமையாக இருந்ததுபோல. எனவே நாமினேஷன் சடங்கில் அதிரடியாக அடித்து நொறுக்கினார்கள்.

தலையில் துண்டைப் போட்ட பிக் பாஸ்

முதலில் வந்த தாமரை, தன் பாசப்பிள்ளைகளான நிரூப் மற்றும் பாலா ஆகிய இருவரையும் நாமினேட் செய்து ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்தார். பாலா மற்றும் ரம்யாவை நாமினேட் செய்தார் ஜூலி. நிரூப் நாமினேட் செய்ய வந்தபோது அவர் கூப்பிடாமலேயே வந்து நின்று விட்டார் ஜூலி. (இதெல்லாம் எனக்கு புதுசா. என்ன?! என்பது ஜூலியின் மைண்ட் வாய்ஸ்). “கேமுக்குள்ள பாசத்தைக் காண்பிக்கறாங்க” என்கிற காரணம் சொல்லி தாமரையை நாமினேட் செய்து ஆச்சரியப்படுத்தினார் பாலா. தனக்கு எதிராக ரம்யா சொன்ன காரணங்களைக் கேட்டு பாலாவின் முகம் இருண்டது. ‘முன்னுக்குப் பின்னாக பேசி நடந்து கொள்கிறார்’ என்கிற காரணத்தை பாலாவிற்குச் சொன்ன ரம்யா, “ஒரு விஷயத்தை மறக்காம அப்படியே நினைவில் வெச்சுக்கிட்டு புகையறாங்க” என்று தாமரைக்கு காரணம் சொன்னார்.

அபிராமி
அபிராமி

அபிராமி மற்றும் சுருதியை மட்டுமே யாரும் நாமினேட் செய்யவில்லை. “அவங்க தலைலயும் துண்டைப் போடுங்க” என்று அறிவித்த பிக் பாஸ், “இது கடைசி வார நாமினேஷன் என்பதால் அனைவருமே எவிக்ஷன் பிராசஸில் இருக்கிறீர்கள்” என்று சொல்லி ஆட்டத்தைக் கலைத்தார். (பிம்ப்பிலிக்கி. பிலாப்பி!).

‘நீ போ. நீ வா..’ என்கிற தலைப்பில் அடுத்த டாஸ்க். இந்த வீட்டிலிருந்து வெளியேறிய நபர்களில் யார் மீண்டும் உள்ளே வந்தால் நன்றாக இருக்கும்? இருக்கிற நபர்களில் யார் வெளியே சென்றால் நன்றாக இருக்கும்?.. என்று இரண்டு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும். முதலில் வந்த நிரூப் ‘அனிதா’வை உள்ளே வரச் சொன்னது எதிர்பார்த்த பதில்தான். இதைப்போலவே வெளியில் செல்ல வேண்டிய நபராக ‘பாலா’வைச் சொன்னதும் துணிச்சலான மூவ். ரம்யா ‘சுரேஷ் தாத்தா’வை மிஸ் செய்கிறாராம். இவரும் பாலாவை வெளியே அனுப்பத் திட்டமிட்டார். ஜூலி, தாமரை, சுருதி, அபிராமி, பாலா ஆகிய ஐவருமே சொல்லி வைத்தது போல் ஷாரிக்கைத் தேடியது ஆச்சரியம்.

நிரூப் - தாமரை
நிரூப் - தாமரை

‘நிரூப் வெளியில் போக வேண்டும்’ என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார் தாமரை. கடந்த சீசனில் இருந்தது போல் இப்போது நிரூப் அன்பாக பழகவில்லையாம். ‘எனக்கு நிறைய கோபம் வர்றதுக்கு காரணமே நிரூப்தான்.. பழைய baggage உள்ளே இருக்கு” என்று நிரூப்பின்மீது பழிபோட்டார் அபிராமி. சுருதியை வெளியே அனுப்புவதற்கான காரணங்களைச் சொன்ன பாலா “என்னமோ.. அவங்களுக்கும் எனக்கும் செட்டே ஆகலை” என்று வருத்தமாகச் சொல்ல, அதை சீரியஸான முகபாவத்துடன் கேட்டுக்கொண்டார் சுருதி.

தாமரை – நிரூப் – பாலா – பாசக்காட்சிகளின் பரிதாபங்கள்!

இந்த டாஸ்க் முடிந்ததும் “என்னை வெளியே அனுப்ப பிளான் பண்ணிட்டேல்ல நீனு” என்று தாமரையிடம் செல்லமாக வருத்தப்பட்டார் நிரூப். “அதுக்கென்ன இப்ப?” என்கிற மோடில் தர்பூசணியை அசால்ட்டாக கடித்துக் கொண்டிருந்தார் தாமரை. “என் கிட்ட நிரூப் சரியா பேசறதில்ல” என்று தாமரை சொன்ன காரணத்திற்கு அவரிடமே பதில் இருக்கிறது. பாலாவிடம் அதிக பாசத்தைத் தாமரை கொட்டும்போது நிரூப் எப்படி அருகே வருவார்? பொசசிவ்னஸ் காரணமாக எரிச்சல் வருமா.. இல்லையா?

பாலா
பாலா

அடுத்து ஒரு நீண்ட சென்டிமென்ட் காட்சி நடைபெற்றது. கண்ணாடி தம்ளர் ஒன்றிற்கு சோகமாக லிப்ஸ்டிக் பூசிக் கொண்டிருந்தார் பாலா. “செல்லாக்குட்டி. ஏன் தனியா உக்காந்திருக்கு?” என்று செல்லம் கொஞ்சியபடி வந்தார் தாமரை. அத்தனை பெரிய உருவத்தை குழந்தை மாதிரி கொஞ்சுவதற்கும் ஒரு நெஞ்சுரம் வேண்டும். “கார் டாஸ்க்ல அபிராமியை சேர்ல இருந்து தள்ளி விட்டுட்டு ஜெயிச்சிட்டியா –ன்ற மாதிரி சிம்பு கேட்டுட்டாரு. மனசு கஷ்டமா இருக்கு” என்று அனத்தினார் பாலா. இதை அப்போதே சிம்பு தெளிவாக்கி விட்டார். என்றாலும் பாலா இப்படி அனுதாபம் தேட என்ன காரணம் என்று புரியவில்லை. நாமினேஷன் பயமா? ‘டாஸ்க் முடிஞ்சப்புறம் அதை மறந்துட்டு ஜாலியா இருங்க” என்று சாண்டி மறுபடி மறுபடி சொன்னதையும் இவர்கள் பின்பற்றவில்லை.

பாலா
பாலா

“என்னை நாமினேட் பண்ணே..” என்று பாலா கோபித்துக்கொள்ள, “நீயும்தானே என்னைத் திட்டினே?” என்று தாமரை முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள “ஸாரி” என்று பாலா பிறகு வன்முறைப் பாசத்துடன் கட்டியணைத்துக் கொண்டதோடு இந்த சென்டிமென்ட் சீன் ஒருவழியாக நடந்து முடிந்தது.

எட்டு எட்டா பந்தைப் போடு ராமையா..

‘எட்டுக்குள்ள உலகம்’ என்று அடுத்த டாஸ்க்கைத் தூசு தட்டினார் பிக் பாஸ். ஒவ்வொருவருக்கும் கூடையில் பந்துகள் தரப்படும். அதை முதுகில் சுமந்து கொண்டு, 8 என்கிற வடிவத்தில் உள்ள பாதையில் வரிசையாக ஓட வேண்டும். முன்னால் செல்கிறவரின் கூடையில் உள்ள பந்துகளை எடுக்க முயற்சி செய்யலாம். இப்படியாக ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் எவருடைய கூடையில் பந்து குறைவாக இருக்கிறதோ அவர்கள் வெளியேற வேண்டும். மீண்டும் ஆட்டம் தொடங்கும். இதுதான் டாஸ்க்.

இதற்காக 8 என்கிற வடிவத்தில் பெரிதாக எழுதி, அதில் எப்படி ஓட வேண்டும் என்று அம்புக்குறியெல்லாம் போட்டு வழிகாட்டியிருந்தார் பிக் பாஸ். ஆனால் அத்தனையும் வீண். 11, 16, 9, 101, 888 என்று இஷ்டப்பட்ட வடிவங்களில் எல்லாம் ஓடி மக்கள் ஆட்டத்தை பாழாக்கினார்கள். ஒரு சுற்றுகூட உருப்படியாக நடைபெறவில்லை. கச்சா முச்சா என்று இவர்கள் ஆடியதில் ஒரே தள்ளுமுள்ளு கலவரம். பஸ்ஸர் அடித்ததும் அடுத்தவரின் கூடையில் எடுப்பதற்குப் பதிலாக அதை கவிழ்க்க முயன்றதில் நெல்லிக்காய் மூட்டைபோல அத்தனை பந்துகளும் ஆரம்பத்திலேயே தெறித்துவிழுந்தன.

டாஸ்க்
டாஸ்க்

இந்த டாஸ்க்கில் முதலில் ஓடுபவருக்கு அதிர்ஷ்டமில்லை. அவரால் யாருடைய பந்தையும் எடுக்கமுடியாது. கடைசியில் வருபவருக்குத்தான் அதிர்ஷ்டம். ஆனால் எந்த வரிசையையும் பின்பற்றாமல் இஷ்டத்திற்கு மாற்றி, வட்டத்தை விட்டு வெளியே வந்து ஆடினார்கள். பாவம் பிக் பாஸ் டீம். இப்படியொரு தள்ளுமுள்ளு ஆட்டத்தை காமிராவில் கண்காணித்துத் தீர்ப்பு வேறு சொல்லவேண்டும். தாமரை, ரம்யா, ஜூலி ஆகிய மூவருக்கும் ரத்த சிராய்ப்புகள் ஏற்பட்டன. பாலாவிற்கும் திடீரென்று மூக்கில் ரத்தம் வந்தது. “உடம்பெல்லாம் வலி. வெளிய சொல்லல” என்று ரகசியமாக அழுதார் நிரூப். கீழே சறுக்கி விழுந்ததையும், பாலா கூடையை உதைத்துக் கைப்பற்ற முயன்றதையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொண்டார் நிரூப்.

வரிசையின் இடையில் இருந்தாலும் பின்பக்கமாகவே ஓடி தன் கூடையை சுருதி காப்பாற்றிக் கொள்ள முயன்றது நல்ல உத்தி. பாலாவிற்கும் சுருதிக்கும் வழக்கம்போல் முட்டிக்கொண்டது. “நீதான் வெறித்தனமா ஆடற… ஆனா என்னைச் சொல்றே. அதுலயும் என்னை மட்டும் ஏன் சொல்றே?” என்று சுருதி கண்கலங்கத் தொடங்குவதற்குள் நிரூப் சமாதானப்படுத்தி சிரிக்க வைத்து விட்டார். வழக்கம்போல் பாலாவிற்கு ஆதரவாக வந்து நின்றார் தாமரை.

சுருதி
சுருதி

சுவாரசியமே இல்லாத இந்த டாஸ்க்கில் வெறும் கலவரக் காட்சிகளை நீண்ட நேரம் காட்டி வெறுப்பேற்றினார் பிக் பாஸ். இதில் வழக்கம் போல் அடாவடியாக செயல்பட்டு முதல் பரிசான வெங்கலக்கிண்ணியை தட்டிச்சென்றார் பாலா. இதே ரேஞ்சில் போனால் பிக் பாஸ் தன் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ளும் நிலைமை வரப்போவது உறுதி.