“நீங்க ஏன் ஒண்ணாம் இடத்திற்கு கடுமையா போட்டி போடலை?” – சிம்பு அழுத்தமாகக் கேட்ட இந்தக் கேள்வி, வில் ஸ்மித் இட்ட அறைபோல போட்டியாளர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து விட்டது போல. எனவே கடந்த முறை ‘சுளுவாக’ நடந்து முடிந்த ரேங்க்கிங் டாஸ்க், இந்த முறை ‘விடிய விடிய’ நடந்தது. இன்னமும் கூட முடிவு தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்களின் இடத்தைக்கோரி வலுவாக வாதிட்டது சிறப்புதான். நல்லதொரு மைண்ட் டிராமா. ஆனால் இவர்களை ஒருங்கிணைக்க எவரும் இல்லாததால் ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடல் போல விடிந்தும்கூட பேசிக்கொண்டே இருந்தார்கள்.
எபிசோட் 59-ல் நடந்தது என்ன?
மின்கட்டணத்தை மட்டுப்படுத்த வீட்டினுள் ஏஸியை ஆஃப் செய்து விடுகிறார்களோ, என்னமோ. எனவே அதை சமன் செய்ய `சில்லென ஒரு மழைத்துளி’ என்கிற கூலான பாடலைப் போட்டு போட்டியாளர்களைக் குஷிப்படுத்தினார் பிக் பாஸ். நிரூப், தாமரை உள்ளிட்டவர்கள் எழுந்து வராமல் படுக்கையிலேயே தலையாட்டிக்கொண்டிருந்தார்கள். பாடலுக்குத் தலையாட்டுகிறார்களா அல்லது தூக்கத்திலா என்பது தெரியவில்லை. படுக்கையைத் தரையில் இழுத்துப்போட்டு தூங்குவதற்கு ஏதாவது காரணம் இருக்கவேண்டும்.
பிரேக்பாஸ்ட்டில் ஆரம்பித்து மாலை டீ பிரேக் தாண்டியும் இழுத்த டாஸ்க்
ரேங்க்கிங் டாஸ்க்கை சுடச்சுட ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ். முதலில் வந்தவர் சுருதி. இந்த சீசனில் இதுவரை பேசாததையெல்லாம் ஒட்டுமொத்தமாக இந்த டாஸ்க்கில் பேசித் தள்ளினார் சுருதி. ‘தான் ஏன் ஒன்றாம் இடத்திற்குத் தகுதியானவர்?’ என்கிற தலைப்பில் சுருதி முன்வைத்த பாயின்ட்டுகளும் வாதங்களும் அருமை. “நான் யாருக்கும் விட்டுத் தந்ததில்லை. தனித்துவமா இருந்திருக்கேன். மனதில் பட்டதை துணிச்சலாப் பேசிடுவேன். போன முறை நான்காம் இடத்தில் நின்னேன். ஆனா அப்பவே சொன்னேன்... வரும் வாரங்களில் முதல் இடத்துல வந்து நிப்பேன்னு" என்று வாதிட்ட சுருதி, கடைசிப் பகுதியை மட்டும் ‘திரும்பத் திரும்ப பேசற நீ’ மோடில் அடிக்கடி சொன்னார். ‘அப்பவே சொன்னேன்.. வரும் வாரங்களில் முதல் இடத்துல வந்து நிப்பேன்னு’…

‘மத்தவங்க பேசட்டும்.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம். அப்புறம் களத்துல இறங்குவோம்’ என்று திட்டத்தில் பாலா புன்னகையுடன் அமர்ந்திருந்தார் போல. (கார் டாஸ்க்கில் ஜெயித்த அனுபவம்). ஏறத்தாழ மற்றவர்களும் அப்படித்தான் இருந்தனர். ‘இந்தப் புள்ளப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்-னு யாருக்குத் தெரியும்’ என்பது மாதிரி சுருதிக்கு எதிராக கவுன்ட்டர் வாதம் வைத்தார் ஜூலி. “டாஸ்க்கிற்காக தனித்துவத்தை இழக்க மாட்டேன்னு சொன்னே. அது கரெக்ட்டா?” என்று கேட்ட ஜூலி அதற்காக சில உதாரணச் சம்பவங்களை குறிப்பிட, அந்த ஆயுதங்களை எளிதாக முறித்துப் போட்டார் சுருதி. இந்தச் சமயத்தில் பாலாவும் ரம்யாவும் சுருதிக்கு எதிராக வரிசையாக வந்தனர்.

“போன முறை நான்காம் இடத்துல நின்னு முதல் மூன்று இடங்களை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுத்துட்டீங்க. அப்ப உங்க இடம் எதுன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கு” என்று ரம்யா சொல்ல, ‘அது போன வாரம்.. நான் சொல்றது இந்த வாரம்’ என்பதை ரிப்பீட் மோடில் சொன்னார் சுருதி. “நீங்க பேச ஆரம்பியுங்க பாலா” என்று ரம்யா உசுப்பி விட “சிம்புவே என்னை நம்பர் ஒண்ணு –ன்னு அப்ரூவ் பண்ணிட்டார். என் சீட் கன்பர்ம் ஆயிடுச்சு.. நீங்க பேசுங்க” என்று ரயில்வே டிக்கெட் உறுதியான கெத்தில் பேசினார் பாலா. “ஏன். நீங்க பேசுங்க..”. “ஏன் நீங்க பேச வேண்டியதுதானே?” என்று ரம்யாவும் பாலாவும் பரஸ்பரம் குடுமியை இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.
“நீங்க என்ன ரெகுலேட்டரா?” – ரம்யாவிடம் ஆவேசப்பட்ட பாலா
“நம்பர் ஒண்ணுக்கெல்லாம் பாலாக்கு தகுதியில்ல” என்று அதிரடியாக முழங்கினார் நிரூப். ஏனாம்? “போன ரேங்க்கிங் டாஸ்க்ல என்ன சொன்னான்... தன்னம்பிக்கை இருக்கறவங்க முதல்ல வந்து நின்னிருப்பாங்கன்னு.. இப்ப அவன் வரலே.. அப்படின்னா அவனுக்குத் தகுதியில்ல” என்று கடந்த டாஸ்க்கில் நடந்ததை வைத்து பாலாவை மடக்க முயன்றார் நிரூப். “எப்போ.. வரணும்.. எப்படி வரணும். ன்னு எனக்குத் தெரியும்… நீ மூடு” என்று அலட்டலாக பதில் சொன்னார் பாலா.
ரம்யாவை தொடர்ந்து ஏக வசனத்தில் பேசிய பாலா, அடுத்ததாக அபிராமி கேட்ட கேள்விக்கும் அதே பாணியில் பதில் சொல்லத் துவங்க, அதை ரம்யாவும் அபிராமியும் கடுமையாக ஆட்சேபித்தார்கள். ‘அபிராமி என் பிரெண்டு’ என்று தன்னிச்சையாக சொல்லி மாட்டிக் கொண்டார் பாலா. “பாலா எப்ப பேசணுமோ.. பேசட்டும். அவன் கிட்ட கேட்கறது வேஸ்ட் ஆஃப் டைம்” என்று அலுத்துக் கொண்டார் சுருதி.

இந்த உரையாடல் கோர்வையில்லாமலும் ஒழுங்கில்லாமலும் முடிவை எட்டாமலும் இழுவையாக செல்லும் போது யாராவது ஒருவர் ஒருங்கிணைக்கும் பொறுப்பை அதிகாரத்தொனி இல்லாமல் ஏற்றுக் கொள்வது நல்லது. ஏனெனில் நடுவர் இல்லாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் ஒரு விளையாட்டை ஆடும் பயிற்சி நம்மிடம் இன்னமும் வளரவில்லை. இதர போட்டியாளர்கள் சொல்லும் போது ஆவேசமாக வாதாடும் ஒருவர், பிக் பாஸ் சொன்னதும் ‘கப் சிப்’ என்று கேட்டுக் கொள்வதை கவனித்தால் இது புரியும். எனவே அது ரம்யாவோ, பாலாவோ, நிரூப்போ.. யாராவது ஒருவர் இந்த டாஸ்க்கை கோஆர்டினேட் செய்வது அவசியம். “நீ என்ன பிக் பாஸா.. ரெகுலேட்டரா?” என்று பாலா போல அடாவடியாக கேள்வி கேட்டால் விடியும் வரை டாஸ்க் இழுத்துக் கொண்டுதான் செல்லும்.

இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ரம்யா வைல்ட் கார்டில் உள்ளே வந்திருந்தாலும் அது சார்ந்த தாழ்வுணர்ச்சியில் அவர் பம்மி விடவில்லை. மற்றவர்களை விடவும் தான் ஏன் சிறந்த போட்டியாளர் என்பதை வாதங்களுடன் திறமையாக எடுத்து வைக்கிறார். மற்றவர்களும் ரம்யாவை சீரியஸாக எடுத்துக் கொண்டு அவருடன் மல்லுக்கட்டுகிறார்கள். ஏனெனில் இந்த டாஸ்க்கில் ரம்யாவுடனான வாதம்தான் மிக நீளமாக போய்க் கொண்டிருந்தது. அந்த அளவிற்கு தவிர்க்க முடியாத நபராக ரம்யா இருந்தார். அவருடைய ‘மொக்கை ஜோக்’ இமேஜையும் தாண்டி, அவருடைய லாஜிக் திறன் பலமாக இருந்தது.
ரம்யாவிற்கு எழுந்த மெஜாரிட்டி எதிர்ப்பு
“முட்டை டாஸ்க்கில் ஒரு கேப்டனா இருந்தும் தூங்கிட்டீங்க.. சீரியஸான கேப்டனா இருந்தீங்க.. டாஸ்க்ல சுவாரசியமா எதையும் செய்ய எங்களை அனுமதிக்கலை” என்று ரம்யாவின் மீது நிரூப் குற்றம் சாட்ட “சீரியஸான கேப்டனா இருந்துக்கிட்டு எப்படி சுமாரா விளையாட முடியும், ஒருமுறை தூங்கிட்டேன். ஒத்துக்கறேன். அது ஒரு குற்றமா?” என்று பதில் வாதத்தை வைத்தார் ரம்யா. “பேசாம வோட்டிங் போலாமா” என்று கேள்வி எழுந்ததும் ரம்யாவும் பாலாவும் மறுபடியும் வாக்குவாதத்தில் இறங்கினார்கள்.
“கொடி டாஸ்க்கில் நான் கடைசி வரைக்கும் விட்டுத் தரலை” என்று வாதாடிய ரம்யாவிடம் “கோழி டாஸ்க்கில் நீங்க சரியா விளையாடலையே” என்று பாலா சொல்ல “நீங்கதான் சிறந்த கேப்டன்னு அப்போ பாராட்டினீங்க” என்று ரம்யா மடக்கினார். “அது கிச்சன் டீமிற்காக சொன்னது. கோழி டாஸ்க்கில் தூங்கிட்டீங்க” என்றார் பாலா. “முதல் வாரம் நான் ஜட்ஜ்ஜா இருந்தாலும் பல டாஸ்க்குகளை சரியா அனலைஸ் பண்ணேன்” என்று ரம்யா பெருமிதப்பட “நான் ஒத்துக்க மாட்டேன். ஜோடி டாஸ்க்ல உங்க தீர்ப்பு சரியா இல்லை” என்று ஆட்சேபித்தார் சுருதி.

“நாங்கள்லாம் முதல் நாள்ல இருந்து பல டாஸ்க்குகளில் விளையாடி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்ந்து இருக்கோம்.. நீங்க இப்பத்தான் வந்தீங்க. இருந்தா கூட உங்களால எந்த டாஸ்க்குலயும் ஜெயிக்க முடியலை” என்று ரம்யாவை குற்றம் சாட்டினார் பாலா. “கோழி டாஸ்க்குல தூங்கிட்டீங்க. அதனாலதான் எங்க டீம் ஜெயிச்சது” என்று தாமரை ஆவேசமாக சொல்ல “இந்த வீட்டிற்கு வந்து ஒரே ஒருமுறை நான் தூங்கினது தப்பா கோப்பால். மத்தவங்கள்லாம் தூங்கினதே இல்லையா…. சாட்சி சொல்ல சுரேஷ் தாத்தா கூட இல்லையே?” என்று புலம்பினார் ரம்யா. ஒரு கட்டத்தில் ‘இது வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்த ரம்யா, தன் தகுதிகளை வரையறுத்து பட்டியலாகச் சொல்லி விட்டு பிறகு மூலையில் சென்று அமர்ந்து விட்டார்.
சுரத்தில்லாமல் இருந்த பாலாவின் ஸ்ட்ராட்டஜி
வந்தாரய்யா பாலா!.. ‘தான் ஏன் நம்பர் ஒண்ணுக்கு தகுதியானவன்’ என்பதை மென்சிரிப்புடன் பட்டியலிட்டார். “நான் யாருக்கும் விட்டுத்தரலை. எல்லா டாஸ்க்லயும் சிறப்பா பண்ணியிருக்கேன். தனியா விளையாடியிருக்கேன். டாஸ்க் உள்ள நட்பையோ, பாசத்தையோ கொண்டு வந்ததில்லை” என்று அவர் சுருக்கமாகச் சொல்லி முடிக்க “ஐ அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர்” என்று ஆவேசமாக களத்தில் இறங்கினர் நிரூப். “இரு. நீ சொன்ன ஒவ்வொரு பாயிண்ட்டையும் உடைக்கிறேன்” என்று ஆரம்பித்தவர் “முதல் வாரத்துல நடந்த தலைவர் போட்டில நாற்காலில உக்காராம சுரேஷ்ஷிற்கு விட்டுக் கொடுத்த” என்று நிரூப் பட்டியல் போட ஆரம்பிக்க “அது நான் விட்டுத் தந்ததில்லை. மத்தவங்க என்னைத் தூக்கி ஜெயிக்க எனக்கு விருப்பமில்ல” என்று பதிலடி தந்தார் பாலா. “அப்ப நீ கேமை விளையாடியிருக்கவே வேணாமே?” என்று நிரூப் சரியான கேள்வியை முன்வைக்க “நீ யோசிக்கற மாதிரி நானும் யோசிக்கணும்னு அவசியமில்லை” என்று அடாவடியாக பதில் சொன்னார் பாலா.

இப்போது பாலாவிற்கு எதிராக அபிராமியும் களம் இறங்கினார். “ஒரு டாஸ்க்கை விளையாடாம இருக்கறதே.. விட்டுத் தர்ற மாதிரிதான்.. ‘டாஸ்க் உன்னை பாதிக்கலைன்னா.. “என்ன வேணா வாந்தியெடுப்பியா?’ன்னு ஏன் என்னை கேட்டே?” என்று தன் மனக்குமறலை சரியான இடத்தில் பதிவு செய்தார் அபிராமி. இவர்களுக்குள் நடந்த தனிப்பட்ட உரையாடலை இப்போதுதான் சபையும் அறிந்திருக்கும். “பாலா அவருக்கும் உண்மையா இல்லை. கேமிற்கும் உண்மையா இல்லை’ என்பதை மறுபடி மறுபடி பதிவு செய்து ரம்யாவும் களத்தில் இறங்க, எலெக்ட்ரிக் பைக் மாதிரி விவாதம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. “உங்க திமிர் பிடிச்ச Attitude-லாம் என்னால ஏத்துக்கவே முடியாது” என்று பாலாவிடம் சூடாக எரிந்து விழுந்தார் ரம்யா.

ரம்யா மற்றும் அபிராமி முன்வைக்கும் வாதங்களில் அர்த்தம் இருக்கிறது. பல விஷயங்களில் பாலா சிறந்த போட்டியாளராக இருந்தாலும் முன்கோபத்திலும் மற்றவர்களை அவமதிக்கும் வகையில் சட்டென்று பேசி விடுவதிலும் மைனஸ் பாயிண்டைக் கொண்டிருக்கிறார். இப்போது ரம்யாவிற்கு பதிலடி தரும் நெருக்கடியில் இருந்தார் பாலா. எனவே “டாஸ்க்கில் நீங்க என்னை கடிச்சது மட்டும் ஓகேவா?” என்று அபத்தமாக ஆரம்பித்தார். ‘கடிச்சதை நான் புகாரா சொல்லலலை’ என்று முன்னர் சொன்னவரும் இதே பாலாதான்.
‘சீக்கிரம் முடிங்கப்பா” – எரிச்சல் அடைந்த பிக் பாஸ்
ஃபிரேக்பாஸ்ட் நேரத்திற்கும் முன்னால் ஆரம்பித்த இந்த உரையாடல் சாயந்திர டீ பிரேக்கைத் தாண்டியும் சென்று கொண்டிருந்தது. ஆனால் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. நமக்கே காண்டாகும் போது பிக் பாஸிற்கு கூடுதலாக ஆகாதா? “முதல்ல ஆப்பிள் ஆச்சு.. அப்புறம் பிரியாணி ஆச்சு. இப்ப டீ வேற.. டாஸ்க்கை எப்பத்தான் முடிப்பீங்க?” என்று பிக் பாஸின் குரல் டெரராக குறுக்கிட்டது. ‘இப்படி தின்னுக்கிட்டே இருந்தா எப்படி.. வேலையைப் பாருங்க” என்கிற முதலாளியின் குரல் அது. அது மட்டுமல்ல ‘இந்த சுரேஷ் கண்ணன்-ன்ற ஒரு ஆசாமி. விகடன் கட்டுரைல ‘ஷோ சுவாரசியமில்ல’ன்னு தினமும் அனத்திக்கிட்டே இருக்காரு.. அதுக்காகவாவது ஏதாவது பண்ணுங்கப்பா’ என்று பிக் பாஸ் குரலில் ஒரு பரிதாபமான ஆதங்கம் தென்பட்டதைப் போன்ற தனிப்பட்ட பிரமை எனக்கு ஏற்பட்டது. அவரைப் பார்க்க அத்தனை பாவமாக இருந்தது.

பிக் பாஸின் அறிவுறுத்தலுக்குப் பிறகு “ஓகே.. வோட்டிங் போயிடலாம்.. மெஜாரிட்டி யாருக்கு கிடைக்குதோ. அந்தந்த நம்பர் வெச்சுக்கலாம்” என்று போட்டியாளர்கள் ஒருவழியாக இறங்கி வந்தார்கள். இதை முதலிலேயே செய்திருக்கலாம். ஆனால் இதிலும் ஒரே இழுபறி. “நீ பேசேன். நீதான் பேசேன்” என்று இருந்த நிலைமையில் “ஓகே.. நான் ஒண்ணாம் இடத்திற்கு நிக்கறேன்.. யாரெல்லாம் எனக்கு ஓட்டு போடறீங்க?” என்று துணிச்சலாக முன்வந்தார் ரம்யா. ஆனால் எதிர்பார்த்தபடியே அவருக்கு முதல் இடத்தைத் தருவதில் யாருக்கும் விருப்பமில்லை. ஒருவகையில் அது நியாயமும் கூட. ரம்யாவை மற்றவர்கள் பின் வரிசையில் தள்ளிவிட அபிராமி மட்டுமே ஒன்றாம் இடத்தைத் தந்து ஆச்சரியப்படுத்தினார். “ஏழாம் இடத்திற்கு போற அளவிற்கு ரம்யா அவ்வளவு மோசமில்ல.. நான் ரெண்டாம் இடத்தை தரேன்” என்றார் நிரூப். “ஓகே. ஏழாம் இடத்தை எனக்கு ரெண்டு பேர் தந்திருக்காங்க. இப்பத்திக்கு நான் அங்க போயி உட்கார்ரேன்” என்று கடைசி படிக்கட்டான ஏழாம் எண்ணில் சென்று அமர்ந்தார் ரம்யா. அப்போதாவது இந்த டாஸ்க் சீக்கிரம் முடிவுக்கு வரட்டும் என்று அவர் கருதியிருக்கலாம்.
“நான் பிரைஸ் மணி பெட்டி பத்தி சும்மா ஆர்வத்துலதான் விசாரிச்சேன். வெளில போற ஐடியால இல்லை” என்று டிபென்ஸ் குறிப்போடு ஆரம்பித்த ஜூலி, ஒன்றாம் இடத்திற்கு போட்டி போட அவருக்கு நான்காம் எண்தான் பெரும்பான்மையாக கிடைத்தது. அடுத்து வந்த சுருதி, தன் தரப்பு நியாயங்களை அடுக்கி ‘இதுவரை ஆறுமுறை நாமினேஷன்ல வந்து மக்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்” என்று சொல்ல அவருக்கு ஏழாம் எண்தான் பெரும்பான்மையாக கிடைத்தது. எனவே ஏழாம் எண்ணில் இருந்த ரம்யா “ஓகே. நான் அப்ப முதல் இடத்திற்கு போட்டியிடறேன்” என்று ஆரம்பிக்க விவாதம் மறுபடியும் முதல் பாயிண்ட்டிற்கே போனது. (பிக் பாஸ் உள்ளே தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்). அடுத்து வந்த அபிராமிக்கு ஐந்தாம் எண்ணிற்கான வாக்குகள் மூன்றும், ஆறாம் இடத்திற்கான வாக்குகள் இரண்டும் கலவையாக கிடைத்தன. “நீங்க ஒருத்தரை இமிடேட் பண்ணீங்க” என்று சுருதி சொல்ல, அபிராமிக்கும் சுருதிக்கும் இடையே மெலிதாக முட்டல் ஏற்பட்டது.

காலையில் ஆரம்பித்த டாஸ்க் இன்னமும் முடியாததால், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பிக் பாஸ், “நான் மூணு பஸ்ஸர் அடிப்பேன். கடைசி பஸ்ஸர் அடிக்கும் போது ஆட்டம் முடிஞ்சிருக்கணும்” என்று எரிச்சலுடன் எச்சரிக்க டாஸ்க்கில் வேகம் அதிகமாகியது. முடிவு அடுத்த எபிசோடில்தான் தெரியும்.
முதல் இடத்தைப் பெற்ற அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும்? வேறு யார் பாலாதான். அப்படியொரு மைண்ட் செட்டை மற்றவர்களுக்கு ஏற்படுத்தியிருப்பதில் ஆள் கில்லியாக இருக்கிறார். சிம்புவின் மறைமுகமான ஆதரவும் இவருக்கு இருப்பதை உணர முடிகிறது. என்றாலும் என்ன நடக்கிறதென்று காத்திருந்து பார்ப்போம்.