Published:Updated:

BB Ultimate 60: `டாஸ்க்கில் அடி தடி சண்டை தப்பித்த ரம்யா, பாலா; மல்லுக்கட்டிய நிரூப், தாமரை!

ரம்யா

BB Ultimate 60: வெளியே இருந்த சூட்கேஸ் பணம் ஆறு லட்சமாக உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால் இது இறுதிப் போட்டியில் வெல்பவருக்கான தொகையில் இருந்து குறைக்கப்பட்டு விடுமாம்.

Published:Updated:

BB Ultimate 60: `டாஸ்க்கில் அடி தடி சண்டை தப்பித்த ரம்யா, பாலா; மல்லுக்கட்டிய நிரூப், தாமரை!

BB Ultimate 60: வெளியே இருந்த சூட்கேஸ் பணம் ஆறு லட்சமாக உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால் இது இறுதிப் போட்டியில் வெல்பவருக்கான தொகையில் இருந்து குறைக்கப்பட்டு விடுமாம்.

ரம்யா
நேற்றைய எபிசோடில் நிரூப்பிற்கும் தாமரைக்கும் நடந்த உக்கிரமான மோதல், பிதாமகன் திரைப்படத்தின் கிளைமாக்ஸை நினைவுப்படுத்தியது. அத்தனை பயங்கரம். யாராவது யார் குரல்வளையையாவது கடித்து வைத்து விடுவார்களோ என்று நமக்குத்தான் பதட்டமாக இருந்தது. தாமரை மட்டுமல்ல, சுருதியும் அபிராமியும்கூட ஏறத்தாழ இதே அளவு போராட்டத்தை நிரூப்புடன் நிகழ்த்தினார்கள். உள்ளே இருக்கும் போட்டியாளர்களே திகில் படத்தைப் பார்ப்பதுபோல இந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பயங்கரம் தாங்காமல் ஒரு கட்டத்தில் அபிராமி கண்ணை மூடிக்கொண்டார். என்னதான் OTT-ல் வருவது என்றாலும் இத்தனை உக்கிரமான குடுமிப்பிடிச் சண்டைகளைக்கொண்ட டாஸ்க்குகளை பிக் பாஸ் தவிர்த்துவிடலாம். போகிறபோக்கைப் பார்த்தால் வருகிற சீசன்களில் WWF சண்டை ரேஞ்சிற்கு மோதல்கள் இருக்கும்போல.

நாள் 59-ல் நடந்தது என்ன?

‘விடிய விடிய’ பரப்பரப்பாக நடந்துகொண்டிருந்த ரேங்க்கிங் டாஸ்க்கின் முடிவு என்ன என்பதை நமக்குத் தெரிவிக்காமலேயே எபிசோடை அசாலட்டாகத் தொடங்கினார் பிக் பாஸ். “வேணுமின்னா தேடிப் பார்த்துக்கோ” என்பது இதன் பொருள்போல. எனவே தேடிப் பார்த்தோம். பாலாதான் முதல் இடத்திற்கு வருவார் என்கிற யூகத்தை நொறுக்கி இன்னொருவர்தான் வந்தார். அதை நிச்சயமாக நாம் யூகித்திருக்கவே முடியாது. ஆம், ஜூலிதான் முதல் இடம். ‘நானும் ரவுடிதான்’ என்று அடித்துப் பிடித்துக்கொண்டு எப்படியோ வந்து அமர்ந்துவிட்டார். ஜூலி, நிரூப், பாலா, தாமரை, அபிராமி, ரம்யா, சுருதி என்று இந்த டாப் 7 வரிசை அமைந்திருந்தது.

ரம்யா, ஜூலி
ரம்யா, ஜூலி

ரம்யாவும் ஜூலியும் நள்ளிரவு தாண்டியும் பேசிக் கொண்டிருந்தார்கள். “எனக்கு எப்பவுமே லக் வொர்க் அவுட் ஆகாது. ஆனா நெறைய விஷயங்கள் கிடைச்சுடும். உனக்கு லக் இருக்குன்னு மத்தவங்கதான் என்கிட்ட சொல்வாங்க" என்று குழப்பமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா. “சீசன் முடியப் போற நேரத்துல இந்தப் புள்ள வருதே.. என்ன பண்ணப் போவுது –ன்னு நெனச்சேன். ஆனா பரவால்ல..” என்று ரம்யாவிற்கு சான்றிதழ் தந்தார் ஜூலி. “உன் கிட்ட இருக்கிற Emotional stability என்கிட்ட இல்லை. டாப் 5-க்குள்ள வந்துருவன்னு நெனச்சேன். அதனாலதான் நான் அஞ்சு கொடுத்தேன்” என்று ஜூலியின் புகழுரைகள் தொடர்ந்தன.

அபிராமி
அபிராமி

சூட்கேஸ் பணத்தை எடுக்கப் போவது ஜூலியா?

பிக் பாஸ் வீட்டில் எது ஒன்றைப் பேசும் போதும் ‘சூதானமாக’ பார்த்து பேச வேண்டும். பேச்சு வாக்கில் விளையாட்டாக எதையாவது சொல்லிவிட்டாலும், விவாத டாஸ்க்கில் “நீ முன்னமே அப்படிச் சொல்லியிருக்கே” என்று பாயிண்ட்டாகத் தேற்றிவிடுவார்கள். ரம்யாவின் திறமையை ஜூலி மனம் திறந்து பாராட்டுவது ஒரு நல்ல பண்பு. ஆனால் பிக் பாஸ் என்னும் ரத்த பூமியில் ஜாக்கிரதையாகப் பேச வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம், வீட்டின் உள்ளே “நான் பெட்டியை எடுத்துடுவேன்” என்று நிரூப் சீன் போட்டுக்கொண்டிருக்க “உன்னையெல்லாம் நம்பவே முடியாது” என்று அபிராமி சொன்னது சரியான விஷயம்.

‘நண்டூறுது. நரியூறுது’ என்கிற பாடல் காலையில் ஒலிக்க, மக்கள் சோம்பேறித்தனத்துடன் எழுந்தார்கள். வெளியில் ஐந்து லட்சம் கொண்ட சூட்கேஸ் பெடஸ்டலில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. மக்களும் நடனம் ஆடிக் கொண்டே அதைச் சுற்றி சுற்றி பார்த்தார்கள். “எங்கே ஜூலியைக் காணோம்.. பெட்டியை எடுத்துட்டு கிளம்பிட்டாளா?” என்று குறும்பாக கேட்டார் வீட்டிற்குள் இருந்த பாலா. “ஆமாம். அவ எப்பவுமே டான்ஸ் ஆட வெளியே வர மாட்டா. இன்னிக்கு பெட்டி இருக்குன்னு தெரிஞ்சவுடனே. குடுகுடு –ன்னு வெளில ஓடிட்டா. 20 லட்சத்துக்கு எவ்வளவு டாக்ஸ் கட்டணும்னு கணக்குல்லாம் போட்டு வெச்சிருக்கா” என்று சொல்லி சிரித்தார் சுருதி.

BB Ultimate 60
BB Ultimate 60

கிச்சன் ஏரியாவில் தாமரைக்கும் பாலாவிற்கும் ஒரு சிறிய முட்டல். “என்ன நிரூப் கிட்ட பேசிட்டு வந்துட்டியா?” என்று பாலா சர்காஸ்டிக்காக கேட்க “நான் யார் கூடம்மா அதிக நேரம் பேசறேன்?!” என்று அபிராமியை சாட்சிக்கு கூப்பிட்டார் தாமரை. ‘பாலா’ என்றெல்லாம் அபிராமி பதில் சொல்லவே தேவையில்லை. பார்வையாளர்களுக்கே அது நன்றாகத்தெரிகிறது. பாலாவிற்கு ஊட்டி விடுவதும், தலையைத் துவட்டுவதும், ‘என்னா செல்லாக்குட்டி.’ என்று செல்லம் கொஞ்சுவதும் என சினிமாக்களில் வரும் ‘அம்மா’ பாத்திரங்களையே எளிதாக ஓவர்டேக் செய்துவிடுகிறார் தாமரை.

முகமூடிகளைக் கிழித்த போட்டியாளர்கள்

அடுத்த டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ஆக்டிவிட்டி ஏரியாவில் போட்டியாளர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. ‘இந்த வீட்டில் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தாமல், நல்ல பெயர் வாங்குவதற்காக நடித்துக் கொண்டிருக்கும் இருவரை தேர்ந்தெடுத்து அவர்களின் முகமூடிகளைக் கிழிக்க வேண்டுமாம். இந்த டாஸ்க்கில் யார், யாரைப் பழிவாங்கியிருப்பார்கள் என்பதை யூகிக்க அதிகம் சிரமப்பட தேவையில்லை. இருந்தாலும் இதுதான் அந்தப் பட்டியல்: ரம்யா (பாலா & தாமரை), நிரூப் (பாலா & அபிராமி), அபிராமி (நிரூப் & சுருதி), பாலா (ரம்யா & நிரூப்), சுருதி (அபிராமி & பாலா), தாமரை (ரம்யா & அபிராமி). இதற்கான காரணங்களும் ஏற்கெனவே நிறைய முறை சொல்லப்பட்டதுதான். ‘அபிராமி இன்னொருவரை இமிடேட் செய்தார்’ என்கிற காரணத்தை நூறாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தார் சுருதி.

பாலா, தாமரை
பாலா, தாமரை

வெளியே இருந்த சூட்கேஸ் பணம் ஆறு லட்சமாக உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால் இது இறுதிப் போட்டியில் வெல்பவருக்கான தொகையில் இருந்து குறைக்கப்பட்டு விடுமாம். (பிக் பாஸ் உஷாருதான்!). கடந்த சீசன்களில் இப்படிக் கிடையாது. ஃபைனலில் ஜெயிப்பவருக்கான பரிசுப் பணம் வேறு. பெட்டியில் இருக்கும் பணம் வேறு.

‘முடிஞ்சா தடுத்துப் பாரு’ என்று இன்னொரு ரணகளமான டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஏதோ உடல் ரீதியிலான விளையாட்டாக இருக்கும் என்று பார்த்தால் இத்தனை உக்கிரமான ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அடி, கடி, துடி என்று ஒரே ரத்தக்களறி. இத்தனைக்கும் பாதி டாஸ்க்கை பார்த்ததற்கே அத்தனை பீதியாக இருந்தது.

ரத்தக்களறியோடு ஆவேசமாக நடந்த டாஸ்க்

டாஸ்க் இடையிலிருந்து காட்டப்பட்டது. பாலா, ஜூலி, ரம்யா ஆகியோர் ஏற்கெனவே விளையாடி முடித்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்கள் சோபாவில் ரிலாக்ஸ் ஆக அமர்ந்திருந்தார்கள். தாமரையுடன் முன்பு மோதிய விஷயம் சர்ச்சையாகிவிட்டதால், பாலா ஆக்ரோஷமாக விளையாடாமல் வேண்டுமென்றே விரைவில் வெளியேறி இருப்பார் என்று தோன்றுகிறது. ஆகவே இப்போது களத்தில் இருந்தவர்கள் தாமரை, நிரூப், அபிராமி மற்றும் சுருதி.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியான மேக்டினக் போர்டு தரப்பட்டிருக்கும். போட்டியாளர்களின் புகைப்படங்களும் கலவையாக கீழே இருக்கும். போட்டியாளர்கள் தங்களின் புகைப்படங்களைத் தேடி எடுத்து தன்னுடைய போர்டில் ஒட்டும் அதே சமயத்தில் மற்றவர்களின் புகைப்படங்களையும் பறிமுதல் செய்யலாம்; அழிக்கலாம். இப்படி ஒவ்வொரு சுற்றாக நகர்ந்து இறுதியில் யாருடைய போர்டில் அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்கள் மீதம் இருக்கிறதோ, அவரே வெற்றியாளர்.

சுருதி, நிரூப்
சுருதி, நிரூப்

இதில் நீண்ட நேரம் பாதுகாப்பாக நிற்க முடியாது. எதிராளியைச் சீண்டியே ஆக வேண்டும். எனவே அபிராமி பக்கம் சென்று எடுக்க முயன்றார் தாமரை. நிரூப் தனது இடத்தை அம்போவென்று விட்டு விட்டு காணாமல் போனார். (இந்த மனுஷன் பண்றதெல்லாம் வித்தியாசமாத்தான் இருக்கு!). ‘நிரூப் எங்கே போனார்?” என்று பார்த்தால், இதற்கு முன்னால் நடந்த கலவரத்தில் பல புகைப்படங்களை சிறைக்குள் வீசி எறிந்திருக்கிறார்கள் போல. எனவே சைடு கேப்பில் சிறையின் உள்ளே நுழைந்த நிரூப், அவற்றில் தன்னுடைய புகைப்படங்களை மட்டும் பொறுக்கிக் கொண்டு மீண்டும் சைடு கேப்பில் வெளியே வந்தார். (இதுக்குப் பெயர் சிறையா?!). அபிராமிக்கும் சுருதிக்கும் தள்ளுமுள்ளு, நிரூப்பிற்கும் சுருதிக்கும் இழுபறி என்று கலவரக் காட்சிகள் ஆரம்பித்தன.

நிரூப்புடன் ஆவேசமாக மோதிய சுருதி, அபிராமி

பேய் பிடித்தவர் போல் நிரூப்புடன் மோதினார் சுருதி. எதிராளியின் புகைப்படங்களை பரஸ்பரம் உடைத்து எறிந்தார்கள். இன்னொரு சமயத்தில் தாமரைக்கும் சுருதிக்கும் இடையே ஆவேசமான சண்டை நிகழ்ந்தது. குடுமியை பிடித்து இழுத்துக் கொள்ளாததுதான் பாக்கி. மற்ற எல்லாவற்றையும் செய்து விட்டார்கள். தாமரையின் மைக் கழன்று கீழே விழுமளவிற்கு தள்ளுமுள்ளு நடந்தது. நிரூப் தரையில் போட்டு இழுத்துச் சென்றாலும் விடாமல் போராடினார் சுருதி. இத்தனை ஆவேசம் தேவையா என்று தோன்றினாலும் சுருதியின் போராட்டக் குணத்தைப் பாராட்டியே வேண்டும். இந்தச் சுற்றின் முடிவில் சுருதி வெளியேறினார். “பார்க்க பயமா இருந்தாலும் இன்னொரு பக்கம் Fun-ஆ இருந்துச்சு” என்று சுருதியிடம் சொல்லிச் சிரித்தார் ரம்யா.

நிரூப், சுருதி
நிரூப், சுருதி

அடுத்த சுற்றில் அபிராமிக்கும் நிரூப்பிற்கும் இடையில் உக்கிரமான ‘கட்டிப்பிடி வைத்தியச் சண்டை’ ஆரம்பித்தது. பெண்களுடன் முட்டி மோதி விளையாடுவது என்பது எப்போதுமே ஆண்களுக்கு சற்று தர்மசங்கடமான காரியம். விளையாடும் மும்முரத்தில் அவர்களுக்குள் ஒன்றும் தெரியாது என்றாலும் வீடியோவில் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு வேறு மாதிரியாக தோன்றி விடலாம். இந்த விஷயத்தை மிக அழகாக சமாளித்தார் நிரூப். சுருதி, அபிராமி, தாமரை ஆகியோர் தன்னுடைய புகைப்படத்தை எடுக்காதவாறு அவர்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாலும் “என்ன வேணும் செல்லத்துக்கு.. ஓவ். ஓவ். .சரி.. சரி.. சரியாப் போயிடும்’ என்று குழந்தையை கொஞ்சுவது போல் நிரூப் சமாளித்த விதம் உண்மையிலேயே அருமை. இதனால் வன்முறையின் தீவிரம் காட்சியின் வடிவில் குறைந்து விடும்.

ரம்யா பாணியில் நிரூப்பின் கையைக் கடித்த அபிராமி

நிரூப்பின் போர்டையே சாய்த்து உடைத்தார் அபிராமி. யாருக்காவது அடிபட்டு விடுமோ என்று நமக்குத்தான் அத்தனை பதட்டமாக இருந்தது. பாலா உட்பட மற்றவர்கள்கூட இதை திகிலாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். விளையாட்டில் நடந்த காமெடிகளை வைத்து அவர்கள் வெளியே சிரித்தாலும் உள்ளூற ‘யாருக்காவது அடிபடுமோ’ என்கிற பதட்டம் தோன்றிக் கொண்டுதான் இருந்திருக்கும். அவர்களின் முகபாவம் அப்படித்தான் இருந்தது. ஒரு கட்டத்தில் ரம்யாவின் பாணியில் நிரூப்பின் கையைக் கடித்து விட்டார் அபிராமி. நிரூப்பின் கையில் ரத்தமே வந்து விட்டது. இந்தச் சுற்றில் அபிராமி வெளியேறினார். மீதமிருந்தவர்கள் தாமரை மற்றும் நிரூப்.

அபிராமி, நிரூப்
அபிராமி, நிரூப்

தாமரையின் ஆவேசமான மல்லுக்கட்டலை அதேயளவிற்கான ஆவேசத்துடன் சமாளித்தார் நிரூப். ‘சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு’ என்கிற வடிவேலுவின் தத்துவம்போல நிரூப்பின் சட்டை கிழிந்து தொங்கியது. தாமரையின் கால்களை வலுவாகப் பிடித்துக்கொண்டார் நிரூப். ‘காலை விடுடா. வலிக்குது’ என்று வலியில் கதறுவதைப்போல் பாவனை செய்த தாமரை, சற்று விடுபட்டவுடன் நிரூப்பின் போர்டை நோக்கி ஆவேசமாக ஓட “உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?” என்று சட்டென்று பாய்ந்து பிடித்து தடுத்தார் நிரூப். தாமரை தன்னுடைய புகைப்படங்களை ஆடைக்குள் ஒளித்து வைத்துக் கொள்ள, அதைப் பறிக்க முயன்றார் நிரூப். இந்தக் கலாட்டாவில் நிரூப்பின் சட்டை மட்டுமல்ல, அவரின் அணிந்திருந்த டவுசர் கூட கிழிந்து விடும் போல இருந்தது. “டவுசரை ஒழுங்காப் போடுடா லூசுப் பயலே” என்று தாமரை கத்தியது ரணகளத்திற்கு இடையிலும் ஒரு காமெடி.

நிரூப்பின் மானத்தைக் காப்பாற்றிய பாலா

இந்தச் சமயத்தில் பாலா செய்த ஒரு காரியம் சிறப்பு. “நிரூப்பிற்கு டீஷர்ட் மாத்த டைம் கொடுங்க. தாமரையக்கா நீங்க இப்ப ஆட்டத்தை நிறுத்துங்க” என்று சொல்லி நிரூப்பின் மானத்தைக் காப்பாற்றினார் பாலா. ஒரு பெண்ணின் மானம் பறிபோகும் நிலையில் ஹீரோ வந்து காப்பாற்றுவதைத்தான் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் சக ஆணின் மானத்தைக் காப்பாற்றி ‘வித்தியாசம்’ காட்டினார் பாலா. என்னதான் பாலாவும் நிரூப்பும் பல சமயங்களில் மூர்க்கமாக மோதிக் கொண்டாலும் ‘நல்ல ஆட்டக்காரன்ப்பா” என்று உள்ளூற பரஸ்பரம் மரியாதையும் அன்பும் கொடுத்துக் கொள்வது நல்ல விஷயம்.

பாலா, ரம்யா
பாலா, ரம்யா

நிரூப், தாமரை என்று இருவருமே மற்றவர்களின் புகைப்படங்களை ஆவேசமாக உடைத்துப் போட தலா ஒரு புகைப்படம்தான் மிஞ்சியது. அதை வைத்தாவது வென்று விடலாம் என்று போராடினார்கள். இந்த நிலையில் சில புகைப்படங்களை தாமரை சோபாவின் அடியில் ஒளித்து வைத்திருந்ததை, அபிராமி சுட்டிக் காட்ட, தாமரை இதற்காக கோபம் கொண்டார். ஒரு கட்டத்தில் மற்றவர்களின் புகைப்படங்களையெல்லாம் எடுத்து தாமரை ஒட்டிக் கொண்டிருக்க “என்னாச்சு தாமரைக்கு. மூளை குழம்பிடுச்சா...?” என்று மற்றவர்கள் கேலியாக பார்த்தார்கள். ஆனால் தாமரையின் புத்திசாலித்தனம் இங்குதான் வெளிப்பட்டது. இதர புகைப்படங்களின் நடுவில் தன்னுடைய புகைப்படத்தையும் ஒட்டி நிரூப்பை ஏமாற்ற முயன்றார்.

தோல்வியில் முடிந்த தாமரையின் கடுமையான உழைப்பு

ஆனால் தாமரைக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. அவர் ஒட்டியிருந்த இரண்டு புகைப்படங்களுமே நல்ல நிலைமையில் இருந்திருந்தால் அவர்தான் வெற்றியாளராக இருந்திருப்பார். ஆனால் அதில் ஒன்று உடைந்திருந்ததை சுட்டிக்காட்டினார் நிரூப். ‘இதர போட்டியாளர்கள் பார்த்து முடிவெடுங்கள்’ என்று பிரச்னையை கைகழுவிவிட்டார் பிக் பாஸ். தாமரைக்கு ஆதரவாக பாலா பேசியதைப்பார்த்து நிரூப் டென்ஷன் ஆக “நான் என்னடா செய்யறது.. பிக் பாஸ்தான் சொல்லச் சொன்னாரு” என்று சமாதானமாகப் பேசினார் பாலா. இதில் முடிவு எட்டப்படாததால் மீண்டும் புதிதான ஆட்டம் தொடங்கியது. (முடியல!).

தாமரை, நிரூப்
தாமரை, நிரூப்

இன்னொரு கலவரக்காட்சியைப் பார்க்க வேண்டுமோ என்று மனம் பதைபதைக்க அமர வேண்டியிருந்தது. வளர்த்துவானேன்? நிரூப்பின் சாமர்த்தியத்தால் எப்படியோ அவர் ஒரு புகைப்படத்தைக் காப்பாற்றிக் கொள்ள நிரூப்தான் இறுதியில் வெற்றி. அத்தனை போராடியும் தாமரை, சுருதி. அபிராமி ஆகியோரின் உழைப்பு வீண்தான். இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். நிரூப் தந்திரக்காரராகக்கூட இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் நெருக்கடியான சூழலில் கூட உணர்ச்சிகளின் பள்ளத்தாக்கில் விழுந்து விடாமல் EQ அதிகம் உள்ள நபராக இருந்து கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் நிலைமையை இயல்பாகச் சமாளிப்பதென்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயம்.

புகைப்படத்தை மேக்னடிக் போர்டில் ஒட்டச் சொன்னால், போட்டியாளர்கள்தான் இருதுருவ காந்தங்கள் போல் ஒருவரையொருவர் ஒட்டிக் கொண்டு விலகி விடாமல் சண்டை போட்டு தீர்த்தார்கள். இப்படியெல்லாம் ரத்தக்களறியான ஒரு டாஸ்க் தேவையா பிக் பாஸ்?!