Published:Updated:

BB Ultimate 61: `சேற்றில் புரள வைத்த பிக் பாஸ்' - ஜூலியின் உடை குறித்த பிக் பாஸின் கமன்ட் சரியானதா?

BB Ultimate

BB Ultimate: இவையெல்லாம் பிக் பாஸின் கண்களில் படவில்லையா? இதே ஆட்சேபத்தை வனிதாவிடம் சொல்லியிருந்தால் அவரின் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்?

Published:Updated:

BB Ultimate 61: `சேற்றில் புரள வைத்த பிக் பாஸ்' - ஜூலியின் உடை குறித்த பிக் பாஸின் கமன்ட் சரியானதா?

BB Ultimate: இவையெல்லாம் பிக் பாஸின் கண்களில் படவில்லையா? இதே ஆட்சேபத்தை வனிதாவிடம் சொல்லியிருந்தால் அவரின் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்?

BB Ultimate
நீண்ட நாட்கள் கழித்து நேற்றைய எபிசோட் சுவாரசியமாக இருந்தது. சில எதிர்பாராத டிவிஸ்ட்களும் மைண்ட் கேம்களும் இருந்தன. ஜூலி செய்த குறும்பு பூமராங் போல் அவருக்கே திரும்பிவந்து தாக்கிவிட்டது. ‘ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்’ என்று புலம்பும் அளவிற்கு அவரது நிலைமை ஆகிவிட்டது. உண்மையிலேயே ஜூலியைப் பார்க்க பாவமாக இருந்தது.

எபிசோட் 61-ல் நடந்தது என்ன?

ஒரு துள்ளலிசைப் பாடல் காலையில் ஒலிக்க, நடனம் ஆட போட்டியாளர்கள் வெளியே வந்தபோது பரிசுத்தொகை 9 லட்சமாக உயர்ந்திருந்தைப் பார்த்தார்கள். `நான் மாது வந்திருக்கேன்' என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் சொல்வதைப் போல, மணியடித்தது போதாதென்று ‘போஸ்ட் வந்திருக்கு’ என்கிற குரல் தபால் பெட்டியின் அருகில் ரிப்பீட் மோடில் ஒலித்தது. என்னவாம்?

ஜூலி ஆடிய முதல் டிராமா!

‘காலை கலாட்டா’ டாஸ்க்கில், ஒரு போட்டியாளரைப்போல் இன்னொருவர் இமிடேட் செய்துகாட்ட வேண்டுமாம். நிரூப்பைப்போல் நகல் செய்ய முயன்று சொதப்பினார் ரம்யா. ஆனால் பலரும் அபிராமியையே டார்கெட் செய்தார்கள். “ஓ... என்று உரக்க கத்தி விட்டு... பிறகு ஓ... மை காட்...’ என்பதை இரண்டொரு முறை சொன்னால் அபிராமியின் சாயல் வந்துவிடும். ஆனால் அபிராமியின் ஓவர்ஆக்ட்டையே ஓவர் டேக் செய்வதுபோல நீண்ட நேரம் மிமிக்ரி செய்து அபிராமியை வெறுப்பேற்றினார் பாலா.

அபிராமி,சுருதி
அபிராமி,சுருதி

இப்போது ஒரு நீண்ட டிராமா ஆரம்பித்தது. வழக்கம்போல் இதன் சூத்ரதாரி பிக் பாஸ். ஜூலி இதற்கு இரையாகி விட்டாரோ என்று தோன்றுகிறது. என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம். தாமரைக்கு உடல்நலக்குறைவு என்பதால் அவர் தூங்குவதற்கான அனுமதியை பாலா வாங்கித் தந்திருக்கிறார். ஆனால் தாமரையுடன் கூடவே ஜூலியும் கண் அசந்ததால் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. பிக் பாஸ் வீட்டில் அவரின் உத்தரவுகளை சில சமயங்களில் பலர் அலட்சியம் செய்தாலும் இளிச்சவாயர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பிக் பாஸ் வறுத்தெடுப்பார். தாமரையுடன் இணைந்து ஜூலியும் தூங்கியதால் பிக் பாஸ் ஜூலியை ஆட்சேபிக்க முடிவு செய்திருக்கலாம். ஆனால் சொன்ன காரணம் வேறு. வாக்குமூல அறைக்கு ஜூலியை அழைத்த பிக் பாஸ் “நீங்க போட்டிருக்கிற டாப் டிவி ஷோவிற்கு உகந்ததா இல்லை. மாத்திக்கிங்க” என்றார். இது உண்மையாகவே ஜூலியின் மீதான கரிசனத்திலும் சொல்லப்பட்டிருக்கலாம்.

24 மணி நேரமும் காமிரா புழங்கும் போது போட்டியாளர்கள் தன்னிலை மறந்து நெகிழ்வாக அமர்ந்திருப்பது குறித்து பிக் பாஸ் சுட்டிக் காட்டுவது அக்கறையால் இருந்திருக்கலாம். இது மட்டுமல்ல, ஜூலி அணியும் ஆடை சில சமயங்களில் அவருக்கு சற்று பொருத்தமற்றதாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதர பெண் போட்டியாளர்கள் இதைச் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்ல வேண்டும். தனது தோற்றத்தை பெருமளவு மேம்படுத்தியிருப்பதில் கடந்த சீசனை விடவும் நிறைய முன்னேறியிருக்கிறார் ஜூலி.

ஜூலி ஆடை குறித்து பிக் பாஸ் சொன்ன கமென்ட்

ஜூலியின் ஆடை குறித்து பிக் பாஸ் ஆட்சேபமோ அல்லது எச்சரிக்கையோ செய்தார். சரி.. ஆனால் இதை விடவும் சிக்கனமான ஆடைகளை அணிந்து கொண்டு முந்தைய அனைத்து சீசன்களிலும் போட்டியாளர்கள் உலவியிருக்கிறார்களே?! அவையெல்லாம் பிக் பாஸின் கண்ணில் படவில்லையா? ஆடை அணிவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. வனிதாவும் அபிராமியும் மிகவும் சிக்கனமான உடைகளை அணிந்திருக்கிறார்கள்.. “இது குழந்தைகள் பார்க்கிற நிகழ்ச்சி” என்று டாஸ்க்குகளை விளையாட மறுத்து ஆட்சேபம் செய்த வனிதா, சில சமயங்களில் அணிந்திருந்த உடை சற்று வில்லங்கமாகத்தான் இருந்தது. இவையெல்லாம் பிக் பாஸின் கண்களில் படவில்லையா? இதே ஆட்சேபத்தை வனிதாவிடம் சொல்லியிருந்தால் அவரின் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்?

பாலா
பாலா

பிக் பாஸ் சொன்ன விஷயம் ஒருவேளை ஜூலியின் ஈகோவை உசுப்பிவிட்டதோ.. என்னமோ..? பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் என்று ஏற்கெனவே திட்டமிட்டுக் கொண்டிருந்தவருக்கு பிக் பாஸின் இந்த அறிவுறுத்தல் எரிச்சலைத் தந்திருக்கலாம். எனவே உள்ளே பிக் பாஸ் சொல்லியதை அப்படியே மறைத்து வெளியே ஒரு ஆட்டத்தை ஆரம்பித்தார். “ஓகே கைய்ஸ்.. நான் கிளம்பறேன்… அபிராமி எங்க. அவகிட்ட சொல்லிட்டுப் போயிடறேன்" என்பது மாதிரி ஜூலி சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் மெலிதாக அதிர்ச்சியடைந்தாலும் யாரும் நம்பவில்லை. ஏனெனில் பிக் பாஸ் ஒரு போட்டியாளரை அப்படி தனியாகக் கூப்பிட்டு எல்லாம் சொல்ல மாட்டார் என்பது அனைவருக்குமே தெரியும். ‘ஜூலி’க்கு ஏதாவது சீக்ரெட் டாஸ்க் தரப்பட்டதாக அவர்கள் நினைத்திருக்கலாம்.

ஜூலியின் டிராமாவில் டிவிஸ்ட் தந்த சுருதி

ஆடை குறித்து பிக் பாஸ் சொன்ன கமெண்ட்டை பின்பற்ற முடிவு செய்த ஜூலி, பாலாவின் ஒரு டீஷர்ட்டை இரவல் வாங்கிப் போட்டுக்கொண்டார். இந்த விஷயம் போட்டியாளர்களை சற்று குழப்பியிருக்கலாம். ஜூலி வெளியேபோக முடிவு செய்து விட்டதால் பாலாவின் நினைவாக அவரது ஆடையை வாங்குகிறாரோ என்று நினைத்திருக்கலாம். ‘இரு நல்ல டீஷர்ட்டா தரேன்’ என்றார் பாலா. பெட்டியை எடுக்கும் முடிவை ஜூலி முன்பே வீட்டில் தெரிவித்துவிட்டார். அதற்கு எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்படும் என்கிற அளவிற்குகூட கணக்கு போட்டு வைத்து விட்டார். இது அனைவருக்குமே தெரியும். ஆனால் சுருதியும் ரகசியமாக மனதில் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார் போலிருக்கிறது. ‘ஜூலி பெட்டியை கைப்பற்றி விடுவாரோ’ என்று சுருதிக்கு இப்போது உள்ளூற பதட்டம் ஏற்பட்டது. எனவே அதுதொடர்பான ஒரு சுவாரசியமான டிராமா நடந்தது.

ரம்யா
ரம்யா

‘பந்திக்கு முந்து’ என்றொரு பழமொழி இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் செயல்பட்டார் சுருதி. ஜூலியை வம்படியாக முந்திச் சென்று எடுத்தாலும் தவறாகிவிடும். எனவே “உன்னோட தேவைகள் என்ன?” என்கிற பேச்சு வார்த்தையில் ஜூலியிடம் சம்பிரதாயமாக ஈடுபட்டார். “வீடு கட்டறது பாதில நிக்குது” என்று ஜூலி சொல்ல, ‘எனக்கு வீடே இல்லை' என்று சுருதி சொன்னது பாவமாகத்தான் இருந்தது. “மத்தவங்க தேவைல்லாம் என்னன்னு கேட்டுட்டு இருக்காத. ஒவ்வொருவரும் ஆயிரம் கதை சொல்லுவாங்க. உனக்கு வேணுமின்னா எடு” என்று சுருதியிடம் நிரூப் சொன்னது சற்று கடுமையான கமென்ட்டாக இருந்தாலும் அதுதான் யதார்த்தம். சுருதி வெளியே செல்வதில் நிரூப்பிற்கு விருப்பம் இல்லையென்றாலும்கூட பெட்டி சுருதிக்குத்தான் கிடைக்கவேண்டும் என்று விரும்பினார். ஜூலிக்கும் நிரூப்பிற்கும் ஒரு ஜாலியான பனிப்போர் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

‘எங்கே ஜூலி முந்திச்சென்று எடுத்து விடுவாரோ’ என்கிற பதட்டம் சுருதியின் உடல்மொழியில் நன்றாகவே தெரிந்தது. எனவே எந்நேரமும் பாய்ந்து செல்லும் அசைவில் நின்றிருந்தார். ‘தொகை இன்னமும் உயரட்டும்' என்று காத்திருந்த ஜூலிக்கு ‘இந்த Prank விளையாட்டை அவசரப்பட்டு ஆடி விட்டோமோ’ என்கிற தர்மசங்கடம் தெரிந்தது. சுருதி முந்திவிடுவாளோ என்கிற பதட்டமும் கூடவே இருந்தது. ஒரு கட்டத்தில் பாய்ந்துசென்ற சுருதி, சட்டென்று பெட்டியை எடுத்துக்கொண்டார். ஜூலியின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவரது விளையாட்டு வினையாகி விட்டது.

பிக் பாஸில் சென்டிமென்ட் குறைகிறதா?

முந்தைய சீசன்களில் எல்லாம் பெட்டி எடுக்கும் டாஸ்க் என்பது ஒரே சென்டிமென்ட்டாக இருக்கும். “போகாதே.. போகாதே..’ என்று கண்ணீரில் உருகுவார்கள். ஆனால் உள்ளுக்குள் ‘போச்சே. போச்சே..’ என்று இருக்கும். ஆனால் அல்டிமேட் இப்போது யதார்த்தத்தை நோக்கி வளர்ந்திருக்கிறது. பெட்டியை எடுப்பதில் சென்ட்டிமென்ட் எல்லாம் இல்லாமல் ‘எனக்கு வேணும்’ என்று போட்டி போடுகிற நிதர்சனம் வந்திருக்கிறது. அடுத்தடுத்த சீசன்களில் பெட்டியைக் கைப்பற்ற குடுமிப்பிடிச் சண்டையெல்லாம் நிகழும் போல. மற்றவர்கள் எடுக்காதது கூட ஓகே. ஆனால் கடந்த சீசனைப் போலவே இந்த முறையும் தாமரை துளி கூட ஆவல் காட்டாததுதான் ஆச்சரியம். “வெட்டி வீறாப்பு காட்டாதே” என்று தாமரையைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தார் நிரூப். வறுமையான நிலையில் இருந்தாலும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் தாமரைக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

ரம்யா பாண்டியன் - சுருதி
ரம்யா பாண்டியன் - சுருதி

பெட்டி எடுக்கப்பட்டு முடிந்ததும் நிரூப்பிற்கும் ஜூலிக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் நிகழ்ந்தது. ஏற்கெனவே ஏமாற்றத்தை மறைத்துக்கொண்ட கடுப்பில் இருக்கும் ஜூலி எரிச்சலில் கத்த “ஓகே.. நிறுத்திக்குவோம்” என்று சமாதானம் ஆனார் நிரூப். “நான் எடுக்கற ஐடியால இல்லைன்னு மாத்தி சொல்றா ஜூலி” என்று முனகினார் சுருதி. சோர்ந்து உட்கார்ந்திருந்த ஜூலியிடம் ‘பேட்ட’ திரைப்படத்தின் ‘உல்லாலா.. உல்லாலா’ பாடலைப் பாடி ஆறுதலும் ஊக்கமும் பாலா சொன்னது சிறப்பு. நடந்த விஷயத்தை அபிராமியிடம் பிறகு ஜூலி சொன்னபோது ‘எனக்கும்தான் வீடு இல்ல' என்று சுருதி மீதான எரிச்சலைக்காட்டினார் அபிராமி. இந்தக் களேபரத்தின் நடுவே பெட்டியை எடுத்து ஜாலியாக ஒளித்துவைத்தார் பாலா.

பிக் பாஸ் தந்த மெகா டிவிஸ்ட்

“எல்லோருக்கும் லிவ்விங் ஏரியால வந்து உக்காருங்க" என்று கறாரான குரலில் பிக் பாஸின் அறிவிப்பு வந்தது. “நான் மீன்குழம்பு செஞ்சு முடிச்சதும் என்னை வெளிய அனுப்புங்க பிக் பாஸ்” என்று தீர்மானமே செய்துவிட்டார் சுருதி. ஆனால் ஜூலிக்கு சுருதி தந்த டிவிஸ்ட்டை விடவும் பிக் பாஸ் இப்போது தந்த டிவிஸ்ட் ரகளையாக இருந்தது. “பெட்டியை வெளிய வெச்சேன்.. சரி.. எடுங்க..ன்னு உங்களுக்கு அறிவிப்பு ஏதாச்சும் வந்ததா?” என்று பிக் பாஸ் கேட்க அனைவரின் முகத்திலும் திகைப்பு. குறிப்பாக சுருதியின் முகத்தில் பயங்கர அதிர்ச்சி. ஜூலிக்கு உள்ளே ஜில்லென்று இருந்திருக்க வேண்டும். “இப்ப பெட்டி எங்க?” என்று கேட்ட பிக் பாஸ், ‘மஞ்ச சட்டை போட்ட தம்பி.. ஒளிச்சு வெச்ச பெட்டியைக் கொண்டு போய் கார்டன் ஏரியால வைங்க' என்று பாலாவை சொன்னது சுவாரசியமான கிண்டல். இதை மிகவும் ரசித்துக்கொண்டே சென்றார் பாலா.

பிக் பாஸ் தந்த டிவிஸ்ட் நமது அன்றாட வாழ்க்கைக்கும் மிக பயனுள்ள விஷயம். ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னால் அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் யோசித்துவிட வேண்டும். குறிப்புகளையும் வாசித்துவிட வேண்டும். “அறிவிப்பு வராம நீங்களா எப்படி பெட்டியை எடுக்க முடிவு செய்யலாம்?” என்கிற பிக் பாஸின் கேள்வி சரியானது. ஒருவேளை ஆட்டத்தில் சுவாரசியத்தைக் கூட்ட பிக் பாஸே கூட விதியை பிறகு மாற்றியிருக்கலாம். “போன சீசன்ல எல்லாம் பிரைஸ் மணி வேற. சூட்கேஸ் மணி வேற. ஆனா அல்டிமேட்ல சூட்கேஸ் பணம், பைனல்ல ஜெயிக்கறவங்க பரிசில் இருந்து குறைக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியே ஓடிட்டே இருக்கு.. நீங் கவனிச்சீங்க இல்லையா?” என்று பிக் பாஸ் கேட்க “ஓ..” என்று போட்டியாளர்கள் திகைத்தார்கள்.

BB Ultimate
BB Ultimate

“கஷ்டப்பட்டு ஃபைனல் போறவங்க பணத்தை இப்படி நடுவுல ஒருத்தர் ஈஸியா எடுத்துட்டு போயிட முடியாது. அதுக்கு சில சவால்களை சந்தித்தாகணும்” என்று சொல்லப்பட்டதும் சுருதியின் முகத்தில் ‘ஹப்பாடா’ என்று சற்று நிம்மதி வந்தது. ஆனால் பரிசுத் தொகை 15 லட்சமாக உயர்த்தப்பட்டிருந்துதான் இதில் நிகழ்ந்த ஒரு நல்ல டிவிஸ்ட். ஆக பிக் பாஸ் உயர்த்த நினைத்திருந்த உச்சவரம்புத் தொகை இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

“இந்தப் பரிசுத் தொகையை அடைய வேண்டுமானால் குறைந்தபட்சம் இருவர் போட்டிக்கு வர வேண்டும். அதிகமாகவும் வரலாம். அவர்களுக்குள் போட்டி நிகழ்ந்து யார் இறுதியில் ஜெயிக்கிறார்களோ... அவர்களுக்கே பரிசு” என்று அறிவித்தார் பிக் பாஸ். முதலில் பெட்டியை எடுத்த சுருதி, இந்த ஆட்டத்திற்கு முதல் போட்டியாளராக ஏற்கெனவே தகுதியாகி விட்டார். “சுருதிகூட யாரும் போட்டி போடலைன்னா நான் போறேன்” என்று இந்தச் சமயத்தில் நிரூப் குட்டையைக் குழப்பினார். ‘ஃபைனல் போக வேண்டியவன்.. ஏன் இப்படிச் சொல்றான்..?' என்று பாலாவே எரிச்சலாகி ஆட்சேபித்தது நல்ல விஷயம்.

சேற்றில் கட்டிப் புரண்ட சுருதி, ஜூலி

ஜூலியும் சுருதியும் மட்டும் மோதி பரிசை அடையட்டும் என்று மற்றவர்கள் நல்ல எண்ணத்துடன் ஒதுங்கியிருக்கலாம். சுருதியுடன் மோதி ஜெயிப்பது சிரமம்தான் என்றாலும் “தோற்றாலும் போராடி தோற்கணும். இல்ல.. இல்ல. நான் ஜெயிச்சே தீருவேன்” என்று தனக்குள் பலவாறாக பேசிக் கொண்டிருந்தார் ஜூலி. ‘பில்டிங் ஸ்ட்ராங்.. ஃபேஸ்மெண்ட் வீக்’ என்கிற காமெடியைப் போலவே அவரது இந்தத் துணிச்சல் இருந்தது. ஆக. இறுதியில் ஜூலியும் சுருதியும் மட்டும் மோதுவது என்று முடிவாகியது. மற்றவர்கள் விட்டுத் தந்து விட்டார்கள் போல.

என்ன போட்டி? சேறு நிறைந்திருக்கும் பகுதியில் இருவரையும் கயிற்றால் பிணைத்து விடுவார்கள். இவர்களால் சற்று தொலைவு மட்டுமே நகர முடியும். சேற்றில் போடப்பட்டிருக்கும் பந்துகளை எடுத்து ஆட்ட ஏரியாவின் வெளி முனையில் வைத்திருக்கும் கூடையில் சேகரிக்க வேண்டும். பஸ்ஸர் அடிக்கும் போது யாருடைய கூடையில் அதிக பந்துகள் இருக்கிறதோ, அவரே முதல் கட்டப் போட்டியின் வெற்றியாளர். ஆட்டம் ஆரம்பித்தது. பந்துகளை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டுதான் எதிரெதிர் முனைகளில் சிரமப்பட்டு முன்னேற முடியும். ஆகவே ‘விடாக்கண்டன்.. கொடாக்கண்டன்’ கணக்காக இருவரும் ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

 ஜூலி
ஜூலி

சுருதி அடிப்படையில் ஸ்போர்ட்ஸ் நபர் என்பதால் அவருடைய ஆட்டமே முன்னிலையில் இருந்தது. சுருதியின் பலத்திற்கு ஈடு கொடுக்க ஜூலி சிரமப்பட்டார். ஜூலி அலைமோதுவதைக் கண்டு இதர போட்டியாளர்கள் வாய்விட்டுச் சிரித்தாலும் ‘ஐயோ! பாவம்' என்று ஜூலிக்காக வருந்தினார்கள். நமக்கும்கூட அப்படித்தான் இருந்தது. ஆனால் இன்னொரு பக்கம் சுருதியும் தன்னுடைய வெற்றிக்காக மிகவும் போராடினார். ஜூலியும் தன்னால் இயன்ற வரையில் சுருதிக்கு ஈடு கொடுத்தார். ஒரு கட்டத்தில் உடலெங்கும் சேறு நிறைந்து ‘அவ்தார்’ திரைப்படத்தின் பாத்திரங்களைப்போல இருவரும் காட்சியளித்தார்கள். ஜூலியின் கண்களில் சேறு பட்டு அவர் திணறிக் கொண்டிருந்தததைக் காண பாவமாக இருந்தது. “வயித்துக்காக மனுஷன் இங்க கயித்தில் ஆடறான் பாரு” என்கிற பாடல் வரியைப் போல பரிசுத் தொகைக்காக இருவரும் சேற்றில் கட்டி உருள்வதைக் காண பரிதாபமாக இருந்தது.

சுருதியுடன் மோதுவதில் சிரமப்பட்டு திணறினாலும் ஜூலி பின்பற்றிய ஓர் உத்தி அருமை. சுருதியையும் இழுத்துக் கொண்டு ஒவ்வொரு பந்தாக எடுத்து கூடையில் போடுவதை விடவும் தன்னுடைய பனியனில் சில பந்துகளை முதலில் சேர்த்துக் கொண்டு பின்பு இழுத்துச் சென்றாவது போடலாம் என்று ஜூலி திட்டமிட்டது சிறப்பு. சுருதியின் கூடையில்தான் பந்துகள் அதிகம் இருந்தன. எனவே பஸ்ஸர் அடிக்கப்பட்டால் அவர்தான் வெற்றியாளர் என்கிற நிலைமை ஏற்பட்டது போராடிச் சென்று சுருதியின் கூடையை எப்படியோ கீழே கவிழ்த்துவிட்டார் ஜூலி. சில பந்துகள் வெளியே உருண்டன. ‘இத்தனை நேரம் தான் பட்ட சிரமமெல்லாம் வீணா?’ என்கிற அச்சமும் கவலையும் சுருதியிடம் காணப்பட்டது. எனவே அவரும் போராடிச் சென்று ஜூலியின் கூடையை பதிலுக்கு கவிழ்த்தார்.

அல்டிமேட் சீசனில் இனியாவது இதே சுவாரசியம் இருக்குமா?

இரண்டு பேர்களின் கூடைகளும் கவிழ்ந்ததால் ஆட்டம் என்னவாகும் என்கிற திகைப்பு ஏற்பட்ட நிலையில் ஆட்டத்தை நிறுத்தினார் பிக் பாஸ். “கீழே சரிந்த பந்துகளை விட்டுட்டு கூடையை மட்டும் அப்படியே நிமிர்த்தி வையுங்க” என்று உத்தரவிட்டார். ஆக.. கவிழ்ந்தது போக, கூடையினுள் எத்தனை பந்துகள் மிஞ்சியிருக்கிறதோ, அதை வைத்துத்தான் வெற்றி தீர்மானிக்கப்படும். ஜூலியின் கூடையில் இருக்கும் பந்துகளை நிரூப்பை வைத்து எண்ணச் சொன்ன பிக் பாஸ், இதைப் போலவே சுருதியின் கூடையில் இருந்த பந்துகளை பாலாவை விட்டு எண்ணச் சொல்லியதில் ஒரு சூட்சுமம் இருந்ததைப்போல் பட்டது. நட்பிற்காக அவர்கள் எதையும் செய்துவிடக்கூடாது என்பதால் ஜோடியை மாற்றிப் போட்டாரோ என்னமோ.

டாஸ்க்
டாஸ்க்

என்றாலும் சுருதி சேகரித்த பந்துகளே அதிகம் இருந்ததால் இந்த முதற்கட்டப் போட்டியில் அவரே வெற்றியடைந்தார். விடாமல் மல்லுக்கட்டிய இருவரையும் மற்றவர்கள் பாராட்டினார்கள். மூச்சு வாங்க அப்படியே அமர்ந்த சுருதி, பிக் பாஸிற்கு நன்றி சொன்னதோடு எபிசோட் நிறைந்தது.

இரண்டாம் கட்டப் போட்டியிலும் வென்று பரிசுத் தொகையை யார் பெற்றது என்கிற சஸ்பென்ஸ் தேவை இல்லை. ஏனெனில் பிரமோவில் வந்த காட்சியின் படி சுருதிதான் பரிசுத் தொகையைப் பெறுகிறார் என்பது ஏற்கெனவே வந்து விட்டது. சூட்கேஸூடன் சுருதி வெளியேறிய நிலையில் ஆட்டம் எப்படி சுவாரசியமாக மாறும் என்பதுதான் இப்போதையே கேள்வி. இந்த எபிசோடைப் போலவே ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக அமைந்தால் அல்டிமேட்டை ஒருமாதிரியாக கரை சேர்த்து விடலாம்.