Published:Updated:

BB Ultimate 62: ரூ.15 லட்சத்துடன் வெளியேறிய சுருதி; இறுதிக்கட்டத்தில் போட்டி... யாருக்கு டைட்டில்?

சுருதி

BB Ultimate : முதலில் வந்த அபிராமி, ‘ரம்யா தனியாக விளையாடுகிறார்’ என்றார். பின்னர் வந்த பலரும் இதையே சொன்னார்கள்.

Published:Updated:

BB Ultimate 62: ரூ.15 லட்சத்துடன் வெளியேறிய சுருதி; இறுதிக்கட்டத்தில் போட்டி... யாருக்கு டைட்டில்?

BB Ultimate : முதலில் வந்த அபிராமி, ‘ரம்யா தனியாக விளையாடுகிறார்’ என்றார். பின்னர் வந்த பலரும் இதையே சொன்னார்கள்.

சுருதி
‘யாரையாவது சார்ந்து விளையாடுகிறாரா அல்லது தனியாக விளையாடுகிறாரா’ என்கிற கருத்துக் கணிப்பில் ‘தனித்து விளையாடுபவராக’ ரம்யா மட்டுமே ஏகமனதாக அனைவராலும் சுட்டிக் காட்டப்பட்டார். இன்னொரு டாஸ்க்கில், சட்டென்று கோபப்பட்டு எரிந்து விழும் பாலாவின் குணாதிசயத்தை சுட்டிக் காட்டி அபிராமி கண்ணீர் விட்டது பரிதாபம்.

எபிசோட் - 62-ல் நடந்தது என்ன?

ஒரு எபிசோடின் நிகழ்வைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் குறைந்தபட்சம் அன்றைய தினத்தின் பிரமோக்களையாவது பார்த்துவிட்டு வர வேண்டும் என்கிற நெருக்கடியை பிக் பாஸ் டீம் உருவாக்குகிறது. மெயின் எபிசோடில், சில விஷயங்களை அந்தரத்தில் அப்படியே விட்டு விடுகிறார்கள். மேலும் சிலவற்றை திடீரென்று எவ்வித அறிமுகமும் இல்லாமல் ஆரம்பிக்கிறார்கள். (இதெல்லாம் நியாயமே இல்ல பிக் பாஸ்!)

‘பிக் பாஸ் சூட்கேஸை தருவாரா?’ – கடைசிவரை சஸ்பென்ஸில் தவித்த சுருதி

சுருதி
சுருதி

‘சுருதி 15 லட்சம் பரிசுத் தொகையைப் பெறுகிறார்’ என்கிற நற்செய்தியோடு நேற்றைய எபிசோட் தொடங்கியது. எனில் இரண்டாம் கட்டப் போட்டி என்னவாயிற்று? அதிலும் சுருதி வென்றார் என்பதை நாமாகப் புரிந்துகொள்ள வேண்டியதுதான். “யாரைக் கேட்டு பெட்டியை எடுத்தீங்க?” என்று பிக் பாஸ் தந்த அதிர்ச்சி காரணமாக, ‘பெட்டி கையில் கிடைக்குமா... கிடைக்காதா?’ என்கிற சஸ்பென்ஸில் கடைசி வரை இருந்தார் சுருதி. இந்த அறிவிப்பிற்கு முந்தைய நிமிடத்தில்கூட ‘பிக் பாஸ் ஏதாவது சஸ்பென்ஸ் வெச்சிருப்பாரு’ என்று மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘அது……’ என்று பிக் பாஸின் மைண்ட் வாய்ஸ் தனக்குள் கூவியிருக்கலாம். வாழ்க்கையில் ஒரு முக்கியமான பாடத்தை சுருதி கற்றுக்கொண்டுவிட்டார். கையில் வந்து சேரும் கடைசி நொடி வரைக்கும் அந்தச் செய்தியில் உண்மையில்லை என்பதே இதன் பின்னுள்ள தத்துவம்.

பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட செய்தி கேட்ட அடுத்த நொடியே தாமரையின்மீது பாய்ந்து கட்டி முத்தமழை பொழிந்தார் சுருதி. கடந்த சீசனில் அடித்துக் கொண்டவர்கள் இப்படி பாசப்பறவைகளாக மாறியிருப்பது நல்ல விஷயம். அடுத்ததாக, நிரூப்பையும் அதே பாசத்துடன் கட்டிக்கொண்டார் சுருதி. இந்த இருவர் மட்டுமே சுருதிக்கு ஆதரவாக இருந்தவர்கள். வீட்டை விட்டுக் கிளம்பும் சமயத்தில்தான் மன்னிக்கும் / மன்னிப்பு கேட்கும் ஞானோதயம் எல்லோருக்கும் வரும். ‘உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி’ என்று அபிராமியிடம் கேட்டுக் கொண்டார் சுருதி. “நீ ஜெயிச்சதுல எனக்கு மகிழ்ச்சி” என்றார் ஜூலி. (உள்ளே என்ன சொல்லுது ஜூலி?!).

BB Ultimate 62
BB Ultimate 62

“ஃபைனல்ல யாரு ஜெயிப்பாங்கன்னு என்னால யூகிக்க முடியல. எல்லோருக்கும் வாழ்த்துகள்” என்று மையமாக சொல்லி கிளம்புவதற்கு தயாரான சுருதியிடம் "இந்த வீடு அப்படி சில விஷயங்களைச் செஞ்சிடும்” என்று பாலா சொன்னது யதார்த்தமான உண்மை. “ஃபைனல் நிகழ்ச்சிக்கு நீ வர வேண்டாம். அனிதாவை அனுப்பு. பிரியங்காவைக் கேட்டதா சொல்லு” என்று குறும்பையும் பாசத்தையும் கலந்து வெளிப்படுத்தினார் நிரூப். ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்கிற மோடில் 15 லட்சத்துடன் சந்தோஷமாகக் கிளம்பிசசென்றார் சுருதி. இந்த வாரம் சுருதி எலிமினேட் ஆவதற்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், சுருதி எடுத்தது சரியான முடிவு.

சொப்புச் சாமான்களை வைத்து விளையாடிய குழந்தைகள்

அடுத்ததாக ஒரு புதிய டாஸ்க் திடும்மென்று ஆரம்பித்தது. ‘யார் கூட்டமாக விளையாடுகிறார்கள், யார் தனியாக விளையாடுகிறார்கள்’ என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டுமாம். இதற்காக சொப்புச் சாமான்கள் மாதிரி விதம் விதமான அளவுகளிலான உருளைகள்மீது புகைப்படம் ஒட்டியிருந்தார்கள். இருப்பதிலேயே பெரிய உருளையின்மீது ஜூலியின் புகைப்படம் இருந்தது. மிகச் சிறியதில் ரம்யா.

BB Ultimate 62
BB Ultimate 62

முதலில் வந்த அபிராமி, ‘ரம்யா தனியாக விளையாடுகிறார்’ என்றார். பின்னர் வந்த பலரும் இதையே சொன்னார்கள். “எனக்கும் ஜூலிக்கும் எமோஷனல் கனெக்ட் இருக்கு. இருந்தாலும் அதை டாஸ்க்கில் வெளிப்பட அனுமதிக்க மாட்டோம்” என்று சொல்லி ஜூலியின் டப்பாவிற்குள் தன்னுடைய டப்பாவை போட்டு மூடினார். நேர்மையான அபிப்ராயம். “அனிதா இருந்த வரைக்கும் அவளை சப்போர்ட் பண்ணிட்டே இருந்தான்.. அவங்க போன பிறகு பரவாயில்லை.. இப்ப தனியா விளையாடாறான்” என்பது நிரூப் பற்றிய கருத்தாக இருந்தது. இதே அபிப்ராயத்தைத்தான் பின்னர் வந்தவர்களும் சொன்னார்கள். பாலாவையும் தாமரையும் சேர்த்து ஒரு டப்பாவில் போட்டு மூடினார் அபிராமி. இதுவும் சரியான முடிவுதான்.

அடுத்ததாக வந்த நிரூப், அபிராமியின் டப்பாவை எடுத்து பாலாவின் டப்பாவில் போட்டு மூடினார். ‘அனிதா இருந்திருந்தா, அவ டப்பால என்னைப் போட்டு மூடியிருப்பேன்’ என்று நேர்மையாக ஒப்புக்கொண்ட நிரூப், தாமரையும் ஜூலிக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருப்பதாக சொல்லி நான்கு டப்பாக்களையும் ஒன்றாக இணைத்தார். பாலா, ஜூலி, தாமரை, அபிராமி ஆகிய நால்வரும் ஒரு அணியாக இணைந்திருப்பதாகச் சொன்ன நிரூப், ரம்யாவைத் தனித்து விளையாடுபவராகக் குறிப்பிட்டார். அடுத்து வந்த ஜூலி, தாமரையையும் பாலாவையும் ஒரே டப்பாவில் போட்டது சரியான கணிப்பு. ‘சுருதி இருந்திருந்தா நிரூப்பைகூட போட்டிருப்பேன்’ என்றதும் சரியான பாயிண்ட். “அபிராமி என் பெஸ்ட் பிரெண்டுதான். ஆனா நாங்க ஒரு போதும் விட்டுத் தந்ததில்லை” என்று அந்த டப்பாக்களை இணைக்கவில்லை. இது போங்காட்டம்.

BB Ultimate 62
BB Ultimate 62

அடுத்து வந்த தாமரை, ‘அபிராமி பாலாவைச் சார்ந்து விளையாடுகிறார்’ என்று சொல்லியது சரியான விஷயம். இதைப் போலவே ஜூலியையும் பாலாவுடன் கோர்த்து விட்டார். ‘அனிதா இருந்திருந்தா.. நிரூப்..’ என்று அதே விஷயத்தை சொன்ன தாமரை `இப்ப பரவால்ல.. தனியா விளையாடறான்’ என்று சான்றிதழ் தந்தார். ‘ரம்யா யாரோடும் சேராது' என்று சொன்ன தாமரை, தன்னையும் அதே மாதிரியாக சொல்லிக்கொண்டது நிச்சயம் போங்காட்டம்.

முகமூடி கழன்று விழுந்த குரூரமான தருணங்கள்

அடுத்த டாஸ்க்கையும் எவ்வித அறிமுகமும் தராமல் திடீரென்று ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘சக போட்டியாளர்கள் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய தருணங்களை ஒவ்வொருவரும் வாக்குமூல அறையில் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்’. இந்த டாஸ்க்கில் பெரும்பாலும் சமீபத்திய சர்ச்சைகளை வைத்துதான் பேசினார்களே தவிர, ஒட்டுமொத்த சீசனின் நிகழ்வுகளைத் தொகுத்துக்கொண்டு யாரும் பேசவில்லை.

முதலில் வந்த பாலா, மணிரத்ன திரைப்படத்தின் பாத்திரங்களைப்போல தாழ்ந்த குரலில் ரகசியமாகப் பேசினார். “ஜூலி கூட நடந்த டாஸ்க்ல சுருதி ஜெயிக்கக்கூடாதுன்னு அபிராமி நெனச்சாங்க. ஒருத்தர் பிடிக்கலைன்னா எந்த எல்லை வரைக்கும் வெறுப்பாங்க” என்று அபிராமியின் காலை வாரிய பாலா, அடுத்ததாக நிரூப்பைப் பற்றி சொன்னபோது “நிரூப் எப்படி விளையாடுவான்னு எனக்கு நல்லா தெரியும். இந்த சீசன்ல அண்டர்பிளே பண்றான். முழு ஈடுபாடு இல்ல. தெரியாம கை பட்டதுக்குக்கூட சண்டைக்கு வந்தான்” என்றார். (எதே? தெரியாம கை பட்டதா?!). மூன்றாம் நபராக ரம்யாவின் பெயரை இழுத்த பாலா, “ரம்யா முட்டை டாஸ்க்ல என்னை கடிச்சு வெச்சிட்டாங்க” என்று அதே பழைய பல்லவியைப் பாடினார்.

BB Ultimate 62
BB Ultimate 62

அடுத்ததாக வந்தார் அபிராமி. “ஒசாமா. கசாமான்னு ஜூலி கிட்ட பாசமா இருந்தாங்க. ஆனா ரெண்டு நாளா அதுல மாற்றம். சுருதி பக்கம் அதிகமா சாய்ஞ்சிட்டாங்க..” என்று தாமரையைப் பற்றி முதலில் சொன்னவர், அடுத்ததாக நிரூப்பை பஞ்சாயத்திற்கு இழுத்தார். “எனக்கு தெரிஞ்ச நிரூப் எதையும் மறைக்கமாட்டான். ஓப்பனா பேசிடுவான்.. இந்த சீசன்ல வேற நிரூப்பை பார்க்கமுடியுது. காயின் டாஸ்க்ல நடந்த பிரச்னைல துணிச்சலா பேசாம கமுக்கமா இருந்துட்டான். பழைய நேர்மையான நிரூப்பைப் பார்க்க முடியலை” என்று சொன்ன அபிராமி, அடுத்ததாக பாலாவைப் பற்றி பேச ஆரம்பிக்கும்போதே பேச இயலாமல் கண்கலங்கி விட்டார்.

“போன சீசன்ல தன் கோபத்தை இயல்பா வெளிப்படுத்தி கெட்ட பெயர் வாங்கிக்கிட்டதால இந்த சீசன்ல தன்னை மாத்திக்கிட்டு இருக்கான். இது நல்ல விஷயம்தான். யாரா இருந்தாலும் துணிச்சலா பேசிடுவான். இதுவும் நல்ல விஷயம்தான். ஆனா திடீர்னு ரொம்ப ரூடா பேசிடறான்... நாம ஒரு விஷயம் சொல்ல வந்தா காதுலயே சரியா வாங்க மாட்டான். இப்ப நடந்த ஒரு சாதாரண விஷயத்துலகூட என்னை கன்னா பின்னா –ன்னு கத்திட்டான். மனசு வலிக்குது” என்று கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் அபிராமி.

மூன்றாம் நபராக உள்ளே வந்தார் ஜூலி. தாமரை குறித்து அபிராமி சொன்ன அதே விஷயத்தை இவரும் பகிர்ந்துகொண்டார். “எப்பவுமே நான் நல்லா விளையாடினா தாமரையக்கா பாராட்டுவாங்க. இப்ப ரெண்டு நாளா மாற்றம் தெரியுது. இப்ப நடந்த டாஸ்க்ல சுருதிகிட்ட போராடி உடம்பு வலியோட இருந்தேன். என்னன்னு வந்துகூட விசாரிக்கலை” என்று கலங்கிய ஜூலி, அடுத்ததாக நிரூப் பற்றி சொன்னது உண்மைதான். “என் மேல ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடிச்சிட்டே இருக்கான்” என்று சொன்னது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அடுத்ததாக ரம்யா பற்றி பேசத் தொடங்கிய ஜூலி “டாஸ்க் வந்துட்டா அதுக்கேத்த மாதிரி அவங்க பழக்கம் மாறிடுது. முட்டை டாஸ்க்ல நடந்த ஒரு பழைய விஷயத்தை ரொம்ப நாள் கழிச்சு பஞ்சாயத்து பண்ணாங்க” என்று வருத்தப்பட்டார்.

BB Ultimate 62
BB Ultimate 62

இந்த புகார் படலத்தில் கடைசியாக வந்தவர் நிரூப். (ஹப்பாடா!). பாலா இவரைப் பற்றி சொன்ன அதே விஷயத்தை இவரும் சொன்னார். “எனக்குத் தெரிஞ்ச பாலா வேற. ரொம்ப நல்லவனா காண்பிச்சுக்கறான். தேவையில்லாத கோபம் வந்துடுது. இங்க சில பேர் கடந்த சீசன்ல கிடைச்ச கெட்டபெயரை போக்கிக்கறதுக்காக வந்த மாதிரி தெரியுது” என்ற நிரூப், அடுத்த நபராக ஜூலியைப் பஞ்சாயத்துக்கு இழுத்தார். (இழுக்காவிட்டால்தான் ஆச்சரியம்!). “எதையாவது சொல்ல வருவா. அப்புறம் நிறுத்திடுவா.. கிராம டாஸ்க்ல நடந்த விஷயங்கள் தொடர்பா அவளைக் கூப்பிட்டு உட்கார வெச்சு நெறைய விளக்கம் கொடுத்தேன். அப்ப தலையை ஆட்டிட்டு அப்புறம் ஒரு நாள் அதே பிரச்னையை கையில் எடுக்கறா” என்று புகார் சொன்னார். மூன்றாம் நபராக அபிராமியைப் பற்றி ஆரம்பித்த நிரூப் “கோர்ட் டாஸ்க்ல பாலாஜிக்கு எதிர் தரப்பு வக்கீலா சில விஷயங்களைச் சொல்லிட்டு, இதெல்லாம் ‘டாஸ்க்கிற்காக பண்ணது’-ன்னு சொல்லிட்டாங்க. பாலா கோபப்படறான் –ன்னு நெனக்கறாங்க” என்றார். அபிராமி குறித்து சொல்ல நிரூப் தொடர்பாகவே ஏராளமான விஷயங்கள் அவருக்கு இருக்கின்றன. என்றாலும் அதையெல்லாம் நிரூப் தவிர்த்துவிட்டார்.

தாமரையின் வாயைக் கிண்டிய நிரூப்

ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்ததும், தாமரையிடம் பேசிக் கொண்டிருந்த நிரூப், “நீ பாலா பத்தி எதுவும் சொல்லியிருக்க மாட்டே.. சரியா?” என்று விசாரித்துக் கொண்டிருந்தார். ரகசியமாக நடந்த டாஸ்க் பற்றி இப்படி பொதுவில் விசாரிப்பதே முதலில் சரியல்ல. என்றாலும் நிரூப்பின் யூகம் சரியாகத்தான் இருந்திருக்கும். “அது எப்படி பாலா பத்தி நான் சொல்லியிருக்க மாட்டேன்னு சொல்ற?” என்று பதில் கேள்வி கேட்டு விளையாடினார் தாமரை. தாமரையின் வாக்குமூலப் பகுதி நமக்கு காட்டப்படவில்லை என்பதால் அவர் பாலா பற்றி சொல்லியிருப்பாரா, இல்லையா என்பது நமக்கு உறுதியாகத் தெரியவில்லை.

BB Ultimate 62
BB Ultimate 62

பிக் பாஸ் தரும் டாஸ்குகளைத் தாண்டி தானும் ஒரு டாஸ்க்கை ரம்யாவிடம் தந்து விளையாடினார் நிரூப். “இந்த வீட்டில் மற்றவர்களுக்கு கண்ணாடியா நீ இருந்தா... யாருக்கு இருப்பே?” என்பது நிரூப்பின் கேள்வி. ‘பதில் சொல்லிடவா?' என்று காலாட்டிக் கொண்டே கேட்ட ரம்யா “இதுவே பிக் பாஸ் வீட்டு வெளிய நடந்தா. இதைப் பத்திலாமா நாம பேசுவோம்? இதெல்லாம் ஒரு கேள்வியாவா வந்திருக்கும்?..ன்னு நீ அடிக்கடி கேட்டுட்டே இருக்கே.. ஆனா நாம பிக் பாஸ் வீட்டுக்குள்ளதானே இருக்கோம்.. அதன்படி தானே நடந்தாகணும்” என்ற ரம்யா “இன்னொரு விஷயம் பொதுவா சொல்றேன். நட்பு, பாசம் ஆகியவற்றைத் தாண்டி அது கேமுக்குள்ள வரக்கூடாது. அந்தத் தெளிவு எல்லோருக்கும் இருக்கணும்” என்று முடித்தார்.

“இது 24 x 7 ஒளிபரப்பாகற ஷோ. மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்காங்க. அதனால ஒவ்வொரு விஷயத்தையும் நாமளே மறுபடி மறுபடி சொல்லி பதிவு செய்யத் தேவையில்லை. அவங்களா பார்த்து புரிஞ்சுப்பாங்க” என்பது நிரூப்பின் பதில் வாதம். ஆனால் ரம்யா சொல்வதில்தான் யதார்த்தம் உள்ளது. ‘எத பண்ணாலும் பிளான் பண்ணித்தான் பண்ணணும்’ என்கிற வடிவேலுவின் தத்துவம் ஏற்கெனவே வரலாற்றில் பதிவாகியுள்ளது.