Published:Updated:

BB Ultimate 67: `டாஸ்க்'-னாலே சேறு; கமென்ட்ரினாலே அனிதா; என்னதான் பிக் பாஸின் திட்டம்?!

BB Ultimate

BB Ultimate: இரண்டாவது சுற்று ஆரம்பித்தது. பாலாவும் நிரூப்பும் மீண்டும் களத்திற்கு வந்தார்கள். இவர்கள் முன்பு செய்த வன்முறையில் தெர்மகோல் பந்து உடைந்துவிட்டதால் ஜிம்மில் உபயோகப்படுத்தும் அழுத்தமான பிளாஸ்டிக் பந்தை கொண்டு வந்தார் பிக் பாஸ்.

Published:Updated:

BB Ultimate 67: `டாஸ்க்'-னாலே சேறு; கமென்ட்ரினாலே அனிதா; என்னதான் பிக் பாஸின் திட்டம்?!

BB Ultimate: இரண்டாவது சுற்று ஆரம்பித்தது. பாலாவும் நிரூப்பும் மீண்டும் களத்திற்கு வந்தார்கள். இவர்கள் முன்பு செய்த வன்முறையில் தெர்மகோல் பந்து உடைந்துவிட்டதால் ஜிம்மில் உபயோகப்படுத்தும் அழுத்தமான பிளாஸ்டிக் பந்தை கொண்டு வந்தார் பிக் பாஸ்.

BB Ultimate

உடல் வலிமை சார்ந்த சவால்கள் பெரிதும் இல்லாமலேயே சீசன் 5-ன் கடைசிப்பகுதி ஜாலியாக முடிந்துவிட்டது. ஆனால் அல்டிமேட்டில் கடைசி வாரத்திலும் போட்டியாளர்களை பெண்டு நிமிர்த்துகிறார் பிக் பாஸ். நேற்றைய எபிசோடில் இவர்கள் சேற்றில் உருண்டு பிரண்டதையே நீண்ட நேரம் காண வேண்டியிருந்தது. டிவி பெட்டியையும் தாண்டி சேறு வந்து மேலே விழுமோ என்று நமக்குத்தான் பதற்றமாக இருந்தது.

எபிசோட் 67-ல் நடந்தது என்ன?

காலையில் ஒலிக்கும் பாடலுக்கு முதல் ஆளாக ரம்யா எப்போதும் வந்து விடுவார். ஆனால் இப்போது காலில் அடிபட்டிருப்பதால் படுக்கையிலேயே இருந்தார். ‘காலை டாஸ்க்’ அறிவிப்பை கதா காலட்சேப பாணியில் இழுத்து இழுத்து வாசித்தார் அனிதா. பார்வையாளர்கள் ஹாட்ஸ்டார் ஆப்பில் வாக்களிப்பது மாதிரி, இறுதிப் போட்டியில் உள்ள ஆறு நபர்களும், இதர போட்டியாளர்களுக்கு பத்து வாக்குகளை பிரித்து வாக்களிக்க வேண்டுமாம். இந்த ஆட்டத்தை சிலர் நியாயமாக ஆடினார்கள். சிலர் போங்காட்டமாக மாற்றினார்கள்.

அனிதா, அபிநய்
அனிதா, அபிநய்

சக போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட ‘ஹாட்ஸ்டார்’ வாக்குகள்

முதலில் வந்த ஜூலி அபிராமிக்கு ஐந்து ஓட்டுக்களை அள்ளி வழங்கினார். காரணம் கேட்டால் பிரெண்டாம். விட்டால் பத்து கூட தருவாராம். ரம்யாவிற்கு இரண்டை வழங்கிய ஜூலி மற்றவர்களுக்கு தலா ஒன்று கொடுத்தார். அடுத்து வந்த ரம்யா, பாலாவிற்கும் நிரூப்பிற்கும் தலா 3 ஓட்டுக்கள் அளித்து தாமரைக்கு 2 அளித்து முடித்து விட்டார். அபிராமியையும் ஜூலியையும் அவர் கணக்கிலேயே எடுக்கவில்லை. “எது எடுத்தாலும் பத்து ரூபா” பொருட்கள் விற்கும் கடை மாதிரி, அனைவருக்கும் 2 ஓட்டுக்களை சரிசமமாக வழங்கி சமத்துவ சாதனை செய்தார் பாலா. ஒருவகையில் இது சேஃப் கேம். பாலா துணிச்சலாக ஆடியிருக்கலாம். தனது பாசப்பிள்ளைகளான பாலா மற்றும் நிரூப்பிற்கு தலா 4 ஓட்டுக்களை குத்திய தாமரை, ரம்யாவிற்கு 2 அளித்து ஆச்சரியப்படுத்தினார். இவரும் அபி மற்றும் ஜூலியை கணக்கில் எடுக்கவில்லை. அபிராமியின் சமத்துவப் பார்வை வேறு மாதிரியாக இருந்தது. பாலா மற்றும் ஜூலிக்கு தலா 5 ஓட்டுக்கள் அளித்து ஆட்டத்தை முடித்து விட்டார். மற்றவர்கள் அனைவரையும் அபிராமி கணக்கில் எடுக்காதது முறையல்ல. கடைசியாக வந்த நிரூப் தாமரையக்காவிற்கு 7 ஓட்டுக்களை மொத்தமாக அள்ளி வழங்கி மகிழ்ந்தார். ரம்யாவிற்கு 2 மற்றும் பாலாவிற்கு ஒன்றே ஒன்று. (நிரூப்பின் போங்காட்டம் இது!).

சேற்றில் உருண்டு பிரண்ட உக்கிரமான ஆட்டம்

அடுத்ததாக ஒரு புதிய டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இதை மட்டுமே வைத்து நேற்றைய எபிசோடை ஓட்டிவிட்டார்கள். ‘என் கிட்ட மோதாதே’ என்கிற இந்தச் சவாலில் சேற்றுப்பகுதியின் இரு முனைகளிலும் கோல் போஸ்ட்கள் இருக்கும். இருவர் களத்தில் இருப்பார்கள். தரப்பட்டிருக்கும் ஜிம் பந்தை இழுபறியாக தள்ளிச் சென்று கோல் போட வேண்டும். ‘யார், யாருடன் ஜோடி சேரலாம் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். பெண் போடடியாளர்களுக்கு அடிபடக்கூடாது என்பதற்காக பாலின அடிப்படையில் இந்த விளையாட்டை பிரித்தது நல்ல விஷயம். ஆண்கள், ஆண்களுடன் மட்டுமே மோத முடியும். போலவே பெண்களும். தனக்குப் பதிலாக விளையாடுவதற்கு அபிநய்யை தேர்வு செய்தார் ரம்யா. (ஷாரிக்கை இறக்கியிருக்கலாமோ?!).

அபிராமி, ஜூலி
அபிராமி, ஜூலி

முதலில் ஜூலி – அபிராமி ஜோடி மோதினார்கள். இதில் அபிராமி முன்னிலை வகித்தார். எதிர் கோல் போஸ்ட்டின் அருகே சென்று பந்தை சேர்த்து விட்டாலும் அதை கோலாக்க அபிராமியால் முடியவில்லை. கிராமத்து சந்தைகளில் கைகளின் மேல் துண்டை போட்டு மூடி பேரம் பேசுவது போல, நெடுநேரம் பந்தை முட்டுக் கொடுத்து இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். “இப்ப பந்து உடைஞ்சு உள்ளே இருந்து சுருதி வந்தா எப்படியிருக்கும்?” என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார் ஷாரிக். நீண்ட நேரமாக ஜூலி முட்டுக் கொடுத்ததால், கோல் போஸ்ட்டின் உள்ளே கால் சென்றாலே அது எதிராளிக்கு வெற்றி என்று விதியை திருத்தினார் பிக் பாஸ். இரட்டைப்பிள்ளைகள் மாதிரி ஒட்டியே நின்றிருந்த இந்த ஜோடி ஒரு கட்டத்தில் திமிறியெழுந்து ஆடியதில் எப்படியோ கோலை தள்ளி விட்டு வெற்றி பெற்றார் அபிராமி.

நிரூப், பாலா
நிரூப், பாலா

அடுத்ததாக பாலா – நிரூப் ஜோடி களத்தில் இறங்கியதும் எதிர்பார்ப்பு எகிறியது. இருவரும் கோயில் காளைகள் மாதிரி சேற்றை உழப்பியபோது அறை முழுவதும் சேறு சிதறியது. தங்கள் மீது பட்டு விடுமோ என்று பார்வையாளர்கள் பதறி ஒடுங்கினார்கள். “கதவைத் திறங்க பிக் பாஸ். நான் வெளியே போறேன்” என்று ஜாலியாகக் கதறினார் ஷாரிக். இதில் பாலாவே முன்னிலை வகித்தார். ஆனால் கோல் போஸ்ட்டிற்கு அருகே கொண்டு சென்றாலும் நிரூப்பைத் தாண்டி அவரால் செல்ல முடியவில்லை. பந்திற்கு ஷேவ் செய்வது போல அதன் மீதுள்ள சேற்றை வழித்து வழித்து போட்டுக்கொண்டே இருந்தார் நிரூப். இதுவும் இழுபறியாகவே சென்றது. ஒரு கட்டத்தில் திறமையாக திமிறிக்கொண்டு கோலாக மாற்றி அசத்தினார் பாலா. தன்னுடைய முரட்டு மீசையை டிரிம் செய்து ஆளும் இப்போது ஸ்மார்ட்டாக மாறியிருந்தார் பாலா.

"கமான் . ரம்யா.. கமான்’’ – அபிநய்க்கு கிடைத்த உற்சாக ஊக்கம்

அடுத்ததாக நிரூப் – அபிநய் ஜோடி களத்தில் இறங்கியது. ரம்யாவிற்குப் பதிலாக அபிநய் ஆடுவதால் அபிநய்யையே "ரம்யா.. கமான். ரம்யா..” என்று அழைத்து கலாட்டா செய்து கொண்டிருந்தார் ஷாரிக். மற்றவர்களும் இந்தக் கிண்டலை பின்பற்றினார்கள். இந்தச் சுற்றில் நிரூப் முன்னிலை வகித்தாலும் அதே கதைதான். கோல் போஸ்ட் அருகே ஆட்டம் இழுபறியாக உறைந்து நின்றது. சிலேட்டு மாதிரியான அகலமான கைகளைக் கொண்ட நிரூப்பின் பலம் காரணமாக, தெர்மகோல் பந்து சிதைந்தது. அபிநய் திறமையாக தாக்குப் பிடித்தாலும் ஒரு கட்டத்தில் கோலாக மாற்றி விட்டார் நிரூப். அடுத்த சுற்றில் ஜூலியும் தாமரையும் மோதினார்கள். பாலாவைப் போலவே தாமரையும் டாஸ்க் என்று வந்துவிட்டால் உக்கிரமாகிவிடுவார். எனவே இந்த ரவுண்டில் தாமரை வெற்றி.

அபிநய், நிரூப்
அபிநய், நிரூப்

இரண்டாவது சுற்று ஆரம்பித்தது. பாலாவும் நிரூப்பும் மீண்டும் களத்திற்கு வந்தார்கள். இவர்கள் முன்பு செய்த வன்முறையில் தெர்மகோல் பந்து உடைந்துவிட்டதால் ஜிம்மில் உபயோகப்படுத்தும் அழுத்தமான பிளாஸ்டிக் பந்தை கொண்டு வந்தார் பிக் பாஸ். ஆனால் இது எப்போது வெடித்து சிதறுமோ என்று சுற்றியுள்ளவர்கள் நடுங்கிக்கொண்டே இருந்தார்கள். தனது கிங்காங் கைகளினால் பந்தை வளைத்துப் பிடித்துக் கொண்டார் நிரூப். எனவே பாலா முட்டி நிற்க வேண்டியிருந்தது. பந்து கோல் போஸ்ட் முனையில் வெளியே சென்று விட்டதால் “கார்னர்.. கார்னர்’ என்று கத்திய ஷாரிக், “நடுவுல பந்தை வெச்சு மறுபடியும் ஆடுங்க” என்று சொல்ல பாலா கடுப்பாகி விட்டார். “புதுசா.. புதுசா. ரூல் போட்டா என்ன அர்த்தம்?” என்று அவர் கோபித்துக் கொண்டது நியாயம். அத்தனை சிரமப்பட்டு பந்தை நகர்த்திக் கொண்டு வந்த பிறகு மறுபடியும் சென்ட்டரில் சென்று ஆடுவது சிரமம்தான். நிரூப்பின் மல்லுக்கட்டலை முறியடித்து திமிறிக் கொண்டு பாலா செல்ல, கோல்போஸ்ட்டே உடைந்து மல்லாக்க சாய்ந்தது. உலகத்திலேயே போஸ்ட்டை பப்பரப்பே என்று படுக்க வைத்த கோணத்தில் கோல் போட்ட ஒரே பெருமை பாலாவைத்தான் சேரும்

சேற்றில் மலர்ந்த செந்தாமரை – அனிதாவின் டைமிங் கமென்ட்ரி

அடுத்ததாக அபிராமியும் தாமரையும் மோதினார்கள். இப்போது குறுக்கே வந்தார் பிக் பாஸ். அதென்னமோ அனிதா மீது மட்டும் தனியான காண்டுடன் இருக்கிறார் பிக் பாஸ். எனவே “அனிதா.. சும்மாதானே இருக்கீங்க. கமென்ட்ரி பண்ணலாமே?” என்று உசுப்பி விட்டார். எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகிற கதையாக இது ஆகிவிட்டது. ‘தொண தொணவென்று’ அனிதா தந்த கமெண்ட்ரியைக் கேட்கப் பொறுக்காமல் “இதுக்கு கமென்ட்ரி இல்லாமலே நல்லாத்தான் இருந்தது” என்று நிரூப் அடித்த கமெண்ட் நன்றாக இருந்தது.

“தாமரை மூஞ்சுல ஒரு கொலைவெறி தெரியுது” என்று நிரூப் சொன்னது உண்மைதான். அபிராமியைத் தாண்டி எப்படியாவது பந்தை கோலாக மாற்றி விட வேண்டும் என்று ஆவேசமாக செயல்பட்டார் தாமரை. அனிதாவின் கமெண்ட்ரி தொணதொணப்பாக இருந்தாலும் “சேற்றில் செந்தாமரை மலரும் என்பார்கள். அது போல சேற்றில் தாமரை சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்’ என்று சொன்ன டைமிங் வசனம் நன்று. தாமரையின் கண்களில் சேறு பட்டு திணறினார். அபிராமியைத் தாண்டி அவரால் செல்ல முடியாததால் “பந்தை தூக்கிட்டே இருந்தா எப்படி விளையாடறது?” என்று கோபித்துக் கொண்டு ஆட்டத்தை விட்டு விலக அபிராமி கோல் போட்டு வெற்றியை அடைந்தார்.

தாமரை
தாமரை

ஆக.. இரண்டு சுற்றாக நடந்த இந்த விளையாட்டில் ஆண்கள் பிரிவில் பாலாவும் பெண்கள் பிரிவில் அபிராமியும் வெற்றி பெற்றார்கள். தாமரை செய்த செயலைப் பற்றி அபிநய்யிடம் அனத்திக் கொண்டிருந்தார் அபிராமி. “சரி.. விடுங்க. சில பேர் ஜெயிக்கறதுக்காக.. விளையாடுவாங்க.. சில பேர் ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்துவாங்க. அவங்க விட்டுக் கொடுத்து உங்க வெற்றி கிடைக்கலை” என்று ஆறுதல் சொன்னார் அபிநய்.

“எனது சிந்தனைதான் எனது வாழ்க்கை" – அனிதானந்தாவின் தத்துவ மழை

கொடூரமான இந்த சேற்றுப்பந்து டாஸ்க் முடிந்ததும் பாலாவும் அனிதாவும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அனிதா ஆட்டத்தில் இல்லை என்பதால் பாலாவின் முகத்தில் ஒரே புன்னகையும் நமட்டுச் சிரிப்பும் தெரிந்தது. “அபியையும் ஜூலியையும் ஃபைனலுக்கு கூட்டிட்டு போவேன்னு நீ ரெண்டாவது வாரத்திலேயே சொன்னே.. அது நடந்துச்சு. பார்த்தியா.. ஆனா நிரூப்பை நான் கூட்டிட்டு வரலை. இந்த ரெண்டு வாரமா அவனாத்தான் விளையாடறான்..” என்று டிசைன் டிசைனாக அனிதா சொன்ன லாஜிக்கையெல்லாம் சிரிப்புடன் மறுத்துக் கொண்டிருந்தார் பாலா.

வாழ்க்கையில் நிகழும் விஷயங்கள் குறித்து ஒருவர் யோசிப்பது இயல்பான விஷயம்தான்; அவசியமும்கூட. ஆனால் யோசிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டால் அது அனிதாவைப் போல் ஓவர் டோஸாக மாறிவிடும். அந்த அளவிற்கு தேவையில்லாத ஆணிகளாக சிந்தனைகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்.