Published:Updated:

BB Ultimate - 8: வெளியேறிய சுரேஷ்; காபி விவகாரத்தில் சாட்டை சுழற்றிய கமல்!

BB Ultimate

“யாராவது வம்பிழுத்தாதான் நான் கோபப்படுவேன். மத்தபடி ஜாலியாத்தான் இருப்பேன். மத்தவங்க குணத்தை எனக்கு கணிக்கத் தெரியும்” - தாமரை

Published:Updated:

BB Ultimate - 8: வெளியேறிய சுரேஷ்; காபி விவகாரத்தில் சாட்டை சுழற்றிய கமல்!

“யாராவது வம்பிழுத்தாதான் நான் கோபப்படுவேன். மத்தபடி ஜாலியாத்தான் இருப்பேன். மத்தவங்க குணத்தை எனக்கு கணிக்கத் தெரியும்” - தாமரை

BB Ultimate

சுரேஷ் வெளியேற்றப்பட்டார். காஃபித்தூள் பாட்டில் இடைவெளியில் வனிதா காப்பாற்றப்பட்டார். ‘என்னடா.. இது.. முதல் பென்ச் மாணவர்களையெல்லாம் வெளியே அனுப்பி மக்கள் டிவிஸ்ட் தர்றாங்க, இது வித்தியாசமான சீசனா இருக்கும் போலயே?’ என்று இதர போட்டியாளர்கள் திகைத்துப் போனார்கள். “என்னுடைய பழைய இமேஜ் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று மேடையில் கமலிடம் எலிமினேஷன் காரணத்தைச் சொன்னார் சுரேஷ். அதையே வழிமொழிந்த கமல் “கடந்த சீசன்களை வெச்சு இவங்க ஜாதகத்தை எழுதாதீங்க. இது வேற பிறவி. பிக்பாஸ் அல்டிமேட். அதைப் பார்த்து மார்க் போடுங்க” என்று பார்வையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

அல்டிமேட் சீசன் முதல் வாரத்தின் கமல் விசாரணை நாளில் அவருடைய அதிரடியான ‘ஒன்லைனர்கள்’ அருமையாக வெளிப்பட்டன. “வார்ம்அப் பண்ணும் போது காஃபி சாப்பிடாதீங்க. சிந்திடும்” முதற்கொண்டு “புதுசா கல்யாணம் ஆனவரு. கிச்சன்லதான் அதிகம் இருப்பாரு” என்று சிநேகனை கிண்டலடித்தது முதல் ஒரே ரகளைதான். ஆள் மட்டுமல்ல, பேச்சும் படு ஸ்மார்ட்டாக இருந்தது.

எபிசோட் 8, நாள் 7-ல் நடந்தது என்ன?

கமல் வரும் எபிசோடை எதிர்கொள்வதற்காக போட்டியாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் நான்தான் போவேன்” என்று ஆரம்பத்திலேயே சரியாக கணித்து விட்டார் சுரேஷ். “ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்று மற்றவர்கள் சம்பிரதாயமாக ஆதங்கப்பட்டார்கள். சுஜாவின் உருக்கமான வேண்டுகோளின்படி அவருடைய ‘மகனின்’ புகைப்படம் கிடைத்ததால் அம்மணி மகிழ்ச்சியாக இருந்தார். “பிக்பாஸ் டைட்டில் மியூசிக்கை கேட்டாலே வயித்துக்குள்ள ஒரு மாதிரி பயத்தோட பட்டாம்பூச்சி பறக்குதுல்ல?” என்று அபிராமியிடம் பரவசப்பட்டுக் கொண்டிருந்தார் சுஜா. “Looking nice” என்று நிரூப்பின் தோற்றத்தைப் பாராட்டிக் கொண்டிருந்தார் அபிராமி. (எதிர்பாராததை எதிர்பாருங்கள்!).

“யாராவது வம்பிழுத்தாதான் நான் கோபப்படுவேன். மத்தபடி ஜாலியாத்தான் இருப்பேன். மத்தவங்க குணத்தை எனக்கு கணிக்கத் தெரியும்” என்று தன்னைப் பற்றி தானே தாமரை வர்ணித்துக் கொண்டிருக்க “அவ்ளதான்… அதுதான் ஸ்ட்ராட்டஜி” என்று தாமரையைப் பாராட்டினார் சுரேஷ்.

கமல்
கமல்

கமல் என்ட்ரி. ஸ்டைலாக துள்ளிக்குதித்து அரங்கத்தினுள் நுழைந்தார் கமல். அவர் அணிந்திருந்த அவுட்ஃ.பிட் அட்டகாசமாக இருந்தது. போலவே அரங்கத்தின் பின்னணி, இருக்கை உள்ளிட்ட வடிவமைப்பும் வசீகரமாக இருந்தது. “ஏதோ 50 வது நாள் வந்துட்ட மாதிரி போட்டியாளர்கள் பின்னியெடுக்கறாங்க. முதல் பால்லயே சிக்ஸர் அடிக்கறாங்க” என்று அல்டிமேட் பயணத்தின் அசுர வேகத்தை சிலாகித்தபடியே அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்தார்.

கமல் வரும் போதே காஃபிக் கோப்பையை கையில் ஏந்தியபடி வந்து அமர, மக்களுக்கு அதன் குறும்பு புரிந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். வனிதாவின் முகம் அஷ்டகோணலாக மாறியது. “இதை நான் எதிர்பார்த்தேன்” என்றார் சுரேஷ். வனிதாதான் கமலின் முதல் டார்கெட் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. என்றாலும் வந்தவுடனே வம்பிழுக்க வேண்டாமே என்று ஷாரிக் கேப்டன் ஆனதை சம்பிரதாயமாக பாராட்டி விட்டு “முதல் வாரம் எப்படி இருந்தது?” என்று பொதுவாக விசாரித்தார். “ஐம்பது நாள் ஆன மாதிரி இருந்தது” என்று ஷாரிக் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு “நான் வெளியே சொன்னதை ஒட்டுக் கேட்டீங்களா?” என்று சிரித்தார் கமல். “ரோலர்கோஸ்டர் பயணம் மாதிரி இருக்குது. இங்க எல்லோருக்கும் விளையாடத் தெரியும். சுவாரசியமா இருக்கு” என்றார் பாலா. “லாரியும் கன்டெயினரும் வர்ற ஃபுல் டிராபிக் ரோட்ல வண்டியோட்ற மாதிரி இருக்கு சார். நான் சைக்கிள்ல வர்றதால சந்து பொந்துல பூந்து தப்பிடச்சிடறேன்” என்று சிரித்தார் பாலாஜி.

வனிதாவிற்காக பின்னப்பட்ட சிலந்தி வலை

‘ஓகே.. காஃபித்தூள் வனிதாவை முதல்ல கவனிப்போம்’ என்று முடிவு செய்து கொண்ட கமல் “கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் பிக்பாஸ் திருப்பி வாங்க மாட்டார்ன்னு உங்களுக்குத் தெரியாதா? எந்த சீசன்லயும் அது நடக்கலையே? அப்புறம் டீத்தூளை அவர் திரும்ப வாங்கிட்டார்ன்னு எப்படி நம்பினீங்க?” என்று இதர போட்டியாளர்களை முதலில் ஒரு பிடி பிடித்தார். அப்போதே வனிதாவின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. “நான் அப்பவே சொன்னேன் சார்.. ஆனா..” என்று நிரூப் இழுத்தார். “வனிதாக்கா டிகாக்ஷனை ஸ்ட்ராங்கா போட்டு சொன்னதால நாங்க நம்பிட்டோம்” என்று பரிதாபமாக சொன்னார் ஷாரிக்.

“வந்த காஃபித்தூளை ரேஷன் செஞ்சு பகிர்ந்திருக்கலாம். நீங்க ரேஷனலா சிந்திச்சிருக்கணும்” என்று ரைமிங்கில் அடித்த கமல் “பிக்பாஸ் எவ்ள பெரிய மனுஷன்?! அவரை ஏதோ ரூம் சர்வீஸ் மாதிரி ஆர்டர் போடறீங்க. இது உங்க வீடு. நீங்கதான் பார்த்துக்கணும்” என்று சொன்னவுடன் “வனிதாக்கான்னா எல்லோருக்கும் ஒரு சின்ன பயம் இருக்கு சார்” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் சிநேகன். மற்றவர்களை அதட்டுவதின் மூலமே வனிதாவிற்கு ஜெர்க் தந்த கமல், பிறகு நேரடியாகவே வனிதாவிடம் வந்து “உங்க தைரியமும் புரட்சியும் பிடிச்சிருக்கு. ஆனா அதை பெரிய விஷயங்களுக்கு பயன்படுத்துங்க. காஃபில்லாம் சின்ன மேட்டர்” என்று அட்வைஸ் செய்ய “இது டிரைய்லர்தான் சார். மெயின் பிக்சர் இனிமேதான்” என்று கமலுக்கே டஃப் பைட் கொடுத்தார் வனிதா. “ஓ.. பிக்பாஸ் கிட்ட கிள்ளி விளையாடினீங்களா… ரொம்ப அழுத்தமா கிள்ளிட்டீங்க போல” என்று சர்காஸத்தில் ஒருபடி மேலே தாண்டினார் கமல்.

வனிதா
வனிதா

பிறகு வனிதாவிற்கு சுடச்சுட காஃபி வரவழைத்துத் தந்த கமல் “இந்த விவகாரத்தை நிரூப் சரியாக தட்டிக் கேட்டார். அதனால்தானோ என்னமோ.. அவர் SAVED” என்று அறிவிக்க நிரூப் மகிழ்ச்சியடைந்தார். (அபிராமியும்தான் துணிச்சலா தட்டிக் கேட்டாங்க?! அவங்களையும் ஒரு வார்த்தை பாராட்டியிருக்கலாம்). தனக்கு காஃபி கிடைக்கவில்லையென்பதால் டீத்தூளை பதுக்கிய வனிதாவை ஜாலியாக வறுத்தெடுத்த கமல், ஓர் இடைவெளி விட்டுச் சென்றதும் “வனிதா அக்காவிற்கு காஃபி வேணும்னு தமிழ்நாட்டு மக்களே போராடியிருக்காங்க. அதனாலதான் காஃ.பி உள்ளே வந்திருக்கு” என்று வனிதா கெத்தாக சொன்னதும் பார்வையாளர்களில் பலர் கா.ஃபி சாப்பிடும் பழக்கத்தை அந்த நொடியிலேயே தியாகம் செய்ய முடிவு செய்திருப்பார்கள். (என்னாவொரு வில்லத்தனம்?!).

‘கேப்டன் ஷாரிக் சரியாக செயல்பட்டாரா?’

மீண்டும் அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “இளமைக்கு தலைமை” என்கிற விஷயம் பிக்பாஸ் வீட்டில் ஷாரிக்கின் வழியாக நடந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஷாரிக்கும் அதற்காக சந்தோஷப்பட்டு புன்னகைத்து முடிப்பதற்குள் அவர் மீது ஏராளமான அம்புகள் வீசப்பட்டன. ‘காஃபித்தூள் கலக விவகாரம் முதல் பல விஷயங்களை கேப்டன் ஷாரிக் சரியாக கையாளவில்லை’ என்பதற்கான காரணங்களை வரிசையாக அடுக்கிய கமல் “நீங்க மத்தவங்களுக்கு மதிப்பெண்களை வாரி வழங்கிட்டீங்க. இப்ப உங்களுக்கு மத்தவங்க மார்க் போடப் போறாங்க” என்று அறிவித்து “காப்பியடிச்சு மார்க் போடாம உங்க அபிப்ராயத்தை தைரியமா சொல்லுங்க. இது வரப் போகிற கேப்டனுகளுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க வேண்டும்” என்று இதர போட்டியாளர்களுக்கு கறாராக வலியுறுத்தியதால் மக்கள் இறங்கி ஆட முடிவு செய்தார்கள்.

ஐந்தில் ஆரம்பித்த மதிப்பெண் மூன்றாகக் குறைந்து மைனஸில் போய் விடும் போல் இருந்தது. “கேப்டன் பதவி அவருக்கு எளிதாக கிடைத்து விட்டது. அவரே முதலில் ஒழுங்காக வேலை செய்யவில்லை. மற்றவர்களை கறாராக வழிநடத்தவில்லை. ஜாலியாக விட்டுவிட்டார். குருவி தலையில் பனங்காய்’ என்று பல காரணங்கள் சொல்லப்பட்டுக் கொண்டே வந்த போது அதற்கேற்ப ஷாரிக்கின் முகமும் இறுகிக் கொண்டே வந்தது. கமல் எச்சரிக்கை தந்ததால் மக்கள் மதிப்பெண் அளிப்பதில் கறார் காட்டினார்கள் போல. இதை முதலில் உடைத்தவர் நிரூப். “முதலில் ஷாரிக்கை பாராட்டியவர்கள் எல்லாம் இப்ப மாத்திப் பேசறாங்க.. சார்” என்று ஷாரிக்கை ஆதரித்து ஏழு மதிப்பெண்களை அளித்தார். அனிதாவும் இதை வழிமொழிந்தார். “தம்பி. தங்கக் கம்பி” என்று எட்டு மதிப்பெண்களை அளித்தார் தாமரை. இருப்பதிலேயே அதிக மதிப்பெண்ணை அளித்தவர் வனிதாதான். “காஃபித் தூள் மேட்டரைக் கூட அவர் ஸ்ட்ராங்காதான் ஹேண்டில் பண்ணாரு.” என்று வனிதா சான்றிதழ் தரவும் அப்போதுதான் ஷாரிக்கின் முகத்தில் சிறிது சிரிப்பு வந்தது.

ஸ்ருதி
ஸ்ருதி

“நான் ஸ்டிரிக்ட்டா மார்க் போடச் சொன்னதால நீங்க போட வேண்டாம். இப்பக்கூட மாத்திக்கலாம்” என்று கமல் சொல்ல “நாங்களும் பிக்பாஸ் மாதிரிதான். கொடுத்த பொருளை வாங்க மாட்டோம்” என்பது போல் மக்கள் அமைதியாக இருந்தார்கள். “எல்லோரையும் சந்தோஷமா வெச்சுக்க முடியாது. ஒரு தலைமை கண்டிப்பா இருக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பு காட்டியே ஆகணும்” என்று கமல் சொன்ன கமெண்ட் சிறப்பு.

ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பிய கமல், அடுத்ததாக ‘பிரெஸ் மீட்’ டாஸ்க்கிற்கு வந்தார். “ஒரு நெருக்கடியான கேள்வியை நகைச்சுவையின் மூலமாக கூட சமாளிக்கலாம்” என்ற கமல் தாமரையின் ‘பழனி பாதயாத்திரை’ உதாரணத்தைச் சொல்ல சபை சிரித்தது. ‘தர்க்கத்தை விடவும் தற்காப்பு நன்றாக இருந்தது” என்று அபிராமியின் பேச்சுத்திறமையைப் பாராட்டிய கமல் ‘நிருபர் பணியை சிறப்பாகச் செய்த அனிதாவையும் பாராட்டினார். கூடவே ‘அனிதா SAVED’ என்று சொல்ல அம்மணிக்கு மகிழ்ச்சி.

மீண்டும் பிரெஸ் மீட் கேள்விகள் (Fresh Meet)

“ஓகே.. சில காரணங்களினால் பிரெஸ் மீட்டில் நீங்கள் கேட்காமல் விட்ட கேள்வியை இப்போது கேட்கலாம்” என்று கமல் அறிவிக்க சுஜாவை அழைத்த பாலா “சுரேஷ்.. உங்க குடும்ப உறவுக்காரர்” என்று ஆரம்பிக்க ‘அப்படியா?’ என்று நமக்கே ஒரு சின்ன ஜெர்க் ஏற்பட்டது. “இந்த உறவு இந்த விளையாட்டில் பிரதிபலிக்குமா?” என்று பாலாஜி கறாராக கேட்க “இதுவொரு நல்ல கேள்வி. உங்க நேர்மையைப் பாராட்டறேன் தம்பி..” என்று ஆரம்பித்து ‘அப்படியெல்லாம் நான் நடந்துக்க மாட்டேன். விளையாட்டு வேற. உறவுமுறை வேற. எனக்கு கப்பு முக்கியம்’ என்னும் விஷயத்தை மூச்சு வாங்க சுற்றி வளைத்து சுஜா விளக்கி முடித்த போது கடிகாரம் தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்து நின்றது.

“வனிதாவை யாரும் கேள்வி கேட்க மாட்டீங்களா?” என்று கமல் ஜாலியாக கோர்த்து விட “எல்லாப் பதிலையும் நான் முன்னாடியே சொல்லிடுவேன் சார்” என்று ‘Child Prodigy’ போன்ற பெருமித முகத்துடன் கமலுக்கும் பதில் சொன்னார் வனிதா. என்றாலும் கமலே உசுப்பி விட்டதால் பாலா களத்தில் இறங்கினார். “டாஸ்க்கிற்கு வர மாட்டீங்க.. விதிகளையும் பின்பற்ற மாட்டீங்க. அப்புறம் எப்படி இந்த விளையாட்டில் ஜெயிப்பீங்க?” என்று சரியான கேள்வியை முன்வைக்க “எனக்குப் பிடிக்காத விஷயத்தை நான் எப்போதும் செய்ய மாட்டேன். அது என் இயல்பு. வீட்டிற்கு வெளியேயும் நான் அப்படித்தான். டைனிங் டேபிள் டாஸ்க்ல வந்த கேள்விகள் சிலது எனக்குப் பிடிக்கலை. அதனால வெளியே போயிட்டேன். சினிமால கூட ‘நல்ல சம்பளம் தர்றேன்”ன்னு சொல்லி என் மனதிற்கு விருப்பமில்லாத பாத்திரங்களைச் சொல்வாங்க. நான் மறுத்துடுவேன்” என்ற வனிதா “உங்களையெல்லாம் விட நான் சீனியர். மூணாவது முறையா பிக்பாஸ் வீட்டிற்குள்ள வந்திருக்கேன். Physical / Mental task எதுவா இருந்தாலும் உங்களுக்கு சமமா ஆடக்கூடிய தெம்பு எனக்கு இருக்கு” என்று சுஜாவை விடவும் நீளமாகப் பேச “அடுத்த முறை நான் வாட்சைப் பார்ப்பேன்” என்று ஜாலியாக எச்சரித்தார் கமல்.

சுஜா , நிரூப், தாமரை
சுஜா , நிரூப், தாமரை

“உங்களைப் பார்த்து ஏன் மத்தவங்க பயப்படறாங்க?” என்று வனிதாவிடம் பயமில்லாமல் கேட்டார் சுஜா. “அதுல உண்மையில்லை. நான் யாரையும் ஹார்ஷ்ஷா பேசினதில்ல (எதே?!) எனக்கு கூட சிலரைப் பார்த்து உள்ள பயம் இருக்கலாம். அதை மரியாதைன்னும் சொல்லலாம்” என்று சுற்றி வளைத்து சொல்ல ‘அடேங்கப்பா’ என்பது மாதிரி பார்த்தார் கமல். “எனக்கெல்லாம் உங்களைப் பார்த்தா பயம் கிடையாது. அந்த லிஸ்ட்ல நான் இல்லை” என்று வனிதாவிடம் கெத்தாக மறுத்த தாமரை, “பாம்பு. பேய்-ன்னாதான் எனக்குப் பயம்” என்று கூடுதலாக ஒரு நகைச்சுவை இணைப்பைப் போட சபை சிரித்தது. (இந்தம்மாவிற்கு ஒரு பாயசத்தைப் போட்ற வேண்டியதுதான்! – வனிதாக்கா மை.வா).

“பதில்களை சீக்கிரம் முடிங்க. என் வாட்சல பன்னிரெண்டுக்கு மேல நம்பர் இல்ல” என்று கிண்டலடித்த கமல், “அவ்வளவுதானா கேள்விகள்?.... வனிதாவைப் பார்த்து பயமா? இல்லைன்னா.. டயமாயிடும்னு பயமா? இரண்டாவது பயம்னா அது நியாயம்” என்று நையாண்டியில் பின்னியெடுத்தார். அடுத்ததாக, “நாமினேட் ஆனவங்கள்லாம் தனியா உக்காருங்க” என்று அமர வைத்த கமல், QR Code மூலம் அவர்களின் ஐ.டி. கார்டை பரிசோதிக்க, சிநேகனுக்கு மட்டுமே ‘பச்சை சிக்னல்’ கிடைத்தது. எனில் அவர் காப்பாற்றப்பட்டார் என்று பொருள்.

பிக்பாஸ் விருதுகளும் சர்ச்சைகளும்

அடுத்ததாக ‘பிக்பாஸ் விருதுகள்’ பஞ்சாயத்திற்கு வந்தார் கமல். “விருதுகள் வாங்குபவராலும் பெருமையடைகின்றன. ‘பட்டங்கள்’ தருவதில் எனக்கு விருப்பமில்லை. நமக்கு விருப்பமில்லாத பட்டத்தை ‘பட்டம்’ மாதிரி பறக்க விட்டு விட வேண்டியதுதான். அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை” என்று சொன்ன கமல், அதற்காக சொன்ன ஓர் உதாரணச் சம்பவம் சுவாரசியமாக இருந்தது. “கவிஞர் வாலி சிறுவனாக இருந்த போது ஓவியம் வரைவதில் ஆர்வமுடையவராக இருந்தாராம். ஒருமுறை ராஜாஜி அவருடைய ஊருக்கு வந்திருந்த போது, தான் வரைந்திருந்த ராஜாஜியின் சித்திரத்தை கூட்டத்தில் முட்டி மோதி சென்று காட்டி கையெழுத்து கேட்டாராம். ஓவியத்தில் ‘குத்துசாமி’ என்று கையொப்பம் இடப்பட்டிருந்ததாம். “என்னாங்க. இது உங்க பேர் இல்லையே?” என்று வாலி, ராஜாஜியிடம் கேட்க “ஆமாப்பா.. இது என்னோட ஓவியமும் இல்லையே?” என்று நையாண்டியாக பதில் தந்தாராம் ராஜாஜி.

“ஓகே.. உங்களுக்கு தரப்பட்ட விருது, பொருத்தமில்லை என்று கருதினால் அதை வேறு யாருக்காவது தரலாம்” என்கிற வாய்ப்பை போட்டியாளர்களுக்குத் தந்தார் கமல். சங்கடத்துடன் எழுந்த சுருதி “தூங்கறது. சாப்பிடறது.. எல்லோரும் செய்யற விஷயம். சுத்தம், சுத்தமா ஆகாது’ விருதை மூணு பேர் மட்டும்தான் தந்திருக்காங்க. அப்படின்னா மத்தவங்க என்னை ஏத்துட்டு இருக்காங்கன்னுதான் பொருள்” என்று சொல்ல “பாத்திரங்களை சரியாக கழுவாத காரணத்தினால் சுருதிக்கு அந்த விருது தரப்பட்டது” என்று வாக்களித்தவர்களில் ஒருவரான சிநேகன் விளக்கம் அளித்தார்.

ஷாரிக்
ஷாரிக்

“இது உலக நடிப்புடா சாமி’ விருதைப் பற்றி அங்கலாய்த்த தாமரை “இந்த வீட்ல இருக்க நடிப்புத் தேவையில்லைங்கய்யா” என்று கமலிடம் முறையிட்டார். அதாவது “தெரிஞ்ச விஷயத்தை தெரியாத மாதிரி கேட்கறதுதான் நடிப்பு. அது தாமரைக்கு நிச்சயமாவே தெரியாது” என்று குத்தலான நகைச்சுவையில் கிண்டலடித்தார் கமல். தனக்கு தரப்பட்ட ‘ஃபேஸ்மெண்ட் வீக்’ பட்டத்தை ஷாரிக்கிற்கு தந்து மகிழ்ந்தார் அபிநய். “சுருதியைப் பத்தி வீட்ல இருக்கிற சிலர் புகார் சொல்லலாம். ஆனா மக்கள் அவங்களைக் காப்பாத்திட்டாங்க” என்று சுருதி ‘SAVED’ விஷயத்தை இடையில் சொன்னார் கமல்.

அடுத்ததாக ‘பிக்பாஸ் வீட்டில் காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு’ என்கிற விளையாட்டு நடந்தது. போட்டோ ஸ்டூடியோவில் எடுத்துத் தரும் பிரிண்ட் மாதிரி சிநேகனின் பாஸ்போர்ட் போட்டோ வரிசையாக வந்து கொண்டேயிருந்தது. இதற்கு அடுத்த வரிசையில் அதிகமாக இடம் பெற்றவர் ஜூலி. பாலா, நிரூப், தாமரை ஆகியோரின் புகைப்படமும் வந்தது. அபிநய்யின் புகைப்படங்கள் இரண்டு வந்தன. “ஓகே.. பார்த்து விளையாடுங்க” என்று அறிவுறுத்திய கமல், அடுத்ததாக ஜூலி காப்பாற்றப்பட்ட தகவலைச் சொன்னார்.

வனிதாவின் முகத்தில் காஃபித்தூள் கறை

ஆக நாமினேஷன் வரிசையில் எஞ்சியிருந்தவர்கள் வனிதா மற்றும் சுரேஷ். வனிதாவிடம் மீண்டும் வம்பிழுக்கலாம் என்று முடிவு செய்து கொண்ட கமல் அதற்காக ஆடிய ஆட்டம் சுவாரசியமானது. “முதல் வாரத்துல எலிமினேஷன் இருக்காதுன்னு எப்படி சரியா கணிச்சீங்க? உங்க பேரை ‘கணிதா’ன்னு மாத்திடலாம். வேற என்னெல்லாம் யூகிச்சிங்க? சொல்லுங்களேன்.. நானும் கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சக்கறேன்” என்று பாராட்ட, அது தனக்காக விரிக்கப்பட்ட வலை என்பதை உணராத வனிதா “அது என் ஞானதிருஷ்டி சார்” என்று பெருமிதமாகச் சொல்ல, ‘ஹைய்யா.. எலிமினேஷன் இல்லை.. போல’ என்று மற்றவர்களும் மகிழ்ந்தார்கள்.

ஆனால் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று சொல்லியபடியே இடுப்பில் வைத்திருந்த எலிமினேஷன் கார்டை கமல் உருவ, அனைவரின் முகங்களிலும் அதிர்ச்சி. வனிதாவின் முகத்தில் காஃபித்தூள் கறை அப்பட்டமாகத் தெரிந்தது. வந்த கார்டில் ‘சுரேஷ்’ என்கிற பெயர் இருக்க, அனைவரும் திகைப்படைந்தார்கள். ‘சுமாரா ஆடற நம்மளை விட்டுட்டு இவரை அனுப்பறாங்களே?!” என்பதை சொல்லாமல் சொல்லியது அவர்களின் திகிலான முகங்கள். “எனக்கு முன்னமே தெரியும். அதான் காலைலயே சொன்னேன்” என்றபடி இயல்பாக கிளம்பினார் சுரேஷ். அனைவருமே பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பதால் ‘அழுகாச்சி சீன்’ எல்லாம் இல்லை.

வனிதா
வனிதா

“உங்க தலைமைப் பொறுப்பை யாரிடமாவது ஒப்படைச்சு போங்க” என்று அறிவுறுத்திய பிக்பாஸ், கரன்ஸியை வெளியில் கொண்டு வரச் சொல்லி கறார் காட்டினார். சிநேகனிடம் தலைவர் பதவியை ஒப்படைத்த சுரேஷ், அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டார். “ஸாரி.. தாத்தா’ என்று வந்த பாலாவிடம் “உன் மேல கோபம் இல்ல. வருத்தம் கூட இல்ல. பரிதாபமா இருக்கு.. புரிஞ்சிக்கிட்டு விளையாடு” என்று அட்வைஸ் செய்தார். மற்றவர்கள் சுரேஷை நெருக்கமாக நின்று வழியனுப்ப, அனிதா மட்டும் சற்று தொலைவிலேயே நின்றார். எனில் சுரேஷின் எலிமினேஷனில் அனிதாவிற்கு உள்ளூற மகிழ்ச்சி என்றே அர்த்தம். சுரேஷ் வெளியேறிய பிறகு “இந்த மக்கள் என்னாத்த கவனிச்சு ஓட்டுப் போடறாங்க?” என்று ஒட்டுமொத்த பிக் பாஸ் பார்வையாளர்களையும் இடது கையால் ஹாண்டில் செய்தார் வனிதா. “நீங்க மட்டும் போயிருந்தா.. நான் ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன்” என்று வனிதாவிடம் திடீர் பாசம் காட்டினார் தாமரை.

ஒரு பரிசு... ஒரு வெடிகுண்டு...

“நீங்க தந்துட்டு போன உப்புமா ஆர்றதுக்குள்ளே திரும்பி வந்துட்டீங்களே?” என்கிற நையாண்டியான கமெண்ட்டுடன் சுரேஷை மேடையில் வரவேற்றார் கமல். “என்னோட எலிமினேஷன், நீங்க காஃபி தரப் போறது.ன்னு பல விஷயங்களை நான் முன்னாடியே யூகிச்சுட்டேன்” என்ற சுரேஷிடம் “நான் எப்ப வேணா போயிடுவேன்னு நீங்க சொன்னது ஒருவேளை காரணமா இருக்குமோ.. உங்க ஆசையை மக்கள் நிறைவேத்தி வெச்சிட்டாங்களோ.. மோசமானவங்க அவிய்ங்க.” என்கிற மாதிரி கமல் சொல்ல “போட்டியாளர்களின் பழைய இமேஜ்ஜை மக்கள் மறக்கலையோ. என்னமோ” என்று காரணம் கண்டுபிடித்தார் சுரேஷ். இருக்கலாம். பிறகு சுரேஷின் பயண வீடியோ திரையிடப்பட்டது. முகத்தில் அதிக சலனம் இல்லாமல் அதைப் பார்த்தார் சுரேஷ்.

‘ஒரு குச்சி… ஒரு குல்பி’ பாடல் வரி மாதிரி “உங்களுக்கு ஒரு பரிசுப் பொருளும் வெடிகுண்டும் தருவேன். உள்ளே இருக்கற போட்டியாளர்களுக்கு அதை நீங்க தரணும்” என்றார் கமல். பிக்பாஸ் கரன்ஸியை தாமரைக்கு பரிசளித்த சுரேஷ், வெடிகுண்டையும் தாமரைக்கே பரிசளித்தார். ‘கவனமா விளையாடுங்க’ என்பதற்கான பொருளாம். “பாமை கொளுத்தி உள்ளே அனுப்பறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்ன கமல், சுரேஷை வழியனுப்பி வைத்தவுடன் “நீங்கள் விரும்புகிற போட்டியாளர் வெளியேறக்கூடாதுன்னு நெனச்சீங்கன்னா.. வெறுமனே மனசுல நெனச்சுக்கிட்டு சும்மா இருந்தா போதாது. கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆசை நிறைவேறும். நான் அரசியல் பேசறேன்னு நெனக்காதீங்க. அதுவும்தான் பேசறேன். அதுக்காகத்தான் இந்த மேடைக்கு வந்தேன்” என்றபடி விடைபெற்றுக் கொண்டார்.

BB Ultimate
BB Ultimate

“தம்பி.. தலைவர் பதவி உனக்கு ஈஸியா கிடைச்சுட்டதால அதன் அருமை உனக்குத் தெரியலையோ?” என்றெல்லாம் ஷாரிக்கை பிரெஸ் மீட்டில் வறுத்தெடுத்த சிநேகனுக்கும் அதே போல் தலைவர் பதவி எளிதாகக் கிடைத்திருக்கிறது. அவர் என்ன செய்வார் என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டின் உள்ளே நுழையும் போது ஒரு சமையல் பொருள் தரப்பட்டிருந்தது. அதன் உட்பொருள் என்ன என்பது தெரியவில்லை.

முதல் வாரத்திலேயே ‘ஐம்பது நாட்களைக் கடந்த’ எபெக்ட் வந்திருக்கிறது என்றால் இரண்டாவது வாரத்தின் முடிவில் என்னவாகும்? ஐந்து சீசன்கள் முடிந்த அளவிற்கான கலவரம் ஏற்படுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.