பெரும்பான்மையான பார்வையாளர்களின் தேர்வு மற்றும் விருப்பப்படி, பிக் பாஸ் அல்டிமேட் சீசனின் வெற்றிக் கோப்பை பாலாவிற்கு கிடைத்துவிட்டது. இதன் மூலம் கடந்த சீசன்களில் எழுந்த சர்ச்சை எதுவும் இம்முறை பெரிதாக எழவில்லை. குறைகளே இல்லாத மனிதர் எவரும் இருக்க முடியாது என்றாலும், இந்த சீசனில் நிகழ்ந்த சில சறுக்கல்களையும் பாலா தவிர்த்திருந்தால், இந்த வெற்றி அவருக்கு முழுமையானதாக அமைந்திருக்கும்.
ரன்னர் – அப்-ஆக நிரூப்பும், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் முறையே ரம்யாவும் தாமரையும் தேர்வானார்கள். ஆரம்பத்திலிருந்தே சீசனில் இருக்கும் தாமரையை ரம்யா முந்துவதா என்று பார்வையாளர்களிடம் எழுகிற கேள்வியிலும் ஆதங்கத்திலும் நியாயமுள்ளது. ஆனால் முன்கோபம் உள்ளிட்ட சில குறைகள் தாமரையிடம் இருந்ததால், இந்த பின்னடைவு ஒருவேளை நிகழ்ந்திருக்கலாம். இதைப் போலவே ஜுலிக்கான ஆதரவும் மக்களிடம் இருந்தது நல்ல விஷயம்.
‘கமல் இடத்தை யாரால் நிரப்ப முடியும்?’ என்கிற பிரம்மாண்டமான கேள்விக்கு தனது இயல்பான பாணியில் தொகுத்தளிப்பதின் மூலம் விடை சொல்லி விட்டார் சிம்பு. ‘பக்கத்து வீட்டுப் பையன்’ என்கிற உணர்வைத் தந்து, ‘ஹோஸ்ட்’ என்பதற்காக இறுக்கமாக இல்லாமல், சாதாரண நகைச்சுவைக்கு கூட வாய் விட்டு சிரித்து, மற்றவர்களை தானும் சிரிக்க வைத்து நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றதை சிம்புவின் பலமாக சொல்லலாம்
Finale Episode-ல் நடந்தது என்ன?
சிம்புவின் இளவயது உருவம் லேசர் விளக்கில் கறுப்புத் திரையில் மின்ன, வெள்ளை நிற உடையில் கலக்கலாக உள்ளே சிம்பு வர, அரங்கத்தில் விசில் பறந்தது. (கலைஞர்களைக் கொண்டாடுவது அவசியம்தான் என்றாலும், நடிகர்களின் மீதான வெறித்தனமான மோகத்தை இளம்தலைமுறை கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் கூடவே தோன்றுகிறது.)
“ஃபாரின் வில்லன் மாதிரியே இருக்கீங்க” – சுரேஷை கலாய்த்த சிம்பு
“முதல்ல ஒரு விஷயத்திற்காக நாம இந்த சீசனின் போட்டியாளர்களை பாராட்டியாகணும். இது 24x7 ஒளிபரப்பாகிற ஷோ. அது தெரிஞ்சும் துணிச்சலா வந்த அவங்க மன தைரியத்தைப் பாராட்டியாகணும். மக்களின் வாக்குகள்தான் இதன் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்றாலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவரின் பங்களிப்பும் முக்கியம். எனவே எலிமினேட் ஆனவங்களையும் கூப்பிடுவோம்” என்று சிம்பு அறிவிப்பு செய்தார். ராப் இசை பாணியில் ஒருவர் அட்டகாசமான வரிகளை இட்டு பாட, அதிரடியான இசை பின்னணியில் ஒலிக்க, ஜூலி, அபிராமி, சுருதி, சுரேஷ், சிநேகன், அபிநய், ஷாரிக், சுஜா ஆகியோர் மேடையில் ஸ்டைலாக நடந்து வந்து அமர்ந்தார்கள். தாத்தா இன்னமும் ரோபோ டான்ஸை மறக்கவில்லை. இவர்களை வரவேற்ற சிம்பு, சுரேஷின் ஆடை அலங்காரத்தைப் பார்த்து “தமிழ் படத்துல வர்ற ஃபாரின் வில்லன் மாதிரி இருக்கீங்க” என்று ஜாலியாக அடித்த கமென்ட் சுவாரசியம். இதைப்போலவே "சேட்டு வீட்டு கல்யாணத்துல ஷெனாய் வாசிக்கறவன் மாதிரி இருக்க” என்று ஷாரிக்கின் ஜிகினா உடையையும் ரகளையாக கிண்டலடித்தார் சிம்பு.

ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசிய சிம்பு, “கமல் மாதிரி ஒரு லெஜண்ட் செஞ்ச ஷோவை என்னால பண்ண முடியுமான்னு ஆரம்பத்துல தோணுச்சு. ஆனால் மக்கள் தந்த அன்பும் ஆதரவும் ரொம்ப உதவியா இருந்துச்சு” என்றார். "இருந்தா மட்டும் பேசிடவா போறான்?” என்று இல்லாத இடத்தில் சதீஷை தேடியதும் சிம்புவின் குறும்பு. இன்று முழுக்க சதீஷை அவ்வப்போது நகைச்சுவை ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டார் சிம்பு. வனிதா, அனிதா, தாடி பாலாஜி போன்றோர் வரவில்லை.
“நான் வீட்டை விட்டுப் போக மாட்டேன்” – அடம் பிடித்த தாமரை
வீட்டுக்குள் தவிப்புடன் காத்திருந்த போட்டியாளர்களைச் சந்திக்கச் சென்ற சிம்பு, வீல்சேரில் இருந்த ரம்யாவைப் பார்த்தவுடன் “உங்க கிட்ட இனிமே Physical task பத்தி பேசவே மாட்டேன்” என்று அனைவரையும் கையெடுத்து கும்பிட்டார். “நான்தான் மேலே விழுந்தேன்.. ஸாரி” என்று வாயைக் கோணியபடி சொன்னார் நிரூப். “நான் போ மாட்டேன்” என்கிற பாட்டை இப்போதும் பாடினார் தாமரை. அடுத்ததாக பார்வையாளர்களின் பக்கம் சென்ற சிம்பு “இந்த சீசன் 24x7 வந்தது. உங்களுக்கெல்லாம் இந்த அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேட்க ஓர் இளைஞர் சுவாரசியமாக பேச ஆரம்பித்தவுடன் “இன்னும் நெறைய பேரைப் பத்தி சொல்லுங்க” என்று உற்சாகப்படுத்தினார் சிம்பு.

கடந்த நாள் இரவில் போட்டியாளர்களை மகிழ்விப்பதற்காக ‘தனித் தமிழ் இசை’ என்கிற இசைக்குழு சில பாடல்களைப் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்வை பார்வையாளர்களும் கண்டு மகிழ்வதற்காக அதை மீண்டும் ஒளிபரப்பினார்கள். ‘நேரத்தை இட்டு நிரப்பும் முயற்சி’ போல இது தோன்றினாலும், Independent Music என்னும் விஷயம் தமிழில் இன்னமும் ஏராளமாக நிகழ வேண்டியதின் அவசியத்தை இந்த இசைக்குழு உணர்த்தியது. ‘மனுசன மனுசனா பார்க்கணும், பொறுப்பு, யோசிக்காத, சொர்க்கம் காணலாம், ரோசா, முயல்தோட்டம்’ ஆகிய பாடல்களை இயல்பான வரிகளுடன் பாடியதை போட்டியாளர்கள் வெகுவாக ரசித்தார்கள்.
“உங்களை நேரா சந்திக்க முடியாம, அப்படியே நைட்டோட நைட்டா வெளிய அனுப்பிச்சிட்டாங்க சார்” என்று ஆதங்கப்பட்ட ஜூலி மற்றும் அபிராமியை மேடையில் வரவழைத்து சந்தித்தார் சிம்பு. “என்னதான் உயிர் தோழிங்கன்னாலும் ஒரே சமயத்துலயா எலிமினேட் ஆவீங்க?” என்று சிரித்த சிம்பு “இந்த பிக் பாஸ் அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க “என் மேல இருந்த நெகட்டிவிட்டியைத் தாண்டி இந்த ஷோவிற்குள்ள வந்து இப்ப மக்களோட அன்பை சம்பாதிச்சிட்டேன். அதுவே எனக்கு வெற்றி” என்றார் ஜூலி. உண்மைதான். TOP-3-ல் வந்திருக்க வேண்டியவராக ஜூலியைப் பலரும் குறிப்பிடுவது, அவர் மக்களின் அன்பைப் பெற்றிருக்கும் சாட்சியமாக பார்க்க முடிகிறது. “ஜாலியாக இருக்கணும்னு வந்தேன். யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாதுன்னு நெனச்சேன்” என்றார் அபிராமி. இருவரின் பயண வீடியோவும் அடுத்தடுத்து ஒளிபரப்பானது.
பிரிந்து சென்ற தந்தையை சந்தித்த அபிராமி – எமோஷனல் காட்சிகள்
அடுத்து நிகழ்ந்தது ஒரு எமோஷனல் டிராமா. “உங்க அப்பாவை சந்திக்க விரும்பறீங்களா?” என்று சிம்பு கேட்ட அடுத்த நொடியே உடைந்து அழ ஆரம்பித்து விட்டார் அபிராமி. அவருடைய அப்பா மேடைக்கு வந்தவுடன் அபிராமியின் அழுகை அதிகமாகியது. பத்து வருடமாக பிரிந்திருந்த அப்பா இல்லாமல் “நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்” என்று ஆரம்பித்த அபிராமியிடம் “ஓகே. பழசை விட்டுடுவோம். இப்பத்தான் வந்துட்டார் இல்லையா?” என்று பாசிட்டிவ்வாக ஆறுதல் சொன்னார் சிம்பு. பார்வையாளர்களின் நடுவில் இருந்த அபிராமியின் அம்மா பேசியதும் உருக்கமாக இருந்தது. “ஒரு குடும்பத் தலைவர் இல்லாம பிள்ளைங்களை வளர்க்கறது ரொம்ப கஷ்டம். பல வருடங்கள் நான் அதை அனுபவிச்சிருக்கேன். அவங்களுக்கு பிடிச்சதை வாங்கித்தர முடியாது. அப்பா கிட்ட ஷேர் பண்ற விஷயங்களுக்காக பிள்ளைங்க ஏங்குவாங்க” என்று அவர் சொன்னது உண்மை.

சட்டென்று விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதியினர் கட்டயாம் உணர வேண்டிய விஷயம் இது. அவர்களுக்குள் எழும் அற்பமான அகங்காரம் காரணமாக குழந்தைகள் அவஸ்தைப்படுவதில் நியாயமேயில்லை. ஒருவேளை பிரிய வேண்டியதற்கான சரியான காரணங்கள் இருந்தாலும்கூட குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இரு தரப்புமே தொடர்ந்த கவனத்தையும் அன்பையும் தர வேண்டியது அவர்களின் கடமை. இதைத் தொடர்ந்து யாஷிகா மற்றும் அமீரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மலையாள பாணியிலான உடையில் யாஷிகா வசீகரமாக இருந்தார்.
ஒரு பிரேக் முடிந்து திரும்பிய சிம்பு, இறுதிப் போட்டியாளர்களை அவர்களின் குடும்ப உறவுகளோடு பேச வைத்தார். “என் பொண்ணுக்கு கிடைச்ச வீரத்தழும்பு” என்று ரம்யாவின் அம்மா சொன்னபோது அவருக்கும் நிறைய நகைச்சுவையுணர்ச்சி இருப்பதை அறிய முடிந்தது. “ஸாரி ஆன்ட்டி” என்றார் நிரூப். “போன சீசன்ல இருந்து நிறைய மாறிட்டான்.. ரிகார்ட் பிரேக் பண்ணிட்டான்” என்றார் நிரூப்பின் தந்தை. (நிரூப் பிரேக் பண்ணது ரம்யாவோட காலும்தான்!). “உங்களுக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுத்ததில்லை” என்று தன் கணவரைப் பார்த்து உருகினார் தாமரை. ஆனால் வீட்டிற்கு மட்டும் போக மாட்டாராம். “வீட்டிற்கு வர ஐடியா இல்லையா?” என்று அவரின் கணவர் கேட்க “நீ போயிட்டு வா மாமா” என்று பாச டிவிஸ்ட் தந்தார்.
“முன்னாடி இருக்கிற கண்ணாடியைப் பார்த்து பேசுங்க”
“இதுதான் நான் உங்களுக்கு தர்ற கடைசி டாஸ்க்” என்று ரோபோவை dismantle செய்யப் போகிற உருக்கத்தோடு ஆரம்பித்தார் பிக் பாஸ். இறுதிப் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் ஆளுயரக் கண்ணாடியின் முன் நிறுத்தி “கண்ணாடில தெரியற ஆளு கிட்ட என்ன சொல்லப் போறீங்க?” என்று பேச சொன்னார். முதலில் வந்த நிரூப் “நீ சந்தோஷமா இரு. மத்தவங்களை சந்தோஷமா வெச்சுக்கோ. எதுக்காகவும் உன்னை மாத்திக்காதே"ன்னு எங்க அப்பா சொன்னாரு. அதைத்தான் என் கொள்கையா வெச்சிருக்கேன்” என்றார். அடுத்த வந்த தாமரை, “எங்கோ கிராமத்துத் திண்ணையில் அமர்ந்திருந்த ஒரு பெண், இவ்வளவு தூரம்.." என்று பிக் பாஸ் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அழுது விட்டார். “கோபத்தை மட்டும் குறைச்சுக்கோ” என்று தன் பிம்பத்திற்கு உபதேசம் சொன்ன தாமரை “கிராமத்துல இருந்த அந்தப் பொண்ணுதான் பிடிக்கும்” என்று சொன்னது அருமை.

“என் மனச்சாட்சிக்கு நான் எப்பவுமே உண்மையா இருப்பேன். அப்படித்தான் இந்த கேம்லயும் இருந்தேன்” என்ற ரம்யா, “என்னை பார்ட்னர் –ன்னு கூப்பிடுங்களேன் பிக் பாஸ்” என்று மெல்லிய ரொமான்ஸில் இறங்கினார். “நானும் கண்ணாடி மாதிரிதான். என் எதிர்க்க இருக்கறவங்க நடந்துக்கறதைப் பொறுத்துதான் நானும் மாறுவேன்” என்று தன்னையே மதிப்பிட்டுக் கொண்டு ரம்யா பேசியது சிறந்த அப்ஷர்வேஷன். சாண்டி போன்றவர்களிடம் ஜாலியாக சிரித்துப் பேசும் ரம்யா, பாலா, தாமரையிடம் அவ்வப்போது முறைப்பதற்கான விடை இதுதான்.
“உங்களோட தம்பியா நான் எப்பவோ பாஸ் ஆயிட்டேன்” என்று உருகினார், அடுத்து வந்த பாலா. “எனக்கு அன்புன்னா பயம். இந்த சீசன்ல கோபத்தை குறைச்சுக்கிட்டு என்னை மாத்திக்கிட்டேன். இது நடிப்பு கிடையாது” என்று பாலா சொல்ல, அண்ணனும் தம்பியும் மாற்றி மாற்றி உருக்கமாக பேசிக் கொண்டார்கள். “இந்த மேடைக்கு நான் திரும்பி வர மாட்டேன். ஆனா எதையாவது சாதிச்சிட்டு அதைச் சொல்றதுக்கு நிச்சயம் திரும்பி வருவேன்” என்று பாலா சொன்னது அருமை. (சீக்கிரம் ஹீரோவா பார்க்கலாம்!). “ஐ ஆம் வெயிட்டிங்” என்று பன்ச் வசனத்தில் வாழ்த்தினார் பிக் பாஸ்.
ராஜூவின் நகைச்சுவை சிக்ஸர்கள்
டிராஃபியை அறிமுகப்படுத்துவதற்காக, கடந்த சீசன்களின் வெற்றியாளர்களான ரித்விகா மற்றும் ராஜூ ஆகியோர் மேடைக்கு வந்தனர். “இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு?” என்கிற புகையிலை விளம்பரம் போல, “நிரூப்பிற்கு என்னதான் ஆச்சு.. இப்படி மாறிட்டான்?!” என்பது துவங்கி ஒவ்வொருவரையும் சைலண்ட்டான நகைச்சுவை வெடிகுண்டுகளால் தாக்கித் தள்ளினார் ராஜூ. சிம்பு உட்பட சபையே வெடித்து சிரித்தது. “மொட்டை மாடி போட்டோ ஷூட் பார்த்ததுல இருந்து நான் ரம்யாவோட ஃபேன்” என்று ராஜூ சொன்னது அநியாயக் குறும்பு. ஜூலி கத்தும் போது வருகிற விபரீதமான ஒலியை கிண்டல் செய்த ராஜூ, “ஒரு வாரம் ஷாரிக்கிற்கு ஓட்டு போட்டேன். அந்த வாரமே அவன் வெளியே வந்துட்டான்.” என்றது ஹைலைட்டான காமெடி.

“ஆக்சுவலி ரெண்டு பேர் இருக்கும்போது மட்டும்தான் நான் வீட்டுக்குள்ள போகணும். ஆனா எனக்கு நாலு பேரையும் வீட்டுக்குள்ள வெச்சு பார்க்கணும் மாதிரி இருக்குது. அதனால பிக் பாஸ் கிட்ட கேட்டேன்” என்று மேடையில் அறிவித்த சிம்பு, வீட்டிற்குள் செல்ல தயார் ஆனார். தாள வாத்தியங்கள் முழங்க வீட்டிற்குள் சிம்பு என்ட்ரி ஆனதைப் பார்த்து, வீல் சேரில் இருந்து ரம்யாவே எழுந்து வந்து விட்டார். “இதுவரைக்கும் வீடியோலதான் இந்த இடங்களைப் பார்த்திருக்கேன். நேர்ல வேற மாதிரி இருக்குது” என்று வீட்டைச் சுற்றிப் பார்த்த சிம்பு “இந்த இடம் சுத்தமா இருந்ததை விடவும் ரத்தமாத்தான் அதிகம் இருந்திருக்கு” என்று கார்டன் ஏரியாவை குறிப்பிட்டது நல்ல டைமிங். தனக்காக சிம்பு வீல் சேர் தள்ளியதைக் கண்டு ரம்யா பரவசப்பட “இந்த நல்ல விஷயம் என்னாலதான் நடந்தது” என்று அநியாயத்திற்கு பெருமிதப்பட்டார் நிரூப். “எந்தக் கடைலம்மா அரிசி வாங்கறீங்க?” என்று கேட்டு ரம்யாவை பங்கம் செய்தார், வீல் சேரை தள்ளிச் சென்ற சிம்பு.
பிக் பாஸ் வீட்டிற்குள் சிம்பு
‘Trending Player’ ஏரியாவிற்கு செல்ல முயன்ற சிம்பு, அதற்காக பிக் பாஸ்ஸின் அனுமதியைக் கோர “இது உங்கள் வீடு; உங்கள் உரிமை” என்று பாசத்துடன் பதில் வந்தது. “பெட்டு இருக்கும் போது ஏன் தரைல படுத்துக்கறீங்க?” என்று என் மனதில் இருந்த நீண்டநாள் சந்தேகத்தை சிம்புவே கேட்டு விட்டார். “ஒண்ணா படுத்துப்போம்” என்று யூகித்த பதிலைச் சொன்னார் நிரூப். வரவேற்பறை சோபாவில் அமர்ந்த சிம்பு “இந்த ஏரியாலதான் உங்களை சந்திப்பேன்ல. இப்ப எனக்கே ஒரு contestant ஃபீல் வருது” என்று ஜாலியாக சொல்ல “ஐயோ. உடனே அதை அழிச்சுடுங்க” என்று அலறினார் ரம்யா. இந்தச் சமயத்தில் குறுக்கிட்ட பிக் பாஸ் “நீங்க வந்திருந்தா இவங்க பண்ணாத என்டர்டெயின்மென்ட்டைக் கொடுத்திருப்பீங்க” என்று அல்வாவை கிண்டித் தந்தார். (உஷாரா இருங்க சிம்பு!).

“ஓகே.. யாரையாவது நான் இப்ப அழைச்சுட்டுப் போகணும். அதுதான் மரபு. யார் என் கூட வர்றீங்க?” என்று கிளம்பும் சமயத்தில் சிம்பு கேட்க “எனக்கு கால்ல வலி..சார். சுண்டு விரல்ல அடிபட்டிருக்கு” என்று ஆளாளுக்கு சாக்கு போக்கு சொல்லி ஒவ்வொருவரும் வர மறுத்தார்கள். “ஏம்ப்பா. பாலா. நீ என் ஃபேன். அதுக்காகக்கூட வர மாட்டியா?” என்கிற பிரம்மாஸ்திரத்தை சிம்பு எறிந்தவுடன் “ஓகே.. சார்” என்று எழுந்து விட்டார் பாலா. “ஓகே.. ஓகே. முதன்முறையா இந்த வீட்டுக்கு வரேன். போகும்போது அப்படிச் செய்ய எனக்கு மனசில்லை. அதெல்லாம் பிக் பாஸ் பார்த்துப்பாரு” என்று சொல்லி கிளம்பிவிட்டார் சிம்பு. “பாலா. இப்படித்தான் கண்ணாடியைப் பார்த்து பார்த்து மீசையை சரிபண்ணிருப்பாருல்ல” என்று கிளம்பும் சமயத்தில் பாலாவின் மேனரிஸத்தை சிம்பு கிண்டல் செய்தது சுவாரசியம்.
நடனத்தின் இடையே தாமரையைக் காணவில்லை
‘ஒரு ஆளை எப்படியாவது தூக்கிடணும்’ என்று முடிவு செய்தார் பிக் பாஸ். எனவே ஹாலிவுட் திரைப்படங்களில் பொதுவாக காட்டப்படும் காட்சியில் இருந்து ஒரு சீன் உருவினார். பார்ட்டி நடக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹீரோ தப்பித்து விடுவான் அல்லது கூட்டத்தின் சத்தத்தின் நடுவே ஒருவன் கொல்லப்படுவான். அது போல “வாங்க டான்ஸ் ஆடலாம்” என்று நால்வரையும் அழைத்த பிக் பாஸ், நடனத்தின் நடுவே தாமரையை மட்டும் தனியாகப் பிரித்து வெளியில் அழைத்து வந்து விட்டார். (என்னவொரு வில்லத்தனம்!). தாமரை எலிமினேட் ஆனதை பாலாவும் ரம்யாவும் இயல்பாக எடுத்துக்கொள்ள நிரூப் மட்டும் சற்று டென்ஷன் ஆகி “அக்கா..” என்று கத்திக் கொண்டிருந்தார்.

மேடைக்கு வந்த தாமரைக்கு, தான் வெற்றியடையாததை விடவும் ‘வீட்டை விட்டுப் பிரிவதில்தான்’ சோகம். “போன சீசனை விடவும் இந்த சீசன்ல அனுபவம் உள்ளவங்க கூட மோதி நாலாவது இடத்துக்கு வந்தது எனக்கு பெரிய விஷயம்” என்று தாமரை சொன்னது உண்மை. “நீங்க நடிக்கறதா சொல்றாங்களே?” என்று ஒரு முக்கியமான புகாரை சிம்பு கேட்க “அது அவங்க அவங்களுக்குத்தான் தெரியும். நான் நடிக்கலை” என்று தாமரை சொன்ன பதில் ஆத்மார்த்தமானதாக இருந்தது. “ரெண்டு சீசன்லயும் பணத்து மேல நீங்க ஆசைப்படாத விஷயம் பாராட்டத்தக்கது” என்று பாராட்டினார் சிம்பு. டிவி வழியாக வீட்டுக்குள் சென்ற சிம்புவிடம் “டான்ஸ் ஆடிட்டு இருந்தப்பவே அக்காவை தூக்கிட்டீங்களே?” என்று போட்டியாளர்கள் ஜாலியாக புகார் சொன்னார்கள். “யாருக்காவது அடுத்து டான்ஸ் ஆட விருப்பமா?” என்று நமட்டுச் சிரிப்புடன் சிம்பு கேட்க “எங்களுக்கு டான்ஸே வராது" என்று கோரஸாக கதறினார்கள். தாமரை சில பாடல்களைப் பாடியவுடன் “அடுத்து என்ன சூப்பர் சிங்கரா.. இந்த ஏரியாவை விட்டு போக மனசில்லையா?” என்று சிம்பு அடித்த கமெண்ட் சூப்பர்.
வீட்டிற்குள் இருந்த மூன்று போட்டியாளர்களிடம் “நீங்க கிளம்ப வேண்டிய தருணம் வந்தாச்சு.. என்ன சொல்ல விரும்பறீங்க?” என்று கண்ணீரைப் பிழிந்தெடுக்க பிக் பாஸ் முயற்சி செய்தாலும் மூவருமே கல்லுளி மங்கர்களாக நின்றிருந்தார்கள். எப்படியோ அவர்களிடம் ஒரு துளி கண்ணீரை வரவழைத்த பிக் பாஸ் “உங்களுக்காகத்தான் லைட் போட்டு வெச்சிருக்கேன். கிளம்பினா ஆஃப் பண்ணிடுவேன். கரண்ட் பில் எக்கச்சக்கமா வருது” என்பது போல் சொல்ல வீட்டின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்படுவதை சோகத்துடன் பார்த்து விட்டு கிளம்பினார்கள். (காலியாக கிடக்கிற வீட்டைப் பார்த்து நமக்குமே ஒரு மாதிரி தொண்டையைக் கவ்வுகிற ஃபீலிங் வந்தது).
‘தலைவன் சதீஷ் வாழ்க’ – சிம்புவின் குறும்பு
மேடையில் இருந்த சிம்பு “ஓகே. கிளைமாக்ஸை நெருங்கிட்டோம். அவங்களை வரச் சொல்லிடலாமா?” என்று கேட்க, வின்டேஜ் காரில் மூவரும் மேடைக்குள் வந்திறங்கினார்கள். பாலாவைப் பார்த்ததும் சிம்புவிற்கு நிகரான கூச்சல் ரசிகர்களிடமிருந்த வந்த போதே “யார் வெற்றி பெறுவார்?” என்பது தெரிந்து போயிற்று. பாலாவோடு ஒப்பிடும்போது நிரூப்பிற்கும் ரம்யாவிற்கும் வரவேற்பு குறைவுதான். “கத்தி முடிச்சிட்டீங்களா.. இப்ப நான் ஒண்ணு சொல்றேன் பாருங்க” என்ற சிம்பு “தலைவன் சதீஷ் வாழ்க” என்று சொல்ல கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது. (வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சதீஷை ஜாலியாக வைத்து செய்கிறார் சிம்பு).
ஒருவர் எலிமினேட் ஆக வேண்டிய தருணம். “என்ன வேணா நடக்கலாம். ஆனா என்னால நடக்க முடியாது” என்று அந்தச் சமயத்திலும் மொக்கை ஜோக்கை வீசினார் ரம்யா. ஒரு வெடிச்சத்தம் கேட்டவுடன் அதன் நடுவே ரம்யாவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் வந்து விழுந்தது. ஆக.. ரம்யாவிற்கு மூன்றாவது இடம் என்பது உறுதியானது.

ரம்யாவின் பயண வீடியோ வெளியானதும் “உங்களுக்காக நாங்க ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கோம்” என்று ரம்யா புன்னகையுடன் சொல்ல, சிம்பு பற்றிய வீடியோ தொகுப்பு ஆரம்பித்தது. "எனக்கே டிவிஸ்ட்டா?” என்று சிரித்தார் சிம்பு. மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்து சிம்புவிற்கு வாழ்த்து சொன்னார்கள். பிறகு சிம்பு நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த காட்சிகள் அருமையாக தொகுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சிம்பு விடைபெறும் இறுதிக் காட்சிகளைத் துண்டு துண்டாக இணைத்திருந்தது அருமை. வீடியோ முடிந்ததும் “நான் யாரையாவது மனம் புண்படும் சொல்லியிருந்தா மன்னிப்பு கேக்கறேன்” என்று சிம்பு கேட்டுக் கொண்டது அவரின் நற்பண்பைக் காட்டியது.
இப்போது முன்னாள் போட்டியாளர்களின் வரிசையில் எண்ணிக்கை கூடியிருந்தது. பிரியங்கா, பாவனி, அபிஷேக்ராஜா, அமீர், அனிதா ஆகியோர் புதிதாக வந்து இணைந்திருந்தார்கள். ‘வாழும் லெஜண்ட்’ என்று அபிஷேக்கை கலாய்த்த சிம்பு “இப்பவாவது பிக் பாஸ் பார்க்கறீங்களா?” என்று டைமிங்காக கேட்க சிரிப்பொலி எழுந்தது. “ஓகே.. வெற்றியாளரை அறிவிக்க வேண்டிய நேரம். இதுதான் கடைசி டாஸ்க். ரெண்டு பேரும் தலைகீழா தொங்குங்க. யாரு அதிக நேரம் தொங்கறாங்களோ.. அவங்கதான் வின்னர்.. கயிறு ரெடியாப்பா” என்று ஜாலியாக கலாய்க்க ஆரம்பித்து விட்டார் சிம்பு. பாலா மற்றும் நிரூப்பின் பயண வீடியோக்கள் காட்டப்பட்டன. “டாஸ்க்ல நெனச்சத எல்லாம் வாந்தியெடுப்பியா” என்று தான் அபிராமியிடம் கேட்ட காட்சியைப் பார்த்து தானே ஜெர்க் ஆனார் பாலா.
‘பாலா.. தி வின்னர்.. ஆஃப் அல்டிமேட் சீசன்’
வெற்றியாளரின் பெயரைத் தாங்கிய கார்டு, டிரோனில் வந்து இறங்க, அதை ரகசியமாக வாசித்த சிம்பு, இருவரின் கைகளையும் பிடித்து உயரத் தூக்கி, சற்று சஸ்பென்ஸ் ஆட்டம் ஆடி விட்டு இறுதியில் பாலாவின் கையைப் பிடித்து உயர்த்த… ‘பாலா’ வின்னர் என்பது அதிகாரபூர்வமாக உறுதியானது. டிராஃபியும் 35 லட்சம் பணத்திற்கான காசோலையும் பாலாவிற்கு வழங்கப்பட்டன. “எனக்கு அறிவிச்ச பணம் இன்னமும் கைக்கு வரல” என்று நிகழ்ச்சயின் ஆரம்பத்தில் சுருதி சொன்ன விஷயம் சம்பந்தமில்லாமல் இப்போது நினைவிற்கு வந்தது. (சீக்கிரமா செட்டில் பண்ணுங்க பிக் பாஸ். பாவம். எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க!). பாலாவின் சகோதரர் முகத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. நிரூப்பின் தந்தை முகத்தில் சிறிது ஏமாற்றம் இருந்ததைப் போன்ற பிரமை.
வெற்றியாளரின் பெயர் அறிவிக்கப்படும் சமயத்தில், பார்வையாளர்களையும் மீறி பாலாவை சப்போர்ட் செய்து ஆவேசமாக கூவினார் ஜூலி. “போன சீசன்ல எனக்காக வாக்களிச்ச மக்களுக்காகத்தான் இந்த முறை அல்டிமேட் சீசன்ல வந்து விளையாடினேன். அவங்களுக்கு நன்றி. மக்களின் அன்பு எனக்கு தொடர்ச்சியா வேணும்” என்றார் பாலா. இருவருமே டிராஃபியை இணைந்து உயர்த்திப் பிடித்த காட்சி அருமை. “ரசிகர்கள்தான் ஒரு பிரபலத்திற்கு முக்கியம். அவங்களை என்னிக்கும் மறந்துடாதீங்க” என்கிற செய்தியுடன் நிகழ்ச்சியை முடித்த சிம்பு, அனைவரிடமும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சியுடன் இந்த finale எபிசோட் நிறைவடைந்தது.

‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் மக்களே.. இந்த சீசனின் ஆரம்ப எபிசோடில் வீட்டிற்குள் நுழைந்த ஒவ்வொரு போட்டியாளரிடமும் ஒரு மளிகைப் பொருளைத் தந்து ‘உங்க வெற்றிக்கு இது உதவும்’ என்று சூட்சுசமாக கமல் ஒரு குறிப்பு சொன்னாரே?! அந்தப் பொருட்கள் சமையலுக்காகவாவது பயன்பட்டுச்சா? அதன் விடைதான் என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களின் வெற்றிக்கும் கமலின் பிம்பம் ஒரு ஆதாரமான அடித்தளமாக இருந்தது. சிம்பு சொன்னாரே தவிர, பிக் பாஸ் டீம் தரப்பிலிருந்து கமலின் பெயர் சரியாக நினைவுகூரப்படவில்லையோ என்று தோன்றுகிறது. ஒரு வீடியோவிலும் கமலின் முகம் காட்டப்படவில்லை. சீசன் 6-ல் கமல் திரும்புவார் என்கிற எதிர்பார்ப்போடு நாமும் தற்காலிகமாக பிக் பாஸிற்கு விடை சொல்லுவோம். Bye Bye. Bigg Boss. We will miss you.
இந்தத் தொடரை தினமும் வாசித்து பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்னொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம். அது வரை உங்களிடமிருந்து விடைபெறுவது.. உங்கள். நான்..