டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் முதன் முதலாக ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வைல்டு கார்டு எண்ட்ரி இந்த வாரம் நிகழ்கிறது.
முக்கிய நிகழ்வாக நிகழ்ச்சியிலிருந்து சில வாரங்களுக்கு முன் வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தியும் மீண்டும் நிகழ்ச்சிக்குள் செல்கிறார்.
டிவியில் ஒளிபரப்பான 5 பிக் பாஸ் சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள, ’பிக் பாஸ் அல்டிமேட்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகத் தொடங்கி சுமார் 24 நாள்கள் கடந்து விட்டன. இந்த நிலையில், இதுவரை எந்த பிக் பாஸ் சீசனிலும் கலந்து கொள்ளாத ‘கலக்கப் போவது யாரு’ சதீஷ் முதன் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்கிறார். அநேகமாக இன்றோ அல்லது நாளையோ அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவிக்ஷன் தொடங்கி சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் ஆகியோர் முதலில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள். பிறகு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே பட ஷூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை எனக்கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். கமலுக்குப் பதில் வரும் வாரத்திலிருந்து நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருக்கிறார்.
கமல் விலகிய அடுத்த நாளே நடிகை வனிதா விஜயகுமார் தானாகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற விரும்புவதாகச் சொல்லி வெளியேறினார்.
இந்தச் சூழலில் தற்போது வைல்டு கார்டு எண்ட்ரி நிகழ்ந்துள்ளது. வைல்ட் கார்டு எண்ட்ரியும் சிம்புவின் எண்ட்ரியும் நிகழ்ச்சிக்குப் பலம் சேர்க்குமா என்பது அடுத்த சில தினங்களில் தெரியவரும்.
