Published:Updated:

பிக் பாஸ் - 59: ``நல்லா நடத்தறீங்கய்யா சேனலு" வெறுப்பான இமான்; அர்ஜுன், ரஜினி வரை வம்பிழுத்த சண்டை!

பிக் பாஸ் - 59: இமான் அண்ணாச்சி

இந்தச் சமயத்தில் தொலைக்காட்சி பார்வையாளராக நிலையத்திற்கு போன் செய்த இமான் “வீணான செய்தியை ஏண்டா போடறீங்க. வீணாப் போனவங்களா?” என்று திட்ட “உங்கள் கருத்துக்கு நன்றி” என்று போனை வைத்து விட்டார் அபிஷேக்.

பிக் பாஸ் - 59: ``நல்லா நடத்தறீங்கய்யா சேனலு" வெறுப்பான இமான்; அர்ஜுன், ரஜினி வரை வம்பிழுத்த சண்டை!

இந்தச் சமயத்தில் தொலைக்காட்சி பார்வையாளராக நிலையத்திற்கு போன் செய்த இமான் “வீணான செய்தியை ஏண்டா போடறீங்க. வீணாப் போனவங்களா?” என்று திட்ட “உங்கள் கருத்துக்கு நன்றி” என்று போனை வைத்து விட்டார் அபிஷேக்.

Published:Updated:
பிக் பாஸ் - 59: இமான் அண்ணாச்சி
தங்களின் செயல்பாடு மக்களுக்குச் சென்று சேருகிறதா என்கிற சந்தேகம் ஒவ்வொரு பிக் பாஸ் போட்டியாளரின் மனதிற்குள்ளும் இருக்கும். ஒரு நாளின் நிகழ்வுகளில் பரபரப்பானவை மட்டும் சுருக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் தரப்படுவதால், காட்டில் காயும் நிலவு போல தான் செய்து கொண்டிருப்பதெல்லாம் வீணாகப் போகுமோ என்கிற சஞ்சலத்தோடுதான் அவர்கள் இயங்கிக் கொண்டிருப்பார்கள். கமல் வரும் நாளில் மட்டுமே இதற்கான சிறுதுளி வெளிச்சம் கிடைக்கும். பார்வையாளர்களின் கைத்தட்டு கிடைத்தால் அது தீபாவளி போனஸ் மாதிரி.
பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59

“டிவி சேனல் என்கிற டாஸ்க்கின் மூலம் ஒரு வாய்ப்பு தருகிறேன். இந்த ஐம்பது நாள்களாக நடந்த விஷயங்களில், வெளியில் தெரியாமல் போய் விட்டிருக்குமோ என்று நீங்கள் நினைக்கும் விஷயங்களை இந்த டாஸ்க்கில் வெளிப்படுத்துங்கள்” என்று பிக் பாஸ் ஒரு அருமையான வாய்ப்பை தந்தார். எத்தனை அருமையான சான்ஸ்? இதை எப்படியெல்லாம் போட்டியாளர்கள் பயன்படுத்தியிருக்கலாம்?! ஆனால் அதே குடுமிப்பிடிச்சண்டையைப் போட்டு TRP-ஐ நாறடித்தார்கள்.

இத்துடன் தலைப்புச் செய்திகள் முடிவடைந்தன. இனி விரிவான செய்திகளைப் பார்ப்போம்.

எபிசோடு 59-ல் என்ன நடந்தது?

அபினய் – பாவனி விவகாரம் தொடர்பாக பொதுச்சபையில் ராஜூ மன்னிப்பு கேட்டது நல்ல விஷயம். இதை அவர் முன்பே செய்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்?! “நாமினேஷனுக்காக கேட்கறேன்னு நெனச்சிரக்கூடாது” என்று அது முடிந்த பிறகு கேட்டது நன்று.

“ராஜூவும் அண்ணாச்சியும் ஃபைனல்வரை போகணும்னு நெனக்கறாங்க. நானும் நீயும் போகணும். அதுக்கு என்கிட்ட செமயான ஐடியால்லாம் இருக்கு. உன்னை அடிச்சிதான் அண்ணாச்சி பேரு வாங்கறாரு” என்று ஐடியா மணியாக மாறி அபிஷேக் சொல்லிக் கொண்டிருந்ததை பயபக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தார் பிரியங்கா. தன் பாதையை தானே பிரியங்கா வகுக்கலாம். அபிஷேக் சொல்வதைக் கேட்டால் முட்டுச்சந்துதான்.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59

ராஜூ மன்னிப்பு கேட்டதாலோ என்னமோ, அண்ணாச்சியும் அதே பாதையைப் பின்பற்றி நேற்று சண்டையிட்ட காரணத்திற்காக பிரியங்காவிடமும் நிரூப்பிடமும் மன்னிப்பு கேட்டார். ‘நானும் சாரி’ என்று பிரியங்கா, இமானை கட்டியணைத்துக் கொள்ள “தப்பு... தப்பு. சண்டை போடுங்க. ஜாலியா இருக்கு” என்று உற்சாகமாக கூவிக் கொண்டிருந்தார் பாவனி. (என்னா வில்லத்தனம்?!).

“இந்த விஷயங்கள் மக்களுக்குச் சென்று சேர்ந்திருக்குமோ, இல்லையோ... என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். அதைப் போக்குவதற்காக ஒரு வாய்ப்பு. வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்து இரண்டு டிவி சேனல்களாக மாறும். இதற்கு சஞ்சீவ் நடுவராக இருப்பார்” என்று லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். சிவப்பு மற்றும் நீல அணிகள் உருவாகின.

சிவப்பு சேனல் அணியில் சிபி மற்றும் அபிஷேக், செய்தி வாசிப்பாளர்கள். வருண் மற்றும் பிரியங்கா ரிப்போர்ட்டர்ஸ். நீல சேனல் அணியில் ராஜூ மற்றும் இமான் செய்தி வாசிப்பாளர்கள். அமீர் மற்றும் அக்ஷரா ரிப்போர்ட்டர்ஸ். (திருவள்ளுவரை இன்டர்வியூ பண்ணுவீங்களா?!).

“என்னைப் பார்த்து பிரியங்காவிற்கு பயம்” என்ற ஹெட்லைன் நியூஸை அக்ஷராவிற்கு தந்து கொண்டிருந்தார் அண்ணாச்சி. “அப்பா கிட்ட இருந்து நாணயத்தை எடுக்கறது பையன்களோட வழக்கம்தான். அதே மாதிரிதான் நிரூப் செஞ்சான். அதுக்காக பையன் கிட்ட சண்டை போடறதா? குடும்பம் குடும்பம்னு சொல்லிட்டு பையன் தலைவர் ஆனவுடனே பொறாமையா?” என்று இமானை வறுத்தெடுத்து பேட்டி தந்து கொண்டிருந்தார் பிரியங்கா.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59
“ஒருத்தர் கிட்ட சண்டை போட்டுட்டு திரும்பவும் நார்மலாகி, திரும்பவும் சண்டை போட்டு... இப்படி பிரியங்கா செத்து செத்து விளையாடறாங்க. ஏன் இந்தக் குழப்பம்? இது என்ன கேம்பிளான்? புரியல. இதுல மத்தவங்களை ‘பாரபட்சம்’ன்னு குற்றம் சொல்றாங்க” என்று அக்ஷராவிடம் ‘பைட்’ தந்து கொண்டிருந்தார் ராஜூ.

‘ஒருத்தர் கிட்ட பாசமா பழகுவாங்க. ஆனா ஒரு வார்த்தை முரண்பட்டா கூட போதும். தாமரை, அரளிப்பூவா மாறிடுவாங்க. அப்படியே தூக்கிப் போட்டுருவாங்க” என்று சிபி ஐடியா தர, ‘நிறம் மாறும் பச்சோந்தி’ என்று தாமரையைப் பற்றி ஆவேசமாகக் கவிதை எழுதிக் கொண்டிருந்தார் பிரியங்கா.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59

"தலைவரானது நிரூப்பு. இதனால் அண்ணாச்சிக்கு வெறுப்பு” என்று தலைப்புச் செய்தியை அபிஷேக்கும் பிரியங்காவும் இணைந்து சூடாக்கிக் கொண்டிருக்க “யப்பா டேய்... இதில உனக்கு உடன்பாடுதானே... உன் சம்பந்தப்பட்ட மேட்டர் இது” என்று நிரூப்பை ஜாக்கிரதையாகக் கேட்டுக் கொண்டார் சிபி. “நடந்த விஷயத்தைதானே சொல்றோம்?!” என்று கொம்பு சீவி விட்டார் அபிஷேக். நிரூப் இதற்கு தயங்கவே “ஏண்டா டேய். விடிய விடிய பிக்பாஸ் பார்த்துட்டு இதோட தொகுப்பாளர் அர்ஜுன்-ன்னு சொல்றே... இன்னும் என்னை பைத்தியக்காரியாவே நெனச்சுட்டு இருக்கல்ல நீ” என்று நிரூப்பிடம் பிரியங்கா கோபமானார்.

போட்டி ஆரம்பித்தது. பெரிய சைஸ் டிவி வைத்து அதில் லோகோவெல்லாம் போட்டு பின்னணி இசையெல்லாம் சேர்த்து நிஜ செய்தி சேனல் போலவே பிக் பாஸ் டீம் பந்தா காட்டியது. டி.ஆர் போலவே தலையை அசைத்து வாயால் பின்னணி இசை கூட்டினார் அபிஷேக். ‘சிங்கத்தின் பிடியில் ஊஞ்சலாடிய இமான், உலகமே நாடக மேடை என்பதை பிக் பாஸில் நிரூபித்த தாமரை, பாவனி... பாவம் நீயா... நல்லாப் போயிட்டு இருந்த இவங்க வாழ்க்கையில கும்மியடிச்ச அந்த மகான் யாரு… இதைப் பத்தில்லாம் இந்த நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்” என்று தலைப்பு செய்தி வாசித்த அபிஷேக், ‘டட டட்டடடா.. டட. டட்டடடா’ என்று வாயால் சத்தம் எழுப்பிய காரணத்திற்காகவே அடுத்த வாரத்தில் நேரடி நாமினேஷனில் சேர்க்கலாம். "பின்னால எக்ஸ்ட்ரா லென்த் முடி வெச்சிருந்தா அவன் சிங்கமாடே?!” என்று இமானின் மைண்ட் வாய்ஸில் ஓடியிருக்கலாம்.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59
‘கலாய் கார்னர்’ என்ற தலைப்பில் நிரூப் – இமானாக, பிரியங்காவும் வருணும் நடித்துக் காட்டினர். நிரூப் காயின் பயன்படுத்த முடிவு செய்த போது ‘என்னைப் பார்த்து பயந்துட்டில்ல’ என்று அண்ணாச்சி சொன்ன காட்சி அது. சம்பந்தப்பட்ட இருவரும் அரங்கத்திற்கு வரவழைக்கப்பட்டனர் “நாணயம் பயன்படுத்தறதுக்கு இன்னமும் ரெண்டு வாரம்தான் டைம் இருந்தது. அடுத்த வாரம் பாவனி பயன்படுத்த முடிவு செய்திருந்ததால் இந்த வாரம் நான் பயன்படுத்தினேன்” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் நிரூப்.

“நிரூப் எனக்கு தம்பி மாதிரி. காயினை பயன்படுத்துவது அவன் உரிமை. பயன்படுத்துவானா... இல்லையான்னு... என்கிட்ட அவன் சரியா சொல்லல. ஆனா போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி என்னை பேசக் கூப்பிட்டான்” என்று இமான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரை இடைமறித்த அபிஷேக் “ஒரு விளம்பர இடைவேளை” என்று வெட்டினார். எனில் இமான் சொல்ல வந்த அந்த வாக்குமூலத்தில் ஏதோவொரு உண்மை இருந்தது போல.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59

"விளிம்பு நிலையில் இருக்கும் நிரூப் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாணயத்தைப் பயன்படுத்திய போது, அவரை சகோதரராக நினைக்கும் இமான் இதை எதிர்க்கலாமா?” என்று சரியான கேள்வியை பிரியங்கா முன்வைக்க “அப்படியென்ன வலியை நிரூப்பிற்கு ஏற்படுத்தி விட்டேன்?” என்று இமான் பிரியங்காவை கேட்க, “நியூஸ் கலெக்ட் பண்றது மட்டும்தான் உங்க வேலை” என்று பிரியங்காவையும் தக்க சமயத்தில் காப்பாற்றினார் அபிஷேக். “நல்லா நடத்தறீங்கய்யா சேனலு” என்று வெறுப்புடன் கும்பிட்டு கிளம்பினார் இமான்.

சிவப்பு சேனல் அடுத்த வம்பிற்காக தாமரையின் குடுமியைப் பிடித்து இழுத்தது. ‘தலைவர் ஆக உனக்கு தகுதியில்ல’ விஷயத்தை வைத்துக் கொண்டு பிரியங்காவும் வருணும் ‘கலாய் கார்னரில்’ நடித்துக் காண்பித்ததை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் தாமரை. ‘தெரியாது. புரியாது’ என்கிற சிபி ஆடிய வார்த்தை விளையாட்டுக்கு தக்க எதிர் ஆட்டத்தை ஆடி அசத்தினார் தாமரை. “ரஜினி மாதிரி குழப்பமா பேசறீங்களே?” என்று சிபி கேட்டதற்கு “ரஜினி கிட்டே அப்படித்தானே பேச முடியும்?” என்று சிபியிடம் தாமரை கேட்ட காட்சி நல்ல பன்ச். “நீங்க நிறத்தை அப்பப்ப மாத்திக்கறீங்களா?” என்கிற கேள்விக்கு “இந்த வீட்டில் எல்லோரையும் பிடிக்கும், பாவனியைத் தவிர” என்று அதிரடி பதில் தந்தார் தாமரை. வருண் மட்டும்தான் இவருடைய உண்மையான நண்பராம்.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59
தாமரை இதுவரை பழகிய நண்பர்களையெல்லாம் எப்படித் தூக்கி எறிந்து விடுவார் என்பதை பட்டியல் இட்டுச் சொன்னார் பிரியங்கா. “இந்த கேமை எனக்கு கத்துக் குடுத்தது பிரியங்காதான். அதை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்” என்று ரங்கன் வாத்தியாருக்கு சலாம் வைத்தார் ‘கபிலனான’ தாமரை. “தாமரை ----------- இருந்தாலும் பிரச்னை. வீட்ல இருந்தாலும் பிரச்னை” ன்னு சொன்னது யாரு?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார் அவர். (அப்ப பிரியங்கா அந்தக் கட்சி பிரமுகரா?!).

இந்தச் சமயத்தில் தொலைக்காட்சி பார்வையாளராக நிலையத்திற்கு போன் செய்த இமான் “வீணான செய்தியை ஏண்டா போடறீங்க. வீணாப் போனவங்களா?” என்று திட்ட “உங்கள் கருத்துக்கு நன்றி” என்று போனை வைத்து விட்டார் அபிஷேக்.

அடுத்ததாக வந்த தலைப்பு. பாவனி… பாவம் நீ… “எனக்கு மொழிப்பிரச்சினை. அதனால் எனக்கு நண்பர்களே கிடையாது” என்று ஆரம்பித்து ஒவ்வொருவரும் தன்னிடம் எப்படி பாராமுகம் காட்டுகிறார்கள் என்று பட்டியலிட்டார் பாவனி. அமீர் மட்டும்தான் இப்போது நட்பு பட்டியலில் இருக்கிறாராம். (இந்தச் சுவரு இன்னமும் எத்தனை பேரை காவு வாங்குமோ?!) நாணயம் எடுத்த விவகாரத்தை தாமரை இன்னமும் நினைவில் வைத்திருப்பது குறித்து பாவனிக்கு வருத்தம் இருக்கிறது.

“பாவனியை பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்கிற தாமரை, நேற்றிரவு அவருடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இதன் பின்னால் நடந்தது என்ன?” என்று பிளாஷ் நியூஸை பிரியங்கா போட “அடிப்பாவிங்களா. 'தள்ளி நில்லும்மா... தண்ணி எடுக்கணும்'னு ஒரு வார்த்தைதான் பேசினேன்” என்று முனகிக் கொண்டார் தாமரை.

நியூஸ் சேனலில் கரண்ட் கட் ஆகி இரண்டு டி.ஆர்களும் கிளம்பிய பிறகு “நான் உன்கிட்ட ரெண்டு மணி நேரமா பேசினேன்?” என்று பாவனியிடம் சண்டைக்கு வந்தார் தாமரை. “நானா அப்படிச் சொன்னேன்?” என்று அந்தச் சண்டையை மிக சாமர்த்தியமாக பிரியங்காவிடம் தள்ளிவிட்டார் பாவனி. பிறகு தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இடையே புகைச்சல் பொரிந்தது. அபினய் விவகாரம் தொடர்பாக பாவனியிடம் தாமரை நீண்ட நேரம் விசாரித்திருக்கிறார் என்கிற உண்மை இந்தச் சமயத்தில் வெளியே வந்தது.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59
“செய்தி சேனல்-ன்ற பேர்ல தனிப்பட்ட பகையையெல்லாம் பிரியங்கா தீர்த்துக்கறாங்க” என்று சொல்லி தாமரையை இன்னமும் ஏற்றி விட்டார் அக்ஷரா. பிறகு உணவருந்தும் போது தாமரைக்கும் பாவனிக்கும் ‘முத்தா’ கொடுத்து சமாதானக் கொடியை பறக்கவிட்டார் பிரியங்கா. (இதே வேலையா போச்சு!).

“நான் உண்மையா சொல்றேன் சாமி... ஒருத்தர்கிட்ட பாசம் காண்பிக்கற மாதிரில்லாம் எனக்கு நடிக்கத் தெரியாது.” என்று சிபியிடம் சொல்லி கலங்கினார் தாமரை. ‘இதையெல்லாம் கிண்டல் பண்ணா எனக்கு பொல்லா கோபம் வரும்’ என்பது அம்மணியின் ஆட்சேபம்.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59

அடுத்ததாக நீல நிற சேனல் ஆரம்பித்தது. ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் பயங்கரமாக சண்டையிட்டு மூச்சு வாங்க ஓய்ந்து உட்கார்ந்திருக்கும் போது, ஒரு குழந்தை அங்கு உள்ளே புகுந்து கலகலவென சிரித்துக் கொண்டு விளையாடினால் எத்தனை ஆசுவாசமாக இருக்கும்?! அப்படியாக பரபரப்பான செய்திகளை பார்த்து மண்டையை சூடாக்கிய சேனலில் இருந்து தப்பித்து காமெடி சேனலுக்கு மாறிய சுவாரஸ்யத்தை தந்தார் ராஜூ. ‘உடான்ஸ் அல்ல உண்மை’ என்கிற தலைப்பில் அவரால் கிண்டலடிக்கப்பட்டவர்கள் கூட ராஜூவின் காமெடியைப் பார்த்து சிரித்தார்கள்.

"நிரூப்பினால் மூக்கில் குத்து வாங்குவதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருக்கிறார் பிரியங்கா” என்ற ராஜூ, இதற்காக பிரியங்காவை தொலைபேசியில் அழைக்க “நான் ரொம்ப பிஸி” என்று பேச மறுத்து விட்டார் அவர். “அக்ஷரா... இணைப்பில் இருக்கீங்களா.. நிரூப்பிடம் நீங்கள் செய்தி சேகரித்தீர்கள் அல்லவா? எப்படியும் பத்து பைசாக்கு பெறாத கருத்தைத்தான் அவர் சொல்லியிருப்பார்” என்று ராஜூ பங்கம் செய்த போது இதற்கு நிரூப்பே வாய்விட்டு சிரித்தார்.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59
“அக்ஷரா... ஒரு புது நபரிடம் நிரூப் காட்டிய பாசத்தை, ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தரும் பிரியங்கா ஏன் காட்ட மறுத்தார்ன்னு கேட்டீங்களா. கேட்டிருக்க மாட்டீங்க. உங்களுக்கு இந்த மாசம் சம்பளம் கட்டு” என்று அகஷராவையும் பங்கம் செய்து நிகழ்ச்சியை முடித்தார் ராஜூ.

நடுவரான சஞ்சீவ் இரண்டு சேனல்களையும் அலசி மதிப்பிட வேண்டும். இதை அவர் ஏறத்தாழ சரியாகவே செய்தார். இரண்டு சேனல்களின் நிறை, குறைகளை அலசினார். “இமான் ஏதோ சொல்ல வந்த போது அபிஷேக் விளம்பர இடைவேளை விட்டது தப்பான விஷயம். இதில் பார்வையாளர்களின் பங்களிப்பும் இருந்திருக்கணும். அது டோட்டலா மிஸ் ஆச்சு. இமான் கேட்ட கேள்வியை சேனல் சரியா அட்ரஸ் பண்ணியிருக்கணும். இதைப் போலவே பிரியங்கா பேச மறுத்தது சரியில்ல. சிவப்பு சேனல் ஒரு செய்தி சேனல் போலவே பரபரப்பா இருந்தது. ஆனா நீல சேனல் ஆதித்யா மாதிரி சிரிப்பொலியா மாறினது சுவாரஸ்யம். என்றாலும் அதில் செய்தி சேனல் ஃபீல் வரலை” என்று விளக்கம் அளித்த சஞ்சீவ், சிவப்பு சேனலுக்கு 12.5 புள்ளிகளும் நீல சேனலுக்கு 7.5 புள்ளிகளும் மதிப்பெண் அளித்த சஞ்சீவ், மொத்த மதிப்பெண் என்ன என்று சொல்லாமல் குழப்பினார்.

பிக் பாஸ் - 59
பிக் பாஸ் - 59

தனது அணியில் அமீரின் பங்களிப்பு ஒன்றுமே இல்லை என்பது போல் இமான் வைத்த குற்றச்சாட்டினால் அமீர் காண்டாக, தாமரை அவரை சமாதானப்படுத்தினார்.

இந்த செய்தி சேனல் டாஸ்க் நாளையும் தொடருமா என்று தெரியவில்லை. தொடரும் போல் தெரிந்தால் டிவியின் இணைப்பைத் துண்டித்து வைப்பதுதான் நலம்.