Published:Updated:

பிக் பாஸ் 5 பின்னுக்குத் தள்ளப்பட்டது ஏன்? காரணம் இதுதான்!

பிக் பாஸ்

பிக் பாஸ் தொடங்கி விட்டால் விஜய் டிவி காட்டில் மழை என்ற நிலை இருந்தது.இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றே இந்த வருடம் சன் டிவி 'மாஸ்டர் செஃப்'பையும் ஜீ தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சியையும் கொண்டு வந்தன.

பிக் பாஸ் 5 பின்னுக்குத் தள்ளப்பட்டது ஏன்? காரணம் இதுதான்!

பிக் பாஸ் தொடங்கி விட்டால் விஜய் டிவி காட்டில் மழை என்ற நிலை இருந்தது.இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றே இந்த வருடம் சன் டிவி 'மாஸ்டர் செஃப்'பையும் ஜீ தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சியையும் கொண்டு வந்தன.

Published:Updated:
பிக் பாஸ்

தொடர்ந்து இரண்டாவது வாரம் டி.ஆர்.பி.யில் தன்னுடைய சீரியலை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை முந்தியிருக்கிறது சன் டி.வி. நேற்று (9/12/21) வெளியான இந்த வார டி.ஆர்.பி.யிலும் இரவு பத்து மணி ஸ்லாட்டில் 'பூவே உனக்காக' தொடர் பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட அதிக புள்ளிகளைப் பெற்றிருப்பதைக் கொணடாடி வருகிறார்கள், அந்தச் சேனலில்.

தொலைக்காட்சி ஒளிபரப்பில் டி.ஆர்.பி என்பது முக்கியமான ஒன்று. சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கைப் பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. ஆனால் சமீப சில மாதங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் 'பாரதி கண்ணம்மா', பாண்டியன் ஸ்டோர்ஸ். பாக்கியலட்சுமி முதலான விஜய் டிவி சிரியல்கள் சன் சீரியல்களைப் பின்னுக்குத் தள்ளியதும் நடந்தது.

இது ஒருபுறமிருக்க பிக் பாஸ் தொடங்கி விட்டால் விஜய் டிவி காட்டில் மழை என்ற நிலை இருந்தது. பிக் பாஸ் ஒளிபரப்பாகிற நேரமென்றால் மக்கள் மொத்தமாக விஜய் டிவி பக்கம் வந்து விடுவர்.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றே இந்த வருடம் சன் டிவி 'மாஸ்டர் செஃப்'பையும் ஜீ தமிழ் 'சர்வைவர்' நிகழ்ச்சியையும் கொண்டு வந்தன.

ஆனால் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் எதிர்பார்த்தபடி போகவில்லை. ஜீ தமிழ் சேனல் 'வந்தது வரட்டும்' என நொந்தபடி ரிசல்ட்டை ஏற்றுக் கொண்டது

ஆனால் சன் தரப்போ, கடந்த சீசனில் பிக் பாஸ் செல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட அஸீமை ஹீரோவாக்கி, எட்டு மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 'பூவே உனக்காக' தொடரை 10 மணிக்கு மாற்றி பிக் பாஸ் நேரத்தில் ஒளிபரப்பியது.

ஹீரோயினாக ஏற்கெனவே ராதிகா ப்ரீத்தி நடித்துக் கொண்டிருந்த நிலையில் சாயா சிங்கை இன்னொரு ஹீரோயினாகவும் இறக்கி விட்டது. தெலுங்கு சீரியல் ஏரியாவில் பல ஹிட் சீரியல்களை இயக்கி வந்த தமிழரான கார்த்திக்கை அங்கிருந்து கூட்டி வந்து 'பூவே உனக்காக' தொடரை இயக்க வைத்தது.

சன் டிவியின் இந்த முடிவுக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்தத் தொடரின் டி.ஆர்.பி. புள்ளிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட அதிகம்.

பூவே உனக்காக அஸீம்-சாயா சிங்
பூவே உனக்காக அஸீம்-சாயா சிங்

'பிக் பாஸ் சீசன் 5 டி.ஆர்.பி.யில் பின் தங்கியிருப்பது ஏன்? இந்த உள் விவகாரங்கள் தெரிந்த சிலரிடம் பேசினேன்.

'இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலேயே வர்த்தக ரீதியாக சுமாராகப் போறதுன்னா, இந்த சீசனைத்தான் குறிப்பிடணும்.

தமிழில் முதன் முதலா இந்த நிகழ்ச்சி தொடங்கினப்ப, நிகழ்ச்சியின் ஃபார்மட் தெரியாததால் 'எப்படி இருக்குமோ'ங்கிற எதிர்பார்ப்பே ஷோவை ஹிட் ஆக்கியது. இத்தனைக்கும் சினிமாவில் மார்க்கெட் இழ்ந்த நிலையில் இருந்த ஓவியா முதலான‌வர்களைத்தான் அப்ப போட்டியாளராக இறக்கினாங்க‌.

முதல் சீசனின் வெற்றியே இரண்டாவது சீசன் வெற்றிக்கும் காரணமான‌து.

இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் போட்டியாளர்கள் சிலரின் செயல்பாடுகள் சர்ச்சைகளை உண்டாகக, அது மேலும் மேலும் நிகழ்ச்சிக்கு விளம்பரமானது.

எல்லாம் கடந்த சீசனுடன் சரி, இந்தாண்டு ஐந்தாவது சீசன் சேனலுக்கு பெரிய ஏமாற்றத்தைத்தான் தந்திருக்கு'' என்கிற இவ‌ர்கள்,

'போட்டியாளர்கள் பலரும் புதுமுகங்களாக இருக்கிறாங்க. ஷோ டல் அடிக்க இது ஒரு முக்கியமான காரணம்' என்பதையும் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அறுபது நாட்கள் கடந்திருக்கும் நிலையில் மிச்சமிருக்கிற நாள்களில் என்ன செய்யலாம் என்பதை பிக் பாஸ் யோசிக்க வேண்டிய நேரமிது.