Published:Updated:

ஐந்தாவது சீஸன் ஆன் தி வே; லூசிஃபர் ரசிகர்களுக்கு ஒரு ரீகேப்!

Lucifer
Lucifer ( Netflix )

சினிமா ஒரு டைம் டிராவல். அது வெவ்வேறு பரிமாணங்களைக் கடந்து அசுர வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. விஷுவல் மீடியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியென்றால் அது வெப் சீரிஸும் டி.வி சீரிஸும்தான்.

பல்வேறு ஜானர்களில் பல சீரிஸ் வந்துகொண்டேதான் இருக்கிறது. வெவ்வேறு சீஸன்கள், எபிசோடுகள் என ஒரு சீரிஸ் முடிவு பெறுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் அதிகம். 'மென்டலிஸ்ட்', 'டெக்ஸ்டர்', 'சைக்', 'ஒயிட் காலர்', 'பெர்சன் ஆஃப் இன்ட்ரஸ்ட்' எனப் பல சீரிஸ் இந்த வரிசையில் உண்டு. அந்த வகையில் க்ரைம் கலந்த ஃபேன்டஸியில் வெளியான 'லூசிஃபர்' சீரிஸும் ஒன்று. இந்த சீரிஸைப் பற்றிதான் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

Lucifer
Lucifer

இதுவரை மொத்தம் நான்கு சீஸன்களாக 67 எபிசோடுகள் வெளிவந்திருக்கிறது. லூசிஃபர் சொர்க்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நரகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கும் சமயத்தில் வெக்கேஷன் எடுத்துக்கொள்கிறார். பூலோகத்தில் மனிதர்களோடு மனிதர்களாக வாழ ஆரம்பிக்கிறான். 'இந்த டிஸ்க்ளைமருடன்தான் லூசிஃபருடைய கதை ஆரம்பமாகும். லூசிஃபரை சாத்தான் என்று சொல்வார்கள். தன் நிஜ முகத்தை மறைத்து, மனிதனுடைய உருவத்தைப் பெற்று, நரகத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு வந்து வாழத் தொடங்குவதுதான் ஒன்லைன்.

'தி சாண்ட்மேன்' எனும் நாவலில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் தழுவல்தான் இந்த சீரிஸில் இடம்பெற்றிக்கும் கதாபாத்திரங்கள். அந்தப் பழங்கால கதையோடு அதிக மாடர்ன் விஷுவலை சேர்த்திருப்பதுதான் இந்த சீரிஸின் ஸ்பெஷல். அதற்கு மேலும் உயிரோட்டம் கொடுத்திருப்பது லூசிஃபராக நடித்திருக்கும் டாம் எல்லிஸ். 'ஜஸ்ட் லைக் தட்' என தன் நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். கதைக் கருவில் நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தாலும் அதை நம்பும் தன்மையோடு வெளிக்காட்டியிருப்பதும் லூசிஃபரின் கூடுதல் பலம். 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸிலும் இதே ஃபார்முலாவைத்தான் உபயோகித்திருப்பார்கள்.

நீ விரும்புவதற்குப் பின்னால் ஓடுவதுதான் உனக்காக நீ செய்துகொள்ளும் தலை சிறந்த செய்கை!
லூசிஃபர் மார்னிங்ஸ்டார்

கதை ஆரம்பமாகும் சமயத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டாலும் அதற்கு அடுத்தடுத்து கதை நகர்வதில் அதீத சுவாரஸ்யத்தை சேர்த்திருப்பார்கள் இதன் கிரியேட்டர்கள். கதைப்படி லூசிஃபரின் தந்தையும் அம்மாவும்தான் உலகத்தை உருவாக்கியிருப்பார்கள். லூசிஃபர் நரகத்தின் அரசன், அவரின் சகோதரரான அமெனடீல் சொர்க்கத்தின் அரசன். தன் தந்தை மேலிருக்கும் கோபத்தாலும் உலகத்தில் உலாவ வேண்டும் என்ற ஆசையாலும் நரகத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கலிபோர்னியாவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வெக்கேஷன் வந்திருப்பார். அது மட்டுமன்றி இங்கு தனக்குச் சொந்தமாக ஒரு பாரும் வைத்திருப்பார். அவரை மீண்டும் நரகத்துக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் லூசிஃபரின் அண்ணன் அமெனடீல், சில காரணங்களாலும் காதலாலும் உலகத்திலேயே தங்கிவிடுவார். ஒருகட்டத்தில் இருவரும் உலகத்தை நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒருபக்கம் 'லக்ஸ்' எனும் பாரில் ஜாலியாக இருக்கும் லூசிஃபருக்கு, க்ளோயி டெக்கர் எனும் டிடெக்டிவோடு சேர்த்து அந்த ஊரில் நடக்கும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் கன்சல்டன்ட் வேலையும் கிடைக்கும். பல டைப்களில் நடக்கும் கொலைகளை தன் ஸ்டைலில் கண்டுபிடிக்கத் தொடங்குவார், லூசிஃபர். 'What is it you truly desire?' என லூசிஃபர் மனிதர்களுடைய கண்களைப் பார்த்து கேட்டாலே போதும். தன்னை மீறி உண்மையைச் சொல்லிவிடுவார்கள். இது லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் துறைக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். அடுக்கடுக்காகப் பல குற்றங்களைத் துப்புதுலக்கும் லூசிஃபருக்கு, அவருடன் பணியாற்றும் டிடெக்டிவ் க்ளோயி டெக்கர்தான் வீக்னெஸ். லூசிஃபருக்கு சாவென்பதே கிடையாது. யார் என்ன முயற்சி செய்தாலும் அவரைக் கொல்ல முடியாது. ஆனால், க்ளோயி டெக்கர் குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும்போது மட்டும் லூசிஃபர் பாதிப்புக்கு ஆளாவார். இதற்கு பின்னாலிருக்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கும் நோக்கோடுதான் மொத்தக் கதையும் நகரும்.

Lucifer
Lucifer

லூசிஃபராக டாம் எல்லிஸ். அவருடைய பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பும் அவர் ஒரு விஷயத்தை எளிமையுடன் எடுத்துக்கொள்ளும் முறையும்தான் அந்தக் கதாபாத்திரத்துக்கான பலம். 'என்ன நடந்தாலும் ஜாலியா இருக்கணும்' என்பதுதான் அவருடைய சுபாவம். ஆனால் உள்ளே, அவர் ஒரு நரகாசுரன். எந்த நேரமும் தன்னுடைய நிஜ முகமான கோர முகத்தைக் காட்டக்கூடியவர். தவறு செய்யும் மனிதர்களை இரக்கமின்றி தண்டிக்கக்கூடியவர். கண்களைப் பார்த்தே ஒருவரின் ஆழ்மனதிலிருக்கும் ஆசைகளையும் செய்த தவறுகளையும் ஒப்புக்கொள்ள வைக்கும் வசீகரன். இது எதுவுமே ஒரு பெண்ணிடம் எடுபடாமல் போனால் என்னவாகும். யாரையும் எளிமையாக அணுக முடிகின்ற லூசிஃபரால், அந்த டிடெக்டிவ்விடம் மட்டும் நெருங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன. இந்தச் சாத்தானை மனிதனாக்கும் ஒரே ஆள் அந்த டிடெக்டிவ்தான். இவ்வளவு வீக்னெஸ் இருந்தும் லூசிஃபருக்கு அவர் மீதுதான் தீராக் காதல். ஒருகட்டத்தில் லூசிஃபரின் நிஜ முகமும், இவர் உண்மையிலேயே யார் என்பதும் டிடெக்டிவ் க்ளோயி டெக்கருக்குத் தெரிய வரும். அதற்கு இவர் என்ன ரியாக்ட் செய்வார். இவையெல்லாம்தான் ஸ்டைலிஷ் கலந்த காதலோடு விளக்குகிறது லூசிஃபர்.

சமீபத்தில் இதன் அடுத்த சீஸன் குறித்த அப்டேட் வெளியானது. இதுவரை நான்கு சீஸன் வெளிவந்திருக்கும் நிலையில் 5-வது சீஸனோடு இந்த லூசிஃபரின் மொத்த கதையும் நிறைவு பெறுகிறது. நான்காவது சீஸனின் இறுதியில் ஒருகட்டத்தில் க்ளோயி டெக்கருக்கே லூசிஃபர் மீது காதல் வந்துவிடும். பின், சந்தர்ப சூழ்நிலையால் மீண்டும் லூசிஃபர் மீண்டும் நரகத்துக்கே செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும். இதெல்லாம் எப்படி நடந்தது, அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது, யார் அந்த டிடெக்டிவ் க்ளோயி டெக்கர்... இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள லூசிஃபர், உங்களுக்கு மிக அருகில்!

அடுத்த கட்டுரைக்கு