விஜேவாக நமக்கு அறிமுகமானவர், நட்சத்ரா. இவர் திருமணத்திற்கு தயாராகும் புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவருடைய பதிவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

நட்சத்ரா அவருடைய ஸ்கூல் சீனியர் ராகவை மணக்க இருக்கிறார். இருவரும், கிட்டத்தட்ட பத்து வருட நண்பர்களாம். ராகவ், வெளிநாட்டில் படிப்பு முடித்துவிட்டு தற்போது பிசினஸில் பிஸியாக இருக்கிறாராம். நட்சத்ரா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தமிழும் சரஸ்வதியும்' தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தன்னை நன்றாகப் புரிந்துகொண்ட நண்பனைத் திருமணம் செய்து கொள்ளும் குஷியில் நட்சத்ரா இருக்கிறார். பெரியோர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களுடைய திருமணம் வருகிற 9-ம் தேதி நடக்கவிருக்கிறது.
திருமணத்திற்கு முன்னதாக வீட்டில் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும் நலங்கு சடங்கு தற்போது நட்சத்ராவிற்கு நடந்துள்ளது. அந்த நலங்கு புகைப்படத்தையும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த க்யூட் ஜோடிக்கு பலரும் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மாதத்தில் பெரும்பாலான சீரியல் ஜோடிகள் திருமணம் வைரலாக பேசப்பட்டது. அந்த வரிசையில் இந்த ஜோடியின் திருமணமும் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வாழ்த்துகள் நக்ஷத்ரா - ராகவ்!