இந்த சீசனின் கடைசி ‘இம்யூனிட்டி ஐடலை’ தனி ஆளாக மிகச் சிறப்பான முறையில் விளையாடி வென்றெடுத்தார் அம்ஜத். ‘உமாபதி’ சொன்னதுபோல் இதற்கான முழு தகுதியும் அவருக்கு இருந்தது. டிரைபல் பஞ்சாயத்தின் இன்றைய வாரத்தில் அம்ஜத் பாதுகாக்கப்பட்டு விடுவார். ஆனால் மற்றவர்களின் கதி என்னவாகும்? குறிப்பாக காடர்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கிய நிலையில் ஐஸ்வர்யாவின் தலை தப்புமா? இம்யூனிட்டி சவால் போட்டிதான் அதை முடிவு செய்யும்.
சர்வைவர் 83-ம் நாளில் என்ன நடந்தது?
ஒலை வந்தது. கடைசி ‘இம்யூனிட்டி ஐடலுக்காக’ மூன்று டாஸ்க்குகள் நடத்தப்படும். இதை கடைசியாக வென்றிருந்தவர் விக்ராந்த். ஆனால் அவர் இடையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுவிட்டதால் இந்தப் போட்டி நடத்தப்படுகிறதாம். “என்னய்யா இது.. அநியாயமான உருட்டா இருக்கு?" என்பது போல் சிரித்தார் விக்ராந்த். மிக ஜாலியான டாஸ்க்குகளாகவே இவை இருந்தன. அர்ஜுனின் இடத்தில் நின்றுகொண்டு அவரது பாணியில் ‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று சரண் தயங்கிக்கொண்டே கூறியதும் “கொன்டே போடுவோம்” என்று மற்ற போட்டியாளர்கள் இவரை ஜாலியாக மிரட்டியதும் சுவாரசியமான காட்சிகள். மொத்தம் ஒன்பது போட்டியாளர்கள் இருந்தனர்.

ஆனால் இரண்டு அணிகளாக எட்டு பேர்தான் பங்கேற்க முடியும். அதிர்ஷ்டக்கல் மூலம் தேர்வு நடந்தது. இதில் சரணுக்கு மட்டும் நீலக்கல் வந்ததில் யாரும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள். அவருக்கு அப்படியொரு ராசி. “பாக்கெட்ல நாலு நீலக்கல் வெச்சிட்டு சுத்தறேன்னு யாராவது நெனக்கப் போறாங்க” என்று சுய பகடி செய்து கொண்டார் சரண். ஆனால் இதுநாள் வரை அதிர்ஷ்டமாக வந்த நீலக்கல் இம்முறை சரணை ஏமாற்றியது. ஆம், அவரால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியாது. வெளியில் நின்றாக வேண்டும்.
நாராயணன், விக்ராந்த், இனிகோ, அம்ஜத் ஆகியோர் ஒரு அணியாகப் பிரிந்தார்கள். விஜி, உமாபதி, வனேசா, ஐஸ்வர்யா ஆகியோர் இன்னொரு அணியாகப் பிரிந்தார்கள். மூன்று சுற்றுகளில் நடக்கும் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியிலும் மிஞ்சும் இரண்டு நபர்களுக்கிடையில் இறுதிப் போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் ‘இம்யூனிட்டி ஐடலை’ பெறுவார்.
முதல் போட்டி:
ஓர் அணி, இன்னொரு அணியில் உள்ள நால்வரையும் கண்ணைக் கட்டி நிறுத்தி விடுவார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியின் எல்லைக்குள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எட்டு சிலைகளை இவர்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் போட்டி. முதலில் விக்ராந்த் அணி களத்தில் இறங்கியது. மற்றவர்கள் காலால் தடவியும் தவழ்ந்தும் களத்தில் தேடினர். அம்ஜத் மட்டும் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார். தரையில் அமர்ந்துகொண்டு இரண்டு கால்களையும் துடைப்பம்போல் விசிறி விசிறி தரையைத் துழாவிக்கொண்டே முன்னேறினார். இதனால் இரண்டு சிலைகளை அவரால் கண்டெடுக்க முடிந்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் நாராயணன் மூன்று சிலைகளை எடுத்தார். விக்ராந்த் இரண்டு சிலைகளையும் கடைசி வரை தடுமாறிய இனிகோ ஒரு சிலையையும் கண்டெடுத்தார்கள். இவர்கள் தங்களின் டாஸ்க்கை 5 நிமிடத்தில் முடித்தார்கள். எனவே அடுத்து வரும் அணி இந்த நேரத்திற்குள் முடித்தால்தான் வெற்றி.
“விக்ராந்த் எப்படி ஃபீல் பண்றீங்க” என்று அர்ஜுனின் பாணியில் கேட்டார் சரண். “உதைப்பேண்டா” என்கிற மாதிரி சிரித்துக்கொண்டே சைகை காட்டினார் விக்ராந்த். "இனிகோவின் உத்தியைத்தான் நாங்கள் கடைப்பிடித்தோம்” என்று விக்ராந்த் அடுத்ததாக சொன்னது நல்ல காமெடி.

“ஏற்கெனவே நாங்க வின் பண்ணிட்டோம்” என்ற கூடுதல் நம்பிக்கையுடன் சொன்னார் அம்ஜத்.
உமாபதியின் அணி களத்தில் இறங்கியது. எதிரணி நபரான இனிகோ இந்தச் சமயத்தில் ஒரு ஆலோசனை சொன்னார். இந்த ஆலோசனைதான் அவர்களுக்கு பெரிதும் உதவியது என்று சொல்லலாம். “நம்மை அவர்கள் தனித்தனியான பகுதியில் நிற்க வைத்தார்கள். அதற்கு மாறாக அவர்களை ஒரே பகுதியில் சேர்த்து நிற்க வைத்து விடுவோம்” என்பதே இனிகோ தந்த சிறப்பான யோசனை. இதன்படி அனைவரையும் ஒரே இடத்தில் நிற்க வைத்துவிட, ஒருவரையொவரின் கைகளைப் பற்றிக் கொண்டு எல்லைகளை கணக்கு வைத்துக் கொண்டு அவர்கள் ஒன்றாகவே சுற்றினார்கள். இதனால் அதிகமான பகுதியில் தேட முடியாது. இதில் இவர்களுக்கு ஆங்காங்கே வெற்றி கிடைத்தாலும் நேரம் கடந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் பிரிந்து ஆட முற்பட்டபோது வேகம் கூடியது. ‘தாங்கள் தோற்று விடுவோமோ’ என்று இனிகோ பயந்தார். ஆனால் கடைசி சிலையைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் நேரம் கடந்து விட்டதால் விக்ராந்த் அணி வெற்றி பெற்றது.
இரண்டாம் போட்டி:
முதல் போட்டியில் வென்ற நால்வரும் இரண்டு அணிகளாகப் பிரிய வேண்டும். பக்கத்திலிருந்த அம்ஜத்திடம் “ஓகே. நாம ஒரு டீமா இருப்போமா?” என்று விக்ராந்த் கேட்டார். அவர் கேட்டது மிக இயல்பாகத்தான் இருந்தது. ஆனால் அதனுள் ஒரு பிளான் இருக்குமோ என்று அம்ஜத் சந்தேகப்பட்டார். “இன்னமும் அவங்க காடர்களாகத்தான் இருக்காங்க. அவங்கதான் ஃபைனல் வரணும்னு நெனக்கறாங்க” என்று பிறகு சொன்னார் அம்ஜத். அநாவசிய கற்பனை. ஒவ்வொரு அணிக்கும் பத்து அம்புகள் தரப்படும். எதிரே இரண்டு இலக்குகள் இருக்கும். எந்த அணி முதலில் இரண்டு இலக்குகளையும் நெருப்பு அம்பால் அடித்து வீழ்த்துகிறதோ, அந்த அணியே வெற்றி பெறும். நாராயணன், விக்ராந்த், இனிகோ, அம்ஜத் என்கிற வரிசையில் அம்புகளை விட்டார்கள். அம்பு விடுதலில் இவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் அவை இலக்கை நெருங்காமல் பாதி வழியிலேயே விழுந்தன. அடுத்த சுற்றில் சற்று கற்றுக்கொண்டார்கள். “நல்லா ஃபுல்லா இழு. அந்த பவர்தான் முக்கியம்” என்று பார்வையாளராக இருந்த உமாபதி இவர்களுக்கு ஆலோசனை தந்து கொண்டிருந்தார். “கைல சூடு படுதேன்னு பயப்படக்கூடாது. கொஞ்ச நேரம் அதை தாங்கிக்கிட்டு நல்லா இழுத்து விட்டா போகுது” என்ற அம்ஜத், அடுத்த சுற்றில் அதைப் போல் வில்லை நன்றாக இழுத்து காலை அழுத்தமாக வைத்து நின்று குறிபார்த்து முழு விசையுடன் விட, அம்பு நேராகச் சென்று இலக்கின் மீது தைத்தது. வைக்கோலால் செய்யப்பட்ட அந்த இலக்கு பற்றியெரிய ஆரம்பித்தது. அம்ஜத்தின் வெற்றி மற்றவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

‘பாகுபலி’ படத்துல பார்க்கற மாதிரியே இருந்தது’ என்று அம்ஜத்தின் போஸை வியந்தார் வனேசா. அடுத்தடுத்த சுற்றுகளில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. நாராயணன் தனது கற்றலில் இப்போது சற்று முன்னேறியிருந்தார். நான்காவது சுற்றில் அவர் விட்ட அம்பு இலக்கைப் பற்ற வைத்து வெற்றியைத் தந்தது. பிறகு அவருக்கு விரலில் ரத்தக் காயம் ஏற்பட்டதால் முதலுதவியை நாடினார். ஆக இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளி என்கிற அளவில் சமமாக இருந்தன.
அடுத்த சுற்றில் இனிகோ விட்ட அம்பு இலக்கிற்கு மிக நெருக்கமாகச் சென்று பட்டாலும் எரியவில்லை. முதல் வெற்றியைப் பெற்ற அம்ஜத் இப்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்பட்டார். எனவே அவரே அடுத்த வெற்றியையும் பெறக்கூடும் என்று மக்கள் நம்பினார்கள். அது உண்மையாயிற்று. நான்காவது சுற்றில் அவர் முழு சக்தியைப் பயன்படுத்தி விட்ட அம்பு இலக்கை சென்று சேர்ந்தது. ஆக இரண்டு டார்கெட்டுக்களை வீழ்த்தி இந்த வெற்றிக்கு முழுமையான தகுதியை அம்ஜத் பெற்றார்.
மூன்றாவது போட்டி:
தென்கிழக்கு ஆப்ரிக்காவின் முக்கியமான மொழிகளுள் ஒன்று சுவாகிலி (Swahili). தான்சானியா தீவைத்தவிர கென்யா, உகாண்டா போன்ற பிரதேசங்களிலும் இந்த மொழி பயன்படுத்தப்படுகிறது. இந்த மொழியின் உச்சரிப்பில் ஆங்கிலத்தால் எழுதப்பட்ட பன்னிரெண்டு வார்த்தைகள் மற்ற எழுத்துக்களுடன் கலந்திருக்கும். சரியான வார்த்தைகள் மட்டும் வலப்பக்க பலகையில் இருக்கும்.
கலவையாக இருக்கும் எழுத்துக்களில் மறைந்திருக்கும் பன்னிரெண்டு வார்த்தைகளை யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ அவரே வெற்றியாளர். அம்பெறிதல் போட்டியில் வென்ற விக்ராந்த்தும் அம்ஜத்தும் இந்த இறுதிப் போட்டியில் பிரிந்து தனித்தனியாக மோதுவார்கள். “எனக்கு puzzle-க்கும் ரொம்ப தூரம்’ன்னு ஊருக்கே தெரியும்” என்று சுயகேலி பேசியபடி சென்றாலும் மளமளவென்று நாலைந்து வார்த்தைகளை கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்தினார் விக்ராந்த். ஆனால் அம்ஜத்தோ ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்தார். அவர் சரியான வார்த்தைகள் கொண்ட போர்டையே நீண்ட நேரம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார் “அம்ஜத்து… இது மனப்பாடம் பண்ற போட்டியில்ல” என்று உமாபதிகூட கிண்டலடித்தார். ஏன் அவர் அப்படி நிற்கிறார் என்பது மற்றவர்களுக்குப் புரியவில்லை.

“பேய் அடிச்சவன் மாதிரி அம்ஜத் அப்படியே நின்னுட்டு இருந்தாரு. அப்புறம்தான் அவரோட உத்தி புரிஞ்சது” என்றார் நாராயணன். சரியான வார்த்தைகளின் முதல் எழுத்தை நன்றாகப் பார்த்து அந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்ட அம்ஜத் பிறகு கலவையான எழுத்துக்களில் அவற்றைத் துழாவினார். ஒரு தாளில் மறைந்திருக்கும் ஓவியம் மெல்ல மெல்ல புலப்படுவதுபோல அவருக்கு சரியான வார்த்தைகளின் வரிசை தெரிய ஆரம்பித்தன. எனவே மடமடவென்று அவற்றை மார்க் செய்ய ஆரம்பித்தார். இந்தச் சமயத்தில் விக்ராந்த்தும் சில வார்த்தைகளை கூடுதலாக கண்டுபிடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று விட்டார். ஆனால் முறையாக தயார் ஆகியிருந்த அம்ஜத், முதல் வகுப்பு மாணவன் மாதிரி கடகடவென்று முடித்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சர்வைவர் முதல் சீசனின் கடைசி இம்யூனிட்டி ஐடலை வென்ற பெருமை அம்ஜத்திற்கு கிடைத்தது. இந்த வார டிரைபல் பஞ்சாயத்தில் தன்னை பலியிடுவார்களோ என்கிற அச்சத்தை இனி அவர் கொள்ளத் தேவையில்லை.
இந்த ஜாலி டாஸ்க் என்பது மெயின் பிக்சருக்கு முன்னர் வந்த டிரைலர் போலத்தான். அடுத்து நிகழும் இம்யூனிட்டி சவால் மிக முக்கியமானது. அதை வெல்லப் போவது யார்?
பார்த்துடுவோம்.