லேடிகாஷ் போட்டியிலிருந்து வெளியேறி விட்டதால் இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி நடந்தது. இதில் இனிகோ வென்றார். ‘வென்றார்’ என்று ஒரு சம்பிரதாயத்திற்குத்தான் சொல்ல வேண்டும். உண்மையில் இது விஜியின் வெற்றி.
இந்தக் கட்டுரைத் தொடரில் திரும்பத் திரும்ப சொல்லப்படும் விஷயம் இது. ‘போட்டியாளர்களுக்கு பார்வையாளர்கள் உதவக்கூடாது’ என்பது விளையாட்டின் அடிப்படையான இலக்கணம். ஆனால் சர்வைவர் டீம் இதை சரியாக கண்காணிப்பது மட்டுமல்லாமல் பாரபட்சமாகவும் ஊக்குவிக்கிறது. காடர்களுக்கு சார்பான விதிமீறல்கள் நிகழும்போது அர்ஜுனும் தடுப்பதில்லை.
எனில் இந்த விளையாட்டு, வெற்றிகளும் இவற்றின் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழும்.
சர்வைவர் 74-ம் நாளில் என்ன நடந்தது?
‘”போச்சே. போச்சே. நமக்கு எதுவுமே கிடைக்கலையே. ஒரு அட்வான்டேஜ் கிடைச்சாகூட சமாளிக்கலாம்னு பார்த்தா, உள்ளதும் போனது மட்டுமில்லாம.. நமக்கு எதிரா வேற நடக்குதே” என்று இனிகோவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் விஜி. ‘இரண்டாம் முறை சென்று ஆடியிருக்கலாம்’ என்பது அம்மணியின் காலம் கடந்த ஞானோதயம். “அவங்களால நம்ம ஓட்டைத் தடுக்க முடியும். எக்ஸ்ட்ரா ஓட்டை போட முடியும். ஆனா நம்மால எதுவுமே செய்ய முடியாது” என்று தங்களுக்கு நடந்த துரதிர்ஷ்டத்தைப் பற்றி இனிகோவிடம் விளக்கிக் கொண்டிருந்தார் விஜி. “ஓகே.. கேம்ல கவனம் செலுத்துவோம். கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது?” என்று பாசிட்டிவ்வாக பேசி இனிகோ ஆறுதல் அளித்தது சிறப்பு.

இரவு. கேம்ப் பயர் வைத்து கொம்பர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். ‘வெல்கம் பேக்’ என்று ஐஸ்வர்யாவை வரவேற்றார் விஜி. “மூன்றாம் உலகம் நல்லாயிருக்கு” என்று ஐஸ்வர்யா சொல்ல “அப்படியா?.. அங்க போனவங்க எல்லாம் தெறிச்சு ஓடி வந்திருக்காங்க. நீ என்ன இப்படி சொல்றே?” என்று வியந்தார் நாராயணன். “அங்க இருந்தப்ப தத்துவம் எல்லாம் தோணியிருக்குமே” என்று சிரித்தார் முன்அனுபவஸ்தரான அம்ஜத்.
“நீ அங்க இருந்தப்ப யாரை மிஸ் செய்தே?” என்று கேட்ட அம்ஜத், பின்குறிப்பாக “யாரையும் மிஸ் பண்ணியிருக்க மாட்டே. உனக்குப் பிடிச்சவங்கள்லாம் அங்க இருந்தாங்களே” என்று குறும்புடன் சொல்ல, செல்லமான கோபத்துடன் அவரை அடித்து சிரித்தார் ஐஸ்வர்யா. விஜி இவர்களின் ஜோதியில் ஐக்கியமாக முயல, மாமனாரின் முன்னால் அமர்ந்திருக்கும் மருமகன் மாதிரி தர்மசங்கடத்துடன் அமர்ந்திருந்தார் இனிகோ. “பல புத்தகங்களை படித்த ஞானவான் எழுதியது மாதிரி இருந்தது, நந்தா அனுப்பியிருந்த கடிதம்” என்று சிலாகித்தார் அம்ஜத்.
“இந்த வாரத் தலைவர் போட்டிக்கு யார் நிற்பது?” என்கிற பேச்சு வந்த போது முன்ஜாக்கிரதையாக கையைத் தூக்கினார் நாராயணன். ‘அஞ்சு பேருக்குமே போட்டி வெக்கப் போறாங்க’ என்பது அவரது யூகம்.
‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று வரவேற்றார் அர்ஜுன். “இதுவரைக்கும் சர்வைவர் கேம்ல பத்து தலைவர்கள் இருந்திருக்காங்க. இது பதினோறாவது தலைவருக்கான தேர்தல்” என்று ஏதோ சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் கதை போல நினைவுகூர்ந்தார் அர்ஜுன்.
அடுத்து அவர் குறிப்பிட்டது ஒரு முக்கியமான ஆளுமையைப் பற்றி. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த ‘சாம் மானேக்சா’. இளமைப்பருவம் முதலே இவரைப் பற்றி அர்ஜுனின் தந்தை சொல்லியிருக்கிறாராம். எனவே மானேக்சாவை தனது ஹீரோவாக கருதி வருகிறார் அர்ஜுன்.

“தலைமைப்பதவிக்கான தகுதிகள் பற்றி மானேக்சா சில அற்புதமான விஷயங்கள் சொல்லியிருக்கார். ஒரு முடிவை எடுத்தா அதனோட விளைவுகள் எல்லாவற்றிற்கும் தலைவன்தான் பொறுப்பேற்றுக் கொள்ளணும். தனக்கு கீழ் இருப்பவர்களிடம் அவன் பாரபட்சமா நடந்துக்கக் கூடாது. வீரத்தோட இருக்கணும். பயத்தோட ஒரு துளி கூட தெரியக்கூடாது. நேர்மையா இருக்கணும். ஒருவர் மத்தவங்க கிட்ட நேர்மையை எதிர்பார்த்தா முதலில் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கணும். “ஆமாம் சாமி" போடறவர் தலைவருக்கான தகுதியில்லாதவர், சூழலுக்கு ஏற்ப வளைந்து தருபவராக இருக்கணும். மூங்கில் போல உறுதியா இருக்கணும். அதே சமயத்துல வளைஞ்சும் கொடுக்கணும்” என்று அர்ஜுன். விவரித்த விஷயங்கள் கேட்கவே தூண்டுதலாக இருந்தன.
“ஓகே.. நம்ம விஷயத்திற்கு வருவோம். இந்த வாரத் தலைவருக்கான தகுதி – Flexibility – வளைந்து கொடுக்கும் தன்மை. இந்த தலைப்புல வந்து நீங்க ஒவ்வொருத்தரும் பேசணும். அதை வெச்சு யார் தலைவர்-ன்றதை நீங்க முடிவு பண்ணலாம்” என்ற அர்ஜுன் முதலில் அம்ஜத்தை அழைத்தார்.

வேடர்கள், காடர்கள், மூன்றாம் உலகம், கொம்பர்கள் என்று அனைத்து அணிகளிலும் அம்ஜத் இருந்திருக்கிறார். இந்த அம்சம் அவருக்கு எதிராகவே இதுவரை கருதப்பட்டது.. “இடத்துக்கு ஏத்த மாதிரி மாறிடுவாரு” என்று இதுவரை புகாராகவே சொன்னார்கள். ஆனால் இதையே தனது பாசிட்டிவ்வாக இப்போது மாற்றிக் கொண்டார் அம்ஜத். “நான் எல்லா இடத்திலும் இருந்திருக்கேன். அங்கெல்லாம் சூழலுக்கு ஏத்தமாதிரி வளைந்து கொடுத்திருக்கேன். நம்மளுக்குன்னு ஒரு கேரெக்டர் இருக்கும். இருந்தாலும் மத்தவங்களுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்திக்கிட்டு எல்லோரையும் அனுசரிச்சு கூட்டிட்டு வரணும். நான் அதைச் செய்வேன்” என்றார் அம்ஜத்.
அடுத்து வந்த ஐஸ்வர்யா “நான் எப்போதுமே நியாயம்-ன்ற விஷயத்தை நம்பறவ. நாம் முயற்சி செஞ்சும் ஒரு விஷயம் நமக்கு கிடைக்கலைன்னா. அதை விடவும் பெரிய விஷயம் கிடைக்கப் போகுதுன்னு அர்த்தம். மகிழ்ச்சி-ன்றது உள்ளே இருக்கு. வெளியே தேடணும்னு அர்த்தமில்ல. ஒரு லட்சம் பேர் வந்து எதிர்த்தா கூட ஒரு நல்ல முடிவுன்னா அதுக்குத்தான் நான் நிப்பேன்” என்று வீர முழக்கம் செய்தார்.
“தண்ணீர் என்பது வடிவத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாத்திக்கும். நான் அப்படித்தான். இங்க இருக்கற ஒவ்வொருத்தருமே எனக்கு இன்ஸ்பிரேஷன்தான். ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துப்பேன். பாசிட்டிவ்வாதான் யோசிப்பேன்” என்று யாரையும் காயப்படுத்தாமல் ஜாக்கிரதையாக பேசினார் அடுத்து வந்த நாராயணன்.
“தென்னை மரம் வளைந்து கொடுக்கும் ஆனா நிக்கும். அது பலவீனம் இல்ல. புத்திசாலித்தனம். ஒருத்தரோட போக்குலயே போய் தட்டிக் கொடுத்து வேலை வாங்கணும்ன்றது என் பாலிசி” என்று பேசினார் விஜி. “யோகா டாஸ்க்ல யாரு சிறப்பா பண்ணாங்கன்னு வரும் போது நான் நேர்மையா செயல்பட்டேன். அது சரியான முடிவுன்னு எல்லோருமே ஒத்துக்கிட்டாங்க” என்று பேசிய இனிகோ, “கையைத் தட்டுங்கப்பா” என்று பின்குறிப்பாக கேட்டுக் கொண்டார்.
“ஓகே.. இப்ப உங்களுக்கு யார் பேச்சு பிடிச்சிருக்கோ, அவங்களுக்கு மணிமாலையைப் போடுங்க” என்றார் அர்ஜுன்.. யாருக்கு அதிக மாலை விழுகிறதோ, அவரே தலைவர். ஆனால் அப்படி யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பது அனைவருக்குமே தெரிந்தது.

முதலில் எழுந்து வந்த இனிகோ, யாருக்குப் போடுவார்? விஜிக்குத்தான். இரண்டாவதாக எழுந்து வந்த விஜி, எதிர்பார்த்தபடியே பதில் மொய்யை இனிகோவிற்கு எழுதினார். வேடர்களும் மட்டும் சளைத்தவர்களா என்ன? அவர்களும் இதையேதான் செய்தார்கள். நாராயணன், அம்ஜத்திற்கு மாலையணிவித்தார். அடுத்த வந்த ஐஸ்வர்யா, நாராயணனுக்கு அணிவித்தார். அம்ஜத், ஐஸ்வர்யாவிற்கு அணிவித்தார். ஆக. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இரண்டு பேருக்கு இடையில் போட்டியை நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுக்க அர்ஜுன். தீர்மானித்தார்.
யார் அந்த இரண்டு பேர்?
அதிர்ஷ்ட கல்லின் மூலம் இந்தத் தேர்வு நடந்தது. இனிகோ மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் கறுப்பு நிற கல் கிடைத்ததால், அவர்கள் இன்று மோத வேண்டும். “மெயின் டீமிற்குப் போய் டாஸ்க்ல கலந்துக்கணும்” என்று கொலைவெறியோடு இருந்த ஐஸ்வர்யாவிற்கு இது மகிழ்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும். அதிலும் தனக்கு எதிராக வாக்களித்த இனிகோவை ஜெயிப்பதென்றால் அவருக்கு போனஸ் மகிழ்ச்சிதான்.
போட்டியின் உள்ளடக்கத்தை விவரித்தார் அர்ஜுன்.. சர்வைவர் லோகோ பொறிக்கப்பட்ட, புதிர்க் கட்டைகள் இருக்கும். தனக்கு எதிராக போட்டியிடுபவரின் கட்டைகளை மணல் மூட்டையை எறிந்து கலைக்க வேண்டும். அனைத்து கட்டைகளும் விழும் வரை இது தொடரும். பிறகு இரு போட்டியாளர்களும் தங்களின் கட்டைகளை சரியான விதத்தில் அடுக்க வேண்டும். யார் முதலில் சரியாக அடுக்கி முடிக்கிறாரோ, அவரே வெற்றியாளர்; இந்த வாரத்தின் தலைவர்.

போட்டி தொடங்கியது. ஐஸ்வர்யாவின் கட்டைகளை நோக்கி மணல் மூட்டையை ஆவேசமாக எறிந்தார் இனிகோ. நான்கு துண்டுகள் விழுந்தன. தொடர்ந்து அவர் ஆவேசமாக எறிய.. எறிய. கட்டைகள் தொடர்ந்து விழுந்து சிதறின. ஆனால் இனிகோ அளவிற்கு ஐஸ்வர்யாவால் குறிபார்த்து அடிக்க முடியவில்லை. அவரது குறி காற்றில் வீணாக பறந்து இலக்கைத் தாண்டி சென்றன. ‘கீழே அடி’ என்று ஆலோசனை தந்தார் அம்ஜத். பிறகு ஐஸ்வர்யாவின் முயற்சிகளும் சற்று பலிக்கத் துவங்கின. இனிகோவின் கட்டைகள் விழத் துவங்கின. இதற்குள் இனிகோ, ஐஸ்வர்யாவின் அனைத்துக் கட்டைகளையும் அடித்து வீழ்த்தி விட்டார். எனவே இந்தப் பகுதி நிறுத்தப்பட்டு இருவரும் கட்டைகளை சீராக அமைப்பதற்காக பாய்ந்து சென்றனர்.
ஐஸ்வர்யா அடிக்காமல் விட்டதால் இனிகோவின் பக்கத்தில் நான்கு கட்டைகள் விழாமல் அப்படியே இருந்தது இனிகோவிற்கு சாதகமான விஷயமாக இருந்தது. புதிர்க்கட்டைகளை, சர்வைவர் லோகோ சரியாக வரும்படி அடுக்க வேண்டிய நேரம். போட்டியாளர்கள் இருவருமே ‘Puzzle' -ஐ கையாள்வதில் பலவீனமானவர்கள் என்று தெரியும். அதிலும் இனிகோ மிக மிக பலவீனமானவர்.
இந்தச் சமயத்தில்தான் அந்த அநீதி நடந்தது. “எந்தக் கட்டையை எடுக்க வேண்டும்.. எப்படி திருப்ப வேண்டும்.. எப்படி அடுக்க வேண்டும்….” என்பதை குழந்தைக்கு சொல்வது போல் இனிகோவிற்கு சொல்லித்தர ஆரம்பித்தார் விஜி. “மத்தவங்க டிப்ஸ் தரலாம்” என்று அநியாயமான விதிமீறலை அனுமதித்தார் அர்ஜுன்.. ஒரு முக்கியமான போட்டியில், இன்னொருவரின் பெரிய உதவியுடன் ஆட அனுமதிப்பது எந்த வகையான நியாயம் என்று தெரியவில்லை. இனிகோவிற்கு ஒன்றும் புரியாவிட்டாலும் விஜி சொன்னதையெல்லாம் கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றினார்.

விஜியின் உதவியால் இனிகோ மளமளவென அடுக்கிக் கொண்டிருக்க, ஐஸ்வர்யா மிகவும் தடுமாறினார். அவரால் முதல் வரிசையைக் கூட அடுக்க முடியவில்லை. அம்ஜத் உதவ முயற்சித்தாலும் கூட அவரால் இயலாமல் ஒரு கட்டத்தில் “நீயே பண்ணு’ என்று கைவிட்டு விட்டார். ஏனெனில் இந்த விஷயத்தில் இனிகோவிற்கு அதிர்ஷ்டம் உதவியது. அவர் பார்வையாளர் மாடத்தின் அருகே இருந்ததால் விஜி எளிதாக பார்த்து உதவ முடிந்தது. ஆனால் ஐஸ்வர்யா தூரமாக இருந்ததால் அம்ஜத்தால் சரியாக உதவ முடியவில்லை.
அது யாராக இருந்தாலும் போட்டியில் இப்படி உதவுவுது முறையானதல்ல. முன்பு விக்ராந்திற்கும் இதே போல் டிப்ஸ் தந்து உதவினார் விஜி. “விஜி இவ்வளவு சொல்லித் தர்றாங்கன்னா எதுக்கு இந்தப் போட்டியை நடத்தணும்?. பேசாம அவங்களையே தலைவரா ஆக்கிடலாமே.. இதெல்லாம் நியாயமே இல்லை” என்று பின்னர் குமுறிக் கொண்டிருந்தார் அம்ஜத். இதை அவர் அங்கேயே ஆட்சேபித்திருக்கலாம்.
விஜியின் பேருதவியால் புதிரை எளிதாக முடித்த இனிகோ வெற்றி பெற்று தலைவர் ஆனார். ஆனால் அவரால் இந்த வெற்றிக்கு உரிமை கோர முடியாது. மனதார சந்தோஷப்பட முடியாது. இது அவருக்கும் உள்ளே தெரிந்திருந்தது. “விஜி சொல்லிக் கொடுத்துதான் ஜெயிச்சேன். நியாயமா தலைவர் பதவியை அவங்களுக்குத்தான் தரணும்” என்று சிரித்தபடி அவர் ஒப்புக் கொண்டது நேர்மையான விஷயம்.
“அசத்திட்டீங்க இனிகோ. கிளி எடுக்கற மாதிரி ஒவ்வொரு பலகையையும் சரியா எடுத்து வெச்சு அடுக்கிட்டீங்க.. விஜி சொன்னதை சரியா ஃபாலோ பண்ணீங்க.. ஆமா. அதுல இருந்த வார்த்தை என்னன்னு தெரியுமா?’ என்றெல்லாம் அர்ஜுன். இனிகோவிடம் பேசியது மேற்பார்வைக்கு பாராட்டு போல் தோன்றினாலும் சர்காஸ்டிக்கான குத்தல் என்பது தெளிவாகப் புரிந்தது. விஜி சொல்லிக் கொடுத்தது தொடர்பாக அவருக்கும் கூட ஆட்சேபம் இருந்திருக்கலாம். ஆனால் சர்வைவர் நிர்வாகம் அவரின் கையைக் கட்டிப் போட்டிருந்ததா?
“என்னாச்சு ஐஸ்வர்யா?” என்று அர்ஜுன். விசாரிக்க “எனக்கு puzzle வராது சார்” என்று குழந்தையாக மாறி பம்மினார் ஐஸ்வர்யா. “உங்களுக்கு அம்ஜத் சொல்லிக் கொடுத்தார்ல” என்று அர்ஜுன். விசாரிக்க “இங்கே இருந்து சரியா தெரியலை சார்” என்று அம்ஜத் பதிலளித்தார். “அம்ஜத் puzzle கிங் சார்” என்று நையாண்டியாக இனிகோ சொல்ல “அப்படிலெ்லாம் கிண்டலா சொல்லாதீங்க” என்று அர்ஜுனும் இணைந்து சிரித்தார். கடல்வாழ் உயிரினங்களின் சின்னங்களை சரியாக அடுக்கும் டாஸ்க்கில் அம்ஜத் தந்த மிகையான நம்பிக்கையை விஜி நினைவுப்படுத்தி சிரித்தார். “ஓகே.. இதுவரைக்கும் டீம் லீடர்களாக இருந்தவங்களைப் பற்றி அனைவரும் உங்கள் அபிப்ராயங்களைச் சொல்லுங்க. ஒரு ப்ளஸ் பாயிண்ட், ஒரு மைனஸ் பாயிண்ட் சொல்லணும்” என்று அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் அர்ஜுன்..
முதல் வாரத்தில் தலைவராக இருந்த காயத்ரியைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார் விஜி. “மூன்றாம் உலகத்தில்தான் அவங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க கிட்ட இருக்கற உறுதி ஆச்சரியமா இருக்கும். நல்ல பிளேயர். மைனஸ் பாயிண்ட்டுன்னா.. முதல் வாரத்துல அவங்க கோபப்பட்டது. அந்த ஒருபக்கம்தான் அப்ப தெரிஞ்சது” என்று சொல்லி முடித்தார் விஜி.

இந்த வரிசையில் லட்சுமியைப் பற்றி அம்ஜத்தும், உமாபதியைப் பற்றி விஜியும், நந்தாவைப் பற்றி அம்ஜத்தும, விக்ராந்த்தைப் பற்றி விஜியும், சரணைப் பற்றி ஐஸ்வர்யாவும், வனேசாவைப் பற்றி அம்ஜத்தும் ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்டுகளை சொல்லி முடித்தார்கள்.
தலைவராக வென்ற இனிகோவிற்கு பழக்கூடையும் ரகசிய ஓலையும் பரிசாக வழங்கினார் அர்ஜுன்.. “சார்.. மானேக்சா.. பத்தி சொன்னிங்க. அவரை நீங்க மீட் பண்ணீங்களா?” என்ற கேள்வியை இனிகோ எழுப்ப, ரிதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் மானேக்சா, அந்தப் பகுதிக்கு வந்திருப்பதாக தகவல் கிடைக்க, இயக்குநரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தன் கனவு நாயகனை சென்று சந்தித்த அனுபவத்தை பரவசமாக விளக்கிய அர்ஜுன்., பிறகு போட்டியாளர்களிடம் விடைபெற்றுச் சென்றார்.
இனிகோ தலைவராக வெற்றி பெற்றது, விஜியை நிச்சயம் ஆசுவாசப்படுத்தியிருக்கும். இனி நடக்கும் போட்டிகளில் யார் வெல்வார் என்பதைப் பொறுத்துதான் ஆட்டத்தின் போக்கு இருக்கும். அடுத்த போட்டியில் வெல்லப் போகிறவர் எவராக இருக்கும்?
பார்த்துடுவோம்.