Published:Updated:

சர்வைவர் 63: உசுப்பேற்றிய உமாபதி; விட்டுக்கொடுக்காத நந்தா! டிரைபல் பஞ்சாயத்தில் வெளியேறப்போவது யார்?

சர்வைவர்

‘பலமான போட்டியாளர்களை முதலில் வெளியே அனுப்புவது’ ஒரு சிறந்த தந்திரம்தான். ஆனால் அது ஆரோக்கியமான விளையாட்டிற்கு செய்யப்படும் துரோகம்.

Published:Updated:

சர்வைவர் 63: உசுப்பேற்றிய உமாபதி; விட்டுக்கொடுக்காத நந்தா! டிரைபல் பஞ்சாயத்தில் வெளியேறப்போவது யார்?

‘பலமான போட்டியாளர்களை முதலில் வெளியே அனுப்புவது’ ஒரு சிறந்த தந்திரம்தான். ஆனால் அது ஆரோக்கியமான விளையாட்டிற்கு செய்யப்படும் துரோகம்.

சர்வைவர்

`கொம்பர்கள்’ அணி என்கிற பெயர் மாற்றம் நடந்ததே வீண் என்று தோன்றுகிறது. ‘காடர்கள்’, ‘வேடர்கள்’ ஆகிய இரண்டுமே இன்னமும் அணி மனப்பான்மையிலிருந்து விலகாமல் இருப்பது நேர்மையற்றதாக இருக்கிறது. வேடர்களிடமும் அணிப்பாசம் குறைந்துள்ளதுதான் என்றாலும் அவர்கள் பலமான போட்டியாளரை வெளியேற்றாத நேர்மையைக் கடைப்பிடிக்கிறார்கள். பலவீனமான போட்டியாளரை வெளியேற்றத்தான் திட்டமிடுகிறார்கள். இதனால் ஆட்டம் சுவாரஸ்யமாக மாறும். இந்த குறைந்தபட்ச நேர்மையாவது அவர்களிடம் இருக்கிறது.

ஆனால் காடர்கள் கையாளும் அரசியல் மிக மோசமானதாக இருக்கிறது. பெரும்பான்மை என்னும் பலத்தை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்டம், விளையாட்டு தர்மத்திற்கே எதிரானது. தன்னால் ஆட்டத்தை தொடராத நிலையில், உடல் நிலை சரியில்லாத உமாபதிக்கு விக்ராந்த் கொடுத்த அழுத்தம் மோசமான காட்சி. நந்தாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று இனிகோவும் இதில் சேர்ந்தது மிகக் கொடுமை.

விக்ராந்த்
விக்ராந்த்

தாங்கள் பலவீனமான போட்டியாளர்கள் என்று தெரிந்தும் லேடிகாஷூம் வனேசாவும் காடர்களிடம் ஒட்டுண்ணிகளாக இருப்பது மனச்சாட்சியே இல்லாத விஷயம். வாக்களிப்பு என்கிற காரணத்திற்காகத்தான் தாங்கள் பாதுகாக்கப்படுகிறோம் என்பது தெரிந்தும் இந்த ஆட்டத்தில் நீடித்து அவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்? இவர்களோடு ஒப்பிடும் போதுதான் ஐஸ்வர்யா எங்கேயோ உயரத்தில் இருக்கிறார் என்பது புரிகிறது.

‘பலமான போட்டியாளர்களை முதலில் வெளியே அனுப்புவது’ ஒரு சிறந்த தந்திரம்தான். ஆனால் அது ஆரோக்கியமான விளையாட்டிற்கு செய்யப்படும் துரோகம். இவர்களின் விளையாட்டு அரசியல் விவகாரத்தில் அர்ஜூன் தலையிடுவாரா?

சரண்
சரண்

சர்வைவர் 63-ம் நாளில் என்ன நடந்தது?

மூன்றாம் உலகம். ஐஸ்வர்யாவின் கண்ணில் ஏதோ பட்டுவிட்டதால் பரிவுடன் விசாரித்துக் கொண்டிருந்தார் சரண். “யார் இந்த வாரம் எலிமினேட் ஆவார்கள்?” என்கிற இவர்களின் உரையாடலில் ‘வனேசா’வாக இருக்கலாம் என்று சரண் யூகிக்க ‘சான்ஸே இல்லை’ என்றார் ஐஸ்வர்யா. காடர்கள் அந்த அதிர்ஷ்ட தேவதையை தேவைப்படும் வரை பொத்திப் பாதுகாப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். ‘நந்தா, அம்ஜத், நாராயணன் ஆகிய மூவரில் ஒருவர்தான் வெளியேறுவார்’ என்பது இவர்களின் யூகம். அதுதான் நடக்கும் போலிருக்கிறது.

இந்தச் சமயத்தில் ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னார் சரண். அது ‘உண்மையாக இருக்கும் பட்சத்தில்’ காடர்களின் மோசமான அரசியலுக்கு சிறந்த சான்றாக அதைச் சொல்லலாம். “off the camera-ல விக்ராந்த் என்கிட்ட சொன்னாரு. லேடிகாஷ், வனேசா ரெண்டு பேரையும் வோட்டிங்கிற்காககூட வெச்சிக்கலாம். அப்புறம் எலிமினேட் பண்ணிடலாம்” என்று விக்ராந்த் சொன்னாராம். “வனேசா, லேடிகாஷ் போன்றவங்கள்லாம் டாப் 5 வர்றதைப்போல ஒரு மோசமான விஷயம் இல்ல. நானா இருந்தா நிச்சயம் அப்படிப் பண்ண மாட்டேன். எனக்கு சுயமரியாதை இருக்கு” என்றார் ஐஸ்வர்யா.

“ரீ எண்ட்ரி சேலன்ஞ் நடக்கும் போது நீதான் விஜிக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்தே. ஆனா அவங்க மெஜாரிட்டி வோட்டை அம்ஜத்திற்குப் போட்டு உள்ளே சேத்துக்கிட்டாங்க. ஏன் விஜியைத் தேர்ந்தெடுக்கலை?” என்றெல்லாம் ஐஸ்வர்யாவிடம் சந்தேகங்களை எழுப்பினார் சரண். “போலியா இருக்கறதைத்தான் இவங்க கேம் ஃபார்மட்டுன்னு சொல்றாங்க” என்று அலுத்துக் கொண்டார் ஐஸ்வர்யா.

“வேடர்கள் அணியில் நந்தா ஆதிக்கம் செய்வது போல, காடர்கள் அணியில் விக்ராந்தின் ஆதிக்கம் இருந்தது. அவர் சொல்வதைத்தான் கேட்பாங்க” என்று சரண் அடுத்த வெடிகுண்டை தூக்கிப் போட்டார். ஆனால் நந்தாவின் தீவிர ஆதரவாளரான ஐஸ்வர்யா இதை ஒப்புக்கொள்ளாமல் காரணங்களைத் தேடி நந்தாவைக் காப்பாற்ற முயன்றார். “இனிகோவைக் காப்பாற்ற முயல்கிற நந்தா, ஏன் என்னை பின்னுக்குத் தள்ளிவிட்டார். என்னைவிடவும் இனிகோவின்மீது அவர் வைத்த நம்பிக்கை பிறகு பொய்த்ததுதானே?” என்றெல்லாம் நந்தாவின் மீதான புகார் பட்டியலை சரண் சமர்ப்பித்துக் கொண்டே இருக்க “அப்புறம் நீதான் சரின்னு நிரூபிச்சுட்டல. விடு” என்று இந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஐஸ்வர்யா.

‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்கிற தனது டிரேட் மார்க் வசனத்துடன் போட்டியாளர்களை வரவேற்றார் அர்ஜூன். “நீங்க அன்போட செஞ்சு வைச்ச உணவு கிடைச்சது. அருமை” என்று நன்றி சொல்லிய அர்ஜூனிடம் “நீங்க பதில் மொய்யா அனுப்பிச்ச பிரியாணியும் சூப்பர் சார்” என்று சொல்லி போட்டியாளர்கள் மகிழ்ந்தார்கள். உடல்நலம் சரியில்லாத நிலையிலும் ‘இம்யூனிட்டி ஐடல்’ சவாலில் ஜெயித்த உமாபதியை வாழ்த்தினார் அர்ஜூன்.

“சார். ஒரு மாற்றத்திற்கு நாங்க உங்களை கேள்வி கேக்கலாமா?” என்று ஆரம்பித்த விஜியின் முதல் கேள்வியே விவகாரமானதாக இருந்தது. “நீங்க ஏன் அரசியலுக்கு வரலை?” என்றதற்கு “தலை சுத்திடுச்சு” என்று சமாளிக்காமல் “அரசியல் என்பது ஈஸியான விஷயம் கிடையாது. அதில் என்னால் சமாளிக்க முடியாது. அங்கு நான் ‘சர்வைவரா’ இருக்க முடியாது” என்று நேர்மையாக பதில் சொன்ன அர்ஜூனை பாராட்ட வேண்டும்.

உமாபதி
உமாபதி

“ஆன்மீகவாதி அர்ஜூன் பத்தி சொல்லுங்க சார்” என்கிற அடுத்த கேள்வி வந்ததும் “எங்களுக்கு ஆஞ்சநேயர் ஒரு முக்கியமான கடவுள். 32 அடி உயரம், 17 அடி அகலம், 80 டன் வெயிட்டுல ஒரு சிலை செஞ்சு கோயில் கட்டியிருக்கேன்” என்று தனது ஆன்மீக சேவையை பரவசத்துடன் அர்ஜூன் சொன்னார். “ஏன் சார். அதிகமா ஆக்ஷன் படங்களில் நடிக்கறீங்க?” என்று இனிகோ கேட்டதற்கும் அர்ஜூன் சொன்ன பதில் நேர்மையாக இருந்தது. “எனக்கு முதல்ல ஆக்டிங்கே வராது. எப்படி சிரிக்கணும்… அழணும்.. ஒண்ணுமே தெரியாது. ஆனா என் உடம்பு ப்ரூஸ்லி மாதிரி இருந்ததால ஆக்ஷன் ஹீரோ வாய்ப்பு கொடுத்தாங்க. அப்படியே 30, 35 படங்கள் நடிச்சி முடிச்சிட்டேன். அதற்கப்புறம் தோல்வியா வந்துச்சு. அப்புறம்தான் சிறந்த நடிகர்களை கவனித்து நடிப்பைக் கற்றுக் கொண்டேன்” என்றார் அர்ஜூன்.

“சின்ன வயசுல யாராவது க்ரஷ் இருந்திருக்காங்களா?” என்று வில்லங்கமான கேள்வியை சிரித்துக் கொண்டே கேட்டார் வனேசா. “டிவில பார்ப்பாங்களே..?”என்று ஜாலியாக வெட்கப்பட்ட அர்ஜூன் “க்ரஷ்ன்னு சொல்ல முடியாது. ஆனா அவங்க என்னோட பெஸ்ட் பிரண்ட். ஆக்டிரஸ் சவுந்தர்யா. ரொம்ப திறமையான நடிகை. அவங்க விபத்துல இறந்தப்பதான் ‘Missing’-ன்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சது” என்று உருகினார் அர்ஜூன்.

“ஓகே.. ஜாலி போதும் ஜோலிக்கு போவோம்.. இன்னிக்கு இம்யூனிட்டி சவால் பத்தி பாத்துடலாம்” என்று அதன் விளையாட்டு அம்சங்களை விளக்கத் துவங்கினார். பாட்டில் போன்ற அமைப்பில் மூன்று மரக்கட்டைகள் இருக்கும். முதல் கட்டையின் மேல் பரப்பளவு சற்று பெரியதாக இருக்கும். இரண்டாவது கட்டையில் அது குறைந்து விடும். மூன்றாவது கட்டையில் இன்னமும் குறைந்து விடும். போடடியாளர்கள் மூன்று சுற்றுகளில் இதன் மீது கால் வைத்து தாக்குப் பிடிக்க வேண்டும். இது மட்டுமல்ல, தலா பத்து கிலோ என்று இரண்டு பக்கங்களிலும் தொங்கும் மணல் மூட்டையின் கயிற்றையும் இவர்கள் இரண்டு கைகளிலும் பிடித்திருக்க வேண்டும். இது மிகவும் சிரமமான போட்டி என்பது முதலிலேயே தெரிந்து விட்டது. ஆரம்ப நிமிடங்களை கூட எப்படியாவது கடந்து விடலாம். ஆனால் நிமிடங்கள் செல்லச் செல்ல பாட்டிலின் நுனி கால்களில் வலியை ஏற்படுத்தும்.

நந்தா
நந்தா

போட்டி ஆரம்பித்தது. முதல் பாட்டிலின் மீது 15 நிமிடங்கள் நிற்க வேண்டும். சில நிமிடங்கள் கழிந்ததும் வனேசா மிகவும் தடுமாறினார். அவரால் மணல் மூட்டை எடையை அழுத்திப் பிடிக்க முடியவில்லை. இதைப் போலவே லேடி காஷாலும் மணல் மூட்டையின் எடையைத் தாங்க முடியவில்லை. வனேசாவால் சமாளிக்க முடியாமல் ‘சார். சார்..’என்று கூப்பிட “முடியலைன்னா விட்டுரு” என்று அம்ஜத் சொன்னார். “ஒரு ஆள் காலியானா நல்லதுன்னு அம்ஜத் நெனக்கறார் போல” என்று வனேசா பின்னர் சொன்னது அநியாயமான கமெண்ட். இவரால் சமாளிக்க முடியவில்லை என்கிற நிலையில் உதவி கேட்கும் போதுதானே அம்ஜத் தலையிட்டார்?.. பிறகு அர்ஜூன் வந்து உதவி செய்ய, ஆட்டத்தில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறினார் வனேசா.

முதல் 15 நிமிடங்கள் முடிந்து இரண்டாவது நிலை ஆரம்பித்தது. எடை அழுத்தம் காரணமாக லேடிகாஷின் விரல்களில் வலி ஏற்பட்டதால் அவரும் போட்டியிலிருந்து விலகினார். “லேடிகாஷ், வனேசா.. இவங்கள்லாம் இம்யூனிட்டி சவால்ல தனியா நின்னு ஜெயிக்கட்டும்.. பார்த்துடலாம்” என்று ஐஸ்வர்யா முன்பு சவால் விட்டுச் சொன்னதுதான் இப்போது நினைவிற்கு வந்தது.

ஆடாமல் அசையாமல் ஃபோகஸ் செய்து சிலை போல் நிற்கும் தனது பாணியை இங்கும் பின்பற்றினார் நந்தா. இரண்டாவது நிலை முடிந்து மூன்றாவது நிலை ஆரம்பித்தது. இப்போது மிகவும் குறுகிய பாட்டிலின் மீது நிற்க வேண்டும். அதன் மீது குதிகாலை மட்டுமே வைக்க முடியும். விஜியும் அம்ஜத்தும் சிரமப்பட்டு வலியைச் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.

மூன்றாவது பாட்டிலின் மீது மட்டுமல்லாமல் இரண்டாவது பாட்டிலின் மீதும் சேர்த்து நந்தா கால் வைத்துக் கொண்ட விஷயத்தை வனேசா அர்ஜூனிடம் போட்டுக் கொடுத்தார்.. “நேர்மையா ஆடணும்” என்கிற அம்மணியின் இந்தக் கருத்து மிகச் சரியானதுதான். ஆனால் இதையே காடர்கள் செய்திருந்தாலும் இதே நேர்மையை வனேசா கடைப்பிடித்து அர்ஜூனிடம் சொல்லியிருப்பாரா? சந்தேகம்தான்.

நந்தா
நந்தா

போட்டி ஆரம்பித்து நாற்பத்தி நான்காவது நிமிடம் கழிந்த பிறகு வலி தாங்காமல் விஜி வெளியேறினார். “ஒரு மணி நேரம் கழிந்ததும் ஆட்டத்தின் விதிகளில் மாற்றம் செய்யப்படும். தயாரா இருங்க” என்று அர்ஜூன் அறிவிப்பு செய்ததும் ‘ஏற்கெனவே கஷ்டமா இருக்கு. இதுக்கு மேல என்னத்த இம்சையைக் கூட்டப் போறாங்கன்னு தெரியலையே?!” என்று ஒவ்வொரு போட்டியாளரின் மைண்ட் வாய்ஸூம் அலறியிருக்கும்.

போட்டி துவங்கி ஒரு மணி நேரம் கழிந்ததால் ஆட்டத்தின் அடுத்த விதியை அமல்படுத்தினார் அர்ஜூன். அதன்படி கைகளை மடக்காமல் நீட்டியபடி வைத்திருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் விக்ராந்தால் வலி தாங்க முடியவில்லை. எனவே வெளியேறி விடலாமா என்று யோசித்தார். ஆனால் இந்த நேரத்தில் அவர் செய்த காரியம் மிக மோசமானது. “என்னால முடியல. வெளியே போயிடவா?” என்று உமாபதியிடமும் இனிகோவிடமும் கேட்டுக் கொண்ட அவர் “உன்னால முடியும்ல.. கரெக்ட்டா சொல்லு” என்று உமாபதிக்கு நெருக்கடி கொடுத்தார். உடல்நலம் சரியில்லாமல் மாத்திரை போட்டுக் கொண்டிருந்த நிலையிலும் ஆட்டத்தில் கலந்து கொண்ட உமாபதியை பாராட்ட வேண்டும். ஆனால் வேடர்கள் அணியில் எவரும் ஜெயிக்கக்கூடாது என்று தீர்மானித்த விக்ராந்த், அதற்காக உமாபதிக்கு நெருக்கடியும் அழுத்தமும் தந்தது மோசமான விஷயம். இதை இன்னமும் அணி ஆட்டமாகவே இவர்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பது முறையற்றது. ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் தாக்குப் பிடித்த விக்ராந்த், போட்டியில் இருந்து விலகினார்.

போட்டியில் அடுத்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. ‘நிற்பதற்கு ஒரு காலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்தக் கால் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்பதே அந்த மாற்றம். ‘இடது காலை பயன்படுத்தலாம்’ என்று நந்தா முடிவு செய்து கொண்டார். இந்தச் சமயத்தில் நாராயணனால் சமாளிக்க முடியாமல் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இவர் தாக்குப் பிடித்த நேரம், 1 மணி, 29 நிமிடங்கள்.

ஒரு காலில் நிற்கும் மாற்றம் கொண்டு வரப்பட்ட அடுத்த நிமிடமே சமாளிக்க முடியாமல் அம்ஜத் விலகிக் கொண்டார். ஆக போட்டியில் இன்னமும் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் நந்தா, இனிகோ மற்றும் உமாபதி. “நந்தாவோட ஸ்போர்ட்ஸ்மேன் குணத்தை நினைச்சா வியப்பா இருக்கு. அவர் கிட்ட இம்யூனிட்டி ஐடல் இருக்கு. உடம்பு வேற சரியில்ல. இருந்தாலும் இப்படி கஷ்டப்படறார்” என்று சிலாகித்து பேசினார் விஜி. ஒரு காலை வைத்திருந்தாலும் குதித்து குதித்து சமாளித்துக் கொண்டிருந்த உமாபதி, ஒரு கட்டத்தில் கால் வழுக்கி கீழே விழ, போட்டியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. இவரை அரவணைத்து ஆறுதல் சொன்னார் விக்ராந்த்.

இப்போது போட்டியில் மிஞ்சியிருந்தவர் நந்தா மற்றும் இனிகோ மட்டுமே. நந்தாவால் கால் வலி தாங்காமல் சமாளித்துக் கொண்டிருக்க, இந்தச் சமயத்தில் உமாபதி செய்த காரியம். விக்ராந்த் செய்ததை விடவும் மோசமாக இருந்தது. “நந்தா அவ்ளதான். காலி.. காலி.. போட்டி முடிஞ்சது” என்று அவர் உரக்க கத்தியது மிகவும் அருவருப்பான விஷயம். போட்டி முடிவதைப் பற்றி அர்ஜுன்தான் சொல்ல வேண்டும். உமாபதியின் சீண்டல் காரணமாகவே தன்னை நந்தா உறுதியாக்கிக்கொள்ள உமாபதியின் முகம் தொங்கிப் போனது. “செத்தாலும் ஆட்டத்தை விடக்கூடாதுன்னு நெனச்சிக்கிட்டேன்” என்று உறுதி பூண்டார் இனிகோ. காடர்களிடம் இத்தனை விசுவாசமா?

இனிகோ
இனிகோ

போட்டி ஆரம்பித்து 96வது நிமிடத்தில் நந்தாவால் வலி தாங்க முடியாமல் கீழே இறங்கி விட, அதுவரை தாக்குப் பிடித்த இனிகோ வெற்றி அடைந்தார். விக்ராந்த்தும் உமாபதியும் ஓடிவந்து முத்தம் கொடுத்து இனிகோவைப் பாராட்டினார்கள். இனிகோவிற்கு இம்யூனிட்டி வாள் கிடைத்தது. டிரைபல் பஞ்சாயத்தில் இவரை எதிர்த்து யாரும் வாக்களிக்க முடியாது.

‘இம்யூனிட்டி சவால்’ முடிந்ததும் ‘இந்த வாரம் யாரை வெளியேற்ற வேண்டும்’ என்கிற உக்கிரமான விவாதம் நடந்தது. காடர்கள் ஒன்று கூடி வேடர்களில் ஒருவரை டார்கெட் செய்தார்கள். “வலிமையான தனிநபர்தான் போட்டியில் நீடிக்க வேண்டும்’ என்கிற நியாயமான கருத்தை விஜியிடம் சொன்னார் அம்ஜத். “வலிமையான போட்டியாளர்களை முதலில் வெளியே அனுப்ப வேண்டும்” என்கிற விவகாரமான கருத்தை விஜி பரிந்துரைக்க “இது எனக்கு சரியாப்படல. இப்பவும் நாம டீமா ஆடக்கூடாது” என்று அம்ஜத் நேர்மையாக மறுத்தது சிறப்பான விஷயம்.

அம்ஜத்
அம்ஜத்

பலவீனமான போட்டியாளர்களில் ஒருவர்தான் வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அம்ஜத் ‘வனேசா’விற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தார். “காடர்கள் ஃபேவரிட்டிஸத்தைததான் டிரஸ்ட்ன்னு சொல்றாங்க” என்று அம்ஜத் சொன்னது சரியானது. “எனக்கு யாருக்குத் தோணுதோ, அவங்களுக்குத்தான் வோட்டு போடுவேன்” என்று தனிநபராக நந்தா தீர்மானித்ததும் சிறப்பான விஷயம்.

காடர்கள் ஒன்று கூடி ‘அம்ஜத்திற்கு’ டார்க்கெட் செய்வதைப் போல் தெரிகிறது. அவர் இரு அணியிலும் இருந்ததால் முதலில் அவரை காலி செய்ய நினைக்கிறார்கள். “அவரு மூன்றாம் உலகத்திற்கு போய் தங்கச்சி ஐஸ்வர்யாவிற்கு வழிகாட்டட்டும்” என்று கிண்டலடித்தார் இனிகோ. லேடிகாஷூம் வனேசாவும் எவ்வித குற்றவுணர்வும் இன்றி காடர்களின் அரசியலுடன் உடன்பட்டுக் கொண்டிருந்தார்கள். நாளை அவர்களே பலியாகப் போகும் நாளில் என்ன செய்வார்கள் என்று பார்க்க வேண்டும்.

“இவிய்ங்க ஐஸ்வர்யாவை ஏன் தூக்கினாங்கன்னு தெரியலை” என்று இன்னமும் குழம்பிக் கொண்டிருந்தார் அம்ஜத். ஐஸ்வர்யாவும் வலிமையான போட்டியாளர் என்பது காடர்களின் கருத்து. “இங்க இன்னமும் இரண்டு பிரிவாத்தான் இருக்கு” என்று நாராயணன் வருத்தத்தோடு சொன்னதோடு எபிசோட் நிறைவடைந்தது.

டிரைபல் பஞ்சாயத்தின் வாக்கெடுப்பில் காடர்களால் பலியாகப் போகிறவர் யார்? காடர்களின் இந்த number game அரசியல் பற்றி அர்ஜூன் கேள்விகளை முன்வைப்பாரா? அல்லது கள்ளமெளனம் சாதிப்பாரா?

பார்த்துடுவோம்.