Published:Updated:

சர்வைவர் 75: அடுத்தடுத்த வெற்றியில் ஐஸ்வர்யா; அர்ஜுனிடம் பெற்ற ரிவார்ட்!

சர்வைவர் 75

‘இனிகோ வேண்டுமென்றே செய்கிறாரோ?” என்று நினைத்தால் அதன் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான திட்டம் இருந்தது.

Published:Updated:

சர்வைவர் 75: அடுத்தடுத்த வெற்றியில் ஐஸ்வர்யா; அர்ஜுனிடம் பெற்ற ரிவார்ட்!

‘இனிகோ வேண்டுமென்றே செய்கிறாரோ?” என்று நினைத்தால் அதன் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான திட்டம் இருந்தது.

சர்வைவர் 75
‘மெயின் அணிக்குத் திரும்புவேன், டாஸ்க்கில் வெல்வேன்” என்று சபதம் ஏற்ற ஐஸ்வர்யா, ரிவார்ட் சேலன்ஞ்சில் அபாரமாக வென்றதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். அம்மணிக்கு கடுமையான உழைப்போடு அதிர்ஷ்ட தேவதையும் கூடவே நிற்கிறார். தலைவர் போட்டியில் தோற்றதை நேற்று அட்டகாசமாக ஈடுகட்டி விட்டார் ஐஸ்வர்யா.

“விருந்துக்கு வந்திருக்காங்க” என்று கிண்டலடித்த இனிகோ, (அந்த வாய் இருக்கே?!) பின்னா் ஐஸ்வர்யாவின் வெற்றியை வாய் பிளந்து பார்த்தது ஒரு சுவாரஸ்யமான தருணம்.

சர்வைவர் 75-ம் நாளில் என்ன நடந்தது?

“களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று ஆரம்பத்திலேயே டாப் கியரைப் போட்டார் அர்ஜுன். விஜிக்கு அன்று மணநாள் என்பதை அறிந்தவுடன் “25-வது மணநாள் வாழ்த்துகள்’ என்று ஜாலி மூடில் கிண்டலடித்தார். “அய்யோ.. சார்,. எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம்தான் ஆகுது” என்பதை தனது டிரேட்மார்க் சிரிப்புடன் சொன்னார் விஜி. அடுத்த ஜாலியான பந்தை ஐஸ்வர்யா நோக்கி வீசிய அர்ஜுன் “உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடம் ஆச்சு?” என்று சிரிக்க “சார். நான் இன்னும் எனக்கு ஆகலை” என்று ஐஸ்வர்யா சொல்ல “தெரியும்.. தெரியும். சும்மா தமாஷ்” என்றார்அர்ஜுன் .

அர்ஜுன்
அர்ஜுன்

“மெயின் டீமுக்கு வந்திருக்கீங்க. நிலவரம் எப்படியிருக்கு?” என்று ஐஸ்வர்யாவை அர்ஜுன் விசாரிக்க “நார்மலா போயிட்டிருக்கு சார்.. இங்க வர்றதுக்கு முன்னாடி எப்படி இருக்குமோன்னு நிறைய யோசனை இருந்தது. எனக்கு ஓட்டு போட்டவங்கள்லாம்கூட இங்க இருக்காங்க. ஆனா ஒரு பிரச்னையும் இல்லாமப் போகுது” என்று ஐஸ்வர்யா பாசிட்டிவ்வாக பேச, இனிகோவோ இடக்காக பேசினார். “உங்க நாத்தனார் என்ன சொல்றாங்க?” என்கிற அர்ஜுனின் கிண்டலுக்கு “விருந்துக்கு வந்திருக்காங்க” என்ற இனிகோவின் கமென்ட் ரசிக்கத்தக்கதாக இல்லை.

“நீங்கதான் புது தலைவர். உங்க அணிக்கு என்ன தேவைன்னு நெனக்கறீங்க?” என்று இனிகோவிடம் கேட்கப்பட்டது. “நம்பிக்கை தேவை.. (யாருக்கு?).. அப்புறம் சாப்பாடு சில வசதிங்கள்லாம் தேவைப்படும்” என்று பதில் சொன்னார் இனிகோ. ரூமி சொன்னதாக பல போலியான மேற்கோள்கள் இணையத்தில் உலவுகின்றன. இதில் அர்ஜுன் சொன்னது உண்மையானது. “ரூமி சொனனதில எனக்குப் பிடிச்ச வரி என்னன்னா ‘What You Seek is Seeking You’.. நீங்க எதைத் தேடுகிறீர்களோ, அதுவும் உங்களைத் தேடியிருக்கும்.. இந்த நம்பிக்கைதான் இப்ப தேவை.” என்ற அர்ஜுன் “மருத்துவ சிகிச்சைக்கு சென்றிருக்கும் நமது நண்பர்கள் நலம் பெற்று வருகிறார்கள். விரைவில் அவர்கள் அணிக்குத் திரும்புவார்கள்” என்கிற நல்ல தகவலைத் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன்தான் விஜிக்கும் இனிகோவிற்கும் சற்று ஆசுவாசம் கிடைத்திருக்கும்.

“ஓகே.. இந்த வார ரிவார்ட் சேலன்ஞ் பத்திப் பார்க்கலாம். இதில் நாலு ஸ்டேஜ் இருக்கும். ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் ஒருத்தர் எலிமினேட் ஆவாங்க.” என்று முதல் ஸ்டேஜை அறிமுகப்படுத்தினார். இரும்பு ஸ்க்ரூவில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு பெரிய அளவு வட்டை, சுழற்றி சுழற்றி வெளியே எடுக்க வேண்டும். இதைக் கையாளும் நபரே சுற்றி எடுத்தால்தான் எடுக்க முடியும். போட்டி ஆரம்பித்தது. மற்றவர்கள் எல்லாம் வேக வேகமாகச் சுற்ற, இனிகோ மட்டும் மிக மிக மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தார்.

இனிகோ
இனிகோ

‘இனிகோ வேண்டுமென்றே செய்கிறாரோ?” என்று நினைத்தால் அதன் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான திட்டம் இருந்தது. இந்த பெரிய வட்டை ராட்டினம் போல பல முறைகள் சுற்றி எடுக்கும் போது நிச்சயம் ஒருவரின் தலை சுற்றும். இதற்கு அடுத்த நிலையில் இரண்டடி உயரத்தில் இருக்கும் ஒற்றைச் சுவரில் நடக்க வேண்டும். தலைச்சுற்றலோடு நிச்சயம் அதில் நடக்க முடியாது. ஆகவே வேகமாக சுற்றி முதலில் சென்று தடுமாறுவதை விடவும் சற்று மெதுவாக சுற்றி விட்டு சென்றால் உடனே ஜெயிக்கலாம். இதுதான் இனிகோவின் பிளான்.

‘தலைவர் போட்டிதான் கையை விட்டுப் போயிற்று, இதில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்’ என்கிற ஆவேசத்தோடு செயல்பட்டார் ஐஸ்வர்யா. அவர் சுற்ற சுற்ற வட்டு சுற்றிக் கொண்டே இருந்ததே ஒழிய, வெளியில் வந்தபாடில்லை. “சார். இது ஸ்ட்ரக் ஆயிடுச்சு போல” என்று விஜி புகார் சொல்லுமளவிற்கு அது சுற்றிக் கொண்டேயிருந்தது.

விஜி
விஜி

ஆனால் விடாமல் ஆவேசத்தோடு செயல்பட்ட ஐஸ்வர்யாவிற்கு ஒரு நிலையில் வெற்றி கிடைத்தது. முதன் முதலில் அந்த டிஸ்க்கை வெளியே எடுத்தவர் அவர்தான். அடுத்து அவர் அந்த ஒற்றைச் சுவரின் மீது ஏறி நடக்க வேண்டும். அதன் மீது ஏறியவுடனேயே பெட்ரோல் விலையைப் பார்த்த சராசரி குடிமகன் மாதிரி அவருடைய தலை சுற்றியது. சறுக்கி கீழே இறங்கினார். இப்படியாக சில தடவைகள் தடுமாறிய பிறகு ஒரு புதிய உத்தியை கையாண்டார் ஐஸ்வர்யா. நேராக நடக்காமல் Squad பொஷினனில் குறுக்குவாக்கில் நடக்கத் துவங்கினார். இதில் அவருக்கு வெற்றி கிடைத்தது.

வட்டை எடுப்பதில் அம்ஜத் இரண்டாவதாகவும் நாராயணன் மூன்றாவதாகவும் வந்தார்கள். ஆனால் அவர்களால் ஒற்றைச்சுவரில் ஏறி நிற்க முடியவில்லை. ஐந்து கட்டிங் போட்டவர்கள் போல் தள்ளாடி தள்ளாடி கீழே விழுந்தார்கள். இதுதான் இந்த ஆட்டத்திலுள்ள சுவாரஸ்யமே. வட்டை மெதுவாக சுற்றி கடைசியில் முடித்த இனிகோ, எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் கெத்தாக ஏறி நடந்து வந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். விஜியும் எப்படியோ சமாளித்து வர மூன்றாம் இடம் அவருக்கு கிடைத்தது.

அம்ஜத்
அம்ஜத்

ஆக அம்ஜத் மற்றும் நாராயணன் ஆகிய இருவரில் யார் கடைசியில் வருகிறாரோ, அவர் எலிமினேட் ஆகி விடுவார். இந்தச் சமயத்தில் ‘எப்படி வர வேண்டும்’ என்கிற டிப்ஸை அம்ஜத்திற்கு தந்தார் ஐஸ்வர்யா. இப்படி மற்றவருக்கு உதவும் விஷயத்தை யார் செய்தாலும் அது தவறுதான். இது தனிநபர் ஆட்டமாக மாறி விட்ட பிறகு அவரவர்களின் திறமையில்தான் முன்னேற வேண்டும். இன்னமும் காடர்கள், வேடர்கள் பாசம் கூடாது. என்றாலும் அம்ஜத்தால் ஏறி வர முடியவில்லை. நிறைய தடுமாறினார். நாராயணன் சிரமப்பட்டு வந்து விடவே முதல் நிலையில் அம்ஜத் எலிமினேட் ஆனார்.

இரண்டாவது நிலை. இது ஐஸ்வர்யாவிற்கு ஏற்கெனவே கண்டமாக அமைந்த டாஸ்க். இடுப்பில் பிணைக்கப்பட்ட கயிறுடன் பல முடிச்சுகளில் புகுந்து வெளியேறி வர வேண்டும். கடந்த முறை இதே டாஸ்க்கில் தவறான திசையில் வந்து முடிச்சு இறுகி ஆரம்ப நிலையிலேயே ஐஸ்வர்யா மாட்டிக் கொண்டார். எனவே இம்முறை மிக கவனமாக வெளியேறும் வியூகங்களை அவர் கண்டடைந்தார். இந்தச் சுற்றில் ஆரம்பத்தில் நாராயணனின் வேகம் அதிகமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரும் எங்கேயோ மாட்டிக் கொண்டார்.

சர்வைவர் டாஸ்க்
சர்வைவர் டாஸ்க்

இதில் இனிகோவின் நிலைதான் அதிக பரிதாபம். முதல் நிலையை ராஜதந்திரத்துடன் அவர் கடந்து வந்து விட்டாலும் இந்தச் சுற்றில் மிகவும் தடுமாறினார். எதிர் திசையில் நுழைந்து விட்டதால் எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தடுமாறி மிக மிக நிதானமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். “இது ரிவார்ட் சேலன்ஞ்தான். இம்யூனிட்டி சவாலுக்காக என் சக்தியை சேகரிச்சு வெச்சிருக்கேன். கால்ல வேற அடிபட்டிருக்கு” என்று பிறகு அவர் சொன்னது சமாளிப்பாகத் தெரிந்தது.

இந்த இரண்டாவது நிலையில் விஜி முதலாவதாக வந்து பெருமிதத்துடன் நின்றார். சற்று சிரமப்பட்டாலும் அடுத்து வந்து விட்டவர் ஐஸ்வர்யா. “நாராயணா. நீ எப்படியாவது சீக்கிரம் போய் என்னைக் காப்பாத்து.. முடியல” என்று ஜாலியாக கெஞ்சிக் கொண்டிருந்தார் இனிகோ. நாராயணன் சற்று சிரமப்பட்டாலும் ஒரு கட்டத்தில் வெளியேறும் வழியை அடைந்தார். எனவே இனிகோ எலிமினேட் ஆனார்.

மூன்றாவது நிலை. இதை அர்ஜுன் சொன்னவுடனேயே வனேசாவின் ஞாபகம் வராமல் இருக்க முடியாது. ஆம். குச்சிகளை இணைக்கும் டாஸ்க். தேங்காய்களை மேலே இருக்கும் கூடையில் எறிய வேண்டும். குறிப்பிட்ட எடை சேர்ந்ததும் அது கீழே இறங்கி, ஏடிஎம் பணம் போல சில குச்சிகளை அளிக்கும். அந்தக் குச்சிகளை இணைத்து ஒரு நீளமான கம்பாக்கி, ஒரு சன்னலின் வழியாக நுழைத்து அங்கு மாட்டப்பட்டிருக்கும் மூன்று சாவிகளை எடுக்க வேண்டும். அதை வைத்து பூட்டை திறந்து முதலில் யார் வெளியேறுகிறாரோ, அவரே வெற்றியாளர்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

தேங்காய் எறிதலில் ஐஸ்வர்யாவின் பங்கு சிறப்பாக அமைந்தது. அவர் எறியும் ஒவ்வொரு தேங்காயும் மிக கச்சிதமாக சென்று கூடையில் அமர, குச்சிகள் முதலில் அவருக்குத்தான் கிடைத்தன. “அவசரப்படாம நிதானமா கட்டி, கம்பை நேரா இருக்குமாறு உருவாக்கினாதான் வெற்றி கிடைக்கும்’ என்கிற திட்டத்துடன் குச்சிகளை உறுதியாக இணைக்கத் துவங்கினார் ஐஸ்வர்யா. இந்த முயற்சியில் வெற்றி பெற்று கம்பை நுழைத்து முதல் சாவியை ஐஸ்வர்யா வெற்றிகரமாக எடுத்த போது, பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இனிகோ ‘ஆ’வென்று வாய் பிளந்தார்.

குச்சிகளை இணைப்பதில் இரண்டாவதாக வந்தார் விஜி. கயிற்றில் விடுவித்துக் கொள்ளும் டாஸ்க்கில் நாராயணன் நிறைய சக்தியை இழந்திருந்ததால் அவரால் தேங்காய்களை முழு பலத்துடன் எறிய முடியவில்லை. அதையும் முடித்து அவர் வந்தால், குச்சிகளை இணைக்கும் கயிறு ஏகப்பட்ட சிக்கல்களுடன் அமைந்திருந்தது. (போட்டியின் போது இப்படி நமக்கு நேரும் நடைமுறை துர்அதிர்ஷடங்கள் கூட தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும்). இந்தச் சூழலில் இரண்டாவது சாவியையும் ஐஸ்வர்யா எடுத்து விட்டார். ‘சூப்பர் ஐசு’ என்று கைத்தட்டி பாராட்டினார் அம்ஜத்.

விஜி தன்னுடைய முதல் சாவியை எப்படியோ எடுத்து விட்டாலும் அவருடைய கம்பு வளைந்து விட்டதால் மீண்டும் சரியாக்க வேண்டிய நிலைமை. ஐஸ்வர்யாவிற்கும் இதே பிரச்சினைதான். கட்டுக்களை அவிழ்த்து மீண்டும் பலமாக இணைத்து கட்டிக் கொண்டிருந்தார். கடுமையான வெயில் அடித்ததால் போட்டியாளர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

எப்படியும் நாராயணன் பின்தங்கி விடுவார் என்று நினைத்த போது ஒரு திருப்பம் நிகழ்ந்தது. தான் கோணல் மாணலாக உருவாக்கியிருந்த கம்பின் மூலம் அவர் சாவியை மிக மிக நிதானமாக எடுக்க வெற்றி கிடைத்தது. நாராயணனின் கைகள் நீளமாக இருந்தது ஒரு சாதகமான அம்சமாக அவருக்கு இருந்தது.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

மூன்றாவது சாவியை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஐஸ்வர்யா. அவருடைய கம்பின் நுனியில் சாவி தொங்கி கீழே விழுந்து விடும் போல் இருந்தது. மிக நிதானமாக அவர் செயல்பட்டாலும் ஐஸ்வர்யாவிற்கும் நிதானத்திற்கும்தான் தூரமாச்சே?! சாவி வழியிலேயே விழுந்து விட, கம்பால் அதைக் கைப்பற்றி எப்படியோ எடுத்து விட.. முதல் வெற்றி ஐஸ்வர்யாவிற்கு. சாவிகளைக் கொண்டு பூட்டைத் திறந்து நான்காம் நிலைக்கு முதலில் சென்றார்.

ஆக. இப்போது போட்டி விஜிக்கும் நாராயணனிற்கும் இடையில் என்பதாக மாறியது. விஜி முந்தி விடுவாரோ என்று பார்த்தால், அவர் கம்பை இணைப்பதில் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். ‘கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்’ என்கிற ரேஞ்சில் நாராயணன் கம்பு வைத்திருந்தாலும் அதைக் கொண்டே அடுத்தடுத்த சாவிகளை எடுத்து அசத்தி விட்டார் ஏற்கெனவே குறிப்பிட்டபடி கைகள் நீளமாக இருந்தது அவருக்கு வசதியாகப் போய் விட்டது. ஆக இந்த ரவுண்டில் விஜி எலிமினேட் ஆனார்.

விஜி , ஐஸ்வர்யா
விஜி , ஐஸ்வர்யா

நான்காவது நிலை. அதாவது இறுதிக் கட்ட போட்டி. இதில் ஐஸ்வர்யாவும் நாராயணனும் மோதுவார்கள். பெரிய வட்டம் முதல் சிறிய வட்டம் வரை வெவ்வேறு அளவுகள் கொண்ட வட்டுக்கள் இடது பக்கம் இருக்கும். நடுவில் உள்ள மேடை காலியாக இருக்கும். இடது பக்க வட்டுக்களை அதே மாதிரியான வரிசையில் வலது பக்கத்தில் அடுக்க வேண்டும். “சிறிய வட்டின் மீது பெரிய வட்டை அடுக்கக்கூடாது” என்பது முக்கியமான விதி.

பார்ப்பதற்கு எளிய விளையாட்டு போல் தோன்றினாலும் மூளையை உபயோகித்து ஆட வேண்டிய ஆட்டம் இது. ‘புலி, ஆடு, புல்லுக்கட்டு’ விளையாட்டு போல, ஒன்றைத் தூக்கி இங்கே வைத்து விட்டு, இன்னொன்றைக் கொண்டு அங்கு போய் வைத்து, மீண்டும் இதை எடுத்து.. என்பது போல் ஆட வேண்டும்.

“வெரி இன்ட்ரஸ்ட்டிங். மூளைக்கு சேலன்ஞ்சிங்கா இருக்கு” என்று ஐஸ்வர்யா சிலாகித்தாலும் நிறைய தடுமாறி நின்றார். அவர் Puzzle-ல் வீக் என்பது ஜான்சிபார் தீவு முழுக்க தெரியும். “பண்றதையே திருப்பித் திருப்பி பண்றா” என்றார் விஜி. “எடுக்கறா. வைக்கறா.. ரீப்பீட்டு” என்று மாநாடு நடத்திக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அவராவது பரவாயில்லை. அவரை விடவும் அதிகமாக குழம்பிக் கொண்டிருந்தார் நாராயணன். ஒரு கட்டத்தில் இதன் சூட்சுமம் ஐஸ்வர்யாவிற்குப் புரிந்துவிட மளமளவென அடுக்கி ஆட்டத்தை முடித்தார்.

ஆக.. இன்றைய ரிவார்ட் சேலன்ஞில் ஐஸ்வர்யா வெற்றி. இதனால் மிகவும் குஷியானார் அம்ஜத். இனிகோ மற்றும் விஜியின் முகங்களில் ஈயாடவில்லை.

“வாழ்த்துகள் ஐஸ்வர்யா” என்ற அர்ஜுன் “இன்னிக்கு பெரிய சேலன்ஞ் வெயில்தான். ரொம்ப கடுமையா இருந்ததில்லையா?” என்று கேட்க “ஆமாம். சார்.. மண்டைல இறங்கிறா மாதிரி இருந்தது. கறுப்பு டிரஸ் போட்டிருந்ததால வெயில் நிறைய அப்ஸர்ப் ஆச்சு. அதனாலதான் மேல சட்டையைப் போட்டேன்” என்றார் விஜி.

“ஓகே.. ஐஸ்வர்யாவிற்கு என்ன ரிவார்டுன்னு பார்த்துடலாமா?” என்று ஆரம்பித்த அர்ஜுன் “சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் கறி” என்று ஆரம்பிக்க ஆவலுடன் பார்த்த ஐஸ்வர்யாவின் முகம் தொங்கிப் போயிற்று. அவர் வெஜிட்டேரியன் என்பதால் ஏமாற்றமடைந்தார். இதைப் பார்த்து சிரித்த அர்ஜுன் “வெஜ் புலாவ், பிரைட் ரைஸ், கோக்கனட் டிராட்” என்று சைவ வகைகளைச் சொன்னவுடன்தான் ஐஸ்வர்யாவின் முகத்தில் சிரிப்பு வந்தது.

“நீங்க விருந்தாளியா ரெண்டு பேரைக் கூட்டிட்டு போலாம்” என்று அர்ஜுன் சலுகை தந்தவுடன் “விஜிக்கு இன்னிக்கு வெட்டிங் ஆன்வர்ஸரி.. அதனால அவங்களை கூட்டிட்டு போறேன்” என்றவுடன் விஜி குஷியாகி ஐஸ்வர்யாவிற்கு நன்றி சொன்னார். அடுத்த ஆள்? “அம்ஜத்தை கூட்டிட்டு போறேன். அவர்தான் சிக்கன்லாம் நல்லா சாப்பிடுவாரு” என்று ஐஸ்வர்யா சொல்ல “ஏன். என்னையெல்லாம் கூப்பிட்டா வரமாட்டமா. வெஜ் கூட இருக்கே?” என்று தன்னுடைய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு நாராயணன் காமெடி செய்ய “வெஜ்னா போட்டி இருக்கும். நாராயணனும் நல்லா சாப்பிடற ஆள்” என்று தன் சுயநலத்தை சிரித்துக் கொண்டே சொன்னார் ஐஸ்வர்யா.

சர்வைவர் கரன்ஸியை ஐஸ்வர்யாவிற்கு பரிசளித்த அர்ஜுன் “உங்களுக்கு ஒரு போனஸ் பரிசும் இருக்கு. உங்க மூணு பேருக்கும் குடும்பத்தினரிடமிருந்து வந்த வீடியோ மெசேஜ் காட்டப்படும்” என்று வாழ்த்தி விடைபெற்றார்.

ஆக. ஐஸ்வர்யாவின் அதிர்ஷ்டமும் உழைப்பும் அடுத்தடுத்து அவருக்கு வெற்றிகளைத் தேடித் தருகிறது. அடுத்து வரும் இம்யூனிட்டி சவாலிலும் வெற்றி பெற்று அவர் சாதிப்பாரா?

பார்த்துடுவோம்.