Published:Updated:

சர்வைவர் 73 : ரீ - என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா; ஷாக்கான இனிகோ! சூடுபிடிக்கும் டிரைபல் பஞ்சாயத்து

சர்வைவர் - ஐஸ்வர்யா

‘உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது’ என்கிற துர்திர்ஷ்டத்தைப் பார்த்ததும் நொந்து போய் திரும்பினார் இனிகோ.

Published:Updated:

சர்வைவர் 73 : ரீ - என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா; ஷாக்கான இனிகோ! சூடுபிடிக்கும் டிரைபல் பஞ்சாயத்து

‘உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது’ என்கிற துர்திர்ஷ்டத்தைப் பார்த்ததும் நொந்து போய் திரும்பினார் இனிகோ.

சர்வைவர் - ஐஸ்வர்யா
‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று விஜய்ண்ணா சொன்னதை வரலாறு எப்போதுமே நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதையேதான் சர்வைவரும் பிரதிபலிக்கிறது. ஆம், காடர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் தேய்ந்து போய் வேடர்களின் மறுமலர்ச்சியின் காலக்கட்டம் துவங்கியிருக்கிறது. ஆனால் இதுவும் கூட நிலையல்ல. சக்கரம் மறுபடியும் சுற்றும்.

மூன்றாம் உலகத்தில் தன்னுள் குடிபுகுந்த அதிர்ஷ்ட தேவதையை மெயின் டீமிற்குள்ளும் ஐஸ்வர்யா கூட்டி வந்து விட்டார் போல. நேற்று நடந்த ஜாலியான எபிசோடில் வேடர்களுக்கு பரிசுமழை பொழிய காடர்களுக்கு ஜீரோ அட்வான்டேஜ் மட்டுமே கிடைத்தது.

‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று, பற்றி எரிய உனை கேட்கும்...!! நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்...’ என்பது மாதிரி ஆகிப் போய் விட்டது.

சர்வைவர் 73-ம் நாளில் என்ன நடந்தது?

‘மூன்றாம் உலகம்’. “அப்பா எப்போது வந்து சினிமாவிற்கு கூட்டிப் போவார்? என்று தவிக்கும் ஸ்கூல்பையன் மாதிரி “எப்போது மெயின் டீமிற்கு செல்வோம்?” என்று ஐஸ்வர்யா தவித்துக் கொண்டிருந்தார். ஒரு உண்மையான Sportsperson-னின் குணாதிசயம் அவருக்குள் ததும்பி வழிந்து கொண்டிருந்தது. போட்டியில் வென்று தன்னை நிரூபிக்கும் ஆவேசத்துடன் அவர் காத்துக் கொண்டிருந்தார்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

அவர் எதிர்பார்த்தது போலவே ஓலை வந்தது. “பாருப்பா.. ‘ஹாய். சர்வைவர்’ன்னு போட்டிருக்காங்க. அப்ப நம்மளை இல்ல. மேடத்திற்கு மட்டும்தான் அறிவிப்பு’ என்று கிண்டல் செய்தார் நந்தா. “இது ஐஸ்வர்யாவிற்கான ஸ்பெஷல் செய்தி. மூன்றாம் உலகத்தில் உங்களின் காத்திருப்பு நேரம் முடிந்து விட்டது. மெயின் அணிக்கு உடனே திரும்பவும்” என்று வந்திருந்த செய்தியைப் பார்த்ததும் ஐஸ்வர்யா குஷியாகி விட்டார்.

“அங்க போயி என்ன பண்ணலாம்.. ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்?” என்று ஐஸ்வர்யா நந்தாவிடம் ஆலோசனை கேட்க, ஐசுவின் காலைத் தொட்டு கும்பிட்ட நந்தா, “பேச்சைக் கம்மி பண்ணு தாயி.. அது போதும்” என்று ஜாலியாக சொல்ல, “அதுதான் என் கேரக்ட்டர்.. அப்ப நான் நானா இருக்க வேண்டாமா?” என்று செல்லமாக கோபித்துக் கொண்டார் ஐஸ்வர்யா. “உன்னோட பெஸ்ட்டை விளையாட்டில் கொடு. அது போதும்” என்றார் நந்தா.

மெயின் அணிக்குச் செல்வதில் ஐஸ்வர்யாவிற்கு ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும், நந்தாவையும் சரணையும் விட்டுப் பிரிகிறோம் என்கிற துயரம் அவரின் கண்களில் தெரிந்தது. அவர்களுக்கும் இதே சோகம்தான். “லொட லொடன்னு ஏதாவது பேசிட்டு இருப்பா.. அவ இல்லாம அமைதியா இருக்குமே” என்று இருவருமே வருத்தப்பட்டார்கள். என்றாலும் ஒரு போர் வீரனுக்கு ஓய்வென்பது ஏது? ‘நீயே ஒளி…’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க, கம்பீரமாக கிளம்பினார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

இரண்டு பெண்கள் மட்டும் இருந்தால்கூட அந்த இடம் கலகலப்பாக, உயிர்ப்புடன் இருக்கும். ஆனால் இரண்டு ஆண்கள் மட்டும் இருக்கும் இடமானது சவக்களையுடன் மாறி விடும். ஐஸ்வர்யா சென்ற பிறகு மூன்றாம் உலகம் அப்படித்தான் ஆகி விட்டது. நந்தா ஒருபக்கம் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்க, சரண் சுருண்டு படுத்து தூங்கத் தொடங்கினார். (கனவுல யாரு நீதானே?!).

கொம்பர்கள் தீவிற்கு ஓலை சென்றது. “வாங்க பரமபத ஆட்டம் ஆடலாம்” என்கிற அறிவிப்பு வர, ‘நம்மளையே காயினா வெச்சு ஆடுவாங்க போல” என்கிற குழப்பத்துடன் கிளம்பினார்கள். “களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்கிற டிரேட்மார்க் வசனத்துடன் வரவேற்றார் அர்ஜுன்.

“எப்படியிருக்கீங்க?” என்று அர்ஜுன் விசாரிக்க “உடம்பு சரியில்லாதவங்களைப் பத்திதான் கவலை” என்று நியாயமான காரணத்தைச் சொன்னார் விஜி. “ஓகே.. இப்ப ஒரு முக்கியமான விருந்தாளி. நம்முடன் வந்து இணையப் போகிறார்” என்று அர்ஜுன் பில்டப் தந்ததும் “மூன்றாம் உலகத்துல இருந்துதான் யாராவது வரப்போகிறார்கள். இதில் என்ன அதிசயம்?” என்கிற மாதிரி எரிச்சலுடன் முனகினார் இனிகோ.

சர்வைவர்
சர்வைவர்

துள்ளலான அசைவுகளுடன் ஐஸ்வர்யா அங்கு ‘மாஸ்’ என்ட்ரி தர அம்ஜத்தின் முகம் உண்மையான சந்தோஷத்தில் மலர்ந்தது. ``ஹேய்.. வா.. வா..”என்று வாய் விட்டு சிரித்தார். நாராயணனும் ஹேப்பிதான் ஆனால் சுருதி சற்று குறைந்திருந்தது. விஜியின் முகத்திலும் சற்று சிரிப்பு. ஆனால் இனிகோ மட்டும் இடி விழுந்த தென்னை மரம் மாதிரி அமர்ந்திருந்தார். “எலிமினேஷன் அப்பயே சொல்லிட்டுப் போனா.. திரும்பி வந்துடுவேன்”ன்னு” என்று சிரித்தார் விஜி.

“எப்படியிருக்கீங்க ஐஸ்வர்யா?” என்று அர்ஜுன் விசாரித்தபோது வாய் நிறைய சிரிப்புடன் “மெயின் கேமை ரொம்ப மிஸ் பண்ணேன். திரும்பி வருவேன்னு எனக்குத் தெரியும்” என்று பெருமிதம் பொங்க சொன்னார் ஐஸ்வர்யா.

எலிமினேஷனின் போது தனக்கு எதிராக இனிகோ வாக்களித்த விஷயம் இப்போதுதான் ஐஸ்வர்யாவிற்குத் தெரிந்தது ``அடப்பாவி.. நான் எதிர்பார்க்கலை” என்று அவர் மெலிதாக அதிர்ச்சியடைய “நான்தான் போட்டேன். என்ன இப்ப?” என்கிற பார்வையை பார்த்த இனிகோ “அவங்க கேரக்ட்டர் பிடிக்கலைன்னுதான் போட்டேன். ஆனா அவங்க போகும் போது ஒரு நல்ல பிளேயர் போறாங்களேன்னு கஷ்டமா இருந்தது" என்றார்.

அர்ஜுன்
அர்ஜுன்

“ஆமாம்… சார்.. ஒரு குழந்தை மாதிரி முகத்தை வெச்சிக்கிட்டு ‘நான் கேமை மிஸ் பண்ணுவேன்’னு ஐஸ்வர்யா சொன்னபோது பாவமா இருந்தது” என்றார் விஜி. “அப்பவே சொல்லிட்டுத்தான் போனா.. நான் வந்துடுவேன்னு. சொன்னத செஞ்சுட்டா" என்று நாராயணனும் இதை வழிமொழிந்தார்.

“OK.. let’s get into the business.. " என்ற அர்ஜூன் “ஆக்சுவலி.. இதுவும் ஒரு பிஸ்னஸ் கேம்தான். இங்க இருக்க monopoly பலகையைப் பாருங்க. உணவுப்பொருள் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கு. நான் பகடையை உருட்டுவேன். யாருக்கு எந்த நம்பர் வருதோ, அந்த நம்பர்ல இருக்கற பொருள் உங்களுக்குத்தான். இதில சில கேள்விக்குறி இருக்கு. அதுல அட்வான்டேஜ் இருக்கலாம்.. இல்லைன்னா டிஸ்அட்வான்டேஜ் கூட இருக்கலாம். இது முழுக்க முழுக்க உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விளையாட்டு” என்று விவரித்து ஆட்களை வரிசையை அதிர்ஷ்ட முறையில் தேர்ந்தெடுத்தார் அர்ஜுன்.

பரமபத ஆட்டம் ஆரம்பித்தது. முதலில் வந்த அம்ஜத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை. இரண்டாவதாக வந்த நாராயணனுக்கு கேள்விக்குறி கிடைத்தது. ஆனால் அடுத்த சுற்றில் Exit என்கிற பிளாக்கின் மீது அவர் நிற்க வேண்டி வர ஆட்டத்திலிருந்து வெளியேறினார். “அடப்பாவிகளா… ஆரம்பிக்கறதுக்குள்ள வெளியே அனுப்பிச்சிட்டாங்களே?” என்று நொந்தபடி வெளியேறினார் நாராயணன்.

விஜிக்கு கோக்கும் ஐஸ்வர்யாவிற்கு கேள்விக்குறியும் கிடைத்தன. அடுத்த சுற்றில் விஜிக்கு கேள்விக்குறி கிடைத்தது. ஆனால் இதற்குப் பிறகு ஐஸ்வர்யாவிற்கும் Exit பிளாக் வரவே அவரும் வெளியேறினார். ஆரம்பத்திலிருந்தே அம்ஜத்திற்கு வெறுமையான பிளாக்குகளே வர ரொம்பவும் நொந்து போனார். ஆனால் இனிகோவிற்கு நூடுல்ஸ், பர்கர் என்று உணவுப்பொருட்களாக கிடைத்துக் கொண்டே இருந்தன. மூன்றாம் சுற்றில் விஜியும் வெளியேற நேர்ந்தது.

ஆக. மீதமிருந்தவர்கள் அம்ஜத் மற்றும் இனிகோ மட்டுமே. அம்ஜத்திற்கு ‘மிஸ்டரி பாக்ஸ்’ கிடைக்க அதில் ‘லம்ப்பாக’ ஏதாவது இருக்கும் என்று மகிழ்ச்சியடைந்தார். இவர் எதிர்பார்த்திருந்த பிரியாணியும் கிடைத்தது. இருவரும் பல்வேறு விதமான உணவுப்பொருட்களை மாற்றி மாற்றி அள்ளினார்கள். இறுதியில் இனிகோ வெளியேற, அம்ஜத் தங்கி வெற்றி பெற்றார்.

அம்ஜத்
அம்ஜத்

“பாவம்ப்பா. அவங்க.. முதல்லயே போயிட்டாங்க.. திரும்பவும் அவங்களை கூப்பிடலாமா?” என்று அர்ஜுன் கேட்க, அம்ஜத்தும் இனிகோவும் சம்மதித்தனர். ஆனால் மறுபடியும் விளையாடுவதற்கு விஜி மறுத்து விட்டார். ஏனெனில் அவரிடம் ஒரு கேள்விக்குறி இருந்தது. அதில் ஏதாவதொரு அட்வான்டேஜ் நிச்சயமாக இருக்கும் என்று நம்பினார். மறுஆட்டத்தில் அதையும் இழக்க அவர் விரும்பவில்லை. தான் சம்பாதித்த கோக் பாட்டிலுடன் அவர் திருப்தியடைந்தார்.

எனவே நாராயணனும் ஐஸ்வர்யாவும் மீண்டும் களத்தில் இறங்கினார்கள். ஐஸ்வர்யாவிற்கு அதிர்ஷ்டம் பிய்த்துக் கொண்டு கொட்டியது. அவர் கேட்ட பொருட்களே வந்து குவிந்தன. நாராயணனுக்கும் சில பொருட்கள் கிடைத்தன. “ஐசுக்கு ஐஸ்கிரீம்” என்று பாசத்துடன் எடுத்துக் கொடுத்தார் அர்ஜுன்.

ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிந்து கடை சாத்தப்பட்டது. “ஓகே.. உங்களுக்கு வந்த அதிர்ஷ்ட கார்டுகளின் படி உணவுப்பொருட்களை வந்து வாங்கிக்கங்க” என்று அழைத்தார் அர்ஜுன். மிஸ்டரி பாக்ஸ் கிடைத்தவர்களுக்கு, ஒரு வரிசையில் உள்ள அனைத்துப் பொருட்களுமே கிடைக்கும். அதன்படி அம்ஜத் மற்றும் இனிகோ ஆகிய இருவருக்குமே மிஸ்டரி பாக்ஸ் அதிர்ஷ்டம் அடித்ததால் அதில் இருந்த பிரியாணி, பர்கர், டிரிம்மர், கேக் போன்றவற்றை ஆளுக்கு பாதியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

டாஸ்க்கில் கிடைத்த உணவுப்பொருள்கள்
டாஸ்க்கில் கிடைத்த உணவுப்பொருள்கள்

உணவுப்பொருட்கள் ஒருபக்கம் இருக்கட்டும். அந்த கேள்விக்குறிதான் மேட்டர். அதில் என்ன அட்வான்டேஜ் இருக்கிறது என்பதுதான் அனைவரின் மனதிலும் இருந்தது. மிஸ்டரி பாக்ஸிற்குள் ‘இம்யூனிட்டி ஐடல்’ இருக்குமா” என்று ஏற்கெனவே அம்ஜத் ஆசைப்பட்டிருந்தார். (லட்சுமிபிரியாவிற்கு சாக்லேட் பாட்டிலில் கிடைத்தது போல).

அம்ஜத்திற்கு கிடைத்த முதல் அட்வான்டேஜ் என்ன என்கிற ரகசியத்தை அவிழ்த்தார் அர்ஜுன். அதன்படி டிரைபல் பஞ்சாயத்தில் அம்ஜத் இரண்டு வாக்குகளை அளிக்கலாமாம்.. இதைக் கேட்டதும் காடர்களின் முகம் சுருங்கியது. அடுத்ததாக ஐஸ்வர்யாவின் அட்வான்டேஜ் பிரிக்கப்பட்டது. ‘அவரால் யாராவது ஒருவரின் வாக்கை பறித்துக் கொண்டு இவர் பயன்படுத்திக் கொள்ள முடியுமாம்’.

இப்படி வேடர்களின் சார்பாகவே அதிர்ஷ்ட தேவதை தொடர்ந்து ஆசிர்வதித்துக் கொண்டிருக்க, இனிகோவும் விஜியும் தலையை தொங்கப் போட்டார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதென்றால் நமக்கு அதிர்ச்சி கிடைக்குமோ என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களின் எண்ணப்படியே ஆயிற்று.

இனிகோவின் அட்வான்டேஜ் பிரிக்கப்பட்ட போது அதிர்ச்சி. ‘உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது’ என்கிற துர்திர்ஷ்டத்தைப் பார்த்ததும் நொந்து போய் திரும்பினார் இனிகோ.

விஜியின் அட்வான்டேஜ் பிரிக்கப்பட்டது. “உங்களால் உங்கள் வாக்கை அளிக்க முடியாது” என்றிருந்தது. ‘அப்பவே தெரியும்” என்று நொந்து போய் சிரித்தார் விஜி. அவர் இரண்டாவது சுற்றில் விளையாடியிருந்தால் ஏதாவது கிடைத்திருக்கலாம்.

விஜி
விஜி

ஆக வேடர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க, காடர்களுக்கு இரண்டுமே டிஸ்அட்வான்டேஜாக போய் விட்டது. “எங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் போயிடுச்சு. அவங்க எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. நந்தாவும் சரணும் வந்தா இன்னமும் அவங்க சக்தி அதிகமாயிடும. எங்களுக்கு நிலைமை இப்போ தலைகீழாக மாறி விட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் போனவங்க வரலைன்னா எங்க கதி அதோ கதிதான்” என்று வருந்தினார் விஜி.

இவர்கள் உணவுப்பொருட்களைப் பகிர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பிக்க “ஓகே என்சாய்..” என்றபடி கிளம்பினார் அர்ஜுன்.

அ

அனைவரும் சாப்பிட்டு விட்டு தங்களின் தீவுக்குத் திரும்பினார்கள். ஐஸ்வர்யாவும் அம்ஜத்தும் உரத்த குரலில் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, விஜியும் இனிகோவும் தலைகவிழ்ந்து சோகமாக அமர்ந்திருந்தார்கள். கொம்பர்கள் அணி இணையும் போது இனிகோவின் அட்டகாசமான சிரிப்பும் கேலியும் ஒருபக்கம் ஒலிக்க, நந்தாவும் ஐஸ்வர்யாவும் இன்னொரு பக்க மூலையில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த காட்சிதான் நினைவிற்கு வந்தது. ``காலம் எவ்வளவு வேகமா சுத்துது பார்த்தீங்களா”?

தனக்கு எதிராக இனிகோ வாக்களித்த பழைய விஷயத்தை மறுபடியும் தோண்டியெடுத்தார் ஐஸ்வர்யா. “இதை நான் எதிர்பார்க்கலை. நீங்க போட்டிருக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்” என்று இனிகோவை நோக்கி அவர் சொல்ல “நான்தான் ஏற்கெனவே சொல்லியிருந்தேனே.. நீ எனக்கு எதிரா போட்டா நானும் போடுவேன்னு” என்று இனிகோ வெளிப்படையாகச் சொல்ல “இது என்ன லாஜிக்?” என்று முகம் சுளித்தார் ஐஸ்வர்யா. “பேச்சைக் குறை” என்று நந்தா ஐஸ்வர்யாவிற்கு ஆலோசனை சொல்லி அனுப்பியதற்கு காரணம் இதுதான். ஐஸ்வர்யா எதற்கு பழைய விஷயங்களை நோண்ட வேண்டும்? இனிகோ வெளிப்படையான எதிரியாக இருப்பது ஒருவகையில் நல்லதுதான். அந்த நேர்மையைப் பாராட்ட வேண்டும்.

மூன்றாம் உலகம். இரண்டு ஆண்கள் சமைத்தால் அது வீடாகவா இருக்கும்? மறுபடியும் அது வறட்சியான மூன்றாம் உலகமாக மறுபடி மாறி விட்டது.

வேடர்களுக்கு அதிர்ஷ்டமும் காடர்களுக்கு துரதிர்ஷ்டமும் அடித்திருக்கும் இந்தச் சூழலில் இந்த வார ‘டிரைபல் பஞ்சாயத்து’ எப்படியிருக்கும்?

பார்த்துடுவோம்.