முதலில் விஜிக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட். சர்வைவரில், ஆண்களே சோர்ந்து பின்தங்கும் போட்டிகளில் கூட பெண்கள் அபாரமாக சாதிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும், அர்ஜூன் சொன்னது போல் ஒரு குழந்தைக்கு தாயான விஜி, நேற்று நடந்த கடுமையான போட்டியில் விடாப்பிடியாக நின்று வென்றது பிரமிப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் முதல் Finalist என்கிற பெருமையை விஜி பெறுகிறார்.
அது எந்த அணியாக இருந்தாலும் அவர்கள் செய்த அரசியல்களும் எண்ணிக்கை விளையாட்டுக்களும்தான் நெருடலை ஏற்படுத்தின. ஆனால் ஒருவர் தன் திறமையை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் போது பாராட்டத் தயங்கவே கூடாது என்பதுதான் நிதர்சனம். அந்த வகையில் விஜி பாராட்டுக்கு உரியவர்.
சர்வைவர் 90-ம் நாளில் என்ன நடந்தது?
ஜூரியாக மாறிய ஐஸ்வர்யா ஹோட்டலுக்கு வந்து சற்று ஓய்வெடுத்தவுடன் தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார். இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். ஐஸ்வர்யாவின் துணிச்சலும் முற்போக்கான இயல்பும் எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சமயத்தில் அறிய முடிந்தது. “அப்பா. நான் எலிமினேட் ஆயிட்டேன்” என்று ஐஸ்வர்யா சிரித்துக் கொண்டே சொன்ன போது அவரது தந்தை மிக இயல்பாக “இதெல்லாம் பார்ட் ஆஃப் த கேம்” என்று சொன்னதைப் பார்க்க மகிழ்வாக இருந்தது. “நீயும் என்னை மாதிரியே ஆப்ரிக்கன் மாதிரி ஆயிட்டே” என்று கிண்டல் செய்தார் ஐஸ்வர்யாவின் அம்மா. ஐசுவின் பாட்டி ஒரு படி மேலே சென்று விட்டார். நீ எலிமினேட் ஆயிட்டியா?” என்று கேட்கும் அளவிற்கு சர்வைவரில் அப்டேட்டாக இருக்கிறார். “இங்க நிறைய பாலிட்டிக்ஸ் இருக்கு பாட்டி. அதையெல்லாம் தாண்டித்தான் வரணும்” என்றவுடன் “ஆமாம். பார்த்துட்டுதான் இருக்கேன்” என்றார் பாட்டி.
அடுத்து என்ன பாயசத்தைப் போடுவாங்களோ?
கொம்பர்கள் தீவு. “அடுத்து என்ன சவாலாக இருக்கும்?” என்கிற எதிர்பார்ப்பு போட்டியாளர்களிடம் நிலவியது. “பெரிய பாயாசத்தைப் போடப் போறாங்க” என்று உமாபதி கிண்டலடிக்க “திருப்பியும் வாட்டர் சேலன்ஜா இருக்குமோ?” என்று பீதியானார் நாராயணன். “அப்பவே LP சொன்னாங்க.. பார்த்துட்டே இருங்க.. நாராயணன்தான் சோல் சர்வைவரா வரப்போறான்னு.. அப்படித்தான் ஆயிடும் போல இருக்கு” என்றார் உமாபதி. யோசித்துப் பார்த்தால் டாப் 5-ல் நாராயணன் வந்தது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
ஓலை வந்தது. “வீட்டைக் காலி பண்ணுங்க. இனிமே இந்தக் கூடாரத்தையெல்லாம் நீங்க பார்க்க முடியாது. இன்றே கடைசி. நல்லாப் பார்த்துக்கங்க” என்று அந்த ஓலை சொன்னதால் மக்கள் சென்டியானார்கள். “இப்படியொரு வாழ்க்கை திரும்பவும் கிடைக்குமான்னு தெரியல” என்று ஃபீல் ஆனார் வனேசா. உண்மைதான். சராசரி நபர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத உன்னதமான அனுபவத்தை சர்வைவர் விளையாட்டு தந்திருக்கிறது.

“கடலுக்கு வாங்க சர்வைவர்ஸ்”
“களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று அர்ஜுன் வழக்கமாக அழைப்பதை இனி மேலே சொன்னது போல் மாற்றி அழைக்கலாம் போல. அந்த அளவிற்கு எல்லாமே நீர் மீது நடக்கும் போட்டியாக இருக்கிறது. முதல் இறுதிப் போட்டியாளரைத் தேர்ந்தெடுக்கும் இந்தச் சவாலும் நீர் மீதுதான்.
பஞ்சாயத்து ஏதும் வைக்காமல் நேரடியாக போட்டியின் கான்செப்டை விளக்கத் துவங்கினார் அர்ஜுன். “நீரின் மீது நீங்கள் நிற்கவிருக்கும் ஃபிளாட்பார்மில் நான்கு எக்ஸ்ட்ரா பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு லெவல் முடியும் போதும் ஒரு பகுதியை நீங்கள் கழற்ற வேண்டும். கடைசியாக யார் தாக்குப் பிடிக்கிறாரோ, அவரே வெற்றியாளர். அவரே இந்த கேமின் முதல் ஃபைனலிஸ்ட்” என்று போட்டியைப் பற்றி விளக்கினார்.
நான்கு பகுதிகளைக் கொண்ட அந்த பிளாட்பார்மில் ஒருவர் நிற்பதே சிரமம் என்னும் போது ஒவ்வொரு பகுதியாக குறையும் சமயத்தில் கால் வைக்கும் பகுதி இன்னமும் குறைந்து கொண்டே வரும். ஆனால் இதுதான் சவால்.
போட்டியாளர்கள் அந்த ஃபிளாட்பார்மின் மீது சிரமப்பட்டு ஏறினார்கள். சர்வைவர் டீம் ஏணி கொண்டு வந்து ஒவ்வொருவரையும் மேலே ஏற்றியது. உமாபதிக்கு காலில் அடிபட்டிருந்ததால் மிகவும் சிரமப்பட்டு ஏறினார். அவர் நின்றிருந்த ஃபிளாட்பார்ம் கடல் அலையின் காரணமாக நிலநடுக்கம் போல் பயங்கரமாக ஆடியது. எனவே தடுமாறி நீரில் விழுந்தார். ஒருவேளை அவர் அவுட்டோ என்று தோன்றி விட்டது. ஆனால் போட்டி இன்னமும் ஆரம்பிக்கவில்லை. ‘சரியா செட்டில் ஆகிக்கங்க” என்றார் அர்ஜுன். குளிரில் நடுங்கிய உமாபதியிடம் “உன்னால முடியும்” என்று தைரியமூட்டினார் நாராயணன்.
விஜி எடுத்த உறுதியான முடிவு
“வழக்கமா முதல்ல டாக் ஷோ இருக்கும். அப்புறமா கேம் இருக்கும். இந்த முறை மாத்தி செய்யறோம்” என்று விளக்கினார் அர்ஜுன். “இது கடைசி இம்யூனிட்டி சேலன்ஜ். இதுல முதல்ல அவுட் ஆகறவங்க ‘ஸ்பாட் எலிமினேட்’ ஆகிடுவாங்க.” என்றவுடன் போட்டியாளர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. “கடைசி வரை நின்னு ஜெயிக்கறவங்களுக்கு இம்யூனிட்டி வாள் கிடைக்கும். அது மட்டுமில்லாம இந்தப் போட்டியின் முதல் ஃபைனலிஸ்ட் அவங்கதான்” என்று ஊக்கமூட்டினார் அர்ஜுன்.
“இப்பத்தான் விக்ராந்த், இனிகோ வெளியே போயிருக்காங்க. எனக்கு ஓட்டு போட ஆள் இருக்காது. எப்படியாவது இதில் ஜெயிக்கணும். மயக்கம் போட்டு விழுந்தாலும் பரவாயில்லை. கீழே இறங்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிக்கிட்டேன்” என்றார் விஜி. எலிமினேஷன் பயம்தான் ஒருவகையில் அவருக்கு மனவலிமையைத் தந்ததோ, என்னமோ.

“கவனக்குவிப்பு, உறுதி, சமநிலை போன்ற விஷயங்கள் இந்தப் போட்டியில் தேவை” என்றார் அர்ஜுன். உமாபதியின் ஃபிளாட்பார்மைப் போலவே நாராயணனுடைய மேடையும் ஆடியது.
போட்டியாளர்கள் நிற்கத் துவங்கி சில நிமிடங்கள் கழித்து அர்ஜுன் சொன்னார். “ஓகே. நான் கவுன்ட்டவுன் ஆரம்பிக்கிறேன். 20 எண்ணி முடிக்கறதுக்குள்ள நீங்க முதல் பகுதியை கழட்டணும். முன்னால் இருக்கும் பகுதியை முதலில் கழட்டணும். அடுத்தது இடதுபக்கம், அதற்கும் அடுத்தது வலது பக்கம், கடைசியில் பின்னால் இருக்கும் பகுதி” என்று கழட்ட வேண்டிய பகுதியின் வரிசையை மிகத் தெளிவாக கூறினார் அர்ஜுன்.
வெயில், காற்று, அலை என்று அனைத்துமே இந்தச் சமயத்தில் அதிகமாக இருந்தது. சரண் சொன்ன உத்தி சிறப்பாக இருந்தது. “எந்த பிளாக்கை கழட்டப் போறோனோ, அது இல்லாமலேயே நிக்கப் பழக பிராக்டிஸ் பண்ணேன்” என்று அவர் சொன்ன ஐடியா பிரில்லியண்ட்.
லெவல் இரண்டிற்கான கவுன்ட்டனை சொல்ல ஆரம்பித்தார் அர்ஜுன். இடது பக்கமிருந்த பகுதிகளை ஒவ்வொருவரும் கழட்டினார்கள். கழட்டுவதற்காக குனிந்து நிமிரும் போது கூட ஒருவர் தடுமாறி கீழே விழும் அபாயம் இருந்தது. சில சாமர்த்தியசாலிகள் காலை உபயோகித்து கழட்டியது சிறப்பான ஐடியா.
சரண் ஒருமாதிரியான உத்தியைப் பயன்படுத்தினார் என்றால் உமாபதி பின்பற்றிய உத்தி வேறு மாதிரியாக இருந்தது. “நான் கண்ணை மூடிக்கிட்டு ஒண்ணுல இருந்து நூறு வரை எண்ண ஆரம்பிச்சிட்டேன். யாராவது முதல்ல விழுந்தா, அதற்கு அடுத்த செகண்டே நானும் விழுந்துடுவேன். கால்வலி பின்னியெடுக்குது” என்றார். முதலில் விழுந்தவர் ஸ்பாட் எலிமினேஷன் ஆகிவிடுவார் என்பதால் இந்த ஐடியா.
“நாராயணா.. என்னைக் காப்பாத்திட்டே”
மூன்றாவது லெவலுக்கான கவுன்ட்டவுனை சொல்ல ஆரம்பித்தார் அர்ஜுன். காலைப் பயன்படுத்தியே வலது பக்க பாகத்தை கழட்டினார் உமாபதி. கால் வைக்கும் பகுதி குறைந்து கொண்டே வந்ததால் போட்டியாளர்கள் நிறையவே தடுமாறினார்கள். விஜி ஆடாமல் அசையாமல் சிலை போல நின்றார். “பக்கா பிளானிங்ல போயிட்டு இருக்கு” என்று திருப்தி தெரிவித்தார் சரண்.
நான்காவது லெவலுக்கான கவுன்ட்டவுன் சொல்லப்பட்டது. இது பின்னால் இருக்கும் பகுதியை ரிலீஸ் செய்வதற்கான சிக்னல் என்பதால் அந்தப் பகுதியை கழட்டுவதில் போட்டியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. நிற்கும் பகுதி இப்போது இன்னமும் குறுகிவிட்டதால் கால்வலியில் தவித்தார்கள். நாராயணன் காலை சற்று சரிசெய்து வைக்க முயலும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
நாராயணன் நீரில் விழும் இந்தச் சத்தம் உமாபதிக்கு ஆனந்த இசையாக கேட்டிருக்க வேண்டும். அவர் விழுந்த சில விநாடிகளிலேயே ‘ஹப்பாடா’ என்று உமாபதியும் நீரில் குதித்தார். “நாராயணா. என்னைக் காப்பாத்திட்ட” என்று உமாபதி நன்றி தெரிவிக்க, தன் தோல்வியை கூலாக எடுத்துக் கொண்டார் நாராயணன். ஆக… நாராயணனின் சர்வைவர் பயணம் இங்கு முடிவடைந்தது. இனி அவர் ஜூரியாக இருப்பார்.

வனேசாவிற்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்
இந்தச் சமயத்தில் ஒரு குழப்பம் நடந்தது. வனேசாவின் நான்காவது பாகம் சொல்லப்பட்ட நேரத்தில் ரிலீஸ் ஆகி விழாமல் இப்போதுதான் விழுந்தது. இதைக் கவனித்த விஜி, அதைப் பற்றி அர்ஜுனிடம் சொல்ல, ‘ஃபவுல். வனேசா.. நீங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டீர்கள்” என்கிற அதிர்ச்சியான செய்தியை தெரிவித்தார் அர்ஜுன்.
“சார். அதை நான் பார்க்கலை சார். இது நியாயமான முடிவு இல்லை” என்று வனேசா அதிர்ச்சியுடன் சொன்ன போதும் தன் முடிவில் உறுதியாக இருந்தார் அர்ஜுன். “Sorry Vanesa.. you are disqualified” என்று அவர் சொன்னது சரியான தீர்ப்பு இல்லை. ரிலீஸ் செய்தவுடனேயே கீழே விழாத மாதிரி அமைத்தது சர்வைவர் டீமின் தொழில்நுட்ப பிசிறு. இதற்கு எப்படி வனேசா பொறுப்பாக முடியும்?
இந்த விபத்து ஏற்படாவிட்டால் ஒருவேளை வனேசா கூட இந்தப் போட்டியில் வென்றிருக்கலாம். நீர்மூழ்கி சவாலில் அவர் காட்டிய சாகசம் அற்புதமானது. ஒரு சிறிய டெக்னிக்கல் தவறு கூட போட்டியாளரின் தோல்விக்கு காரணமாக அமையக்கூடும் என்பதற்கான உதாரணம் இது. அர்ஜுன் சற்று சலுகை காட்டியிருக்கலாம். “ரொம்ப ஏமாற்றமா இருந்தது” என்றார் வனேசா.
ஆக போட்டி விஜிக்கும் சரணிற்கும் இடையில் என்பதாக மாறியது. “எனக்கு கால் வலிக்குது.. கழுத்து வலிக்குது. இந்த விஜி கீழே விழவே மாட்றேங்களே” என்று மைண்ட்வாய்ஸில் அலறினார் சரண். ஆனால் விஜியோ சலனம் ஏதுமில்லாமல் சிலை போல நின்று கொண்டிருந்தார். “வோட் அவுட் வாங்கி வெளியே போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்” என்றார் விஜி.
விஜி அடைந்த அபாரமான வெற்றி
போட்டி ஆரம்பித்து எழுபது நிமிடங்கள் கடந்திருந்தன. நான்காவது பகுதி விலக்கப்பட்டு 15 நிமிடங்கள் ஆகியிருந்தது. சரணின் காலில் ரத்தம் கட்டி வலியெடுக்கத் துவங்கியது. ஒரு கட்டத்தில் அவரால் சமாளிக்க முடியாமல் நீரில் விழ “Viji is the Winner” என்று உற்சாகமாக கத்தினார் அர்ஜுன். பிறகு விசிலடித்து விஜியின் வெற்றியை வாழ்த்தினார். “இந்த விசில்தான் சார் என்னோட மோட்டிவேஷன்” என்றார் விஜி.
“வாழ்த்துகள் விஜி. ஒரு குழந்தைக்கு தாயா இருந்துக்கிட்டு நீங்க இந்த சாதனையை செஞ்சிருக்கிறது அற்புதம்” என்று அர்ஜூன் பாராட்ட “ஒரு அம்மாவா பிரசவ வலியைத் தாங்கியதுதான் இப்ப என் பலமா இருந்தது” என்று விஜி சொன்னது முற்றிலும் உண்மை. மற்றவர்கள் எங்கே தவற விட்டார்கள் என்பதை விசாரித்து அறிந்தார் அர்ஜுன்.
போட்டி முடிந்து விட்டதால் அதன் பரபரப்பு நீங்கி அனைவரும் பிளாட்பார்மின் மீது ரிலாக்ஸ்ஸாக அமர்ந்தார்கள். “நீங்க இதுவரை செஞ்சதில் எந்த சேலன்ஜ் ரொம்ப பிடிச்சது?” என்று விசாரிக்க ஆரம்பித்தார் அர்ஜூன். (ஃபுட்டேஜ் போதலையோ?). கட்டைகளை உடைத்து சென்ற சவால் தனக்கு பிடித்ததாக சரண் கூற “முதல் வெற்றியும் விஜிக்கு டெடிகேட் செய்த வெற்றியும எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்” என்றார் உமாபதி. “பெரிய அளவு புதிர்ப்பாதையில் பந்து போட்டு விளையாடியது ரொம்ப சுவாரசியமா இருந்தது” என்றார் வனேசா. சர்வைவரின் துவக்க விளையாட்டான படகில் ஏறியதும் பலகைகளை கோபுரமாக அடுக்கி ஐஸ்வர்யாவை வென்ற விளையாட்டும் பிடித்திருந்ததாக விஜி கூறினார்.

முதல் ஃபைனலிஸ்ட் விஜி
“ஓகே. சில முக்கியமான விஷயங்கள் சொல்லப் போறேன்.. கவனமா கேளுங்க” என்ற அர்ஜுன் “இதில் மூன்று ஃபைனலிஸ்ட்டுகள் இருப்பாங்க. முதல் ஃபைனலிஸ்ட்டா விஜி. ஆயிட்டாங்க” என்பது வரை அர்ஜுன் சொன்னது நியாயம். ஆனால் அவர் அடுத்து சொன்னதுதான் விசித்திரமாக இருந்தது. “விஜிதான் இரண்டாவது ஃபைனலிஸ்ட்டை முடிவு செய்வாங்க” என்று வெடிகுண்டை தூக்கி வீசினார் அர்ஜுன். இதெல்லாம் என்ன கோக்குமாக்கு விதியோ? திறமை என்பதைத் தாண்டி சகபோட்டியாளருடன் இணக்கமாக இருந்தால்தான் வெற்றியை நோக்கி நகர முடியும் என்கிற அபத்தமான விதியை கடைசி வரை வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
“இரண்டாவது ஃபைனலிஸ்ட் யார் என்பதை விஜி டிரைபல் பஞ்சாயத்தில் சொல்ல வேண்டும். மூன்றாவது ஃபைனலிஸ்ட் பற்றி நான் பிறகு சொல்வேன்” என்று அடுத்தக்கட்ட நகர்வுகளைப் பற்றி சொல்லி விட்டு போட்டியாளர்களுக்கு விடை தந்தார் அர்ஜுன்.
அரசியல் பேரம் ஆரம்பம்
விஜியை ஓரங்கட்டிய வனேசா “நான் இதுவரைக்கும் வந்ததே எனக்கு சந்தோஷமா இருக்கு. நான் யாரைப் பத்தியும் இந்த கேமில் தப்பா பேசினது இல்ல. நீங்க யாரை வேணா செலக்ட் செய்யலாம். எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை. விளையாடியது போதும்னு தோணுச்சு” என்பதை சுற்றி வளைத்து சொன்னார். வனேசாவிற்கு உண்மையிலேயே ஃபைனலிஸ்ட் ஆவதில் ஆசையில்லையா அல்லது இப்படி மறுத்தால் விஜி ஏற்றுக் கொள்வார் என்கிற எதிர்பார்ப்பா என்று தெரியவில்லை.
அடுத்து விஜியை சந்தித்த உமாபதி, ஐஸ்வர்யா செய்த குளறுபடியை எண்ணி வருந்தினார். “வோட் அவுட் செய்யறது கூட பிரச்சினையில்லை. மாத்தி மாத்தி பேசினதுதான் பிரச்சினையாயிடுச்சு. டபுள் கேம் ஆடிட்டேன்னு அவளே ஒத்துக்கிட்டா” என்று உமாபதி வருத்தமாகச் சொல்ல “ஓகே. எல்லாக் கோட்டையும் அழிச்சுடுவோம்” என்று பாசிட்டிவ்வாக பேசினார் விஜி. இந்தச் சமயத்தில் சரண் வந்து அமர “எல்லா குழப்பத்தையும் பேசி தீர்த்துக்கறோம்” என்றார் விஜி. நாராயணனின் ஆட்டத்திறமையை சிலாகித்து பிறகு பேசிக் கொண்டிருந்தார்கள். ஜூரிகளில் காடர்களும் வேடர்களும் கலந்திருப்பதால் முடிவு எப்படியிருக்குமோ என்கிற கவலையும் இவர்களைச் சூழ்ந்தது.

விஜியுடன் தனியாக இருந்த சமயத்தில் “ஹப்பாடா. நாம பிளான் பண்ண மாதிரியே ஃபைனல் லிஸ்ட்டில் காடர்கள் நாலு பேர் வந்துட்டோம். நாம ஒத்துமையா இருந்தோம். ஆனா வேடர்கள் நம்மள காலி செய்யறதா நினைச்சு அவங்க ஒவ்வொருத்தரா காலியாகி வெளியே போனாங்க” என்று சொல்லி சிரித்தார் உமாபதி.
பின்பு விஜியை தனியாக சந்தித்தார் சரண். “வனேசாவை நான் நிச்சயம் தேர்வு செய்யப்போவதில்லை” என்கிற ரகசியத்தை அந்தச் சமயத்தில் சொன்னார் விஜி. “இப்ப நடந்த கேம்ல மூணாவதாதான் அவங்க வந்தாங்க” என்பதுதான் அதன் காரணமாம். “சரி.. பார்த்து பண்ணுங்க” என்றபடி விடைபெற்றார் சரண்.
எனில், விஜி இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப் போகிறவர் யார்.. சரணா அல்லது உமாபதியா? எனில் மூன்றாவது ஃபைனலிஸ்ட் யார்?
பார்த்துடுவோம்.