ரிவார்ட் சேலன்ஜில் உமாபதி + லேடி காஷ் கூட்டணி வெற்றி பெற்றதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். உடல்வலிமையைக் கோரும் போட்டிகளில் பின்தங்கினாலும் புத்திக்கூர்மை தேவைப்படும் போட்டிகளில் வனேசாவும் லேடி காஷூம் பிரகாசிக்கிறார்கள். புதிர்களைக் கையாளும் விஷயத்தில் புலி என்று கருதப்படும் விஜி, மிகையான தன்னம்பிக்கை காரணமாக நேற்று தோற்று விட்டார். நேற்றைய ரிவார்ட் சேலன்ஜ் சுவாரசியமாக இருந்தது. ‘Memory, Communication skill போன்ற இரண்டையும் பிரதானமாக சோதிக்கும் போட்டியாக அது இருந்தது.

சர்வைவர் 67-ம் நாளில் என்ன நடந்தது?
லேடிகாஷிடம் வனேசா பேசிக் கொண்டிருந்தார். “எனக்கு முன்னாடி வனேசா வெளியே போகணும்னு அம்ஜத் சொல்லியிருக்கார். அதுக்காகத்தான் எனக்கு எதிரா வாக்களிச்சிருக்கார். ஆனால் அது அவரோட உத்தி. அதுல எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ‘வனேசாவோட எனக்கு bonding இல்ல'ன்னு சொன்னதெல்லாம் ஒரு காரணமா?” என்று சொல்லி முடித்த வனேசா, தொண்டை கரகரப்பாக இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். சர்வைவர் போட்டியாளர்களில் சிலருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்ததில் இருந்து யார் இருமினாலும் நமக்கு சந்தேகம் வந்து விடுகிறது.
“இங்க இரண்டு அணியும் அப்படியேதான் இருக்கு” என்கிற பழைய பல்லவியை இன்னமும் பாடிக் கொண்டிருந்தார் நாராயணன். (அதான் தெரிஞ்ச கதையாச்சே?!)
“வாங்க சர்வைவர்ஸ்” என்று போட்டியாளர்களை ரிவார்ட் சேலன்ஜிற்கு வரவேற்றார் அர்ஜுன். “சார்.. உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?” என்று ஆரம்பித்த அம்ஜத் “நீங்க நடிச்ச படங்களில் எனக்குப் பிடித்தது முதல்வன்” என்று அவர் சொன்ன போதுதான் நமக்கும் ஒன்று தோன்றியது. சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் அர்ஜுன் நடித்ததில் ‘முதல்வனில்’ மட்டுமே அவர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
கேள்வியைத் தொடர்ந்த அம்ஜத் “எனக்கு முதல்வன். நீங்க நடிச்சதில உங்களுக்குப் பிடிச்ச படம் எது?” என்று கேட்க, அரஜுனுக்கும் ‘முதல்வன்’ தவிர வேறு சாய்ஸ் இல்லை போலிருக்கிறது. எனவே சிவாஜியுடன் நடந்த ஒரு அனுபவத்தைச் சொல்லி பதிலை ஒப்பேற்றிவிட்டார். “நேரம் தவறாமை எத்தனை முக்கியம்” என்கிற நீதிக்காக அந்தச் சம்பவத்தை சொன்னாராம். (அதுக்கு இது பதில் இல்லையே?!)

“இங்க காலண்டர் கிடையாது. இருந்தாலும் அம்ஜத்திற்கு இன்னிக்கு பர்த்டேன்னு நெனக்கறேன்” என்று நாராயணன் சொல்ல, அர்ஜுன் முதற்கொண்டு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடினார்கள். (வனேசா பிறந்தநாள் என்றால்தான் கேக்கெல்லாம் வரும் போலிருக்கிறது).
“ஓகே.. ரிவார்ட் சேலன்ஞ் கான்செப்ட் பத்தி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி நாலு அணியா நீங்க பிரியணும்” என்ற அர்ஜுன், அதிர்ஷ்ட தேர்வு மூலம் அணிகளைப் பிரித்தார். விக்ராந்த் + இனிகோ, உமாபதி + லேடிகாஷ், நாராயணன் + வனேசா, அம்ஜத் + விஜி என்கிற ஜோடிகளாக அணி அமைந்தது.

போட்டியாளர்களின் இடுப்பில் கயிறு இணைக்கப்பட்டிருக்கும். அணியில் ஒருவர் கடலில் இறங்கி சில தடைகளைத் தாண்டி ஒரு மேடை மீதுள்ள பலகையில் அமைக்கப்பட்டிருக்கும் 14 சின்னங்களைக் கவனமாகப் பார்த்து நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். பலகையில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னங்கள் அனைத்தும் கடல்வாழ் உயிரினங்களாக இருக்கும். பிறகு அவர் திரும்பி வந்து தனது அணித்தோழரிடம் பார்த்த உருவங்களைப் பற்றி சரியாக சொல்ல வேண்டும். கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பலகையில் அதே உருவங்கள் வரிசை கலைந்த முறையில் இருக்கும். தனது அணித்தோழரிடம் கேட்ட விவரங்களை வைத்து இன்னொரு போட்டியாளர், கலைந்திருக்கும் உருவங்களை சரியான வரிசையில் அடுக்க வேண்டும். யார் முதலில் சரியாக அடுக்குகிறாரோ அவரே வெற்றியாளர்.
PUZZLE என்றால் என்னவென்றே தெரியாத விக்ராந்த் + இனிகோ கூட்டணி தற்செயலாக அமைந்ததில் அவர்களுக்கே சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. அர்ஜுனும் இவர்களைக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தார். குறிப்பாக இனிகோவின் காலை ஜாலியாக வாரிக் கொண்டே இருந்தார்.

உமாபதி, அம்ஜத், நாராயணன், இனிகோ ஆகிய நால்வரும் கடலுக்குள் இறங்கினார்கள். அவர்கள் மேடையை அடைவது எளிதான விஷயமில்லை. தங்களின் இடுப்பில் உள்ள கயிற்றின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் குடுவையை முடிச்சுகளின் வழியாக லாவகமாக வெளியே எடுத்தால்தான் நகர முடியும். இந்த வரிசையில் உமாபதி முதலில் மேடையை அடைந்து சின்னங்களை கவனத்தில் கொள்ள முயன்றார். மற்றவர்களும் மெல்ல மேடையை அடைந்தார்கள்.
இனிகோ அங்கிருந்து விக்ராந்த்திடம் ‘தரமான சம்பவம்’ என்பது போல் கைகாட்ட, கரையில் இருந்த விக்ராந்திடம் “என்ன சொல்றாரு?” என்று ஜாலியாக விசாரித்தார் அர்ஜுன். “வெளங்கிடும்’ன்றாரு என்று நகைச்சுவையாக அந்த சைகையை மொழிபெயர்த்தார் விக்ராந்த். முதலில் உமாபதி திரும்பி வர ஏறத்தாழ அதே வரிசையில் மற்றவர்களும் திரும்பி வந்தார்கள்.
“இது வேகமா ஆடற ஆட்டம் இல்லை. யாரு சரியாச் செய்யறாங்கன்றதுதான் முக்கியம். விவேகம் தேவை” என்று எச்சரித்தபடியே இருந்தார் அர்ஜுன். கடலுக்குச் சென்றவர்கள் கயிறுகளை கழற்றித் திரும்பி வரும்போது சிந்தனை கலையாமல் பார்த்தவற்றை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

திரும்பி வந்த உமாபதி, தன் கவனத்தில் இருந்தவற்றை தன் அணித்தோழரான லேடி காஷிடம் விவரிக்க அவர் கவனமாக கேட்டுக் கொண்டார். இரண்டாவதாக திரும்பிய இனிகோ, விக்ராந்த்திடம் “முதல் படத்துல பேய் மாதிரி கண்ணுள்ள மீன் இருக்கும்” என்பது போல் விவரிக்க சிரிப்புடன் விக்ராந்த் கேட்டுக் கொண்டார்.
சின்னங்களின் வரிசையை பாடல் மாதிரி ஆக்கிக் கொண்டு அதை ஆங்கில எழுத்துகளால் விஜியிடம் விவரித்துக் கொண்டிருந்தார் அம்ஜத். கடைசியாக வந்த நாராயணன், “விஜி.. விஜி.. நான் சீனு விஜி”… என்று மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் கமல்ஹாசன் மாதிரி எதையோ சொல்ல முயற்சிக்க, ஸ்ரீதேவி மாதிரி விழித்தார் வனேசா.
ஆட்டத்தின் இரண்டாவது நிலை. இனிகோ சொன்னதை கேட்டுக் கொண்ட விக்ராந்த், வரிசையை அமைக்க முதலில் வேகமாக சென்றார். ‘அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்’ என்கிற பார்வையைத் தந்தார் உமாபதி. “இவரு என்ன சொன்னாரு.. அவர் என்ன புரிஞ்சிக்கிட்டாரு. ஒண்ணும் புரியலையே” என்பது போல் உமாபதியின் கிண்டல் இருந்தது. அம்ஜத்தின் குறிப்புகளை கேட்டுக் கொண்ட விஜி, இரண்டாவதாக பாய்ந்தார். உமாபதி அவசரமே படாமல் மிக நிதானமாக தான் பார்த்தவற்றை விவரிக்க, அதை கவனமாக கேட்டுக் கொண்ட லேடிகாஷ், மூன்றாவதாக சென்றார். ‘Sea Horse’- ஐ என்ன சொல்வதென்று தெரியாமல் அவசரத்தில் ‘டிராகன்’ என்று வனேசாவிற்கு சொல்லியனுப்பினார் நாராயணன்.

புதிர்களை சரிசெய்யச் சென்ற விக்ராந்த்தும் விஜியும் மறுபடியும் திரும்பி வந்து தங்களின் டீம்மேட்டிடம் சந்தேகம் கேட்டு விட்டுச் சென்றார்கள். விஜி சில சந்தேகங்களை வலுவாக கேட்டதால் குழப்பமடைந்த அம்ஜத், அவற்றைத் தெளிவாக்குதற்காக இரண்டாம் முறையாக கடலுக்குள் பாய்ந்தார்.
விக்ராந்த் புதிரை ஆவேசமாக அடுக்குவதைப் பார்த்த அர்ஜுன் “விக்ராந்த் அணி ஜெயிச்சுடும் போல இருக்கு” என்று கிண்டலடித்தபடி இருந்தார். அம்ஜத்தை தொடர்ந்து உமாபதியும் கடலுக்குள் இரண்டாவது முறையாக சென்றார். “எங்க கிட்ட சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்” என்பது போல இனிகோவும் அவர்களைத் தொடர்ந்து கடலுக்குள் சென்றார்.

முதலில் சென்ற அம்ஜத் வெற்றிப் புன்னகையுடன் திரும்பி வந்தார். “ஜெயிச்சிட்டோம்” என்கிற உறுதி அவரது முகத்தில் தெரிந்ததும் விஜியும் உற்சாகம் அடைந்தார். மற்ற இருவரும் திரும்பி வந்து இரண்டாம் முறை பார்த்தவற்றை வைத்து சின்னங்களின் ஆர்டரை சொல்லிக் கொண்டிருந்தனர்.
அம்ஜத் திரும்பி வந்து சொன்னதை வைத்து தன் வரிசையை இறுதி செய்த விஜி “முடிச்சுட்டேன் சார்” என்று அர்ஜுனிடம் பெருமிதமாக சொல்ல “STOP the Game’ என்று அலறினார் அர்ஜுன். அவர் வந்து சரிபார்த்த போது மூன்று தவறுகள் இருந்ததால் “ஆட்டத்தைத் தொடருங்க. இது வேலைக்கு ஆகலை” என்றவுடன் அம்ஜத் + விஜி கூட்டணி சோகத்தில் ஆழ்ந்தது. இத்தோடு கதை முடியவில்லை. அம்ஜத் மூன்றாவது முறையாகவும் கடலுக்குள் பாய்ந்தார். விஜிக்கு இருந்த சொச்ச சந்தேகத்தையும் தீர்ப்பதற்காக அவர் இந்த சாகசத்தில் இறங்கியதைப் பார்த்தவுடன் ‘இந்த அணிதான் வெற்றி பெறும்' என்கிற நம்பிக்கை நமக்கே வந்துவிட்டது.

“விஜி.. சீனு விஜி…” என்று சொல்லிக் கொண்டிருந்த நாராயணனை சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தார் வனேசா. ஓர் அணியில் ஒத்திசைவும் நட்பும் இல்லாவிட்டால் அது வெற்றி பெறுவது சிரமம் என்பதை நாராயணன் + வனேசா கூட்டணி காட்டியது.
மூன்றாவது முறையாக சென்ற அம்ஜத் திரும்பி வந்தவுடன் இந்த முறை எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்கிற ஆவேசத்தில் விஜி ஈடுபட, “முடிச்சிட்டேன் சார்” என்கிற குரல் இன்னோரு புறத்திலிருந்து கேட்டது. அது லேடிகாஷின் குரல். அர்ஜுன் வந்து சரிபார்க்க.. யெஸ்.. அந்த வரிசை கச்சிதமான ஆர்டரில் இருந்ததால் உமாபதி + லேடிகாஷ் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
“தொடர்ந்து ரிவார்ட் சேலன்ஞ் ஜெயிக்கறது எனக்கே சலிப்பா இருக்கு” என்று சந்தோஷத்துடன் அலுத்துக் கொண்டார் உமாபதி. மிகவும் நம்பிக்கையுடன் இருந்த விஜியின் முகம் சோகத்தில் ஆழ்ந்தது. “ஷெல் வடிவம் சின்னப்பசங்களுக்குகூட தெரியும். அதைப் போய் பீகாக்-ன்னு நாராயணன் சொன்னாரு” என்று எரிச்சலுடன் அலுத்துக் கொண்டார் வனேசா. உடல்ரீதியான போட்டிகளில் மட்டுமல்லாது, புத்திக்கூர்மை சார்ந்த போட்டிகளிலும் நாராயணன் பின்தங்கியிருப்பது துரதிர்ஷ்டம்தான்.
“எப்படி ஜெயிச்சீங்க?” என்று லேடிகாஷிடம் விசாரித்தார் அர்ஜுன். “உமாபதி வந்து சொன்னதை நான் ஏழு ஏழா பிரிச்சுக்கிட்டேன். அப்புறம் Alphabetical வார்த்தைகளை வைத்து அடையாளம் வெச்சுக்கிட்டேன்” என்று லேடிகாஷ் விவரித்தார். இந்த வெற்றியில் உமாபதிக்கும் கணிசமான பங்குண்டு. அவர்தான் சின்னங்களை கவனத்தில் வைத்து சரியான முறையில் தனது டீம்மேட்டிற்கு கடத்தினார்.

‘இனிகோ எப்படி சொன்னாரு' என்று விக்ராந்த்திடம் அர்ஜுன் கேட்க கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது. “சார்.. அப்படியே நாராயணனையும் விசாரிங்க சார்” என்று அவரைப் போட்டுக் கொடுத்தார் உமாபதி. “Shell-ஐ போய் Peacock மாதிரி இருக்கும்னு சொல்றாரு சார்” என்று வனேசாவும் தன் எரிச்சலை மறைத்து சிரித்தபடியே போட்டுக் கொடுத்தார்.
இருப்பதிலேயே அதிக காமெடியும் சோகமும் அம்ஜத் + விஜி கூட்டணிக்குத்தான். அம்ஜத் மூன்று முறை கடலுக்குச் சென்று வந்த போதிலும் மீன் வடிவங்களின் வித்தியாசங்களை விஜியிடம் அவரால் கச்சிதமாக சொல்ல முடியவில்லை.

“உங்க கூட விருந்தாளியா யாரையாவது கூட்டிட்டு போலாம்” என்று அர்ஜுன் அறிவித்ததும் “அம்ஜத்திற்கு இன்று பிறந்த நாள். அவரை கூட்டிட்டு போறேன்” என்று உமாபதி சொன்னது விவேகமான தேர்வு. லேடிகாஷ் விக்ராந்த்தைத் தேர்ந்தெடுத்தார். (நிரந்தர டீம் லீடர் ஆச்சே?!).
“ஓகே. வெற்றி பெற்ற உமாபதி + லேடிகாஷிற்கு என்ன ரிவார்டுன்னு பார்த்துடலாமா?” என்று அர்ஜுன் கேட்க, அனைவரும் ஆவலாகப் பார்த்தனர். “சிக்கன் நூடுல்ஸ், புலவ்..” என்று ஆரம்பித்து அசைவ உணவுகளின் வகைகளை அவர் அடுக்க அனைவரின் வாயிலும் எச்சில் ஊறியிருக்கும். இது தவிர சர்வைவர் கரன்ஸியும் வென்றவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டது.
உமாபதிக்கும் லேடிகாஷிற்கும் நிஜமான அசைவ உணவுகள் கிடைக்க, மற்றவர்கள் கடல்வாழ் உயிரினங்களை சின்னங்களாக மட்டும் பார்த்த திருப்தியுடன் தீவிற்குத் திரும்பினார்கள்.