Published:Updated:

சர்வைவர் 70 : இம்யூனிட்டி சேலன்ஞ் சவாலில் வென்ற வனேசா; காத்திருக்கும் அதிரடியான ட்விஸ்ட்!

வனேசா

சர்வைவர் என்பது உடல்வலிமை சார்ந்த போட்டி மட்டும் அல்ல. புத்திக்கூர்மை சார்ந்த ஆட்டமும் இதில் உண்டு.

Published:Updated:

சர்வைவர் 70 : இம்யூனிட்டி சேலன்ஞ் சவாலில் வென்ற வனேசா; காத்திருக்கும் அதிரடியான ட்விஸ்ட்!

சர்வைவர் என்பது உடல்வலிமை சார்ந்த போட்டி மட்டும் அல்ல. புத்திக்கூர்மை சார்ந்த ஆட்டமும் இதில் உண்டு.

வனேசா
“இம்யூனிட்டி சேலன்ஜில் லேடிகாஷோ, வனேசாவோ.. தனியா நின்று ஜெயிக்கட்டும்.. பார்க்கலாம்” என்று முன்பு சவால் விட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அவரின் இந்த சவடாலை உடைத்துப் போட்டார் வனேசா. ஆம், இம்யூனிட்டி சவாலில் வனேசா வெற்றி பெற்றதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். நாராயணனுக்கு சொன்ன அதே விஷயம்தான் வனேசாவிற்கும் பொருந்தும். “எல்லாம் தெரிஞ்சவனும் கிடையாது. எதுவும் தெரியாதவனும் கிடையாது”.

சர்வைவர் என்பது உடல்வலிமை சார்ந்த போட்டி மட்டும் அல்ல. புத்திக்கூர்மை சார்ந்த ஆட்டமும் இதில் உண்டு. இந்த ஏரியாவில் லேடிகாஷ், வனேசா போன்றவர்கள் கலக்குகிறார்கள். ஒருவேளை நேற்றைய போட்டியை ஐஸ்வர்யா ஆடியிருந்தால் எப்படி கையாண்டிருப்பார் என்று நினைத்துப் பார்த்தாலே கலவரமாக இருக்கிறது.

சர்வைவர் 70-ம் நாளில் என்ன நடந்தது?

உமாபதியின் உடல்நிலையை மருத்துவர் விசாரித்துக் கொண்டிருந்தார். “ஆமாம்ப்பா.. ஆமாம்” என்கிற மாத்திரை விளம்பரம் மாதிரி “சுரம், மூக்கடைப்பு, தலைவலி, முதுகுவலி.. ஆகிய நான்கு பிரச்சினைகளும் இருக்கு” என்று உமாபதி வேதனையுடன் சொல்ல ‘இந்த ஒரு மருந்து.. ஒரே மருந்து போதும்” என்று ஒரு மாத்திரையை டாக்டர் தந்தார். “ஆனா தண்ணி தாகம் எடுக்கும். தண்ணியை பக்கத்துலயே வெச்சுக்கங்க” என்று பின்குறிப்பாக அவர் சொல்ல “இம்யூனிட்டி கேம் ஆடும் போது எப்படி தண்ணியை பக்கத்துல வெச்சுக்க முடியும். மாத்திரையை அப்புறம் போடலாமா..”? என்றெல்லாம் உமாபதி குடைந்து கொண்டிருந்தார். “அதெல்லாம் உன் பிரச்சினை. நான் மாத்திரை மட்டும்தான் தர முடியும்..” என்றா டாக்டர் சொல்ல முடியும்? “உங்கள் உடல்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். கவலை வேண்டாம்” என்று நம்பிக்கை தந்தார் மருத்துவர். (டாக்டருங்க இப்படி நம்பிக்கையா பேசினாலே நமக்கு பாதி வியாதி குணமாயிடும்!).

விக்ராந்த்
விக்ராந்த்

விக்ராந்திற்கும் சிறிது ஜலதோஷம் இருந்ததால் அவரது உடல்நிலையையும் மக்கள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். “நாமதான் எப்படியும் ஃபைனல் போகப் போறோம். இந்தச் சேர் நமக்குத்தான் சொந்தம். இவங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு. ஏன் வீணா சிரமப்படறாங்க. இப்பவே இவங்க வீட்டுக்குப் போயிடலாம்” என்றெல்லாம் வறட்டுக் கெத்தாக நாராயணனும் அம்ஜத்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களின் எலிமினேஷன் பயத்தை இப்படி காமெடியாக பேசி மூடி மறைக்கிறார்களாம்.

‘பில்டிங் ஸ்ட்ராங்க்.. ஃபேஸ்மெண்ட் வீக்’ மாதிரி இவர்கள் காமெடி செய்து கொண்டிருக்க, இதை அரையும் குறையுமாக கேட்டுக் கொண்டிருந்த வனேசா “அவங்க ஏதோ பெரிசா பிளான் பண்றாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார். (அமெரிக்கால ஸ்பை வேலை ஒண்ணு காலியா இருக்காம்… போறீங்களா மேடம்?!).

இம்யூனிட்டி ஐடல் க்ளூவை வைத்துக் கொண்டு விக்ராந்த்தும் இனிகோவும் தேடல் வேட்டைக்கு கிளம்பினார்கள். “அது எனக்குத்தானே?” என்று விளையாட்டாக கேட்ட இனிகோ, “கிடைச்சாலும் அது நமக்குத்தானே” என்று பிறகு பன்மையில் மாற்றிக் கொண்டார். (அவ்வளவு நம்பிக்கை?!). “அதுல எக்ஸ்பயரி டேட் போட்டிருப்பான். பார்த்து சூதானமா உபயோகிக்கணும்” என்று முன்அனுபவத்துடன் சொல்லிக் கொண்டிருந்த இனிகோ, ஒரு கட்டத்தில் மறைந்திருந்த குறிப்பைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அதில் எக்ஸ்பயரி தேதி இல்லை. “சூப்பரு. அம்ஜத்தை முதல்ல தூக்கிட வேண்டியதுதான்” என்று இனிகோ உற்சாகப்பட “இதை நீயே பத்திரமா வெச்சுக்கோ” என்று இனிகோவிடம் கொடுத்து வைத்து விட்டார் விக்ராந்த்.

அர்ஜுன் - சர்வைவர்
அர்ஜுன் - சர்வைவர்

‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று போட்டியாளர்களை வரவேற்ற அர்ஜுன், உமாபதி மற்றும் விக்ராந்த்தின் உடல்நிலையை விசாரித்து விட்டு போட்டியாளர்களுக்கு அவரவர்களின் குடும்பத்திலிருந்து வந்திருந்த வாழ்த்துச் செய்திகளைப் பற்றி கேட்க ஆரம்பித்தார். “வெறுப்போட விளையாடதீங்கப்பா” என்று தன் தந்தை சொன்ன உபதேசத்தை மட்டும் கவனமாக விட்டு விட்டு மற்றவற்றை சொன்னார் இனிகோ. “எனக்கு மறக்க முடியாத பிறந்தநாளா இருந்தது. நீங்க அனுப்பிச்ச கேக்கிற்கு நன்றி” என்று அர்ஜூனிடம் நெகிழ்ந்தார் அம்ஜத்.

“சில பேருக்கு உடம்பு சரியில்ல. எனர்ஜி கம்மியா தெரியறீங்க. ஓகே. என்ன பண்றது.. ஆடித்தானே ஆகணும்..” என்ற அர்ஜுன், இம்யூனிட்டி சவால் பற்றி விளக்க ஆரம்பித்தார். ஒரு seesaw பலகையின் மீது போட்டியாளர் பேலன்ஸ் செய்து ஏறி நிற்க வேண்டும். பிறகு தனது வலது கைபக்கத்தில் இருக்கும் ஏழு மரத்துண்டுகளை எடுத்து இடது பக்கத்தில் அடுக்க வேண்டும். இந்த வரிசை மூன்று விநாடிகளுக்கு மேல் நின்று விட்டால் அவர் வெற்றியாளர்” என்று சொல்லி போட்டியை ஆரம்பிக்கத் துவங்கினார் அர்ஜுன்.

கேட்கும் போது எளிதானது போல் தோன்றினாலும் அந்த சீஸா பலகையில் ஏறி நின்ற பிறகுதான் அது எத்தனை கடினமான சவால் என்பது போட்டியாளர்களுக்கும் சரி, நமக்கும் சரி, அப்போதுதான் புரிந்தது. முதலில் அதில் ஏறி நிற்பதற்கே பெரிய சாமர்த்தியம் வேண்டும். பலகை ஆடாமல் இருக்க வைக்க, சில நிமிடங்களை எடுக்க வேண்டும். இதற்கான அவகாசத்தை தந்த பிறகு போட்டியை துவக்கி வைத்தார் அர்ஜுன்.

உமாபதி
உமாபதி

மரத்துண்டுகள் அசையும் போது எழும் ‘க்ரீச்’ ஒலிகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தன. சிலர் இரண்டு கால்களையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விரித்து வைத்து பேலன்ஸ் செய்து நிற்க முயன்றார்கள். இதில் இனிகோவிற்கு ஆரம்பக்கட்டத்திலேயே வெற்றி கிடைத்தது. ஆனால் நாராயணனும் லேடிகாஷூம் இந்த ஆரம்ப முயற்சியிலேயே மிகவும் தள்ளாடினார்கள்.

விக்ராந்த்
விக்ராந்த்

“இந்த கேம்ல பேலன்ஸ்தான் ரொம்ப முக்கியம். நிதானமா ஆட வேண்டிய ஆட்டம் இது” என்று டிப்ஸ் தந்து கொண்டிருந்தார் அர்ஜுன். போட்டியாளர்கள் இடதுபக்கம் சில துண்டுகளை வைத்து திரும்புவதற்குள் பலகை சாய்ந்து அவை கீழே விழுந்தன. விக்ராந்த், இனிகோ, லேடிகாஷ் போன்றவர்கள் ஐந்தாறு துண்டுகளை மட்டும் எப்படியோ அடுக்கி விட்டு சமாளிக்க முயன்றாலும் அது முடியவில்லை. அவை சரிந்து கீழே விழுந்தன.

ஏழு துண்டுகளை அடுக்கச் சொல்லியதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது போல. ஆறு துண்டுகள் வரை போட்டியாளர்களால் சமாளிக்க முடிந்தாலும் அதற்குப் பிறகு அவை எப்படியோ சரிந்து விடுகின்றன. “மேல இருக்க கடைசித் துண்டை மட்டும்தான் பிடிக்கணும். ரெண்டு பக்கமும் கை வெச்சிருக்கக்கூடாது’ என்று அர்ஜுன் அறிவித்துக் கொண்டிருந்தாலும் பலர் இந்த விதியை மீறத்தான் செய்தார்கள். அவர்களின் பதட்டம் அப்படி.

மற்றவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்க, ஓர் ஆச்சரியமான திருப்பம் நடந்தது. வனேசா ஏழு துண்டுகளையும் அடுக்கி வைத்து விட்டு பிறகு அவற்றை நிற்க வைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார் வனேசா. ஒரு கட்டத்தில் அந்த சாய் பலகைக்கும் அவருக்குமான ஒத்திசைவு அமைந்து விட்டது போல. “சார்.. சார். பாருங்க..” என்று அவர் அர்ஜுன் அவசரமாக கூப்பிட, மூன்று விநாடிகளுக்கு மேல் துண்டுகள் விழாமல் இருக்கிறதா என்பதை கவனமாக கண்காணித்தார் அர்ஜுன்.

வனேசா
வனேசா

யெஸ்.. வனேசாவை அவரது கடுமையான உழைப்பும், சிறிது அதிர்ஷ்டமும் காப்பாற்ற.. ஏழு துண்டுகளும் கீழே சரியாமல் இருந்தன. ஆக. இந்தச் சவாலில் வனேசா வெற்றி.

சர்வைவர்
சர்வைவர்

“இந்த கேம்ல வீக்கு. ஸ்ட்ராங்குன்னு யாரும் கிடையாது. எல்லார் கிட்டயும் ஒவ்வொரு மாதிரி திறமை இருக்கும்” என்றார் வனேசா. “அவங்களை வீக்கு. வீக்கு..ன்னாங்க. என்னிக்காவது ஒருநாள் இப்படி சொல்லி அடிப்பாங்கன்னு எனக்குத் தெரியும்” என்று பெருமிதமாக சொன்னார் உமாபதி. “இப்ப அவங்க மேல ஒரு மரியாதை வருது” என்று சல்யூட் அடித்தார் நாராயணன். ஆக. ஒருவர் தன் உழைப்பின் மூலம் வெற்றியடையும் போது மரியாதை தானாக வந்து சேரும். கூட்டு அரசியல் மூலம் பாதுகாப்பாக அமர்வதற்குப் பெயர் வெற்றி அல்ல.

சர்வைவர்
சர்வைவர்

வனேசாவை வாழ்த்திய அர்ஜுன், அவருக்கு இம்யூனிட்டி வாளை அளித்தார். இந்த வாரம் வனேசாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது. பிறகு அணித்தலைவரான லேடிகாஷிடம் நீலநிற மர்ம பெட்டியை ஒப்படைத்தார். டிரைபல் பஞ்சாயத்தில் அந்த நீல மர்மம் திறக்கப்படும்.

மூன்றாம் உலகம். விஜிக்கும் பார்வதிக்கும் முன்பு ‘கட்டை வெட்டச் சொன்ன’ டாஸ்க்கைப் போலவே இப்போதும் ஒரு சவால் தரப்பட்டது. அதில் ஜெயித்தால்தான் சோறு என்று மூவருக்கும் ஆசை காட்டப்பட்டது. ஆனால் கட்டை வெட்டும் சவாலை விடவும் இந்தப் போட்டி மிக கடுமையானதாக இருந்தது.

நான்கு பீப்பாய்களும் நான்கு மண்குடுவைகளும் வைக்கப்பட்டிருந்தன. “கடல் உள்வாங்கியிருக்கும் நேரத்தில் நீங்கள் குடுவையின் மூலம் கடல்நீர் எடுத்து வந்து நான்கு பீப்பாய்களையும் நிரப்ப வேண்டும். முடித்தால் சோறு. இல்லையேல் வெறும் நீரு” என்று வந்த குறிப்பு சொல்லியது.

சர்வைவர்
சர்வைவர்

பீப்பாய்கள் ஒவ்வொன்றும் சுமார் 150 லிட்டர் தண்ணீர் கொள்ளளவைக் கொண்டதாக இருந்தன. ஆனால் அவர்களுக்கு தரப்பட்டிருந்த மண்குடுவைகள் மிகச்சிறியதாக இருந்தன. இது மட்டுமல்ல, பீப்பாய் இருந்த இடத்திற்கும், கடல் உள்வாங்கியிருந்த தூரத்திற்கும் இடையே சுமார் அரை கிலோ மீட்டராவது இருக்கும். அவர்கள் மூன்று பேர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் சென்று திரும்பினால்தான் பீப்பாய்கள் நிறையுமா என்று பார்க்க முடியும்.

சர்வைவர்
சர்வைவர்
“கடல் எங்க இருக்குன்னு பார்த்தா. அது எங்கயோ இருந்தது” என்று பிரமித்தார் சரண். “கடல்லயே இல்லையாம்” என்கிற காமெடி போய் ‘கடலே இல்லையாம்” என்கிற காமெடியாக இந்தக் கதை இருந்தது. ‘சோறு முக்கியம் குமாரு’ என்கிற உறுதியுடன் மூவரும் கிளம்பினார்கள். நந்தா இரண்டு குடுவைகளைக் கொண்டு வர, சரணும், ஐஸ்வர்யாவும் ஆளுக்கொரு குடுவையுடன் திரும்பினார்கள். போகும் போது ஓடியும், திரும்பும் போது தண்ணீர் சிந்தாமல் கவனமாக நடந்தும் வரலாம் என்பது இவர்களின் திட்டம்.

‘மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது’ என்றொரு பழமொழி இருக்கிறது. இவர்களின் கதை அப்படித்தான் இருந்தது. பலமுறை சென்று திரும்பி வந்தாலும் பாதி பீப்பாய் முடிவதற்குள் இவர்களுக்கு பாதி உயிர் போயிருந்தது. ஒவ்வொரு துளி நீரும் எத்தனை முக்கியம் என்கிற பாடத்தை அவர்கள் கற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். எப்படியோ ஒரு பீப்பாயை நிரப்பிய பிறகு அப்படியே மூவரும் அதன் அருகில் கண்செருகி படுத்து விட்டார்கள். “போதுண்டா.. யப்பா.. நீ கொடுக்கற சோறும் வேணாம். ஒண்ணும் வேணாம்”..

சர்வைவர்
சர்வைவர்

இப்போது கடல் நீர் மெல்ல அவர்களை நோக்கி நகரத் துவங்கியது. இது நல்ல சகுனமாக தெரியவே உற்சாகமடைந்தவர்க்ள, மீண்டும் வீறு கொண்டு எழுந்து நீரை சேமிக்கத் துவங்கினார்கள். ஒருவர் பாதி தூரத்தில் வர, அங்கிருந்து ஒருவர் ரிலே ரேஸ் மாதிரி வாங்கி வந்து உத்தியை மாற்றிப் பார்த்தார்கள். கடல் நீர் அருகில் வரத் துவங்கிய போது இரண்டே பீப்பாய்களைத்தான் இவர்களால் நிரப்ப முடிந்திருந்தது. அதற்கே நாக்கு வெளியில் வந்து விட்டது.

‘இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கோம். பாதி பிளேட் பிரியாணியாவது தருவார்களா?” என்கிற நிராசையுடன் இவர்கள் தீவிற்குத் திரும்பிய போது அதிசயம் காத்திருந்தது. நான்கு வகையான உணவுகள் இவர்களுக்காக இருந்தன. நந்தா முதலில் பாய்ந்து வர, பின்பு அனைவரும் அமர்ந்து ஆவேசமாக சாப்பிட ஆரம்பித்தார்கள். அவ்வளவு பசி. கடுமையான உழைப்பிற்குப் பின் சாப்பிடும் உணவு, சுவையாக இல்லாவிட்டாலும் கூட தேவார்மிதமாக இருக்கும். “நாலு பீப்பாய்களையும் நிரப்பியிருந்தா ஒரு லெக்பீஸ் எக்ஸ்ட்ரா வெச்சிருப்பாங்க போல” என்று சரண் ஆசையாக சொல்ல “அதைச் சாப்பிட நாம உயிரோட இருந்திருக்க மாட்டோம். நம்ம லெக் பீஸை இவங்க சாப்பிட்டிருப்பாங்க” என்பது மாதிரியான லுக்கை நந்தா தந்தார்.

சரண்
சரண்

இந்த வார டிரைபல் பஞ்சாயத்து எப்படியிருக்கும்? விக்ராந்திடம் இம்யூனிட்டி ஐடல் இருக்கிறது. வனேசாவிடம் இம்யூனிட்டி வாள் இருக்கிறது. ஆக காடர்களின் நிலைமை முழு தெம்பாக இருக்கிறது. வேடர்களின் கதி? அம்ஜத் இன்றைக்கு பலிதானா? போதாக்குறைக்கு நீலநிற மர்ம பெட்டி வேறு.

ஆனால். இன்றைக்கான பிரமோவைப் பார்த்தால் ஓர் அதிரடியான தலைகீழ மாற்றம் நடந்திருப்பதைப் போல் தெரிகிறது. என்னவாகியிருக்கும்,?

பார்த்துடுவோம்.