‘நீரில் மூழ்கும் சவாலில் வனேசா அபாரமாக வெற்றி பெற்றதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். ‘யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது’ என்று அவர் சொன்னது நிதர்சனமான உண்மை. அதை விடவும் ‘Breathing pipe’ இல்லாமலேயே வெற்றிக்கு மிக நெருக்கமான எல்லை வரை தாக்குப்பிடித்து அசத்தினார் விஜி. ஐஸ்வர்யாவின் போராட்டமும் சிறப்பு. இந்தப் போட்டியில் ஆண்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறி ஒரு கட்டத்தில் வெளியேறி விட, மூன்று பெண்கள் அதையும் தாண்டி தாக்குப் பிடித்தது ஒட்டுமொத்த பெண்களையும் பெருமைப்படுத்தும் விஷயம். உடல்வலிமையை விடவும் மனவலிமையே சிறந்தது என்கிற ஆதாரமான விஷயம் மறுபடியும் நிரூபணமானது.
சர்வைவர் 88-ம் நாளில் என்ன நடந்தது?
தேர்தல கால அரசியல் கூட்டணிகளை விடவும் பெருங்குழப்பம் இந்த எபிசோடின் முதல் பாகத்தில் நிலவியது. ‘யார்.. எதிரி.. யார் நண்பன்’.. என்கிற குழப்பத்தில் ஏறத்தாழ அனைவருமே ஆழ்ந்தார்கள். அணிகள் உடைந்து தனிநபர் ஆட்டமாக மாறும்போது நிலவரம் இப்படியாகத்தான் கலவரமாக மாறும். என்றாலும் இப்படியா?
கொம்பர்களுக்குள் நிகழ்ந்த பெருங்குழப்பம்
“அண்ணன்களுக்கு யாரோ பாம் போட்டுட்டாங்க. விக்ராந்த் அண்ணா எளிதில் நம்பிடுவார்” என்று புலம்பிக் கொண்டிருந்தார் உமாபதி. அவர் அந்தக் குழுவிலேயேதான் இருக்கிறார். யார் வெடிகுண்டு வீசியிருப்பார் என்று தெரியாதா? உமாபதிக்கு விஜியக்கா மீது திடீரென்று இத்தனை சந்தேகம் வந்து விடுமா என்ன? அத்தனை பாசமாக பழகியவர்கள் ஆயிற்றே? தான் பெற்ற ஒரு வெற்றியை ‘விஜிக்கு சமர்ப்பணம் செய்யுமளவிற்கு’ பாசம் கொண்டவர் உமாபதி. எனில் எப்படி இந்தச் சந்தேகம் எழுந்தது? அதன் பின்னணி என்ன?
“நமக்குள்ளேயே என்னென்னமோ நடக்குது” என்று வனேசாவும் குழம்பினார். ஆனால் உமாபதி தன்னை விட்டு விட்டு ஐஸ்வர்யாவுடன் கூட்டணி அமைத்ததால் விஜி நிச்சயம் காண்டாகி இருக்கலாம்.
விஜிக்கு ஐஸ்வர்யா போட்ட ஸ்கெட்ச்
விஜியும் ஐஸ்வர்யாவும் கூட்டணி பேசிக் கொண்டிருந்தார்கள். “நான் ரெண்டு தடவை உங்களை டீலுக்கு கூப்பிட்டிருக்கேன். நீங்க வரலை. அப்ப உங்க கிட்ட நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கேன். அதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும். நீங்க டீலுக்கு ஒத்து வந்தா முழு விவரங்களைப் பேசலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அவருடைய நோக்கம் விஜிக்கு ஸ்கெட்ச் போடுவது மட்டுமே. கூட்டணி அல்ல.
“உமாபதிக்கு நான் ஓட்டு போட்டாலும் போட வேண்டி வரும்’ என்று இந்தச் சமயத்தில் விஜி வாயை விட்டு விட, அந்தப் பக்கம் கிராஸ் ஆன உமாபதியின் காதில் இது விழுந்து விட்டது. பிறகு சரணிடம் பேசும்போது “உமாபதிக்கு வாக்களிப்பதைப் பற்றி ஷோ முடிந்த பிறகு கூட நான் யோசிக்க மாட்டேன்” என்று விஜி சொல்ல, சர்வைவர் டீமே இன்டர்கட்டில் விஜி சொன்னதைக் காட்டினார்கள். “அவங்க வாயாலேயே இதை வரவழைச்சுட்டேன்” என்று உமாபதியிடம் பிறகு பெருமிதம் பொங்க கூறினார் ஐஸ்வர்யா. (என்னா வில்லத்தனம்?!).

விஜியைச் சந்தித்த உமாபதி இது பற்றி கேட்க அவர் சுத்தமாக மறுக்க “நானே அண்ணன்ங்க போன சோகத்துல இருக்கேன்” என்று ஆரம்பித்து “யாரோ பாம் போட்டுட்டாங்க’ என்கிற அனத்தலை மறுபடியும் தொடர்ந்தார். இதற்கிடையில் ஐஸ்வர்யாவிற்கும் சரணிற்கும் இடையில் நடந்த ஒரு உரையாடலில் குழப்பம் ஏற்பட “சரணை நம்ப முடியாது” என்று எண்ணிய ஐஸ்வர்யா, அதை விஜியிடம் சென்று கேட்க “அய்யோ மண்டை வெடிக்குது.. கூப்பிடு சரணை” என்று விஜி துடிக்க.. ஒரே கஷ்டமப்பா.
யார், யாரைச் சந்தேகப்படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதற்குள் சீசனே முடிந்து விடும் போல் இருக்கிறது. சரண் வந்து தெளிவாக்கியவுடன் “நான் இனிமே யார் கூடயும் பேசப் போறதில்ல” என்று நொந்து போனார் விஜி. நாக்கை நீட்டி ஐஸ்வர்யாவை நோக்கி சஸ்பென்ஸ் படம் மாதிரி சிரித்தார் நாராயணன். இந்தக் குழப்பத்தில் ஐஸ்வர்யாவும் நொந்து போய் “இந்த கேம் என்னை கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. நான் இந்த கேமை விட்டுப் போறேன்.” என்று நாராயணனிடம் புலம்பி அழ “பத்து நிமிஷம் தனியா யோசி” என்று ஆறுதல் கூறினார் நாராயணன்.
நண்பர் யார்? துரோகி யார்?
“Welcome to the Adventurous show” என்று வரவேற்றார் அர்ஜுன். “விக்ராந்த், இனிகோ இல்லாத டிரைப் எப்படியிருக்கு?” என்று அவர் விசாரிக்க “எனக்கு கேப்டன்னா அது விக்ராந்த்தான். (அப்ப விஜய்காந்த் கதி?;!) யாரோ பாம் போட்டுட்டாங்க. எங்களுக்குள்ளேயே சண்டை வரும்னு நான் எதிர்பார்க்கலை. ஆனா நடந்துடுச்சு” என்று பாம் அனத்தலை இங்கும் தொடர்ந்தார் உமாபதி. வேடர்கள் அணி உடையும் போதெல்லாம் துள்ளிக் குதித்து சந்தோஷப்பட்ட காடர்கள் அணி, இப்போது அம்பு தங்களின் பக்கம் திரும்பும் போது தக்காளி சட்னி vs ரத்தம் தத்துவத்தைப் பின்பற்றுகிறது.
“குண்டு உள்ளே இருந்து வந்ததா அல்லது வெளியே இருந்து வந்ததா?” என்று சூசகமான கேள்வியை நமட்டுச் சிரிப்புடன் அர்ஜுன் முன்வைக்க, “தெரியலை. சார் ஆனா அது சூப்பர் பாம். முகத்துக்கு நேரா நல்லாத்தான் பேசறாங்க” என்று பூடகமாகவே பேசிக் கொண்டு சென்றார் உமாபதி. விஜியை நேரடியாக குற்றம் சாட்ட ஏன் தயக்கம்?
‘ப்ளோ சார்ட்’ என்கிற வார்த்தையைக் கேட்டதும் “நான்தான் அப்படி பேசினேன்” என்று முன்வந்த விஜி, உமாபதியின் குற்றச்சாட்டை மறுப்பது போல் பேசினாலும் அவரது முகத்தில் தயக்கம் தெரிந்தது. . “நான் ஒருத்தர் கிட்ட வாக்கு கொடுத்தா மாறமாட்டேன்” என்று உமாபதி சொல்ல சாட்சியம் சொல்ல வந்த சரண், விஜி மீது நேரடியான குற்றச்சாட்டை துணிச்சலாக வைத்தார். “ஆன் காமிரா, ஆஃப் காமிரா விஜி மாத்தி மாத்தி பேசறாங்க சார். உமாபதி மேல சந்தேகம் வருது. ப்ளோ சார்ட் போட்டுட்டு வந்து பேசறேன்னு சொல்லிட்டு இப்ப பொய் சொல்றாங்க” என்று இறங்கி அடித்தார். உமாபதியை சரணுக்கு பிடிக்கும் என்பது ஒரு காரணம். சாட்சியத்திற்கு வனேசா அழைக்கப்பட அவர் சிலவற்றை சொல்ல முடியாமல் தவித்தார்.
ஐஸ்வர்யாவுடன் உமாபதி கூட்டணி அமைத்த விஷயம் சட்டென்று முடிவான விஷயம்தான் என்றாலும் அது எந்தச் சூழலில் ஏற்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும். உமாபதிக்கு காலில் அடிபட்டிருக்கும் சூழலில், காடர்களே உமாபதியை சாய்ஸில் வைத்த போது, துணிந்து ரிஸ்க் எடுத்தது, ஐஸ்வர்யா மட்டும்தான். ஒரு உண்மையான ஆட்டக்காரர், தன்னைப் போன்ற இன்னொரு ஆட்டக்காரரோடு இணைந்து ஆட விரும்புவது இயல்பானது. தன்னால் காடர்களில் யாரும் தோற்று விடக்கூடாது என்று உமாபதி எண்ணியது ஒரு காரணம்.
ஆனால் உமாபதியை நான்கு பேர்களில் ஒரு சாய்ஸாக மட்டுமே வைத்திருந்த விஜி, இதற்காக கோபித்துக் கொள்வதும் உமாபதியை சந்தேகப்படுவதும் அநியாயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இம்யூனிட்டி சவால் – மரணபயத்தைக் காட்டிட்டாங்க பரமா!
“ஓகே.. இதையெல்லாம் டிரைபல் பஞ்சாயத்துல பேசிக்கலாம். இப்ப இம்யூனிட்டி சேலன்ஞ் என்னன்னு பார்ப்போம்” என்றார் அர்ஜூன். இதுவொரு underwater challenge. நீரின் மீது அமைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கம்பி பலகையின் பின்புறம் படுத்த நிலையில் இருக்க வேண்டும். நேரம் கடக்க கடக்க நீரின் அளவு ஏற ஆரம்பிக்கும். இதில் இறுதி வரை யார் தாக்குப் பிடிக்கிறாரோ, அவரே வெற்றியாளர். நீரினுள் தாக்குப் பிடிப்பதற்காக போடடியாளர்களுக்கு Breathing Pipe தரப்பட்டிருந்தது.
காடர்களுக்குள் ஐஸ்வர்யா செய்த குழப்பத்தினால் கோபம் அடைந்த வனேசா “ஐஸ்வர்யாவை ஜெயிக்க விடக்கூடாது” என்று உள்ளுக்குள் சபதம் எடுத்துக் கொண்டார். ஒருவேளை இந்த மனவலிமைதான் அவரை இறுதி வரைக்கும் பயணம் செய்வதற்காக உந்துதலை அளித்ததோ, என்னமோ? “இது எனக்கு முக்கியமான கேம். ஜெயிச்சே ஆகணும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் விஜி. உமாபதியும் இப்போது எதிர்ப்பு நிலைக்கு போய் விட்டதால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு விஜி ஆளாகியிருக்கிறார்.

நீருக்குள் ஒரு ‘வாழ்வா, சாவா’ போராட்டம்
போட்டி ஆரம்பித்தது. அனைவரும் இரும்புக் கம்பிகளுக்குப் பின் சென்று முகத்தை புதைத்துக் கொண்டார்கள். “நீர் அளவு ஏறும் போது பைப்பை வாயில் வெச்சுக்கங்க” என்றார் அர்ஜூன். ஆனால் போதிய பயிற்சி இல்லாமல் அந்த பைப்பை உபயோகிப்பது கடினம் என்று தோன்றுகிறது. எதிரிகளிடமிருந்து நீரில் மறைந்து கொள்ள பழங்குடிகள் உபயோகிக்கும் உத்திகளுள் இதுவொன்று என்பதை நிறைய ஆங்கிலப்படங்களில் பார்த்திருப்போம். “பைப்பை தண்ணில விட்டுடாதீங்க” என்று அர்ஜுன் எச்சரித்ததால் தலைத்துணியில் சிலர் செருகிக் கொண்டார்கள்.
உமாபதி தன்னுடைய காலைத் தூக்கி இரும்புக்கம்பியுடன் பிணைத்து வைத்துக் கொண்டார். “என்னோட கால் நீளம். இப்பவே அப்படி வெச்சுக்கிட்டா அப்புறம் கஷ்டமாயிடும்” என்று இந்த உத்தியை தவிர்த்தார் நாராயணன். “வாட்டர் லெவல் அதிகமாகுது. உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி பொஷிஷனை வெச்சுக்கங்க” என்றார் அர்ஜுன்.
போட்டி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் கடந்திருந்தன. சில போட்டியாளர்கள் தங்களின் கால்களை இரும்புக்கம்பியுடன் பிணைத்து வைத்திருந்தார்கள். “அடுத்த அஞ்சு நிமிஷத்துல மூஞ்சி மேல தண்ணி வந்துடும். தயாரா இருங்க” என்றார் அர்ஜுன். 15 நிமிடங்கள் கடந்திருந்தன. ‘பைப்பை வாயில் கடிக்கும் வேகத்தில் அதில் ஐஸ்வர்யா ஓட்டை போட்டு விட்டதால் அதன் வழியாக நீர் உள்ளே புகுந்தது.

‘இது நிபுணர்களின் மேற்பார்வையில் நிகழும் ஆட்டம். வீட்டில் முயற்சி செய்யாதீர்கள்” என்கிற எச்சரிக்கை அறிவிப்பு அடிக்கடி காண்பிக்கப்பட்டது. சென்னையில் இருக்கிற தண்ணீர் கஷ்டத்திற்கு இதையெல்லாம் நாம் எங்கே முயற்சி செய்வது? ஒரு கட்டத்தில் நாராயணன் தடுமாற ஆரம்பித்தார். மூக்கிலும் வாயிலும் நீர் புகுந்தது. இன்னொரு பக்கம் சரண் ஒரு மாதிரியாக சமாளித்துக் கொண்டிருந்தார்.
“அமைதியா இருக்கணும்னு முதல்லயே முடிவு பண்ணிட்டேன்” என்ற வனேசா, அதன்படி அதிக அசைவுகள் இன்றி கட்டை மாதிரி கிடந்தார். விஜி தனது பைப்பை நீரில் தவற விட்டு விட்டதால் கையாலேயே மூக்கைப் பிடித்துக் கொண்டு இருந்தார். ஆனால் அத்தனை நிமிடங்கள் அவரால் எப்படி தாக்குப் பிடிக்க முடிந்தது என்பது ஆச்சரியமாகவே இருந்தது. பைப்பை உபயோகிக்கும் டெக்னிக் நாராயணனுக்கு தெரியாததால் அதை விஜிக்கு அளிக்க முடிவு செய்தார். “விஜி.. விஜி.. நான் சீனு விஜி..”என்று மூன்றாம் பிறை கமல்ஹாசன் போல தொடர்ந்து நாராயணன் கேட்டுக் கொண்டிருந்தாலும் அதைக் கவனிக்காதது போலவே இருந்தார் விஜி. அவர் என்ன நிலைமையில் இருக்கிறாரோ?!
ஒரு கட்டத்தில் சரண் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியே வந்தார். “உயிர் முக்கியம் குமாரு” என்று பின்னர் இவர் சொன்னது வாஸ்தவமான பேச்சு. ஏறத்தாழ இதே சமயத்தில் உமாபதியும் வெளியே வந்தார். “இப்ப நடக்கற விஷயங்களால மனசு குழப்பமா இருக்கு. எப்படி விளையாடறது?” என்பது உமாபதி சொன்ன காரணம். மூக்கிலும் வாயிலும் நீர் புகுந்து தடுமாறிய நாராயணனைப் பார்க்க நமக்கே அச்சமாக இருந்தது. “யப்பா.. சாமி.. போதும் வெளியே வந்துடு சாமி..” என்று மனது அடித்துக் கொண்டது. அப்படியொரு உயிர் பயத்தை நாராயணனின் முகம் வெளிப்படுத்தியது. எனவே அவரும் பாய்ந்தடித்துக் கொண்டு வெளியே வந்தார்.
சாதனை படைத்த சிங்கப்பெண்கள்:
ஆக.. ஆண்கள் அனைவரும் வெளியேறி விட்டாலும் மூன்று பெண்கள் மட்டும் இந்த ‘வாழ்வா.. சாவா’ போட்டியில் நீடித்த காட்சி மிக அருமை. போட்டி ஆரம்பித்து முப்பது நிமிடங்கள் கடந்திருந்தன. பைப் இல்லாமலேயே சமாளிக்கும் விஜியை “சூப்பர் ஃபைட்டர்” என்று தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருந்தார் அர்ஜூன். “ஐசு தண்ணில மிதக்கறா. ஆனா அவ கிட்ட இருந்து மூச்சுக் காத்து தண்ணில மோதும் சவுண்டு மட்டும் வருது. என்ன நடக்குதுன்னே புரியலை” என்றார் சரண். “ஐஸ்வர்யா ஒரு நல்ல ஃபைட்டர் அவங்க ஃபைட்டிங் ஸ்பிரிட் எனக்குப் பிடிக்கும்” என்றார் உமாபதி.
இந்தக் கட்டத்தில் ஐஸ்வர்யா நிறைய தடுமாறினார். எனவே தாங்க முடியாமல் வெளியே வந்தததால் அவுட் ஆக வேண்டிய நிலைமை. “நிறைய தண்ணிய குடிச்சிட்டேன்” என்று பிறகு சொன்னார் ஐஸ்வர்யா. ஆக போட்டி என்பது விஜிக்கும் வனேசாவிற்கும் இடையில் என்பதாக மாறியது. வனேசா இப்படி அற்புதமாக தாக்குப் பிடிப்பார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அவராவது பைப்பின் உதவியுடன் சமாளிக்கிறார். ஆனால் விஜியோ அது இல்லாமலேயே தாக்குப் பிடித்ததின் ரகசியம் என்னவென்று தெரியவில்லை.
“எனக்கு ஒரு டெக்னிக் பிடிபட்டுச்சு. ஒரு பெரிய அலை வரும். அந்தச் சமயத்தில் மூச்சை இழுத்துப் பிடிச்சுக்குவேன். அது போயிட்டு திரும்பி வர்ற செகண்ட்களுக்குள் மூச்சை விட்டு சமாளிப்பேன்” என்று தனது உத்தியை பிறகு தெரிவித்தார் விஜி. இரண்டு பேருமே ஆடாமல் அசையாமல் அப்படியே நெடும் நேரம் கிடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள்.

வெற்றியைத் தொட்டு அசத்திய வனேசா
ஒரு கட்டத்தில் விஜியால் தொடர்ந்து சமாளிக்க முடியாமல் வெளியேற அப்போதும் வனேசா அப்படியே கிடந்தார். விட்டால் அங்கேயே தூங்கி விடுவார் போலிருக்கிறது. பிறகு உமாபதி சென்று வனேசாவை தூக்கி அழைத்து வந்தார்.
‘வாழ்த்துகள் வனேசா” என்று வெற்றியாளரை அர்ஜுன் வாழ்த்தினாலும் அதை விடவும் பல மடங்கு விஜியைப் பாராட்டினார் அர்ஜுன். பைப் இல்லாமல் தாக்குப் பிடித்தற்காக இந்தப் பாராட்டாம்.

இந்தச் சமயத்தில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. “தனிநபர் போட்டியில் வனேசாவால் ஜெயிக்க முடியுமான்னு நானே முன்னர் சவால் விட்டிருக்கேன். ஆனால் என் கருத்து தவறுன்னு வனேசா நிரூபிச்சிட்டாங்க” என்று மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார் ஐஸ்வர்யா. (ஜான்சிபார் தீவில் அன்று கடுமையாக மழை பெய்திருக்கும்). “வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரன் மதிக்கணும்” என்கிற கரகாட்டக்காரன் தத்துவத்தை ஐஸ்வர்யா இப்போது புரிந்து கொண்டார்.
“யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. தவறாகவும் மதிப்பிடக்கூடாது என்பதுதான் நான் அடைந்த வெற்றியின் பாடம்” என்று வனேசா சொல்லியது உண்மைதான். அவருக்கு இம்யூனிட்டி வாளை தந்தார் அர்ஜுன். இந்த வாரப் பஞ்சாயத்தில் அவரை எதிர்த்து யாரும் வாக்களிக்க முடியாது.
மூன்று பெண்கள் போட்டியில் தாக்குப் பிடித்த சாதனையை வியந்து பாராட்டிய அர்ஜுன், “பஞ்சாயத்தில் சந்திக்கலாம்” என்று விடைபெற்றார்.
அடுத்த எலிமினேஷன் யார்?