Published:Updated:

சர்வைவர் - 89: விஜியா... ஐஸ்வர்யாவா... சரணா... யார் செய்த குழப்பம்?

சர்வைவர்

‘ஒரு பாம்.. ஊரே டோட்டல் க்ளோஸ்’ என்கிற காமெடியாக ஐஸ்வர்யாவுடன் சட்டென்று தீர்மானித்து உமாபதி அமைத்த கூட்டணி, காடர்களின் ஒற்றுமையை ஒரே கணத்தில் கலைத்துப் போட்டு விட்டது.

Published:Updated:

சர்வைவர் - 89: விஜியா... ஐஸ்வர்யாவா... சரணா... யார் செய்த குழப்பம்?

‘ஒரு பாம்.. ஊரே டோட்டல் க்ளோஸ்’ என்கிற காமெடியாக ஐஸ்வர்யாவுடன் சட்டென்று தீர்மானித்து உமாபதி அமைத்த கூட்டணி, காடர்களின் ஒற்றுமையை ஒரே கணத்தில் கலைத்துப் போட்டு விட்டது.

சர்வைவர்

சர்வைவர் விளையாட்டில் இருந்து ஐஸ்வர்யா வெளியேற்றப்பட்டார் என்பதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். ‘இம்யூனிட்டி எலிமினேஷன் சேலன்ஜின்’ போது ‘இதில் நம்பர் கேம் இருக்காது்‘ என்று ஐஸ்வர்யா அடைந்த சந்தோஷம் தற்காலிகமானதாக ஆகி விட்டது. இத்தனை நாள் மற்றவர்கள் செய்த அரசியல்களைப் பார்த்து “சரி.. தள்ளுங்கடா. நானும் இன்னிக்கு ஒருநாள் ஆடிப் பார்க்கிறேன்” என்று கேம் ஆடியதின் பலன் ஒரே நாளில் குற்றவாளியாக பார்க்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

‘ஒரு பாம்.. ஊரே டோட்டல் க்ளோஸ்’ என்கிற காமெடியாக ஐஸ்வர்யாவுடன் சட்டென்று தீர்மானித்து உமாபதி அமைத்த கூட்டணி, காடர்களின் ஒற்றுமையை ஒரே கணத்தில் கலைத்துப் போட்டு விட்டது. அந்தக் கூட்டணி அமைந்ததின் பின்னணி, சூழல் போன்றவைகளைப் பற்றி நிதானமாக யோசிக்க யாருக்கும் தெரியவில்லை. பாவம் விக்ராந்த், இத்தனை பலவீனமான கோட்டையைத்தான் அவர் இத்தனை காலமும் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். “போதும். நிறுத்துங்க.. இன்னமும் அசிங்கமா ஆக்காதீங்க” என்று டிரைபல் பஞ்சாயத்தில் அவரே கலங்கும்படியாக ஆகி விட்டது நிலைமை.

சர்வைவர் 89-ம் நாளில் என்ன நடந்தது?

ஜூரிகளாக மாறிய விக்ராந்த்தும் இனிகோவும் ஹோட்டலில் நுழைந்து ஆசையாக படுக்கையில் படுத்தார்கள். “பெட்டில் தூங்கவே தோணலை” என்று நந்தா சொல்லியதற்கும் இதற்கும் முரண்பாடு இருந்தது. உமாபதி மீது இந்த இருவருக்கும் வருத்தமும் கோபமும் இருக்கிறது போல. அவர் ஐஸ்வர்யாவுடன் அமைத்த கூட்டணி காரணத்தினால் இந்த விரிசல் ஏற்பட்டிருக்கிறது. ‘தன்னுடைய கால்வலி காரணமாக காடர்களில் ஒருவர் தோல்வி அடையக்கூடும்’ என்று நல்லெண்ண நோக்கில் உமாபதி யோசித்ததை இவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.

“விஜிக்கு வருத்தமாக இருக்கும். பார்த்துக்க சொல்லி நாராயணனிடம் சொல்லி விட்டு வந்திருக்கலாம்” என்று இருவரும் பேசிக் கொண்டார்கள். பிறகு நந்தா மற்றும் அம்ஜத் புத்தம் புது ஆடைகளில் ஸ்டைலாக வர நால்வரும் ஒன்றாக இணைந்து உணவு சாப்பிட்டார்கள்.

ரணகள உரையாடல் துவங்கியது

டிரைபல் பஞ்சாயத்து ஆரம்பித்தது. போட்டியாளர்களோடு ஜூரிகளும் ஜம்மென்ற உடையில் வந்து அமர்ந்தார்கள். ஆனால் இவர்கள் பெரும்பாலும் மெளனமான பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். விக்ராந்த் & இனிகோவாவது சற்று பேசினார்கள். ஆனால் அவசியமான நேரத்தில் கூட அம்ஜத் மற்றும் நந்தா வாய் திறக்கவில்லை. ஐஸ்வர்யா வெளியேறிய போது கூட இவர்களிடம் அதிகம் சலனமில்லை.

“சமூகத்தில் பொதுவாக பெண்களை குறைவாகப் பார்க்கிறார்கள். ஆனால் கடந்த இம்யூனிட்டி சேலன்ஜில் மூன்று பெண்கள் அசத்திக் காட்டினார்கள்” என்கிற வாழ்த்துரையோடு உள்ளே நுழைந்தார் அர்ஜுன். காடர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலையொட்டி “குடும்பத்தில் பிரச்சினைகள் வருவது சகஜம். அதையெல்லாம் வெளிப்படையாக பேசினால் தீரும்” என்று உமாபதி மற்றும் விஜியை நோக்கி சொன்னார். (அப்பதானே ஃபுட்டேஜ் தேறும்?!)

சர்வைவர்
சர்வைவர்

வெடிகுண்டு கலாசாரத்தைக் குறித்து மீண்டும் ஆரம்பித்த உமாபதி “யார் பாம் போட்டாங்கன்னே தெரியலை சார். அண்ணன்ங்க நல்லாப் பழகினாங்க. ஆனா போகும் போது என் கிட்ட சொல்லிட்டுப் போகலை. எனக்கு எந்த பிரச்சினை என்றாலும் விக்ராந்த் வந்து முன்னாடி நிற்பார்” என்று வேதனையோடு பேசினார் உமாபதி. விக்ராந்த் இதை மெளனமாக கவனித்துக் கொண்டிருந்தார்.

“இப்ப பேசினா கேம் ஆடறேன்னு சொல்லுவாங்க. அதனாலதான் சென்னைக்கு போய் பேசலாம்னு நெனச்சேன்” என்றார் உமாபதி. “யப்பா.. சாமி.. இங்கயே சொல்லு.. அதுக்குத்தானே செலவு பண்ணி இத்தனை பெரிய செட்டு போட்டு காமிரால்லாம் வெச்சிருக்கோம்’ என்பது அர்ஜூனின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம். “என்னைப் பொறுத்தவரைக்கும் நேத்தே கேம் முடிஞ்சிச்சு” என்று விரக்தியின் உச்சத்திற்கே சென்றார் உமாபதி. விக்ராந்த் மற்றும் உமாபதியின் புறக்கணிப்பு, விஜியிடம் தெரியும் மாற்றம் போன்றவை அவரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

விஜியா.. ஐஸ்வர்யாவா.. சரணா.. யார் செய்த குழப்பம்?

“அவன் என்னைத்தான் சார் சொல்றான்” என்று விளக்கம் தர முன்வந்தார் விஜி. “உமாபதிக்கும் விஜிக்கும் ஒத்துப் போகலைன்னு சரண், ஐஸ்வர்யா கிட்ட சொல்லியிருக்கான். அதை வெச்சு ஐஸ்வர்யா என் கிட்ட ஒரு கேம் ஆடினா. இதை அவளே ஒத்துக்கிட்டா. இந்த ஒரு விஷயம் போதாதா. என்னைக் குழப்பறதுக்கு..” என்று தடுப்பாட்டம் ஆடிய விஜி, “வனேசாவும் என் கூட இருந்தா. ஐசுவுக்குத்தான் வோட்டு போடலாம்னு நாங்க முடிவு பண்ணோம்.. நாலாவதா ஒரு ஓட்டு தேவைப்பட்டுச்சு.. சரண் கிட்ட பேசலாம்னு முடிவு பண்ணோம்… அப்புறம் என்ன ஆச்சு.. அய்யோ. பிளாங்க் ஆவுது சார்” என்று குழம்பினார். விஜி முழுக்க உண்மையைத்தான் சொல்கிறார் என்றால் இந்தத் தடுமாற்றம் எழ வாய்ப்பில்லை.

“ஆனா சரண் என் கிட்ட என்ன சொன்னான்னா. எல்லோரும் விஜிக்குத்தான் ஓட்டு போடப் போறாங்கன்னு” என்று இந்தச் சமயத்தில் ஐஸ்வர்யா உள்ளே வர “சரண் இந்த மாதிரி நடுநடுவுல மாத்தி பேசினீங்களா?” என்று கேட்டார் அர்ஜூன். “மத்தவங்களை விடவும் ஐசு மேல அதிகமாக டிரஸ்ட் வெச்சேன்” என்று சரண் விளக்கம் தர ஆரம்பிக்கும் போது “உனக்கு சப்போர்ட் பண்ணதுதான் நான் பண்ண தப்பு” என்ற ஐஸ்வர்யா “மூன்றாம் உலகத்துல வேற மாதிரி பேசறான்.. இங்க வந்து வேற மாதிரி பேசினான்” என்று சரணின் மீது நேரடியாக குற்றம் சாட்டினார்.

சர்வைவர் - சரண்
சர்வைவர் - சரண்

“நான் உன் கிட்ட கேட்டனா. நீயாத்தானே எனக்கு சப்போர்ட் பண்ணே?-ன்னு சொல்றான் சார்” என்று ஐஸ்வர்யா தொடர்ந்து வாக்குமூலம் தர “டெய்லி அதை சொல்லிக் காட்டிட்டே இருக்கா சார். மனுஷனுக்கு எரிச்சல் வராதா?” என்று புலம்பினார் சரண்.

“இன்னிக்கு காலைல ஒரு ஸ்ட்ராட்டஜி போட்டது ஐசுதான்” என்று இந்தச் சமயத்தில் சரண் சொல்ல “யெஸ்.. ஆமாம் நான் செய்தேன். இத்தனை நாள்ல ஒரு கேம் கூட நிம்மதியா என்னால விளையாட முடியலை சார். ஜெயிச்சே ஆகணும்-ன்ற பிரஷர் ஒவ்வொரு கேம்லயும் இருந்தது” என்று ஐஸ்வர்யா சொன்ன போது அங்கிருந்த அரசியலின் ஆதிக்கத்தால் அவர் அடைந்த உளைச்சலை புரிந்து கொள்ள முடிந்தது.

“இதுவரைக்கும் ஐஸ்வர்யாவைப் பத்தி நான் யார் கிட்டயாவது தப்பா சொல்லியிருக்கேனா?” என்று ஒவ்வொருவரையும் விசாரிக்க ஆரம்பித்தார் சரண். அவருக்கும் ஐஸ்வர்யாவின் மீது அன்பு இருக்கிறது. ஆனால், “இந்த கேம் என் மீது ஆதிக்கம் செலுத்திச்சு” என்று ஐஸ்வர்யா சொன்ன அதே காரணத்தை சரணிற்கும் பொருத்திப் பார்க்கலாம். இதை ஐஸ்வர்யா உணராதது ஏன்?

நட்பிற்குள்ளே ஒரு பிரிவொன்று வந்தது….

நந்தா ஏற்படுத்திய குழப்பத்தினால் ஐஸ்வர்யாவிற்கு எதிராக வாக்களிக்கப்பட்ட பழைய விஷயம் மறுபடியும் கிளறப்பட்டது. ஆனால் இது குறித்து நந்தா விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. “நாங்க எங்களைக் காப்பாத்திக்கறதுக்கு செய்தோம்” என்று பாதி உண்மையை ஒப்புக் கொண்டார் விஜி. “அப்படின்னா நான் ப்ளே ஆயிட்டேன்” என்ற ஐஸ்வர்யா “ஒரு கட்டத்துல யாரை நம்பறதுன்னே தெரியல சார்.. நாராயணன் கிட்ட கூட சொல்லிட்டேன். உன்னைக் கூட என்னால நம்ப முடியாது”ன்னு” என்று விரக்தியாக பேசினார்.

“நான் உனக்கு எதிரா வாக்களிக்க மாட்டேன்-னு ஐசு கிட்ட சொல்லியிருந்தேன் சார். ஆனா அவ என்னை நம்பாம மறுநாள் காலைல நாராயணன் கிட்ட போய் “உன் மேலதான் எனக்கு நம்பிக்கையிருக்கு’ன்னு சொல்லியிருக்கா. இதுக்கு என்ன சார் அர்த்தம்?” என்று சரண் பொங்கினார்.

“மூன்றாம் உலகத்தில் நாங்க மூணு பேரும் ரொம்ப சந்தோஷமா இருந்தோம். எங்களுக்குள்ள எந்த இடைவெளியும் இல்ல. ஆனா நந்தா பத்தி சரண் தப்பா சொல்லியிருக்கான்னு இங்க வந்த அப்புறம்தான் தெரிஞ்சது” என்று பழைய பிரச்சினையை விடாமல் கிளறினார் ஐஸ்வர்யா. நந்தா இனிகோவிற்கு வாக்கு தந்து விட்ட காரணத்தினால் சரணுக்கு எதிராக வாக்களித்ததாக சொல்லப்படும் விஷயம் இது. ஆனால் அங்கிருந்த நந்தாவோ, இனிகோவோ இது பற்றி ஏதும் விளக்கம் சொல்லவில்லை.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

“சரணைப் பத்தி முன்ன நிறைய தப்பா பேசுவாங்க. கார்னர் பண்ணுவாங்க. அந்த வலியை என்னால உணர முடிஞ்சது. அதனால்தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணேன். ஆனா அவன் இப்ப சொல்றான்.. விஜியை விடவும் என்னைத்தான் நம்பறாங்கன்னு. ” என்றார் ஐஸ்வர்யா. “நான் இந்த மாதிரில்லாம் டிராமாட்டிக்கா சொல்லலை” என்று சரண் மறுக்க அவர் சொன்ன விஷயம் வீடியோ இன்டர்கட்டில் ஒளிபரப்பானது.

“உமாபதிக்கு பாயசத்தை போட்டுடலாம்’னு விஜி சொல்லியிருக்காங்க” என்று உமாபதி ஆரம்பிக்க “என்னதிது பகவானே..”: என்பது போல் அதிர்ச்சியால் வாய் பிளந்தார் விஜி. “இந்த விஷயத்தை வனேசாதான் என் கிட்ட சொன்னாங்க” என்று உமாபதி தொடர “சார்.. இதை நான் எப்பவாவது ஜாலியாத்தான் இதைச் சொல்லியிருப்பேன்” என்று அதிர்ச்சியானார் விஜி.

“இம்யூனிட்டி சேலன்ஞ்சில் ‘உமாபதி எனக்கு வேணும்னு சொல்ல வேண்டியதுதானே.. வனேசாவை வெச்சு கூட விஜி விளையாடியிருக்கலாம். ஆனா எதிர் டீம் சரணைத்தான் விஜி செலக்ட் பண்ணாங்க. இவங்க இவ்வளவு பண்ணிட்டு நான் ஐஸ்வர்யா கூட விளையாடியதுதான் பிரச்சினையாயிடுச்சு” என்று உமாபதி வருத்தப்பட “வனேசாவை எப்போதுமே நான் விட்டுக்கொடுத்ததில்லை” என்று விஜி சொல்ல “வனேசாவை தூக்கிடலாமான்னு ஒரு முறை கேட்டாங்க” என்று அடுத்த வெடிகுண்டு தகவலை வீசினார் உமாபதி.

இதைக் கேட்டு இன்னமும் அதிர்ச்சியான விஜி “சார்.. என் குழந்தை மேலலாம் சத்தியம் பண்ணக்கூடாதுன்னு நெனக்கறேன்.. அப்படில்லாம் நான் பேசலை” என்று வருத்தத்துடன் மறுத்தார். (ஒரு கேமிற்காக ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும்?!).

“உமாபதி ஏதோ பெரிசா பிளான் பண்றார். நீ போய் இதை அவர் கிட்ட சொல்லி அலர்ட் பண்ண வேணாம்”ன்னு விஜி சொன்னாங்க” என்றார் சரண். (ஒரே குளப்பமா இருக்கே?!.. யாரு… யார் பக்கம்?!)

போதும்.. நிறுத்துங்க.. வருத்தமா இருக்கு..

இவ்வளவு நேரம் இந்த உரையாடலை அமைதியாக கவனித்த விக்ராந்த் “நாங்க தோத்துட்டு போறப்ப கூட இவ்வளவு வருத்தப்படலை. ஆனா இதைப் பார்க்கும் போது அவ்வளவு வருத்தமா இருக்கு. நாங்க இருந்த போது ஒத்துமையா இருந்தோம். யாரும். யாரையும் ஆதிக்கம் செலுத்தல.. தயவு செய்து இதை இன்னமும் அசிங்கம் ஆக்காதீங்க” என்று வருத்தத்துடன் சொன்னார்.

“நான் அணுகமுடியாத ஆசாமியாக ஐஸ்வர்யாவிற்கு முன்ன இருந்தேன். அப்புறம் திடீர்னு அணுக முடியற ஆசாமியா மாறிட்டேன். இங்க எல்லோருமே கேம் ஆடறாங்க. அதிலயும் ஐஸ் ஆடற கேம் சூப்பரா இருக்கு” என்றார் விக்ராந்த். இத்தனை நாட்களாக காடர்கள் செய்து கொண்டிருந்த விஷயம்தானே இது?!

“டீம் பிரிக்கும் போது நீ வனேசாவை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனா எதிர் டீம் ஐசுவை தேர்ந்தெடுத்துட்டே” என்று இனிகோ வருத்தத்துடன் உமாபதியிடம் சொல்ல “இல்லையே. அதுக்கப்புறம் கூட வனேசா என் கிட்ட சிரிச்சுதானே பேசினா?” என்று உமாபதி சங்கடத்துடன் கேட்க “அவ உள்ளுக்குள்ள அப்செட் ஆயிட்டா” என்றார் இனிகோ.

வனேசா விளக்கம் தர முன்வந்த போது விஜி ஆத்திரமாகி “உன்னைப் பத்திதான் பேசறேன். வேற யாரைப் பத்தி பேசுவாங்க?’ என்று உஷ்ணமாக, தூரத்திலிருந்து குரல் தந்து விஜியை கட்டுப்படுத்தினார் விக்ராந்த்.

விக்ராந்த் - இனிகோ
விக்ராந்த் - இனிகோ

ஐஸ்வர்யாவிற்கு எதிராக விழுந்த வாக்குகள்

டிரைபல் பஞ்சாயத்தில் போதுமான ஃபுட்டேஜ் சேர்ந்ததும் “ஓகே. இங்க நிறுத்திடலாம்” என்று சங்கடமானது போன்ற முகபாவனையை தந்தார் அர்ஜூன். ‘குடும்பம்னா பிரச்சினை இருக்கும். பேசித் தீர்த்துக்கலாம்’ன்னு ஆரம்பிச்சவரே. நீங்கதானே ஐயா..’

வாக்களிப்பு ஆரம்பித்தது. எண்ணிக்கையின் முடிவில் ஐஸ்வர்யாவிற்கு எதிராக ஐந்து வாக்குகளும் சரணிற்கு எதிராக ஒரு வாக்கும் வந்திருந்தது. சரணிற்கு எதிரான வாக்கை ஐஸ்வர்யா அளித்திருப்பது வெளிப்படை. சமீபத்திய தகராறுதான் இதற்கு காரணம். சரணிற்கும் இதுவேதான் பொருந்தும். ‘என்னை நம்பு’ என்று சொல்லியும் ஐஸ்வர்யா நம்பவில்லையே! என்பது அவரின் ஆதங்கம்.

விஜி - வனேசா
விஜி - வனேசா

“விஜிக்கு எதிராக வாக்களிக்க மாட்டேன்” என்று ஏற்கெனவே உறுதி பூண்டிருக்கும் காரணத்தினால் விருப்பமில்லையென்றாலும் கூட உமாபதி ஐஸ்வர்யாவிற்கு எதிராக வாக்களித்திருப்பார். விஜி, வனேசா ஆகியோர் ஐஸ்வர்யாவிற்கு எதிராக வாக்களித்ததில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் நாராயணன்? இந்த நெருக்கடியிலாவது கூட நின்றிருக்கலாம்.

“இந்த கேமோட பிரஷர் தாங்கலை சார்”…

“ஸாரி ஐஸ்வர்யா.. நீங்க ஒரு நல்ல ஃபைட்டர்.. பிளேயர்.. எலிமினேட் ஆயிட்டிங்க” என்று வருத்தத்துடன் அர்ஜூன் சொல்ல “ஆட்டத்திற்கு உள்ளே இருக்கற வரைக்கும்தான் சார் ஆயிரம் டென்ஷன்.. குழப்பம்.. வெளிய வந்தப்புறம் மனசு .ஃப்ரீயா இருக்கு. நெகட்டிவ் நினைப்புல்லாம் இல்ல” என்று சொன்ன ஐஸ்வர்யாவின் அப்போதைய உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது.

ஒருவர் அடிப்படையில் நேர்மையானவராக இருந்தாலும் கூட ஒரு மோசமான நிறுவனத்தில் மாட்டிக் கொள்ளும் போது அந்த அலையில் தன்னிச்சையாக அடித்துக் கொண்டுதான் செல்ல நேரிடும். ஒரு கட்டத்தில் அவர் விழித்துக் கொண்டு வெளியே வரும் போது அதுவரையான மனபாரமெல்லாம் ஒரு கணத்தில் நீங்கும். இதை நடைமுறையிலும் நிறைய பார்க்கலாம்.

“எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாத்தான் போறேன். எல்லோருக்கும் ஆல் தி பெஸ்ட். எல்லா டாஸ்க்கிலும் நூறு சதவீதம் என்னுடைய உழைப்பைத் தந்தேன். ஆனா என்னவொன்னு.. மனரீதியான விஷயங்களை இன்னமும் பெட்டரா கையாண்டிருக்கலாம்னு இப்ப தோணுது. இங்க யாரையுமே டிரஸ்ட் பண்ண முடியாத நிலைமை. அதனாலதான் இன்னிக்கு ஒரு ப்ளே பண்ணேன். இந்த கேம் என்னை அப்படி பண்ண வெச்சிடுச்சு” என்று மெல்லிய கண்கலங்கலுடன் சொன்ன ஐஸ்வர்யாவிடம் “நீங்க 5வது ஜூரி.. ஆல் தி பெஸ்ட்’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தார் அர்ஜுன்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

‘ஒரிஜினல் திறமை இருப்பவர்களுக்கு மட்டுமே தொடர வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் ஸ்பாட்டில் எலிமினேஷன்’ என்பது மாதிரி இந்த கேம்ஷோ இருந்தால் உண்மையிலேயே பரபரப்பாக இருந்திருக்கும். ஆனால் யாரிடம் வாக்குகள் அதிகம் இருக்கிறதோ, அவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும், திறமையிருந்தாலும் ஆதரவு இல்லாவிட்டால் வெளியேற வேண்டும்’ என்கிற அற்பமான அரசியல் இதில் கலந்திருக்கிறது.

எனவேதான் அந்த வளைவு நெளிவுகளுக்கு ஏற்ப போட்டியாளர்கள் மேடு, பள்ளங்களில் விழ வேண்டியிருக்கிறது. ஒருவேளை இந்த ரியாலிட்டி ஷோவில் அவற்றைத்தான் நாம் அதிகம் உள்ளூற ரசிக்கிறோமோ.. என்னவோ? சர்வைவர் என்பது பிரத்யேகமான விளையாட்டு கேமாக இருந்திருந்தால் இந்த ஃபார்மட் இத்தனை வெற்றி பெற்றிருக்காது என்று தோன்றுகிறது.