Published:Updated:

சர்வைவர் - 68: தம்பி ராமையாவிடமிருந்து உமாபதிக்கு வந்த மெசேஜ்; இனிகோ செய்த அந்த ஒரு செயல்!

சர்வைவர்

“மெஜாரிட்டியா உட்காரணும்றதுதான் காடர்கள் முதல் நாள்ல இருந்தே பிளான் பண்ண விஷயம். ஒண்ணும் கவலைப்படாதே.. நான் பார்த்துக்கறேன்.. தம்பி..”

Published:Updated:

சர்வைவர் - 68: தம்பி ராமையாவிடமிருந்து உமாபதிக்கு வந்த மெசேஜ்; இனிகோ செய்த அந்த ஒரு செயல்!

“மெஜாரிட்டியா உட்காரணும்றதுதான் காடர்கள் முதல் நாள்ல இருந்தே பிளான் பண்ண விஷயம். ஒண்ணும் கவலைப்படாதே.. நான் பார்த்துக்கறேன்.. தம்பி..”

சர்வைவர்

போட்டி இல்லாத நாட்களில், கிடைக்கிற ஃபுட்டேஜ்களை வைத்து ஒப்பேற்றும் எபிசோடாகத்தான் நேற்றும் அமைந்தது. என்றாலும், `மூன்றாம் உலகத்தில்’ நடந்த truth or dare கேள்வி பதில் விளையாட்டு, கொம்பர்கள் தீவில் நடந்த கிரிக்கெட் போட்டி போன்றவை தொடர்பான காட்சிகள் சற்று சுவாரசியத்தை அளித்தன.

மிக குறிப்பாக, உமாபதிக்கு வாழ்த்து சொல்லும் பகுதியில் இயக்குநர் தம்பி ராமையா அனுப்பியிருந்த ‘வாய்ஸ் மெசேஜ்’ மிக அருமை. அவரை வெறும் நகைச்சுவை நடிகராத்தான் பலரும் அறிவார்கள். ஆனால் அவருக்குள் ஒரு நல்ல வசனகர்த்தா, சிந்தனாவாதி போன்ற பல முகங்கள் இருக்கின்றன என்பதை அவர் அனுப்பிய அற்புதமான செய்தி நமக்கு உணர்த்தியது.

சர்வைவர் 68-ம் நாளில் என்ன நடந்தது?

நடந்து முடிந்த ரிவார்ட் சேலன்ஞ்சில் நாராயணன் செய்த சொதப்பல்களை லேடிகாஷிடம் சொல்லி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார் வனேசா. நாராயணன் சொதப்பியது உண்மைதான். ஆனால் இந்த அம்மணியும் ‘குச்சிகளை இணைக்கும் டாஸ்க்கில்’ பயங்கரமாக சொதப்பியது உண்மைதானே? ‘எல்லாம் தெரிஞ்சவனும் கிடையாது, எதுவுமே தெரியாதவனும் கிடையாது’ என்பது பழமொழி. நாராயணனிடமும் சில திறமைகள் நிச்சயம் இருக்கும்.

உமாபதி
உமாபதி

“அணியா இணைஞ்சப்புறம் சில பேரோட மட்டும் என்னால sync ஆக முடியுது. சில பேரோட ஆக முடியலை” என்பதை விக்ராந்த்திடம் சொல்லிக் கொண்டிருந்தார் நாராயணன். இந்த அணியில் தன்னை எப்படியாவது பிணைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார் போலிருக்கிறது. எனவே லீடரான விக்ராந்த்திடம் தூண்டில் போடுகிறார். “மெஜாரிட்டியா உட்காரணும்றதுதான் காடர்கள் முதல் நாள்ல இருந்தே பிளான் பண்ண விஷயம். ஒண்ணும் கவலைப்படாதே.. நான் பார்த்துக்கறேன்.. தம்பி..” என்கிற மாதிரி ஆறுதல் அளித்தார் விக்ராந்த்.

அம்ஜத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்
அம்ஜத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நள்ளிரவில் அம்ஜத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. கேக் வெட்டி ஊட்டிக் கொண்டார்கள். ரிவார்ட் சேலன்ஞ்சின் ஒரு பகுதியாக வெற்றி பெற்றவர்களின் குடும்பத்தினரிடமிருந்து ‘வாழ்த்து செய்தி” வந்திருந்தது. இது மற்ற போட்டியாளர்களின் மனங்களில் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

தன் மனைவி, மகளின் குரல்களைக் கேட்டு மிகவும் நெகிழ்ந்து போனார் அம்ஜத். அவரின் பெற்றோர்களும் வாழ்த்தினார்கள். பிரிவின் போதுதான் குடும்பத்தின் அருமையை அம்ஜத்தால் ஆழமாக உணர முடிகிறதாம்.

விக்ராந்த்தின் மனைவி, மகன்கள் சொன்ன வாழ்த்துச் செய்திகளை அவர் கண்கலங்க கேட்டுக் கொண்டிருந்தார். “ஜெயிச்சுட்டு வாங்க” என்று அன்பு கலந்த உத்தரவைப் போட்டார் விக்ராந்த்தின் வீட்டம்மணி. விக்ராந்த்தின் பெற்றோர்களும் வாழ்த்து சொன்னார்கள்.

வாழ்த்துச் செய்தி ஒலிபரப்பு
வாழ்த்துச் செய்தி ஒலிபரப்பு

லேடிகாஷின் குடும்பத்தினர் அனுப்பிய செய்தியைக் கேட்கும் போது விமானநிலைய அறிவிப்பு மாதிரியே இருந்தது. அப்படியொரு ஆங்கிலம். தன் தந்தையின் குரலைக் கேட்கமுடியவில்லையே என்று ஏங்கினார் லேடிகாஷ்.

உமாபதிக்கு வந்திருந்த வாழ்த்து செய்தி கவனிக்கத்தக்கதாக இருந்தது. அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான தம்பி ராமையா, மகனுக்கு மட்டுமல்லாமல் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் அன்போடு வாழ்த்து சொல்லியிருந்தார். ‘ஓஷோ’வின் மேற்கோளில் இருந்து ஆரம்பித்து ‘உடம்பு என்பது கோயில், உயிர் என்பது சாமி .. என்று தத்துவம் பேசி, வெற்றி தோல்வியை சமமாக பார்க்கணும் என்று உபதேசம் சொல்லி, 29 வயதிலேயே இறந்து போன பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தில் ஆரம்பித்து 54 வயதில் இறந்த கண்ணதாசன் வரை பட்டியல் இட்டு, ‘இது போன்ற மேதைகளின் வயதைத் தாண்டியும் வாழ்வதே எனக்கு போனஸ்தான்” என்று நெகிழ்ந்து “போட்டின்னா கஷ்டம் இருக்கத்தான் செய்யும். நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் படும் சிரமங்களை விடவா உங்களின் சிரமம் பெரிது,?” என்று யதார்த்தம் பேசி…. அவரின் பேச்சு முடிந்தபோது மனதிற்கு நிறைவாக இருந்தது. இனி ‘தம்பி ராமையாவை’ அண்ணன் ராமையா என்று அழைக்கலாம். அத்தனை முதிர்ச்சியான, இதமான பேச்சு.

அம்ஜத்
அம்ஜத்

தம்பி ராமையாவின் பேச்சு உமாபதியை மட்டுமல்லாது அனைத்துப் போட்டியாளர்களையும் கவர்ந்து விடவே தன்னிச்சையாக கைதட்டினார்கள். “சொந்த ஃபேமில இருந்து ஒருத்தர் பேசினது மாதிரியே இருந்தது” என்றார் வனேசா. அடுத்ததாக உமாபதியின், அண்ணன் பையன்கள் வந்து வரிசையாக பேசினார்கள். அதில் ஒரு வாண்டு “கப்பு முக்கியம் இல்ல.. பிகிலு… காசுதான் முக்கியம். அதைக் கொண்டு வா” என்று நிதர்சனத்தை உடைத்துப் பேசியது. (வருங்கால உமாபதி போல).

“ஓகே.. ஃபீல் பண்ணதெல்லாம் போதும். நீங்க கிளம்புங்க” என்று மற்றவர்களை ஜாலியாக கிளப்பி அனுப்பினார் விக்ராந்த். ஆம், ரிவார்ட் சேலன்ஜில் வென்றவர்களுக்கு மட்டும் சிறப்பு அசைவ உணவுகள் வந்தன. அவற்றை ருசித்துச் சாப்பிட்டார்கள். (ஒரு பீஸாவது கொடுத்துட்டு சாப்பிடுங்கடா’ என்பது மற்றவர்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்).

மூன்றாம் உலகம். பொழுது போகாத பொம்முக்களாக அமர்ந்திருந்த நந்தா, ஐஸ்வர்யா, சரண் ஆகிய மூவரும் அன்னாசிப்பழத்தை சுற்றி விட்டு ‘Truth or dare’ விளையாட்டை ஆட ஆரம்பித்தார்கள். (Scripted?!) சர்வைவர் ஆட்டத்தையொட்டிதான் கேள்வி –பதில் அமைய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

முதல் கேள்வி சரணை நோக்கி பாய்ந்தது. “காடர்களில் உனக்கு பிடிச்ச பெண் போட்டியாளர் யார்?” என்று நந்தா கேட்க “விஜியக்காவை பிடிக்கும். அவங்களுக்கும் என்னை பிடிச்சிருந்தது. ஆனா ஒரு கட்டத்துல அவங்க மாறிட்டாங்க” என்றார் சரண்.

நந்தா, சரண், ஐஸ்வர்யா
நந்தா, சரண், ஐஸ்வர்யா

“காடர்களில் ஒருவரோடு இரவு முழுக்க தங்கணும். யாரைத் தேர்ந்தெடுப்பீங்க?” என்று நந்தாவைக் கேட்ட ஐஸ்வர்யா, பின்குறிப்பாக ``அது ஆண்" என்று சேர்த்துக் கொண்டது பொசசிவ்னஸோ? “இனிகோவைத்தான்” என்றார் நந்தா. “அவர் கிட்ட நிறைய கேள்வி கேட்கணும். உண்மை, நேர்மை –ன்ற விஷயமெல்லாம் அவர் கிட்ட குறைவா இருக்கு. இதைத்தான் ரவி முன்னாடியே எச்சரிச்சிட்டு போனாரு. இப்ப ரவி சொன்னது கரெக்ட்டுன்னு ஆயிடுச்சு” என்று கசப்புடன் சொன்னார் நந்தா.

அடுத்த கேள்விக்கு சரண் பதில் சொல்லும் விதமாக அன்னாசிப்பழம் நகர்ந்தது. “உனக்குப் பிடிக்காத போட்டியாளர் யார்?” என்கிற வில்லங்கமான கேள்வயை கேட்டார் நந்தா. “விக்ராந்த். ஒரு காலத்துல அவரை ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒரு பிரச்னை வந்தது. அதில இருந்து விரிசலும் வந்தது. அந்தப் பிரச்னையை அவங்களும்தான் பண்ணாங்க. ஆனா அதையெல்லாம் மூடிட்டு அவரை மட்டுமே நல்லவராக காண்பிச்சுக்கிறார்” என்று வேதனையுடன் சொன்னார் சரண்.

விக்ராந்த்
விக்ராந்த்

இதே கேள்வி நந்தாவிற்கும் வந்தது. “உமாபதிதான். அவர் ஒரு நல்ல பிளேயர். ஆனால இன்னொரு டீமை பயங்கரமா வெறுப்பேத்தும் போது ரொம்ப ஹர்ட்டிங்கா இருக்கும்” என்றார் நந்தா.

“கொம்பர்களில் இருந்து நாலு பேரை உடனே தூக்கணும்னு சொன்னா எந்த நாலு பேரை தூக்குவீங்க” என்று ஐஸ்வர்யா கேட்க “உமாபதி, இனிகோ, லேடி காஷ், வனேசா என்று நான்கு பெயர்களைச் சொன்னார் நந்தா. “கடைசி ரெண்டு பெயர்களை நான் ஏற்கெனவே கெஸ் பண்ணிட்டேன்” என்று சொல்லி சிரித்தார் சரண்.

“Most Entertaining Contestant யார்?” என்கிற கேள்வியை ஐஸ்வர்யாவின் முன்வைத்தார் நந்தா. கண்களில் பாசம் வழிய “அம்ஜத். அவர் பேசற விதமே அத்தனை வித்தியாசமா, காமெடியா இருக்கும்” என்று ஐஸ்வர்யா சொன்னவுடன், விருந்து சமயத்தில் அம்ஜத் செய்த ‘சிக்கன் காமெடி’ காட்சி காட்டப்பட்டது.

சரண்
சரண்

“மெயின் டீமில் யாரை சைட் அடிப்பே?” என்று வில்லங்கமான கேள்வியை சரணிடம் கேட்டார் ஐஸ்வர்யா. ‘Of course உன்னைத்தான்” என்று சரண் சொன்னதும் அம்மணியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. “காரணம் சொல்லு” என்று ஐஸ்வர்யா கறாராக கேட்டதும் “என் வயசுதான் உனக்கும் இருக்கும். நாள் ஒண்ணுல இருந்து சைட் அடிச்சிருக்கேன்.” என்று சரண் ரொமான்ஸ் குறையாமல் சொல்லிக் கொண்டிருக்கும் போது “அது சரிப்பா.. நீ காடர்கள் டீம்ல இருந்தபோது, யாரை சைட் அடிச்சே?” என்று இந்தச் சமயத்தில் உள்ளே புகுந்தார் நந்தா. (நந்தாவிற்கும் பொசசிவ்னஸோ?!). ஆனால் இதற்கு பதில் சொல்லாமல் சரண் சிரித்து மழுப்பி விட்டார்.

சர்வைவர்
சர்வைவர்

இப்போது நந்தாவிற்கு கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் வந்தது. விடாப்பிடியாக அதே கேள்வியை அவர் சரணிடம் மீண்டும் கேட்க “வேற யார் ஐசுவேதான். ரெண்டு பேரும் வேற வேற டீம்ல இருந்தப்ப கூட.. அங்க இருந்து அவ என்னை பார்ப்பா. நானும் பார்ப்பேன்” என்று ‘அண்ணலும் நோக்கினாள்' ரேஞ்சிற்கு சொல்ல, ஐஸ்வர்யாவிற்குள் தன்மான உணர்வு பொங்க “ஹலோ.. அது என்ன ‘அவ பார்ப்பா. பதிலுக்கு நான் பார்ப்பேன்’னு சொல்றது?.. அப்ப நான்தான் உன்னை பார்த்துக்கிட்டே இருந்தேனா?” என்று பொய்க்கோபத்துடன் கேட்க “நீ என்னையே பார்த்ததால்தானே எனக்கு தெரிஞ்சது?” என்று ஜாலி லாஜிக் சொல்லி மடக்கினார் சரண்.

அடுத்த கேள்வி நந்தாவை நோக்கி வர “யப்பா.. சாமி ஆளை விடுங்க’ என்பது போல் அவர் ஜாலியாக அலறியடித்து ஓடியதோடு இந்த வில்லங்க விளையாட்டு முடிவிற்கு வந்தது.

உமாபதி, விக்ராந்த், லேடிகாஷ் ஆகிய மூவரும் சர்வைவர் ஷாப்பிங் கிளம்பினார்கள். நம்ம ஊர் பழக்கத்தில் “அக்கவுண்ட் வைக்கலாமா?” என்று இவர்கள் கேட்க, கறாரான கடைக்காரர் “நோ.. நோ..” என்று மறுத்தார். பாடி ஸ்பிரே ஒன்றும் கடையில் இருக்க “சாப்பிடறதுக்கே இங்க பாடா இருக்கு. இது ஒண்ணுதான் குறைச்சல்” என்று முனகிக் கொண்ட இவர்கள், காய்கறி, எண்ணைய் போன்வற்றை வாங்குவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இந்தச் சமயத்தில் லேடிகாஷூம் விக்ராந்த்தும் கடைக்காரரை மறைப்பது போல் நின்று கொள்ள ‘பாடி ஸ்பிரேயை’ அபேஸ் செய்து விட்டார் உமாபதி.

உமாபதி
உமாபதி

பிறகு ஒரு தேன் பாட்டிலையும் அவர் சேர்த்து சுட்டு விட “டேய். ஏதாவது ஒண்ணை வெச்சுர்ரா.. அவன் கண்டுபிடிச்சிடப் போறான் ” என்று விக்ராந்த் எச்சரிக்க பாடி ஸ்பிரேயை திருப்பி வைத்து விட்டார் உமாபதி. இவர்கள் ஷாப்பிங் முடித்து கிளம்பியதும் ஒரு பாட்டில் குறைவதைக் கண்டு குழப்பமடைந்த கடைக்காரர், “ஓஹோ. அப்படியா கதை..” என்று இவர்களைத் தேடி வர, திருடிய பொருளை விஜியிடம் கொடுத்து ஒளித்து வைத்து விட்டார் உமாபதி. இந்தக் கதையின் முடிவு என்னவென்று நமக்கு காட்டப்படவில்லை.

உமாபதி இந்த விஷயத்தை ஜாலியான நோக்கில்தான் செய்திருப்பார் என்றாலும் காமிராக்களின் முன்னால் இப்படி தைரியமாக இயங்குவது காடர்களுக்கு பிறகு பிரச்சினையாகலாம். இவர்கள் மீது ஏற்கெனவே பல புகார்கள் இருக்க, அவற்றையெல்லாம் விட்டு விட்டு சரணின் மீது மட்டும் காடர்கள் ஃபோகஸ் செய்யும் அபாண்டத்தை தொடர்ந்து செய்கிறார்கள். போதாக்குறைக்கு அர்ஜுனும் அதையேதான் பின்பற்றுகிறார். நேர்மை பற்றி அத்தனை அலட்டிக் கொள்ளும் லேடிகாஷும் இந்த திருட்டிற்கு உடந்தையாக இருந்தது கொடுமை. அர்ஜுன் இதைப் பற்றி விசாரிப்பாரா? அல்லது சாய்ஸில் விட்டுவிடுவாரா?...

அர்ஜுன்
அர்ஜுன்

அம்ஜத் இப்போதே எலிமினேஷன் சுரத்தை உணர ஆரம்பித்து விட்டார் போல. காடர்கள் தன்னைத்தான் டார்கெட் செய்வார்கள் என்பது அவருக்குத் தெரியும். எனவே ‘தங்கமுத்து வந்தா என்னவாகும்?” என்று விஜியிடம் இப்போதே விசாரித்துக் கொண்டிருந்தார். “மூன்றாம் உலகம் என்ன மூணு கிலோ மீட்டர் தள்ளியா இருக்கு. இதோ இங்கதானே?” என்று அம்ஜத்தை மனதளவில் தயார் செய்து கொண்டிருந்தார் விஜி.

“எலிமினேஷன் சமயத்துல ஐசு அழுதது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது” என்று அம்ஜத் உண்மையாகவே வருந்தி சொல்ல “அது எலிமிஷேன் மோமெண்ட்ல அழுதிருக்கலாம். இப்பவும் ஐசு அழுதிட்டு இருக்கான்னு தெரிய வந்தா.. நீ போயிடுவியா?” என்று அம்ஜத்தை உசுப்பேற்றினார் நாராயணன். ‘அண்ணன் எப்படா போவான்… திண்ணை எப்படா காலியாவும்’ என்கிற மோடில் நாராயணன் இருக்கிறார் போல. எப்படியும் அடுத்த வாரம் இவரைத் தூக்கி விடுவார்கள். “அப்படியொரு ஆப்ஷன் தந்தா கண்டிப்பா போவேன்” என்று உறுதியாக கூறினார் பாசக்கார அண்ணன் அம்ஜத்.

இவர்கள் பேசுவதை அரையும் குறையுமாகக் கேட்டுக் கொண்டிருந்த இனிகோ, இதை அப்படியே போய் உமாபதி, விக்ராந்த்திடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார். இதுபோன்ற சமயங்களில்தான் இனிகோவின் மீதான மதிப்பு அதலபாதாளத்தில் இறங்கி விடுகிறது. “அம்ஜத் தன் தங்கச்சியை ரொம்ப மிஸ் பண்றான் போல. அனுப்பி வெச்சிடுவோம்” என்று சொல்லி இனிகோ வில்லத்தனமாக சிரிக்க “ஆமாம். அம்ஜத் பிறந்தநாள் முடிஞ்சு நாம கேக்கும் சாப்பிட்டாச்சு.. இனிமே உபயோகமில்லை. அவரை அங்கே அனுப்பிட வேண்டியதுதான்” என்பது போல் உமாபதியும் இணைந்து மெகா வில்லனாக சிரித்துக் கொண்டிருந்தார்.

சர்வைவர்
சர்வைவர்

‘ஐசுவை. தங்கச்சி. தங்கச்சி.ன்னு சொல்லி இப்ப உருகறானே. அவளைப் பத்திதான் நம்ம டீம்ல இருந்த போது அப்படிப் பேசினான்” என்று சொன்னார் விக்ராந்த். “டிரைபல் பஞ்சாயத்துல நான் இம்யூனிட்டி ஐடலை எடுத்துக் காண்பிச்சபோது வேடர்கள் என்னை விட்டுட்டு கோபமா எழுந்து போயிட்டாங்க” என்று புகார் சொன்ன இனிகோ “அப்ப எனக்கு தனியா இருக்க பயமா இருந்தது. வழி வேற தெரியாது” என்று சர்காஸ்டிக்காக சொல்லி சிரித்தார்.

“மூன்றாம் உலகத்துல இவிய்ங்க சேர்ந்து நந்தாவைத்தான் வின் பண்ண வைப்பாங்க” என்றார் விக்ராந்த். ‘தீமைதான் வெல்லும்’ என்கிற பாடலை தன்னிச்சையாக முனகினார் இனிகோ. விளையாட்டு என்று வந்து விட்டால் வேடர்கள் விட்டுக்கொடுப்பதில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் காடர்களைப் போல் அல்ல. மூன்றாம் உலகத்தில் நடந்த இரண்டு சவால்களிலும் தன் நண்பர்களுக்கு விட்டுத்தராமல் போராடி ஐஸ்வர்யா ஜெயித்த விஷயமெல்லாம் விக்ராந்த்திற்கு இன்னமும் தெரியாது.

உமாபதிக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்தது. ‘மருந்து எடுத்துக் கொள்ளும் போது மட்டும் சற்று நிவாரணம் தெரிகிறது. மீண்டும் சுரம், வலி ஆரம்பித்து விடுகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் உமாபதி. என்ன டாக்டரோ. ‘ஓகே.. ஃபைன். ஃபைன்’ என்று புன்னகையுடன் கிளம்பி விடுகிறார்.

ஃபுட்டேஜ் தேற்ற வேண்டும் என்கிற நோக்கில் கொம்பர்களை கிரிக்கெட் ஆடச் சொன்னார்கள் போலிருக்கிறது. என்றாலும் இது பார்க்க ஜாலியாகவே இருந்தது. “கார் மேல பட்டா அவுட்டு. கண்ணாடி மாமா வீட்டுக்குள்ள விழுந்தா அவுட்டு’ என்றெல்லாம் லோக்கல் விதிகளை உருவாக்கி நாம் விளையாடும் ‘தெரு கிரிக்கெட்டுகளை’ இது நினைவுப்படுத்தியது. வனேசாவிற்கும் லேடி காஷிற்கும் கிரிக்கெட் ஸ்பெல்லிங் கூட தெரியாது போல. என்றாலும் வறட்டி வீசுவது போல் பந்து வீசிய வனேசா இரண்டு விக்கெட்டுகளை எடுத்து விட்டார். ரன்னர் இருக்கிற பக்கம்தான் மட்டையை பிடித்து நிற்க வேண்டும் என்று உமாபதி விளையாட்டாக சொன்னதை சீரியஸாக செய்து பல்பு வாங்கினார் லேடிகாஷ்.

இனிகோ
இனிகோ

‘ஹிட் விக்கெட்” முறையில் அவுட் ஆனார் விஜி. “மரத்தைத் தாண்டி போனா அவுட்” என்று விதியை உருவாக்கி விக்ராந்த்தை அவுட் ஆக்கிய உமாபதி. பிறகு தான் உருவாக்கிய வலையில் தானே விழுந்து அதே முறையில் அவுட் ஆனார். இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பொறுப்பாக சமையல் வேலையை பார்த்த அம்ஜத்தும் பிறகு வந்து விளையாட்டில் கலந்து கொண்டார்.

இப்படியாக இந்த நாள் ஜாலியாக கழிந்தாலும் அடுத்து நிகழப் போகிற ‘இம்யூனிட்டி சவால்’ அம்ஜத்தைக் காப்பாற்றுமா?

பார்த்துடுவோம்.