Published:Updated:

சர்வைவர் - 69: பானையை உடைத்து வென்ற விக்ராந்த்; போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்கள்!

விக்ராந்த்

ஆட்டம் ஆரம்பித்தது. உமாபதியை டார்கெட் செய்து கொண்ட நாராயணன், முதல் அடியையே அதிரடியாக அடித்தார்.

Published:Updated:

சர்வைவர் - 69: பானையை உடைத்து வென்ற விக்ராந்த்; போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்கள்!

ஆட்டம் ஆரம்பித்தது. உமாபதியை டார்கெட் செய்து கொண்ட நாராயணன், முதல் அடியையே அதிரடியாக அடித்தார்.

விக்ராந்த்

இம்யூனிட்டி ஐடலுக்கான க்ளூவை விக்ராந்த் வென்றதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். இதன் மூலம் டிரைபல் பஞ்சாயத்தில் காடர்களால் வழக்கம் போல் இஷ்டத்திற்கு விளையாட முடியும். இதற்காக நடந்த போட்டியில் அவர்கள் ‘வேடர்களை’ முதலில் டார்க்கெட் செய்து வீழ்த்தினார்கள். பிறகு தங்களுக்குள் ‘ஜாலியாக’ மோதியதில் இறுதியில் விக்ராந்த் எஞ்சினார். எனவே சர்வைவரின் போக்கு வரப்போகும் எபிசோடுகளில் எப்படியெல்லாம் அமையும் என்பதற்கான முன்னோட்டமாக இந்தப் போட்டி இருந்தது.

அம்ஜத்தையும் நாராயணனையும் துரத்திய பிறகு தங்களுக்குள் இருக்கும் கறிவேப்பிலைகளை பிறகு தூக்கி எறிவார்கள்.

இனிகோ
இனிகோ

சர்வைவர் 69-ம் நாளில் என்ன நடந்தது?

ஓலை வந்தது. இம்யூனிட்டி ஐடல் க்விற்கான போட்டி. ஒவ்வொரு போட்டியாளருக்கும் அவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும் மூன்று பானைகள் இருக்கும். மாஸாய் பழங்குடி மக்கள் பயன்படுத்தும் ‘ரங்கு’ என்னும் ஆயுதத்தை தூரத்தில் இருந்து எறிவதன் மூலம் அந்தப் பானையை வரிசையாக வந்து உடைக்க வேண்டும். மூன்று பானைகளும் உடைந்த நபர்கள் போட்டியிலிருந்து வெளியேறுவார். கடைசி வரை மூன்று பானைகளும் உடையாத நபர் வெற்றியாளர்.

ஆட்டம் ஆரம்பித்தது. உமாபதியை டார்கெட் செய்து கொண்ட நாராயணன், முதல் அடியையே அதிரடியாக அடித்தார். (லக்கி நாராயணன்?!) “செவுள்ளயே அடிச்ச மாதிரி இருந்துச்சு” என்றார் உமாபதி. பிறகு வந்தவர்கள் ‘அம்ஜத்’தை டார்கெட் செய்தது வெளிப்படையாகத் தெரிந்தது. “முடிவு பண்ணிட்டாய்ங்க.. என்னா வெறி?! என்னை வெளிய அனுப்பறதுக்கு!” என்று சிரித்தார் அம்ஜத். அடுத்து வந்தவர்கள் எல்லாம் அம்ஜத்தின் பானையையே எடுத்து வைத்து குறி வைத்து எறிந்தார்கள்.

இனிகோ
இனிகோ

காடர்களிடம் ஒரு டெக்னிக் இருக்கிறது. அனைவரும் இணைந்து ஒட்டுமொத்தமாக வேடர்களை டார்கெட் செய்தால் அது அப்பட்டமாக வெளியே தெரிந்து விடும் என்பதால் சும்மா லுலுவாய்க்கு அவர்களில் ஒருவரை பலியிடுவார்கள். அந்த நோக்கில் ‘வனேசா’வின் பானையை உடைக்க முயன்றார் இனிகோ. கிரிக்கெட்டில் கில்லியாக இருக்கும் இனிகோ, குறி வைத்து அடிக்கும் விளையாட்டில் நிறைய சொதப்பினார். புத்திக்கூர்மை தேவைப்படும் விளையாட்டில் கலக்கும் லேடிகாஷ் மற்றும் வனேசா ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் காக்காமீது கல் எறிவது போன்று பலவீனமாக எறிந்தார்கள். அவர்கள் எறிந்த ஆயுதம் பாதி வழியிலேயே விழுந்தது.

அம்ஜத்தை வீழ்த்தும் தொடர் முயற்சியில் விக்ராந்த், விஜி ஆகியோர் பெற்றி பெற அவர் போட்டியில் இருந்து அவுட் ஆனார். மீண்டும் வந்த நாராயணன், இரண்டாம் முறையாக உமாபதியின் பானையை அடித்து உடைக்க, உமாபதி விரைவில் வெளியேறி விடுவாரோ என்று தோன்றியது. ஆனால் நாராயணனால் பிறகு வெற்றி பெற முடியவில்லை. அம்ஜத்தை வெளியே அனுப்பியவுடன் அடுத்ததாக நாராயணனை டார்கெட் செய்தார்கள். இதில் நீண்ட நேரம் போராடிய பிறகு உமாபதியே மூன்று பானைகளையும் உடைத்து நாராயணனை வெளியே அனுப்பினார். இந்த இருவரும் வெளியேறிய பிறகு தங்களுக்குள் மோதிக் கொள்ளும் ஆட்டம் ஆரம்பித்தது.

சர்வைவர் கேம் டாஸ்க் பானைகள்
சர்வைவர் கேம் டாஸ்க் பானைகள்

இவர்கள் நீண்ட நேரம் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்ததால் காமிராக்களின் பாட்டரி சூடாகியதோ, என்னமோ, ஆயுதம் வீசும் தூரத்தை சர்வைவர் டீம் குறைத்தது. இதில் வனேசாவின் விக்கெட் விழுந்தது. அடுத்ததாக விஜியை காலி செய்ய இவர்கள் முயன்றதால் அவர் வீறு கொண்டு ஜாலியாக பழிவாங்க முயன்றார். ஆனால் பலிக்கவில்லை. விஜியின் மூன்றாவது பானையை உமாபதி அடித்து உடைத்தார்.

கடைசியில் மிஞ்சியவர்கள் உமாபதி மற்றும் விக்ராந்த். இதில் விக்ராந்த் முந்திக் கொண்டு உமாபதியின் கடைசி பானையை உடைக்க அவரே வெற்றியாளர்.

நாராயணன்
நாராயணன்

“நீ நம்ம சொந்தக்கார பொண்ணு மாதிரி ஆயிட்டியா. அதனாலதான் உன்னைப் பத்தி கமென்ட் சொல்லும் போது அடக்கி வாசிக்கறேன். டிவில பார்ப்பாங்க இல்லையா?” என்று வனேசாவிடம் கடலை சாகுபடி செய்து கொண்டிருந்தார் இனிகோ. “உமாபதிக்கு உடம்பு சரியில்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி டல்லா இருக்கோம்ல..” என்று வனேசா வருந்த “உனக்கு இப்ப என்ன டல்லு? உமாபதிக்கு உடம்பு சரியில்லாததா, இல்லைன்னா இனிகோ கமென்ட்டைக் குறைச்சிக்கிட்டதா?” என்று கடலை சாகுபடியில் உரம் போட்டு உதவினார் விக்ராந்த். “உமாபதிக்கு உடம்பு சரியில்லாத விஷயம்தான்” என்ற வனேசா, தூரத்தில் தூங்கிக் கொண்டிருந்த உமாபதியை கனிவான கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஒரு ஊசி போடறேன். நல்லா தூக்கம் வரும்” என்று சிகிச்சைக்கு வந்த மருத்துவர் சொல்ல, ‘இதனால குடலுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?” என்று கேட்கும் சிவாஜி திரைப்படத்தின் ஹனீபா மாதிரி “இம்யூனிட்டி சேலன்ஞ்சில் நான் கலந்துக்கறதுல ஒண்ணும் பிரச்சினை வராதுல்ல” என்று கேட்டு வைத்துக் கொண்டார் உமாபதி. மருத்துவர் ஊசி போட்டு முடித்ததும், தூக்க மயக்கத்தில் அவர் அப்படியே சரிந்தார். “திடீர்னு எழுந்தேன். ஒரு மாதிரி தலை ‘கிர்’ன்னு வந்துச்சு” என்று சமாளித்து எழுந்து வந்த உமாபதியை சற்று நேரம் எக்ஸ்ட்ராவாக சோதித்துக் கொண்டிருந்தார் மருத்துவர். (இவருக்கு ஃபீஸ் யாரு கொடுப்பாங்க?!).

இனிகோ
இனிகோ

ரிவார்ட் சேலன்ஞில் தோற்றவர்களுக்கான ஒரு கண்துடைப்பு போட்டி நடந்தது. 10 லிட்டர் மற்றும் 6 லிட்டர் நீரை, 8 லிட்டராக மாற்ற வேண்டுமாம். மற்ற போட்டியாளர்களின் குடும்பங்களில் இருந்து வந்திருக்கும் ‘வாய்ஸ் மெசேஜ்களை’ ஒளிபரப்புவதற்கு இதுவொரு சாக்கு. இந்த அசட்டுத்தனமான நாடகத்தை செய்வதற்குப் பதிலாக போட்டி இல்லாமலேயே அவர்களுக்கு பரிசு தந்திருக்கலாம்.

ரிவார்ட் சேலன்ஜில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் குடும்பத்திடமிருந்து செய்தி வந்தபோது மற்றவர்கள் உள்ளூற ஏக்கம் அடைந்தார்கள். அவர்களின் ஏக்கத்தைப் போக்குவது போல் இப்போது அவர்களுக்கும் செய்தி வந்திருந்தது. முதலில் இனிகோவின் பெற்றோர்களும், அண்ணன் மகன்களும் சந்தோஷமாக வாழ்த்து சொன்னார்கள். “யார் மேலயும் வெறுப்பு வர்ற மாதிரி விளையாடதீங்கப்பா.. நீங்க எல்லோருமே சாதனையாளர்கள்தான்” என்று இனிகோவின் தந்தை சொன்னது முக்கியமான செய்தி. இதை இனிகோ பின்பற்றலாம்.

தன்னுடைய அப்பா ஒரு காலத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்ததாகவும், ஒருமுறை தன்னை சிகரெட் எடுத்து வரச் சொன்னபோது தான் வாயில் ஸ்டைலாக வைத்து ஊதிக் கொண்டு வந்ததைப் பார்த்த நாளில் இருந்து சிகரெட் குடிக்கும் பழக்கத்தை அவர் விட்டு விட்டதாகவும் இனிகோ பகிர்ந்து கொண்ட சம்பவம் நெகிழ வைப்பதாக இருந்தது. நல்ல அப்பா.

வனேசா
வனேசா

அடுத்ததாக வனேசாவின் குடும்பத்திடமிருந்து வாழ்த்துச் செய்தி. “நீ நீயா இரு. நீ எங்க வேணா சர்வைவ் ஆவேன்னு நம்பிக்கையிருக்கு” என்று வாழ்த்தியிருந்தார் வனேசாவின் அம்மா. “சீக்கிரம் பார்க்கணும்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் அவரின் அப்பா. வனேசாவின் வளர்ப்பு நாய்க்குட்டி – மஃப்பின் – குரலைக் கேட்டதும் அப்படியொரு மகிழ்ச்சியை அடைந்தார் வனேசா. ‘நான் பேசினா அதுவும் பதிலுக்கு பேசும்” என்று பிறகு சொல்லி மகிழ்ந்தார். (இமெயில் அனுப்பினாலும் பதில் போடும் போலிருக்கு!).

விஜியின் கணவரும் மகனும் பிரியமான குரலில் பேசியிருந்தார்கள். நாராயணனின் சகோதரர், நண்பர்கள் வந்து வாழ்த்து சொன்னார்கள். “இங்க எல்லோருடைய ஹெல்த்தும் நல்லா இருக்கு. நீ ஜெயிச்சுட்டு வா” என்பதுதான் அந்த உரையாடலின் சாரம். வீட்டின் பெரியவர்களின் நலம் குறித்து அறிந்ததும் நிம்மதியானார் நாராயணன்.

சர்வைவர்
சர்வைவர்

“பெரியவங்க வாழ்த்தறதே ஒரு ஸ்பெஷல் இல்ல. அவங்க தன்னோட வீட்டு பசங்களை மட்டும் வாழ்த்தறது இல்ல. எல்லோரையும் சேர்த்து வாழ்த்தறது நல்லாயிருக்கு” என்கிற பாயிண்டைச் சொல்லி நாராயணன் நெகிழ, அதை அனைவருமே ஒப்புக் கொண்டார்கள். “எங்க அப்பாவும் அதைத்தான் சொன்னாரு. ஆனா.. இங்க நடக்கற விஷயங்கள்..” என்பதோடு இனிகோ நிறுத்திக் கொண்டார்.

இன்னொரு விளையாட்டு ஓலை வந்திருந்தது. சர்வைவர் போட்டியாளர்கள் ஒரு குடும்பமாக இருந்தால், யாருக்கு எந்தப் பாத்திரம் பொருந்தும் என்பதை அனைவரும் சொல்ல வேண்டும். இதில் வந்த பட்டப் பெயர்கள் நகைச்சுவையாக இருந்தன.

‘அன்பான அம்மா” என்கிற பட்டம் ஜொரிட்டியாக தேர்வு செய்யப்பட்டு விக்ராந்திற்கு வழங்கப்பட்டது. விக்ராந்த்தே இதற்காக உள்ளூற சிரித்திருப்பார். ‘எனக்கு பிறந்த வீடு காடர்கள் டீம்தான். பிறந்த வீடு வேடர்கள் தீவு. இதை ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இங்க விக்ராந்த் அம்மா மாதிரிதான் பார்த்துப்பார் என்று இனிகோ இதைச் சொன்னது கூட ஒருவகையில் ஒகே. ஆனால், ‘அம்மா பிள்ளைங்க பார்க்கற மாதிரி எல்லோரையும் விக்ராந்த் பார்த்துப்பார்” என்று நாராயணனும் சேர்ந்து சொன்னதுதான் அபத்த நகைச்சுவை. சிரிப்பு வராமல் இதை அவர் சொன்னதற்காகவே ஒரு விருது தரலாம்.

‘அட்வைஸ் அப்பா” என்கிற விருது நாராயணனுக்கு கிடைத்தது. பல நல்ல விஷயங்களைப் பற்றி அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பாராம். யாராவது சண்டை போட்டால் கூட பேசி ஒன்று சேர்த்து வைப்பாராம். தனக்கு கிடைத்த விருதை சந்தோஷமாக வாங்கி கழுத்தில் மாட்டிக் கொண்டார் நாராயணன்.

அராத்து அண்ணா யார்? வேறு யார் உமாபதியை நோக்கி அனைவரும் கைகாட்டி சிரித்தார்கள். ‘சிடுசிடு சித்தி’ பட்டத்தை ஐஸ்வர்யாவிற்கு தந்து மகிழ்ந்தார் வனேசா. டாஸ்க்கின் போது ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பாராம். ”ஆமாமாம்” என்று ஆமோதித்து மகிழ்ந்தார் இனிகோ. ‘கிசுகிசு பாட்டி’ பட்டமும் ஐஸ்வர்யாவிற்கே கிடைத்தது.

உமாபதி
உமாபதி

‘அழையா விருந்தாளி’ என்கிற பட்டத்தை சரணிற்கு தந்து மகிழ்ந்தார் இனிகோ. எத்தனை முறை துரத்தினாலும் திரும்பத் திரும்ப சரண் வந்து விடுகிறாராம். கடைசியாக இருந்தது ‘மிக்ஸர் மாமா’ என்கிற பட்டம். அதிகம் பேசாமல் இருக்கிற லேடி காஷிற்கு இதைக் கொடுத்திருக்கலாம். ஆனால் காடர்கள் அதைச் செய்ய மாட்டார்களே? எனவே அதையும் சரணின் பெயரில் எழுதி மகிழ்ந்து சிரித்தார்கள்.

ஒருவர் சபையில் இல்லாத போது அவருக்கு பட்டம் அளிப்பது தவறான விஷயம். இந்த விருதை மறுக்கவோ அல்லது விளக்கம் தரவோ ஒருவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். ரியாலிட்டி ஷோக்களில் இந்த அடிப்படை நாகரிகத்தையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

இந்த டாஸ்க்கில் வழக்கம் போல் இனிகோவின் அழிச்சாட்டியம் சற்று மிகையாக இருந்தது. உமாபதியும் விக்ராந்த்தும் இவரை டார்கெட் செய்யும் போதுதான் அந்த வலி இவருக்கு உறைக்கும் என்று தோன்றுகிறது

மறுபடியும் அதேதான். இந்த வாரத்தின் இம்யூனிட்டி சவாலை வெல்லப் போகிறவர் யார்? அது அம்ஜத் அல்லது நாராயணனாக இருந்தால் ஆட்டம் சுவாரசியமாகும். என்ன நடக்கும்?

பார்த்துடுவோம்.