Published:Updated:

சர்வைவர் - 72: சொன்னதைச் செய்துகாட்டிய ஐஸ்வர்யா; போட்டியின் அடுத்த கட்டம் என்ன?

ஐஸ்வர்யா

“நான் ஆணையிட்டால்..’ என்கிற பாடலை ஐஸ்வர்யா, தற்போதைய சூழலுக்கு ஏற்ற மாதிரி வரிகளை மாற்றி எழுதி பாடுவதற்காக வைத்திருக்கிறாராம்

Published:Updated:

சர்வைவர் - 72: சொன்னதைச் செய்துகாட்டிய ஐஸ்வர்யா; போட்டியின் அடுத்த கட்டம் என்ன?

“நான் ஆணையிட்டால்..’ என்கிற பாடலை ஐஸ்வர்யா, தற்போதைய சூழலுக்கு ஏற்ற மாதிரி வரிகளை மாற்றி எழுதி பாடுவதற்காக வைத்திருக்கிறாராம்

ஐஸ்வர்யா

முயல் – ஆமை கதைக்கும் ஐஸ்வர்யாவிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது போல. நிதானமாக ஆட வேண்டிய போட்டி என்றால் அவருக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அனைத்தையுமே ‘டப் டிப்’ என்றுதான் அடித்து ஆடுவார். ஆனால் மூன்றாம் உலகத்தில் நடந்த ‘மூன்று நிதானமான போட்டிகளிலும்’ எதிராளிதான் வெல்லப் போகிறார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது ஓர் ஆச்சரியமான திருப்பத்தைக் கொடுத்து வெற்றியடைவதை ஓர் வழக்கமாக ஆக்கி விட்டார் ஐஸ்வர்யா. தைரியலட்சுமியோடு ஏதோவொரு அதிர்ஷ்ட தேவதையும் அவருடன் குடிவந்திருக்கிறார் போல.

‘நான் ஆணையிட்டால்.. அது நடந்து விட்டால்.. அந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்று அவர் கெத்தாக பாடியதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட்.

சரண், ஐஸ்வர்யா
சரண், ஐஸ்வர்யா

சர்வைவர் 72-ம் நாளில் என்ன நடந்தது?

முன்பெல்லாம் மெயின் டீமில் நடக்கும் விஷயங்கள் போக நேரமிருந்தால்தான் கறிவேப்பிலை மாதிரி ‘மூன்றாம் உலகத்தின்’ விஷயங்களைக் காட்டுவார்கள். ஆனால் இப்போது மெயின் டீமே காலியாகி காற்று வாங்குவதால், அனைத்துக் காமிராக்களையும் தூக்கிக் கொண்டு மூன்றாம் உலகத்திற்கு சர்வைவர் டீம் வந்து விட்டது போல. ‘ஓகே.. இவர்களுக்கு ஏதாவது ஃபுட்டேஜ் தர வேண்டுமே’ என்கிற நல்லெணத்தில் ஓர் ஆட்டத்தை அங்கு ஆடத் துவங்கினார் ஐஸ்வர்யா. ஒருவரைப் பற்றி நல்லவிதமாகவும் கெட்டவிதமாகவும் மாறி மாறி சொல்ல வேண்டும். சத்தம் வரும் போது அதற்கேற்ப மாற்ற வேண்டும். விருந்தின் போது அம்ஜத் இந்த அயிட்டத்தை வெகு சிறப்பாக கையாண்டார். அந்த விளையாட்டு ஐஸ்வர்யாவிற்கு நினைவு வந்திருக்கும் போல. பொழுதும் போக வேண்டுமே?!

ஐஸ்வர்யாவைப் பற்றி நந்தா முதலில் பேச வேண்டும். “ஐசு இருக்காளே. ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் பெர்ஸன்.. (sound) ஆனா அந்த வாய் இருக்கே.. எப்ப பாரு.. லொட லொடன்னு.. (sound) “ஆனா.. பாட்டுப்பாடினா அத்தனை இனிமையா இருக்கும்.. அதிலும் அந்த வசீகரா.. (sound) அய்யோ.. அந்த ஒரே பாட்டைப் பாடி கொல்லுவா..’ என்று நந்தா மாற்றி மாற்றிப் பேச ஐஸ்வர்யாவும் சரணும் விழுந்து விழுந்து சிரித்தனர். நந்தாவால் இத்தனை காமெடியாக பேச முடியும் என்பதே இன்றுதான் நமக்குத் தெரிந்தது.

இப்போது சரண் நந்தாவைப் பற்றி பேச வேண்டும். “மனுஷன் பயங்கர hardwork (sound).. ஆனா.. தனக்கு மட்டுமே விளையாடறாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.. (sound) ஆனா அதுதான் அவரோட ப்ளஸ் பாயிண்டே…(sound) என்னை அவர் நம்பவேயில்லை.. (sound) ஆனா அப்புறம் ஒருவழியா நம்பிட்டார்….(sound) ஆனா எந்த அளவிற்கு நம்பினார்னு தெரியல…”… என்று சரணும் இந்த விளையாட்டில் புகுந்து விளையாட ஐஸ்வர்யாவிற்கும் நந்தாவிற்கும் சிரிப்பாணி பொத்துக் கொண்டு வந்தது.

நந்தா
நந்தா

“ஓலை வந்திருக்கு” என்று தூரத்தில் வந்திருக்கும் அறிவிப்பை நந்தா சரியாக கவனித்து சொல்ல “எங்களுக்கு தெரியலையே.. நாற்பது ப்ளஸ்ன்னா கண்ணு தேய்ஞ்சுடும்-னு சொல்லுவாங்களே” என்று நந்தாவின் வயதைக் கிண்டலடித்தார் ஐஸ்வர்யா. மெயின் டீமில் காற்றாடுவதால் எப்படியும் இவர்களைத்தான் அங்கு அழைத்துச் சென்றாக வேண்டும். ஆனால் அதை பந்தாவோடு செய்தால்தானே சர்வைவருக்கு பெருமை?! எனவே வந்த அறிவிப்பு அதற்கான கெத்துடன் இருந்தது. “இதுவரை நீங்கள் மூன்றாம் உலகத்தில் தந்த உழைப்பை அறுவடை செய்யும் தருணம் வந்து விட்டது. இதை வெற்றி வாய்ப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான நேரம்” என்றெல்லாம் அறிவிப்பு பலமாக இருந்தது.

“நான் ஆணையிட்டால்..’ என்கிற பாடலை ஐஸ்வர்யா, தற்போதைய சூழலுக்கு ஏற்ற மாதிரி வரிகளை மாற்றி எழுதி பாடுவதற்காக வைத்திருக்கிறாராம். அதை அர்ஜுன் முன்னால் பாடிக் காட்டப் போகிறாராம்..

‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்கிற டிரேட் மார்க் வசனத்துடன் வரவேற்றார் அர்ஜுன். மூன்றாம் உலகத்தில் நடக்கும் போட்டிகள் எல்லாம் பொதுவாக, மணிரத்னம் படங்களின் ஒளிப்பதிவு மாதிரி இருட்டான பின்னணியில்தான் நடக்கும். ஆனால் இம்முறை பகலின் வெளிச்சத்தில் இருந்தது.

“மூன்றாம் உலகம் எப்படியிருக்கு?” என்று விசாரித்தார் அர்ஜுன். “இப்ப பழகிடுச்சு. சார்..” என்று சிரித்தார் நந்தா. “வேடர்கள் அணியில் நீங்க மூணு பேரும் க்ளோஸா இருந்தீங்க இல்லையா?” என்று விசாரித்தார் அர்ஜுன். “இப்பவும் நல்லாத்தான் இருக்கோம். ஆனா இன்னமும் ஸ்ட்ராங்க் ஆகணும். மெயின் ஸ்ட்ரீம் விளையாட்டை எப்ப ஆடப் போறோம்னு ஆவலா இருக்கு” என்று நந்தா சொன்னதை ஆர்வத்துடன் வழிமொழிந்தார் ஐஸ்வர்யா.

சர்வைவர் - ஐஸ்வர்யா
சர்வைவர் - ஐஸ்வர்யா


“எந்த டாஸ்க் வந்தாலும் உங்களைப் பத்தி அங்க பேசறாங்க. உங்களை ஞாபகம் வெச்சிருக்காங்க” என்று நந்தா, ஐஸ்வர்யாவிடம் சொன்னார் அர்ஜுன். “உங்களைப் பார்த்தா நல்ல எனர்ஜியோட இருக்கீங்க. முகத்துல மலர்ச்சி தெரியுது. என்னாச்சி?” என்று நந்தாவை நமட்டுச் சிரிப்புடன் விசாரித்தார் அர்ஜுன். ‘காரணம் ஐஸ்வர்யா’ என்றா சொல்ல முடியும்? “மூன்றாம் உலகம்ன்றது செகண்ட் சான்ஸ். அதை பாசிட்டிவ்வா பயன்படுத்திக்கணும்ன்னு தயாராகி காத்துட்டு இருக்கேன் சார்” என்றார் நந்தா.

“நீங்க மெயின் டீம் போனீங்கன்னா. கார்னர் பண்ற மாதிரி ஃபீல் பண்ணுவிங்களா?” என்கிற கேள்விக்கு, “இருக்கலாம்.. சார்.. நம்மளை அங்க நிரூபிக்க வேண்டியிருக்கும்” என்று நந்தா பதிலளிக்க “என்னை அன்னிக்கு அவங்க எலிமினேட் பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. அதிர்ச்சியா இருந்தது. அதுக்காக அவங்க தயார் பண்ணிட்டு வந்திருக்காங்கன்றதை பிறகுதான் உணர முடிந்தது” என்றார் ஐஸ்வர்யா.

“சரண்.. நீங்க ரொம்ப லக்கியாம்… பேசிக்கறாங்க” என்று சிரித்தார் அர்ஜூன். “ஆமாம். சார். நந்தா சொன்ன மாதிரி இது செகண்ட் சான்ஸ்..கடவுளோட ஆசிர்வாதம்னு நெனக்கறேன். இன்னமும் பெட்டர் ஆசாமியா மாறணும்னு நெனக்கறேன்” என்று சரண் சுயபரிசீலனையோடு சொல்ல “குட்.. குட்..” என்றார் அர்ஜூன்.

ஓகே.. இன்னிக்கு நடக்கப் போற போட்டி முக்கியமானது. இதில் ஜெயிக்கறவங்க நேரடியா மெயின் டீமிற்கு போக முடியும். இந்த சேலன்ஜ்ல ஐஸ்வர்யாவிற்கு ரெண்டு அட்வான்டேஜ் இருக்கு. ஏன்னா மூன்றாம் உலகத்தில் அவர் ரெண்டு போட்டிகளில் ஜெயிச்சிருக்கார். முதல் அட்வான்டேஜ் என்னன்னா.. அவர் யார் கூட போட்டியிடலாம்ன்றதை அவரே முடிவு செய்யலாம்” என்றார் அர்ஜூன். சற்று யோசித்த ஐஸ்வர்யா “சரணோட போட்டி போடறேன்” என்றார். ஏனெனில் அவர் கடந்த போட்டியில் நந்தாவோடு போட்டியிட்டு ஜெயித்ததால் இருக்கலாம். “நந்தாவைத் தேர்ந்தெடுப்பான்னு நெனச்சேன்” என்று மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டார் சரண்.

சர்வைவர் சரண்
சர்வைவர் சரண்

“ஓகே.. போட்டியோட கான்சப்ட் என்னன்னு பார்த்துடலாம். இங்க இருக்கற கம்பத்தில் சில மரத்துண்டுகள் வலையில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். கீழே அதோட முடிச்சுகள் இருக்கும். நீங்க அதை அவிழ்த்தா மரத்துண்டுகள் கீழே வந்து விழும். அதை நீங்க அளவுகளின் அடிப்படையில் மூன்று நிலைகளில் மேலே அடுக்கி விட்டு நடுவில் கொடியை நடணும். யார் முதல்ல முடிக்கறாங்களோ.. அவர்தான் வின்னர்” என்று சொல்லி முடித்தார் அர்ஜூன்.

‘எளிதான போட்டி போல் தோன்றுகிறதா? இந்த விஷயங்கள் அனைத்தையும் அவர்கள் கால்களை மட்டுமே பயன்படுத்தி செய்ய வேண்டும். இதுதான் இந்தப் போட்டியில் இருந்த சவால். இரண்டு கைகளும் இல்லாதவர்கள், தங்களின் கால்களின் மூலம் பல விஷயங்களை மிக லாவகமாக செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அதை விளையாட்டுக்கு கூட நாம் முயன்று பார்த்திருக்க மாட்டோம். அப்படி செய்ய வைப்பதுதான் இந்தப் போட்டி.

“இப்ப ஐஸ்வர்யாவோட இரண்டாவது அட்வான்டேஜ் என்னன்னு பார்த்துடலாம். சரணோட கம்பத்தில் அதிக முடிச்சுகள் இருக்கும். ஆனா ஐஸ்வர்யாவோட கம்பத்தில் அதில் பாதிதான் இருக்கும். இதுதான் ஐஸ்வர்யாவோட ரெண்டாவது அட்வான்டேஜ்” என்று சொல்லி போட்டியை ஆரம்பித்தார் அர்ஜூன்

கால்களைக் கொண்டு ஆட வேண்டிய போட்டி என்பதால் மிக நிதானமாக கையாள வேண்டிய ஆட்டம் இது. நிதானத்திற்கும் ஐஸ்வர்யாவிற்கும்தான் வெகுதூரம் ஆயிற்றே? பாதி முடிச்சுகள் இருந்தால் கூட அதை கன்னாபின்னாவென்கிற திசையில் அவிழ்த்து மேலும் சுருக்குகளை அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் சரணோ “கால் விரல்களையே.. கை மாதிரி பயன்படுத்தறாரே....?”என்று அர்ஜுனே ஆச்சரியப்படும் அளவிற்கு மிக நிதானமாகவும் லாவகமாகவும் முடிசு்சுகளைக் கழற்றிக் கொண்டிருந்தார் சரண். முடிச்சுகளை அவிழ்த்து மரத்துண்டுகள் மிக நிதானமாக கீழே வந்து விழுமாறு கயிற்றை அசைத்தார். துண்டுகள் வந்து விழுந்ததும் அளவுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்து மளமளவென்று கால்களால் பிடித்து அடுக்க ஆரம்பித்தார் சரண். ஆனால் அட்வான்டேஜ் கிடைத்தும் கூட இன்னமும் முடிச்சுடன் போராடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவைப் பார்க்க காமெடியாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவரும் முடிச்சுகளை அவிழ்க்க துண்டுகள் பொதேர் என்று வந்து விழுந்தன.

சரண், ஐஸ்வர்யா
சரண், ஐஸ்வர்யா

“வெளில விழுந்த துண்டுகளை எழுந்து கையால் எடுத்துக்கலாம்” என்று அறிவித்தார் அர்ஜுன். ஐஸ்வர்யா அடுக்கிய போது முதல் நிலையில் இருந்த கட்டைகள் சரிந்து விழுந்தன. ஆனால் இதற்குள் சரண் அடுத்தக் கட்டத்தை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருந்தார். ஐஸ்வர்யா தனது வழக்கமான பாணியில் வேகமாக ஆட, ‘ஸ்லோ. ஸ்லோ..” என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தா ஆலோசனை சொன்னார். எப்படியும் சரண்தான் ஜெயிக்கப் போகிறார் என்று தோன்றிய போது ஆட்டத்தில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. ஐஸ்வர்யாவுடன் அதிர்ஷ்ட தேவதை இருக்கிறார் போல என்று சொன்னேன் அல்லவா? அவர் இந்தச் சமயத்தில் இறங்கி வந்தார். “சார்.. என்னோட பெரிய சைஸ் கட்டைகளில் ஒண்ணு காணோம்” என்று பதறினார் சரண். “அது எப்படிப்பா இல்லாம போகும்?” என்கிற நிதானமான பார்வையோடு அர்ஜுன் அங்கு வந்தார். இதற்குள் ஐஸ்வர்யா மளமளவென துண்டுகளை அடுக்கி கடைசி நிலைக்கு வந்து விட்டிருந்தார்.

அர்ஜுன் வந்து தேடிய போது ஒரு துண்டு கூடையின் அடியில் ஒளிந்திருந்தது. (அதிர்ஷ்ட தேவதையின் வேலை இது). “இங்கே இருக்கு” என்று எடுத்துக் கொடுத்தார் அர்ஜுன். அது இல்லாமலேயே சரண் வரிசையை அமைத்து விட்டதால் மீண்டும் சரிசெய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதற்குள் அனைத்து துண்டுகளையும் அடுக்கி மிக மிக நிதானத்துடன் கொடியை எடுத்து நடுவில் செருக.. ஐஸ்வர்யா வெற்றி. “வழக்கமா எனக்குத்தான் லக் அடிக்கும்.. என்னப்பா இந்தப் பொண்ணு..” என்கிற மாதிரி சரண் ஆச்சரியமாகப் பார்க்க, நந்தாவின் முகத்தில் புன்னகை. “போட்டி எப்படியிருந்தது நந்தா?” என்று விசாரித்தார் அர்ஜுன். “செம இன்ட்ரஸ்டிங்க் சார். நான் விளையாட முடியலைன்னு ஏக்கமா இருந்தது. இதுவரைக்கும் கால்களை நாம இப்படிப் பயன்படுத்தியிருக்க மாட்டோம். இதை எடுத்துட்டு போய் மூன்றாம் உலகத்துல விளையாடணும்னு தோணுது” என்றார் நந்தா. “நீங்களா இருந்தா சீக்கிரம் முடிச்சிருப்பீங்க” என்று சிரித்தார் அர்ஜுன்.

“என்னப்பா… சரண். ஐஸ்வர்யாவுக்காக வேணுமின்னே கட்டையை அடியில் ஒளிச்சு வெச்சிட்டியா?” என்று அர்ஜுன் கிண்டலடிக்க “அய்யோ.. சார்.. அது இல்லாமத்தான் நான் தோத்தேன். இருந்திருந்தா எப்பவோ முடிச்சிருப்பேன்” என்று ஆதங்கப்பட்டார் சரண்.

“வாழ்த்துகள் ஐஸ்வர்யா” என்று அர்ஜுன் சொல்ல “மெயின் டீமிற்கு எப்ப போவோம்னு ஆவலா காத்துக்கிட்டு இருந்தேன் சார். நிதானமா ஆட வேண்டிய கேம்னா எப்பவுமே பதட்டம் வந்துடும். போன ரெண்டு கேம் மாதிரியே இப்பவும் அப்படித்தான் ஆச்சு. எப்படியோ வின் பண்ணிட்டேன்” என்று சிரித்தார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

மூன்றாம் உலக போட்டியில் வென்றவர்கள் தங்களின் கைத்தடங்களை பதிக்கும் பலகையில் மூன்றாம் முறையாக தன் கையின் வண்ணங்களை பெருமையுடன் பதித்து தன் பெயரை அதன் அடியில் எழுதினார் ஐஸ்வர்யா.

“சார்.. உங்களுக்காக ஐஸ்வர்யா ஒரு பாட்டு ரெடி செஞ்சு வெச்சிருக்கா. இந்த சேலன்ஞில் ஜெயிச்சப்புறம் பாடுவேன்னு சொல்லிட்டு இருக்கா” என்று சரணும் நந்தாவும் இணைந்து சிரித்துக் கொண்டே சொல்ல. “அப்படியா.. பாடுங்க கேட்போம்” என்று தயாரானார் அர்ஜுன். தத்தக்கா பித்தக்கா தமிழில் சற்று கொடுமையாக பாடினாலும் ஐஸ்வர்யா தந்த போஸ்கள் எல்லாம் ரகளையாக இருந்தன. “நான் ஆணையிட்டால். அது நடந்து விட்டால்.. என்ற பாடலின் வரிகளை சற்று மாற்றி “ஒரு காலம் வரும்.. அந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்.. நாங்கள் வேடர்கள்தான் வந்து ஜெயிப்போம்” என்று சவால் விட்டு பாட, அதுவரை பாடலின் பின்னணி இசையை வாயால் தந்து கொண்டிருந்த அர்ஜுன், இறுதியில் விசிலடித்து பாராட்டினார். “இது என்ன ரிவேன்ஜிங் சாங் மாதிரி இருக்கே” என்று அவர் சிரித்துக் கொண்டே கூற “ஆமாம். சார். நாங்க அடிபட்ட புலி” என்று பன்ச் வசனம் பேசினார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

“ஓகே.. இப்ப மூன்றாம் உலகத்துக்கு போங்க. சொல்லியனுப்புறோம்” என்று சொல்லி விடைபெற்றார் அர்ஜுன்.

தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பிய ஐஸ்வர்யாவிற்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அதே சமயத்தில் மெயின் அணியில் தன்னை நிரூபிப்பதற்கான வேகத்துடனும் வெறியுடனும் இருக்கிறார். அதே சமயத்தில் தன்னை அங்கு எப்படி நடத்துவார்களோ என்கிற தயக்கமும் உள்ளே இருந்தது. “அங்க நான் எப்படி நடந்துக்கறது..?” என்று புதுமருமகள் போல் நந்தாவிடம் அவர் ஆலோசனை கேட்க “உன் இயல்புபடி இரு. ஓவர்ஆக்ட் பண்ணாதே” என்று அறிவுரை கூறினார் நந்தா. எலிமினேஷன் ஆகி மூன்றாம் உலகத்திற்கு கிளம்பும் போது “எப்படியும் இங்க திரும்ப வருவேன்” என்று முன்பு ஐஸ்வர்யா சொன்னதை இப்போது உண்மையாக்கி விட்டார். ஆனால் மெயின் அணியில் வெறும் நால்வர் மட்டுமே இருக்கிறார்கள் என்கிற விஷயம் இவர்களுக்குத் தெரியாது. என்ன நடக்கும்?

பார்த்துடுவோம்.